எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 02, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2ம் பாகம்

பரசுராமரின் ஆசிரமத்தில் கண்ணன்!


“அண்ணா, நாம் நம்முடைய வீரத்தையும், சூரத்தனத்தையும் காட்டுவதற்கு இது சரியான நேரம் அல்ல. நாம் கடைப்பிடிக்கவேண்டிய தர்மம் என ஒன்று உள்ளது. அதைத்தான் முதலில் நாம் காக்கவேண்டும். தர்மத்தை நிலை நிறுத்தப் பாடுபடவேண்டும். ஒரு அநாவசியமான எதிரியோடு, அநாவசியமான யுத்தம் செய்து ஜெயிப்பதில் நம் வீரம் இல்லை. அதில் நாம் திருப்தி அடையவும் கூடாது. இப்போது நாம் யுத்தகளத்தை விட்டுத் தப்பிய கோழைகள் போல ஒரு சாதாரண மனிதனுக்குக் கூடத்தோன்றலாம். தோன்றும். ஆனால் யுத்தம் செய்யாமல் விலகி நிற்பதற்கும் மிகுந்த மனோ தைரியம் தேவை. இதை நான் விகத்ரு, அக்ரூரர், நம் தந்தை, பாட்டனார் உக்ரசேனர் ஆகியோருடன் பேசி விவாதிக்கும் முன்னரே முடிவு செய்துவிட்டேன். என்னுடைய முடிவு அவர்களுக்கும் உகந்ததாக அமைந்தது.” என்றான் கண்ணன்.

மலையின் சரிவுகளில் கண்ணனும், பலராமனும் அழகும், அமைதியும் நிறைந்த ஒரு ஆசிரமத்தைக் கண்டார்கள். அங்கே ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த ஓர் இடையனைக் கேட்டபோது, சாக்ஷாத் அந்த ஈசனைப் போலவே தோற்றமளித்த ரிஷி பரசுராமர், ஒரு காலத்தில் தன் கோடரியால் க்ஷத்திரிய வம்சத்தையே பூண்டோடு அழித்தவர் சில நாட்கள் தங்கி இருப்பதற்காக வந்திருக்கிறார் என்னும் செய்தி கிடைத்தது. கிருஷ்ணனும், பலராமனும் அங்கே வரப்போவது பற்றியும் பரசுராமருக்கு கர்காசாரியார் அறிவிப்புச் செய்திருந்தார். கிருஷ்ணனுக்கு பரசுராமரை நேரில் சந்திக்கப் போகும் ஆவல் மேலிட்டது. அவருடைய சக்தியும், அவர் சீடர்களிடம் தன் அத்தனை வித்தைகளையும் கற்பித்து வந்தது பற்றியும் பலரும் பல்வேறுவிதமாகச் சொல்லிக் கேட்டிருந்தான் கிருஷ்ணன். அதோடு பழமையின் பரம்பரையான கலாசாரங்களை எடுத்துக் காட்டும் ஒரு மொத்த வடிவாகவும் அவர் திகழ்ந்தார். அனைத்து ரிஷிகளும், மன்னர்களும், சக்கரவர்த்திகளும் அவர் பெயரையே மிகுந்த மரியாதையுடன் உச்சரித்தனர். அவர் வாழும் இந்தக் காலகட்டத்தில் தாங்களும் வாழ்வதை ஒரு பெருமையாகக் கொண்டனர். அவரை பார்கவன் என அழைப்பதன்மூலம் அவரே அந்த ஆதியும் அந்தமுமில்லா பகவான் என நினைத்தனர்.

பரசுராமரின் முன்னாள் கதையைப் பற்றி நினைத்தான் கிருஷ்ணன். ஆஹா, அவர் வாழ்ந்த காலம் எத்தகையதொரு காலம்? வசிஷ்டர், விஸ்வாமித்திரர் போன்ற பல ரிஷிகள் அப்போது இருந்தனரே? புனிதமான சரஸ்வதி நதிக் கரையில் அன்றோ அவர் தகப்பனான ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் வேதங்களையும், அஸ்திர, சஸ்திர வித்தைகளையும் கற்றிருப்பார்? அயோத்தியின் ஸ்ரீராமனுக்கும் முந்தைய காலம் அது. ஆயிரம் கைகள் உண்டு என்று அனைவராலும் பேசப்படும் காத்தவீர்யார்ஜுனனையே அழித்தவர் அன்றோ? அனைத்து க்ஷத்திரியர்களையும் கொன்று குவித்துக்கொண்டிருந்தார் அல்லவா? இந்த உலகே அவர் காலடியில் வந்துவிட்டது. வடக்கே பனி பொழியும் இமயத்திலிருந்து தெற்கே பிரவாஹித்து ஓடும் நர்மதையையும் தாண்டிய பிரதேசம் அவர் பேரைக் கேட்டாலே நடுங்கி விதிர் விதிர்த்தது. ம்ம்ம்ம்ம்ம் வெற்றியின் உச்ச கட்டத்தில் காச்யப முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்கி தான் ஜெயித்த அனைத்து நாடுகளையும் அவரிடம் திரும்பக் கொடுத்து, தர்மமும், நீதியும் பிறழாமல் ஆட்சி புரியச் சொன்னார்.

