எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, May 12, 2011

மாப்பிள்ளை, வந்தார், மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே!


அப்பாடா, எத்தனை பேருக்கு ஆவல்?? இது ஏற்கெனவே நடந்த திருமணம் தான் என்றாலும் மீண்டும் அனைவரும் உற்சாகத்துடன் பங்கு பெறுவது குறித்து சந்தோஷமா இருக்கு. விரதம் முடிஞ்சு, பாலிகை கொட்டி எல்லாம் ஆனதும், மாலை நடக்க வேண்டிய நிச்சயதார்த்தம், ஜானவாசம் போன்றவை பற்றிப் பேசுகையில் தான் நம்ம ஆஸ்தான ஜோசியர் வந்திருக்கார். எனக்கு இதெல்லாம் தெரியாது. இன்னும் சொல்லப் போனால் நான் புனே செல்லப் போவதில்லை என்பதே எனக்குத் திருமணம் முடிந்த அன்று மதியமாய்த் தான் தெரியும். அதுவரையிலும் யாரும் சொல்லவே இல்லை. உடனே புனே செல்லப் போவதாய் எண்ணிக்கொண்டிருந்தேன். நம்ம ஆஸ்தானம் போனதும் நடந்து கொண்டிருந்த பேச்சு வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, “உங்க பையர் இப்போப் புனே போயிட்டு உடனே திரும்பிவிடுவார். சென்னைக்கு வந்துடுவார்.” என்று சொல்லி இருக்கார். என் கணவரோ சென்னைக்கு மாற்றல் நான் நாலு வருஷமாக் கேட்டுட்டு இருக்கேன். சதர்ன் கமாண்டிற்குக் கீழே வரும் அலுவலகங்கள் சென்னையிலே மிகவும் குறைவு. அதிலே இருப்பவங்க யாரும் புனே வர ஒத்துக்கலை. எல்லாருக்கும், குழந்தைங்க படிப்பு, வயசான பெற்றோர்னு இருப்பதாலே வேறே ஊர் வேண்டாம்னு வர மாட்டேங்கறாங்க. அதனால் நான் சென்னை வருவது சாத்தியமே இல்லை. புனேயிலேயே ராணுவ அகாடமியைச் சார்ந்த அலுவலகத்திற்கு மாற்றல் கேட்டால் கடக்வாசலாவிலே குடியிருப்புக் கிடைக்கும். அதற்கு எப்படியும் ஆறு மாசம் ஆகும்.” என்று சொல்லி இருக்கார். எங்க ஜோசியரோ, கைகளால் விரல் விட்டுக் கணக்குப் போட்டுவிட்டு, “ஜூன் பனிரண்டாம் தேதியன்று குடித்தனம் வைக்க உங்க ரெண்டு பேருக்கும் நாள் நல்லா இருக்கு. அன்னிக்கே பால் காய்ச்சிச் சாப்பிட்டுவிட்டு, அன்னிக்கே குடித்தனம் ஆரம்பிக்கலாம், வைகாசிக்குள்ளே குடித்தனம் வைச்சாயிடும்.” என்று தீர்மானமாய்ச் சொல்ல என் அப்பாவுக்கு மட்டும் கொஞ்சம் நம்பிக்கை. மாமனார், மாமியார், என் கணவர் போன்ற யாருமே நம்பவே இல்லை என்றிருக்கிறார்கள். இந்தப் பேச்சு வார்த்தையும் எனக்குக் குடித்தனம் வைக்கும்போதே தெரிய வந்தது. எவ்வளவு அசடாய் இருந்திருக்கேன் இல்லை?? ஹிஹிஹி, இல்லை, குழந்தையைப் பயமுறுத்த வேண்டாம்னு சொல்லி இருக்க மாட்டாங்க.

