எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, February 26, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

பாஞ்சஜனாவின் கொடூரம்!

சாந்தீபனியின் மகன் ஆன புநர்தத்தன் வைவஸ்வதபுரி என்னும் யமப்பட்டினத்தில் இருந்து மீட்கப் பட்டான் எனப் புராணங்கள் மூலம் அறிகிறோம். விவஸ்வான் என்னும் பெயருள்ள சூரியனின் மகனான யமனை வென்று அழைத்துவருவதாகவும் தெரிந்து கொள்கின்றோம். இதற்கு ஒரு புத்திபூர்வமான சிந்தனையுடன் முன்ஷி சொல்லுவது என்னவென்றால் , முற்காலங்களில் அரபிக்கடல் பகுதியில் “ஒளிநகரம்” என்ற ஒன்று இருந்து வந்ததாகவும், பாபிலோனுக்கு அருகே உள்ள “லார்சா” என்னும் பெயருள்ள நகரத்தைச் “சூரியர்களின் நகரம்” என்ற பெயரில் அழைத்து வந்ததாகவும் தெரிவிக்கிறார். மேலும் அவர் சொல்லுவது என்னவென்றால் ஹரிவம்சத்தைக் கூர்ந்து ஆராய்ந்துபார்க்கும் நோக்கில் படித்தோமானால்(நான் படிச்சதில்லை) வைவஸ்வதபுரியின் அரசனான யமன் என்பவன் அனைவரின் உயிரையும் நேரம் வந்தால் எடுத்துச் செல்லும் யமதர்மராஜன் இல்லை என்பதும், இவன் ஒரு மனிதகுலத்தைச் சேர்ந்த அரசன் என்பதும் புரியவரும் என்று சொல்கின்றார். இந்த வைவஸ்வதபுரியின் அரசனான “யமன்” முதலில் கிருஷ்ணரை மஹாவிஷ்ணு என்றே வழிபட்டுக் கொண்டு வந்ததாகவும், கிருஷ்ணன் புநர்தத்தனை மீட்டுச் செல்ல வந்திருக்கும் செய்தியைக் கேட்டதும், இவனோடு சண்டை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. புநர்தத்தனைக் கொடுக்கக் கூடாது என முடிவெடுத்து யுத்தம் செய்ததாகவும் தெரியவருகிறது. மரணதேவனான யமனாக இருந்திருந்தால் காக்கும் கடவுளான விஷ்ணுவோடு சண்டை போட்டிருக்க முடியாது எனவும் கூறுகின்றார். ஆகவே இந்த அரசனின் கொடூரமான தன்மையால் இவனுக்கு யமன் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கவேண்டுமென்றும், இவனோடேயே கிருஷ்ணர் சண்டைபோட்டு ஜெயித்து புநர்தத்தனை மீட்டு வந்திருக்கும் சாத்தியங்கள் இருப்பதாகவும் சுட்டுகின்றார். புநர்தத்தனைத் திருப்பி அனுப்பாமல் இருந்ததற்கும் சரியான காரணம் இருந்திருக்கவேண்டும் என்பதும் அவர் கூற்று.

செளராஷ்டிரக் கடற்கரைகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதியில் எங்கேயோ வைவஸ்வதபுரி என்னும் இந்த நகரம் இருந்திருக்கலாம். பாகிஸ்தானில் உள்ள சிந்துப் பிரதேசத்தின் ஹைதராபாத் நகரத்தை அலெக்ஸாண்டரின் காலத்தில் படாலா என அழைத்து வந்திருக்கிறதாய்ச் சொல்லுகிறார். அரபிக்கடலின் சில தீவுகள், நாகர் குலத்து தூம்ரவர்ணன் என்னும் அரசனால் ஆளப்பட்டு வந்திருக்கின்றன. இவனின் பெண்களே கிருஷ்ணனின் யாதவகுலத்தின் சில முன்னோர்களுக்குத் திருமணமும் செய்து கொடுக்கப் பட்டிருக்கின்றனர். இந்தப் பெண்களின் பிள்ளைகளில் ஒருவரே இந்தத் தீவுக்கு அரசனாகி இருக்கலாம். மேலும் அந்தக் காலகட்டங்களில் ஆசியக் கண்டம் என இப்போது அழைக்கப்படும் பகுதிகளில் சக்தி வழிபாடு பிரபலமாக இருந்தது. அம்மா என்று அழைக்கப்பட்டும் வந்தாள். ஒரு சில பெண்களைச் சக்தி ரூபமாகவே வணங்கியும் வந்திருக்கிறதாய்ச் சொல்கிறார். இது கதையை மேற்கொண்டு படிக்கும்போது உதவியாக இருக்கும்.

