இன்று பாரதியின் பிறந்த நாள். பாரதியின் பாடல்களைப் பாடிக்காட்டி பாரதியின் மேல் எனக்குப் பித்தை உண்டாக்கிய ஈஸ்வர வாத்தியாரை நினைவு கூர்கிறேன். அச்சமில்லை; அச்சமில்லை; அச்சமென்பதில்லையே பாடலை அவர் பாடுகையில் உண்மையிலேயே அச்சம் சிறிதேனும் இருந்தால் மறைந்துவிடும். வழக்கம் போல் திரு இன்னம்புராரின் பதிவைப் படித்ததும் அதையே பகிர்ந்து கொள்ள எண்ணிப் பகிர்ந்து கொள்கிறேன். அவர் சொல்லி இருப்பதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும்? கீழே இருப்பவை அவர் எழுதி இருக்கும் பதிவு.
அன்றொரு நாள்: டிசம்பர் 11
ஒளி படைத்தக் கண்ணினாய்!
இன்று மஹாகவி சுப்ரமண்ய பாரதி அவர்களின் ஜன்மதினம். இணைய தளத்தில் பலர் அவருடைய புகழுரைப்பார்கள். செப்டம்பர் 11, 2011 அன்று யான் ‘‘செய்யுந்தொழிலுன் தொழிலே காண்;...’ என்று இறை வணக்கம் செய்து, ‘பால பருவத்தில் எனக்கு தேசாபிமானம் என்ற அடிசில் ஊட்டி...’ என்று குரு வந்தனம் செய்து,
‘வந்தாரே அமானுஷ்யன்;
சட்டையில் காலரில்லை;
ஆனா டை கட்டி தொங்குதடா,
சீமானே! மனம் போல் திறந்த கோட்டு,
தோளின் மேல் சவாரி,
நீலக்கலரிலே, ஐயா, சவுக்கம் ஒன்று.
முண்டாசு முடிச்சிருக்கான், கரை போட்ட துண்டாலே.
அதற்கு வாலும் தொங்குதடா, ராச மவராசன் போல.
எம்மாம் பெரிசு சோப்புக்கலர் குங்குமப்பொட்டு.
மீசையாவது, ஒளுங்கா, மன்மதனே, கத்திரிச்சிருக்கு.
எத்தனை நாள் பட்டினியோ, தெய்வத்திருமகனே!
கன்னமெல்லாம் ஏண்டாப்பா நசுங்கிப்போச்சு?
உனக்கு வில்லியம் ப்ளேக் தெரியுமோடா?
அவன் பாடின மாதிரி, புலிக்கண்ணோ உந்தனுக்கு?
என் கண்ணெல்லாம் சுணங்குதும்மா;
அப்படி ஜொலிக்கது உன்னோட கண்மலர்கள்!
மஹமாயி! ஆதி பராசக்தி!
அந்த மணக்குளத்து பிள்ளையாரே!
பாஞ்சாலி மானம் காத்தாய்! நீ
இவனுக்கு சேவகன் இல்லையாடா?
அதெல்லாம் சரி.
அதென்ன ரயில் வண்டி புகை, ‘குப்’,குப்’னு?
ஓ! தொரை உரையூர் சுருட்டுத்தான் பிடிக்கிறாரு!
என்று கவி வந்தனம் செய்து, ‘பராக்! பராக்!’ என்று சல்யூட் அடித்து, அஞ்சலி செய்ததை மீள்பதிவு செய்து விட்டு, சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். 1930-40களில் பாரதியார் வாசம் மாணவர்கள் நாவில். அவருடைய பாடல்கள் ஸ்ருதி தான். படிக்கக்கிடைக்காது.
