எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 15, 2012

ஆனந்தத்தைத் தவற விடவேண்டாம்! பகுதி 3


சரி, இப்போ நாம் கதையை என்னனு பார்க்கலாமா?  மாயா என்ற பெண்ணே இந்தக் கதையின் நாயகி என்று சொல்லப் பட்டாலும் தற்காலத்தின் இளம்பெண்கள் ஒவ்வொருவரும் தங்களை அவள் இடத்தில் வைத்துப் பார்த்துக்கொள்ளலாம்.  முன்னெல்லாம் அநேகமாய்ப் பெற்றோர் நிச்சயிக்கும் பிள்ளையை ஒரு கண நேரம் பார்த்துச் சம்மதம் சொல்லி, இருதரப்பிலும் லெளகீகங்கள் பேசி முடித்து என இருக்கும்.  இப்போதெல்லாம் யாருக்கும் நேரமில்லை.  அப்பா, அம்மாக்களும் பிசி;  பெண்கள், பிள்ளைகளும் பிசி. அவரவர் வேலை அவருக்கு. ஆகவே அவரவரே அவரவர் வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.  ஆனாலும் இன்னமும் பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணங்களும் இருக்கின்றன.  


 மாயாவினுடையதும், சிறியோரால் நிச்சயிக்கப்பட்டுப் பெரியோர்களின் முழுச் சம்மதத்தோடு மிகச் சிறப்பாக அனைவராலும் பேசப்பட்ட ஒன்றாக நடந்தது.  ஆனாலும் முதல் இடறல் திருமண மயக்கத்திற்குப் பின்னர் மாயா ஆசைப்பட்ட மாயாவின் மேல்படிப்பில் ஆரம்பித்துப் பின்னர் அவள் கணவன் தன்னுடைய ஈகோவினால் வேலையை இழந்ததில் வந்து முடிந்தது.  மாயாவின் கணவன் மனைவி மேல்படிப்புப் படிப்பதோ, வேலைக்குச் செல்வதோ தனக்கு இழுக்கு என நினைக்கும் ஆணாதிக்க உலகின் கதாநாயகன். அந்த ஈகோ எப்படிப் பட்டதெனில் ஒரு ஆத்திர, அவசரத்துக்கு என மனைவி உதவிய நகைகளும், அவள் வேலைக்குச் செல்வதாய்க் கூறியதும், தன்னை அவமானம் செய்வதற்காக என்று அவன் எண்ணும்படி ஆயிற்று.  யதார்த்தத்தையும், தன் நிலையையும் புரிந்து கொள்ளாத மாயாவின் கணவன் ப்ருத்வி மனைவியைப் பிரிய நேரிட்டது.  அது விவாகரத்தில் வந்து முடிந்தது.  ஆக அதீத அழகு, புத்திசாலித் தனம், பணம், வசதி எல்லாம் இருந்தும் மாயாவால் அவள் கணவனோடு சந்தோஷமாய் வாழ முடியவில்லை.  எந்தத் தவறும் செய்யாமலேயே அவனால் குற்றம் சாட்டப்பட்டு இன்று விவாகரத்தும் பெற்று ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்து கொண்டிருக்கிறாள். 

 வீணான வாழ்க்கையை நினைந்து வருந்திக் கொண்டிருந்த மாயாவுக்குக் கனவில்  தோன்றித் தன்னை அழைத்து உபதேசித்த  உருவம் தான் தன் குரு என அவர் சொற்பொழிவைக் கேட்டதும் புரிகிறது.  அவர் கூறும் உண்மைகள் பசுமரத்தாணியாக மனதிலும் பதிகிறது.  எந்த நிலையிலும் நிலை தடுமாறாமல் மற்றவர்களுக்காக வாழும் பெண்கள் தனக்காக வாழ்வதில்லை என்பதற்குக் காரணமான சுயச் சார்பையும் எடுத்துக் காட்டி விளக்குகிறார்.  தன்னைத் தானே உணரும் பெண்ணாக, தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரிந்த பெண்ணாக மாற வேண்டும் என்கிறார்.  எப்படி எனில், அந்தக் காலத்தில் நம் பெரியவங்க சொல்லி இருக்காங்களே, "ங" போல் வளை என, அப்படி வளையச் சொல்கிறார்.  ஆம், விட்டுக் கொடுத்து அநுசரித்துப் போனால் மட்டும் போதாது.  சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப வளைந்தும் கொடுக்க வேண்டும்.  வருவதை அப்படியே எதிர்கொள்ளும் சாமர்த்தியமும், மன உறுதியும் கொண்டிருக்க வேண்டும்.

