எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, February 21, 2015

தாய்மொழிக்கு ஒரு தினம்!

தமிழ் மரபு அறக்கட்டளை

subashini tremmel க்கான பட முடிவு

The Hindu


இன்று உலகத் தாய்மொழி தினம் என யுனெஸ்கோ அறிவித்துள்ளது.  அதன்படி இன்று நாம் தமிழ்மொழியைச் சிறப்பாக வளர்க்க இனி தமிழிலேயே கூடியவரை பேசுவதையும் எழுதுவதையும் வழக்கப்படுத்திக் கொள்வோம்.  மேலுள்ள படத்தில் காணப்படும் சுபாஷிணி அவர்கள் தமிம் மரபு அறக்கட்டளையின் நிர்வாகிகளில் ஒருவர்.  தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் பிறந்து வளர்ந்ததெல்லாம் மலேசியாவில். தமிழ் மொழியின் மேலும், தமிழ்நாட்டின் மேலும் உள்ள தீராத பற்றின் காரணத்தால் தமிழ்மொழியின் பாரம்பரியக் கலைகள், சடங்குகள், இலக்கண, இலக்கியங்கள், பழைய ஓலைச்சுவடிகள் எனத் தேடித் தேடிக் கண்டெடுத்து அவற்றை ஆவணப்படுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் இவர் கால்படாத இடம் இல்லை எனலாம். அந்த அளவுக்குப் பல இடங்களுக்கும் சென்று தமிழின் தொன்மையை வெளிக்கொண்டு வர அரும்பாடு பட்டு வருகிறார். இதற்காகவே ஜெர்மனியில் வசிக்கும் இவர் வருடம் இருமுறையாவது தமிழ்நாட்டுக்கு வந்துவிடுகிறார். இவரைப் பற்றிய மற்றத் தகவல்களை ரஞ்சனி நாராயணன் அவர்கள் வலைச்சரத்தில் அளித்திருப்பதை அனைவரும் படித்திருக்கலாம்.

வலைச்சரத்தில் சுபாஷிணி

இனி நான் 2012 ஆம் வருடம் திரு இன்னம்பூராரின் பதிவு ஒன்றைப் பகிர்ந்து கொண்டேன்.  அதன் மீள் பதிவு கீழே!


உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்!
ஃபெப்ரவரி 21-ம் தேதியை யுனெஸ்கோ தாய்மொழி தினமாக அறிவித்து அதை ஐநா 2008-ஆம் வருடம் பிரகடனப் படுத்தியதன் தொடர்பாக மின் தமிழில் இன்னம்புரார் எழுதி இருந்த கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். தாய்மொழியின் முக்கியத்துவம் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளின் சிறப்பையும் அவற்றையும் மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் கூறியுள்ளார். தற்காலச் சூழ்நிலைக்குத் தேவையான பதிவு. அதோடு இந்தியாவிலேயே முதல் முதலாகத் தாய்மொழியை அரசு மொழியாக அறிவித்த ஒரே மாநிலம் குஜராத் தான். அந்த மாநில மக்கள் ஆங்கிலமும் பேசுவார்கள்; ஹிந்தியும் தெரியும்; இங்கே போல் அங்கேயும் தக்ஷிண் பாரத் ஹிந்தி ப்ரசார் சபா தான் ஹிந்தி தனித்தேர்வுகளை நடத்துகிறது. ஆனால் அம்மக்கள் தங்களுக்குள்ளாக குஜராத்தியில் தான் பேசிக்கொள்வார்கள். அது எவ்வளவு படித்தவர்களானாலும் குஜராத்தியில் பேச மறப்பதில்லை. இன்று இந்தியாவிலேயே தன்னிறைவு பெற்றதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சியிலும் முன்னணியில் இருக்கும் ஒரே மாநிலமும் குஜராத் தான். இனி இன்னம்புராரின் கருத்துகள். வழக்கத்தை விடப் பெரிய பதிவு.
******************************************************************************************



