எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 29, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்.

இந்தக் கண்ணன் தொடர் முழுக்க முழுக்க திரு முன்ஷி அவர்கள் பார்வையிலே எழுதப் பட்ட முறையிலேயே சொல்லப் படுகிறது என்பதை மீண்டும் நினைவூட்டுகின்றேன். ஏனெனில் இப்போது கண்ணன் வளர்ந்து கொண்டு வருகின்றான். புல்லாங்குழல் எடுத்து இனிய கீதங்கள் இசைக்க ஆரம்பித்து விட்டான். கண்ணன் நடக்கவும் ஆரம்பித்துவிட்டான். கோபியருக்கு மட்டுமின்றி, இப்போது அவன் யமுனையில் நீராடப் போகும்போது தன்னுடன் கோகுலத்துப் பிள்ளைகள் அனைவரையும் அழைத்துச் சென்று , கோகுலத்துச் சிறு பெண்களுடனும், விளையாட ஆரம்பித்து விட்டான்.

கண்ணனோடு இப்போது சிறு பெண்களும் சேர்ந்து கொண்டு விட்டனர். தன் புல்லாங்குழலை எடுத்து இனிய கீதம் இசைப்பதில் வல்லவானாய் இருந்தான் கண்ணன். பெண்களோ அவன் இசைக்கு மயங்கினார்கள். யமுனைக் கரையில் மரத்தின் மீது சாய்ந்து கொண்டு தன் சிறு விரல்களால் புல்லாங்குழலைப் பற்றிக் கொண்டு கண்ணன் இசைக்கும் இனிய கீதத்தைக் கேட்ட பெண்கள் அவனைச் சுற்றிக் கொள்ளுவார்கள். பெண்கள் எல்லாம் கண்ணனைக் கண்டு மயங்கி விடுகின்றார்களே என கோபியர்களுக்குக் கோபம் வந்தது. ஆனால் என்ன செய்ய? கண்ணனைக் கண்டதும் அவர்களுக்கும் இப்படியே அவன் பேரில் கோபம் வருவதில்லை. இன்னும் சொல்லப் போனால் அவனின் கொட்டம் அதிகரிக்கவே செய்தது.

வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை
வெற்பிடையிட்டு அதனோசைகேட்கும்
கண்ணபிரான்கற்றகல்விதன்னைக்
காக்ககில்லோம்உன்மகனைக்காவாய்
புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை
புரைபுரையால்இவைசெய்யவல்ல
அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற
அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய்

யசோதையிடம் சென்று கூவினார்கள். கண்ணனைப்பற்றிப் புறம் சொன்னார்கள். "அடி யசோதை உன் மகனைக் கூவி அழைப்பாயாக! எவ்வளவு வெண்ணெய் தின்பான் உன் மகன்?" என்று அதிசயித்துப் போனார்கள். யசோதைக்குக் கோபம் வருகின்றது. கண்ணனைத் தன்னிடம் அழைக்கின்றாள்.

வருகவருகவருகஇங்கே
வாமனநம்பீ. வருகஇங்கே
கரியகுழல்செய்யவாய்முகத்துக்
காகுத்தநம்பீ. வருகஇங்கே
அரியனிவன்எனக்குஇன்றுநங்காய்.
அஞ்சனவண்ணா. அசலகத்தார்
பரிபவம்பேசத்தரிக்ககில்லேன்
பாவியேனுக்குஇங்கேபோதராயே

கண்ணன் அப்போது தான் பலராமனுடன் வேக, வேகமாய் வந்தவன் தாயின் முகத்தைக் கண்டும், மற்ற கோபியர் சூழ்ந்திருப்பதைக் கண்டும் தயங்கி நிற்கின்றான். இன்னொருத்தி சொல்கின்றாள். "பாலைக் கறந்து அடுப்பிலே வைத்துவிட்டு, என் மகளிடம் சொல்லிவிட்டு மேலை வீட்டிற்கு நெருப்பு வாங்கச் சென்றபோது சற்றே அங்கே தாமதித்தேன் பேச்சில். அடி யசோதை! உன் மகனுக்கு அதுவே போதுமே! பாலை அப்படியே பானையோடு சாய்த்துப் பருகிவிட்டானடி, இந்தக் கூத்தைக் கேட்க மாட்டாயா?" என்றாள்

பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப்
பல்வளையாள்என்மகளிருப்ப
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன்
சாளக்கிராமமுடையநம்பி
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான்
ஆலைக்கரும்பின்மொழியனைய
அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய். 5.

207:
போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய்
போதரேனென்னாதேபோதர்கண்டாய்
ஏதேனும்சொல்லிஅசலகத்தார்
ஏதேனும்பேசநான்கேட்கமட்டேன்
கோதுகலமுடைக்குட்டனேயா.
குன்றெடுத்தாய். குடமாடுகூத்தா.
வேதப்பொருளே. என்வேங்கடவா.
வித்தகனே. இங்கேபோதராயே. 6.

