எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 02, 2009

ரத சப்தமி- ஒரு மீள் பதிவு! தெரியாதவங்களுக்காக!


இன்று ரதசப்தமி. தை மாதத்தின் வளர்பிறை ஏழாம் நாளில் "ரத சப்தமி" வரும். தஞ்சை மாவட்டத்தில் சூரியனார் கோயிலிலும், திருப்பதியிலும் விழா நடக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஸ்ரீமகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கும் சங்கும், சக்கரமும் உண்டு. தீவிர வைஷ்ணவர்கள் நாராயணனே சூரியன் என்றும் சொல்லுவார்கள். மகாபாரதப் போரில் போர் ஆரம்பிக்கும் முன்னர் துரியோதனனுக்குக் குறித்துக் கொடுத்த நாளான அமாவாசை அன்று அவன் போரை ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக ஒரு நாள் முன்பாகவே சூரிய, சந்திரரைச் சேர்ந்து இருக்கச் செய்த பெருமையும், ஜெயத்ரதனைக் கொல்வதற்காக, சூரியனை மறைத்த பெருமையும் கண்ணனுக்கு உண்டு. அதனாலோ என்னமோ நாராயணனைச் சூரியநாராயணன் என்று சொல்வாரும் உண்டு. நாராயணனுக்கே உரிய சங்கும், சக்கரமும் சூரியனுக்கும் உண்டு.

ஓசை வடிவான இந்தப்பூமியில், இந்தப் பூமியும், மற்ற கிரகங்களும் சூரியனை மையமாக வைத்தே சுழல்கின்றன. ஓசையை ஏற்படுத்தும் சங்கு அதனாலேயே சூரியன் கையில் உள்ளது. இந்தப் பூமி சுழல்வதை நினைவு படுத்தும் விதமாய்ச் சக்கரம் உள்ளது. காலமாகிய தேரில் சுற்றும் ஒற்றைச் சக்கரமான நாட்கள், மாதங்கள், வருடங்களைக் கிழமைகள் என்னும் ஏழு குதிரைகள், அருணனின் துணையுடன் ஓட்டப் படுகின்றது என்றும் சொல்லுவதுண்டு. பொதுவாகவே சப்தமி திதியை சூரியனுக்கே உரித்தானதென்று சொன்னாலும், சூரியன் மகர ராசிக்குள் பிரவேசம் ஆனதின் பின்னர் வரும் வளர்பிறை சப்தமி திதியை சூரியனின் சுற்றும் சக்கரமான காலச்சக்கரத்தின் பெயராலும், ரதத்தின் பெயராலும் ரதசப்தமி என்றே அழைப்பார்கள். இன்று கோலம் போடும்போது கூடத் தேர் வடக்கே நகருவது போலப் போடுவதே வழக்கம். (ஹிஹி, போன வருஷம் இதை எழுத மறந்து போச்சு, இன்னிக்குக் காலம்பர கோலம் போடறச்சே நினைச்சேன், எழுதினேனா பார்க்கணும்னு, எழுதாமல் விட்டிருக்கேன்.) தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சூரியன், சொல்வது என்னவென்றால் பகலில் விரியும் தாமரை, இரவில் எவ்வாறு ஒடுங்கி விடுகிறதோ, அப்படியே நம்முடைய பரந்த கல்வி, அனுபவ அறிவினால் உண்டாகும் ஞானத்தினால் கர்வம் ஏற்படாமல் இரவுத் தாமரையைப் போல் ஒடுங்கி இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியனின் பயணம் துவங்குகிறது. ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கும். சூரியனின் ரதம் வடக்கு நோக்கித் திரும்பி பூமிக்கு அருகே நெருங்க ஆரம்பிப்பதும் இன்றில் இருந்து தான்.இன்று எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பார்கள். அதுவும் தலை, கை, கால், புஜம் ஆகிய இடங்களில் ஆண்கள் விபூதியுடனும், பெண்கள் மஞ்சளுடனும் வைத்துக் கொண்டு குளிப்பார்கள். இதன் தாத்பரியம் என்னவென்றால், மகாபாரதப் போரில் வீழ்த்தப் பட்ட பீஷ்மபிதாமகர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயனத்தில் உயிர் விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். அப்போது அவர் தாகம் தீர்க்கவேண்டி அர்ஜுனன் கங்கையைப் பிரவாகம் எடுக்கச் செய்வதும் நிகழ்கிறது. என்றாலும் காலம் போய்க் கொண்டே இருக்கிறது. பீஷ்மர் உயிர் பிரியவில்லை. அனைவரும் வந்து, வந்து அவரைப் பார்த்துப் போய்க் கொண்டிருக்கின்றனர். பீஷ்மருக்கோ ஒரே ஆதங்கம், அப்போது அங்கே அவரைப் பார்க்க வந்தார் வேத வியாசர்.