அன்றொருநாள்: ஃபெப்ரவரி 21

தாய்மொழி

தமிழ் என்னுடைய தாய்மொழி. இன்றைய தினம் தாய்மொழி தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. தமிழ் என்னை வரித்துக்கொண்டது ஒரு பெரும் பேறு. தமிழர்கள் யாவரும் தமிழ் விழா எடுக்க வேண்டும். இன்றைய தினத்தில் மட்டுமல்ல; தினந்தோறும், தமிழுக்காக கொஞ்சநேரம் செலவழிக்க வேண்டும். சிறிதளவாவது, தமிழ் இலக்கியங்களை படிப்பதில் செலவிடவேண்டும். சிறிதளவாவது இலக்கணம் அறியவேண்டும். நான் தமிழார்வத்தினால் உந்தப்பட்டு, சில வருடங்கள் முன்னால் சென்னை வந்த போது, வாரம்தோறும், ஆர்வலர்களை தருவித்து ஒரு தமிழ் வட்ட மேஜை இயக்க திட்டமிட்டேன். நடக்கவில்லை. பேட்டைக்கு ஒரு சங்கம் தமிழார்வத்தை பரப்ப வேண்டும். இது தலைவாசல்.

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. உவமை சற்றே மாறி அமைந்திருந்தாலும், உவகையை உணர்த்துகிறது என்று கருதுகிறேன். அவரவருக்கு அவரவருடைய அன்னை தெய்வம். ஆகவே, அவரவரின் தாய்மொழி பற்றை போற்றுவோமாக;மதிப்போமாக; ஊக்குவிப்போமாக. இது முதல் படி.

நமது தாய்மொழியின் தொன்மை, பெருமை, இலக்கிய மேன்மை, சுவை, கலையுடன் தொடர்பு, இறை தொண்டு, மொழி நுட்பங்கள், விமர்சனம், ஒப்புமை ஆகியவை பற்றியும், தொடர்ந்து வரும் பல கருத்துக்களையும் புரிந்துகொண்டு, மற்றவர்க்கு அறிவிப்பது நற்பயனை பயக்கும். அன்றாட அளவளாவுதல்,வட்டமேஜை, நூல்கள், சொற்பொழிவுகள், விழா எடுப்பது, இணைய தளம் எல்லாம் உதவும். அது இரண்டாவது படி.

அந்த கடமையை செவ்வனே செய்ய, நாம் நமது தாய்மொழியில் வல்லுனர் ஆகவேண்டும். அம்மை மடியில் அமர்ந்து பேசிய மழலையும், பள்ளிப்பாடங்களும், தேர்வில் பெற்ற மதிப்பீடுகளும், அன்றாட வாழ்க்கையில் கூடி வரும் பாமரகீர்த்திகளும், கிளை மொழிகளுக்கும், பேசும் மொழிக்கும், நாட்டுப்புற வரவுகளுக்கும் ஆதரவும், ஊக்கமும் அளிப்பதும், நாள் தவறாமல் தமிழிலும், மற்ற மொழிகளிலும் புதியவற்றை தேடி அறிந்து கொள்வதும்,இலக்கியம், இலக்கிய சுவை, இலக்கிய விமர்சனம், கருத்து பரிமாற்றம் ஆகியவை திறனைக்கூட்டும். மொழி ஒரு கருவி. ஓசையை அசைத்து, சொல் அமைத்து, அதன் பொருளை தெரிவிப்பது மட்டுமே மொழிக்கு இட்ட பணி என்றால், இலக்கியம் பிறக்காது; கற்பனை தோன்றாது. அது வெம்பிய பிஞ்சு. சார்லஸ் பெகு என்ற கவிஞர், ‘சொல்லின் தன்மை வேறுபடும். சில படைப்பாளிகள், தன் அடிவயிற்றில் இருந்து அதை எடுப்பார்கள்; சிலர் ஜோல்னா பையிலிருந்து...’ என்றார். இதை புரிந்துகொண்டால், தமிழன்னை நம்மை உவகை பொங்க வரவேற்பாள். இது மூன்றாவது படி.

