எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 22, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம்பாகம்!

கப்பலில் கண்ணனும், உத்தவனும்!


கடல் அலைகளின் ஓங்கார சப்தத்தையும், கடல் நீரைத் துழாவிக்கொண்டு கப்பல் செல்லும் சப்தத்தையும் தவிர எங்கும் நிச்சப்தமாக இருந்தது. சற்று நேரம் கழித்துக் கண்ணனே அந்த மெளனத்தைக் கலைத்தான். “மிக மிக அருமையான கப்பல் பெரியப்பா!” என்றான் கண்ணன். கண்ணனின் இந்த உறவு முறையான அழைப்பில் சற்றுத் திடுக்கிட்டான் பிக்ரு. “எத்தனை வருஷங்களாகக் கடல் பயணம் செய்து வருகிறீர்கள்?” மேலும் கேட்டான் கண்ணன்.

“ஓ,ஓஓ, நான் மிகச் சிறுவனாய் இருந்தபோதிலிருந்தே கடலில் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். என் குடும்பத்தார் அனைவருமே கடல் பயணிகள் தான்.”

“அப்படியா?? கடல் பயணம் என்பது மிகவும் அற்புதம் இல்லையா?? வேடிக்கையும், விளையாட்டும் கூட நிறைந்திருக்குமல்லவா? எத்தனை நாடுகள்? எத்தனை மக்கள்?? எவ்வளவு ஊர்கள்?? அடாடா! மனிதர்களில் எத்தனைவிதமான பழக்கங்கள் நிறைந்திருப்பார்கள்? அனைத்தையும் பார்க்கலாமே?? எனக்கும் கடல் பயணம் என்றால் கொள்ளை ஆசை பெரியப்பா! எனக்குக் கப்பலைச் செலுத்துவது எப்படி எனச் சொல்லிக் கொடுக்க முடியுமா?”

கண்ணனின் ஆர்வத்தைப் பார்த்த பிக்ரு அவனிடம் உனக்குப் பிடித்தால் கற்றுக்கொள்ளலாம் என்று சொன்னான். “அருமையாகப் பராமரிக்கப்பட்டுள்ள கப்பல்” என்று கண்ணன் நற்சான்று வழங்க, மனம் மகிழ்ந்த பிக்ரு, சென்ற மாதம் குஷஸ்தலையில் இருந்தபோது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டதாகத் தெரிவித்தான். “ஓஓ அப்படியா! குஷஸ்தலையில் இருப்பவர்கள் ராக்ஷசர்களோ?? எப்படிப் பட்டவர்கள்?” என்று ஏதுமறியாதவன் போல் கண்ணன் கேட்க, “அவர்கள், நம் தலைவனின் குலத்தைச் சேர்ந்தவர்களே!” என்று மறுமொழி சொன்ன பிக்ரு, மேற்கொண்டு அவர்களைப் பற்றிப் பேசினால் தனக்கு ஆபத்தோ என்ற எண்ணத்தில் பேச்சை நிறுத்தினான். கண்ணன் மனதுக்குள்ளாக பிக்ரு இந்தப் புண்யாஜனா கப்பலில் பிரயாணிக்கும் பாஞ்சஜனாவை வெறுப்பதைப் புரிந்துகொண்டான். எனினும் மேலே அவனும் பேசவில்லை. கப்பல் பற்றியே கேள்விகள் கேட்க, சற்று நேரத்தில் பிக்ரு தானாகவே அவர்கள் கட்டை அவிழ்த்துச் சுதந்திரமாக விட்டான். என்றாலும் கப்பல் தலைவனான பாஞ்சஜனாவிற்குத் தெரியாமல் இருக்கக் கூடாது என நினைத்து இருவரையும் பாஞ்சஜனா இருக்குமிடம் கொண்டு சென்றான்.

