எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 29, 2016

ரவாதோசைக்கான செய்முறை!

ரவா தோசை பொதுவான செய்முறை சுமார் ஆறு பேருக்கு

இரண்டு கிண்ணம் ரவை

ஒன்றரைக்கிண்ணம் அரிசி மாவு

கால் கிண்ணம் மைதா அல்லது கோதுமை மாவு( நான்கோதுமை மாவே பயன்படுத்துகிறேன்.)
இரண்டு டேபிள் ஸ்பூன் உளுத்தமாவு(உளுத்தம்பருப்பை மிஷினில் கொடுத்துத் திரித்து வைத்துக் கொள்ளவேண்டும். இம்மாதிரிக் கரைத்த தோசைகளுக்கு உளுத்தமாவு சேர்த்தால் தோசை விள்ளாமல் விரியாமல் நன்றாக வரும்.)

புளித்த மோர் ஒரு கிண்ணம்

உப்பு தேவையான அளவு

பச்சை மிளகாய்  2 பொடியாக நறுக்கவும்
இஞ்சி ஒரு துண்டு பொடியாக நறுக்கவும்

அரை டீஸ்பூன் மிளகு(ஒன்றிரண்டாக உடைத்துப் போட்டால் பிடிக்குமெனில் அப்படிப் போடலாம். அல்லது முழுசாகப் போடலாம்.)
ஜீரகம் இரண்டு டீஸ்பூன்(ஜீரகம் நிறையப் போட்டால் தோசை வாசனையாக இருக்கும்.)

கொத்துமல்லி, கருகப்பிலை ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கிச் சேர்க்கணும்.

மாவுகளை ஒன்றாகச் சேர்த்துக் கொண்டு உப்பு, புளித்த மோர் விட்டு நன்கு கலக்கவும். கரண்டியால் கலக்கினால் சரியாக வரவில்லை என்று நினைப்பவர்கள் மிக்சி பெரிய ஜாரில் போட்டு மோரை விட்டு ஒரு சுற்றுச் சுற்றவும். ரொம்பக் கெட்டியாகத் தான் வரும். ஆகவே அப்புறமாக ஒரு கிண்ணம் நீரை விட்டுச் சுற்றவும். கொஞ்சம் தோசை மாவு பதத்துக்கு வரும். வந்ததும் மிக்சியை விட்டு வெளியே எடுத்துப் பாத்திரத்தில் ஊற்றி ஜாரில் இன்னும் கொஞ்சம் நீரை விட்டுச் சுற்றி நன்கு அலம்பி எடுத்து கரைத்த மாவில் சேர்க்கவும். மாவு ரொம்பவே கெட்டியாக இருக்கக் கூடாது. ரொம்ப நீர்க்கவும் இருக்கக் கூடாது. தூக்கி ஊற்றினால் மெலிதாக தோசை வரணும். அது பழகப் பழகத் தான் வரும்.

இப்போது அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளிக்கவும். தாளிப்பிலேயே பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கொஞ்சம் வதக்கிக் கொண்டு கரைத்த மாவில் கொட்டவும். உடைத்த மிளகு, ஜீரகம் சேர்த்துக் கொண்டு கொத்துமல்லி, கருகப்பிலை போட்டுவிட்டு சுமார் 20 நிமிடம் வைக்கவும். ரவை ரொம்பவும் ஊறி விட்டால் தோசை செய்யும்போது சுருட்டிக் கொள்ளும். ஆகவே கவனமாக அரைமணிக்குள் தோசையை வார்க்க ஆரம்பிக்கவும். மாவு முதல் தோசைக்கு விடும்போதே மாவின் தன்மை புரிந்து விடும். அதற்கேற்பத் தேவையான நீர் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது அப்படியே வார்க்கலாம். தொட்டுக்க சாம்பார், சட்னி எதுவானாலும்  சரிதான்!