சித்திரமும் கை பழக்கம். செந்தமிழும் நா பழக்கம். நமக்குள் தமிழ் பேசிக்கொள்வதற்கு தடை யாது? ஏன் சரமாரியாக, ஓட்டைக்கப்பலில் வந்து இறங்கி வந்தவன் போல, ஆங்கிலத்தில் பிளந்து கட்டுகிறோம்? தமிழ் வீடுகளில் தமிழில் பேசிக்கொள்வது தான் பண்பு, சிறார்களுக்கு முன்னுதாரணம். சில சமயம் ஆங்கிலத்தில் பேசுவது இங்கிதம். ஒரு மாநிலத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன்னாலேயே தாய்மொழியில் அரசு அருமையாக நடத்தப்பட்டு வந்தது. ஒரு சமயம் முதல்வர் என்னை குறிப்பிட்டு, ‘இவருக்கு நாம் பேசுவது, நுட்பங்கள் உள்பட, புரிந்தால் நமக்கு தான் நன்மை; ஆங்கிலத்தில் பேசுங்கள்’ என்றார். அந்த பெருந்தன்மை நமக்கும் வேண்டும். மற்றபடி தமிழுக்கு முதன்மை. திரு.வி.க. அவர்கள் மார்க்கபந்து. இது நான்காவது படி.

வடமொழி என்று முத்திரையிட்டு தமிழார்வலர்களில் பலரால் நிந்திக்கப்படும் சம்ஸ்க்ருதம், இந்தியாவின் நன்கொடை மனித இனத்திற்கே. ‘சம்ஸ்க்ருதம்’ என்ற சொல் ‘சிறப்பான அமைப்பு என்ற பொருள்படும் காரணப்பெயர். அம்மொழியை பழிப்பது ஒரு தாழ்வு மனப்பான்மை. தேவையே இல்லை. தமிழ் எந்த வகையிலும் வடமொழிக்குக் தாழ்ந்தது அன்று. அத்தகைய பாகுபாடு, மொழிகளுக்கு ஏற்புடையது இல்லை. இரு மொழிகளும் ஆயிரக்கணக்கான வருடங்களாக, நம் சமுதாயத்தின் இரு கண்களாயின. தமிழறிஞர்களில் பெரும்பாலோர் வடமொழியில் விற்பன்னர்களாக இருந்திருக்கின்றனர். வடமொழியை வரவேற்கும் மனநிலை நன்மை பயக்கும். கிரந்தம் பற்றி சர்ச்சை செய்த வண்ணம் இருக்கிறோம். கிரந்தம் பரவுவதற்கு நாம் எல்லாரும் உழைக்கவேண்டும். இது ஐந்தாம் படி.

ஆங்கிலம் உலகளாவிய பொது மொழி என்பதை யாவரும் அறிவர். ஆங்கிலம் கற்றுக்கொள்வதால் ஆதாயமே ஒழிய தீமை யாதும் இல்லை. ஆங்கில மோகம் வேண்டாம். ஆங்கில புலமை வேண்டும். இன்று உலகம் குறுகி விட்டது. ஆங்கிலம் தெரியாதவர்களால், திரைகடலோடியும் திரவியம் தேட இயலாது. திக்கு, திசை தெரியாமல் திண்டாடவேண்டும். மேலும், பலமொழிகளில் இருக்கும் இலக்கியம்,வரலாறு, எண்ணில் அடங்கா அறிவியல் தளங்களுக்கு ஆங்கிலம் திறவு கோல்.இந்தியாவில் ஹிந்தியை மதிப்பது நலம். ஆனால் தேசிய மொழி என்பதால் எழும் வெறியை முற்றும் தணிக்கவேண்டும். இந்த விவேகம் ஆறாவது படி.

அண்டை மாநில மொழிகளை நிந்திப்பது அறிவீனம். கேரள கதக்களியும் வேண்டும்; சுந்தரத்தெலுங்கும் வேண்டும்; மஸ்தி வெங்கடேச ஐயங்காரின் இலக்கியமும் வேண்டும். இயன்றவரை அண்டை மாநிலமொழிகளையும் ஓரளவு கற்றுக்கொள்வோம். இந்த மனித நேயம் நமது உறவுகளை உறுதிப்படுத்தும். ஏழு படி ஏறி விட்டோம்.