அவரிடம் பீஷ்மர், "நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார். வியாசர், அவரிடம், "பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூடப் பாவம் தான், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்" என்று சொல்கின்றார். பீஷ்மருக்குப் புரிந்தது. "பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரிந்த போது, அப்பாவியான திரெளபதி, வேட்டையாடப் பட்ட மானைப் போல் தன்னைக் காப்பார் இல்லாமல், அந்தச் சபையைச் சுற்றிச் சுற்றி, யாரும் வரமாட்டார்களா? தன்னை இந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க மாட்டார்களா? என்று மலங்க மலங்கப் பார்த்தாள். அப்போது அந்த அபலையை நிர்க்கதியாகத் தவிக்க விட்ட பாவத்தை அல்லவோ இப்போது நான் அனுபவிக்கிறேன். இதற்கு என்ன பிராயச்சித்தம் குருவே?" என வேண்டினார் பீஷ்ம பிதாமகர்.

வியாசர் அதற்கு, "பீஷ்மா, நீ எப்போது உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது அகன்று விட்டாலும், திரெளபதி, "கண்ணா, கேசவா, மாதவா, பரந்தாமா, ஜெகத் ரட்சகனே, என்னை ரட்சிக்க மாட்டாயா? என்று கதறிய போது அதைக் கேளாமல் வாளா இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன்னிரு கண்கள், தட்டிக் கேட்காத உன் வாய், உன்னிடம் இருந்த அசாத்திய தோள்வலிமையை சரியான நேரத்துக்கு உபயோகிக்காமல் இருந்த உன்னிரு தோள்கள், வாளை எடுக்காத உன்னிரு கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் இரு கால்கள், இவற்றை யோசிக்காத உன் புத்தி இருக்குமிடமான உன் தலை ஆகியவைக்குத் தண்டனை கிடைத்தே தீர வேண்டும் என்பது விதி!" என்று சொல்கின்றார். அப்போது," என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியனே, சாதாரண நெருப்புப் போதாது, எனக்குச் சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்," என்று துக்கத்தோடு பீஷ்மர் வேண்டினார்.

வியாசர் அதற்கு அவரிடம் எருக்க இலை ஒன்றைக் காட்டி, "பீஷ்மா, எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்க பத்ரம். அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள், சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். நீ ஒரு நைஷ்டிகப் பிரம்மச்சாரி, உன்னைப் போலவே கணேசனும் நைஷ்டிகப் பிரம்மச்சார், அவனுக்கும் எருக்க இலை உகந்தது. ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன்," என்று பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார். கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தி அடைந்து வந்த பீஷ்மர் தியானத்தில் மூழ்கி ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார். அவருக்குச் சிராத்தம் போன்றவைகள் செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், "வருந்தாதே, தருமா, ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரியும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்." என்று சொல்லி ஆறுதல் செய்கிறார்.

ஆகவே தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், தலையிலும்,கண்கள், செவிகள், கை,கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பதும் ஏற்பட்டது. மாறுபட்ட இன்றைய சூழ்நிலையில் எருக்க இலை என்றாலே யாருக்கும் தெரியறதில்லை, யாரும் குளிக்கிறதும் இல்லை எருக்க இலைகளை வைத்துக் கொண்டு. இருந்தாலும் தெரிந்து வைத்துக் கொள்ளலாம் அல்லவா? காலமாகிய தேரில் சுற்றும் ஒற்றைச் சக்கரமான நாட்கள், மாதங்கள், வருடங்களைக் கிழமைகள் என்னும் ஏழு குதிரைகள், அருணனின் துணையுடன் ஓட்டப் படுகின்றது என்றும் சொல்லுவதுண்டு.

13 comments:

 1. கீதாம்மா, ரதசப்தமி மற்றும் பீஷ்மாஷ்டமி இணைந்த பதிவுக்கு நன்னி.