அதுக்கப்புறம் மதியம் டிபன் முடிந்து, மாலை நிச்சயதார்த்தத்திற்கு அனைவரும் தயார் ஆனார்கள். என்னையும் அலங்கரிக்க எங்க வீட்டிலே வருஷக் கணக்காய் வேலை செய்யும் சுப்பம்மாள் என்னும் மூதாட்டி வந்திருந்தார். வளையல்காரச் செட்டிகளான இவங்க மீனாக்ஷி கோயிலில் வளையல் கடை வைத்திருந்ததோடு, வித விதமாய்ப் பூக்கட்டவும் செய்வார்கள். பரம்பரையாக மீனாக்ஷிக்குப் பூக்கட்டிக் கொடுப்பதும் இவங்க குடும்பம்தான். அதனால் கோயிலுக்கு அருகே வீடு இருக்கணும் என்று வடக்கு கிருஷ்ணன் கோயில் தெருவில் இருந்து பிரிந்த சந்தில் வீடு இருந்தது. நாங்க இருந்த மேலாவணி மூலவீதிக்கு மிக அருகே. எங்க குடும்பத்திற்குப் பரம்பரையாக இவங்க குடும்பத்தினர்கள் தான் வீட்டு வேலை செய்யும் பெண்மணிகள். எங்களுக்குத் தலை பின்னுதல், எண்ணெய் தேய்த்தல், விளக்கெண்ணை கொடுத்தல், வேப்பெண்ணெய் கொடுத்தல் போன்றவற்றைச் செய்வார்கள். எங்க அப்பாவைப் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கு அதிகாரம் உண்டு. ஒவ்வொரு மல்லிகைப் பருவத்திலும் கட்டுக்கு அடங்காத என் தலைமயிரை வாரி, பூத்தைக்கிறது ஒரு நாள், பிச்சோடா ஒரு நாள், கிருஷ்ணன் கொண்டை ஒருநாள், மலர் அலங்காரம்னு பூப்பின்னல் ஒருநாள் என வித விதமாய் அலங்கரிப்பார்கள். அதோடேயே பள்ளியில் படிக்கும்போது பள்ளிக்குப் போயிருக்கேன். :D நவராத்திரியிலும் விதவிதமாய் அலங்காரம் செய்து விடுவார்கள். என் கல்யாணம் நிச்சயம் ஆனதுமே சுப்பம்மாள் மாப்பிள்ளை அழைப்பு அலங்காரம் என்னோடதுனு என்று உறுதி செய்துவிட்டுப் போயிட்டாங்க. (எங்க பையர் பிறக்கும் வரை உயிருடன் இருந்தாங்க.)

அழகான சின்னச் சின்ன ப்ளாஸ்டிக் பொம்மைகள், ஆணும், பெண்ணுமாய்த் தேர்ந்தெடுத்து, அவற்றிலே முத்துக்களைக் கோர்த்து, மல்லிகை, கனகாம்பரம், மரிக்கொழுந்து ஆகிய பூக்களை வரிசையாக வைத்து, வாழைப்பட்டையிலே பொம்மைகளையும், கூடவே வெல்வெட் துணிகளால் ஆன அலங்காரப் பூக்களையும் வைத்துத் தைத்துக் கொண்டு வந்துவிட்டார்கள். தலையை வாரிப் பின்னிக் குஞ்சலம் வைத்து, அந்த வாழைப்பட்டை அலங்காரத்தைத் தலைப்பின்னலில் வைத்துச் சேர்க்கவேண்டியது தான். மேல் தலை அலங்காரம் மட்டும் நேரடியாய்த் தலையிலே செய்ய வேண்டும். அந்த மாதிரிப் பூ அலங்காரம் எல்லாம் இப்போப் பார்க்கவே முடியலை. அலங்காரத்துக்குப் பெயர் போன தஞ்சாவூர்க்காரங்களான எங்க புக்ககத்தினரே வியக்கும்படியாக இருந்தது என் தலை அலங்காரம். தலையிலே ராக்கொடி வைத்து, நெத்திச்சுட்டி, சூரியப் பிரபை, சந்திரப் பிரபை, (தெரிஞ்சிருந்தாலும் பேரெல்லாம் குறிப்பிடுவது, ஒரு சிலருக்குச் சரியாய் அறியவேண்டியே) வைத்து எல்லாவற்றிற்கும் முத்துக்களால் ஆன மாலை போன்ற சரத்தால் கட்டி, தலைப் பின்னலின் நடுவேயும் ஜடைபில்லை வைத்துப் பட்டுக்குஞ்சலம் வைத்து, (எனக்குக் குஞ்சலம் ரொம்பப் பிடிக்கும். விதவிதமான குஞ்சலங்கள் வைத்திருப்பேன்.) தலை அலங்காரம் ஒருவழியாக முடிவடைந்தது. அதற்குள்ளாக மாப்பிள்ளை வீட்டினரை என் அம்மாவும், அப்பாவும் போய் நிச்சயதார்த்ததிற்கு முறைப்படி கூப்பிட்டு விட்டு வந்தார்கள். எனக்குத் துணையாகச் சிலரை மட்டும் வைத்துவிட்டு மற்ற அனைவரும் அருகே இருந்த பிள்ளையார் கோயிலுக்குக் கிளம்பினார்கள். என் கல்யாணம் நடந்த பி-3- ராஜம் ரோடிலிருந்து, கூப்பிடு தூரத்தில் இருந்தது பிள்ளையார் கோயில். அங்கேயே மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம் முடிந்து, ஜானவாசம் பிள்ளையார் கோயிலில் இருந்து கிளம்பி இரு தெருக்கள் சுற்றிக்கொண்டு இங்கே கல்யாணம் நடக்கும் இடத்திற்கு வர அநுமதி வாங்கி இருந்தனர்.

அங்கே மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம் முடிந்து, ஜானவாசமும் ஆரம்பித்து வந்தாயிற்று. என் கடைசிச் சித்தி, அவசரம் அவசரமாய் வந்தாள். என்னை விட ஐந்தே வயது பெரியவங்க. என் அம்மா கல்யாணத்தின் போது குழந்தை. அவங்களுக்கு என் கல்யாணம் ஆன வருஷத்திற்கு முதல் வருஷம் தான் கல்யாணம் ஆகிக் குழந்தை பிறந்திருந்தது. பெயர் சொல்லியே கூப்பிட்டிட்டு இருந்தோம். பல வருஷங்கள் கழிச்சே சித்தி என அழைக்க ஆரம்பித்திருக்கிறேன். இப்போச் சித்தி வந்தது, ஜானவாச ஊர்வலம் தெருக்கோடியில் வருகிறது. கீதாவை அழைத்துக்கொண்டு எல்லாரும் மாடிக்குப் போனால் ஜானவாச ஊர்வலத்தை கீதாவும் பார்க்கலாம். அவள் கணவரின் ஜானவாசத்தை அவள் பார்க்க வேண்டாமா?? என்று சொன்னாள். என்னதான் எழுபதுகளின் ஆரம்பம் அப்போ என்றாலும் அந்த அளவுக்குக் கல்யாணப் பெண்கள் போய் ஜானவாசத்தைப் பார்க்கும் அளவுக்கு இன்னமும் முன்னேறவில்லை என்றே சொல்லலாம். என் அப்பா, பெரியப்பா போன்றோர் ஏதானும் சொன்னால் என்ன செய்வது என்று என் பாட்டி பயந்தார்கள். ஆனால் சித்திவிடவே இல்லை. கட்டாயமாய் வரணும், அவங்க வீட்டு வாசலுக்கு வரச்சே ஆரத்தி எடுத்து உள்ளே நுழையறதுக்குள்ளாகக் கீழே இறங்கிடலாம், ஒருத்தருக்கும் தெரிய வேண்டாம் என்று தன் அம்மாவுக்கு சமாதானம் சொல்லிட்டு, என்னைக் கூப்பிட்டுக் கொண்டு மேலே சென்றார்கள். மாடியிலே தான் சாப்பாடு போடவும் ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. மாடி முகப்புக்குப் போனோம். கீழே பார்த்தால், பந்தல் பெரிசா இருந்ததா? பந்தல் தான் தெரிந்தது. அதோட தோரணங்களும் தொங்கினதிலே தெருவே தெரியலை. நாதஸ்வர ஒலி மட்டும் கேட்டது. எம்பிப்பார்த்தாலும் எனக்கு எதுவும் தெரியவில்லை. அருகிலே நாதஸ்வர ஒலி கேட்க, நான் கீழே இறங்கலாம் என்று கூற, என் சித்தி இருடி என அதட்ட, அதற்குள் கீழே ஒரே சத்தம். அப்பாவின் குரல் பெரிசாய்க் கேட்டது. விஷயம் என்ன?? புரியவே இல்லை. நான் மேலே வந்தது தான் தெரிந்துவிட்டதோ? பயத்துடன் வேகமாய்ப் புடைவையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டே கீழே இறங்கினேன். விழுந்துடப் போறே, புதுப்புடைவை தடுக்கப் போறது என்று பின்னாடியே சித்தியும் வந்தாள்.

