எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 09, 2011

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்


ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!


இங்கே கண்ணன் தேவகி வயிற்றில் பிறந்து யசோதையிடம் வளர்ந்ததை ஆண்டாள் சுட்டுகிறாள்.


ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்= தேவகியின் எட்டாவது குழந்தைதான் கம்சனுக்கு யமன் என்பது முன்பே தீர்மானித்த ஒன்று. என்றாலும் கம்சனோ தேவகிக்கு முதலில் வரிசையாய்ப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்று விடுகிறான். அதன் பின்னரே பலராமனின் பிறப்பும் மற்றப்பட்டு ரோகிணியிடம் போகிறது. கண்ணனோ பத்துமாதங்களும் தேவகி சுமந்து பெற்ற பிள்ளை. இந்தப் பிள்ளை தான் பிறந்து தங்களை ரக்ஷிக்கப் போகிறான். தங்கள் குலவிளக்கு இந்தப் பிள்ளைதான் என்பது தேவகிக்கும் தெரியும்.

ஆகவே அவள் பிள்ளையைக் காக்கத் துடித்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. பிறந்ததோ சிறைச்சாலை. அதுவும் துணைக்கு எவரும் இல்லாத நடு இரவு நேரம். கொட்டும் மழை. யமுனையோ பிரவாஹம் எடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தேவகி குழந்தையைப் பெற்றெடுக்க அந்தக் குழந்தையை உடனேயே ஒளித்து வளர்க்கத் திட்டமிட்ட பெற்றோர் பெற்ற தாயிடமிருந்து சற்றும் கருணையைக் காட்டிக்கொள்ளாமல் துறக்கத் தீர்மானித்து, அந்தக் குழந்தையைக் கூடையில் வைத்துத் தலையில் சுமந்து சென்ற வசுதேவர் கோகுலத்தில் நந்தனிடம் ஒப்படைக்கிறார்.

இங்கே தான் அந்த மற்றொருத்தி வருகிறாள். மற்றொருத்தி வேறு யாரும் இல்லை. இவ்வுலகிலேயே மிகவும் புண்ணியம் செய்து அந்தப் பரமாத்மாவையே குழந்தையாகப் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டி, கடிந்து, அலங்கரித்து, ஓடி, விளையாடி அதன் ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு சிணுங்கலையும், ஒவ்வொரு விளையாட்டையும் அநுபவித்து அநுபவித்து வளர்த்த யசோதை ஆவாள்.
உண்மையாகவே அவளை நினைத்தால் பிரமனும், இந்திரனும் மட்டுமல்ல எந்தத் தாயாருக்குமே மனதில் பொறாமை உண்டாகும். அத்தகைய பாக்கியம் செய்த புண்ணியவதியான யசோதையிடம் போய்ச் சேர்கிறான் கண்ணன்.

தேவகியின் வயிற்றில் பிறந்து யசோதையிடம் வளர்ந்து,

தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே= கம்சனுக்கோ எவ்வாறோ தெரிந்து விடுகிறது. குழந்தை பிழைத்து எங்கேயோ வளர்கிறது என்று. யோகமாயையே பெண் குழந்தையாய் தேவகியிடம் கிடந்து கம்சனுக்கு உண்மையை உணர்த்திவிட்டு மறைகிறாள். அதோடு யசோதைக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்ற விபரமும் தெரியவருகிறது. கம்சனுக்கு உடலும் , உள்ளமும் ஒரு இடத்தில் தரிக்கவில்லை. எப்படியானும் ஏதானும் தீங்கைச் செய்து அந்தக் குழந்தையை அழிக்கவேண்டும். அப்போதுதான் தான் உயிருடன் இருக்கலாம் என்று நினைத்தான். இப்படி நினைந்து நினைந்து அவன் உடல் மட்டுமில்லாமல் உள்ளமும் பற்றி எரிந்ததாம்.

அதோடு யோகமாயா பிறந்திருப்பது சாதாரணக் குழந்தை அல்ல, சாக்ஷாத் அந்தப் பரம்பொருளே என்றும் கூறுகிறாளா? இந்த எண்ணம் அவன் மனதில் நெருப்பைப் போல் பற்றி எரிகிறது. நெடுமாலே வந்து நம்மை அழிக்க வந்துவிட்டானே என்று அவன் உருவமே நெருப்பாய்த் தெரிகிறது கம்சனுக்கு.


உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி= உன்னைப் பெறவேண்டி உன்னோடு நாங்கள் இணையவேண்டி, நீ எங்களுக்கு மோக்ஷத்தை அளிக்க வேண்டி உன்னை நாடி வந்திருக்கிறோம் எங்கள் கண்ணா, பிராட்டியான திரு தங்கும்படியான செல்வமாக எங்களுக்கு நீ இருக்கிறாய், உனக்கும் அவளுக்கும் நாங்கள் சேவகம் செய்து எங்கள் அன்பையும், பக்தியையும் காட்டி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!= இதுவரை நாங்கள் எடுத்த பிறவிகளின் கர்மவினைகள் தீர்ந்து அதன் மூலம் ஏற்பட்ட வருத்தமும் தீர்ந்து நிலையான செல்வமாகிய மோக்ஷத்தைப் பெற்று மகிழ்ந்து இருப்போம்.

கண்ணனே மிகப் பெரிய செல்வம் என்று ஆண்டாள் கூறி அவனைப் புகழ்ந்து பாடுவது அதனினும் பெருஞ்செல்வம் என்று கூறுகிறாள். இதை பட்டத்திரி எப்படிச் சொல்கிறார் என்று பார்ப்போமா?

நம் சரீரத்தில் இருக்கும் அளப்பரிய மோகத்தை நீக்கினாலேயே இறைவனின் திருவடிகளில் மனம் ஒன்றும் என்று கூறுகிறார்.

ஹீ ஹீ மே தேஹமோஹம் த்யஜ பவநபுராதீஸ யத்ப்ரேம ஹேதோ:
கேஹே வித்தே கலத்ராதிஷூச விவஸிதாஸ் த்வத்பதம் விஸ்மரந்தி:
ஸோயம் வஹ்நே: ஸுநோ வா ப்ரமிஹ பரத: ஸாம்ப்ரதஞ் சாக்ஷிகர்ண:
த்வக்ஜிஹ்வாத்யா விகர்ஷந்த்யவஸமத இத: கோபி ந த்வத்பதாப்ஜே

பரம்பொருளே, எனக்கு சரீரத்தின் மீது ஏற்படும் அதீதமான மோகத்தை நீக்கி அருளும். இந்த அதீதமான மோஹத்தால் மனிதர்கள் தம் வயமிழந்து பெண்ணாசையாலும், மனைவியர் மேலுள்ள ஆசையாலும் வீட்டிலும் மற்றப்பொருட்கள் மீதும் அதிக ஆசையை வைத்துக்கொண்டு உம்முடைய திருவடிகளை நினைப்பதையே மறந்து விடுகின்றனர். ஆனால் இந்த உடலோ இறந்த பின்னர் நெருப்புக்கோ அல்லது நாய், நரிகளுக்கோ உணவாகிறது. உயிருடன் இருக்கும்போது இந்த உடலை, மற்ற இந்திரியங்களான, கண், காது, மூக்கு, நாக்கு, கை, கால்கள் போன்றவை அங்குமிங்கும் இழுக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் சேர்ந்து என்னை உம்மிடம் இழுத்துவரவில்லையே, அந்தோ பரிதாபம்! உம்மிடம் என்னை இழுத்துவரச் செய்யும்.

No comments:

Post a Comment