எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 24, 2008

ரத்னேஷுக்கு எனக்குத் தெரிந்த வரையில் பதில்!

இப்போ எதுக்கு இதைப் போட்டிருக்கேன்னு நினைப்பீங்க. காரணம் இருக்கு. எனக்கு அவர் எழுதினது இன்னும் மனதில் சுற்றிக் கொண்டே இருக்கிறது. அதிலே அவர் சில விஷயங்களைப் புரிந்து கொண்டிருப்பதும் சரி இல்லை என்றும் தோன்றியது. குமரனின் பின்னூட்டத்துக்குக் கொடுத்த பதிலில் ரத்னேஷே சொன்ன மாதிரி, அவர் பார்வையின் கோணம் வேறே என்பது புரிந்தது. என்றாலும் சிலவற்றை என் வரையில் தெளிவு படுத்திக் கொள்ளத் தான் இதை எழுதுகிறேன்.

1. முதலில் என் கண்ணில் பட்டது, திரெளபதி கொடுத்த அட்சயபாத்திரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு கீரைத் துணுக்கு/சாதத் துணுக்கு, ஏதோ ஒன்று, அவர் பாத்திரம் சரியாகக் கழுவவில்லை, என்ற தர்க்க ரீதியான எண்ணம் வந்தது என்கின்றார். அவருக்கு மட்டுமில்லை, துளசியும் கேட்டதாய்ச் சொல்கின்றார். நானும் அப்படியே கேட்டிருக்கிறேன், என்றால் ஆச்சரியப் படவேண்டாம். ஆனால் எனக்குச் சொல்லப் பட்ட பதில்தான் வேறுவிதமானது. அந்த ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு துளி கீரை/சோற்றுப்பருக்கை போல் உன்னிலும், உன்னுள்ளும், ஒரு துளியாவது இறை உணர்வு இருக்கவேண்டும், அதற்குத் தான் இந்த நிகழ்வே தவிர, இதன் உள்ளார்ந்த கருத்தைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, இம்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லப் பட்டது. துர்வாசர் "நித்திய உபவாசி" எனப் பெயர் பெற்றவர். ஆகவே அவர் பசியோடு வந்தார் என்று சொல்வதே ஏற்கக் கூடிய ஒன்று இல்லையே? இதன் மூலம் நமக்குச் சொல்லப் பட்ட கருத்து, நம் உள்ளமாகிய அட்சய பாத்திரத்தில், ஒரு துளியாவது ஒட்டிக் கொண்டிருக்கும் இறை உணர்வால் இறைவன் நம் உள்ளத்தையே நிரப்புவான், நம் அறியாமை என்னும் பசி அகலும் என்பதே சொல்லப் பட்டது. இதைத் தத்துவார்த்த ரீதியாகப் பார்க்க அப்போது, அந்த வயதில் எனக்கும் தெரியவில்லை, அல்லது புரியவில்லை என்றே சொல்லவேண்டும், என்றாலும் பக்தி உணர்வு, ஒரு சிறிதாவது இருக்க வேண்டும் என்ற வரையில் புரிந்தது. இப்போது யோசிக்கும்போது அதன் தாத்பரியம் புரிந்து கொள்ள முடிகின்றது.

அடுத்து ஆன்மீக வாதிகள் பற்றிய பேச்சு: உண்மையில் ஆன்மீகம் என்பது வேறே, இறை உணர்வு என்பது வேறே. இப்போது தோன்றுகிறது, என்னோட இன்னொரு பதிவுக்கு நான் பக்திப் பயணம் என்றே பெயர் கொடுத்திருக்க வேண்டும் என்று. ஆன்மீகவாதிகள் என்ற பொதுத் தலைப்பிலானவர்கள் இல்லை என்று அவர் சொன்னாலும், இங்கே அந்தத் தாத்தாவை ஒரு ஏமாற்றுக் காரர் எனச் சொல்லி இருப்பது சற்றும் ஏற்கக் கூடியதாய் இல்லை. கல்யாண வீடியோவில் க்ராஸ் செக் பண்ணிப் பார்த்ததுக்கு எப்படிச் சாட்சி இல்லையோ, அப்படியே தாத்தா ஏமாற்றினார், லாகிரி கலந்த சாப்பாடு கொடுத்தார் என்று சொல்லுவதற்கும், முக்கால் தூக்கத்தில், டேப்ரிக்கார்டர் போட்டுக் கதை கேட்க வைத்தார் என்று சொல்லுவதற்கும், எந்தவிதமான ஆதாரமும் இல்லை. ஆனாலும் குமரன் இதைத் தெளிவாக்கி இருக்க வேண்டும், தாத்தா ஒரு சித்தர் என. அதற்கான முன் அறிமுகம் இல்லாமையால் திடீரெனக் கடைசி அத்தியாயத்திலும், அதற்கு முன் அத்தியாயத்திலும் தாத்தா பேசுவது கொஞ்சம் அனைவருக்குமே அதிர்ச்சியாகத் தான் இருந்திருக்கும், அதாவது தர்க்கரீதியாகப் பார்த்தோம் என்றால். இது கதையின் போக்கில் போகவிட்டதால் குமரனே அறியாமல் செய்த தவறு என நினைக்கிறேன்.

