எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 28, 2014

இது தான் விஜிகே 35 இல் இரண்டாம் பரிசு பெற்ற விமரிசனம்.

விஜிகே 35

கதைக்கான சுட்டி இங்கே!

கதைனு பார்த்தால் எதுவுமே இல்லை. இரண்டே வரிக்கதை.  ஒரு துப்புரவுத் தொழிலாளி அந்த மாநில அமைச்சரின் பாலிய நண்பன். இதைக் குசேலர், கிருஷ்ணனுடைய நட்புக்கு ஒப்பிடலாம்.  ஏனெனில் துரோணரும், துருபதனும் மாதிரி இருவரும் சண்டை இட்டுக்கொள்ளவில்லை.  சொல்லப் போனால் குசேலரைப் போல் உதவி தேடியும் இந்தக் கதையின் பூபாலன் செல்லவில்லை. துரோணரைப் போல் பாதி ராஜ்யமும் கேட்கவில்லை.  ஏன், எதுவுமே எதிர்பார்க்கவில்லை.  அவன் பாட்டுக்குத் தன் கடமையைச் செய்கிறான்.  தன் நண்பனாக இருந்து கூட விளையாடியவன் இப்போது  ஒரு மந்திரியாக ஆகி இங்கே வந்து சிறப்பான வரவேற்புப் பெறத் தான் ஒரு காரணமாக அமைய வேண்டும் என்றும் நினைக்கவில்லை. தன்னுடைய கடமையைச் சிறப்பாகச் செய்வது ஒன்றே தனக்கு இறைவனால் அளிக்கப்பட்ட வரம் என்றே நினைக்கிறானோ! அதிலேயே மன நிறைவும் காண்கிறான். இது எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றல்ல.

அந்த நண்பன் விழா முடிந்து திரும்பிச் சென்ற பின்னரும் நண்பன் தன்னை அடையாளம் கண்டு கொண்டு கௌரவித்ததை நினைத்து நினைத்து மெய்ம்மறந்து போய்த் தன் கடமையை மறக்கவில்லை.  அப்போதும் சரி, இப்போதும் சரி ஒரே மாதிரியான மனோநிலையுடன் தன் கடமையே அதாவது கருமமே கண்ணாக இருப்பவன் தான் பூபாலன் என்னும் துப்புரவுத் தொழிலாளி.

இவனுக்கு யாரும் இதை ஒரு உபதேசமாக போதித்திருக்கப் போவதில்லை. இதன் உள்ளார்ந்த பொருளும் புரிந்து நடந்து கொள்பவனும் இல்லை. இவன் இயல்பே இது தான். சொல்லப் போனால் ஸ்திதப் பிரக்ஞன் என்னும் வார்த்தைக்குச் சரியான உதாரணம்.  நடப்பவை நடக்கட்டும்;  அவை எதுவும் என்னை பாதிக்காது;  என் வேலை இது;  என் கடமை இது எனத் தன் கடமை ஒன்றையே எண்ணுபவன் இந்த பூபாலன் என்னும் யோகி. இல்லை;  இல்லை;  கர்ம யோகி.

அருமையான பெயர் பூபாலன் என்பது.  இந்தக் கதையில் கதாநாயகனுக்கு ஒரு பெயர் இருக்கிறது. துப்புரவுத் தொழில் சாமானியமானதல்ல.  நாம் போடும் குப்பைகளையும், கழிவுகளையும் தினம் தினம் நம்மைப் போன்றதொரு மனிதன் சுத்தம் செய்வதென்றால் சும்மாவா?  அதிலும் மனிதக் கழிவுகளை அகற்றுபவர்கள் பாடு மிகச் சிரமம்.  அதே போல் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி அதன் கெட்ட வாயு காரணமாக உயிர் விட்ட பூபாலன்கள் எத்தனையோ பேர்!  எல்லாவற்றுக்கும் இயந்திரம் கண்டு பிடித்தவர்கள் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் இயந்திரத்தை மட்டும் ஏனோ கண்டு பிடிக்கவில்லை! :(