பின்னர் அவர் இந்த மேற்குக் கடற்கரைக்கு வந்து, கடலரசனிடம் தனக்கென ஒரு பூமியைக் கேட்டு வாங்கினார். அவர் கேட்டதும் கடலரசனும் உள்வாங்கிச் சென்றுவிட்டானாமே? அந்த பூமியைத் தான் அவர் தனதாக்கிக்கொண்டிருக்கிறார் இப்போது. அங்கே தான் நாம் வந்திருக்கிறோம். இத்தனையும் எழுதும் ஒரு மணித்துளிக்கும் குறைவான் நேரத்தில் கண்ணனின் நினைவலைகளில் வந்துவிட்டன. இங்கேதான் அந்தப் பிரபலமான துறைமுகம் ஷூர்பரகா உள்ளது. அங்கே தினமும் நூற்றுக்கணக்கான கப்பல்கள் வந்து செல்கின்றனவாம். இன்னமும் அவர் ஒரு வாழும் வழிகாட்டியாக அனைவருக்கும் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் தீபமாக ஒளிர்கின்றார். அவர் காலம் இன்னும் முடியவில்லை. இப்படிப்பட்ட ரிஷி, முனிவர்கள் வேண்டும்போது காலத்தைத் தானே முடித்துக்கொள்வார்கள். அவரிடம் வந்து தரிசித்துச் செல்கின்றவர்களும் சரி, சீடர்களும் சரி அவர் ஒரு வாழும் கடவுள் எனச் சொல்கின்றனர். மனம் நிறையப் பணிவும் விநயமும் கொண்டு கிருஷ்ணனும், பலராமனும் பரசுராமரின் ஆசிரமத்தை அடைந்தனர். சீடன் ஒருவன் வழிகாட்ட, யாககுண்டத்தின் எதிரே அமர்ந்திருக்கும் பரசுராமரைச் சென்றடைந்தனர்.

மிக மிக உயரமாகவும், நல்ல பலம் பொருந்தியவராகவும் காட்சி அளித்தார் பரசுராமர். அவர் தவத்தினால் மட்டுமின்றி அஸ்திர, சாஸ்திரப் பிரயோகங்களின் பலமும் அவர் பலத்தைக் கூட்டிக் காட்டியது. அரையில் அணிந்திருந்த புலித்தோல் அவரை ஈசனைப் போலவே காட்டியது. நீண்ட வெண் தாடி பாதி மார்பை மறைத்திருக்க, அருகே அனைத்து க்ஷத்திரியர்களையும் பயமுறுத்திய கோடரி, மிகவும் சாதுவைப் போல் கீழே கிடந்தது. ஒரு கமண்டலமும், பிக்ஷா பாத்திரமும் இருந்தன. சற்றுத் தொலைவில் சில சீடர்கள் வேத கோஷம் செய்து கொண்டிருந்தனர். சில சீடர்கள் பசுக்களுக்கு ஆகாரம் அளிக்க, சில சீடர்கள் சற்றுத் தொலைவில் காணப்பட்ட ஆசிரமக்குடிசைகளின் வாயிலில் அக்னி வளர்த்து ஹோமம் செய்து கொண்டிருந்தனர். பலராமனும், கண்ணனும், பரசுராமரைக் கண்டதும் பணிவோடு நமஸ்கரித்தனர். பரசுராமரிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

“வாசுதேவக் கிருஷ்ணா, பலராமா, நீங்கள் இருவரும் இங்கே வரப் போகும் செய்தி எனக்குக் கிடைத்தே உங்களை வரவேற்க நான் இங்கே காத்திருக்கிறேன்” என்ற பரசுராமர் சிரிப்பு ஒரு குழந்தையினுடையதைப் போல் இருந்தது. ஒரு காலத்தில் மன்னர்களையும், சக்கரவர்த்திகளையும், அவர்களின் இளவரசர்களையும் கண்டாலே ஈசனின் மூன்றாவது கண்ணோ என்று சொல்லத் தக்க அளவு நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்த கண்களில் இப்போது சாந்தமும், அமைதியும், அன்பும், பாசமும் காண முடிந்தது. இருவரையும் பார்த்து, “உங்கள் இருவரின் சாகசங்களைப் பற்றி நிறையக் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது பயணக்களைப்பில் இருக்கும் நீங்கள் இருவரும் குளித்து, உண்டு, உறங்கிவிட்டு வாருங்கள். நிறையப் பேசவேண்டும்.” என்றார் பரசுராமர். ஒரு மூத்த சீடர் வந்து இருவரையும் அழைத்துச் சென்றார். இருவரும் குளித்து தங்கள் அநுஷ்டானங்களை முடித்து, உணவு அருந்தியதும், உறங்காமல் பரசுராமரைக் காண வந்தனர். தாங்கள் ஏன், எப்படி மதுராவை விட்டு வர நேர்ந்தது என்பதை விவரித்தனர்.

No comments:

Post a Comment