சமீபத்தில் ஜெயா டிவியில் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் ஒருவர், ஒரு சித்தர் வானத்தில் பறந்து சென்ற அதிசயக் காட்சியைத் தற்செயலாகத் தன் கைபேசியில் பிடித்து இருந்ததைக் காட்டினார்கள். உண்மையான யோகம் பயின்றவர்களால் தங்கள் மனம், உடல் இரண்டையும் கட்டுப் படுத்த முடியும் என்பதோடு அல்லாமல், பிறர் மனத்தைப் படிக்கவும் முடியும். எண்ண அலைகளைப் புரிந்து கொள்ளவும் முடியும். ஆனால் இதற்கு யோகக் கலையின் பூரணத்துவத்தை உணர்ந்து படித்திருக்கவேண்டும். அதை ஒரு பயிற்சியாக இல்லாமல் யோகமாய் அறிந்திருக்கவேண்டும். என்னைப்பொறுத்தவரை தாத்தாவை அப்படி ஒருவர் என்றே எண்ணிக் கொண்டேன். ஆகவே எனக்கு இந்தக் குழப்பம் எல்லாம் வரவில்லை. ஆகவே தாத்தா ஏமாற்றினார், கேசவனின் துணையுடன் என்ற எண்ணமே தோன்றவில்லை. தவிர, டேப்ரிகார்டர் போட்டிருந்தால், கந்தனுக்கு அவன் பிதற்றியதும் சேர்ந்து தானே பதிவாகி இருக்க வேண்டும்? ஒருவேளை அதைப் போட்டுக் காட்டவில்லை தாத்தா என்று சொல்கிறாரோ? தவிரவும் இது அவ்வளவு எளிதாய் நடந்திருக்கும் என்றும் தோன்றவில்லை.

அடுத்துக் கல்யாணத்தில் தாத்தா தோன்றியது. அவர் இறக்கவே இல்லை என்றும், உண்மையாகவே வந்திருந்தார் என்றும் ரத்னேஷ் சொல்கின்றார். உரையாடல் இருவருக்குள் தான் நடந்திருக்கிறது என்பதால் தாத்தாவை மற்றவர் அறியமாட்டார்கள் என்றும் சொல்கின்றார். என்றாலும் கல்யாண வீடியோவை மீண்டும் பார்க்காமல் இருந்திருப்பார்களா என்ன? நமக்கு அதுபற்றி எழுதவில்லை என்பதால் க்ராஸ் செக் செய்யவில்லை என்று ஆகாது. ஆனாலும் இதில் கந்தனுக்கு hallucination இருந்திருக்கலாம் என்று எண்ணவும் இடம் இல்லாமல் கேசவனுக்கும் தோன்றுகிறார். நம்பிக்கை உள்ளவர்களுக்குத் தோன்றினார் என்ற கோணத்தில் வைத்துக் கொள்ளலாமோ? ஆனாலும் இது பற்றிக் கொஞ்சம் தெளிவாய்ப் பேசி இருக்கலாம் குமரன் தன் கதையில்.

அப்புறம் குமரன் தன்னை நாத்திக சிந்தனாவாதி என்று சொல்லிக் கொள்வதால் இதன் உட்பொருள் மாறுகிறது என்றும் ரத்னேஷின் பதில். நாத்திகத்தின் எல்லை ஆன்மீகமே. திரு ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்னும் ஜேகேயிடம், "கடவுளைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லுங்கள்" எனக் கேட்கப்பட்டபோது அவர், "நான் உண்மையை அறிந்தவன் என்பதால், அதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அந்த உண்மையை நீங்களும் அறிந்திருந்தால் தான் முடியும். இல்லை எனில் என் பதிலின் அர்த்தத்தை எப்படி உணர்வீர்கள்?" என்று கேட்டார். அவரும் ஒரு நாத்திகவாதியாகவே அறியப் பட்டார். ஆனால் உண்மையான ஆன்மீகவாதி, யோகி, மற்றும் அத்வைதி திரு ஜேகே அவர்கள். மேலும் இதற்கென ஒரு குரு வந்து உதவி செய்வார் எனவும் எதிர்பார்க்க முடியாது. அவர்களில் மறைந்து இருக்கு உண்மையை அவர் அவர்களே அடையவேண்டியது தான் . அதைத் தான் தாத்தாவும் சொன்னார். நான் வெறும், கருவி மட்டுமே என்று. கந்தனுக்கு வேண்டியது என்ன என்பதை அவன் தான் தீர்மானிக்க வேண்டும், முடியும். இதை விளக்குவதும் மகாக் கடினம். முதலில் எனக்கும் இன்னும் விளங்காத ஒன்று இந்த உண்மையான ஆன்மீகம் தான். தற்சமயம் நான் செலுத்துவது வெறும் பக்தி மட்டுமே. ஒரு வகையில் ஆன்மீகத்துக்கு இவை தடை என்றும் சொல்லலாம்.