இன்றைய உலகில் ஐரோப்பிய மொழிகளுக்கு மவுசு ஜாஸ்தி. விஞ்ஞானம் படிக்க ஜெர்மானிய மொழி, கலையார்வத்திற்கு ஃபெரன்ச் என்பார்கள். எல்லா மொழிகளிலும் எல்லாம் இருக்கின்றன. எல்லாமும் இல்லை. தற்காலம் ஸ்பானிஷ் மொழி பரவிய வண்ணம் இருக்கிறது. தென் அமெரிக்கக்கண்டத்தில் அதற்குள்ள ஆளுமை தான் காரணம். இன்று தமிழ்நாட்டில் பலமொழிகளை கற்க வசதிகள் பெருகி உள்ளன. ஒரு காலத்தில் ஸ்பானிஷ் கற்றுக்கொள்ள வசதியே இல்லை. ஜெர்மானியத்துக்கு ஒரு இடம். ஃபெரன்ச் மொழிக்கு ஒரு இடம். அவ்வளவு தான். இருக்கும் வசதிகளை, தேவைக்கேற்ப, பயன் படுத்திக்கொள்வது சிலாக்கியம். எட்டாவது படியில் நாம்.

எட்டாவது படியிலிருந்து குனிந்து எட்டிப்பார்த்தால்...

யுனெஸ்கோ ஸ்தாபனம் ஃபெப்ரவரி 21ம் தேதியை தாய்மொழி விழா தினமாக,1999 ல் அறிவித்து, அதை ஐ.நா. 2008ல் பிரகடனப்படுத்தியதின் பின்னணி தெரியும்.

‘தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்...’ என்று நாம் பாடினால், ‘ஸோனார் பங்களா’ (‘பொன் விளைந்த களத்தூர்’) என்று தமது தேசாபிமானத்தை வெளிப்படுத்தும் பங்களா தேஷ் நாட்டில் 1952 லிருந்து இந்த விழா எடுக்கப்படுகிறது. பெங்காலி மொழியை ஒழிக்கும் அளவுக்கு பாகிஸ்தான் 1948லேயே தீவிரம் காட்ட, டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் கிளர்ச்சி செய்தனர்; சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்கா பல்கலைக்கழகத்தில் இவர்களுக்கு ஒரு நினைவு மண்டபம் இருப்பது சின்னம். நாடு இரண்டாகப்பிரிந்தது விளைவு. அந்த நினைவு மண்டபத்தில் இந்த தினத்தில் பத்து லக்ஷம் மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். 23 கோடி மக்கள் அந்த மொழி பேசுவதாக, ஒரு புள்ளி விவரம். வரலாற்று நோக்கில் பார்த்தால், பிரச்னை தோன்றியது,1905ம் வருடத்தில் கர்ஸான் பிரபு வங்காளத்தைத் துண்டித்தபோது. கொதித்தெழுந்தனர் மக்கள். துண்டுகள் இணைக்கப்பட்டன, 1911ல். தழும்பு நீங்கவில்லை. அது மறுபடியும், வேறு காரணங்களால் வெடித்துக்கொண்டது, 1947ல். எனினும் பாஷாபிமானம் வங்காளம் முழுதும் ஒன்றே.

மூன்று மாதங்கள் முன், நாவன்னா. காவன்னா, '...தமிழ் இலக்கியம் அறிந்தோர் அறிவியல் என்று வரும்
போது கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும்.அறிவியல் அறிந்தோர் தமிழில் அறிவியல் இல்லை என்று கருதும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்...' என்று சொன்னது சாலத்தகும். இந்த ஆலோசனை எல்லாத்துறைகளுக்கும் ஏற்புடையது. ஓஹோ! ஒன்பதாவது படி ஏறி, அதே எட்டில் பத்தாவது படி அடைந்தோம்.

அங்கிருந்து எட்டிப்பார்த்தால்...

