எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 07, 2014

பார்வை முதிர்ந்தது! மனம்????

முதிர்ந்த பார்வை

மீண்டும் மீண்டும் அவனுக்குத் தன் மனைவி மீதுதான் ஒரு சந்தேகம். தான் ஆபீஸுக்குப் போனபின், தன் பெற்றோர்கள் மனம் புண்படும்படி ஏதாவது பேசி, தவறாக அவர்களுக்கு ஏதாவது மன வருத்தம் ஏற்படும்படி நடந்து கொண்டிருப்பாளோ! பலமுறை அது விஷயமாக அவளிடமே கேட்டும் அவளிடமிருந்து, எந்த ஒரு உண்மையையும் அவனால் வரவழைக்க முடியவில்லை.  

சிவப்பு வண்ணத்தில் கதை "முதிர்ந்த பார்வை" யில் திரு வைகோவின் பார்வை.  அதற்கான என் பார்வை கீழே


கல்யாணியும் அவள் கணவனும் திருமணமான முதல் இரவன்றும், மறுநாளும் மட்டும் தனித்திருந்தார்கள்.  அப்போதெல்லாம் பாதி வெட்கமும், பாதி தயக்கமுமாக எதுவும் மனம் விட்டுப் பேசிக் கொள்ளவில்லை.  அதன் பின்னர் வந்த நாட்களில் இருவரும் பழகினார்களே தவிர அந்தரங்கமாக அமர்ந்து பேசியது என்பது விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே தான். அப்போதும் அவள் கணவன் தன் அம்மா, அப்பா தன்னைப் படிக்க வைக்கப் பட்ட கஷ்டம், தான் அவர்களுக்குக் கடமைப்பட்டிருப்பது, கல்யாணி அதற்கு ஒத்துழைக்க வேண்டியது என்றே பேசிவிட்டுப் போய்விடுவான்.  ஆகவே ஒரு புதுப்புடைவை கட்டிக்கொண்டாலோ, பூ வைத்துக் கொண்டாலோ அதைப் பாராட்டியோ, அல்லது ரசித்தோ அவனிடமிருந்து இன்று வரை ஒரு பார்வை கூட வந்ததில்லை.  சாதாரணமாகப் பார்த்துவிட்டுப் போய்விடுவான்.

கல்யாணியும் அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.  எல்லாவற்றிற்கும் ஒரு காலம் வரும் என்ற நம்பிக்கையுடனேயே இருந்தாள்.  ஏனெனில் அவள் மாமனார், மாமியார் அவளிடம் காட்டிய அன்பு அத்தகையது. அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கவில்லையே என அவர்கள் தங்களுக்குள் ஆதங்கப்படுவதையும் அவள் அறிந்திருக்கிறாள்.  ஆனால் அதற்கான வாய்ப்பே இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்களா என்பதையும் தனக்குள்ளே யோசித்துச் சிரித்துக் கொள்வாள்.  அப்பாவியாக இருக்கிறார்களே என்றெல்லாம் நினைப்பாள். அப்படிப்பட்டவர்கள் இப்போது தன்னிடம் கூடக் காரணம் என்னவென்று உண்மையைச் சொல்லாமல் திடீரென முதியோர் இல்லம் சென்றதை அவளால் தாங்க முடியவில்லை.  ஜோசியம் என்று அவர்கள் சொன்னது பொய் தான் என்பதை அவள் புரிந்து கொண்டுவிட்டாள்.

இத்தனையையும் யோசித்த வண்ணம் கதவைத் தட்டிய கல்யாணி  அவள் கணவன் கதவைத் திறந்ததும் கூறிய வார்த்தைகளால், அவமானத்தில் தலை குனிந்தாள்.  கதவை வேகமாய்த் திறந்த அவள் கணவன், "என்ன? என் அப்பா, அம்மாவை நான் இல்லாதபோது தந்திரமாக ஏதேதோ பொய்யைச் சொல்லி அல்லது அவர்கள் மனம் நோகும்படி ஏதோ சொல்லி வெளியே அனுப்பியாச்சு.  இனிமேலே நான் உன்னோடு சந்தோஷமா இருப்பேன் என்ற எண்ணமா?  இப்படி ஒரு நிலையில் உன்னால் எப்படி இதெல்லாம் நினைக்கத் தோணுது?  நீயும் ஒரு பெண்ணா?  நீ என்ன நினைச்சு அவங்களை வெளியே அனுப்பினாயோ அது நடக்காது!" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு, "உன் சாப்பாட்டைக் கொண்டு போய்க் குப்பையில் போடு!" என்ற வண்ணம் மீண்டும் கதவைச் சாத்திக் கொண்டான்.

இங்கேயும் சிவப்பு வண்ணத்தில் வைகோவின் பார்வை.  என் பார்வை அதன் கீழே.

வயதான காலத்தில், நல்ல நடமாட்டத்துடன், தங்களால் முடிந்த சரீர ஒத்தாசைகள் செய்துகொடுத்துக்கொண்டு, தன் மகளுக்கும் ஒரு நல்ல பாதுகாப்பாக இருந்து வந்த தம்பதியை, சின்னஞ்சிறுசாகிய தன் மகள், இவ்வாறு முதியோர் இல்லத்திற்கு அனுப்பியுள்ளதை கேள்விப்பட்ட (கல்யாணியின் பெற்றோர்களால்) அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. 



