எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, September 01, 2015

பத்மநாபபுரம் அரண்மனை! நான் கனவு கண்டு கொண்டிருந்த இடம்! :)

திருவட்டாறிலிருந்து கிளம்பும்போதே நாங்கள் கிளம்பும் தினம் குறித்து மீண்டும் மனசை மாற்றிக் கொண்ட ரங்க்ஸ் அங்கே கோயிலிலேயே ரயில்வே  இணைய முன்பதிவு அலுவலகம் ஏதேனும் இங்குள்ளதா என்று கேட்டனர். கடைத்தெருவில் இருப்பதாகச் சொன்னார்கள். கடைத்தெருனு பெரிசா ஒண்ணும் இல்லை.  அந்த ஊரின் முக்கிய ரஸ்தா அதுதான். அங்கே  இணைய முன்பதிவு அலுவலகம் இருந்த இடம் முக்கிய ரஸ்தாவில் ஒரு லேத் தொழிற்பட்டறைக்கு மாடியில் ஏதோ நிதி உதவி செய்யும் பிரபல அலுவலகம். பெயர் நினைவில் இல்லை. அவங்க தான் எல்லா பயணச் சீட்டு முன்பதிவுக்கும் முகவராக இருந்தாங்க. எங்களை  ஒரு ஓரமாக இருக்கச் சொல்லிட்டு வண்டி ஓட்டுநர் போய்ப் பார்த்துட்டு வந்தார். அந்த இடம் தான் அப்படினு தெரிந்ததும் இரண்டு பேரும் மேலே போனோம். அப்போது தத்கால் எனப்படும் உடனடிப் பயணச் சீட்டு வாங்கும் நேரம் முடிந்து சாதாரணச் சீட்டு வாங்கும் நேரமாக இருந்தது.  என்றாலும் பதினைந்து நிமிடம் இருப்பதால் முதலில் தத்காலில் பார்க்கச் சொன்னோம். கிடைக்கலை என்று சொன்னவர்கள் சற்று நேரத்திற்கெல்லாம் சாதாரணப் பயணச் சீட்டே மறுநாள் காலை குருவாயூரிலும், மாலை ஒரு வண்டிக்கும் கிடைப்பதாகச் சொன்னார்கள்.

குருவாயூர் என்றால் காலை ஐந்து மணிக்கே வண்டி. ஆகவே நாலரைக்கே கிளம்பணும். முடியுமா என்று சந்தேகமாக இருந்தது. ஆட்டோ கிடைக்கணுமே. ஆகவே மாலை வண்டிக்குப் பார்த்தோம். மூன்றாம் வகுப்பு குளிர் பெட்டியில் இடம் இருந்தது.  பக்கவாட்டு இருக்கைகள் வேண்டுமெனச் சொன்னோம். ஆனால் அப்படிக் கிடைக்கவில்லை. அவங்க வேறே ஒருத்தர் மூலமாக முயற்சி செய்ததால் அந்த முனையில் இருந்தவர்கள் சீனியர் சிடிசன் என்பதால் இரண்டுமே கீழ் இருக்கைகளாக வாங்கிக் கொடுத்துவிட்டனர். எல்லாம் முடியப் பனிரண்டரை மணி ஆகிவிட்டது. இனி நாங்கள் வெள்ளிக்கிழமைக்கு ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த பயணச் சீட்டை ரத்து செய்ய வேண்டும். மற்ற இடங்களைப் பார்க்க வேண்டும். அதற்குள்ளாக வண்டி ஓட்டுநருக்கு எங்களை நெடுநேரமாகக் காணாமல் தேடிக் கொண்டு வந்துவிட்டார்.

எல்லாம் முடிந்ததும் அங்கிருந்து கிளம்பினோம். இந்தக் குழப்பத்தில் திருவட்டாறிலிருந்து தொட்டிப்பாலம் போகவேண்டும் என்பதையே மறந்துவிட்டோம். அங்கிருந்து மிக அருகில் இருக்கிறது தொட்டிப்பாலம். அந்த நினைவே வரவில்லை. :( நேரே பத்மநாபபுரம் அரண்மனைக்கு விடச் சொன்னோம். அங்கே நேரம் ஆகும் என்று சொன்னார் ஓட்டுநர். மதிய உணவும் சாப்பிடவில்லை. ஆகவே சீக்கிரம் வந்துடுவோம்னு சொன்னோம். என்றாலும் இரண்டு மணி நேரம் ஆயிடும் என்றார். நேரே பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்திற்குச் சென்றோம். தமிழ்நாட்டில் இருந்தாலும் இது கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதைப்பராமரிக்கிறவர்கள் கேரளத் தொல்லியல் துறையினர். நாகர் கோயிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலைப்பாதையில் இது தக்கலை என்னும் ஊருக்கருகே அமைந்துள்ளது. பத்மநாபபுரம் சின்ன கிராமம். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வெள்ளிமலை என்னும் மலை அடிவாரத்தில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. கோட்டைச் சுவர் கருங்கற்களால் ஆனது.

