எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 30, 2012

பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கமே! 4

இந்த அரங்கன் இருக்கானே, சும்மா இருக்காமல், ஊரெல்லாம் சுத்திட்டு இருந்தப்போ அங்கங்கே உள்ள மக்களை எல்லாம் தன் பக்கம் கவர்ந்து இழுத்திருக்கான்.  நினைப்பிருக்கா?  எந்தவிதமான ஆபரணங்களோ, பட்டுப் பட்டாடைகளோ இல்லாமல் அரங்கன் சென்றது?  அப்படி இருந்தும், அவனுடைய அழகு முகமும், அருள் பொங்கும் கண்களும், நான் இருக்கிறேன் என தைரியம் ஊட்டும் அபய ஹஸ்தமும்,  அவனுடைய பரிமள கந்த வாசனையும், சந்தனம், கஸ்தூரிப் பொட்டு வாசனையும், அவன் கழுத்திலே மாலையாக ஆன காட்டில் பூக்கும் பூக்களின் சுகந்தமும் அவன் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறது.  ஆகவே  முன்னொரு காலத்தில் ஜராசந்தனிடமிருந்து தப்பிக்கக் கண்ணனாக ஊரை விட்டு, நாட்டை விட்டு ஓடி ஒளிந்தவன், இப்போ அர்ச்சாவதாரமாக மாலிக்காபூரிடமிருந்து தப்பிச்சுக்க ஸ்ரீரங்கத்தை விட்டு ஓட்டமாக ஓடினான் இல்லையா!  அங்கங்கே தங்கின இடங்களில் இருந்த மக்கள் எல்லாம் ரங்கனை வழிபட்டுத் தங்கள் குலதெய்வமாகக் கண்ணுக்குக் கண்ணானவனாக நினைக்க ஆரம்பித்தார்கள்.  அதுவே பரம்பரையாகத் தொடர, மக்கள் வெள்ளம் அவன் ஸ்ரீரங்கத்துக்கு வந்து சேர்ந்து அங்கேயே நிரந்தரமாய்த் தங்கிவிட்டான் என்பதை அறிந்ததும் இங்கே படை எடுக்க ஆரம்பித்து விட்டது.

ஆகவே அரங்கனுக்கு ஒரு விழா என்றால் உள்ளூர் மக்களை விடவும் வெளியூர் மக்களே அதிகம் வந்துவிடுகின்றனர்.  பல்வேறு விதமான கொட்டுக்களைக் கொட்டிக் கொண்டு அதிர்வேட்டுக்களை வெடித்துக்கொண்டு, ரங்கா, ரங்கா, ரங்கா என கோஷித்துக் கொண்டும், கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா எனக் கூவிக் கொண்டும் வந்த மக்கள் கணக்கில் இல்லை.  இவர்கள் இத்தனை பேருக்கும் மேல் காவல்துறையினர் வேறே. ஒரு ஆளுக்குக் குறைந்தது ஐந்து போலீஸ்காரர்கள் இருந்திருப்பார்கள்.  ரங்கா கோபுரத்தில் இருந்து எங்களை உள்ளே விடுவதற்குக் கிட்டத்தட்ட ஒன்றேமுக்கால் மணி ஆகிவிட்டது.  சரி, அங்கிருந்து நேரே உள்ளே போகவேண்டியது தானேனு நினைச்சுப் போனோம்.  இரண்டு, மூன்று இடத்தில் சீட்டுகளைச் சரி பார்த்து உள்ளே அனுப்பினார்கள்.  உள்ளே அப்படி ஒண்ணும் கூட்டம் இருக்கப் போறதில்லை.  இப்போத்தானே உள்ளே விடறாங்கனு நினைச்சுப் போனால் ஆர்யபடாள் வாசலிலே ஒரு மாபெரும் கூட்டம்.  கேட்டால் விவிவிவிவிஐபிக்களும், பத்திரிகைக்காரங்களுமாக முந்நூறு பேருக்கும் மேலே கையிலே பாஸை வைச்சுக் கொண்டு உள்ளே நுழைய முயற்சிக்க, போலீஸ் தள்ள, மீண்டும் ஒரு தள்ளு, முள்ளு.  நாங்க போக வேண்டிய வாயிலை மூடிப் பின்னால் போய் கம்பி கட்டி இருக்கும் இடத்திற்குச் சென்று அப்படித்தான் வரணும்னு ஒரு காவல்துறைக்காரர் சொல்ல, நாங்களும் பின்னால் சென்றோம்.