மறுநாள் காலை அவள் பெற்றோரும் அவளைத் தொலைபேசியில் கூப்பிட்டுக் கண்டிக்கவே கல்யாணியின் மனம் துவண்டது. ஆயிரம், பதினாயிரம் மலைப்பாம்புகள் ஒரே சமயத்தில் அவளைச் சுற்றிக் கொண்டு அவள் கழுத்தை நெரிப்பது போல் இருந்தது. அவர்களிடம் அவள் கணவனே சொல்லி இருக்கிறான்.  "பெண்ணை வளர்த்த லக்ஷணம் இதான்! " என்றெல்லாம் சொன்னானாம்.  அதோடு அன்றிலிருந்து கல்யாணி சமைத்தால் அவள் கணவன் சாப்பிடுவது இல்லை.  அவனாகக் காஃபி போட்டுக் கொள்வான். எப்போதேனும் உப்புமா கிளறிக் கொள்வான்.  மற்ற நேரம் அலுவலகம் சென்றதும் அங்கேயே சாப்பிட்டுக் கொள்கிறான் என்று கல்யாணி புரிந்து கொண்டாள்.  அக்கம்பக்கம் வேறே அவளைப் பார்க்கையில் ரகசியம் பேசுவதையும் அவளால் தாங்க முடியவில்லை.

சிவப்பு வண்ணத்தில் வைகோவின் பார்வை

அக்கம் பக்கத்தில் உள்ள பெண்மணிகள், ஜாடைமாடையாக “இருந்தால் நம் கல்யாணி மாதிரி அதிர்ஷ்டமாக இருக்கணும்; வந்து நாலே வருஷத்தில், அப்பா அம்மாவின் செல்லப்பிள்ளையாண்டானாக இருந்த மணிகண்டனை அடியோடு மாற்றி, அவர்கள் இருவரையும் பேயோட்டுவது போல, வீட்டைவிட்டுத் துரத்தி விட்டு, ஜாலியாக இருக்கிறாள், பாரு; நம்ம எல்லோருக்கும் இதுபோல ஒரு அதிர்ஷ்டம் அடிக்குமா என்ன? எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பிணை வேண்டுமோல்யோ!” என்று பேசிக்கொள்வதைக் கேட்க கல்யாணிக்கு மனம் வேதனைப்பட்டு வந்தது. 


அன்னிக்கு எதிர் வீட்டு ஜமுனாவும், கோடி வீட்டு ராதாவும் நேரேயே கேட்டுட்டாங்க.  "ஏண்டி கல்யாணி, எப்படிடி இதைச் சாதிச்சே? " பாராட்டு போல் கேட்டு அவள் மனதை மேலும் நோக அடித்தனர். கணவன் சாப்பிடாதபோது தான் மட்டும் என்ன சாப்பிடுவது?  பசி ரொம்பத் தாங்காத சமயத்தில் கல்யாணி எதையோ சமைத்துப் பெயருக்கு  விழுங்கினாள்.  நாளாக, ஆக அவள் உடல் இளைத்தது.  மேனியின் நிறமும் கறுத்துப்போய் நோயில் விழுந்தவள் போல் ஆகிவிட்டாள்.

வாராவாரம் கணவன் முதியோர் இல்லம் செல்கையில் தானும் மௌனமாகப் பின் தொடர்வாள்.  அவன் பெற்றோருக்குப் புரிந்துவிடும் தன்னைக் கேள்விகள் கேட்பார்கள் என்றோ, என்னமோ தெரியவில்லை, அவள் கணவன் இதற்கு ஆக்ஷேபம் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு உருக்குலைந்து கொண்டிருக்கும் கல்யாணியின் நிலைமையைப் பார்த்து ஆச்சரியம்.  நாம் இல்லை என்றால் சந்தோஷமாக இருப்பாங்கனு நினைச்சோமே என ஆதங்கப்பட்டார்கள்.  ஆனால் கல்யாணி அவர்கள் எதிரே எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.  அவள் கணவனும் பெற்றோரின் தேவையை மட்டும் குறித்து விசாரிப்பான். அவர்களுக்கென வாங்கிய பொருட்களைக் கொடுப்பான்.  திரும்புகையில் குழந்தையைப் போல் அழுவான்.  ஆனாலும் அவன் பெற்றோருக்கு மனதில் ஏதோ உறுத்தல்.

அன்று அவர்களைப் பார்க்க வந்த கல்யாணியையும், அவள் கணவனையும் கூர்ந்து கவனித்த இரு பெரியவர்களுக்கும் இருவருக்குள்ளும் ஏதோ சரியில்லை என்பதை ஒருவாறாகப் புரிந்து கொண்டனர்.  பெரியவர் தன் மனைவியை ஜாடை காட்ட, புரிந்து கொண்ட கல்யாணியின் மாமியார் தன் மருமகளைத் தன்னுடன் அந்த முதியோர் இல்லத்தின் சமையலறைக்கு வருமாறு கூப்பிட்டாள்.  எதற்கு எனப் புரியாமல் கல்யாணியும் உடன் செல்ல, கிழவி சாமர்த்தியமாகக் கேள்விகள் போட்டாள்.  கல்யாணிக்கும் மாமனார், மாமியார் மேல் வெறுப்பெல்லாம் ஏதும் இல்லை;  ஏதோ காரணமாகத் தான் முதியோர் இல்லம் வந்திருக்கிறார்கள்;  ஜோசியம் என்பதெல்லாம் பொய் என்ற வரை புரிந்தது.  ஆகையால் தன் மாமியார் கேட்காமலேயே தன் கணவன் தன்னைக் குற்றம் சாட்டிக் கொண்டு விலகி இருப்பதையும், தன் பெற்றோர் மற்றும் ஊர்க்காரர்கள் தன்னைப் பேசும் பேச்சைக் கேட்டுக்கொண்டு தன்னால் சகிக்க முடியவில்லை என்றும் சில சமயம் கணவன் படுத்தும் பாட்டில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்றெல்லாம் தோன்றுவதாய்க் கூறிக் கதறிவிட்டாள்.