பூபாலன் அந்தக் கிராமத்தின் துப்புரவுத் தொழிலாளிகளில் ஒருவன்.  கடுமையான வேலை நான்கு நாட்களாக.  ஏனெனில் அரசியல்வாதியும், மந்திரியுமான ஒருவர் அந்த ஊருக்கு விஜயம் செய்கிறாராம். அவர் வேறு யாரும் இல்லை.  பூபாலனின் பாலிய நண்பரே தான்.  அதே ஊர்க்காரர் தான்.  விதி வசத்தால் அவர் மந்திரியாகவும், பூபாலன் அதே ஊரில் துப்புரவுத் தொழிலைப் பார்ப்ப்பவனாகவும் ஆகிவிட்டனர். ஒரு காலத்தில் மந்திரியின் நண்பன் என்பதால் பூபாலனுக்கு சலுகையா கிட்டும்!  இங்கே ஆசிரியர் மந்திரியைப் பட்டமாகவும், பட்டம் பறக்கவிடப்படும் நூல்கண்டாக பூபாலனையும் குறிப்பிட்டிருக்கிறார். பூபாலனைப் போன்றவர்களால் தான்   இந்த மாதிரி அரசியல்வாதிகளின் பதவியே பெருமை பெறுகிறது என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார். நூல்கண்டில் பட்டத்துடன் கட்டப்பட்ட கயிறு அறுந்துவிட்டால்?? பட்டம் அந்தரத்தில் பறக்கும். எங்காவது உயரமான மரங்களிலோ, வீட்டுக்கூரையிலோ  சிக்கிக் கிழிபடும்.  ஆனால் நூல் கண்டோ! இருந்த இடத்திலேயே இருக்கும். எவ்வித மாற்றமும் இருக்காது.

மந்திரி வருகைக்குச் செய்யப்படும் ஆடம்பரங்கள் இங்கேயும் குறையவே இல்லை. ஆயிரம் வாலாப் பட்டாசிலிருந்து எல்லாவற்றையும் கதாசிரியர் விடாமல் குறிப்பிடுகிறார். எல்லா ஆடம்பரங்களும் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சியும் முடிந்த பின்னர் மந்திரி தன் பேச்சில் தான் வரும் வழி சுத்தமாக இருந்ததை நினைவு கூர்ந்து துப்புரவுத்தொழிலாளிகளைப் பாராட்டவும் செய்கிறார்.  நமக்கு இது முதல் ஆச்சரியம் என்றால் அடுத்த ஆச்சரியம் மந்திரி பூபாலனைப் பார்த்ததுமே அடையாளம் தெரிந்து கொண்டதோடு இல்லாமல், தங்கமோதிரமும் பரிசளிக்கிறார்.  மேலும் அனைத்துத் துப்பரவுத் தொழிலாளிகளுக்கும் பரிசளித்துப் பாராட்டியதோடு பூபாலனைச் சிறப்பாகப் பாராட்டுகிறார்.

இது அவர் உளமார்ந்த பாராட்டாகச் செய்ததா, அல்லது பத்திரிகைக்காகச் செய்ததா என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.  ஏனெனில் பூபாலனைக் கட்டிப் பிடித்த வண்ணம் பத்திரிகைக்காரர்களுக்குப் படம் எடுக்க அனுமதி கொடுக்கிறார். அந்தப் படம் பத்திரிகைகளில் பிரசுரமும் ஆகிறது. படங்களைத் தன்னிடம் காட்டும் ஊர்க்காரர்களிடம் ஒரு சிரிப்போடு அதை ஆமோதிப்பதோடு, அந்தப் பத்திரிகைகளும் ஒரு நாள் குப்பையாக வரப்போவதை முன் கூட்டியே அறிந்தவன் போல் பூபாலன் திரும்பவும் தன் கடமையில் கண்ணாகிறான்.

இது தான் மனிதருக்கு முக்கியமாக வேண்டிய குணம். உயர்வு கிடைக்கும்போதும் சரி, பின்னர் தாழ்வு கிடைக்கும்போதும் சரி ஒரே மாதிரியாக ஏற்கும் மனம் வேண்டும். அதோடு, பாரதி சொன்னாற்போல்

"சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்."
மேலோர் என்பதற்கு எடுத்துக்காட்டு பூபாலன்.

பூபாலன் துப்புரவுத் தொழிலாளியாக இருந்தால் என்ன? தன்னுடைய உயர்ந்த மதியாலும் அன்பினாலும் மேலோரை விட உயர்ந்த மேல் ஜாதிக்காரனாகி விட்டான்.  பூபாலனின் பாத்திரப் படைப்பின் மூலம் துப்புரவுத் தொழிலாளிகளின் முக்கியத்துவமும், அவர்களை நாம் எப்படி ஓரம் கட்டுகிறோம் என்பதையும் ஆசிரியர் சொல்வதோடு, அவர்களுக்கு உரிய மதிப்புக் கொடுக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டுகிறார். 

16 comments:

 1. மீண்டும் தங்களின் விமர்சனம் உயர்திரு நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்வாகியிருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

  உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  இதைத்தங்கள் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  தொடர்ந்து இதே போட்டிகளில் வாராவாரம் கலந்துகொண்டு மேலும் தாங்கள் பல பரிசுகள் வென்றிட வேண்டும் என்பதே என் அவா.