யசோதை கண்ணனைப் பார்த்து "என் கண்ணே, அசலத்தார் உன்னை ஏதேனும் பேச என்னால் கேட்க முடியவில்லையே! கண்ணின் மணியே, என் முத்தே, மோகனமே, இங்கே வாடா" என்று அன்போடு அழைத்தாள். அப்போது வேறொருத்தி, "அடி, யசோதை, உன் மகனைப் போன்ற போக்கிரியை நாங்கள் கண்டதில்லை. கோகுலத்துப் பையன்களை மட்டுமின்றிப் பெண்களையும் மயக்கி இருக்கின்றான் உன் மகன். ஒரு நாள் என் பெண்ணின் வளையை எப்படியோ கழட்டி வாங்கி நாவல்பழக் காரியிடம் கொடுத்துப் பழங்கள் வாங்கித் தின்றான். கேட்டால் அது நானில்லையே! எனக் கூறிச் சிரிக்கின்றானடி யசோதை!" கோபியர்களில் ஒருத்தி இவ்வாறு கூறினாள்.

சொல்லிலரசிப்படுதிநங்காய்.
சுழலுடையன்உன்பிள்ளைதானே
இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவிக்
கையில்வளையைக்கழற்றிக்கொண்டு
கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற
அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து
நல்லனநாவற்பழங்கள்கொண்டு
நானல்லேனென்றுசிரிக்கின்றானே

பெண்கள் எல்லாம் சென்று விடுகின்றனர். கண்ணன் அங்கேயே தாயின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கின்றான். யசோதைக்குக் கோபம் தாங்க முடியவில்லை. பிள்ளையை அடிக்கவும் மனம் வரவில்லை. கண்ணனோ எனில் வழக்கமான அணைப்பையும், பாசத்தையுமே எதிர்பார்த்தான் தாயிடம். வேண்டுமானால் கீழே விழுந்து புரண்டு கூட அழலாமா என யோசித்தான். அம்மாவால் தாங்க முடியாது. கண்ணன் அறிவான் அதை. தாய் தான் இல்லாமல் தயிர் கடையவும் மாட்டாளே. அவள் தயிர் கடையும்போது தானும் சென்று பின்னாலிருந்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு, தன் சிறு கைகளால் ஒரு பக்கக் கயிற்றை இழுக்க, தாயும் இழுக்க, "அம்மா, அந்த சுகம் வருமா? இதோ! அம்மா தயிர் கடையப் போகின்றாள் போலிருக்கிறதே! நம்மைக் கூப்பிடுவாள். நாமும் தயாராக வேண்டியது தான். ஆனால் அம்மாவுக்கு நாம் தயாராய் இருப்பது தெரியக் கூடாது. கோபமாய் இருப்பது போல் இருக்கவேண்டும். அம்மா உட்காரட்டும். தெரியாமல் பின்னால் போய்க் கழுத்தைக் கட்டிக் கொள்ளலாம். அப்போது வெண்ணெயும் இன்னும் நிறைய்ய்ய்ய்ய்யக் கிடைக்குமே!" கண்ணன் யோசித்தான்.

ஆனால் இது என்ன? அம்மா, தானே தயிர் கடைய ஆயத்தமாகிவிட்டாளே. ம்ம்ம்ம்..., நம்மைக் கூப்பிடக் காணோமே! கண்ணனின் உதடு பிதுங்குகின்றது. கண்களில் கண்ணீர் நிறைகின்றது. யசோதா அம்மாவோ எதையும் காணாதவள் போலத் தன் வேலையில் முனைந்தாள். கண்ணன் குரலெடுத்து அழ ஆரம்பித்தான். காது செவிடா யசோதைக்கு? திரும்பிக் கூடப் பார்க்கவில்லையே? ஓஹோ, அம்மாவுக்கு இன்னும் கோபம் தணியவில்லையோ? நன்றி கெட்ட கோபியர்கள்! நல்லா சொல்லிக் கொடுத்துட்டுப் போயிட்டாங்க. ம்ம்ம்ம்ம் எனக்கும் கோபம் தான். அது அம்மாவுக்கும் புரியணுமே! எப்படி? ம்ம்ம்ம் பலராம அண்ணனுக்குக் கோபம் வந்தால் கண்ணை உருட்டி, காலை உதைத்துப் பெருங்குரலெடுத்துக் கத்துவான். அது சரியல்ல. நாம அப்படிக் கத்தக் கூடாது. நமக்கும் கோபம்னு அம்மாவுக்குத் தெரியணும். அதே சமயம் அம்மா நம்மை எடுத்துக்கொஞ்சவும் செய்யணும்.