திகைத்துப் போனாள் கல்யாணியின் மாமியார். மருமகளை அணைத்து ஆறுதல் சொல்லிக் கண்களைத் துடைத்துவிட்டாள்.  உடனே அறைக்கு வந்தவள், தன் கணவனைத் தனியே அழைத்துப் பேசினாள்.  பெரியவரும் உடனே தலையை ஆட்டினார்.  மகனைப் பார்த்து, " உடனே நாங்க அங்கே வரோம்டா, மணிகண்டா! அதற்கு ஆவன செய்.  இல்லத்தின் அலுவலகம் சென்று அங்கே போய் நாங்க இனிமே இங்கே இருக்கப் போறதில்லைனு சொல்லிட்டுக் கிளம்பறதுக்கு வழியைப் பார்!" என்றார்.  மணிகண்டன் முகம் மலர்ந்தாலும்  காரணம் புரியவில்லை.  குழப்பத்துடன் கல்யாணியையும், தன் தாயையும் பார்த்துவிட்டு அலுவலகம் சென்று முறைப்படி எல்லாவற்றையும் செய்து விட்டு வந்தான்.  "ஆறு மாசத்துக்குள்ளாகப் போவதால் பணம் கொஞ்சம் பிடித்துக் கொண்டு தான் மீதியைக் கொடுப்பாங்களாம்."  என்ற வண்ணம் மூட்டை கட்டிக் கொண்டிருந்த பெற்றோரைப் பார்த்தவன், "அம்மா, அப்பா, என்ன திடீர் மனமாற்றம்? ஜோசியர் ஏதோ சொல்லி இருப்பதாகச் சொன்னீங்களே?  இப்போ அதெல்லாம் என்ன ஆச்சு?" என்று கேட்டான்.

உடனேயே அவன் தாய் அவனைப் பார்த்து, "மணி, தப்பெல்லாம் எங்கள் மேல் தான்.  நாங்கள் வாழ்ந்து முடித்தவர்கள்.  நீங்கள் சின்னஞ்சிறுசுகள். வாழ்க்கையையே என்ன என்று இனிமேல் தான் பார்கக்ணும். இருக்கிற ஒரு அறையையும் எங்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டாய்.  அப்புறமா நீ உன் மனைவியோடு சந்தோஷமாக இருப்பது எப்போது? எங்களுக்கும் உனக்கு ஒரு குழந்தை, குட்டினு பிறந்து பேரன், பேத்தினு பார்க்க ஆசை இல்லையா? அதற்கெல்லாம் ஒரு வாய்ப்புக் கொடுக்கணும்னு தான் நாங்கள் இரண்டு பேரும் பேசி வைத்துக் கொண்டு இப்படி ஒரு பொய்யான காரணத்தைச் சொல்லிட்டுத் தனியா வந்தோம்.  கல்யாணி உண்டாகி இருந்தால் கட்டாயமாய்த் திரும்பி இருப்போம்.  ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே கொடுக்காமல் நீ படுத்தின பாட்டை எல்லாம் இப்போ அவள் எங்கிட்டே சொல்லி அழுதாள்.  அப்பா, மணிகண்டா, அவள் எந்தத் தப்பும் பண்ணல்லைடா!  அவளை மாதிரி ஒரு மனைவி கிடைக்க நீ கொடுத்து வைச்சிருக்கணும். "

"எங்கே, நாங்க தானே அவளோடு நெருங்கி பழகி இருக்கோம். நீ அவளோடு ஒரு கணவனாக எங்கே நெருங்கிப் பழகினாய்?  அதான் அவளைப் பற்றி உனக்குப் புரியவில்லை..  பெத்த பொண்ணாட்டமா எங்களைப் பார்த்துண்டாடா!  அவளையா நீ குற்றம் சொல்லிட்டுத் தொடாமல் விலகி இருக்கே?  அவள் சமைச்சால் சாப்பிடறதும் இல்லையாமே!  என்னடா அக்கிரமம் இது! நாங்க இப்படி எல்லாம் நடக்கும்னு நினைச்சுப்பார்க்கலை. அது எங்கள் தப்புத் தான்.  அன்னிக்கே விபரமாச் சொல்லி இருக்கணும். எதையுமே நேருக்கு நேர் மனம் விட்டுப் பேசறது தான் சரி என்று இப்போப் புரிந்து கொண்டோம். நாங்க உண்மைக்காரணத்தை மறைச்சிருக்கக் கூடாது. உனக்கு என்ன, நாங்க உன்னோடு இருக்கணும்.  அவ்வளவு தானே!  வீட்டுக்கு வந்ததும், உன் அப்பா பேரிலே பாங்கிலே இருக்கிற பணத்தை எடுத்துக் கொடுக்கச் சொல்றேன். இன்னொரு ரூம் போட்டுடு.  நாங்க அதிலே இருக்கோம்;  அல்லது நீ அதிலே இருந்துக்கோ!  இந்தப் பணத்தை எல்லாம் வைச்சுண்டு நாங்க என்ன செய்யப் போறோம்!  பின்னாடி உனக்குக் கொடுக்கிறதை இப்போவே கொடுத்தோம்னால் ஏதோ பேரன், பேத்தியையாவது பார்ப்போம்.  இது முன்னாடியே எங்களுக்குப் புரிஞ்சிருக்கணும்.  வயசாகியும் புத்தி கெட்டு இருந்தது நாங்கதான்டா மணிகண்டா! கல்யாணி இல்லை!  இப்போப் புரிஞ்சுதா? " என்று நீண்ட பிரசங்கமாகச் செய்ய

மணிகண்டன் பேச வாயின்றித் திகைத்துப் போய் நின்றான்.



பி.கு. இன்னும் கொஞ்சம் சம்பவங்களைச் சேர்த்துக் கதையில் சம்பாஷணைகளைக் கூட்டி மெருகேற்றி இருக்கலாம்; செய்திருக்கணும் தான்.  ஆனால் நேரமின்மை, மேலும் கதைக் கரு மட்டுமே போதும் என்ற என் எண்ணம்  என்பதாலும் போதும்னு நினைச்சேன்.