அதற்கு உதாரணமாய்க் காட்டுவது காந்தா என்னும் சாமானிய, வெகு சாமானியக் கூலி வேலை செய்யும் பெண்ணை.  கணவன் குடித்து விட்டுத் தன்னை அடித்துத் துன்புறுத்துகையில் ஒரு எல்லை வரை பொறுத்தவள் பின்னர் கணவனை உதறி எறிகிறாள்.  இதை எதிர்பார்க்காத கணவன் முதலில் எதிர்த்தாலும் பின்னர் அவள் உறுதியைப் புரிந்து கொண்டுவிடுகிறான். கணவனைத் திரும்ப அடித்து அவமானப் படுத்துவதாலோ அல்லது அவனை ஒரேயடியாய்க் கொன்றுவிடுவதாலோ தனக்கோ, தன் குழந்தைகளுக்கோ எதிர்காலம் இல்லை என்பதைப் பூரணமாய் உணர்ந்து கொண்டு அவனை அறவே ஒதுக்குகிறாள்.  இந்த மன உறுதியே பெண்களுக்குத் தேவை.  எல்லாராலும் சாத்தியமா எனக் கேட்கலாம்.  முடியவேண்டும் என்பதே இந்தக் கதையின் முக்கியக் கருத்து.  "நானிருக்கேன் உனக்கு" என்று பெண்களுக்கு மறைமுகமாய்க் கிடைக்கும் பாதுகாப்புக் கவசமும், அதை எதிர்பார்த்துக்கொண்டே மற்றவர்களுக்காகவே வாழும் பெண்களும் நிறைந்த இவ்வுலகிலே பெண்கள் தங்களுக்குத் தாங்களே துணை; காவல்; தலைமை; அனைத்தும் என்பதைப் புரிந்து கொண்டே  தனியாக நின்று கொண்டே மற்றவர்களை ஆதரிக்க வேண்டும்.


டிஸ்கி:  அநேகமாய் அடுத்த பதிவில் முடிச்சுடுவேனா? 

16 comments:

 1. பகுதி பகுதியாக விமர்சனம் நன்றாக எழுதி வருகிறீர்கள்.

  //அநேகமாய் அடுத்த பதிவில் முடிச்சுடுவேனா?//

  என்ன அவசியம்? படித்த பிறகு ஏற்பட்ட மன உணர்வுகள், எண்ணங்கள் எல்லாவற்றையும் எவ்வளவு இருக்கிறதோ, எவ்வளவு வருகிறதோ அவ்வளவையும் எழுதி விடலாமே!

  ReplyDelete
 2. முன் காலத்தில் பெண்களுக்கு எந்த விஷயத்திலுமே சு்ந்திரம் இரு்த்தே இல்லியே. அவளுக்கு என்ன தெரியும் என்பது அவளுக்கே ்ெரிந்திருக்கலே. சந்தர்ப்பமும் சூ்ழ் நிலைகளுமே அவளது திறமையை அவளுக்கு புரியவைத்தன.சிலர் துணிந்து செயல் பட்டனர். சிலர் பின் தங்கி விட்டனர்.

  ReplyDelete
 3. மீண்டும் நன்றி! மிகத் தெளிவான விமரிசனம்.

  ReplyDelete
 4. நீங்க நினைக்கிறதை எல்லாம் எழுதுங்கோ கீதா.
  விரிவான அலசல் தேவை. நன்றாக இருந்தது.

  ReplyDelete
 5. வாங்க ஸ்ரீராம், ரசனைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 6. வாங்க லக்ஷ்மி, சுதந்திரம்னு பார்த்தால் இப்போவும் இல்லைனே சொல்றாங்க. நாம மனோதிடமாக இருக்கணும் என்பதே முக்கியக் கரு. அதுக்குச் சில உதாரணங்களைச் சுட்டிக் காட்டலாம். மெதுவா வரேன்.