பாஞ்சஜனா நல்ல வளர்த்தியாக, உயரமும், பருமனுமாக, தழும்புகள் நிறைந்த முகத்தை மறைக்கவென்று வளர்க்கப் பட்டதோ என்று எண்ணும்படியான தாடியுடன் காணப்பட்டான். முகம் தாடியில்லாமல் பார்க்கவே பயங்கரமாக இருக்குமோ என எண்ணும்படி தழும்புகள் நிறைந்திருந்தது. இடுப்பில் கட்டிய ஒரு வேஷ்டியைத் தவிர வேறு ஆடை எதுவும் அணியாமல் பெரிய பெரிய ஆபரணங்களால் உடலை மறைத்திருந்தான். ஒரு வெள்ளிச் சங்கிலி இடுப்பை அலங்கரிக்க அதன் ஒரு பக்கம் கட்டப் பட்ட நீண்ட வாள் இடுப்பில் தொங்கியது. கையிலிருந்தும் ஒரு சங்கிலி அவனுடைய பதவியைக் குறிக்கும் பதக்கத்தோடு தொங்கியது. அவனுக்கு எதிரே மற்ற ஆட்கள் பயம் கலந்த மரியாதையோடு நின்றிருந்தனர். அவனுக்குப் பின்னால் இரு ராக்ஷசர்கள் கையில் பிடித்த சாட்டையோடு நின்றிருந்தனர். அந்தக் கப்பலில் பயணம் செய்யும் ஆட்களில் எவர் தவறு செய்ததாக நிரூபிக்கப் பட்டாலும் அந்தச் சாட்டையடிக்குத் தப்பமுடியாது எனும் வண்ணம் அவர்கள் தயாராகக் காத்திருந்தனர். பிக்ரு இளைஞர்கள் இருவரையும் அங்கே கொண்டு சென்று இருவரும் கப்பலுக்கு வந்த விதத்தையும் தெரிவித்தான். பாஞ்சஜனா ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்ணன் அவனுக்குத் தன் வணக்கங்களைச் சமர்ப்பித்தான்.

“மதிப்புக்கு உகந்த தலைவரே! வணக்கம். நான் வாசுதேவ கிருஷ்ணன். சென்ற வருடம் நீங்கள் கூட்டிச் சென்ற புநர்தத்தன் எங்கள் நண்பன். அவனைப் பிரிந்து எங்களால் இருக்கமுடியவில்லை. தாங்கள் அவனிருக்குமிடம் எங்களைக் கொண்டு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறோம். எங்களை அவனிடம் கொண்டு செல்லுங்கள்” என்று மிகவும் வேண்டுதலாகச் சொன்னான்.

கொஞ்சம் அதிர்ச்சியடைந்தாலும் கண்ணனின் வசீகரமும், நளினமும் கலந்த அழகு பாஞ்சஜனாவைக் கவர்ந்தது. “ஆஹா, வலுவில் வந்திருக்கும் இவர்களை நாம் விடக் கூடாது. அதிலும் இந்தக் கருநிறப் பையனுக்கு விலை அதிகம் கிடைக்கும்” என மனதுக்குள்ளாக எண்ணிக்கொண்டே அவர்கள் ஆசைக்குச் சம்மதிப்பதாகத் தெரிவித்தான் பாஞ்சஜனா. மேலும் தன்னுடைய அறை சகல வசதிகளோடு இருப்பதால் அங்கே வந்து தங்கும்படி இளைஞர்களைக் கேட்டுக் கொண்டான். ஆனால் கண்ணனோ பிக்ருவோடு தாங்கள் தங்குவதாகவும், பிக்ரு தங்களுக்குக் கப்பல் ஓட்டக் கற்றுக் கொடுக்கப் போவதாகவும் சொன்னான். “ஹா,ஹா,ஹா,” எனச் சிரித்த பாஞ்சஜனா, “இத்தனை மெல்லிய, நளினமான கரங்களைக் கொண்ட நீங்கள் கப்பல் ஓட்டப் போகிறீர்களா? என் பெண்களுக்குக் கூட இத்தனை நளினமும், மெல்லியதுமான கரங்கள் கிடையாது. கரடு, முரடான கரங்கள் அவை. வலுவானதும் கூட. உங்கள் கரங்களில் வலுவில்லை.” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான்.