கதையும் முடிஞ்சது;  கத்திரிக்காயும் காய்ச்சுது! :)))))

34 comments:

  1. "முன்னாடியே நேராப் பேசித் தீர்த்துகிட்டிருக்கணும்" இதுதான் நிறைய இடங்களில் சாத்தியப்படுவதில்லை.

    ReplyDelete

  2. சில நிமிடங்கள் கழித்துச் சுதாரித்து மணிகண்டன், "கொஞ்சம் இருங்க" என்று வெளியே சென்று திரும்பி வந்தான்.

    "என்னடா?" என்றனர் பெற்றோர், அவன் திரும்பியதும்.

    "உங்களுக்கான முதியோர் இல்லப் பணத்தைத் திரும்பக் கட்டிட்டு வந்தேன். அப்பா அம்மாவா நீங்க ரெண்டு பேரும்? வெக்கமா இல்லை? உங்களால நான் எவ்வளவு பெரிய தப்பை செஞ்சேன்!! அறிவை இழந்த்ட்டேனே!! இவளை என்னவெல்லாம் பேசிட்டேன்? ஒரு வேளை தற்கொலை செஞ்சிண்டிருந்தா என்னாறது? உங்க முட்டாள்தனத்துக்கு அளவே இல்லையா? இனிமேலும் என் வாழ்க்கைல உங்கள அனுமதிக்கிறதா இல்லை. இங்கயே இருங்கோ இல்லை எக்கேடோ கெட்டுப் போங்கோ. உங்க பென்சன் பணத்தையெல்லாம் நாளைக்கே உங்க முன்னாடி கொட்டிடறேன். என் முகத்திலயே இனி நீங்க முழிக்க வேண்டாம்" என்றான். கல்யாணியைப் பார்த்து, "இது எல்லாம் என் தப்பு. இந்தக் கிழட்டுச் சனியன்கள் அறிவில்லாம நடந்தால் என் புத்தி என்னாச்சு? கொஞ்சம் கூட யோசிக்காம உன்னைப் புண்படுத்திட்டேனே? தயவு செஞ்சு என்னை மன்னிச்சுடு. இனிமே நாம ரெண்டு பேரும் தனியா இருக்கலாம். இந்தக் கிழங்கள் இங்கயே இருக்கட்டும்" என்றான்.

    கல்யாணி நிதானமாக, "நல்லா இருக்கே நீங்க சொல்றது? என் மனசு நொந்து போனது என்னமோ நிஜம் தான். அது மாறப் போறதில்லே. என்னைப் பெத்தவாளே என்னை அசிங்கமா பேசினதெல்லாம் மறைஞ்சா போயிடும்? உங்க வார்த்தை ஒண்ணொண்ணும் என்னை சாட்டையானா அடிச்சிருக்கு? அந்தக் காயமெல்லாம் ஆறுமா? எப்படியோ உங்களுக்கு விஷயம் தெரிஞ்சாச்சு. உங்களைப் பெத்தவாளுக்கும் விஷயம் தெரிஞ்சாச்சு. என்னைப் பெத்த சனியன்களுக்கும் விஷயம் தெரிஞ்சுடும். நல்லது. என்னை விடுங்கோ. நான் போறேன். உங்க எல்லார் குருட்டுத் தனத்துல மாட்டிண்டு அடிபட்டா எனக்கு அறிவில்லைனு அர்த்தம். நீங்க யாருமே என் முகத்துல முழிக்க வேண்டாம். என் வழில நான் போய்க்கறேன்" என்றாள்.

    மணிகண்டனும் பெற்றோரும் திகைத்து நின்றனர்.

    ReplyDelete
  3. இப்படி ஒரு கோணம் ,
    இப்படி ஒரு பார்வை..
    யதார்த்தப் பாரவை..!

    ReplyDelete
  4. ஶ்ரீராம், எங்கள் வாழ்க்கையிலேயே அம்மாதிரி நிறைய நடந்திருக்கு! :)))))

    ReplyDelete
  5. அப்பாதுரை, இதான் என்னோட ஒரிஜினல் முடிவும் கூட. ஆனால் கொஞ்சம் யோசிச்சுட்டு யூகத்தில் விட்டுடலாம்னு முடிவு பண்ணி, பின்னர் அதையும் எடுத்தேன். ஏனெனில் கணவன், மனைவிக்குள்ளாக ஒருவரை மற்றொருவர் புரிந்து கொள்ளச் சந்தர்ப்பமே இல்லை என்று சுட்டிக் காட்டி இருக்கேனே! ஆகவே அதற்கேற்றாற்போல் கதையைக் கொண்டு போய் முடிவை அவரவர் இஷ்டத்துக்கு விட்டேன். :)))))

    ReplyDelete
  6. ராஜராஜேஸ்வரி, எத்தனை இடங்களில் இப்படி மனம் விட்டுப் பேசுகின்றனர்? ஆகவே இது யதார்த்தம்னு சொல்ல முடியலை! :( எல்லோரும் மனம் விட்டுப் பேசிக் கொண்டு குறைகளை முடிந்தவரையில் களையணும்; அல்லது தீர்க்க முடியாக் குறைகளோடு ஏற்று வாழப் பழகணும். :))))

    ReplyDelete
  7. தொடரும் போடலாம்னு இருந்தேன்.
    கதை இன்னும் முடியலேனு தோணுது. உங்க கோணம் எனக்கும் தோன்றியது. இந்த இடத்திலிருந்து அந்த இடத்துக்கு ஒரு பாலம் கட்டி கதையை முடிக்கலாம். அதை வேறு யாருக்காவது விடலாம்னு தான்.

    வைகோ சாருக்கே விட்டுருவமா?

    ஒரு கதை இப்படி பலரை பாதிச்சது பார்த்து நாளாச்சு.