நான் சொல்வது எந்த அளவுக்கு இன்றைய சூழ்நிலையில் புரியும் என்று தெரியவில்லை. மதிப்புக்குரிய தமிழாசிரியர் வி.ஜி.ஶ்ரீனிவாசன், பாலு சார், தலைமை ஆசிரியர் யாகூப் கான் போன்றோரின் ஊக்கம் எங்களுக்கு மிகவும் உற்சாகம் அளித்தது. பாலு சார், எமது சூத்ரதாரி. அவருடைய எதிரொலியாக திலகர் மைதானத்தில் கர்ஜித்தேன், பாரதி கீர்த்தியை. வி.ஜி.எஸ். தந்தையின் நண்பர். ரொம்ப அன்யோன்யம் என்று நினைக்கிறேன். அவருடைய இல்லத்தில் என் அம்மா பால் காச்சியதும், அதிலிருந்த பால் ஏடு வாங்கி ருசித்ததும் மட்டுமே பாலப்பருவத்திலிருந்து இன்று வரை நினைவில் இருக்கிறது. அப்பா அடிக்கடி பாரதியாரை பற்றி வி.ஜி.எஸ் சொன்னதாக, அவ்வப்பொழுது சொன்னது மனதில் தங்கியிருந்திருக்கலாம். தலைமை ஆசிரியரோ எங்களை எங்கள் போக்கில் விட்டதே பெரிய ஸ்வாதந்தர்யம். அதற்கான வலியையும் பொறுத்துக்கொண்டார். எங்கள் ஹீரோ.
ஆம். ஒரு பிற்போக்கான கிராமத்தில், பின் தங்கிய சமுதாயத்திற்கான ஏழைகளின் பள்ளியில், ‘என்னா ப்ரதர்!’ என்ற உறவே துலங்கும் மாணவருலகத்தில் பீடு நடை போட்டு, வீறாப்புடன் நடந்த கவிஞன் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார். எங்களை உய்விக்க வந்த மஹானுபவன். ஒளி படைத்த கண்ணினான்.
60 வருடங்களுக்கு மேல் கடந்தன. புதுச்சேரியில் மஹாகவி வாழ்ந்த இல்லத்தை அங்குலம் அங்குலமாக யான் அனுபவிக்கும் வேளையிலே, இரு சம்பவங்கள். ஒரு பெண் எம்.லிட். ஆய்வு செய்கிறாளாம். நூலகத்தில் உள்ள நூல்களை படித்து வந்தாள். ஏடுகள் காற்றில் பறக்காமல் இருக்க, ஒரு கல்லை அதன் மேல் வைத்தாள். மடிந்த பக்கம் லேசாகக் கிழிந்தது. நான் அவளை கோபித்துக்கொண்டேன். அங்கு ஒரு விசிப்பலகை. அதில் அமர்ந்து தான் மொட்டை மாடியில், மஹாகவியும், நண்பர்களும் அளவளாவினர். அந்த விசிப்பலகையில் ஒருவர் அமர, நான் அவரை எழுந்திருக்கச் சொன்னேன், கறாராக பேசி. அவர் ஒத்துக்கொண்டார். ஆனால், அந்த இல்லத்தை பராமரிப்பவர்கள் தங்களால் அத்தனை கண்டிப்பாக பேச முடியவில்லை என்றும், பார்வையாளர்கள். கேட்கமாட்டார்கள் என்றும் சொன்னார்கள். அங்கு வாங்கிய பாரதியார் நூல்களை, எங்கு வாங்கியவை அவை, ஆங்கிலேயனை அவர் விமர்சித்த முறை, வின்ச் துரையெல்லாம் சொல்லி, போர்ட்ஸ்மத் நூலகத்துக்கு அன்பளிப்பாகக்கொடுத்தேன்.
எது எப்படியோ! மஹாகவி சுப்ரமண்ய பாரதியாரின் தயவில், அவர் பெயரில், ஒரு புரட்சி நிகழவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.
இன்னம்பூரான்
11 12 2011
சுப்ரமன்ய பாரதியாரைப்பற்றிய நல்ல தகவல்களைப்பற்றிய அருமையான பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteவருடா வருடம் ஏறத்தாழ எல்லோரும் மறந்துவிட்ட பெருந்தகைகளை நினைவில் கொண்டு பதிவு போட்டு வருவது எங்கள் அக்கா மட்டுமே!
ReplyDeleteஅருமையான பதிவு மஹாகவி பாரதியை பற்றி. நன்றி மாமி, இன்னம்புராரின், பதிவை எங்களுக்கு பகிர்ந்ததற்கு.
ReplyDeleteமனதில் நிறைந்த மகாகவிக்கு மறக்க முடியாத அஞ்சலி! படித்தேன், நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன். பகிர்விற்கு நன்றி நவில்கிறேன்!