புநர்தத்தனைப் பற்றி மேலும் தகவல்களைச் சேகரித்துக்கொண்டான் கண்ணன். அவன் வைவஸ்வதபுரியின் மன்னனுக்கு விற்கப்பட்டதையும் அறிந்துகொண்டான். இப்பொழுதும் கப்பல் அங்கேயே சென்றுகொண்டிருக்கிறது எனவும் அறிந்தான். அந்த நாட்டின் வழக்கம் ராணியை தெய்வீகத் தாயாக மதிப்பதும், ராணியின் கணவனான அரசனை மரணக்கடவுளான யமன் என அழைப்பதும் என்றறிந்தான். புண்யாஜனா கப்பல் தலைவனான பாஞ்சஜனா கண்ணனை அடிக்கடி தன் தனி அறைக்கு அழைத்துப் பேசி அவனைத் தன் பக்கம் இழுக்க முயன்றான். அவனுடைய கெட்ட எண்ணம் புரிந்துகொண்ட கண்ணன் அவன் எதிரில் செல்வதையே தவிர்க்க ஆரம்பித்தான். ஒவ்வொரு நாள் மதியமும் பாஞ்சஜனா கப்பலின் மேல் தளத்திற்கு வந்து தன் கையில் இருக்கும் ஒரு அழகிய ரோஜாவைப் போன்ற வெளிர் சிவப்பு நிறச் சங்கை வைத்து ஊதுவான். அந்தச் சங்கு ஒரு அழகான கயிற்றில் கட்டப்பட்டு அவன் தோள்களை அலங்கரித்தது. சங்கோசை கேட்டதுமே அந்தச் சமயம் கப்பல் ஓட்டும் சிலரைத் தவிர கப்பலின் மற்ற
அனைத்து ஊழியர்களும் அங்கே வந்து அவனை வணங்கி நிற்பார்கள். கப்பல் ஓட்டுபவர்களும் ஒரு நாளைக்கு இருமுறை மாறுவார்கள். ஆகவே அனைவருமே ஒரு நாளைக்கு ஒருமுறையேனும் இப்படி மேல் தளத்திற்கு வந்து பாஞ்சஜனாவை வணங்கியே ஆகவேண்டும். தன்னிரு பக்கங்களிலும் அவனுடைய இரு மருமகன்களும் துணைக்கு நிற்கப் பின்னால் ராக்ஷசர்களை விடப் பலம் பொருந்திய ஹுக்கு, ஹுல்லு என்னும் இருவரும் காவல் காக்க, ஒவ்வொரு ஊழியனாக வந்து பாஞ்சஜனாவின் கால்களில் விழுந்து வணங்குவார்கள். சரிவர வணங்காத ஊழியர்களோ, நேரம் கழித்து வருபவர்களோ, அல்லது தவறு செய்துவிட்டதாய்க் கருதப் படுபவர்களோ யாராயிருந்தாலும் அவர்களுக்குத் தண்டனையும் அப்போது கொடுக்கப் படும்.