எங்களுக்கு முன்னால் பல பேர் அந்த வரிசையில் ஏற்கெனவே நிற்க ஆரம்பித்திருந்தார்கள்.  அது எப்படினு எங்களுக்கு ஆச்சரியமா இருந்தாலும் பின்னால் போனோம்.  ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் ஒரு மண்டபத்தின் கோடியில் அந்தக் கம்பி கட்டிய இடம் முடிகிறது.  அங்கே நிறையப் பேர் தூங்கிக்கொண்டிருக்க, அங்கே போய் நாங்கள் உள்ளே வர முடியாது.  என்ன செய்யலாம்னு யோசிக்க, எங்களுக்குப் பின்னால் வந்தவர்களில் சிலர் கம்பிகளின் மேல் ஏறி அந்தப் பக்கம் குதிக்கப் பெண்களில் சிலர் இரு கம்பிகளுக்கும் இடையில் புகுந்து அந்தப் பக்கம் செல்ல ஆரம்பிக்க நாங்கள் இருவரும் முழித்தோம்.  ஏனெனில் என்னால் கம்பிகளின் இடையே புகுந்து செல்ல முடிந்தாலும், இடக்காலைத் தூக்கி வைக்க முடியாது.  இடக்கால் தகராறு பண்ணும். அதை எப்படி மறுபக்கம் கொண்டு போவது?  அவருக்கோ கழுத்துப் பிரச்னை! குனியவே முடியாது.

அப்போது என்னை மாதிரிக் கால் பிரச்னையால் தவித்த இன்னொரு பெண்மணி கீழே படுத்துக்கொண்டு உருண்டு செல்ல, அதைப் பார்த்த மற்றவர்களும் என்னையும் அப்படியே வரும்படி சொல்ல, வேறு வழியில்லாமல், (பின்னே, 300 ரூ கட்டியாச்சே, அப்போது வெளியேயும் வர முடியாத நிலை) நானும் கீழே படுத்துக்கொண்டே அங்கப் பிரதக்ஷிணம் செய்தேன்.  அவர் என்ன செய்கிறார்னு பார்த்தால், கம்பிகளின் மேல் ஏறி மறு பக்கம் வந்தார். அப்பாடா!  ஒருவழியா இது முடிஞ்சதுனு நினைச்சால் மறுபடி உள்ளே அனுப்பறதை நிறுத்திட்டாங்க.  நாங்க காத்திருந்தோம்.  இதுக்கு நடுவிலே கோயிலில் தரிசனத்துக்காகக் கணவரோடு வந்த திருச்சி கலெக்டரிடம் அடையாள அட்டை இல்லாத காரணத்தால் அவங்க திருப்பி அனுப்பப்பட்டிருக்காங்க.  பின்னர் வீட்டுக்குப் போய் அடையாள அட்டையோடு வந்தும், அவர் கணவருக்கு அனுமதி மறுக்கப்படவே அவர் காரிலேயே உட்கார்ந்திருக்க அவங்க மட்டும் உள்ளே சென்றார்கள்.  அறநிலையத் துறை இயக்குநர் கல்யாணிக்கும் இதே நிலைமை.  அவங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட அப்புறம் அவங்க பதவியைச் சொல்லிக் கட்டாயம் உள்ளே இருந்தே ஆகணும்னு சொன்னதும் உள்ளே விட்டிருக்காங்க.