இன்றைய செய்தி: லாட்வியா என்ற நாட்டில், மக்கள் ரெஃபெரண்டம் முறையில், ரஷ்ய மொழியை இரண்டாவது மொழியாக வைத்துக்கொள்ள திட்டவட்டமாக மறுத்து விட்டார்கள். இது பூதாகாரமான பிரச்னைகளுக்கு வித்திட்டிருக்கிறது. ஏனெனில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ரஷ்ய இனம். ரஷ்யா முரட்டு அண்ணாச்சி வேறே. ஆனால், அன்றொரு நாள், வலுக்கட்டாயமாக ரஷ்யர்களை எக்கச்சக்கமாக குடியேற்றம் செய்ததை லாட்வியர்கள் மறக்கவில்லை. தேசாபிமானம், மொழிப்பற்று, கலாச்சார வேர்கள், இறை வணக்கம் போன்றவற்றை, பண்புடன் கையாண்டால் தான், தாய்மொழி வளரும். நாமும் எட்டு படிகள் ஏறி எட்டிப்பார்க்கலாம். அத்துடன் மொழிகள் நசித்துப்போவதைத் தடுக்கலாம். ஆறாயிரம்/ஏழாயிரம் மொழிகள் அழியும் தருவாயில் உள்ளன. அந்தமான் தீவுகளில் ஒரு மொழி அண்மையில் நசித்தது. நாம் யாவரும், அவரவது வட்டாரமொழிகளை காப்பாற்ற வேண்டும். பழங்காலம் போல் இல்லாமல், ஒலியும், ஒளியும், இணைய தளத்தில் சக்கைப்போடு போடுகின்றன. வேறு என்ன வேண்டும், பராபரமே!

இன்னம்பூரான்

21 02 2012

9 comments:

  1. முதலில் தாய்மொழி என்பது எது என்று சந்தேகமறத் தெளிவு படுத்தப்படவேண்டும். தாய் மொழி பற்றிய சில சண்தேகங்கள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில் நாம் சொல்லவரும் தமிழ் தமிழ் என்பதெல்லாம் அர்த்தமற்றுப்போய் விடுகிறது. தாய் மொழி என்பது ஒரு அடையாளம் . அது எது என்று தெரியாதவர்கள் ஏராளம் உண்டு. தமிழ் அறிந்தோர் தமிழை நன்கு படித்து அறியட்டும். ஆனால் எது தாய்மொழி என்றே அறியாதவர்கள் என்ன செய்யவேண்டும்.சுட்டி தருகிறேன். நீங்களும் பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்
    gmbat1649.blogspot.in/2014/04/blog-post_5.html இன்னம்பூரார் என்ன சொல்கிறார். ?இவர்கள் ஏற வேண்டிய படிகள் எவை எவை.?

    ReplyDelete
    Replies
    1. பொதுவாகக் குழந்தையோடு தாய் பேசும் மொழியைத் தான் தாய்மொழினு சொல்வாங்கனு நினைக்கிறேன். அல்லது அவங்க இருக்கும் நாட்டின் மொழியாகவும் இருக்கலாம். எது தாய்மொழினு அறியாதவர்கள் இருக்க முடியாது. அமெரிக்காவில் இருக்கும் எங்கள் பேரக்குழந்தைகளின் தாய்மொழி ஆங்கிலமாகவே இருக்கும். :)))) அம்மா தமிழில் பேசினாலும் அவங்க சிந்திக்கும் மொழி ஆங்கிலம் தானே!

      Delete
    2. அவரவர் எந்த மொழியில் அதிகம் பேசுகின்றனரோ அதுவே அவர்களின் தாய்மொழியாக இருக்கும். :) பல ஊர்களுக்கு மாற்றலாகிச் சென்று தமிழ் பேச மட்டுமே அறிந்த எங்கள் குழந்தைகள் இன்றும் தமிழராகவே அடையாளம் காணப்படுகின்றனர். :)

      Delete
  2. ஒருவர் பேசும் மொழி அல்லது அவர் பெற்றோர் பேசும் மொழியை கொண்டு தாய் மொழியை நிர்ணயிக்க முடியாது.
    அவர் சிந்திக்கும் மொழி எதுவோ அதுவே தாய் மொழி என கருதலாம்.

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம் ஐயா. என் கருத்தும் கிட்டத்தட்ட அதுவே.

      Delete
  3. // தமிழ் அறிந்தோர் தமிழை நன்கு படித்து அறியட்டும். // ஐயா சொன்னதே சரி...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தமிழ் அறிந்தோர் பற்றி மட்டுமே இங்கு பேச்சு.

      Delete
  4. நல்ல கட்டுரை...

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete