எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 04, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

பரசுராமரின் ஆலோசனை!

பரசுராமர் இருவரும் மதுராவை விட்டுக் கிளம்பியதை முழு மனதோடு வரவேற்றார். “மரணம் என்பது தர்மம் பிறழும்போது மட்டுமே வரவேண்டிய ஒன்று. தர்மத்தின் பாதையில் செல்லும்போது பிடிவாதமாய் மரணத்தைத் தழுவுவேன் என்பது தர்மத்திலிருந்து பறந்து வருவதை ஒத்தது. அது வீரமும் அன்று. தற்பெருமை என்றே சொல்லலாம். கோழைத்தனம் என்று சொல்கிறவர்கள் சொல்லட்டும். தர்மத்தை நிலைநாட்டும் யுத்தத்தில் எப்போது யுத்த களத்தில் தோன்றவேண்டும், எப்போது மறையவேண்டும் என்பதும் முக்கியமான ஒன்றே.” என்று சொல்லி இருவரையும் ஆசீர்வதித்தார். “ஆசாரியரே, இந்த உலகம் எங்களை யுத்த பூமியை விட்டுத் தப்பி ஓடிய கோழைகள் என்றே சொல்லும், சொல்கிறது.” என்றான் கண்ணன்.

“கண்ணா, உலகம் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும். அது முக்கியமல்ல. யுத்தபூமியில் நின்று போராட எவ்வளவு மன உறுதியும், தைரியமும், வீரமும் வேண்டுமோ அத்தனையும் அதை விட்டு வெளியே வரவும் இருக்கவேண்டும். நீ செய்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றே வாசுதேவ கிருஷ்ணா!” என்றார் பரசுராமர். அவ்வளவில் கண்ணன் தாங்கள் இருவரும் கரவீரபுரம் சென்று ஸ்ரீகாலவ வாசுதேவனிடம் அடைக்கலம் கேட்கப் போவதாய்ச் சொன்னான். மேலும் அவர்கள் யாதவகுலத்தின் ஒரு கிளை அவன் என்பதாலும் உதவுவான் என நம்புவதாயும் கூறினான். பரசுராமரோ, “ஸ்ரீகாலவனால் உங்களுக்கு உதவி எதுவும் கிட்டாது. அவன் சுயநலமே உருவெடுத்தவன். திமிர் அதிகம். இந்த உலகிலேயே அவனை விட்டால் வேறு யாரும் உயர்வு என ஒப்புக்கொள்ளாதவன். தன்னைத் தானே அந்தப் பரமாத்மா என்றும் அவனே கடவுள் எனவும் நினைத்துக்கொண்டிருக்கிறான். தன்னையே அந்தப் பர வாசுதேவன் என அறிவித்துக்கொள்கின்றான். அவன் நாட்டில் உள்ள அத்தனை படித்த மனிதர்களையும், வேத சாஸ்திரங்கள் அறிந்த பிராமணர்களையும் ஒதுக்கித் தள்ளி விட்டான். அவனைக் கடவுள் என்றும் பர வாசுதேவன் என்றும் சாக்ஷாத் அந்த மஹாதேவனே அவன் தான் எனவும் ஒப்புக்கொண்டால் ஒரு வேளை உனக்கு அடைக்கலம் கொடுக்கலாம். ஆனால் அதற்கும் அவன் ஒரு விலையோ அல்லது காரணமோ வைத்திருப்பான். அந்த விலை ஜராசந்தனிடம் உன்னை ஒப்படைப்பதாய்க் கூட இருக்கலாம். “ என்றார் பரசுராமர். “மேலும் வாசுதேவ கிருஷ்ணா, அவன் ஒரு சிறந்த வில்லாளி என்பதை மறவாதே!”

“ஆசாரியரே, கரவீரபுரத்தில் எங்களுக்கு அடைக்கலம் கிடைக்காதெனில் நாங்கள் எங்கே செல்வது?” கண்ணன் பரசுராமரை ஆலோசனை கேட்டான். பரசுராமர் சற்றே நிதானித்தார். பின்னர், “கண்ணா, ஜராசந்தன் நீங்கள் இருவரும் தப்பிவிட்டதைப் பற்றி எப்படி எதிர்கொள்வான் என நீ நினைக்கிறாய்?” என்று கேட்டார்.

“நிச்சயமாய் அவனுக்கு ஏமாற்றமாகவே இருக்கும். ஆனால் இதற்காக மதுராவின் மற்ற யாதவர்களைக் கொடுமை செய்வான் எனத் தோன்றவில்லை. எங்களை உயிருடன் ஒப்படைக்க வேண்டித் தானே அவன் கோரிக்கை? ஆகவே அவன் எங்களை விட்டுவிடுவான் என எனக்குத் தோன்றவில்லை. நாங்கள் எங்கே செல்கிறோம், எங்கே அடைக்கலம் கேட்கிறோம் என்பதை எல்லாம் ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்டு எங்களைப் பழிவாங்கவே நினைப்பான். ஓட ஓட எங்களை விரட்டுவான் என்றே நினைக்கிறேன்.” என்றான் கண்ணன்.

“கண்ணா, இவ்வளவு தூரம் நாட்டின் மேற்குக் கோடியில் உங்களை அவன் தேடிக்கொண்டு வருவது அவ்வளவு சுலபம் அல்ல. அதை அவனும் அறிந்திருப்பான் அல்லவா?” என்றார் பரசுராமர்.

“இருக்கலாம் ஆசாரியரே! ஆனால் என் மாமாவான கம்சனை நான் கொன்றதனால் ஜராசந்தனின் கெளரவமே பாழ்பட்டு விட்டதாய் அவன் நினைக்கிறான். கம்சன் அவனுடைய படைகளுக்குத் தளபதி மட்டுமல்ல, அவன் நம்பிக்கைக்கு உகந்தவன், மேலும் அவன் இரு பெண்களின் கணவன். ஜராசந்தனின் மதிப்புக்கும், மரியாதைக்கும், பாசத்துக்கும் உகந்த மாப்பிள்ளை. கம்சன் மூலமே மற்ற அரசர்களிடம் தன் பிடியை இறுக்கிக் கொண்டிருந்தான் ஜராசந்தன். இப்போதோ? கம்சன் இறந்ததும், மற்ற அரசர்களிடம் தன் பிடி தளர்ந்துவிட்டதாயும் அவனுக்கு ஓர் எண்ணம். கம்சனின் மரணம் அவனை உலுக்கிவிட்டது. மேலும் எங்கள் தலைமையின் கீழ் மதுரா நகரம் இருந்தால் அவனுடைய மகத சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர ஆபத்து என்ற எண்ணமும் அவனுக்கு இருக்கலாம்.”

“நீ சொல்வதை நான் ஒத்துக்கொள்கிறேன் வாசுதேவ கிருஷ்ணா. ஆனால் நான் உன்னிடத்தில் இருந்தால் இப்போதைய இந்த நிலைமையில் எந்த அரசனிடமோ, இளவரசனிடமோ அடைக்கலம் தேடிப் போகமாட்டேன். நீ சென்றாயானால் அவர்களின் சுயலாபத்திற்கு உன்னைப் பயன்படுத்திக்கொள்வார்கள். எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் தற்போதைய நிலைமையில் எவரையும் நம்ப முடியாது. நீ உன்னை நீயே பலப்படுத்திக்கொள்ளவேண்டும். உன் சொந்த முயற்சியால் நீ பலப்படுத்திக்கொண்டு அனைவரையும் வெல்வாயாக. “ என்றார்.

“அதுவே என் விருப்பமும்” என்றான் கண்ணன். பரசுராமர் கண்ணனையும் , பலராமனையும் கடற்கரையில் இருந்த கோமந்தக மலைக்குச் செல்லும்படி ஆலோசனை கூறுகிறார். அந்த இடமும், அந்த மலையின் சமவெளிகளும் கண்ணனுக்குப் பாதுகாப்பை அளிக்கவல்லது என்றும் கூறினார். அது முற்றுகையைத் தாங்கும் வல்லமை கொண்டதா எனக் கண்ணன் கேட்கப் பரசுராமர் கூறுகிறார்: கிருஷ்ணா, அவ்வளவு எளிதில் அதை அடைய முடியாது. குதிரைகளோ, யானைகளோ, அல்லது ரதங்கள் மூலமோ அதன் மீது ஏறுவது என்பது இயலாத ஒன்று. மேடுகளும், பள்ளங்களும் நிறைந்த அதன் மீது ஏறுவதும் கஷ்டம். செங்குத்தாகவும் குறுகலுமான மலைப்பாதை." தொடர்ந்தார் பரசுராமர். "ஆனால் மிக அழகான இயற்கையின் எழில் கொஞ்சும் இடம். அங்கே வாழும் மக்களும் மிகவும் அன்பும், பண்பும் நிறைந்தவர்கள். எவருக்கும் தீங்கு நினையாதவர்கள். அவர்களைக் "கருடர்கள்" என அழைப்பார்கள். ஏனெனில் அவர்கள் யுத்தம் செய்ய நேரிட்டால் அப்போது கழுகுகளைப் போலவும், கருடனைப் போலவும் முகமூடி அணிந்து கொண்டு செல்வார்கள். ஒரு முறை அவர்களுக்கு நான் ஒரு நன்மை செய்தேன், ஆகையால் என்னிடம் மிகவும் பக்தி கொண்டவர்கள். என் சொல்லைத் தட்ட மாட்டார்கள். அவர்களின் தலைவன் மிகவும் நல்லவன், அவன் உன்னை ஒரு பொழுதும் காட்டிக்கொடுக்க மாட்டான். உனக்கு உதவியே செய்வான்." என்றார்.

No comments:

Post a Comment