எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 12, 2011

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 28

கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்றன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினாலுன்றன்னைச்
சிறுபேரழைத்தனவுஞ் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பவாய்!


கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்= அடியவர்களுக்குக் கேட்டதை எல்லாம் கொடுக்கும் கண்ணன் இங்கே ஆண்டாளிடமும், மற்ற கோபியரிடமும் என்ன கொண்டு வந்தீர்கள் எனக் கேட்கிறான் போலும். ஆண்டாள் நாங்க என்ன கொண்டு வருவோம் அப்பா?? நாங்கள் அனைவரும் சாதாரண இடைக்குலத்துப் பெண்கள் தானே? தினம் பொழுது விடிந்தால் பாலைக் கறந்துவிட்டு மாடுகளை ஓட்டிக்கொண்டு மேயவிட்டுவிட்டுக் கையில் கொண்டு போகும் கட்டுச்சோற்றை உண்போம். எங்களுக்கு எதுவுமே தெரியாது. நாங்கள் எதுவும் அறியமாட்டோம். சாதாரணமான அறிவு கூட எங்களிடம் இல்லை. எங்களிடம் இருப்பது உன்னிடம் நாங்கள் காட்டும் அன்பு மட்டுமே. அதுவும் இந்த ஆயர் குலத்தைத் தேடி வந்தல்லவோ நீ பிறந்திருக்கிறாய்?? இருந்திருந்தும் இந்தக் குலத்தை உய்விக்கவேண்டும் என்று தோன்றி உள்ளதே உனக்கு?

அடடா, இதைவிடப் பெரிய புண்ணியம் எங்களுக்கு வேண்டுமா?? வாராது வந்த மாமணியாக நீ எங்கள் குலத்திலெ எங்களுக்கு நடுவே பிறந்து, வளர்ந்து, இருக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோமே, அதுதான் அப்பா நாங்கள் செய்த பெரும்புண்ணியம்!


குறைவொன்றுமில்லாத கோவிந்தா! = அப்பா, உனக்குக் குறை ஒன்றும் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். நீ எங்களிடையே வந்து பிறந்து எங்கள் குலத்தைப்பெருமைப்படுத்தியதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே, குறை எதுவுமே இல்லை, கோவிந்தா! பாதாளம் வரை பாயும் அறியாமையுடையோராகிய நாங்கள் உன்னால் அன்றோ குறை அறியாமல் இருக்கிறோம்! எங்கள் அறியாமையைப்போக்கி உன் கருணையால் எங்களை உய்விக்க வந்திருக்கிறாயே, இதை விடவும் பெரும்பேறு வேறு என்ன வேண்டும்? எங்களுக்கு என்ன குறை அப்பா? எதுவும் இல்லை. உன் கருணை தான் வேண்டும். ஆனால் அதையும் நாங்கள் கேட்கும் வரையில் நீ காத்திருக்காமல் அள்ளி அள்ளிப் பொழிகிறாய்.

உன்றன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் = உன்னோடு எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த உறவை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜென்ம ஜென்மங்களுக்கும் ஒழிக்க முடியுமா? அப்பா, நீ எங்களுக்கு ரத்த சம்பந்தமான உறவு மட்டுமல்ல. நீயே நாங்கள், நாங்களே நீ. இருவரும் ஒன்றே. எங்களைப்பிறக்கப் பண்ணிய நீ தேடிப்பிடித்து வந்து எங்களில் ஒருவனாயும் பிறந்து எங்களை எல்லாம் மீண்டும் மீண்டும் உறவாக்கிக்கொள்கிறாய். இதைவிட வேறு என்ன வேண்டும்? அப்பா, நாங்கள் ஏதுமறியாப்பிள்ளைகளாய் இருக்கிறோம்.

அன்பினாலுன்றன்னைச்
சிறுபேரழைத்தனவுஞ் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பவாய்! = உன்னிடம் நாங்கள் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பினாலும், பாசத்தினாலும் ஏதேனும் உன்னைச் சொல்லி இருப்போம். உன்னைச் சீண்டி இருப்போம். உன்னை ஏ, கோவிந்தா, மாடு மேய்ப்பவனே என்றெல்லாம் கூப்பிட்டிருப்போம். உன்னைக் கடிந்து பேசி இருப்போம். இதெல்லாம் உன்னிடம் கொண்ட உரிமையால் அன்றி வேறல்ல. கண்ணா, எங்கள் இறைவா, எங்களிடம் இவற்றை எல்லாம் ஒரு குற்றமாய்க்கண்டு எங்களைச் சீறி வெறுத்து ஒதுக்கிவிடாதே. எங்களை உன்னோடு சேர்த்து ஆட்கொள்வாய். நாங்கள் அனைவரும் உனக்கே உரியவர்கள். உன் சொந்தம், உன் உடமை, உன் சொத்து. ஆகவே எங்களுக்கு மோக்ஷத்துக்கான வழியைக் காட்டி அருள்வாய்.

இதே மோக்ஷத்தை பட்டத்திரியும் வேண்டுகிறார். அனைத்து உயிர்களிடமும் இருப்பது பரம்பொருளே என்றே அவரும் கூறுகிறார்.

த்வத் பாவோ யாவதேஷு ஸ்ப்புரதி ந விசதம் தாவதேவம் ஹ்யுபாஸ்திம்
குர்வந்நைகாத்ம்ய போதே ஜடிதி விகஸதி த்வந்மயோஹம் சரேயம்
த்வத்தர்மஸ்யாஸ்ய தாவத் கிம்பி ந பகவந் ப்ரஸதுதஸ்ய ப்ரணாஸ;
தஸ்மாத் ஸர்வாத்மநைவ ப்ரதிஸ மம விபோ பக்திமார்க்கம் மநோஜ்ஞம்

ப்ரபுவே, புழு, பூச்சிகளாகட்டும், மிருகங்களாகட்டும், மனிதர்களாகட்டும், மிக மிகத் தாழ்ந்த நிலையில் உள்ள உயிர்களாகட்டும், மிக மிக உயர்ந்த நிலையில் உள்ள உயிர்களாகட்டும், அனைத்தும் தங்கள் அம்சமே. இந்த பாவம் எனக்குள்ளே விளங்கித் தோன்றவேண்டும். ப்ரபுவே. எல்லா ஆத்மாக்களும் ஒன்றே. இந்த மெய்யறிவு எனக்கு ஏற்பட அருள் புரியவேண்டும். அந்நிலையில் "நீரும் நானும் ஒன்றே; வெவ்வேறில்லை" என்னும் வேறுபாடற்ற உணர்வோடு நான் இருத்தல் வேண்டும். இவ்விதம் ஆரம்பிக்கப் படவேண்டும் என்னுடைய பாகவத தர்மம். இதற்கு அழிவில்லாமல் காக்கவேண்டும். இத்தகையதொரு மனோநிலை எனக்கு நிலவ வேண்டிய பக்தி மார்க்கத்தைக் காட்டி அருள வேண்டும்.

2 comments:

 1. நல்ல பதிவு கீதாம்மா

  பதிவுக்கு நன்றி

  ReplyDelete
 2. //உன்றன்னோடு
  உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
  அறியாத பிள்ளைகளோம்//

  பிடித்த வரி...

  பக்தியானது பல்கிப் பெருகிட அவனே அருள வேண்டும்.

  நன்றி கீதாம்மா.

  ReplyDelete