கண்ணன் தன் அழுகையை நிறுத்திக் கொண்டு மெல்ல, மெல்லச் சென்று தாயின் புடவை முந்தானையைப் பிடித்து இழுக்கின்றான். உதடுகள் அழுகையில் பிதுங்கி நின்றன. எந்தக் கணமும் அழத் தயாரான நிலையில் கண்ணன். யசோதையோ திரும்பிப் பார்க்கின்றாள் தான். ஆனால் எந்த மாற்றமும் இல்லை அவள் முகத்தில். கண்ணன் அழத் தயாரானான். "அம்மா, யசோதா அம்மா, நான் உன் பிள்ளை அல்லவா? நீ தானே என்னைப் பெற்றாய்?" கண்ணன் முகத்தில் கள்ளச் சிரிப்பு. "என்னனு கேட்க மாட்டாயா?" கண்ணன் ஆரம்பித்தான்.

தத்துக்கொண்டாள்கொலோ? தானேபெற்றாள்கொலோ?
சித்தமனையாள் அசோதையிளஞ்சிங்கம்
கொத்தார்கருங்குழல் கோபாலகோளரி
அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 7

ஆனால் இது என்ன? அடுப்பில் வைத்த பால் பொங்குகிறதோ? யசோதை கண்ணனைக் கவனிக்காமல் உள்ளே சென்றாள். இப்போது கண்ணனுக்குக் கோபம் அதிகம் ஆனது. சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரு கம்பு கிடைத்தது. அந்தக் கம்பினால் தயிர்ப்பானையை ஓங்கி ஒரு அடி அடித்தான். பானை உடைந்து தயிர் வெள்ளம் எங்கும். வெண்ணெய் சிதறியது. கையில் வெண்ணெயை எடுத்துக் கொண்ட கண்ணன் அங்கே கிடந்த ஒரு உரலில் அமர்ந்து கொண்டு பூனைகளுக்கும், குரங்குகளுக்கும், வெண்ணெயை ஊட்ட ஆரம்பித்தான். சற்று நேரம் கழித்து அங்கே வந்த யசோதை தயிர்ப்பானை உடைந்திருப்பதையும் வெண்ணெய் கீழே விழுந்து வீணாகப்போயிருப்பதையும், கண்ணன் வெண்ணெய் தின்ற கோலத்திலும், வெண்ணெய் ஊட்டும் கோலத்திலும் அமர்ந்திருப்பதையும் கண்டு திகைத்தாள்.

கோபம் பொறுக்க முடியாமல் போகின்றது யசோதைக்கு. கண்ணனை நன்றாய் அடித்துவிட வேண்டும் எனக் கம்பை எடுக்கின்றாள். "இரு, இரு, உன்னை நன்கு அடிக்கிறேன்." கண்ணனை அடிக்கப் போகக் கண்ணன் ஓடுகின்றான். யசோதை துரத்த, கண்ணன் ஓட, தான் கொட்டிய தயிரிலேயே வழுக்கிக் கண்ணன் விழ, கீழே விழுந்த கண்ணன் பெருங்குரலெடுத்து அழ, யசோதை ஒரு கணம் தயங்கினாள். கண்ணனும் இது சரியான சமயம் எனப் புரிந்து கொண்டு தான் அழுதால் தாய் மனம் இளகும் எனவும் அறிந்து கொண்டு மேலும் அழுகின்றான். யசோதை கம்பைத் தூக்கி எறிந்தாள். தலைமுடி எல்லாம் கண்ணனுடன் ஓடியதில் அவிழ்ந்து பறக்க, மேலாடை பறக்க, தலையில் சூடி இருந்த பூக்கள் வீடெங்கும் சிதறி இருக்க சுற்றுமுற்றும் பார்த்து யசோதை ஒரு கயிற்றை எடுத்தாள். யசோதை கோபத்துடனேயே கண்ணனை அழைத்து ஒரு கயிற்றை எடுத்து அவன் இடுப்பில் கட்டி அருகே இருந்த உரலோடு சேர்த்துக் கட்ட முனைகின்றாள்.

4 comments:

 1. திரு முன்ஷி அவர்கள் பார்வையிலே எழுதப் பட்ட முறையிலேயே சொல்லப் படுகிறது என்பதை மீண்டும் நினைவூட்டுகின்றேன்.//

  ஓஹோ! முன்ஷிக்கு தமிழ் நல்லா தெரியும் போல இருக்கு.
  :-)))
  இந்த திருட்டுப்பய கதை எவ்வளோ படிச்சாலும் அலுக்கலையே!

  ReplyDelete
 2. கதை கேட்டுகிட்டே இருக்கோம்...ம் ;)

  ReplyDelete
 3. பா...வம் கண்ணக் குழந்தை :)

  ReplyDelete
 4. ஆமாம், திவா, முன்ஷிக்குத் தமிழ் நல்லாவே தெரியும்! :P:P:P:P

  @கோபிநாத், கேட்போம், கேட்போம், கேட்டுக் கொண்டே இருப்போம்! :)))))

  வாங்க கவிநயா, ரசனைக்கு நன்றி! :D

  ReplyDelete