    ReplyDelete
  8. //கதை இன்னும் முடியலேனு தோணுது. உங்க கோணம் எனக்கும் தோன்றியது. //

    ஹிஹிஹி, க்ரேட் பீபிள் திங்க் அலைக் னு மறுபடி நிரூபிச்சாச்சு, இல்லையா?


    //இந்த இடத்திலிருந்து அந்த இடத்துக்கு ஒரு பாலம் கட்டி கதையை முடிக்கலாம். அதை வேறு யாருக்காவது விடலாம்னு தான்.

    வைகோ சாருக்கே விட்டுருவமா?//

    யார் வேண்டுமானாலும் தொடரட்டுமே! பார்க்கலாம். ஶ்ரீராம் தொடரலாம் என்பது என் விருப்பம். :))))

    //ஒரு கதை இப்படி பலரை பாதிச்சது பார்த்து நாளாச்சு.//

    ஆமாம், என்னையும் இந்தக் கதை மிக பாதித்தது. அதுவும் கட்டின கணவனே சந்தேகப்படறான்னு தெரிஞ்சப்புறமும் தன்மானமுள்ள ஒரு மனைவி அவனுக்கு இணங்குவாளா? விடையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

    என்னதான் அவளிடம் அவன்மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருப்பான் என நினைத்தாலும்...........:(

    ஒருவேளை காலம் மனப்புண்களை ஆற்றலாம். இருவரும் சந்தோஷமாக வாழட்டும்.

    ReplyDelete
  9. Durai A said...

    //நல்லது. என்னை விடுங்கோ. நான் போறேன். உங்க எல்லார் குருட்டுத் தனத்துல மாட்டிண்டு அடிபட்டா எனக்கு அறிவில்லைனு அர்த்தம். நீங்க யாருமே என் முகத்துல முழிக்க வேண்டாம். என் வழில நான் போய்க்கறேன்" என்றாள்.//

    :) அடப்பாவமே !

    //மணிகண்டனும் பெற்றோரும் திகைத்து நின்றனர்.//

    நானும் திகைத்து நிற்கிறேன். :))

    ReplyDelete
  10. *****நானும் திகைத்து நிற்கிறேன்.*****

    என் இந்தத் திகைப்புக்கு காரணம் .......

    இனி இந்த பாழாய்ப்போன சமுதாயம் வெட்டியாக நம் கல்யாணியை வேறு ஒரு புதுப்பெயர் சொல்லி அழைக்கக்கூடுமே என்பது மட்டுமே.

    [இதுவரை, அவள் எல்லோரிடமும் கேட்டு வந்த ஏச்சும் பேச்சும் போதாதோ !]

    ReplyDelete
  11. ஓரு கதையின் பாதிப்பு இவ்வளவு தூரம் வருகிறதே. ஏச்சு கேட்பது பெண்களுக்குப் புதிதில்லையே.அதையெல்லாம் தாண்டி வாழ்ந்து முடிச்சு ,வேற பயணமும் ஆரம்பித்தாச்சு. யார் மருமகளைப் புரிந்து கொள்கிறார்கள். இப்ப யார் மாமியாரைப் புரிந்து கொள்கிறார்கள். சுழலும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுவதற்கு நல்ல தெம்பு வேணும். கல்யாணிக்கு அதுவந்தால் வாழ்த்துகள். அருமையாக இருக்கிறது கீதா.உண்மை உணர்ச்சிகளை யாராவது பேசிவிட்டால் வாழ்க்கை தென்றலாகிவிடும்.

    ReplyDelete
  12. வைகோ சார், இந்தக் கோணமும் நான் சிந்திக்காமல் இல்லை. அதனால் தான் பெரியவங்களே மன்னிப்புக் கேட்டதுக்கப்புறமும் கல்யாணியைக் கணவனோடு சேர்ந்து இருந்தாள் என்னும்படியாகக் கதையை அமைத்தேன். :))) என்றாலும் பல யூகங்கள் செய்யலாம். அதில் ஒன்று அப்பாதுரையின் யூகம்.

    அது சரியாக வராது என்று புரிந்தது என்பதால் நான் அப்படி அமைக்கவில்லை. :)))))

    ReplyDelete
  13. வாங்க வல்லி, கதைதான்னூ விடமுடியலை! அதான் ஒரு கை இல்லை, ரெண்டு கையாலேயும் பார்த்தாச்சு! இனி ஜீவி சார் பாடு, அந்தக் கதையின் பாடு! :))))))

    ReplyDelete
  14. நீங்கள் சொல்லியிருக்க மாதிரியும் நடக்க வாய்ப்பிருக்கிறதே. மனம் விட்டுப் பேசினால் பிரச்சினை விட்டுப் போகும். அங்கே தானே தவறே செய்கிறோம். பேசுவதேயில்லை மனம் விட்டு எங்கே.....
    பலவிதமாய் கதைப் படித்த திருத்தி வந்து விட்டது.

    ReplyDelete
  15. வாங்க ராஜலக்ஷ்மி, இந்தக்காலத்துப் பெண்களுக்கு சுயமரியாதையும், தன்மானமும் மிகவும் முக்கியம். ஆகவே அவர்களை மனதில் வைத்து எழுதினேன். ஆகையால் அப்பாதுரை சொன்னாப் போல் நடக்கவும் வாய்ப்புகள் உண்டு. :( சுடு சொல் பொறுக்க மாட்டார்கள். அதுவும் தப்பே செய்யாமல் பழி சுமக்கறதுக்கு மனோபலம் நிறைய வேண்டும். அது இக்காலப் பெண்களில் பலரிடம் இல்லை.

    ReplyDelete
  16. இரண்டு பதிவுகளையும் ஒன்றாய் படித்தேன்.......

    நல்லது என நினைத்து நாம் செய்யும் காரியம்/எடுக்கும் முடிவு பல சமயங்களில் எதிரான விளைவுகளைத் தந்து விடுகிறது.....

