எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 24, 2009

அக்னி நட்சத்திரம்னா என்ன?

நல்ல கடுங்கோடைக் காலம் ஆரம்பிச்சாச்சு. எல்லாருமே வெயிலில் வெந்து கொண்டிருக்கோம். இன்னும் வெயில் அதிகமாய்த் தெரியும் அக்னி நக்ஷத்திரம் என்னும் நாட்கள் வேறே வரப் போகின்றது. சூரியன் பூமிக்கு மிக அருகே வரும் நாட்கள் தான் அவை என அறிவியல் கூறுகின்றது. ஆனால் நம் முன்னோர்கள் எதையும் மெய்ஞானத்தோடு சேர்த்தே பார்க்கிறவர்கள் ஆகையால் அவங்க சொல்லும் காரணத்தை இங்கே பார்ப்போமா? இந்தக் கதை தெரிஞ்சவங்க நான் திரும்பச் சொல்றதுக்கு மன்னிச்சுக்குங்க.

அக்னி பகவானுக்கு ஒரே பசி. எத்தனையோ ஆஹுதிகள், எத்தனையோ உணவுகள், விதவிதமான உணவுகள் கிடைக்கிறது. ஆனாலும் பசி அடங்கலை. தவியாய்த் தவிச்சான். என்ன கிடைச்சாலும் உடனே சாப்பிட்டுப் பார்த்தாலும் பசி அடங்கவே இல்லை அவனுக்கு. இந்தப் பசி அவனுக்கு எப்படி ஏற்பட்டதுன்னா அதிகம் சாப்பிட்டதாலே தான். என்ன? ஆச்சரியமா இருக்கா? சுவேதகி என்ற மன்னன் ஒருவன் தொடர்ந்து பனிரண்டு வருஷங்கள் யாகம் செய்தான். யாகத் தீ தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. யாகத்தில் விடப் பட்ட நெய்யை அக்னி தொடர்ந்து ஏற்றுக் கொண்டான். அதைத் தொடர்ந்து சாப்பிட்டதிலே அவனுக்கு வயிற்றில் நோய் ஏற்பட அதன் காரணமாய் எதைச் சாப்பிட்டாலும் பசி போகலை என்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. பிரம்மாவைச் சரணடைந்தான். அவனோட கோரப் பசிக்கு உணவு காண்டவ வனம் தான் என்று பிரம்மா சொல்கின்றார்.

காண்டவ வனம் எங்கே இருக்கு? அக்னி தேடுகின்றான். ஆஹா, அதோ காண்டவ வனம், யமுனைக்கரையிலே! ஆவலுடன் சென்றான் அக்னி, அந்த வனத்தைக் கபளீகரம் செய்ய ஆரம்பித்தான். ஆனால் என்ன இது? இந்திரனுக்குப் பொறாமையா? அல்லது தெரியாமல் செய்கின்றானா? அக்னி வனத்தை விழுங்க முயல, இந்திரன் மழையாக வர்ஷிக்க, அக்னி முடிவில் தோற்றே போனான். காட்டை அக்னி நெருங்கினாலே மழை கொட்டியது. என்ன செய்வது எனப் புரியாமல் தவித்தான் அக்னி. அப்போது, ஆற்றங்கரைக்கு அர்ஜுனனோடு பேசிக் கொண்டே வந்த ஸ்ரீகிருஷ்ணனைக் கண்டான் அக்னி. ஸ்ரீகிருஷ்ணர் தான் நம்மைக் காக்க வல்லவர் என்ற எண்ணம் அவன் மனதில் உண்டாகியது. உடனே ஒரு வயோதிகர் உருவெடுத்துக் கொண்டு, தள்ளாடித் தள்ளாடி நடந்து அவர்கள் இருவர் முன்னும் சென்று நின்றான் அக்னி.

ஸ்ரீகிருஷ்ணர் வந்திருப்பது அக்னியே என்பதைப் புரிந்து கொள்கின்றார். எனினும் என்ன வேண்டும் எனக் கேட்க, மிகுந்த பசியோடு இருப்பதாயும் உணவு வேண்டும் எனவும் அக்னி சொல்ல, “அக்னியே, உன்னைப் புரிந்து கொண்டேன், உன் பசி அடங்க உணவு கிடைக்கும்” என உறுதி அளிக்கின்றார் ஸ்ரீகிருஷ்ணர். இந்திரன் வந்து தான் காண்டவ வனத்தை நெருங்க விடாமல் செய்வதை அக்னி சொல்கின்றான். ஸ்ரீகிருஷ்ணர் அக்னியிடம், “உனக்கு 21 நாட்கள் கெடு கொடுக்கின்றேன். அதற்குள்ளாக நீ வனத்தை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும். இந்திரன் பெரு மழையாகக்கொட்டினாலும் உன்னை நெருங்க மாட்டான். நீ அதற்குள்ளாக உன் வேலையை முடித்துக் கொள்ள வேண்டும்.” என்று சொல்லிவிட்டுப் பார்த்தனைப் பார்க்கின்றார். காண்டவ வனத்தை அழித்தே அங்கே இந்திரப் பிரஸ்தம் கட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தனர் பாண்டவர்கள். ஆனால் காண்டவ வனத்தை அழிப்பது எவ்வாறு? இதோ தக்க சமயத்தில் அக்னி உதவிக்கு வந்துவிட்டானே.