கிட்டத்தட்ட ஏழு ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் இதை ஒரே அரண்மனை எனச் சொல்ல முடியவில்லை. பல அரண்மனைகள் உள்ளன. கி.பி. 1601--ஆம் ஆண்டு  ரவிவர்ம குலசேகரப் பெருமாள் என்பவரால்  இது கட்டப்பட்டது என்றாலும் முதல் முதலில் "தாய்க்கொட்டாரம்" என இப்போதும் அழைக்கப்படும் இடம் 1550 ஆண்டுகளிலேயே கட்டப்பட்டதாய்ச் சொல்கின்றனர். கேரள பாணிக் கட்டடக் கலை. வட மாநிலங்களின் ராஜாக்களின் பெரிய பெரிய அரண்மனைகளைப் பார்த்தவர்களுக்கு இது "ஜூஜுபி" தான். எளிமையான கட்டட அமைப்பு. மரவேலைப்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன. சின்னதாக இருந்து அவ்வப்போது ஆண்டு வந்த ஒவ்வொரு அரசர்களாலும் விரிவு படுத்திக் கட்டப்பட்டிருக்கிறது. நாங்கள் போனதுமே அனுமதிச் சீட்டு வாங்கினோம். அங்கிருந்த போலீஸ் அதிகாரி குறிப்பாக என்னை மட்டும், "உங்களால் மேலே ஏற முடியுமா?" என்று கேட்டார். முடியும்னு சொல்லிட்டேன்.

முகப்பைப் பூ முகப்பு என்கின்றார். அதன் வழியாக உள்ளே சென்றோம். கருங்கற்களால் ஆன தூண்களோடு இருபக்கமும் சின்னத் தாழ்வாரத்தோடு பிரம்மாண்டமான இரட்டைக் கதவுகள். இந்த அரண்மனை குறித்துப் பல புத்தகங்களில் படித்திருக்கிறேன். நீல.பத்மநாபன், ஜெயமோகன் போன்றோரும் ஒரு சில மலையாள எழுத்தாளர்களும் எழுதிய கதைகளில் இதைக் குறித்து வர்ணனைகள் வரும். அப்போதிலிருந்து இதைப் பார்க்க வேண்டும் என்னும் நீங்கா ஆவல் என் மனத்தில் இருந்து வந்தது. இப்போது நனவாகப் போகிறது என்று நினைத்தேன். உள்ளே போகையில் படிகள் இருந்தாலும் ஏறக் கஷ்டமாக இல்லை. அப்படியே எல்லா இடங்களிலும் இருக்கும்னு நினைத்தால்!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நுழைவாயில்

6 comments:

 1. எனக்குக் கூட இந்த அரண்மனையைப் பார்க்க வேண்டும் என்று. எப்போது வேளை வருமோ? பல மலையாளப் படங்களில் பார்த்திருக்கிறேன். சில இடங்கள் கேள்விப்படும் அளவிற்கு நேரில் போய்ப் பார்க்கும்போது நம்மை ஈர்ப்பதில்லை. உங்கள் அனுபவத்தைப் படிக்கக் காத்திருக்கிறேன். வீடியோ எதுவும் ஓடவில்லையே?

  ReplyDelete
 2. அழகான பயணக்கட்டுரை. நானும் இந்த அரண்மனைக்கு போயிருக்கிறேன். அந்த அனுபவத்தை பத்திரிகையில் எழுதியிருக்கிறேன். அங்கு எனக்கு மிகவும் பிடித்தது அவர்கள் அந்த அரண்மனையை அதன் பழமை மாறாமல் பராமரிப்பதும் மூன்று மொழிகளில் விளக்கம் கொடுப்பதும் அற்புதம். நமது தமிழ்நாட்டில் எந்த ஒரு பாரம்பரிய சின்னமும் இப்படி பராமரிக்கப் படவில்லை. இதை கேரள தொல்லியல் துறை நிர்வகிப்பதால் சாத்தியமாகிறது.
  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அம்மா!

  ReplyDelete
 3. நான் போக வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கும் இடம் குறித்துக் கொண்டேன் நன்றி விடயங்களுக்கு..

  ReplyDelete
 4. அரண்மனை விவரத்துக்குக் காத்திருக்கிறேன் கீதா. அழி போட்ட வராந்தாக்கள், ஜன்னல்கள் எல்லாம் படங்களில் பார்த்த நினைவு..

  ReplyDelete
 5. வித்தியாசமான கட்டடக்கலை - தமிழ்நாட்டுக் கட்டடக்கலையொடு ஒப்பிடும்போது. நான் பார்த்ததில்லை இந்த இடத்தை. தொடர்கிறேன்.

  ReplyDelete
 6. Arumai amma ... padmanabapuramla aanantha valiya partheengala? ? Saraswathy kovil poneengala

  ReplyDelete