எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 02, 2016

கண்ணை மறந்து சமையலில் கவனம்! :)


கண்ணிலே இருக்கும் பிரச்னை கூடவும் இல்லை; குறையவும் இல்லை. அவ்வப்போது வந்து எட்டிப் பார்க்கிறது. சில சமயங்களில் சரியாயிட்ட மாதிரி இருக்கும். ஆனால் அப்படி நினைத்த மறு கணமே சிலந்தி வலை தோன்றிவிடும். மற்றபடி வேறு பிரச்னை இல்லை. பார்க்கலாம். அதிக நேரம் இணையத்தில் செலவு செய்வது இல்லை. முடிந்தவரை கண்களை மூடி ஓய்வு கொடுக்கிறேன். புத்தகம், தினசரி படிப்பதை ஒரு மணி நேரம் மட்டுமே வைத்திருக்கேன். அதே போல் கணினியிலும் ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரையுமே! அதற்குள்ளாக என் மின் மடல் பெட்டியில் வந்திருக்கும் மடல்களைப் பார்ப்பது, மடல்கள் மூலம் பதிவுக்கு அழைத்தவர்களின் பதிவுகளைப் படிப்பது என்று செய்ய வேண்டும். ஆகவே எல்லோருடைய பதிவுகளுக்கும் போக முடியலை! மன்னிக்கவும். (இல்லாட்டி ரொம்பத் தான் போயிட்டிருந்தாப்போல! ) ஹிஹிஹி, அது என் ம.சா. இப்படித் தான் அவ்வப்போது வாய்ப்புக் கிடைச்சாக் கூவும்! :P :P கண்டுக்கிறதில்லைனு வைச்சிருக்கேன். 

இப்போ இந்தப் பதிவு எதுக்குன்னா இன்னிக்கு ஒரு புது வித உணவு தயாரிப்பில் ஈடுபட்டேன். மராத்திய உணவு. என்ன திடீர்னு கேட்கறீங்களா? இந்த மாசம் மங்கையர் மலர் மராத்திய உணவு சிறப்பிதழ் வெளியிட்டிருக்கா! நம்ம ரங்க்ஸ் அதிலேருந்து எதானும் பண்ணுனு உத்தரவு பிறப்பிச்சாச்சு. உடனே சிரமேற்கொண்டு செய்பவர்களாச்சே நாமெல்லாம். தாலிபீத் என்னும் கலவை ரொட்டியைத் தேர்ந்தெடுத்தேன் காலை உணவுக்காக. 

எனக்குத் தெரிஞ்சவரை தாலி பீத் தயாரிக்க கோதுமை மாவு, சோள மாவு அல்லது கம்பு மாவு அல்லது வெள்ளைச் சோள மாவு, அரிசி மாவு(தேவைப்பட்டால்) மற்றும் கட்டாயமாகக் கடலைமாவு போன்றவை தேவை! ஆனால் இதிலே கோதுமை மாவே குறிப்பிடவில்லை. அப்புறமாச் சோளம், கம்பு மாவுக்கெல்லாம் எங்கே போக! :) என்றாலும் இதில் சொன்னபடியே செய்துடலாம்னு ஒரு தீர்மானம் போட்டாச்சு! கோதுமை மாவெல்லாம் சேர்த்தால் சப்பாத்தி மாதிரிக்குழவியால் இட்டுக் கொள்ளலாம். ஆனால் இங்கே சொல்லி இருந்ததோ வெறும் அரிசி மாவும், கடலைமாவும் மட்டுமே! இனி மேலே பார்ப்போமா?

நான்கு பேர்கள் கொண்ட குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள். இது அந்தப் புத்தகத்தில் கொடுத்திருக்கும் பொருட்கள். சாமான்கள் அளவில் சிறிய மாற்றம் இருக்கலாம். 

அரிசிமாவு இரண்டு கிண்ணம்
கடலை மாவு இரண்டு கிண்ணம்
உளுந்தம் மாவு அரைக்கிண்ணம்
அவல் கால் கிண்ணம் போல் எடுத்து நன்கு ஊற வைக்கவும். 
உப்பு தேவையான அளவு
சேர்க்கவேண்டிய மசாலா சாமான்கள்
தனியாப் பொடி இரண்டு டீஸ்பூன்
மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
ஜீரகம்,ஓமம் வகைக்கு ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் காரத்துக்கு ஏற்ப 1 அல்லது 2 பொடியாக நறுக்கவும்
இஞ்சி ஒரு துண்டு துருவிக்கொள்ளவும் அல்லது பொடியாக நறுக்கவும்.
கொத்துமல்லித் தழை பொடியாக நறுக்கியது 3 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது. 
பிசையத் தேவையான நீர்
தோசைக்கல்லில் போட்டு எடுக்கத் தேவையான சமையல் எண்ணெய்/நெய்

எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தேவையான நீர் விட்டுப் பிசையவும். சற்று நேரம் ஊற வைத்துவிட்டுப் பின்னர் ஒரு வாழை இலை அல்லது ப்ளாஸ்டிக் ஷீட்டில் சாத்துக்குடி அளவு உருண்டையை எடுத்துக் கொண்டு நடுவில் வைத்து எண்ணெய் தொட்டுக் கொண்டு கைகளால் போளி தட்டுவது போல் தட்டவும். ஒரு சிலர் கைகளிலேயே தட்டுகிறார்கள். அடுப்பில் தோசைக்கல்லைக் காய வைத்துவிட்டுத் தட்டியதை அடுப்பில் போட்டு நடுவில் அடைக்கு ஓட்டை போடுவது போல் போட்டுச் சுற்றிலும் மற்றும் நடுவில் எண்ணெய்/நெய் ஊற்றவும். இரு பக்கமும் நன்கு வேக வேண்டும். வெந்ததும் ஊறுகாய்/தக்காளிச் சட்னி/தயிர் ஆகியவற்றுடன் சூடாகச் சாப்பிட வேண்டும்.
ஒன்று சாப்பிடும்போதே வயிறு நிறைந்து விடுகிறது. ஆகையால் குறைந்த பட்சமாக நான்கு பேராவது சாப்பிட இருந்தால் மட்டுமே இதைச் செய்யலாம் என்பது என் சொந்தக் கருத்து.  இதுவும் ஓகே தான். ஆனாலும் இதில் கோதுமை மாவு சேர்த்துத் தான் மஹாராஷ்டிராவில் செய்வார்கள். விரத நாட்களில் ஜவ்வரிசியை எட்டு மணி நேரம் ஊறவைத்து உருளைக்கிழங்கு, வேர்க்கடலைப் பொடி சேர்த்துக் கொண்டு வெங்காயம் போடாமல் மற்றச் சாமான்களைப் போட்டுச் செய்வார்கள். பொதுவாக இது கொஞ்சம் வயிற்றில் கனமாகவே இருக்கும். ஆகவே காலை உணவுக்கென்று வைத்துக் கொண்டாலும் ஜீரணம் ஆகும்படியான வேலைகளை அன்று வைத்துக் கொண்டால் நல்லது! :) இரவுக்கோ, மதிய உணவுக்கோ வேண்டவே வேண்டாம். தாலிபீத் செய்வதற்குக் கோதுமை மாவு, கம்பு அல்லது சோள மாவு சேர்த்துக் கடலைமாவோடு மற்றச் சாமான்களைப் போட்டுப் பிசைந்து ரொட்டி மாவு போல் வைத்துக் கொண்டு குழவியால் உருட்டிச் செய்யலாம். இதில் கொஞ்சம் மெலிதாக வரும். என்றாலும் வெங்காயம் ரொம்பப் பொடியாக இருந்தால் நல்லது. அல்லது ராஜ்கீர் எனப்படும் வட மாநிலங்களில் கிடைக்கும் கீரை, வெந்தயக்கீரை போன்றவற்றைப் போட்டும் செய்யலாம்.பிசைந்த மாவை வாழை இலையில் வைத்துத் தட்டி இருக்கேன். 


அடுப்பில் வேக விடும்போது எடுத்த படம். வெந்தது படம் எடுக்க மறந்துட்டேன். :) ஹிஹிஹி, வழக்கம் போல் படம் எடுக்க நினைவில்லை. பின்னர் நினைவு வந்தபோது செல்லிலேயே எடுத்தேன். புது செல்! ஆகையால் படம் நல்லா வரும்னு நினைச்சேன்! ம்ஹூம்! சொதப்புது! :) மெமரி கார்டு பழய செல்லோடது! அதனாலோ! :)

39 comments:

 1. கண்ணை மறந்து சமையாலா
  ஆஹா அருமை நட்பே....
  அனால் கண்ணில் கவனம்
  வையுங்கள்....
  செய்முறை விளக்கம் அருமை
  செய்யாமலே சாப்பிட்ட உணர்வு
  படங்களைப் பார்த்து...

