எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 15, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்!


சக்கராயுதத்தில் தேர்ந்த கண்ணன்!

அனைவரும் பிரியாவிடை கொடுத்தனர் மூன்று சகோதரர்களுக்கும். குரு சாந்தீபனியின் இந்த நடமாடும் குருகுலமானது கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. அதில் பல தேசத்து அரசகுமாரர்களும் மாணாக்கர்களாக இருந்து பயின்று வந்தனர். என்றாலும் எக்காரணங்களை ஒட்டியும் குரு சட்டதிட்டங்களை இம்மியளவும் தளர்த்துவதில்லை. சாந்தீபனியின் குருகுலத்து மக்கள் இரவுப் பொழுதுகளை ஏதாவது ஒரு நதியின் கரையில் அமைந்துள்ள கிராமங்களில் கழித்தனர். அதிகாலையில் பிரம்ம முஹூர்த்தத்தின் பொழுது எழுந்து அருகிலுள்ள நதிக்குச் சென்று நீராடித் தங்கள் காலைக்கடன்களையும், அநுஷ்டானங்களையும் முடித்துக்கொண்டு வேதப் பயிற்சி நடக்கும். அதற்குள்ளாக அருகிலுள்ள கிராமங்களிலிருந்து மாணாக்கர்களுக்கும், மற்றவர்களுக்கும் தேவையான பால் போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப் படும். அதன் பின்னர் பயணம் தொடரும். பயணத்தின்பொழுதே, ஒரு தேர்ந்த திறமையான மாணவனால் வேதமந்திரங்களின் இலக்கணங்கள் பற்றியும் அதிலுள்ள நடைமுறைகள் பற்றியும் விளக்கப் படும். மாணவர்கள் ஐந்து பேர் கொண்ட குழுவாகப் பிரிந்து கொள்வார்கள். ஒவ்வொரு ஐந்து பேருக்கும் ஒரு திறமைசாலியான மாணவன் பயிற்றுவித்துக்கொண்டே வருவான். இதைத் தவிரவும் அஸ்திரப் பிரயோகமும் அதில் தேர்ந்தவர்களால் கற்றுக் கொடுக்கப் படும். வழியில் தென்படும் சிறு சிறு விலங்குகள், மரங்கள், செடிகள் போன்றவற்றைக் குறி வைத்தோ, மரங்களின் கனிகளைக் குறி வைத்தோ, விண்ணில் பறக்கும் பறவைகளைக் குறி வைத்தோ அஸ்திரப் பிரயோகங்கள் கற்றுக்கொடுக்கப் படும். அவற்றிற்குத் தேவையான மந்திரப் பிரயோகம், மந்திரப் பிரயோகம் செய்யும் முன்னர் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், செய்ய வேண்டிய ஜபங்கள், தவங்கள், வழிபடவேண்டிய தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், கொஞ்சம் முறைதவறினாலும் அஸ்திரப் பிரயோகம் மாறிவிடும் என்பதைச் சுட்டிக் காட்டும் சாத்தியக் கூறுகள் என அனைத்தும் கற்பிக்கப் படும். மேலும் யுத்தம் என வந்துவிட்டால் எதிர் தரப்பினருடம் நடந்து கொள்ளவேண்டிய முறைகள். யுத்தத்தின் விதிமுறைகள், தோற்றால் நடந்து கொள்ளவேண்டியவைகள், ஜெயித்தால் ஆணவம் வராமல் எப்படி விநயமும், அடக்கமும் தோன்றும்படி இருக்கவேண்டும் எனச் சொல்லிக் கொடுக்கப் பட்டது. இவை எல்லாம் சூரியன் உச்சிக்கு வரும்வரை கற்றுக்கொடுக்கப் படும். சூரியன் உச்சிக்கு வந்ததும் ஏதாவது ஒரு அடர்ந்த நிழல் தரும் மரத்தினடியில் ஓய்வு.