கண்ணன் கப்பலுக்குள் வந்த இரண்டாம் நாள் அம்மாதிரியான தண்டனை கப்பலின் தச்சன் ஒருவனுக்குக் கொடுக்கப் பட்டது. அவன் பெயர் ராது. ஹூக்குவும், ஹுல்லுவும் அவனைப் பிடித்திழுத்து பாஞ்சஜனாவின் முன்னே நிறுத்த பாஞ்சஜனா அவனைக் கால்களால் எட்டி உதைத்தான். அவனுக்கு வந்த கோபத்தில் வாயில் நுரை தள்ளும்போல் இருந்தது. ராதுவை உதைத்த வேகத்தில் அவன் எங்கேயோ போய் விழுந்தான். ஆனாலும் முடிந்தவரையில் வேகமாய் எழுந்து வந்து பாஞ்சஜனாவிடம் தன்னை மன்னிக்க வேண்டினான். ஆனால் பாஞ்சஜனாவோ அவனைச் சாட்டையால் அடிக்கும்படிக் கட்டளையிட்டான். சாட்டையடி முடிந்து முதுகெல்லாம் புண்ணாக, ரத்தம் வழிந்தபடி மயக்கமானான் ராது. அவனைத் தூக்கிப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள் அவர்கள்.

கண்ணன் அன்று சுக்கானுக்கெதிரே அமர்ந்திருந்த பிக்ருவிடம் ராதுவுக்கு தண்டனை அளிக்கப்பட்ட காரணம் கேட்டான். பாஞ்சஜனாவின் அறையைச் சரியாகப் பராமரிக்க வில்லை. அதனால் பாஞ்சஜனாவிற்குக் கோபம் அதிகமாகிவிட்டதாய்ச் சொன்னான் பிக்ரு. மேலும் கண்ணனிடம், “குழந்தாய், உனக்கு இது புது விஷயம். இங்கே ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படித் தான் நடக்கும். ஒருமுறை கோபத்தில் சாட்டையால் அடித்துவிட்டு ஒரு மனிதனைக் கடலில் தூக்கி வீசியும் விட்டான் பாஞ்சஜனா. நீ அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாதே!”

“ராது எங்கே தூங்குவான்?” கண்ணனுக்குக் கவலை. “அவனருகில் நான் செல்லவேண்டுமே!”

“தம்பி, விளையாடாதே. அவன் தண்டிக்கப்பட்டவன். அவனருகே யாரும் செல்வதை பாஞ்சஜனா விரும்பமாட்டான்.”

“குக்குருவை என்னுடன் அனுப்புங்கள், நான் போய்ப் பார்த்தே ஆகவேண்டும் ராதுவை. என்ன தண்டனை கிடைத்தாலும் எதிர்கொள்ளத் தயாராய் இருக்கிறேன்.”

ஆனால் குக்குராவுக்கோ பயம் அதிகமாய் இருந்தது. என்றாலும் ஒருவரும் அறியாமலே உத்தவனையும், கண்ணனையும் அழைத்துச் செல்ல முடிவு செய்தான். அழைத்துச் செல்லும்போதே அந்த இரு ராக்ஷசர்களும் எங்கே இருந்தாவது பார்க்கப்போகின்றனரே என்ற பயத்தோடே கூட்டிச் சென்று அங்கே சுருண்டு கிடக்கும் ராதுவைக் காட்டிவிட்டு ஓடியே போய்விட்டான். கண்ணன் அவனருகே சென்று மென்மையாகத் தொட்டான். தாங்க முடியாத வலியால் முனகிக்கொண்டிருந்த ராது தூக்கிவாரிப்போட எழுந்தான். முதலில் ஹூக்குவோ அல்லது ஹூல்லுவோ மீண்டும் தண்டிக்க வருகின்றனரோ, அல்லது கடலில் தூக்கிப் போடப் போகின்றனரோ எனப் பயந்த ராது இந்த இரு இளைஞர்களையும் அடையாளம் கண்டுகொண்டு ஆச்சரியம் அடைந்தான். கண்ணனோ வாய் திறந்தே பேசாமல் மென்மையாகவும், அன்பாகவும், ஆறுதலாகவும் அவனைத் தடவிக்கொடுத்துக்கொண்டே இருந்தான்.

