எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 14, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், - ப்ரத்யோதாவின் கலக்கம்!

ப்ரலம்பன் இறந்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. கம்சன் இந்த மூன்று நாட்களும் தூங்கவே இல்லை. பகலும், இரவும் அவனைப் பொறுத்தவரையில் ஒன்றாகவே இருந்தது. தன்னந்தனியாகத் தன் அறையில் அமர்ந்து யாருடனும் பேசாமல் யோசித்தவண்ணமே பொழுதைக் கழித்தான். யோசனை என்றால் சாமானியமான யோசனையா அது? வசுதேவனின் மகன் அதுவும் எட்டாவது மகன் உயிருடன் இருக்கின்றானா? அதுவும் அப்படியா? அவனைச் சும்மாவிடுவதா? விடுவதா?? ஹாஹ்ஹாஹா! வாசுதேவ கிருஷ்ணா, நீ எனக்கு எமனா? நான் உனக்கு எமனா? பார்த்துவிடுவோம். அவன் அழிந்தே ஆகவேண்டும். இந்த உலகை உய்விக்கப் பிறந்தவன் என்றாராமே வேத வியாசமுனி?? யார் உய்விக்கப் போகின்றார்கள் பார்க்கலாம். உயிருடன் இருந்தால் தானே உலகை உய்விக்க முடியும்? என்னால் இறக்கப் போகின்றான், அவனை மட்டுமின்றி அவனுடன் சேர்த்து இந்த யாதவத் தலைவர்கள் அனைவரையும் கூட அழித்தால் நல்லதுதான். அனைவருக்கும் பனிரண்டு ஆண்டுகள் நான் இல்லாமல் துளிர்த்துவிட்டது. கம்சன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.

அனைத்து யாதவத் தலைவர்களுக்கும் செய்தி அனுப்பினான். செய்தியில் யாதவ சமூகத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவுத் தலைவர்களும் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டிய கூட்டம் எனவும், இது கம்சனின் ஆணை எனவும் சொல்லி அனுப்பினான். கூட்டத்தின் கலந்துரையாடல் ரகசியமாக வைக்கப் படும். ஆகையால் இது ஓர் அவசியமான ரகசியக் கூட்டம் எனவும் அனைவருக்கும் தெரிவிக்கப் பட்டது. அதோடு பொதுமக்களுக்கு அன்றிலிருந்து பதினைந்தாம் நாள், கம்சன் அஸ்வமேத யாகத்துக்குச் சென்று வந்ததையும், வென்று வந்ததையும் கொண்டாடும் வகையில் ஒரு தனுர் யாகம் நடத்தப் போவதாயும், அந்த யாகத்துக்கு முந்திய ஒரு வாரமும் பலவிதமான கொண்டாட்டங்கள் நடைபெறும் எனவும் அறிவிக்கப் பட்டது. கொண்டாட்டங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளைத் தவிரவும், வீரர்களின் மல்யுத்தப் போட்டிகள், ரதப் போட்டிகள், யானைகளின் சண்டைகள், வாள் வித்தை, வில் வித்தை போன்ற பல்வேறு விதமான போட்டிகளும் தேர்ச்சி பெற்ற சிறந்த வீரர்களால் நடத்தப் படும் எனவும் போட்டியில் வென்றவர்களுக்குப் பல்வேறுவிதமான பரிசுகள் காத்திருப்பதாயும் அறிவிக்கப் பட்டது.