“ஆனால், தலைவா, நாங்கள் இங்கே சாப்பிடும் சாப்பாட்டுக்கு என இங்கேயே வேலை செய்து சம்பாதிக்க ஆசைப்படுகிறோம். நீங்கள் அளிக்கும் இலவசச் சாப்பாடு வேண்டாம் எங்களுக்கு.” என்று திட்டவட்டமாகக் கண்ணன் மறுத்தான். ஆனால் பாஞ்சஜனாவோ இந்த இளைஞர்கள் இப்போது இருப்பதுபோலவே மென்மையும், அழகும், நளினமும் பொருந்திக் காணப்பட்டாலே அதிக விலைக்கு விற்கமுடியும் எனக் கருதினான். கப்பல் ஓட்டக் கற்றுக்கொள்வது என்ன அவ்வளவு சுலபமா? கடலில் செல்லும்போது அடிக்கும் சுழிக்காற்று, சூரியனின் வெம்மை, மழையின் கடுமை என இயற்கையின் அனைத்துச் சீற்றங்களையும் எதிர்கொள்ளவேண்டும். அப்படி எதிர்கொள்ளும்போது இவர்களின் தோற்றம் மாறிவிடுமே! மனதில் கவலை மிகுந்தது பாஞ்சஜனாவிற்கு. ஆனால் கண்ணனோ தொடர்ந்து வற்புறுத்த அரை மனதோடு சம்மதித்த பாஞ்ச ஜனா பிக்ருவிற்குக் கட்டளை இட்டான். “பிக்ரு, இந்த இளைஞர்களை அதிகம் வேலை வாங்காதே. முக்கியமாய் சூரிய வெப்பத்தில் இவர்கள் தோல் நிறம் மாறிவிடாமல் பார்த்துக்கொள். சூரியனின் வெம்மை தாக்கினால் இவர்களின் இளமைத் தோற்றமும், மென்மையும் மாறிவிடும். ஜாக்கிரதை! அப்படி ஏதானும் நேரிட்டால் உனக்குக் கடுமையான தண்டனை விதிப்பேன்!” என்று கடுமையாகச் சொன்னான். மேலும் தனக்குப் பின்னால் நின்றிருக்கும் ஆட்களைப் பார்த்துக் கண் ஜாடையும் காட்டினான். அவர்கள் தலை வணங்கிப் புரிந்ததுக்கு அடையாளம் காட்டினர்.
*************************************************************************************


இப்போ மேலே தொடரும் முன்னர் ஒரு சின்ன விளக்கம். இந்தக் கதையைப் புராணரீதியாகவே படிச்சிருப்போம். இப்போக் கொஞ்சம் மாறுபட்டு இருப்பது தெரிஞ்சிருக்கும். திரு முன்ஷிஜி அவர்களின் எண்ணம் அறிவுபூர்வமாகவும் கண்ணனால் இப்படி எல்லாம் செய்திருக்கமுடியும் என்பதைச் சொல்லுவதே. அதை நினைவில் இருத்திக்கொண்டு படிக்கவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.மேலும் இந்தக் கதையில் மேற்கொண்டு கண்ணன் செல்லும் இடங்களாய்க் குறிப்பிடப் படுபவை பற்றிய ஒரு விளக்கமும் கீழே.