மேற்கண்ட அளவில் ஒருத்தருக்கு இரண்டு தோசை என்னும் கணக்கில் ஆறுபேருக்கு மேலும் சாப்பிடலாம். மற்றபடி ஒரு குடும்பத்துக்கு நான்கிலிருந்து ஐந்து பேருக்குள்ளாக இருக்கும் குடும்பத்திற்கு இந்த அளவில் மாவு கரைத்தால் சரியாக இருக்கும். இரண்டு கிண்ணம் ரவையும் ஊறிக்கொண்டு மாவு நிறையவே வரும்! ஆகவே கவனமாக எடுத்துக்கொள்ளவும். பொடி ரவை எனில் அதிகம் ஊற வைக்க வேண்டாம். பெரிய ரவை எனில் அரை மணி நேரம் ஊறணும். இதெல்லாம் அனுபவத்தில் தான் புரியும்.

சில சின்னச் சின்ன டிப்ஸ்கள்: இட்லி மாவு மீந்து போனால் அதில் ரவையும் கோதுமை அல்லது மைதா மாவு சேர்த்துக் கொண்டு தோசை வார்க்கலாம். இது நல்ல மெலிதாக நன்றாக வார்க்க வருவதோடு எடுக்கவும் வசதியாக இருக்கும்.

அல்லது அரைக்கிண்ணம் அரிசியைக் கால்கிண்ணம் உளுந்தோடு ஊற வைத்துக் கொண்டு நன்கு நைசாக அரைத்து உப்புப் போட்டுப் புளிக்க வைக்கவும். மாலை ரவாதோசை எனில் காலை அரைத்து வைக்கலாம். தேவையானால் புளித்த மோர் சேர்க்கலாம். இந்த மாவோடு ரவை+கோதுமை அல்லது மைதா சேர்த்து தோசை வார்க்கலாம்.

அல்லது ஒரு கிலோ பச்சரிசியோடு கால் கிலோ உளுந்து சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். இந்த மாவை ரவாதோசைக்கு அரிசி மாவு போடும்போது அதே அளவில் போட்டுக்கலாம். தனியாக உளுத்தமாவு சேர்க்க வேண்டாம். இந்த மாவின் பிற பயன்கள் பஜ்ஜி, பக்கோடா செய்கையில் இந்த மாவைப் பயன்படுத்திக்கலாம். அல்லது அப்படியே இந்த மாவில் தேன்குழல் செய்யலாம். கடலை மாவு வறுத்துச் சேர்த்து ஓட்டு பக்கோடா அல்லது முள்ளுத் தேன்குழல் செய்யலாம். ஆகவே இந்த மாவு கைவசம் இருப்பது நல்லது. மற்றக் கரைத்த தோசைகளுக்கும் பயன்படுத்திக்கலாமே!

இணையத்தில் ரவாதோசை படம் தேடினால் என்னுடையதே நல்லா இருக்குனு நினைக்கும்படி மோசமான படங்களா இருந்தன. அதனால் எடுக்கலை. படம் வேணும்னா நேத்திப் பதிவப் போய்ப் பாருங்க! :)  தம்பி நல்லா இல்லைனாரேனு இன்னிக்கும் அதையே போடவேண்டாம்னு போடலை! :)


22 comments:

 1. செய்முறைகள் சரிதான் இதன் படியே செய்து பார்க்கிறோம் நன்றி ஆனால் வீட்டில் ஏழு பேர் இருந்தால் அந்த ஒரு ஆளை ஹோட்டலுக்கு சாப்பிட அனுப்ப வேண்டுமோ..... ?
  சின்ன சந்தேகம் அதனால் கேட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, ஏழு பேர் இருந்தால் மத்த ஆறு பேரும் ஆளுக்கு ஒரு தோசையைத் தியாகம் செய்யுங்க! ஏழாவது நபருக்காக! :)

   Delete
 2. ஆஹா செய்முறை விளக்கமே
  இவ்ளோ டேஸ்ட்டா

  செய்து சாப்பிட்டால் அருமையா
  இருக்கும் போலையே...

  ReplyDelete
  Replies
  1. செய்து சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க!

   Delete
  2. சகோ இப்போதுதான் உங்கள் பதிவில்
   செய்முறைகளைப் பார்த்து ரவா தோசை
   நானே சமைத்தேன் பிரமாதம் போங்க...
   புது சுவை நாவில் பட்டதும் ஆனந்தமே...

   Delete
 3. ஒருத்தருக்கு இரண்டு தோசை என்னும் கணக்கில் ஆறுபேருக்கு மேலும் சாப்பிடலாம்...//

  அது எப்படி ?
  1984 ம் வருஷம்
  ரவா தோசைக்கு மோர்குழம்பூ தொட்டுக்க ஒரு தரம், தஞ்சை மங்களாம்பிகா ஹோட்டல் லே சர்வ் செஞ்சப்போ என் பிரண்டு பேரு சுப்பிரமணியன் பெரிய ஆடிட்டர், 15 தோசை சாப்பிட்டார்.

  எனக்கு 2 க்கு மேலே சாப்பிட கூச்சமாக இருந்தது. போதும் என்று சொல்லி விட்டேன்.

  ஆசையே அலை போலே நாக்கு இருக்கிறதே நாலும் கேட்கும்.

  அது சரி.
  ரவா தோசைக்கு எண்ணை நல்லெண்ணை யா அல்லது தேங்காய் எண்ணையா ?

  தொட்டுக்க கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி தான் .

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. ரவாதோசைக்கு மோர்க்குழம்பா? கிழிஞ்சது போங்க! நாங்கல்லாம் சேவைக்குத் தான் மோர்க்குழம்பு பண்ணித் தொட்டுப்போம். ரவாதோசைன்னா வெங்காயச் சட்னி, கொத்துமல்லி சட்னி, கொத்துமல்லி+தக்காளிச் சட்னி, தேங்காய்ச் சட்னி, சாம்பார் போன்றவை தான்! :) ரவாதோசைக்கு மட்டுமில்லாமல் நான் சமையலுக்குப் பயன்படுத்துவதே நல்லெண்ணெய் தான். எப்போவானும் அடைக்குத் தேங்காய் எண்ணெயைக் காட்டுவேன். :)

   Delete
  2. ரவா தோசைக்கு மோர்க்குழம்பு ருசியாக இருக்கும். கார மோர்க்குழம்பு என்று திருநெல்வேலிப் பக்கம் செய்வார்கள் - இன்னும் டாப்பு.

   Delete
  3. ரவா தோசைக்கு சட்னி அத்தனை ஒத்துவரவில்லை. நான் சாம்பார், அவியல், மோர்க்குழம்பு கட்சி.

   Delete
  4. ரவா தோசைக்கு மோர்க்குழம்பு நான் கேள்விப்பட்டதேயில்லை! ஹிஹிஹி... மங்களாம்பிகாவில் நானும் சாப்பிட்டிருக்கேன். மங்களாம்பிகா தாண்டி ராஜா கலையரங்கம் தியேட்டர் செல்லும் வழியில் இருப்பது அசோகா ஹோட்டல் என்று நினைவு. அங்கும் சாப்பிட்டிருக்கேன். அப்புறம், ரயிலடி அருகிலிருந்த நியூ பத்மா, மற்றும் ஆனந்த் பவன்!

   Delete
  5. பதினைந்து ரவா தோசை என்ன சாதா தோசையே சாப்பிடுவது கஷ்டம் சு.தா. உங்க நண்பர் பீமனுக்கு அண்ணாவா இருந்திருக்கணும். :) ரவையில் செய்த பொருட்களே வயிற்றில் போய் ஊறிக் கொள்ளும் என்பதால் குறைந்த அளவே சாப்பிடுவது தான் நல்லது. பொதுவாக ரவாதோசை நல்ல பெரிசாக வேறே இருக்கும் ஆனதால் 2 தோசைக்கு மேல் சாப்பிட்டால் அதிசயம், ஆச்சரியம்! :) சின்னச் சின்னதாய் இருந்தால் நாலைந்து சாப்பிடலாம்.

   Delete
  6. ம்ம்ம்ம்ம் திருநெல்வேலிப்பக்கக் கார மோர்க்குழம்பு நானும் சாப்பிட்டிருக்கேன். என்னோட நாலு மாமிகள், என் தம்பி மனைவி ஆகியோர் கல்லிடைக்குறிச்சி, பத்தமடை, கடையம் ஊர்களைச் சேர்ந்தவங்க! ஆகையால் திருநெல்வேலி சமையல் பழக்கம் தான். ஆனாலும் ரவாதோசைக்கு மோர்க்குழம்பு! ம்ஹூம்! :)

   Delete
  7. சாம்பார் ஓகே அப்பாதுரை! அவியல் எல்லாம் அடைக்குத் தான்! :)

   Delete
  8. கும்பகோணம் மங்களாம்பிகாவில் தான் நிறையச் சாப்பிட்டிருக்கேன். இப்போ இடத்தை மாத்தினப்புறமா நல்லா இல்லை! :( அதோடு பெரியவரும் போய்ச் சேர்ந்துட்டார். :(

   Delete
 4. குருவாயூர் கோவிலிலிருந்து திரும்பும் போது சரியான பசி. பக்கத்தில் ஒரு கடையில் சுடச்சுட பொங்கல் ரவா தோசை. ரவா தோசைக்கு தொட்டுக்க அவியல். முதல் அனுபவம். நான் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்து என் அம்மா பயந்து போய் மறுபடி கோவிலுக்குள் ஓடிவிட்டார்கள் என்னவோ ஏதோ என்று.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹாஹா! அவியலா தொட்டுக்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சாம்பாரோ, சட்னியோ இருந்தால் நல்லா இருந்திருக்கும். :)

   Delete
 5. //மாவு ரொம்பவே கெட்டியாக இருக்கக் கூடாது. ரொம்ப நீர்க்கவும் இருக்கக் கூடாது.//

  இந்த வரிகள்தான் புதியவர்களைக் குழப்பும்! நாங்கள் செய்கிறோம்தான். நன்றாகவே அல்லது சுமாராகவே வருகிறது! இஹுவரை உளுந்து மாவு சேர்த்ததில்லை.


  // ஒருத்தருக்கு இரண்டு தோசை என்னும் கணக்கில்//

  ஐ... அது எப்படி நீங்கள் சொல்லலாம்? நாங்கள் எல்லாம் ஆறேழு சாப்பிடுவோமாக்கும்!

  கடைசியாகக் கொடுத்திருக்கும் டிப்ஸ்கள் பிரமாதம்.

  ReplyDelete
  Replies
  1. //மாவு ரொம்பவே கெட்டியாக இருக்கக் கூடாது. ரொம்ப நீர்க்கவும் இருக்கக் கூடாது.//

   யோசிக்கிறேன், இதை எப்படி விளக்குவது என்று.:) உளுந்து மாவு சேர்த்தால் தோசை நடு நடுவில் பிய்ந்தது போல் காட்சி அளிக்காது! ஆறேழு சாப்பிடுவது எனில் தோசை சின்னதாக இருக்கும். :)

   Delete
 6. பதிவே தோசை சாப்பிட்ட திருப்தியைக் கொடுத்துவிட்டது கீதா. குட்டி டிப்ஸ் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரேவதி! இதற்குப் பார்வையாளர்கள் எகிறிட்டாங்க! :) மொக்கையே வாசகர் விருப்பம் போல!

   Delete
  2. அல்லது எனக்கு மொக்கைதான் எழுத வரும்னு நினைக்கிறாங்க போல! :)

   Delete
  3. மொக்கையே வாசகர் விருப்பம் போல! அல்லது எனக்கு மொக்கைதான் எழுத வரும்னு/ நினைக்கிறாங்க போல! :)ஹஹஹா

   Delete