பூதனையின் கணவனும், கம்சனின் படைத் தளபதியும் ஆன ப்ரத்யோதா மனைவி இறந்ததில் இருந்தே மனத் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். தானோ, தன் மனைவியோ சரியான பாதையில் செல்லவில்லை என்பதும், அதன் காரணமாகவே இந்தத் துன்பம் என்பதும் அவனுக்கு நன்கு புரிந்தாலும், வெளிப்படையாகக் கம்சனின் ஆணையைச் சிரமேல் ஏற்று அதை நடத்த முனைந்தான். ஆனாலும் கம்சன் அவனை நம்பவில்லையோ? வெளிப்படையாக ப்ரத்யோதா தான் இந்த யாகத்துக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப் போகின்றான் என்று இருந்தாலும், கம்சன் ரகசியமாய்த் தன் அருமை மனைவியும் ஜராசந்தனின் மகளும் ஆன மகத இளவரசியின் உறவினன் ஆன வ்ருத்திர்க்ஞன் என்பவனையே அழைத்து அனைத்து ஆலோசனைகளையும் சொல்லி அவன் மூலம் நடத்திக் கொண்டான். அதோடு இல்லாமல் ப்ரத்யோதாவுக்கு இன்னும் அதிர்ச்சி அளிக்கும் விதமாய் கம்சனின் மெய்க்காப்பாளர்களாய் இருந்த ப்ரத்யோதாவின் வீரர்கள் திருப்பி அனுப்பப் பட்டு அந்த இடத்தில் இப்போது விர்த்திர்க்ஞனின் வீரர்கள் பொறுப்பை ஏற்றிருந்தனர். கம்சனுக்குத் தன்னிடம் சந்தேகம் என்பதும், அதை அவன் வெளிப்படையாகக் கேட்காததும் ப்ரத்யோதாவின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது. வாழ்நாள் பூராவும் இந்த அரக்கனுக்குப் பணிவிடை புரிந்து வந்தும், பல்வேறு கொடிய செயல்களை இவன் செய்யச் சொல்லிச் செய்தும், இவனுக்கு நம்மிடம் நம்பிக்கை வரவில்லையே! இந்த மூடனுக்காக நான் என் மனைவியையே இழந்து என் குழந்தைகளையும் இழந்தேனே! மனம் நொந்தான் ப்ரத்யோதா.

ப்ரலம்பனின் கடைசி நிமிடங்கள் அவனுக்கு மறக்கவே முடியாத ஓர் அனுபவமாக அமைந்தது. வெளியே காவல் காக்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் அவன் காதுகள் உள்ளே நடப்பதையே கூர்மையாகக் கவனித்துக் கிரஹித்துக் கொண்டிருந்தது. கடைசியில் ப்ரலம்பன் சொன்னது, “இவன் அந்த மஹா வாசுதேவனே! சாட்சாத் அந்தப் பரம்பொருளே!” என்றல்லவோ சொன்னான். ஆஹா, இது உண்மையாகவே இருக்கவேண்டும். அதான் இந்தக் கிழவன் ப்ரலம்பன் அந்த நந்தனின் குமாரனை எவ்விதமான இடையூறும் கொடுக்காமல் வளரவிட்டானோ? நம்மையும் அணுகவிடவே இல்லை, தானும் எந்தத் தொந்திரவும் கொடுக்கவில்லை. அதோடு அவனுக்குத் தெரிந்திருக்கிறது. இந்த நந்தனின் குமாரனாய் வளர்பவன் வாசுதேவ கிருஷ்ணன் என்றும், தேவகியின் எட்டாம் குழந்தை, கம்சனின் யமன் என்பதும் தெரிந்தே வளரவிட்டிருக்கிறான். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்???? ஆனால் பூதனை தேவகிக்குப் பெண்குழந்தை பிறந்ததாக அன்றோ சொன்னாள்? அவள் ஏன் அப்படிச் சொல்லவேண்டும்? அந்தப் பெண் குழந்தையைக் கம்சன் தூக்கியபோது அது ஏன் ஒரு விசித்திரக் கூச்சலுடன் கையை விட்டு நழுவிச் சென்றது? பூதனை ஏன் கோகுலத்துக் குழந்தைகளுக்கு விஷப் பால் ஊட்டச் சென்றாள்? ஒருவேளை, ஒருவேளை இப்படியும் இருக்குமோ?? பூதனைக்குத் தெரிந்திருக்கும் இவன் தான் நம்மைக் காக்கவல்ல ரக்ஷகன் என்று. அவனைக் கம்சனிடமிருந்து காக்கவும், எல்லாத்துக்கும் மேலே நம்மையும், நம் குழந்தைகளையும் காக்கவும் இப்படிச் செய்திருக்கலாமோ?