அருகிலுள்ள கிராமங்களுக்கு மாணாக்கர்கள் பிக்ஷைக்குச் செல்லுவார்கள். அனைவரும் ஒரே கிராமத்திற்குச் செல்ல மாட்டார்கள். அதே போல் ஒரு வீட்டில் பிக்ஷை எடுத்துவிட்டால் மீண்டும் அங்கே செல்ல மாட்டார்கள். அவர்கள் பிக்ஷையை முடித்துவிட்டு வருவதற்குள்ளாக சாந்தீபனி தன்னுடைய யக்ஞக் கடமைகளை முடித்துவிட்டுக் காத்திருப்பார். மாணாக்கர்கள் கொண்டு வரும் அரிசி, தானியங்கள் போன்றவற்றைக் கொண்டு கூடவே வரும் அரசகுமாரர்களின் பரிவாரங்கள் உணவு சமைத்து, குருவுக்கும், சீடர்களுக்கும் உணவளிக்கத் தயார் செய்யும். ஆனாலும் மாணாக்கர்கள் அனைவரும் தங்கள் பிக்ஷா பாத்திரத்திலேயே உணவை வாங்கிச் சாப்பிடுவார்கள். அங்கே பிக்ஷை போடத் தயாராகக் காத்திருக்கும் அரசகுமாரிகளுடன் ஒரு வார்த்தை கூடப் பேச அநுமதி இல்லை. மாணாக்கர்கள் பேசவும் மாட்டார்கள். ருக்மிணியும், தன் அண்ணனோடும், தங்கள் அரசப் பரிவாரங்களுடனும் இந்தக் கூட்டத்தில் கலந்து வந்து கொண்டிருந்தாள். இம்மாதிரியான சட்ட, திட்டங்களுடன் கூடிய ஒரு குருகுலத்தோடு போகிறோம் என அவளுக்குத் தெரியாது. கண்ணனை அடிக்கடி பார்க்கப் போகிறோம் என அவள் நினைப்பு. தூரத்தில் ரதத்திலிருந்து கண்ணனை பிரமசாரிக் கோலத்தில் பார்க்கப்பார்க்க அவள் மனதில் ஆச்சரியம் ஒரு பக்கமும், கண்ணனிடம் மதிப்பும், ஆசையும் இன்னொரு பக்கமும் பொங்கிப் பிரவாகமெடுத்தது. அவனை அடிக்கடி பார்க்கவேண்டும் என்ற ஆவலை அவளால் தடுக்க முடியவில்லை. அவனைப் பார்க்காமல் அவளால் இருக்கவும் முடியவில்லை. சாந்தீபனியின் மாணாக்கர்கள் உணவை வாங்க அந்தப் பக்கம் வரும்போது அனைவரையும் பின்னால் தள்ளிக்கொண்டு ருக்மிணி முன்னால் வந்துவிடுவாள். கண்ணனின் பிக்ஷைப் பாத்திரத்தில் தன் கைகளாலேயே உணவிடுவாள். மற்ற அரசகுமாரிகள் ஒருவரை ஒருவர் பொருள் பொதிந்த பார்வை பார்த்துக்கொண்டு சிரிப்பை அடக்கிக் கொள்வார்கள். சிலர் சத்தமில்லாமல் சிரிக்கவும் செய்வார்கள். தலைக்கனம் பிடித்த இந்த விதர்ப்ப நாட்டு இளவரசியைத் தடுப்பவர் யார்? என நினைத்துக்கொள்ளுவார்கள். அவள் அண்ணனுக்கும், அண்ணிக்கும் இந்தப் பெண்ணை இந்த மாதிரியான வெளிப்படையான செயலில் இருந்து தடுக்கும் வழி தெரியவில்லை, புரியவில்லை. கஷ்டப் பட்டு தங்கள் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டனர். எந்நேரமும் அவளைத் தங்கள் பார்வையிலேயே வைத்திருக்க முயன்றனர்.