  அன்புடன் கோபு [VGK]

  >>>>>

  ReplyDelete
 2. தாங்கள் VGK-35 லிருந்து தொடங்கி மேலும் ஒரு ஹாட்-ட்ரிக் அடித்தாலும் ஆச்சர்யம் இல்லை என்று நேற்று என் சொப்பனத்தில் ஒரு எலி வந்து சொன்னது.

  நான் அதனிடம் சொன்னேன்:

  ”எலியே, எலியே!

  நீ சொல்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கும். ஆனால் VGK-37 க்கு இன்னும் அவங்க விமர்சனமே அனுப்பவில்லையே, அதை அவர்கள் ஜோராக எழுதி அனுப்பி, அது நடுவருக்கும் பிடித்துப் போனால் அல்லவோ பரிசு கிடைத்து இன்னொரு ஹாட்-ட்ரிக் அடிக்க முடியும் !” என்றேன்

  >>>>>

  ReplyDelete
 3. சிறந்த பதிவு
  தொடருங்கள்

  எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
  http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
  படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

  ReplyDelete
 4. அதற்கு எலி சொன்னது:

  ”அதெல்லாம் வழக்கப்படி ஜோராப் பக்கம் பக்கமா எழுதித்தள்ளிடுவாங்கோ. PROMPT ஆ அனுப்பிடுவாங்கோ.

  நடுவிலே நவராத்திரி வந்துள்ளதால் கொஞ்சம் சுண்டல் தயாரிப்பிலும், நிறைய சுண்டல் வசூல் வேட்டையிலும் பிஸியா இருக்காங்கோ.

  அவங்க VGK-37 விமர்சனம் மட்டுமில்லாமல் இன்னும் ஏதேதோ இந்த முடியப்போகும் விமர்சனப்போட்டிகளின் சிறப்புகளைப் பற்றியும் கட்டுரை எழுதிக்கிட்டு இருக்காங்கோ.

  இரண்டையும் சேர்த்து அனுப்பணும்ன்னு மாங்கு மாங்குன்னு டைப் அடிச்சுக்கிட்டே இருக்காங்கோ ....

  அது தான் சாக்குன்னு நானும் சமையறையில் உள்ள சுண்டல்களை நிம்மதியா டேஸ்ட் பண்ண செளகர்யமா இருக்கு”

  அப்படின்னு அந்த என் கனவில் வந்த எலி சொல்லிச்சு. விடியற்காலம் கண்ட கனவு. அநேகமாப் பலிச்சுடும்ன்னு நினைக்கிறேன்.- VGK

  ReplyDelete
 5. அருமை.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. இது தான் மனிதருக்கு முக்கியமாக வேண்டிய குணம். உயர்வு கிடைக்கும்போதும் சரி, பின்னர் தாழ்வு கிடைக்கும்போதும் சரி ஒரே மாதிரியாக ஏற்கும் மனம் வேண்டும். //

  அருமையாக சொன்னீர்கள்.
  பூபாலன் அதற்கேற்ற பாத்திரப் படைப்பு.
  வாழ்த்துக்கள் வெற்றி பெற்றமைக்கு.

  ReplyDelete
 7. அருமை.

  வாழ்த்துக்கள்.

  ஸ்ரீராம் எவ்வழி, அவ்வழி நம்வழி!

  சமீபத்திய ஞானோதயம்.

  ReplyDelete
 8. வாங்க வைகோ சார், நவராத்திரியிலேயும் போட்டியைத் தொடர்கிறேனே! அதுவே பெரிசு போங்க! :)

  ReplyDelete
 9. வைகோ சார், என்னாது, எலி வந்ததா சொப்பனத்திலே? சரியாப் போச்சு போங்க. :)))

  ReplyDelete
 10. விமரிசனப் போட்டிகளின் சிறப்பு பத்தி எழுத முடியுமானு தெரியலை. பார்க்கலாம். :(

  ReplyDelete
 11. நன்றி காசிராஜலிங்கம்.

  ReplyDelete
 12. ஶ்ரீராம், கீழே ஜீவி சார் உங்களைக் காப்பி அடிச்சிருக்கார். :)

  ReplyDelete
 13. நன்றி கோமதி அரசு.

  ReplyDelete
 14. ஜீவி சார், நான் இந்த ஆட்டத்திலே இல்லை. :)))) count me out! :)

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. அங்கேயே படித்துவிட்டேன்.....

  வாழ்த்துகள்.

  ReplyDelete