ப்ரலம்பனுக்கு மட்டுமில்லாமல் பூதனையும் அறிந்திருக்கிறாள் அந்தக் குழந்தைதான் காக்கும் கடவுள் என்று. இப்போது கம்சன் ஏதோ திட்டம் தீட்டுகிறான், அனைத்து யாதவர்களையும் ஒருசேர அழிக்கவேண்டும் என்று நினைக்கிறான். அது நடக்குமா? இப்போது நான் என்ன செய்வது? என்னுடைய சொந்த யாதவகுலத்துத் தலைவர்கள் அனைவரும் அழியக் காரணமாய்க் கம்சனுக்கு நான் உதவி செய்யவேண்டுமா? நானும் ஒரு தலைவன் தானே. கம்சனின் ஒரு கருவியாக நான் செயல்படவேண்டுமா? கம்சனுக்கு நான் உதவுகிறேன் என்றால் மட்டுமே எனக்கு இங்கே மதிப்புக் கொடுப்பான் கம்சன். அனைத்துத் தலைவர்களையும் அழித்தாலும் என்னை மட்டும் விட்டு வைப்பானோ? சிந்தனை ஓட்டத்தைத் தடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த ப்ரத்யோதாவுக்கு அப்போது வந்த செய்தியால் சிந்தனை அறுபட்டது. கம்சன் உடனே வந்து அவனைக் காணச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறான். சேச்சே! இப்போது இருக்கும் மனநிலையில் கம்சனைக் காணவே பிடிக்கவில்லையே! அதுவும் இப்போது நாம் நினைப்பதை எல்லாம் கம்சன் அறிந்துவிட்டானானால். அவனுக்கு என்னமோ மனதை ஊடுருவிப் பார்க்கும் திறன் இருக்கிறது. அதுவும் இப்போது கம்சன் அவனுடைய பயத்தையும், நடுக்கத்தையும் உதறிவிட்டவன் போல் இருக்கிறான். ஏதோ திட்டம் அவன் மனதில் ஏற்பட்டிருக்கிறது. அவனுடைய நிதானமும், அதீதப் பணிவும் அவன் ஏதோ துர்நோக்கத்துடன் கூடிய திட்டம் ஒன்றை நிறைவேற்றப் போகின்றான் என்றே அறிவிக்கிறது. வேறு வழியே இல்லை. ப்ரத்யோதா கம்சனிடம் சென்றான்.

அவனைக் கண்டதும் கம்சன் மகிழ்ந்தவன் போல, “ நண்பா, நீ உடனே சென்ரு அக்ரூரரை அழைத்து வா. அல்லது அவரிடம் சொல். அனைத்து யாதவத் தலைவர்களையும் ஒன்று சேர்த்து அழைத்து வரும்படிச் சொல்லு. அதுவும் நாளை மதியம் நான் அனைவரையும் காண விரும்புவதாய்ச் சொல்லு.”

“அனைவரையுமா”

“ஆம், அனைவரையும். அவர்கள் அனைவரிடமும் நான் பேசி சமாதானமாய்ப் போக விரும்புகிறேன். ஆகையால் அனைவரையும், வரச் சொல்லு. புரிகிறதா ப்ரத்யோதா? ஒருவரும் விடக் கூடாது. என் தந்தையும் கலந்து கொள்ளப் போகின்றார் இந்தக் கூட்டத்தில்.”

“உத்தரவு, அரசே!” ப்ரத்யோதா கேட்டான், “ நானுமா கலந்து கொள்ளவேண்டும்?”
“நிச்சயமாய்! நிச்சயமாய்! நீ இல்லாமல் கூட்டமா?”
கம்சனின் போலிப் பணிவு வெளிப்பட்டது அவன் குரலில். ப்ரத்யோதா இந்தப் பணிவைக் கண்டு வெறுத்தான், பயந்தான். “சரி, உத்தரவு அரசே! என்றால் கூட்டம் நடக்கும் வேளையில் என்னுடைய வீரர்களைக் காவலில் அமர்த்தலாமா? நானும் காவலில் தானே இருக்கவேண்டும்?”