ஆனால் எப்படியோ தந்திரமாக ருக்மிணி அவர்கள் பார்வையிலிருந்து தப்பி விடுகிறாள். என்ன முயன்றாலும் அவளைத் தடுக்க முடியவில்லை. தடுத்தாலோ அனைவருக்கும் நேரேயே அவள் கத்த ஆரம்பிப்பாள். அவள் கத்தலை அடக்குவது கஷ்டமாகிவிடும். வேறு வழியே இல்லை, பொறுத்துக்கொள்ளவேண்டியது தான். எதுவுமே நடவாதது போல் மிகவும் சிரமத்துடனேயே அமைதி காத்தனர் ருக்மியும் அவன் மனைவியும். ஆனால் கண்ணனோ?? ஒவ்வொரு முறை ருக்மிணி அவன் பிக்ஷா பாத்திரத்தில் உணவிடும்போதெல்லாம் அவளை நேருக்கு நேராகக் கண்ணோடு கண் சந்திப்பான். ருக்மிணியின் சிரிப்புக்கு எந்தவிதமான பதிலோ, அல்லது உணர்வுகளையோ காட்ட மாட்டான். கல்லைப் போல் உணர்வுகளற்றுக் காணப்படும் அவன் முகத்தின் இரு கண்கள் மட்டும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும். ருக்மிணியின் அன்பை உணர்ந்துகொண்டதாய்த் தெரிவிக்கும். அதே சமயம் தான் இப்போது கடுமையான பிரமசரிய விரதத்தை அநுஷ்டித்துக்கொண்டு குருகுலத்தில் இருப்பதால் குருவின் பெயருக்கும், அவருடைய குருகுலத்தின் மேன்மைக்கும் எந்தவிதமான ஹானியும் தன்னால் ஏற்படக் கூடாது என்பதில் தான் தீர்மானமாக இருப்பதையும் தெரிவிக்கும் அந்தப் பார்வை!

சூரியனின் வெம்மை குறைய ஆரம்பிக்கும்போது மீண்டும் கிளம்பும் குருகுலம், மாலை நெருங்கும்போது மீண்டும் ஏதேனும் ஒரு நதிக்கரையின் மரநிழலுக்கடியில் தங்க ஏற்பாடுகள் செய்ய ஆரம்பிக்கும். தங்கியதும், மாணாக்கர்களுக்குள்ளே மல்யுத்தம் தெரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் திறமையைக் காட்ட ஆரம்பிப்பார்கள். அனைத்தையும் கண்ணன் ரசித்தான். புதுமையான இந்தச் சூழல் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதே சமயம் தன்னால் இந்தக் கட்டுப்பாடான வாழ்வு நெறிக்குப் பங்கம் நேரக் கூடாது என்பதிலும் உறுதிகாட்டினான். அவனுடைய ஆசிரியரான ஸ்வேதகேது, இவ்வளவு மரியாதையும், பண்பும், கீழ்ப்படிதலும் உள்ள மாணவனை இதுவரை கண்டதில்லை என்னும்படியான பண்பைக் கண்ணன் காட்டி வந்தான். ஒரு பாடம் ஆசிரியர் சொன்னால் உடனே அதை மனனம் செய்து விடுவான். ஆசிரியர் சொல்லுவதைத் தட்டுவது இல்லை. கூடப் படிக்கும் சக மாணாக்கர்களுக்குக் கண்ணன் செய்யும் உதவிகளும், அவர்களிடம் நட்புரிமையோடு பழகும் விதமும் ஸ்வேதகேதுவின் மனதைக் கவர்ந்தது. தாங்கள் அரசகுமாரர்கள் என்பதில் கர்வம் மிகுந்த அவந்தி நகரத்து இரட்டையர்களுக்குக் கூடக் கண்ணன் சேவை செய்து அவர்கள் மனதைக் கவர்ந்துவிட்டான்.

அனைவருடனும் ஸ்வேதகேதுவுக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டது. அவந்தி இளவரசர்கள் மட்டும் அனைவருடனும் நெருங்கிப் பழகுவது தங்கள் அரசகுல கெளரவத்துக்கு இழுக்கு என நினைத்து அதை விட்டு விலகாமல் தத்தளித்துக்கொண்டிருந்தனர். மெல்ல மெல்ல, இந்த நகரும் பல்கலைக்கழகமானது இன்றைய சம்பல் பள்ளத்தாக்கை நெருங்கியது. அங்கே விடைபெற வேண்டிய மற்ற இளவரசர்களும், அரச குமாரர்களும் விடை பெற்றுச் சென்றார்கள். கடைசியில் கிளம்பி ஒன்றரை மாதத்திற்குப் பின்னர் அவந்தியை அடைந்த குருகுலம் அங்கே தங்கியது. ஒவ்வொரு வருஷமும் இம்மாதிரி இருமுறைகள் சாந்தீபனியின் குருகுலம் இடம் பெயர்ந்து செல்லும். குருக்ஷேத்திரத்துக்கு வேத வியாசரைத் தரிசிக்க என ஒரு முறையும், பிரபாஸ க்ஷேத்திரம் எனப்படும் மேலைக்கடலோரம் இருக்கும் க்ஷேத்திரத்துக்கு ஒரு முறையும் செல்லும். பிரபாஸ க்ஷேத்திரத்தில் அனைத்து முக்கியமான புண்ணிய நதிகளும் கடலில் சங்கமிப்பதால் அங்கே ஸ்நாநபாநங்கள், ஜப தவங்கள் செய்வது சிறப்பு, அதிலும் பெளர்ணமி தின வழிபாடு அங்கே விசேஷமாய்ச் சொல்லப் படும். இன்னும் பிரபாஸ க்ஷேத்திரத்துக்குப் போகவேண்டிய நாள் வரவில்லை, அதுவரையிலும் கிருஷ்ணனும் பலராமனும் தங்களுக்கு வேண்டிய பயிற்சிகளை இங்கே பெற்றுக்கொண்டிருந்தார்கள்.