    உடைந்து விட்ட கண்ணாடி போல உடைந்து விட்டதே உறவு... மீண்டும் ஒட்டுவது மிகவும் கடினம் தான்.....

    ReplyDelete
  17. அசாதாரணச் சூழ்நிலை. தாய், தந்தையை எங்கு சென்றாலும் சுமந்து செல்லும், தசரதனின் பிள்ளைச் சோக சாபத்துக்குக் காரணமான அந்தப் பிள்ளை(யின் பெயர் மறந்து விட்டது!) போல தாய் தந்தையர்க்குச் சேவை செய்யும் பிள்ளைகள் இந்தக் காலத்தில் பார்க்க முடியுமா என்ன? வருடக் கணக்கில் மனைவியைத் தொடக் கூட எண்ணாமல்? தாய் தந்தையர் மேல் பாசம் இருக்க வேண்டியதுதான். அதற்காக மனைவியைத் தீண்டக் கூட மாட்டேன் என இந்த அளவு மூடத்தனமாக இருந்தால் மனைவி அவனை எப்போதோ பிரிந்திருக்க வேண்டும்!

    இந்த மாதிரி மன்னிக்கும் மனைவிகள் வாசுகி காலத்தோடு போயாச்சு என்று நினைக்கிறேன். (மரணப் படுக்கையில் இருக்கும்போதுதான் திருவள்ளுவரிடம் வாசுகி 'எதற்கு தினமும் சாப்பிடும்போது ஊசியும், ஒரு பாத்திரத்தில் நீரும் வைக்கச் சொல்வது எதற்கு என்று கேட்டுக் கொண்டாளாம்)

    ம்ம்ம்... என்னவோ போங்க!

    :)))))

    ReplyDelete
  18. கௌதம முனிவர்தானே திருமணமாகி அழைத்து வந்த மனைவியை பல காலம் பணிவிடை செய்ய மட்டுமே பயன் படுத்தி வந்தவர்? அல்லது அகத்தியரா? சம்பவங்கள் நினைவில் இருக்கும் அளவு பெயர்கள் நினைவில் இருப்பதில்லை! குழப்ப புராணங்கள்!!! :)))

    ReplyDelete
  19. //இனி ஜீவி சார் பாடு, அந்தக் கதையின் பாடு! :)))))) //

    இரண்டு நாட்களாய் கடுமையான வேலை பளு. பல வேலைகளில்
    கவனம் செலுத்த வேண்டிய நிலை.
    முழுதும் எழுதி முடிக்கட்டும் ஆரம்பிக்கலாம் என்றிருந்தேன்.
    இப்பொழுது பின்னூட்டத்தில் கதையை மட்டும் எங்கிட்டே தள்ளிட்டு நீங்க போய்விட்டதை மேலோட்டமாகப் பார்த்ததும் பதறி அடிச்சு பதிலெழுத முற்பட்டேன்.
    இல்லேனா, உங்களை கைலேயே பிடிக்க முடியாது; நாலு நாட்களில் இரண்டு பதிவுகள் தாண்டிப் போய் விடுவீர்கள். நானும் உங்களை இங்கேயே இருங்கள் என்று கேட்டுக் கொள்ள முடியாது.

    ஒன்று செய்யலாம்.

    நீங்கள் அடுத்த எந்தப் பதிவுக்கு வேணா போய்க் கொள்ளுங்கள். இந்தப் பதிவில் தொடர்ந்து உங்களுடன் நான் பேசிக் கொண்டு வருகிறேன். அப்பப்போ வந்து பதில் சொல்லுங்கள் போதும்.

    நாம ரெண்டு பேர் மட்டும் விவாதித்துக் கொண்டு இருந்தால் சுவாரஸ்யப்படாது. இன்னொருவர் வேண்டுமானால், அப்பாதுரை லாயக்குப் படாது. அவர் ஓரிரு வார்த்தை எழுதி பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிக் கொண்டிருப்பார்! :)) இருந்தாலும்
    அவருக்கு என்னவோ (!) இந்தக் கதையில் அதீத ஈடுபாடு இருக்கிறது. அதனால் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் பக்கத்து வலுவான கை என்றாலும் சேர்த்துக் கொள்ளலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை:))

    ஸ்ரீராம் என்னோட அடுத்த சாய்ஸ்.
    இரண்டு பக்க நியாயத்தையும் சொல்லுவார். அதனால் அவரும் கூட வந்தால் நல்லது.

    பெண்ணுக்கு, மகனுக்கு திருமணம் செய்து வைத்து சம்பந்திகளாய் ஆகிவிட்ட இருவர் தேவை. அவர்கள் யார் யார் என்று தீர்மானிப்பது உங்கள் பொறுப்பு.

    இப்போ ஆரம்பிக்கறத்துக்காக ஒரு சின்ன விளக்கம் தேவை.

    1. எழுத்தாளராய் கதை எழுதுவது ஒன்று.

    2. கதைசொல்லியாய் கதை சொல்வது வேறு ஒன்று.

    நீங்கள் மனம் போக்கில் கதை என்கிற பெயரில் உங்கள் பக்க நியாயம் தெரிகிற மாதிரி அடுக்கிக் கொண்டு வந்திருப்பதாகத் தெரிகிறது.

    இதெல்லாம் எடுபடாது. கதையை 'எழுதினால்' தான் எங்கெங்கு எதெல்லாம் இடிக்கும் என்று தெரியும். ஒரு சின்ன உரையாடலை இங்கொன்று அங்கொன்று என்று எடுத்தால் போதும். எதெது எது எதோடல்லாம் முரண் படும் என்று தெரியும்.

    நான் உங்களிடம் ஒரு 'எழுத்தாளராய்' ஒரு கதை எழுதி உங்கள் தரப்பு நியாயத்தை ஒரு கதையாய் சொல்லுங்கள். நாம் விவாதிக்கலாம் என்றேன்.