“உன்னை நீயே கஷ்டப் படுத்திக் கொள்ளாதே நண்பனே! இளவரசன் வ்ருத்திர்க்ஞன் அனைத்தையும் பார்த்துக் கொள்ளுவான்.”

“உத்தரவு அரசே!”

”சரி, அக்ரூரர் என்ன சொல்லுகின்றார் என்பதை என்னிடம் வந்து சொல்லு.” கம்சன் ப்ரத்யோதாவைப் போகலாம் எனச் சைகை காட்டினான். ப்ரத்யோதாவிற்குத் தன் காதுகளை நம்பமுடியவில்லை. இரக்கமற்ற இந்த அரக்கன் இப்போது சமாதானமா பேசப் போகின்றான். தன்னுடைய சொந்த ஒற்றர்களைத் திரட்டி மாளிகையில் நடப்பது பற்றி ஓரளவு அறிந்து கொண்ட ப்ரத்யோதா அக்ரூரரைக் காணச் சென்றான். தலை நரைக்கத் தொடங்கி இருந்த அக்ரூரர் ப்ரத்யோதாவின் வரவினால் ஆச்சரியம் அடைந்தார். அவருடைய சாந்தமான கண்கள் மட்டுமின்றி, முகமும் ப்ரத்யோதாவை வரவேற்றது. கம்சனின் செய்தியை ப்ரத்யோதா சொன்னதுமே, அக்ரூரருக்கும் இது கொஞ்சம் விசித்திரமாகவே தெரிந்தது. “இது என்ன எதிர்பாராமல் இப்படி ஒரு கட்டளை?” என்று கேட்டார் அக்ரூரர், ப்ரத்யோதாவிடம். “தெரியவில்லை, எனக்கும் ஆச்சரியமாய்த் தான் இருந்தது. சற்றுமுன்னரே மன்னர் இதை என்னிடம் சொன்னார்.” என்றான் ப்ரத்யோதா.

“ம்ம்ம்ம்ம் நீ தான் தனுர்யாகம் பொறுப்பை ஏற்றிருக்கிறாயாமே? மாளிகைக் காவல் இப்போது உன்னிடம் இல்லையாமே? “ அக்ரூரர் கேட்டார். இந்த நல்ல மனிதனை ஏமாற்றி என்ன சாதிக்கப் போகிறான் கம்சன்? ப்ரத்யோதாவிற்கு அவரிடம் எதையும் மறைக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அக்ரூரர் மேலும் கேட்டார். “ எங்கள் அனைவரிடமும் கம்சன் கோபமாக இருப்பதாகவே அறிந்தேன். அப்புறம் எப்படி இப்படி ஒரு கட்டளை?”

“ஆம், ஐயா, ஆனால் இன்று கம்சனைப் பார்த்தால் மனம் சமாதானம் அடைந்தவனாய்த் தோன்றினான். மிகவும் சிநேகிதமாய்ப் பேசினான்.”

“ஏன் இந்த திடீர் மாற்றம்?”