  ReplyDelete
  Replies
  1. நன்றி அஜய்! கண்ணிலும் கவனம் வைத்திருக்கேன். :)

   Delete
 2. புதுசு. சனிக்கிழமை சமையல் பதிவா? ம்... நடத்துங்க.. நடத்துங்க... புது செல்? வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. அட? இப்படிக் கூட வைச்சுக்கலாமா? திங்கக் கிழமை திங்கற பதிவு மாதிரி சனிக்கிழமை சமையல்பதிவுனு! :) புது செல் வாங்கி ஆறு மாசமாச்சு. பிடிவாதமாப் பழசையே வைச்சுட்டு இருந்தேன். புதுசில் மெசேஜ் அனுப்புறதும் பிரச்னையா இருந்தது. இப்போவும் யு.எஸ்ஸுக்கு அனுப்ப முடியறதில்லை. பழைய செல் திடீர்னு உயிரை விடவே அதிலுள்ள சிம்கார்டைப் புதுசுக்கு மாத்தி இருக்கேன். நண்பர்கள் பட்டியலைச் சரியாச் சேர்க்க முடியலை. அது எப்படினு புரியலை! ஸ்மார்ட் ஃபோனோ, மற்ற அன்ட்ராயிட், ஆப்பிள் ஃபோனோ இல்லை! சாதாரண ஃபோன் தான். ஆனால் இதிலே தமிழ் ஃபான்ட்ஸ் இருப்பதால் தமிழ் எஸ் எம் எஸ் எல்லாம் படிக்க முடியுது! அனுப்பத் தெரியலை! :)

   Delete
  2. கொஞ்சம் கொஞ்சமாய்ப் புது செல்லில் கத்துண்டு இருக்கேன். மெசேஜ் கொடுக்க வருது. நம்பர்களைச் சேமிக்கவும் வருது! போட்டோ தான் ஏற்கெனவே எடுத்துப் போட்டுப் பார்த்தாச்சு! இன்னும் சிலது பாக்கி இருக்கு. சாவகாசமா உட்கார்ந்து செல்லைத் துருவணும்! :)

   Delete
 3. மெமரி கார்டு பழய செல்லோடது! அதனாலோ! :)// கடவுளே! :-))

  ReplyDelete
  Replies
  1. hehehe தம்பி, நான் ஒரு ம.மனு உங்களூக்குத் தெரிஞ்சது தானே! அதிலும் ஃபோட்டோ, சே போட்ட்டா விஷயத்திலே! போட்டாவே பிடிக்கத் தெரியாதுனும் தெரியுமே! :)))))

   Delete
 4. என்னதான் பிரச்சனை என்றாலும் வாயும் வயிறும் கேட்காதே

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், வாய் கேட்கலைனாலும் வயிறு கேட்பதில்லை. சாப்பிட்டாலும் படுத்தும்; சாப்பிடலைனாலும் படுத்தும். :)

   Delete
 5. புதுவகை (அடை) உணவு செய்முறை அருமை.

  ReplyDelete
  Replies
  1. கிட்டத்தட்ட அடை போலத் தான். ஆனால் மஹாராஷ்டிராவில் பயறு வகைகளோ, சிறு தானிய வகைகளோ சேர்ப்பார்கள். கோதுமை மாவு கட்டாயம் உண்டு! :)

   Delete
 6. உங்க பிரச்சினையே இத்தனை நாளா அழாமல் இருந்தது தான் காரணம் என்று தோன்றுகிறது. கொஞ்சம் மனம் விட்டு (நொந்து) நாலு சொட்டு கண்ணீர் விட்டுப்பாருங்க. அதுக்குன்னு மெகா சீரியல் பார்க்க சொல்லலை. சும்மாவேனும் மாமாவை இரண்டு தட்டு தட்டச்சொல்லி பாருங்கள். அல்லது 3 கிலோ சின்ன வெங்காயம் (கிலோ 25 ரூபாய் தான்) வாங்கி அழ அழ உரித்து வெங்காய வடாம் போடுங்கள்.

  சிவகங்கை சீமையில் நாட்டரசன் கோட்டையில் கண்ணுடைநாயகி (கண்ணாத்தாள்) கோவிலுக்கு வேண்டுமானால் சென்று வாருங்கள்.

  அல்லது சொட்டு மருந்து genticyn போதும்.

  மராட்டி உணவு என்கிறீர்கள் இது நம்ப ஊர் அடை அவியல் மாதிரி அல்லவா இருக்கிறது. பொதுவாக மராட்டிய பாரம்பரிய உணவுகள் அல்லாது fast food எனப்படும் பாவ் பாஜி, வடா பாவ், பானி பூரி, பேல் பூரி, தாஹி பூரி, டிக்கி, காக்ரா போன்றவை தான் விரும்பத்தக்கவை.