    நீங்களோ ஒரு கதைசொல்லியாய்
    'கதை' பண்ணியிருக்கிறீர்கள்.

    எழுதுகின்ற கதை என்றால் ஒருபக்க நியாயம் மட்டும் பேசினால் எடுபடாது. பாத்திரங்கள் எதிரும் புதிருமாக கருத்துக்களை அலசுவதை எழுதும் கதையில் செய்ய வேண்டும்.
    அதில் தான் அதைச் செய்ய முடியும்.
    அப்படியான கதையில் தான் அந்தக் கதையை எழுகின்ற எழுத்தாளரே எதிரும் புதிருமான கருத்துக்களை
    கதாபாத்திரங்கள் வாயிலாக சொல்லி கதையை நகர்த்த வழிவகுப்பார்.

    சொல்லும் கதையில் அப்படியில்லை. கதை சொல்லும் அந்த ஒற்றை நபரான கதைசொல்லி
    தன் பக்க உரையாக 'கதை கதையாம் காரணமாம்; காரணத்தில் ஓரணமாம்' என்று ஓற்றையடி பாதையில் ஒரே ஆளாய் போய்க் கொண்டிருக்கலாம்.

    உரையாடலில் கதையை நகர்த்திப் பாருங்கள். உண்மை தெரியும்.

    போகட்டும்.

    இந்தக் கதையில் அப்பா, அம்மா, அவர்கள் மகன், மருமகள், மருமகளின் அப்பா, அம்மா, அக்கம்பக்கத்தினர் என்று சிலர்.

    இவர்களைப் பாத்திரங்களாகக் கொண்டு நீங்கள் இரண்டு அத்தியாயங்களாக எழுதியுள்ள கதையையே இருபது அத்தியாயங்களுக்கு எழுதுகிறேன்.
    அப்பொழுது தான் எல்லா நியாயங்களையும் பட்டவர்த்தனமாக ஆன்றோர் சபையில் சமர்ப்பிக்க முடியும்.

    சம்மதமா, சொல்லுங்கள்....

    ReplyDelete
  20. ஜீவி சார், முதல்லே ஒரு விஷயத்தைத் தெளிவாக்கிடறேன். நான் "கதைசொல்லி" யே தான். அது என்னமோ இது கூடாது என்று நினைத்தாலும் இப்படித் தான் எழுதத் தோணுது! :)))) அதோடக் கதை முடிவின் கடைசியில் நானே சொல்லி இருக்கேன் பாருங்க,பின் குறிப்பிலே!



    //பி.கு. இன்னும் கொஞ்சம் சம்பவங்களைச் சேர்த்துக் கதையில் சம்பாஷணைகளைக் கூட்டி மெருகேற்றி இருக்கலாம்; செய்திருக்கணும் தான். ஆனால் நேரமின்மை, மேலும் கதைக் கரு மட்டுமே போதும் என்ற என் எண்ணம் என்பதாலும் போதும்னு நினைச்சேன்.//

    இது ஒரு தொடராகப் போயிடும் என்ற எண்ணத்தாலும் கருவை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும் என்ற எண்ணத்தாலும் வளர்த்தலை.

    அதே சமயம் ஶ்ரீராமை நானும் அழைச்சிருக்கேன். அப்பாதுரை மறைமுகமாகத் தானும் மாத்தி எழுத வேண்டும் என்னும் ஆவலைத் தெரிவித்திருக்கிறார்.

    ReplyDelete
  21. ஆக, ஆட்டத்துக்கு ஶ்ரீராமும் ரெடியாவார் என்றே நினைக்கிறேன்.

    //உங்கள் பக்கத்து வலுவான கை என்றாலும் சேர்த்துக் கொள்ளலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை:))//

    இங்கேதான் கொஞ்சம் யோசிக்கணும். ஒரு சின்ன சட்டுனு புரிஞ்சுக்க முடியாத நுணுக்கமான இடத்தில் அவரோடு நான் மாறுபடுவேன். அல்லது என்னோடு அவர் மாறுபடுவார். இதை அவரும் புரிஞ்சு வைச்சிருப்பார்.

    ReplyDelete
  22. உரையாடலில் கதையை நகர்த்தினால் அது போகிற போக்குக்கு அது இழுக்கிற இழுப்புக்கு நானும் போகணும். :))))

    சரி, இந்தக் கதை விஷயம், அதாவது மெயின் சப்ஜெக்ட் , மாமனார் , மாமியார் வரையில் அவங்க செய்தது தியாகம் என்பது உங்கள் கருத்து என்றால் அதை எவ்வாறு நியாயப்படுத்தி எழுதப் போறீங்கனு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன். எனக்கென்னமோ அவங்க செய்தது முட்டாள் தனமாகத் தான் இன்னமும் தோணுது. பிள்ளையும் மருமகளும் தனியா இருக்கணும்னா அதுக்கு எத்தனையோ சுலபமான வழி இருக்கப் பணம் செலவழித்துக்கொண்டு முதியோர் இல்லம் போய் மருமகளுக்குப் பழிச் சொல்லை வாங்கிக் கொடுக்கிறதில் தியாகம் எங்கிருந்து வந்தது?

    இந்த என் கேள்விக்குப் பதில் உங்க கதையில் கிடைக்குமானு பார்க்கிறேன். ஆரம்பிங்க!