  ReplyDelete
 7. வாங்க கெளதம் சார், நன்றி.

  ReplyDelete
 8. வாங்க வல்லி, பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete
 9. ஆஹா! கதையின் ரொம்ப குறைச்சலான ஒரு கீற்று இங்கேக் கிடைக்கிறது!

  //மாயாவின் கணவன் மனைவி மேல்படிப்புப் படிப்பதோ, வேலைக்குச் செல்வதோ தனக்கு இழுக்கு என நினைக்கும் ஆணாதிக்க உலகின் கதாநாயகன். //

  மாயாவின் கணவன் மனைவி வேலைக்குச் செல்வதற்கு அனுமதித்திருந்தால் இந்தக் கதையே இல்லையோ?.. பெண்கள் வேலைக்குச் செல்வதை ஆசிரியர் அவர்களின் சுயசார்பு அது என்று சொல்கிறார், இல்லையா? (காந்தா உதாரணம்)

  ReplyDelete
 10. //எந்த நிலையிலும் நிலை தடுமாறாமல் மற்றவர்களுக்காக வாழும் பெண்கள் தனக்காக வாழ்வதில்லை என்பதற்குக் காரணமான சுயச் சார்பையும் எடுத்துக் காட்டி விளக்குகிறார்.//


  //"நானிருக்கேன் உனக்கு" என்று பெண்களுக்கு மறைமுகமாய்க் கிடைக்கும் பாதுகாப்புக் கவசமும், அதை எதிர்பார்த்துக்கொண்டே மற்றவர்களுக்காகவே வாழும் பெண்களும் நிறைந்த இவ்வுலகிலே பெண்கள் தங்களுக்குத் தாங்களே துணை; காவல்; தலைமை; அனைத்தும் என்பதைப் புரிந்து கொண்டே தனியாக நின்று கொண்டே மற்றவர்களை ஆதரிக்க வேண்டும்.//

  1)மற்றவர்களுக்காக வாழும் பெண்கள் தனக்காக வாழ்வதில்லை
  2) தனியாக நின்று கொண்டே மற்றவர்களை (யாரை?) ஆதரிக்க வேண்டும்.

  இந்த இரண்டு நிலைகளும் புரியவில்லை. இந்த இரண்டு நிலைகளிலும் நடுவே இருப்பது 'குடும்பம்' என்ற ஒன்றே. அப்படி நடுவே நிற்பது குறுக்கே நின்று தடுக்கிறது என்று சொல்கிறாரா?

  ReplyDelete
 11. ஜீவி சார், வாங்க, உங்க சந்தேகங்களைப் பங்கிட்டுக் கொண்டதற்கு நன்றி. ஒரு முக்கியமான வேலை இருக்கு. முடிச்சுட்டு உங்க கேள்விகளுக்கு பதில். ஓகேயா?

  ReplyDelete
 12. மாயாவின் கணவன் மனைவி வேலைக்குச் செல்வதற்கு அனுமதித்திருந்தால் இந்தக் கதையே இல்லையோ?..//


  @ஜீவி சார்,

  அப்படி எல்லாம் இல்லை. மாயாவுக்குத் தனக்கென சில மணி நேரங்களைச் செலவிட வேண்டும். அந்த நேரத்தை அவள் படிப்பிலோ, வேலை செய்வதிலோ செலவு செய்ய விரும்பினாள். கணவன் அனுமதியைக்கேட்டதில் இருந்தே அவள் கணவன் அனுமதியோடேயே செய்ய விரும்பினாள் என்பது வெளிப்படை. ஆனால் ப்ருத்வி மறுக்கிறான். எங்கே அவள் தன்னை மீறிப் போவாளோ எனப் பயமா? தெரியவில்லை. இதைப் ப்ருத்வியின் கோணத்தில் இருந்து பார்த்தால்...

  அப்படித் தான் தோணுது. ஏனெனில் அடுத்தடுத்துத் தன் வேலையில் ப்ருத்வி காட்டிய சுணக்கமும், அதற்கு மாயாவையும், மற்றவர்களையும் காரணம் காட்டித் தப்பிக்க நினைத்ததும் ஒன்று.