கைகளும் பேசுமோ? அந்த இருட்டில் கண்ணன் தடவியதில் தன் வலியும், எரிச்சலும், வேதனையும் கொஞ்சம் மறைவது போலவே இருந்தது ராதுவுக்கு. ஆஹா, மயிலிறகால் அஞ்சனம் தடவுவது போலல்லவோ இந்த இளைஞன் தடவிக் கொடுக்கின்றான்? இவன் கைளில் என்ன மாயம் வைத்திருக்கிறானோ? கண்ணனின் உள்ளத்தில் பொங்கிய கருணையும், அன்பும், பாசமும், அவன் கைகளின் வழியாக வலிநிவாரணியாகச் செயல்பட்டதோ என்னும்படிக்கு ராதுவுக்கு ஆறுதல் கிடைத்தது. அவன் வாழ்நாளிலே முதல்முறையாக இத்தகையதொரு அன்பை அவன் அநுபவிக்கிறான். அவனால் தாங்கமுடியவில்லை. கண்களில் கண்ணீர் பெருகக் கண்ணன் தோள்களில் சாய்ந்து விம்மி, விம்மி அழ ஆரம்பித்தான். அவன் எழுந்து கொண்டு கண்ணன் தோள்களில் சாய்ந்ததுமே அவன் முதுகில் சாட்டை அடியினால் ஏற்பட்ட காயங்களில் ஒட்டி இருந்த மணலை எல்லாம் உத்தவன் அதி கவனத்தோடு ஒத்தி ஒத்தி எடுக்க ஆரம்பித்தான். அங்கே பேச்சுக்கே இடம் இருக்கவில்லை. இருவருமே ஒரு ஒத்திசைவோடு, ஒத்த மனத்தோடு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு செயலாற்றினார்கள். கண்ணனோ, உத்தவனோ ராது தன் அழுகையை நிறுத்திவிட்டுத் தன்னையறியாமல் தூங்கச் செல்லும்வரையில் அவனுக்கு வேண்டிய பணிவிடைகளை நிறுத்தவே இல்லை. ராது அசதியிலும், ஓரளவு கிடைத்த ஆறுதலிலும் தன்னை மறந்து தூங்க ஆரம்பித்தான்.

கண்ணனும், உத்தவனும் ஒரு தாய் தன் குழந்தையைத் தூங்க வைக்கும் அதி ஜாக்கிரதை உணர்வோடு ராதுவைத் தூங்க வைத்துவிட்டுக் கீழே மென்மையாகக் கிடத்திவிட்டுத் தங்களுக்கென ஒதுக்கப் பட்ட இடத்திற்குச் சென்றனர். உத்தவன் நகைத்துக்கொண்டே, “கண்ணா, நம் இருவருக்கும் நாளை தண்டனை இருக்கிறதே!” என்றான். “ம்ம்ம்ம்ம்ம், மோசமான அந்த நிலைமையை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். பார்க்கலாம்” என்றான் கண்ணன். இருவரும் தூங்க ஆரம்பித்தனர். மறு நாள் விடிந்தது.

13 comments:

 1. இப்படித்தான் நல்ல இடத்துல தொடரும் போடவேண்டியது இதே பொழப்பா போச்சு

  ReplyDelete
 2. அட்டகாசமான பகுதி தலைவி ;)

  ReplyDelete
 3. எல்கே, தொடர்ந்து தமிழ்மணம் பரிந்துரை செய்து வருவதற்கு நன்றி!

  இப்போப் பின்னூட்டத்துக்கு பதில்!
  கொஞ்சமாவது சஸ்பென்ஸ் வேண்டாமா?? :P:P:P

  ReplyDelete
 4. வாங்க கோபி, படிக்கிறீங்கனு தெரிஞ்சு சந்தோஷம்பா, பார்க்கவே முடியறதில்லை!

  ReplyDelete
 5. சாஸ்த்ர புத்தகம் வைத்யநாத தீக்ஷிதீயம் படிக்க ஆரம்பிச்சப்ப ஒரு இடத்திலே ரெபரன்ஸ் யமன் ன்னு போட்டு இருந்தது. பயந்தே போயிட்டேன். அப்புறம்தான் புரிஞ்சது ஒரு பேர்லே பலர் இருக்கலாமே! இந்த யமன் ஒரு ரிஷி.