மெல்ல மெல்ல குரு சாந்தீபனியே கண்ணனுக்கும் பலராமனுக்கும் ஆயுதப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். முட்கள் நிரம்பிய கதாயுதமும், யுத்தத்தில் பயன்படுத்தும் கோடரியும் பலராமனுக்குப் பிடித்தது. அவன் அதில் ஆர்வம் கொண்டு விளங்கினான். அவனுடைய பெரிய சரீரத்தில் இருந்து வேகத்தோடு வரும் கதையும், கோடரியும் எதிராளியை நடுங்க வைத்தது. கண்ணனுக்கோ சக்கரம் தான் மிகப் பிடித்தது. சின்ன வயதிலிருந்தே கண்ணனுக்குக் குறி பார்த்துச் சுருக்கை வீசி மாடுகளின் கழுத்தில் போட்டுப் பிடிக்க ஆவலாய் இருக்கும், அதுவே அவனுக்கு மிகவும் பிடித்த வேலையாகவும் இருந்தது. விஷப் பொய்கையில் காளியனைக்கட்ட இம்மாதிரிச் சுருக்கைத் தான் கண்ணன் பயன்படுத்தினான். இன்று அந்த வேகத்தைச் சுற்றிலும் பற்கள் போல் செதுக்கப் பட்ட இந்த வட்டவடிவமான ஆயுதத்தில் பிரயோகிப்பது கண்ணனுக்கு வெகு எளிதாக இருந்தது. சாந்தீபனியின் சீடர்களில் வெகு சிலருக்கே இது வரும். அவர்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தால் அதிகம். கண்ணனுக்கோ இதில் பயிற்சி செய்வது கைவந்த கலையாக இருந்தது. சீக்கிரமே சக்கராயுதத்தைச் செலுத்துவதில் கண்ணன் தேர்ந்தான். ஆயிற்று, பிரபாஸ க்ஷேத்திரத்துக்குச் செல்லும் நாளும் வந்துவிட, பிருகு தீர்த்தத்தில் நீராட சாந்தீபனியின் குருகுலம் பெயர்ந்து செல்ல ஆரம்பித்தது. கண்ணனும், பலராமனும் கூடவே சென்றனர்

6 comments:

 1. பிரபாஸ க்ஷேத்திரம் என்றால் சோம்நாத் இருக்கும் பகுதி எல்கே, ஆன்மீகப் பயணம் பக்கத்தில் ஜெய் சோம்நாத் தொடரைப் படிச்சுப் பாருங்க, புரியும், :))))) (பரிக்ஷை வைப்பேன்!):P

  ReplyDelete
 2. கண்ணனை காட்டிலும் வேகமாக வந்து பக்தர்களை காப்பதில் சக்கரத்தாழ்வாருக்கு நிகர் யாரும் கிடையாது! அதனால்தான் ரூபத்திலும் எந்த நேரமும் புறப்படுவதற்கு தயாரான கோலத்தில் இருக்கிறார்.

  ReplyDelete
 3. ம்ம்....அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் ;)

  ReplyDelete
 4. வாங்க தக்குடு, சக்கரத்தின் பெருமையப் பத்தி ஒரு பதிவா எழுதுங்க, காத்திருக்கோம்.

  ReplyDelete
 5. வாங்க கோபி, நன்றிப்பா.

  ReplyDelete