  ReplyDelete
 2. ஏகாதசியன்று உயிர் நீத்தார் என்பது புதிய செய்தி.

  பீஷ்மாஷ்டமி என்பதே அவரது திதி என்று நினைத்தேன்.

  ஆமாம், ஏகாதசியன்று உயிர் நீத்தவருக்கு ஏன் அஷ்டமியன்று தர்பணம் செய்கிறோம்?...கொஞ்சம் குழப்பமாக இருக்கு.

  பீஷ்மாஷ்டமி தர்பணம் எல்லோரும் செய்யக்கூடியது, தாய்-தந்தையர் இருப்பவர், இல்லாதவர் போன்ற எல்லோரும்....இதை தர்பணம் என்று கூறினாலும், இதுவும் ஒரு விதமான அர்க்யப்பிரதானமாகவே தெரிகிறது. திவாண்ணா மேலும் விளக்கினால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 3. இது எனக்கு ஒரு புதிய விஷயம்! நன்றி கீதாம்மா!

  ReplyDelete
 4. @மெளளி, இப்போ முடியாது, நேரமில்லை, பின்னால் சொல்லறேன், அல்லது பதிவாகவே போடறேன். இல்லைனாலும் திவா சொன்னாலும் கேட்டுக்குங்களேன்!

  ReplyDelete
 5. @வாங்க அபி அப்பா, நன்றி, வந்ததுக்கும், கருத்துக்கும், உடம்பையும் கொஞ்சம் பார்த்துக்கணும், ரொம்பப் பதிவு போட்டு உடம்பையும் கெடுத்துக்க வேண்டாமே! பார்த்துக்குங்க!

  ReplyDelete
 6. ரொம்ப நன்னி கீதாமேடம் ஞாபகப்படுத்தியதற்கு. ஆனா இங்கே (சிங்கபூரில்) எருக்கை இலை கிடைக்கவில்லை. மௌலி சார் கேள்வியே கேட்டுன்டு இருக்கப்படாது.பதிலும் சொல்லனும்.ஆச்சாரம் 70 தாண்டி போயிட்டே இருக்கு.

  ReplyDelete
 7. //ஆமாம், ஏகாதசியன்று உயிர் நீத்தவருக்கு ஏன் அஷ்டமியன்று தர்பணம் செய்கிறோம்?...கொஞ்சம் குழப்பமாக இருக்கு.//
  இன்னிக்கு காலையிலே இதைதான் யோசித்து கொண்டு இருந்தேன். கொஞ்சம் விசாரிக்கணும். பாக்கலாம்.

  ReplyDelete
 8. ரதசப்தமி முழுவிவரம் சொன்னதற்கு நன்றி.
  நேத்திக்குத்தான் வேண்டிய ஒருத்தர் தலையிலே தோளிலே கண்ணிலே எல்லாம் வச்சு குளிக்கப்போயி கண்ணிலே (இடது கண்) எரிச்சலாகி வீங்கி .... ட்ரீட்மெண்ட்டுக்கு போனா எருக்கம் இலையாலே இது வரும்னு டாக்டர் சொன்னாங்க. அதனோட ட்ரீட்மெண்ட் பேரே yekka kerato therapy. ஒரு மாசம் தொடர்ந்து மருந்து போடணும்!

  அப்போ உடம்பெல்லாம் எருக்கம் இலையை வச்சிருந்தா என்ன ஆகுமோ? சூரியன் பொசுக்கிற மாதிரியே பொசுக்கிடுமோ (பாவத்தை):)

  ReplyDelete
 9. @திவா/மெளலி, பீஷ்ம தர்ப்பணம் தனியாப் போட்டிருக்கும் பாருங்க பஞ்சாங்கத்திலே, ரதசப்தமி தர்ப்பணம் தனி. அன்னிக்குக் குளிக்கும்போது எருக்க இலை வைத்துக்கொண்டு விடும் நீர் மட்டும் பீஷ்மருக்குப் போகும்னு சொல்லுவாங்க. மற்றபடி பீஷ்ம தர்ப்பணம் தனியாத் தான் வரும்.