  இந்த comment பார்த்து அழுதீர்களா, சிரித்தீர்களா என்று பதில் இடவும்.

  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. இந்தக் கமென்ட் பார்த்துச் சிரிப்புத் தான் வந்தது; இப்போவும் வருது! அழுகை எல்லாம் நினைச்ச மாத்திரம் வந்து கொண்டிருந்தது ஒருகாலத்தில். எனக்கு மூலத்திற்கான அறுவை சிகிச்சை ஆகி இடுப்புக்குக் கீழே உணர்வு வந்ததும் ஏற்பட்ட வலி இருக்கு பாருங்க! இந்த ஜன்மத்தில் யாருக்கும் அது வேண்டாம்னு சொல்வேன். அப்போல்லாம் லேசர் சிகிச்சை எல்லாம் கிடையாது. நரம்புகளை வெட்டிப் பின்னர் சேர்த்துத் தைப்பது! கடவுளே! அதுக்கப்புறமா அழுகை என்பது சின்னச் சின்ன விஷயங்களில் வரதில்லை! :) மனம் நொந்து போயிருக்கும் சமயங்களில் கூடக் கண்ணீர் வரதில்லை. வெங்காய வடாம் போன வருஷம் போட்டேன். நம்ம ரங்க்ஸ் என்னோட அப்பாவுக்கு வாக்குக் கொடுத்திருக்கார்! "உங்க பொண்ணு கண்ணிலேருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வராதுனு!" ஆகவே ஒரு கிலோ வெங்காயம்னாக் கூட அவரே உரிச்சு நறுக்குவார். சின்ன வெங்காயம்னா அவர் உரிச்சு வைப்பார். நான் நறுக்கிப்பேன்.

   அப்புறமா ஒரு விஷயம், இங்கே திருச்சி, ஶ்ரீரங்கத்தில் சின்ன, பெரிய வெங்காயம் இரண்டுமே கிலோ 16 ரூபாய் தான். :)

   Delete
  2. இது நிச்சயமா மராட்டி உணவு தான் அண்ணா! மராட்டிக்காரங்க செய்து சாப்பிட்டிருக்கேன். சுவையில் மாறுபாடு உண்டு! :) அவங்க பூண்டு சேர்ப்பாங்கனு நினைக்கிறேன்.

   Delete
 7. செய்து பார்க்கிறேன்! :) படமும் எடுத்துப் போடுகிறேன்! :))))

  ReplyDelete
  Replies
  1. செய்ங்க, செய்ங்க! நீங்க செய்யலைனாத் தான் அதிசயம்! உசல் கூடப் பண்ணிப் பாருங்க! :)

   Delete
 8. புது விதமான ரெசிபி. சுலபமாகவும் தெரிகிறது. செய்து பார்த்து விட வேண்டியது தான்.

  ReplyDelete
  Replies
  1. நான் எப்போவோ சாப்பிட்டது! ஜாஸ்தி செய்யலை! இப்போத் தான் செய்திருக்கேன். என்ன ஒரு கஷ்டம்னா ஒன்று சாப்பிடும்போதே வயிறு நிறைந்து விட்டது. ஆகவே மாவு பிசையும்போது கவனமாகப் பிசையணும்! :)

   Delete
 9. Replies
  1. புரியலையே ரேவதி என்ன கேட்கறீங்க???????

   Delete
 10. கடலை மாவு,அரிசிமானவு .ம்ம் நல்ல யோசனைதான். நாத்தனார் கோதுமையும் சேர்த்ததாக நினைவு,. அவர்கள் பம்பாடயில் வசித்தவர்கள் வட இந்திய சமையல் நிறையத் தெரியும்.. இதை இன்றோ நாளையோ செய்கிறேன். மிக நன்றி கீதா. படம் நல்லாதான் வந்திருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், கோதுமை மாவு உண்டு! ஆனால் மங்கையர்மலரில் அரிசி மாவு, கடலை மாவு உளுத்தம் மாவு தான் போட்டிருக்கு! ஆகையால் அப்படியும் செய்து பார்க்கலாமே எனச் செய்தேன். :)

   Delete
 11. கடலை மாவு,அரிசிமானவு .ம்ம் நல்ல யோசனைதான். நாத்தனார் கோதுமையும் சேர்த்ததாக நினைவு,. அவர்கள் பம்பாடயில் வசித்தவர்கள் வட இந்திய சமையல் நிறையத் தெரியும்.. இதை இன்றோ நாளையோ செய்கிறேன். மிக நன்றி கீதா. படம் நல்லாதான் வந்திருக்கு.