கல்யாண வீட்டு வாசலிலே ஏதோ அமர்க்களம் நடந்து கொண்டிருந்தது.

25 comments:

  1. //எவ்வளவு அசடாய் இருந்திருக்கேன் இல்லை?? // ஏன் பாஸ்ட் டென்ஸ்? :P:P:P

    ReplyDelete
  2. உங்க பையர், எங்க பையர், என்னதிது? பையர் என்கிற வார்த்தை பர்மனென்ட் ஆயிடுத்து போலிருக்கே!!

    ReplyDelete
  3. //கட்டுக்கு அடங்காத என் தலைமயிரை வாரி, //
    அப்போலேந்தேவா?

    ReplyDelete
  4. //கீதாவை அழைத்துக்கொண்டு எல்லாரும் மாடிக்குப் போனால் ஜானவாச ஊர்வலத்தை கீதாவும் பார்க்கலாம். அவள் கணவரின் ஜானவாசத்தை அவள் பார்க்க வேண்டாமா?? என்று சொன்னாள். என்னதான் எழுபதுகளின் ஆரம்பம் அப்போ என்றாலும் அந்த அளவுக்குக் கல்யாணப் பெண்கள் போய் ஜானவாசத்தைப் பார்க்கும் அளவுக்கு இன்னமும் முன்னேறவில்லை என்றே சொல்லலாம்//

    ரகசியமா ஏதேனும் ஏற்பாடு எப்பவுமே இருக்கும்! :-))

    ReplyDelete
  5. திவா has left a new comment on your post "மாப்பிள்ளை, வந்தார், மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்...":

    உங்க பையர், எங்க பையர், என்னதிது? பையர் என்கிற வார்த்தை பர்மனென்ட் ஆயிடுத்து போலிருக்கே!!

    ReplyDelete
  6. திவா has left a new comment on your post "மாப்பிள்ளை, வந்தார், மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்...":

    //எவ்வளவு அசடாய் இருந்திருக்கேன் இல்லை?? // ஏன் பாஸ்ட் டென்ஸ்? :P:P:P
    - Hide quoted text -

    ReplyDelete
  7. திவா has left a new comment on your post "மாப்பிள்ளை, வந்தார், மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்...":

    //கட்டுக்கு அடங்காத என் தலைமயிரை வாரி, //
    அப்போலேந்தேவா?

    ReplyDelete
  8. திவா has left a new comment on your post "மாப்பிள்ளை, வந்தார், மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்...":

    //கீதாவை அழைத்துக்கொண்டு எல்லாரும் மாடிக்குப் போனால் ஜானவாச ஊர்வலத்தை கீதாவும் பார்க்கலாம். அவள் கணவரின் ஜானவாசத்தை அவள் பார்க்க வேண்டாமா?? என்று சொன்னாள். என்னதான் எழுபதுகளின் ஆரம்பம் அப்போ என்றாலும் அந்த அளவுக்குக் கல்யாணப் பெண்கள் போய் ஜானவாசத்தைப் பார்க்கும் அளவுக்கு இன்னமும் முன்னேறவில்லை என்றே சொல்லலாம்//

    ரகசியமா ஏதேனும் ஏற்பாடு எப்பவுமே இருக்கும்! :-))

    ReplyDelete
  9. திவா, நீங்க போட்ட கமெண்டை எல்லாம் ப்ளாகர் முழுங்கிடுத்து, நல்லவேளையா மெயில் பாக்ஸிலே கிடைச்சது, மறுபடி போட்டிருக்கேன்.