  @திராச சார்??????????? ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சரியமா இருக்கே?? சிங்கப்பூரிலே விக்கிரமாதித்தன் சிம்மாசனம் இருக்கோ?? இல்லை விடுமுறை அறிவிப்பைப் பார்த்ததும் ஓடி வந்தீங்களா? :P:P:P:P:P:P:P

  ReplyDelete
 10. //அப்போ உடம்பெல்லாம் எருக்கம் இலையை வச்சிருந்தா என்ன ஆகுமோ? சூரியன் பொசுக்கிற மாதிரியே பொசுக்கிடுமோ (பாவத்தை):)//
  @கபீரன்பன், தவறான கணிப்பு. எருக்க இலை வைச்சுக் குளிச்சதாலே நேர்ந்திருக்க வாய்ப்பில்லை. இலையை முதல்நாளே பறிச்சுத் தண்ணீரிலே போட்டு வைக்கணும், மறுநாள் குளிக்கும்போது பயன்படுத்தணும், உங்க சிநேகிதர் கண்களிலே எருக்கம்பால் பட்டிருக்கும் வாய்ப்பு இருக்கு. உடனடியாக நல்ல கண் மருத்துவரை ஆலோசனை கேட்கச் சொல்லவும். வழிமுறைகளை முறையாகப் பின்பற்றவேண்டும், ஏதோ தப்பாய் செய்திருக்கார். ரொம்பவே வருத்தமளிக்கும் விஷயம். :((((((((((
  விபரம் தெரிய ஆரம்பிச்சதிலே இருந்து எருக்க இலை வைச்சுக் குளிச்ச வழக்கம் உண்டு. இன்றும் தொடர்கிறது. ஆகவே செய்முறையில் தான் தவறு!

  ReplyDelete
 11. // பீஷ்ம தர்ப்பணம் தனியாப் போட்டிருக்கும் பாருங்க பஞ்சாங்கத்திலே, ரதசப்தமி தர்ப்பணம் தனி. அன்னிக்குக் குளிக்கும்போது எருக்க இலை வைத்துக்கொண்டு விடும் நீர் மட்டும் பீஷ்மருக்குப் போகும்னு சொல்லுவாங்க. மற்றபடி பீஷ்ம தர்ப்பணம் தனியாத் தான் வரும். //

  ஆஹா...இதான் கேள்வியே..

  எருக்கெலை வைத்து குளிப்பது ரதசப்தமி அன்று...பீஷ்மாஷ்டமியன்று மூன்று முறை (தனியாக மந்திரம் இருக்கு) அர்க்கியம்.

  எருக்கலையுடன், அருகு, மஞ்சள் பொடி (பெண்களுக்கு), பசுஞ்சாணம், அக்ஷதை போன்றவையும் வைத்து ஸ்நானம்.

  ReplyDelete
 12. //ஆகவே செய்முறையில் தான் தவறு!//

  ஆமாம். இலையப் பறிச்சப்பறம் கண்ணைக் கசக்கினா கண்ணுக்குள்ள தான போகும். அவர் பண்ணினது அதுதான்.

  நான், பறிக்கறவர் கவனிக்க வேண்டிய வழிமுறைகளை நீங்களோ யாராவது சொல்லுவாங்களோன்னு எதிர் பார்த்தேன்.

  சொல்லிட்டீங்க :))))

  ReplyDelete
 13. மிகவும் அருமையான பதிவு. ரதசப்தமி அனைவரும் பின்பற்றினாலும் அதன் பின் இருக்கும் தத்துவத்தை அருமையாக எழுதி உள்ளீர்கள். இதே போன்று மற்ற சில பண்டிகைகளையும் பற்றி எழுதலாமே! ஏன்னா இன்னிக்கு தேதியில மக்களுக்கு பல விஷயங்கள் மறந்து போச்சு. அதுவும் இந்த தலைமுறைக்கு பல விஷயங்கள் தெரியவே இல்லை. வரலக்ஷ்மி நோன்பு அன்னைக்கு ஜீன்ஸ் pant குர்தா சகிதமா நின்னுண்டு கைல டிஜிட்டல் காமேரவோட அம்மனை போட்டோ எடுக்கறதுல இருக்கும் ஆர்வம் அந்த நோன்பு எதுக்கு பண்றா அப்படின்னு தெரிஞ்சுக்கறதுல இல்லை.
  இந்த மாதிரி போஸ்ட் அந்த மாதிரி மக்களுக்கு உதவும்.
  நல்ல தொண்டு. தொடரட்டும்,

  ReplyDelete