  ReplyDelete
  Replies
  1. தோசை மாவு மாதிரிக் கரைச்சு ஊத்தி இருக்கலாமோனு நினைக்கிறேன், இப்போ! :)

   Delete
 12. சகோ...நீங்கள் சொல்லியிருப்பது போலத்தானே தாலிபீத் ரெசிப்பி...நான் செய்வது...இதுவும் தாலிபீத் ஆ? வித்தியாசமாக இருக்கிறது. கிட்டத்தட்ட கடலைமா தோசை போல...என்ன தட்டச் சொல்லியிருக்கிறார். செய்துபார்த்துடலாம்..

  அதெல்லாம் சரி கண்ணை "கண்ணாய்" பார்த்துக் கொள்ளுங்கள். அது ரொம்ப முக்கியமாச்சே எங்களோட எல்லாம் உறவாட...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இது தாலி பீத் என்னும் தலைப்பில் மங்கையர் மலரில் வந்திருக்கு!கரைச்சும் வார்க்கலாமோனு தோணுது! ம்ம்ம்ம்ம்ம், கண்ணைக் கண்ணாய்த் தான் பார்த்துக்கிறேன். :)

   Delete
 13. பரவாயில்லையே அரங்கன் காத்தாட அப்பாயின்ட்மென்ட் கொடுத்துருக்காரே!!!

  ReplyDelete
  Replies
  1. சில சமயங்களில் அரங்கன் இப்படித் தான் காத்தாட உட்கார்ந்திருப்பார். :)

   Delete
 14. அரங்கன் கொடுத்துட்டார்... சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கணும் என்பது போல் கமென்ட் போட செக்யூரிட்டி செக் செய்கிறது நான் ரோபோ இல்லைனு சொல்லச் சொல்லி...உங்கள் தளம் மட்டுமில்லை பலர் தளங்களிலும்....

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா என்னோட வலைப்பக்கம் என்னிடமே கேட்கும் நீ யார்னு! :)

   Delete
 15. முன்பு இட்ட என் பின்னூட்டம் என்னாயிற்று

  ReplyDelete
  Replies
  1. G.M Balasubramaniam02 April, 2016
   என்னதான் பிரச்சனை என்றாலும் வாயும் வயிறும் கேட்காதே

   ReplyDelete
   Replies

   Geetha Sambasivam04 April, 2016
   ஆமாம், வாய் கேட்கலைனாலும் வயிறு கேட்பதில்லை. சாப்பிட்டாலும் படுத்தும்; சாப்பிடலைனாலும் படுத்தும். :)//

   பதில் கொடுத்திருக்கேன் ஐயா! நன்றாகப் பாருங்கள், கொடுத்த பதிலை காப்பி, பேஸ்ட் செய்து இங்கே போட்டிருக்கேன். :)

   Delete
 16. Replies
  1. ஒரு வகையிலே அப்படியும் சொல்லலாம் அப்பாதுரை! நீண்ட மௌனம் கலைந்ததுக்கு நன்றி. :)

   Delete
 17. பாக்குறதுக்கு ஜோரா இருக்குங்க.

  ReplyDelete
  Replies
  1. சாப்பிடவும் ஜோராத் தான் இருந்தது. ஒண்ணே ஒண்ணு பண்ணி ரெண்டு பேருமாப் பகிர்ந்திருக்கணும். அது முதல்லே தெரியலை! :)

   Delete
 18. புது செல் னாலதான் படம் சரியா வரலையா? அப்ப சரி.... படத்தைப் பார்த்ததும் வெங்காய ஊத்தாப்பம் மாதிரி தெரிந்தது, என் கண்களை அலம்பாததனால இருக்கும். ஹா ஹா

  ReplyDelete
 19. பார்க்கப் பிடித்திருக்கு (தற்போதைய படங்களைப் பார்த்த பிறகு). ஒரு நாள் செய்யச் சொல்லுகிறேன்.

  ஆனா இதெல்லாம் நம்ம ஊர் உணவு இல்லை. ரொம்ப வாட்டி டிரை ஆனா, பயணத்தின்போது எடுத்துச் செல்லலாமோ?

  ReplyDelete
 20. அது சரி, மறந்து போகாதா என்ன?  பெயர் நினைவில் நிற்க மாட்டேன் என்கிறது!!!

  ReplyDelete