ஆனால் இந்த 300 ரூபாய் டிக்கெட்டை இலவசமாகப் பெற்றுக் கொண்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என நினைக்கிறேன்.  அதை எந்த அளவீட்டில் விநியோகம் செய்திருக்கிறார்கள் எனப் புரியவில்லை. பலரும் அந்த நீல வண்ணச் சீட்டையே எடுத்து வந்திருந்தனர்.  வெளி மாநிலக்காரர்கள் பலருக்கும் அந்தச் சீட்டு கிடைத்திருந்தது.  ஒரு வழியா இன்னும் ஒரு மணி காத்திருப்புக்குப் பின்னர் எங்களை ஆர்யபடாள் வாசல் வழியே உள்ளே அனுப்ப நேரே அர்ச்சுன மண்டபம் நோக்கிச் சென்றால் அர்ச்சுன மண்டபம் , கிளி மண்டபம், சந்தனு மண்டபம் எல்லாம் நிரம்பி வழிகிறது.  கிளி மண்டபத்தில் ஏறிய உடனே அருகிலிருந்து தூணுக்கருகே இடம் இருக்க, என்னால் தவழ்ந்து ஏறிக் குதித்து வந்த அலுப்புத் தாங்க முடியாமல் அங்கேயே உட்கார்ந்துவிட்டேன்.  அங்கிருந்து பெருமாள் உலா வரும் இடம் நன்கு தெரிந்தது.  ஆனால்???????

10 comments:

 1. ஆனால்....." அப்புறம்?

  அப்..பாடி... என்ன ஒரு கோவில் சுற்று?!!

  ReplyDelete
 2. ரங்கா, ரங்கா, ரங்கா ,

  கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா

  ReplyDelete
 3. கோவிந்தா ரங்கா.அம்மா கர்ப்பத்திலிருந்து வெளிவந்ததை விட மோசாமாகக் கஷ்டமாக இருக்கே ரங்கன் தரிசனம்.
  இந்த அழகில் அறநிலையத்தாருக்கே கெடுபிடியா:)
  அப்ப நியாயமாக் கெடுபிடி செய்திருக்கிறார்கள்:)நன்றாக ஆசைப் பட்டார் மறுபாதி.!!!

  ReplyDelete
 4. வாங்க ஸ்ரீராம், கைலை யாத்திரை இதை விடவும் சுலபம் என எனக்குத் தோன்றிவிட்டது அன்று. :)))))

  ReplyDelete
 5. வாங்க ராஜராஜேஸ்வரி, கோவிந்தா, கோவிந்தா தான்! :)))

  ReplyDelete
 6. வாங்க வல்லி, அம்மா கர்பத்திலே இருந்து வெளியே வரச்சே அம்மா இல்லை கஷ்டப் பட்டிருப்பா? நான் இல்லையே? :))))எப்போதுமே இங்கே கொஞ்சம் கெடுபிடிதான்! இப்போ திருவிழா இல்லையா? இன்னும் அதிகம்.:))))))

  ReplyDelete
 7. இனிமேல திருவிழா சமயத்துல போயி மாட்டிக்காதிங்க.

  ReplyDelete
 8. வாங்க லக்ஷ்மி, எப்போதுமே போக மாட்டேன். அந்த ஆசையெல்லாம் எனக்கு இல்லவே இல்லை. :)))))

  ReplyDelete
 9. ஆயிரம்தான் டிவியில் தரிசனம் செய்தாலும் நேரில் பார்த்ததுபோல் ஆகுமா?... ஆசை யாரை விட்டது :-))

  ReplyDelete
 10. எதுக்கு இவ்வளவு கஷ்டம்? நான் 1990ல் வைகுண்ட ஏகாதசிக்கு அங்கு வந்திருக்கிறேன். அரங்கனை சேவிக்கவில்லை. அவ்வளவு கூட்டத்தில் தள்ளு முள்ளு பண்ண இஷ்டமில்லை.

  ReplyDelete