  அடுத்துத் தோல்வியடைந்தவர்கள் அனைவரும் துக்கம் தாங்க முடியாமல் செய்ய ஆரம்பிக்கும் மதுப்பழக்கம்

  எல்லாவற்றுக்கும் மேல் முன்பு வேலை பார்த்ததை விடச் சின்னக் கம்பெனியிலும் குப்பை கொட்ட முடியாமல் போனதுக்குத் தானும் தன் மதுப்பழக்கமும் காரணம் என உணராமல் சொந்தக் கம்பெனி ஆரம்பிக்க எண்ணியது.

  அதற்குத் தேவையான பணத்துக்காக ஷேர் மார்க்கெட் சூதாட்டங்களை நம்பியது.

  மனைவி உதவிக்குப் பணமும், நகையும் கொடுத்தால் அவமானப் பட்டதாக நினைத்தது

  என மாயாவின் கணவனின் ஆணாதிக்கப்போக்கிற்கு எத்தனையோ காரணம்.

  எல்லாவற்றிற்கும் மேல் துரத்தித் துரத்திக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட மாயாவின் ராசி தான் தனக்கு இத்தனை கஷ்டம் என அசட்டுத்தனமாக நம்பியது.

  கஷ்டம் இருவருக்கும் தானே? அவனை விட்டு மாயா தனியாக சுகமா அனுபவித்தாள்? அப்போ மாயா யாரைக் காரணம் காட்டுவது?

  ReplyDelete
 13. பெண்கள் வேலைக்குச் செல்வதை ஆசிரியர் அவர்களின் சுயசார்பு அது என்று சொல்கிறார், இல்லையா? (காந்தா உதாரணம்)//

  இல்லை; ஆசிரியர் அப்படிச் சொல்லவில்லை. அந்த நேரச் சூழ்நிலையில் தன்னையும் தன் குழந்தைகளையும் காத்துக்கொள்ள காந்தா எடுத்த முடிவு அது. காந்தாவிற்குப்படிப்பு இல்லை; கணவனும் பெரிய உத்தியோகமெல்லாம் இல்லை. தச்சு வேலை செய்பவன். அதில் வரும் கொஞ்ச நஞ்சக் காசையும் குடித்துத் தீர்த்துவிட்டு மேற்கொண்டு குடிக்க மனைவியை அடிப்பவன். வயிற்றுப்பாட்டுக்காகச் சம்பாதிக்க ஆரம்பித்தவள், குழந்தைகளுக்காகவும் தன்னுடைய முன்னேற்றத்துக்காகவும் தொடர்கிறாள். மேலும் மேலும் இருக்கும் கொஞ்ச நஞ்சம் சம்பாத்தியத்தையும் கணவன் குடித்து அழித்துவிடக் கூடாதென்று திட்டமாக இருப்பதோடு அவனை வீட்டுக்குள் வரவும் விடுவதில்லை.

  இந்த முடிவு தான் காந்தா விஷயத்தில் சரியானது. ஒரு சில பெண்கள் இப்படிக் கொடுமைக்காரக் கணவனைக் கொல்கின்றனர். கொன்று என்ன கிடைக்கும்? குழந்தைகளும் அநாதைகளாகிவிடும். அதற்கு இம்மாதிரி ஆயுள் தண்டனை அந்தக் கணவனுக்குத் தேவை.

  ReplyDelete
 14. 1)மற்றவர்களுக்காக வாழும் பெண்கள் தனக்காக வாழ்வதில்லை.//

  இந்த விஷயத்தில் யு.எஸ். வாழ் அம்மாக்களை உதாரணம் காட்டலாம் சார். இந்தியாவில் குடும்பத்திற்காக வாழும் பெண்கள் அநேகமாய்க் குடும்பத்தைத் தவிர தன்னைக் குறித்து யோசிப்பதில்லை; உடல் நலமில்லை எனில் மருத்துவரிடம் போவதைக் கூடத் தள்ளிப் போடுவார்கள். அந்தச் செலவுக்கான பணம் இருந்தால் குடும்பத்தின் வேறு தேவைகளுக்கு உதவும் என்பதோடு மருத்துவரிடம் போய்ச் சிகிச்சை எடுக்க ஆரம்பித்தால் என்ன பூதம் கிளம்புமோ, உடல்நிலை காரணம் காட்டி நாம் உட்கார்ந்துவிட்டால் குடும்பம் என்ன ஆகுமோ என்ற பயமே முக்கியக் காரணம்.