    ரெடி, ஸ்டார்ட், ம்யூஜிக்! ஒன், டூ, த்ரீ! :))))))))))))))

    ReplyDelete
  23. கொஞ்ச நாளைக்குப் பதிவு போடாமல் கைகளைக் கட்டிக்கிறேன். :)))))

    ReplyDelete
  24. வாங்க வெங்கட், அதான் நானும் சொல்றேன். :)))) வைகோ சாருக்கும், ஜீவி சாருக்கும் ஒருமித்த கருத்து! :))))

    ReplyDelete
  25. ஶ்ரீராம், நாம் குழம்பிவிட்டுப் புராணங்களைக் குற்றம் சொல்லக் கூடாது. புராணங்களோ, இதிகாசங்களோ சொல்ல வரும் விஷயத்தைச் சரியான பார்வையில் பார்த்துச் சரியான பொருளில் புரிந்து கொண்டால் பிரச்னையே இல்லை. :)))))

    ReplyDelete
  26. //உங்கள் பக்கத்து வலுவான கை என்றாலும் சேர்த்துக் கொள்ளலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை:))//

    இங்கேதான் கொஞ்சம் யோசிக்கணும். ஒரு சின்ன சட்டுனு புரிஞ்சுக்க முடியாத நுணுக்கமான இடத்தில் அவரோடு நான் மாறுபடுவேன். அல்லது என்னோடு அவர் மாறுபடுவார். இதை அவரும் புரிஞ்சு வைச்சிருப்பார்.//

    இது அப்பாதுரையைக்குறித்து நான் சொன்னது. ஶ்ரீராமை இல்லை. பெயரைக் குறிப்பிடாமல் ஶ்ரீராம் ஒத்துப்பார் னு எழுதின உடனே இதுவும் வந்திருக்கிறபடியால் ஶ்ரீராமைத் தான் சொல்வதாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

    அப்பாதுரையோட பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இருந்தாலும் முக்கியமான பல விஷயங்களில் (!!!) அவரோடு மாறுபடுவேன். இந்தக் கதையைப் பொறுத்தமட்டில் அப்பாதுரையின் கருத்தில் எனக்கு உடன்பாடே! :))))

    ReplyDelete
  27. தாய், தந்தையை எங்கு சென்றாலும் சுமந்து செல்லும், தசரதனின் பிள்ளைச் சோக சாபத்துக்குக் காரணமான அந்தப் பிள்ளை(யின் பெயர் மறந்து விட்டது

    சிரவணன் கதை..

    காந்திஜி த வாழ்க்கைப்பாதையை வகுத்துக்கொண்ட கதைகளுள் ஒன்று.

    மற்றொன்று அரிச்சந்திரன் கதை..!

    ReplyDelete
  28. //மாமனார் , மாமியார் வரையில் அவங்க செய்தது தியாகம் என்பது உங்கள் கருத்து என்றால்//

    தியாகம் என்றெல்லாம் நான் சொல்ல வரலே; மகன்-மருமகள் மேல் அன்பு கொண்ட பெற்றோரின் --தாங்கள் இவர்களின் 'சந்தோஷ' வாழ்க்கைக்கு ஒருவிதத்தில் இடையூறாக இருக்கிறோமோ என்று நினைத்து-- 'சட்'டென்று எடுத்த இயல்பான நடவடிக்கை.

    ரொம்பவும் மலரப்போகிற கதையை விவரிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.

    //அதை எவ்வாறு நியாயப்படுத்தி//

    நியாயங்களுக்கு நியாயப்படுத்தல்கள் எல்லாம் வேண்டாம். அவை இயல்பாகவே தமக்கான நியாயங்களைத் தம்முள் கொண்டிருக்கும்.

    ReplyDelete
  29. ஹிஹிஹி, ஜீவி சார், நீங்க சொன்னாப்போல் ஆயிருக்கு. இன்னொரு பதிவும் போட்டாச்சு, ஆனால் அந்தக் கதையை ஒட்டித் தான். மாத்தி யோசிச்சேனா! உடனே எழுதணும்னு தோணி எழுதி பப்ளிஷும் பண்ணிட்டேன். :)))) அதையும் ஒரு பார்வை பார்த்துடுங்க! :))))

    ReplyDelete
  30. கொஞ்ச நாளைக்கு இந்தப் பக்கம் வராமல் இருக்க முயற்சி செய்யறேன். :)))

    ReplyDelete
  31. கொஞ்ச நாளைக்குப் பதிவு போடாமல் கைகளைக் கட்டிக்கிறேன். :))))). தாங்கீஸ்! தாங்கீஸ்! தாங்கீஸ்!

    ReplyDelete
  32. அட?? வா.தி. இங்கே வந்து சொல்லி இருக்கீங்களா? ஹிஹிஹி,கவனிக்கவே இல்லையே! தாங்கீஸா தாங்கீஸு! அப்புறம் சேர்த்து வைச்சுப் போடுவோமுல்ல! இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? :))))

    ReplyDelete

  33. எனக்கும் அந்த முதியவர்கள் செயலில் உடன்பாடு இல்லை. சிறிதுகாலம் கோவில் குளம், உறவினர் வீடு என்று போக வேண்டியது தானே. அதற்கு எதற்கு முதியோர் இல்லம் போக வேண்டும்?

    ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசுவதே நல்லது மனதில் வைத்துக் கொண்டு மறுகுவதை விட.

    புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல், சகிப்புதன்மை, குறைந்து வருக்கிறது, காது கொடுத்து கேட்க நேரம் வேறு இல்லை.

    //சுடு சொல் பொறுக்க மாட்டார்கள். அதுவும் தப்பே செய்யாமல் பழி சுமக்கறதுக்கு மனோபலம் நிறைய வேண்டும். அது இக்காலப் பெண்களில் பலரிடம் இல்லை.//

    நீங்கள் சொல்வது போல் சீக்கிரம் உணர்ச்சி வசபட்டு தவறான முடிவுக்கும் வந்து விடுகிறார்கள்.
    தன் பக்க நியாயத்தை சொல்ல மனோபலம் வேண்டும் தான்.

    ReplyDelete
  34. Nice post For Sharing to all and me. I Will also share with my
    friends. Great Content thanks a lot.

    https://www.biofact.in/2020/08/positive-thinking-short-stories-in-tamil.html

    ReplyDelete