இன்னும் சொல்லப் போனால் நம் ஆழ் மனதில் இந்தத் தன்மை இன்னும் விழிப்படையாமல் உறங்கிக் கொண்டே இருக்கிறது. அது தான் திரெளபதியின் அட்சயபாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு துளிக் கீரை! அதை விழிப்படையச் செய்வது தான் நம் கடமை! அது போலவே வெறுப்பு இருந்தால் அது உண்மையான ஆத்தீகம் இல்லை, ஆசார்ய விநோபாபாவே அவர்களிடம் ஒருமுறை,ஒரு இத்தாலி நாட்டு நாத்திகரை அழைத்துச் சென்றார்கள். நம் நாட்டுக் கிராமத்து ஏழை மக்களுக்குத் தொண்டாற்ற வந்த அந்த இத்தாலி நாட்டுக் காரர் ஒரு நாத்திகர் தாம் என்பதால் விநோபாபாவே அவருடன் உரையாடுவாரா எனச் சந்தேகப் பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் விநோபாபாவேயின் பதில் என்ன தெரியுமா?"நாத்திகன் என்றால் கடவுள் என்று பொருள்! கடவுளுக்குச் சமானம் ஆனவன் மட்டுமே கடவுளை மறுக்க முடியும்" என்று பதில் கொடுத்தாராம். (நன்றி: திரு சுகி சிவம்) நாத்திகனின் ஆழமான தேடல் ஆழமான புரிதலுக்கு வழி உண்டு பண்ணுகிறது. ஆகவே நாத்திகத்தின் முடிவில் அவன் உண்மையான ஆன்மீகவாதி ஆகிவிடுகின்றான். இரவும் பகலும் போன்றது ஆத்திகமும், நாத்திகமும். நிழலும் நிஜமும் போன்றது. ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்க முடியாதது.

இதற்குச் சமீபத்திய சான்று பெரும் நாத்திகனாக இருந்து பின்னர் "அர்த்தமுள்ள இந்துமதம்" எழுதிய கண்ணதாசன் இருக்கின்றார். இன்னும் சொல்லப் போனால் ஸ்வாமி விவேகானந்தரை விடச் சிறந்த நாத்திகர் இருந்திருக்க முடியாது. அவரே பின்னாளில் பெரிய ஆன்மீகவாதியாக மாறினார். விவேகானந்தரைப் படிப்பவர்கள் கட்டாயமாய்ப் புரிந்து கொள்வார்கள்.

ரொம்பப் பெரிசாப் போயிடுச்சோ? நிறுத்திக்கிறேன். ஏற்கெனவே ரம்பம்னு சொல்லிட்டு இருக்காங்க, சிஷ்ய(கே)கோடிங்க, தலை மறைவா ஆயிட்டாங்க. அடுத்து ஒரு மொக்கை தான்!

4 comments:

 1. 1. நான் அந்த கதையை முதல் இரு பதிவுகள் படித்து பின் பல நாட்கள் கழித்து முழுதும் படித்தேன். அதனால் பின்னூட்டங்களை படிக்கவில்லை.
  2. ஒரு இறைவுணர்வு உள்ளவர் ஆன்மீகவாதிதான். அதில் சந்தேகமே இல்லை. ஆத்மாவை அறிவதில் பல படிகள் இருக்கின்றன. அதில் ஒரு படி/ வழி இறைவுணர்வு.
  3. ஆத்திகரோ நாத்திகரோ இருவருமே நம்பிக்கை அடிப்படையில்தான் இருக்கின்றனர். ஆத்திகர் கடவுள் இருப்பதாக நம்புகிறார். நாத்திகர் கடவுள் இல்லை என்று நம்புகிறார். இரண்டுமே நம்பிக்கைதான்.
  4.ஆத்திகர் யாரேனும் அனுபவித்து தன் நம்பிக்கையை உறுதி செய்து கொள்ளலாம். ஆனால் நாத்திகர் அப்படி செய்ய முடியாது. ஒரு விஷயம் இருக்கிறது என்று நிரூபிக்கலாம். அது இல்லை என்று நிரூபிக்கவே முடியாது.