  ReplyDelete
  Replies
  1. வைத்தியநாத தீக்ஷதிய புத்தகம் எங்கு கிடைக்கும்?

   Delete
  2. திரு பழனியாண்டி சுந்தரேசன், திரு திவாவைக் கேளுங்கள். அவருக்குத் தான் தெரிந்திருக்க வாய்ப்பு!

   Delete
 6. வாங்க திவா, ரொம்ப நாளாச்சு! :P மேல் அதிக விளக்கம் தந்ததுக்கு நன்னிங்கோ! :))))))

  ReplyDelete
 7. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
  தொடர்ந்து படிச்சுட்டுதான் இருக்கேன்.
  ஏதாவது சொல்ல இடம் இருந்தாத்தானே? இப்படி ரேராதான் எதாவது கிடைக்குது. :P:P:P

  ReplyDelete
 8. @திவா, ஹிஹிஹி, தாங்கீஸ், தாங்கீஸ் மறுபடியும். உங்களை ஆளே காணோமா! அதான் சொன்னேன்! :D

  ReplyDelete
 9. வைவஸ்வத புரி வைவஸ்வத மனு வம்சத்தால் ஆளப்பட்டதா? இந்த லீனியேஜ் ல தானே இக்ஷ்வாகு வும்? அது த்ரேதா யுகத்துல தசரதர்- ராமர்.?
  {நானும் குழம்பி, கொஞ்சம் மத்தவாளையும் குழப்பட்டா??!!! வேற எதுக்கு தெரிஞ்சுக்கத்தான்:)))))))).} சரி... அந்த வம்சத்தை பத்தினதுன்னா 5 ஆவது மனு நரிஷ்வதா என்பவரோட பையன் தமா என்கிற அரசன் இல்லையோ? அவன் ஒரு Sceptere weilding king!! இந்த அரசன் தான் ஹரிவம்சத்தில் சொல்லபடுகிறதுன்னு நினைத்தேன். யமா, யமி எப்படி சூர்யனுக்கு புத்திரன் புத்ரி யோ அந்த மாதிரி மனு, முதல் புருஷனும் சூர்யனுடைய வாரிசு என்று படித்த ஞ்யாபகம். அந்த யமன் க்ருத யுகம் காலம்னும் ஓர்மை. இது த்வாபர யுக காலத்துல வைவஸ்வத மனு dynasty ல ( PROBABLY ?30TH அம்பரீஷ் (ராமருக்கு முன்னாலேயும் ஒரு அம்பரிஷ் உண்டு இல்லையோ?),தமா,அனர்தா ஓ? . இவா மூணு பேரும் ராஜாவா இருந்தா.இன்னும் 7 உண்டு, ராஜாவா இருந்தவா. ஏன்னா மனு ஒட ராஜ்யம் 10 டிவிஷன், ஒவ்வொண்ணும் ஒரு பிள்ளை ரூல் பண்ணினானு வரும். மத்த பசங்க பலர் பல vocation நு சொல்ல கேட்டுருக்கேன்.இதுல Anartha's son is Rewa who ruled Kushasthali capital of anartha desh ie: ?துவாரகா. His son is Raivatha (ராய்த்தா இல்லை:)) ) whose daughter is Revathi , the one who got married to Bala rama. மொட்டை தலையும் முழங்காலுமோ?!!! :))அப்பா!!! மிஸஸ் சிவம் ஹரிவம்ஸம் படிச்சுட்டு சொல்லிடுவாங்க!! ஜாலி ஜாலி!!

  ReplyDelete
 10. மிஸ்டர் திவா யமன் ரெஃபெரன்ஸ் பாத்து ஏன் பயந்துட்டார்?சாஸ்திரம் தர்மத்தை அனுசரித்து தானே . யமன் தான் தர்மத்தின் ராஜாவாச்சே!:))அவர ரெஃபர் பண்ணாம யாரை பண்ண ? எப்படி என் "கடி" ஜோக்?:))

  ReplyDelete
 11. நல்ல கதையும், அதைவீட நல்ல விளக்கங்கள். மிக்க நன்றி.

  ReplyDelete