    பையர்னா என்ன?? நல்லா இல்லை??

    ReplyDelete
  10. //எவ்வளவு அசடாய் இருந்திருக்கேன் இல்லை?? // ஏன் பாஸ்ட் டென்ஸ்? :P:P:P//

    அநியாயமாய் இல்லை?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  11. //கட்டுக்கு அடங்காத என் தலைமயிரை வாரி, //
    அப்போலேந்தேவா?//

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்போத் தான் கொட்டிப் போயாச்சே! :( அது சரி?? அப்போலேந்தாவான்னா என்ன அர்த்தம்? :P

    ReplyDelete
  12. ரகசியமா ஏதேனும் ஏற்பாடு எப்பவுமே இருக்கும்! :-))//

    அப்படிங்கறீங்க?? இருக்கும், இருக்கும் , தெரியலை! :))))))

    ReplyDelete
  13. ஹெஹெஹ் ...

    //கட்டுக்கு அடங்காத //

    இதை மட்டும் படிச்யு பாருங்க இப்ப தெரியும் திவா அண்ணாவோட கேலி

    ReplyDelete
  14. ;) நானும் எட்டி எட்டி பார்க்கிறேன் அப்படி என்ன அமர்க்களம் !? ;)

    ReplyDelete
  15. //எவ்வளவு அசடாய் இருந்திருக்கேன் இல்லை?? ஹிஹிஹி, இல்லை, குழந்தையைப் பயமுறுத்த வேண்டாம்னு சொல்லி இருக்க மாட்டாங்க.//

    //ஒவ்வொரு மல்லிகைப் பருவத்திலும் கட்டுக்கு அடங்காத என் தலைமயிரை வாரி, பூத்தைக்கிறது ஒரு நாள், பிச்சோடா ஒரு நாள், கிருஷ்ணன் கொண்டை ஒருநாள், மலர் அலங்காரம்னு பூப்பின்னல் ஒருநாள் என வித விதமாய் அலங்கரிப்பார்கள். அதோடேயே பள்ளியில் படிக்கும்போது பள்ளிக்குப் போயிருக்கேன். :D//
    எவ்வளவு அழகாக எழுதறீங்க கீதாம்மா

    ReplyDelete
  16. இதிலே சஸ்பென்ஸ் ஏனாம்!

    ReplyDelete
  17. கல்யாணப் பெண் அலங்காரம் ஜோரா இருக்கே. சில பழைய கல்யாண ஆல்பங்களில் இதெல்லாம் பாத்திருக்கேன்.
    ஒரு வாரம் கழிச்சு வந்திருக்கேன். நடுல சப்தபதி பத்தியெல்லாம் போட்டுருக்கேள். நல்லது. ஒரு வேளை இதெல்லாம் நல்லா புரிஞ்சுண்டு இப்போ கல்யாணம் நடந்தால் பின்னாடி வர மனஸ்தாபங்கள் வராதோ என்னவோ? இதுல rights and duties ரெண்டுமே இருக்கு. அது புரிஞ்சுக்காம rights மட்டும் கொடி பிடிச்சுண்டு duties பண்ணாம இன்றைய பிரச்சினைகள் வருகின்றன. நம்ம கல்யாண வைபவத்துல ஒன்னொன்னுதுக்கும் ஒரு அர்த்தம் இருக்கு. அதை விளக்கி சொல்ற ஒரு புஸ்தகம் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறவாளுக்கு கொடுக்க வேண்டிய நல்லா பரிசு. வெறும் வாய் வார்த்தையா சொன்ன தான் காதுல ஏற மாட்டேங்கறதே.