  ஆனால் யு.எஸ்.ஸில் தாய்மார்கள் அப்படி இருப்பதில்லை. ஒரு நாளில் சில மணி நேரங்களைத் தங்கள் சொந்த விருப்பத்திற்காகச் செலவிடுகின்றனர். அந்த நேரம் குழந்தைக்கோ, கணவனுக்கோ வேறு வேலைகள் இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றனர். அதற்காகக் குடும்பத்தில் பற்றில்லை என்றெல்லாம் அர்த்தமில்லை.

  இப்போ நான் என்னுடைய கணினி நேரத்தை மதியம் ஒரு மணியில் இருந்து மூன்று மணி வரை மட்டுமே என வைத்திருக்கிறேன். அந்த நேரம் என் குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டியது எனக் குறிப்பாக எதுவும் இருக்காது. ஆகவே இது என் நேரம். இதை நான் எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கலாம்.

  அதே காலை நேரமோ, பகலில் சமைக்கும் நேரமோ, மாலை நேரமோ கணினியில் அமர்ந்திருந்தால் எவ்வளவு முக்கியமாய் வேலை செய்து கொண்டிருந்தாலும் வீட்டு வேலை என்பது இருந்தால் கணினியை மூடிவிட்டுக் கிளம்பி விடுவேன். மாலை நேரம் கணினியில் அமர்வது என்பது வீட்டு வேலைகளை முடித்துவிட்டே என்பதில் உறுதியாக இருக்கிறேன்.


  2) தனியாக நின்று கொண்டே மற்றவர்களை (யாரை?) ஆதரிக்க வேண்டும்.//

  என்னுடைய சுயம் விலகாமல் அதே சமயம் என் குடும்பத்தையும் விட்டு விலகாமல் அவர்களையும் ஆதரித்துக் கொண்டு, அவர்கள் ஆதரவையும் நானும் பெற்றுக் கொண்டு இருப்பது தான் இங்கே முக்கியம்.

  பலரும் சுதந்திரமாய் இருப்பதெனில் குடும்பத்தை விட்டு விலகுவது என்ற பொருளிலேயே நினைக்கிறார்கள். அப்படி இல்லை.

  என் சிந்தனை, செயல் போன்றவை குடும்பம் சம்பந்தப் பட்ட முக்கியமான காரண, காரியங்களுக்கு யோசித்து இருவரும் கலந்து கொண்டு முடிவெடுப்பதே நன்மையாய் இருக்கும். அதே சமயம் என் சொந்தக் காரியங்களில், நானே முடிவெடுப்பது தான் எனக்குப் பிடிக்கும்.

  எழுதுவது உட்பட. என் கணவரிடம் பகிர்ந்து கொள்வேன் தான். ஆனால் என்ன எழுதுவது என முடிவெடுப்பதும் கருத்துக்களும் என்னுடையதாகவே இருக்கவேண்டும் என்பதில் தீர்மானமாய் இருப்பேன்.

  ReplyDelete
 15. இந்தப்புத்தகத்தின் முக்கிய நோக்கமே குடும்பம் குறுக்கே நிற்கிறது என நினைத்துக் கொண்டு தங்கள் நியாயமான விருப்பங்களைத் தீர்த்துக் கொண்டு வாழத் தெரியாத பெண்களுக்காகத் தான். வயசானாலும் ஒருத்தருக்கு நாட்டியத்தில் விருப்பம் இருக்கலாம். ஒருத்தருக்குப் படிக்க ஆசை இருக்கலாம். ஒருத்தருக்குச் செல்லப் பிராணிகள் வளர்ப்பு; ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமாய் இருக்கும். அதை உங்கள் தேவைக்கேற்ப நீங்களே தீர்மானம் செய்து கொண்டு நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

  ReplyDelete