*************************************************************************************
யசோதைக்குக் கண்ணனைக் கண நேரம் கூடப் பிரிந்திருக்க முடியவில்லை. அவன் விஷமமோ கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கின்றது. அதிலும் பூதனைக் கண்ணனைக் கொல்ல வந்தாள் எனக் கேள்விப் பட்டதில் இருந்தே கண்ணனைத் தவிர வேறே எதிலும் சிந்தனை செல்லவில்லை. ஆனால் கண்ணனோ, யசோதையின் பிடியில் இருந்து தப்பிக்க ஒவ்வொரு புது வழியைக் கண்டு பிடித்தான். நந்தனாலோ, யசோதையாலோ நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் புதுப் புது யுக்திகள் கண்டு பிடித்து ஓடி ஒளிகின்றான் மாயவன். இம்மாதிரிச் சில நாட்கள் குறிப்பிட்ட எந்தவிதமான சம்பவங்களும் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.
ஒரு நாள் யசோதை, கோகுலத்து கோபியரில் ஒருத்திக்குக் கஷ்டப் பிரசவம் நடந்த செய்தி கேட்டு, அவளைச் சென்று பார்த்து நலம் விசாரிக்கவேண்டும் எனக் கண்ணனையும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு சென்றாள். கண்ணனின் இரு கால்களையும் தன் இடுப்பைச் சுற்றி வளைத்து இறுக்கிக் கொண்டு அவன் கீழே இறங்காதவாறு பிடித்துக் கொண்டு சென்றாள். கண்ணனா சும்மா இருப்பான்?சற்று நேரம் சும்மா இருந்தான் கண்ணன். திடீரெனக் கண்கள் விஷமத்தால் மின்னின. அவன் முகத்தில், இதழ்க்கடையில் ஒரு கள்ளச் சிரிப்பு. யசோதையின் இடுப்பிலேயே மேலும், கீழும் குதிக்க ஆரம்பித்தான் கண்ணன். முதலில் மெதுவாய் ஆரம்பித்தவன் போகப் போக வேகமாய்க் குதிக்க ஆரம்பிக்க யசோதையால் தாங்க முடியவில்லை. "கண்ணா, என்னடா இது? என்ன செய்கின்றாய்?" என்று கேட்க, கண்ணனுக்கோ குதூகலம் தாங்க முடியவில்லை."ஒண்ணுமில்லை அம்மா" எனச் சொல்லிக் கொண்டே வேகமாய்க் குதிக்க, "என் கண்ணே, மணியே, வேண்டாம் அப்பா! அம்மாவால் தாங்க முடியலை. எப்படி நடப்பேன்? சற்று நேரம் சும்மா உட்காரு, என் குழந்தை!" என்று கெஞ்சினாள். "நான் நடப்பேன்!" இது கண்ணன். கண்ணனின் குதியாட்டம் அதிகமாகியது. கண்ணனையும் போட்டுக் கொண்டு கீழே விழுந்துவிடுவோமோ என அஞ்சிய யசோதை அருகிலிருந்த ஒரு வீட்டுத் திண்ணையில் கண்ணனைக் கீழே இறக்கிவிட்டுச் சற்று உட்காருவோமா என நினைத்தாள்.
திடீரென மேகம் கறுத்தது. கருநிற மேகங்கள் சூழ்ந்து கொள்ள சூரியன் மறைந்தான். மெல்லிய இருள் படர்ந்தது. என்ன இது என நினைக்கும்போதே புழுதியை வாரி இறைத்துக் கொண்டு காற்று புயல் போல் வீசத் தொடங்கியது. மணல் வாரிச் சுற்றிச் சுழன்று கொண்டு போனது. அதனால் எழும்பிய புகையும், ஏற்கெனவே கருத்திருந்த இருட்டும் சேர்ந்து கொண்டு மேற்கொண்டு நிற்கவோ, நடக்கவோ முடியாமல் போனது யசோதாவுக்கு. நேரம் ஆக ஆகக் காற்றும் அதன் வேகமும் அதிகரித்தது. இது எப்படியும் இன்னும் சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் எனப் புரிந்து கொண்ட யசோதா அருகிலிருந்து ஒரு வீட்டுத் திண்ணையில் கண்ணனைக் கீழே இறக்கிவிட்டுத் தானும் அருகே உட்கார்ந்தாள். பக்கத்தில் இருந்த ஒரு தூணைப் பிடித்துக் கொண்டாள். காற்று நின்றதும் மேற்கொண்டு தொடரலாம் என நினைத்து உட்கார்ந்திருந்தாள் யசோதை.
முகம்,கண், உடுத்தியிருந்த உடை எல்லாம் மணல். கண்ணே திறக்க முடியவில்லை, யசோதைக்கு.சற்று நேரம் ஆனது காற்று அடங்க. காற்று அடங்கி மீண்டும் சூரியன் வெளியே வர, வெளிச்சமும் வந்தது. தன் மேலிருந்த மணலை எல்லாம் போக்கிக் கொண்டே, "கண்ணா, கண்ணா, இங்கே வா!" என்றாள் யசோதை. கண்ணன் அந்தத் திண்ணையில் இல்லை. யசோதை பதறினாள். பெரும் கூச்சல் போட்டாள். கண்ணா, கண்ணா, எங்கே போய் ஒளிந்து கொண்டாய்? வந்துவிடுடா! என்று கெஞ்சினாள். அவள் குரல் கேட்டு வீட்டினுள் இருந்த கோபியர்களும், தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மனிதர்களும் வந்தனர். அனைவரும் தேட ஆரம்பித்தனர். கண்ணனை எங்கும் காணவில்லை. எங்கே போனான்? யாரோடு போனான்? போகும்போது அழவே இல்லையா??
\\காற்று புயல் போல் வீசத் தொடங்கியது.\\\
ReplyDeleteஎல்லாம் இந்த காற்று புயலோட வேலையாக தான் இருக்கும்.
இந்த பதிவுக்கும் சரியாக வந்துட்டேன். ;))))
ReplyDeleteஅடடா, சரியா சஸ்பென்ஸ்லே நிறுத்தறீங்க!
ReplyDelete