ReplyDeleteபாண்டிச்சேரிக்கு அத்தனை தடவை போயிருந்தும் ஒரு தடவை கூட பாரதி இல்லத்தைப் பார்த்ததில்லை. சே!
ReplyDeleteஇன்னம்பூரான் பற்றித் தெரியாது - எழுத்தில் காட்டம் தெரிகிறது. பாரதி உட்கார்ந்த ஊஞ்சலில் சாதாரண மனிதன் உட்கார்ந்தால் எழுந்திருக்கச் சொல்வாரா? ஏன்? பாரதியின் அணு கொஞ்சம் எங்கள் மேல் ஒட்டிக் கொள்வதில் என்ன தவறு? அவருடைய ஆதர்சம் புரிகிறது, மதிக்கிறேன். பாரதி தொட்ட மண்ணை தானும் தொட வேண்டும் என்ற ஆசையில் கொஞ்சம் தொட்டுப் பார்த்தால் தவறே இல்லை - தடுக்கவோ சாடவோ இன்னம்பூரானுக்கு ஒரு உரிமையும் கிடையாது. பாரதி வாசம் பொதுவில்.
வாங்க லக்ஷ்மி, பெரியவர் இன்னம்புரார் தான் சொல்லி இருக்கார். காப்பி, பேஸ்ட் மட்டுமே என்னோட வேலை. :))))
ReplyDeleteநன்றி, வா.தி. :P :P
ReplyDeleteநன்றி ராம்வி
ReplyDeleteநன்றி கணேஷ்
ReplyDeleteஅப்பாதுரை, பெரியவர் உங்க பின்னியூட்டம்(அவர் சொன்னதே) படிச்சுட்டார். வந்து பதில் சொல்லுவார். அல்லது என்னிடம் பதிலைக் கொடுத்தால் போடுகிறேன். :)))))
ReplyDeleteஅவருக்கு வலைப்பதிவு புதுசு என்பதால் பின்னூட்டம் கொடுக்கும் வழிதெரியலை. சொல்லி இருக்கேன். பார்க்கலாம். :)))))
நல்லதொரு பகிர்வு. அவர் வலைத் தளத்தின் சுட்டி தரவில்லையே....
ReplyDeleteஅன்புடன்,
ரீராம்!
வாங்க ஶ்ரீராம், நான் சரியா எழுதவில்லை. வலைப்பதிவே புதுசு அவருக்கு. வலைத்தளம் இல்லை. மின் தமிழ்க் குழுமத்தில் எழுதுகிறார். குழும மடலின் சுட்டியை அளிக்கிறேன். அந்தக் காலத்து ஐ ஏ எஸ். ஆடிட்டர் ஜெனரல். பல பெரிய மனிதர்களோடும், அரசியல் தலைவர்களோடும் பழகியவர். வல்லமை மின் இதழில் தணிக்கைத்துறை பற்றிய தொடரையும் எழுதி வருகிறார்.
ReplyDeleteஇங்கே
நான் அவரைப் பத்தி ஒரு கோடி தான் காட்டி இருக்கேன். இதைத் தவிரவும் பல சாதனைகள் செய்திருக்கிறார். 80 வயதாகும் அவர் இன்னமும் சாதனைகள் செய்தும் வருகிறார். இந்த வயசிலும் தேடித்தேடி ஒவ்வொரு நாளும் ஒரு புது விஷயத்தைக் குறித்து ஆர்வமும், சுவையும் தோன்ற எழுதி வருகிறார். இலக்கியச் சுவையும் உண்டு. நகைச்சுவையும் உண்டு.
ReplyDeleteஇன்னம்பூரான் எங்கே இருக்கார்? சென்னையிலா? அவரைப் பத்தி நீங்க எழுதியிருக்கிறதைப் படிச்சதும் சந்திக்க ஆசை வந்துவிட்டது.
ReplyDeleteஅப்பாதுரை, தற்சமயம் இங்கிலாந்தில் மகனுடன் இருக்கிறார். ஒரு வருடமாகத்தான். நான் மெயில் கொடுக்கிறேன். :)))))
ReplyDelete