தயங்கிக் கொண்டே, “தெரியாதே!” என்றான் ப்ரத்யோதா. இந்த நல்ல மனிதனிடம் பொய் சொல்லவேண்டி உள்ளதே, நான் சொல்வது பொய் என்பதை இவர் கண்டு கொள்வாரா? இவரைக் காணவே வெட்கமாயும் உள்ளது. “ம்ம்ம்ம்ம்ம் ப்ரத்யோதா, நீ மன்னனுக்கு மிகவும் நெருக்கமானவன். இந்த மாற்றம் உண்மையா? அல்லது அனைவரையும் வரவழைத்து ஒரே இடத்தில் அனைவரையும் கொல்ல ஏதாவது திட்டமா? அப்படி ஒன்றும் நேர்மையானவனாய்த் தெரியவில்லையே இந்த இளவரசன் கம்சன்.” அனைவரும் கம்சனை மன்னன் எனவே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கட்டளை இருந்தாலும் உக்ரசேனர் உயிருடன் இருப்பதால் அக்ரூரரால் அவனை மன்னனாக ஏற்கமுடியவில்லை. ப்ரத்யோதாவோ தவித்தான். ரிஷியைப் போன்ற புனிதமான இந்த மனிதரிடம் அதுவும், நம் உறவினர்களுள் தலைமை ஸ்தானம் வகிப்பவர், அனைவராலும் வணங்கப் படுபவர் இவரிடம் போய்ப் பொய் சொல்லும்படி செய்துவிட்டானே இந்தக் கம்சன். அவரை நிமிர்ந்தே பார்க்கமுடியவில்லை ப்ரத்யோதாவிற்கு. “இளவரசருக்கு ஏதானும் திட்டம் இருக்கலாம். அவர் ஒரு வித்தியாசமான மனிதர்.” என்று பொதுவாய்ச் சொன்னான். “ம்ம்ம்ம்ம்ம் “ அக்ரூரரும் யோசித்தவண்ணமே கேட்டார், “ஏதேனும் துர்நோக்கம் வைத்திருப்பானோ?” “இருக்கலாம்” என்று சொல்லும் வண்ணம் தலையை ஆட்டினான் ப்ரத்யோதா. அப்போது அங்கே ஒரு இனிமையான குரல் கேட்டது. “வணங்கத் தக்கவரே, வருகிறீர்களா?? கர்காசாரியார்……………

ப்ரத்யோதாவிற்குத் தூக்கிவாரிப் போட்டது. ஒரு முப்பது வயது மதிக்கத் தக்க பெண் ஒருத்தி சிறு கூடு போன்ற உடலோடு நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு வயது முப்பதுக்கு மேல் இருக்காது, ஆனால் அவள் தலையோ நரைத்துப் போய், முகத்தில் சோகத்தின் எல்லை மீறிப் போய், வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு சோக உணர்வு நிரந்தரமாக முத்திரை இட்டுப்போயிருந்தது. யார் இவள்? உள்ளே வந்த அவள், தன் பேச்சை நிறுத்திக் கொண்டு பயத்தோடு ப்ரத்யோதாவைப் பார்த்தாள். அவள் பயம் அவள் கண்களில் தெரிந்தது. அக்ரூரர், “வா, தேவகி” என அவளை வரவேற்றார். என்ன????? இவளா தேவகி? உலகத்துச் சோகமெல்லாம் ஒன்று சேர்ந்து ஓருரு எடுத்து வந்தாற்போல் இருக்கிறாளே? அக்ரூரர், “இதோ இவன் யார் தெரிகிறதா?ப்ரத்யோதா, நம் யாதவ குலத்தின் அந்தகப் பிரிவைச் சேர்ந்த தலைவன் இவன், தெரியுமா?” என்று தேவகியைக் கேட்டார். தேவகிக்கு அவன் யாரென முதலில் புரியவில்லை. புரிந்ததும் அவள் உடலே நடுங்கியது. முகம் வெளுத்துக் கைகள், கால்கள் நடுங்க ஆரம்பித்தன. கீழே விழுந்துவிடுவாள் போல் இருக்கவே பக்கத்தில் உள்ள கதவைப் பிடித்துக் கொண்டாள். எந்த நிமிஷமும் மயங்கிவிழுந்துவிடுவாளோ என நினைக்கும்படியாகத் தோற்றமளித்தாள். வாயைத் திறக்காமலேயே தலையை மட்டும் ஆட்டி “தெரியும்” என்பதைச் சொன்னாள்.

2 comments:

  1. Romba nanna irukku Mrs Shivam Intha pralamban,Prathyodha charachters naan kettathe yillai. Oh avar Bhuthana oda husband veraya?Mun episode i Week end la padikkiren. Pozhaippukku thappu karyam panninalunn manasakshi kku bayapadathava konjam thaan.Kathai Nadai enakku pidichirundhadhu

    ReplyDelete
  2. நன்றி ஜெயஸ்ரீ, தமிழில் எழுத ஆரம்பிச்சுட்டீங்க, இனிமேலே கலக்குங்க! வாழ்த்துகள்.

    ReplyDelete