கம்சனைக் கொன்றபின்னர் கண்ணன் செய்யும் மிகப் பெரிய சாகசங்களில் இது அடங்கும். புநர்தத்தனை வைவஸ்வதபுரிக்குக் கொண்டு சென்றதாகவும், அங்கே இருந்து கண்ணன் புநர்தத்தனை மீட்டு வந்ததாகவும் புராணங்கள் சொல்லும். ஆனால் இங்கேயே பிரபாஸ க்ஷேத்திரத்தின் குஷஸ்தலையில் இருந்த சில ராக்ஷசர்கள் எனக் குறிக்கிறோம். பாணிகள் என்பவரை ரிக் வேதத்தில் கடவுளுக்கு எந்தவிதமான நிவேதனங்களோ, யாகங்களோ, யக்ஞங்களோ செய்யாதவர்கள் எனக் குறிப்பிட்டிருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இவர்களின் மொழியும் வேறு என்றும் சொல்கின்றனர். கடவுளை நம்பாததால் இவர்களை ராக்ஷசர்கள் எனக் குறிப்பிட்டிருக்கலாம். கடுமையான தொனியில் பேசுவார்கள் எனவும் குறிப்பிடப் படுகிறது. கடற்கொள்ளைக்காரர்கள் என்றும் சொல்லலாமோ??

இவர்கள் அனைவரையுமே இந்த ராக்ஷசர்கள் என்னும் ஒரே பதத்தில் சொல்ல முயன்றிருக்கிறேன். இவர்கள் இருந்த இடம் என முன்ஷி அவர்கள் Phoenicia என்றும், யூரிதிரயன் கடலருகில் இவர்களின் குடியிருப்புகள் இருந்ததாகவும் கூறுகிறார். இவர்கள் கடல் பிரயாணத்தில் வல்லவர்கள் என்றும், ஒழுங்குமுறையற்ற நடவடிக்கைகள் அதிகம் என்றும் கூறுகின்றார். கி.மு. 1600-1350 க்கு உட்பட்ட காலத்தில் இவர்களின் ஆதிக்கம் கடல் வெளியில் அதிகம் இருந்ததாகவும் சொல்லுகின்றார். Rawlinson's History of Phonecia P. 406 என்று ஆதாரம் கொடுத்திருக்கிறார். புத்தகம் இருக்கிறவங்க பார்த்துட்டுச் சொல்லுங்கப்பா! ஆகவே அரபிக்கடல் பிரதேசத்தில் இவர்களின் ஆதிக்கம் இருந்திருக்கிறது. புநர்தத்தனைக் கொண்டு செல்லவும் வழி வகுத்திருக்கிறது. நாளை புநர்தத்தன் எங்கே போயிருப்பான் என்பது பற்றிய ஒரு விளக்கம் காணலாம்.

7 comments:

 1. nalla vilakkam. ithai padichata enaku ninaivu illai . oru velai maranthu irupen

  ReplyDelete
 2. எல்கே, படிச்சிருக்க சான்ஸே இல்லை! :))))))) அதாவது புராணமாப் படிச்சிருந்தா இப்படி வராது!

  ReplyDelete
 3. எனக்கு எல்லாமே புதுசு தான்..;)))

  ReplyDelete
 4. நன்றாக உள்ளது கட்டுரை. இந்த தகவல் புதியது. மிக்க நன்றி. தங்களின் எழுத்துப் பணி தொடரட்டும். அலுவலகப் பணிகளால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. இன்று தொடரின் அனைத்துப் பணிகளுக்கு இடையிலும் படித்து விட்டேன். நன்றி.

  ReplyDelete
 5. //எல்கே, படிச்சிருக்க சான்ஸே இல்லை! :))))))) அதாவது புராணமாப் படிச்சிருந்தா இப்படி வராது!// ஆமா LK, நம்ப கீதாபாட்டியை தவிர வேறு யாராலும் இந்த அளவுக்கு விளக்கமாக எழுத முடியாது.....

  ReplyDelete
 6. @thakkudu paandi

  :D:D:D

  http://www.karthikthoughts.co.cc/2010/02/blog-post_24.html

  ReplyDelete
 7. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

  ReplyDelete