    ReplyDelete
  18. கல்யாணப் பெண்கள் ஜானவாசத்தைப் பார்க்கும் அளவுக்கு முன்னேறவில்லை.. தவப்புதலவன்னு ஒரு சினிமாப்படப் பாட்டு ஞாபகம் வருது.. well folks, times are changing.. sleeveless blouses what next? blouseless sleeves? (இந்தப் வரியைப் பாடினதுக்காகப் பொளேர்னு ஒண்ணு விழுந்ததும் ஞாபகம் வருது)

    குஞ்சலம், ராக்கொடி.. வாவ்.. இதெல்லாம் பாத்தே வருஷக்கணக்காச்சு. கல்யாண கலாட்டாவை மர்மக் கதை பாணில எழுதிட்டு வரீங்களே? ம்ம்ம்.

    ReplyDelete
  19. //கட்டுக்கு அடங்காத //

    இதை மட்டும் படிச்யு பாருங்க இப்ப தெரியும் திவா அண்ணாவோட கேலி//

    @எல்கே, நறநறநறநற (ஒரு மாறுதலுக்கு):))

    ReplyDelete
  20. கோபி, நல்லா எட்டிப் பாருங்க, அமர்க்களம் என்னனு நாளைக்குப் போடறேனே! :))))

    ReplyDelete
  21. ப்ரியா, இப்போவும் மல்லிகைப் பூ பூக்கிறது, ஆனால் இந்த அலங்காரங்களை எல்லாம் பார்க்க முடியவில்லை, அதன் வருத்தம் தான் இப்போ இப்படி எழுதியாவது தீர்த்துக்கலாமேனு,

    இன்றைய பெண்கள் பூக்கள் வைச்சுக்கிறதிலே கூட தனித்தன்மையைக் காட்டறாங்க. பெரும்பாலனவங்க தலையைப் பின்னிக்காமல் இருக்கிறதாலே ஒரே ஒரு ரோஜா மட்டும் எப்போவோ, இல்லைனால் பின்னிக்கும் பெண்கள் ஒரு ஹேர்பின்னால் தலையில் பூவை மாட்டிக்கொள்கின்றனர். பூ தலையின் வாசத்துக்கு எங்கே போகிறது? அது பாட்டுக்குத் தொங்கிக்கொண்டு இருக்கும், ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உண்டு, ஒவ்வொரு வகையான உணர்வுகளை ஏற்படுத்தும். இண்டிமேட் செண்டை விட மல்லிகை வாசம் இனிமை, எளிமை, என்றென்றும் புதுமை அல்லவா? :)

    ReplyDelete
  22. ஹிஹிஹி, ப்ரியா, சஸ்பென்ஸ் வைக்கலைனா அப்புறம் எப்படி?? :)

    ReplyDelete
  23. வாங்க ஸ்ரீநி, எங்க பையர் உபநயனத்திலே தேர்ந்தெடுத்த ஒரு உபந்நியாசகரை வைத்து உபநயனம் பற்றியும், அதன் முக்கியத்துவம் குறித்தும் ஒரு சின்ன சொற்பொழிவு செய்ய வைத்தோம். வாமனரின் உபநயனத்தை மேற்கோள் காட்டிப் பேசினார். அதையே கைகளால் எழுதியும் பலருக்குக் கொடுத்தோம். இப்போ நீங்க சொல்றாப்போல் இவற்றை எல்லாம் புத்தகமாய் அச்சடித்துக் கொடுக்கலாம்னு தான் தோணுது. பார்க்கலாம், இறை அருள் எப்படியோ!

    ReplyDelete
  24. பரதேசிக்கோலம் என்னும் காசி யாத்திரை/சமாவர்த்தனம், ஊஞ்சல், தாலி கட்டுதல், மாலைமாற்றுதல்,சப்தபதி, போன்றவை இல்லாத இந்துத் திருமணங்களே கிடையாது. ஆகையால் நிச்சயமாய் இது அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  25. வாங்க அப்பாதுரை, காணோமேனு நினைச்சேன். ஹிஹி, கலாட்டாவை மர்மக்கதை மாதிரி எழுதினால் தான் நல்லா இருக்கு. அதான்! படிக்கிறவங்களுக்கும் கொஞ்சமானும் சுவாரசியம் வேணும் இல்லை??

    ReplyDelete