அர்ஜுனனை ஸ்ரீகிருஷ்ணர் பார்த்ததுக்கு வேறே அர்த்தமும் உண்டு. அர்ஜுனன் அம்பு மழை பெய்து கூடாரங்கள் போட்டு இந்திரனால் பொழியப் படும் பெரும் மழையைத் தடுத்துவிடுவான் அல்லவா? அதே போல அர்ஜுனன் அஸ்திரங்களை எய்து வானத்தை நோக்கிச் செலுத்தினான். ஆயிரமாயிரம் அம்புகள் அர்ஜுனனால் ஏவப் பட்டன. அனைத்தும் ஆகாயத்தில் இணைந்து ஒரு சரக் கூடமாக நின்று காண்டவ வனத்தை மழையில் இருந்து காத்தது. அக்னியும் உள்ளே நுழைந்தான். அங்கே உள்ள அனைத்தையும் அள்ளி விழுங்க ஆரம்பித்தான். இந்திரனோ அதைத் தடுக்க ரொம்ப ரொம்ப பலமா மழையைப் பொழிய வைக்க முயல, ஒரு துளி கூட அங்கே விழாதபடிக்கு சரக்கூடம் தடுத்து நின்றது.

முதல் எழு நாட்கள் அக்னி மெல்ல மெல்ல உணவை விழுங்க ஆரம்பித்தான். அப்போது வெப்பம் மெல்ல மெல்லப் பரவ ஆரம்பித்தது. அடுத்த ஏழு நாட்கள் கொஞ்சம் அதிகமாயும், வேகமாயும் காட்டை விழுங்க ஆரம்பிக்க வெப்பம் கடுமையானது. கடைசி எழு நாட்கள், படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது காடும், அக்னியின் வேகமும். வெப்பம் மெல்ல மெல்லக் குறைந்தது.
இந்த இருபத்தி ஒரு நாட்களையே அக்னி நட்சத்திரம் என்ற பெயரில் சொல்லுகின்றோம். சென்னை மக்களால் கத்திரி வெயில் என்றழைக்கப் படும் இவற்றின் முதல் ஏழு நாட்கள் வெப்பம் படிப்படியாக அதிகரித்து நடு ஏழு நாட்கள் வெப்பம் உச்ச கட்டத்தை அடைந்து கடைசி ஏழு நாட்களில் வெப்பம் படிப்படியாகக் குறைவதையும் உணரலாம்.

12 comments:

 1. Good post, thanks for the information.

  ReplyDelete
 2. கதையெல்லாம் சரி தான்.

  இந்த அக்னி நட்சத்திர வெய்யிலில் ரோட்டில் வாடி வரும் மக்களுக்கு மோர் வழங்கினால் ரொம்ப புண்ணியமாக்கும். அதனால....

  ReplyDelete
 3. நல்லா இருக்கே கதை. நன்றி

  ReplyDelete
 4. இதுதான் அக்கினி கதையா...தெரிஞ்ச பிறகு ரொம்ப தகிக்கிறதே....அக்கினி பகவான் சரி ,
  அக்கினி நட்சத்திரம்னு ஏன் சொல்லணும் ?????

  ReplyDelete
 5. அப்புறம் அந்த பறவைகள்....அந்த கதையும் சொல்லி இருக்கக்கூடாதா?

  ReplyDelete
 6. வாங்க யுவா, புது வரவு?? நன்றி, பாராட்டுக்கு.

  ReplyDelete
 7. @அம்பி, என்ன இன்னிக்கு இந்தப் பக்கம் காத்தடிச்சிருக்கு?? :P:P:P மோர் தானே மோர் கொடுக்கலாமே மோர்! ஆனால் நீங்க அம்பத்தூர் வந்தால் தான்! மொய்னு படிச்சுடாதீங்க. அது கிடைக்காது! :P

  ReplyDelete
 8. வாங்க அமுதா, ஏற்கெனவே ஒரு அகரம் அமுதா இருக்காங்க போல, நீங்க அவங்களா, இல்லை வேறேயா? வந்ததுக்கு நன்னிங்கோ!

  ReplyDelete
 9. அட, கோமா, என்ன அதிசயம், என்ன அதிசயம்?? அதான் இன்னிக்கு சூடு அதிகமாய்த் தெரிஞ்சுதா? அக்கினி போல சூரியன் தகிக்கிறதாலே அக்னி நட்சத்திரம்னு வந்திருக்கும். சூரியன் நட்சத்திரக் குடும்பம் தானே!

  ReplyDelete
 10. @திவா, உங்களுக்குத் தெரிஞ்ச கதை எல்லாம் சொல்ல மாட்டேன், போங்க, நீங்களே கதை கதையாம் காரணமாம் ல எழுதிடுங்க!

  ReplyDelete
 11. இங்க எப்பாவும் அக்னி தான்..!

  ReplyDelete
 12. தகவலுக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி

  ReplyDelete