  சிஷ்ய கேடிகளை குறித்த அச்சத்தால் இது இப்ப போதும்.

  5.கதைன்னு போன பிறகு தாத்தா என்ன செய்தார் ஏன் செய்தார் என்று எப்படி கேள்வி கேட்க முடியும்? எழுதியவர் இது உண்மை சம்பவம் என்று சொல்லி இருந்தால் இது நடக்கும் நடக்காது என்று விவாதிக்கலாம். கதை நல்லா இருக்கு இல்லைன்னு வேண்டுமானால் சொல்லலாம். கதைகளை கேள்வி கேட்க முடியாது.

  ReplyDelete
 2. உள்ளேனம்மா மட்டும் போட்டுக்கறேன். :)

  ReplyDelete
 3. கீதாம்மா. 'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதைக்கு உங்களை இரண்டாவது முறையாக விமர்சனம் எழுத வைத்துவிட்டாரே இரத்னேஷ். :-) இரண்டு முறைக்கும் நன்றிகள்.

  அட்சயப் பாத்திரத்தில் ஒட்டியிருந்து உணவுத்துணுக்கைப் பற்றிய விளக்கம் அருமை. மனத்தில் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

  தாத்தா ஒரு ஏமாற்றுக்காரர் என்பது போல் அந்தக் கதையின் நான் எங்குமே சொல்லவில்லை. நான் சொல்லாதவற்றை எல்லாம் கற்பனை செய்து கொண்டீர்கள் என்று ஒரு குறிப்பாக நீங்கள் சொன்னதை இரத்னேஷுக்கும் சொல்லியிருக்கிறேன். போதை கலந்த உணவு கந்தனுக்குக் கொடுக்கப்பட்டது என்பதெல்லாம் கதையில் எங்குமே மறைமுகமாகக் கூடக் குறிப்பிடப்படவில்லை.

  தாத்தா ஒரு சித்தர் என்பதற்குக் குறிப்புகள் முதல் பகுதியிலிருந்தே சொல்லியிருக்கிறேன். கந்தனை மோகன் என்று அழைப்பதையும் அவனைப் பற்றி அபிப்ராயங்களைச் சொல்வதையும் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அந்தக் குறிப்புகள் எல்லாம் கடைசி இரு அத்தியாயங்களைப் படிக்கும் போது தான் நன்கு புரியும் என்று நினைக்கிறேன். அதனால் கடைசி இரு அத்தியாயங்கள் அதிர்ச்சியாக இருந்திருக்க வாய்ப்புண்டு.

  தாத்தா திருமணத்திற்கு வந்தது கற்பனைத் தோற்றம் இல்லை என்பதற்காகத் தான் கேசவனும் அவரைப் பார்த்ததாகக் குறித்திருந்தேன். ஆனால் அதுவே இராகவனும் இரத்னேஷும் தாத்தா மேலும் கேசவன் மேலும் இப்படிப் பழி சொல்வதாக அமையும் என்று நினைக்கவில்லை.

  நான் என்னை நாத்திக கருத்துகள் கொண்டவன் என்று சொன்னது கதையில் இல்லை. என்னுடைய சுய விமர்சனத்தில். அதற்கும் இந்தக் கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

  ஆனால் இவற்றை எல்லாம் சொல்லி என் கதைக்கு வக்காலத்து வாங்க வேண்டுமா என்று எண்ணியே ஒன்றும் சொல்லாமல் விட்டேன். கதையைப் படிப்பவர்கள் எதனை எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கதையை எழுதியவன் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இப்போது சொன்னதும் நீங்கள் என் மேல் வருத்தத்துடன் இருக்கிறீர்களோ என்று எண்ணியதால்.

  இவ்வளவு தூரம் இந்தக் கதையை நன்கு ஆழ்ந்து படித்து உணர்ந்ததற்கும் அதில் இவ்வளவு ஈடுபாடு கொண்டிருப்பதற்கும் மிக்க நன்றி அம்மா. இதுவும் திருவண்ணாமலை தாத்தா திரு. இராமன் ஐயப்பன் அவர்களின் திருவுள்ளமே என்று எண்ணுகிறேன்.

  ReplyDelete
 4. திரு.குமரன் கதையில் இதெல்லாம் இருந்ததா?
  படிக்காமல் விட்டுவிட்டேன் ,படிக்கணும்.

  ReplyDelete