https://sivamgss.blogspot.com/2019/12/blog-post.html இங்கே சொல்லி இருக்கேன், மைத்துனர் உடல் நலம் குறித்து. நவம்பரில் கீழே விழுந்ததில் அறுவை சிகிச்சை நடந்தது. இந்தச் சிகிச்சை முடிந்து ஜனவரி மாதம் தில்லி சென்று ஒரு வார ஓய்வுக்குப் பின்னர் வேலைக்குச் சென்றவர் அதன் பிறகும் 2,3 முறை கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று காலை வழக்கம் போல் வேலைக்குச் சென்றிருக்கிறார். அங்கே காலை வேலைகள் எல்லாம் வழக்கம்போல் முடிந்து மதியம் உணவும் சாப்பிட்டுவிட்டுப்பின்னர் வீட்டில் இருந்த தன் சகோதரிக்கு அழைத்து வழக்கம்போல் பேசி இருக்கிறார். நண்பர்கள் சிலருடனும் வாட்சப்பில் செய்தித் தொடர்பில் இருந்திருக்கிறார். அதன் பின்னர் கொஞ்சம் ஓய்வு எடுக்கும் வழக்கத்தில் அப்படியே தூங்கி இருக்கிறார். அலுவலக ஊழியர்களுக்கு இது தெரியும் என்பதால் யாரும் வந்து தொந்திரவு செய்யவில்லை.
3 மணிக்கு வழக்கமாகத் தேநீர் எடுத்து வரும் அலுவலக ஊழியர் தேநீர் எடுத்து வந்திருக்கிறார். உள்ளே வந்து பார்த்தவர் நாற்காலியில் ஆளைக் காணோமே எனத் திகைப்புடன் சுற்றிப் பார்த்ததில் நாற்காலியில் இருந்து அப்படியே இடது பக்கமாகச் சரிந்து விழுந்து இருக்கும் கணேஷைப் பார்த்திருக்கிறார். மூக்கில் இருந்து ரத்தக்கசிவு தெரியவே உடனே வெளியே சென்று அனைவரையும் அழைத்திருக்கிறார். அனைவரும் வந்து அந்த வளாகத்திலேயே இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கேயே சொல்லிவிட்டார்களாம் இனி பலன் இல்லை என. என்றாலும் அங்கே இருந்த அரசு மருத்துவமனையான சஃப்தர்ஜங் மருத்துவமனையில் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். அங்கேயும் பார்த்ததுமே உயிர் போய் அரைமணிக்கும் மேல் ஆகிவிட்டது எனச் சொல்லிவிட்டு உடனடியாக உடலை எடுத்துச் செல்ல உறவினர் யாரும் இல்லை என்பதால் சவக்கிடங்கில் உடலை வைத்துவிட்டார்கள்.
பின்னர் எப்படியோ எங்களைத் தொடர்பு கொண்டு உடனே கிளம்பி வரும்படி கூறினார்கள். நாங்கள் ஸ்ரீரங்கத்தில் இருப்பதால் உடனே கிளம்பினாலும் அடுத்த விமானத்தைப் பிடித்து தில்லி வந்து சேர இரவு 12 மணியாவது ஆகிவிடும் என்று சொல்லிவிட்டு, இன்னொரு மைத்துனருக்கும், அங்கே தில்லியிலேயே இருக்கும் நாத்தனாருக்கும் தொடர்பு கொண்டு சொல்லிவிட்டு உடனடியாகக் கிளம்புவதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டு கிளம்பிச் சென்றோம். புதன் அன்று தான் தில்லி போக முடிந்தது. உடல் சவக்கிடங்கில் இருந்ததால் அரசாங்க நடைமுறைகளை எல்லாம் முடித்துக் கொண்டு உடலைப் பெற்றுக்கொண்டு வந்து தகனம் முடித்து மறுநாள் அஸ்தியையும் கரைத்துவிட்டுப் பின்னர் வெள்ளியன்று காலை கிளம்பிச் சென்னை வந்து அங்கிருந்து திருச்சிக்கும் விமானத்திலேயே வந்து சேர்ந்தோம்.
55 வயதே ஆகும் கணேஷுக்கு வாழ்க்கையில் ஆஸ்பத்திரி அனுபவங்களே அதிகம். உடலாலும், மனதாலும் பலவகையிலும் துன்பப் பட்டுவிட்டார். இப்போதும் கடந்த ஒரு மாதம் மட்டும் 4 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுத் திரும்பி வந்தார். அதைப் போல் இம்முறையும் வந்துவிடுவார் என்றே நாங்கள் நினைத்தோம். நல்ல படிப்பு, அதனால் கிடைத்த உயர் பதவி, அதிகாரம், உயர்ந்த சம்பளம் எல்லாம் இருந்தும் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தவிதமான சுகத்தையும், சந்தோஷத்தையும் அனுபவிக்கவே இல்லை. இது எங்கள் அனைவருக்கும் ஒரு மாபெரும் உறுத்தல் தான். ஆனால் ஒரே ஆறுதல் கணேஷ் மாமியார் இருக்கும்போது இறந்து போயிருந்தால் இன்னும் கொடுமை. அந்த விதத்தில் கடவுள் எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். ஆனாலும் இந்த இழப்பை இன்னமும் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. இல்லை என்பதை நம்பவும் முடியவில்லை.
இறைவன் இருப்பிடத்திலாவது அவர் மனமகிழ்ச்சியுடன் இருப்பார் என நம்புகிறோம். அவர் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம்.
அவரது ஆன்மா இறைவனடியில் இளைப்பாறட்டும்.
ReplyDeleteஉங்கள் குடும்பத்தினருக்கு எமது இரங்கல்கள்
நன்றி கில்லர்ஜி!
Deleteநெருங்கிய உறவின் மறைவு தரும் பாதிப்பு அவ்வளவு சீக்கிரம் சரியாகாது. மன வேதனையில் உழன்று கொன்டிருக்கும் மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் கணவருக்கு இன்னும் அதிக வேதனை இருக்கும்.
ReplyDeleteஅவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
என் இதய அஞ்சலிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
வாங்க மனோ, என் கல்யாணத்தின் போது குழந்தை! ஜாம்நகரில் நாங்க இருந்தப்போ அங்கே அடிக்கடி வருவார். பார்ப்பவர்கள் எல்லோருமே எங்கள் மூத்த பிள்ளை எனநினைத்தனர். நாங்க இல்லைனு சொல்லியும் கூடச் சிலர் நம்பலை. இன்னும் சிலர் என் கணவரின் மூத்த தாரத்தின் மகன் எனச் சொல்லிக்கொள்வார்கள்.
Deleteகீதாக்கா மிக மிக மனம் வருந்திவிட்டது. தனியாக இருந்தவர்...ம்ம்ம்ம் எத்தனை துன்பங்கள். ஆமாம் அவர் அடிப்பட்டப்ப நீங்க எழுதிய பதிவு நினைவு இருக்கு. தலைப்பு பார்த்ததுமே புரிந்துவிட்டது அவராகத்தான் இருகுமோ என்று...
ReplyDeleteயாரும் எடுத்துச் செல்ல இல்லாமல் சவக்கிடங்கில்....இதை வாசித்ததும் மனது கனத்துவிட்டது. இறந்தவருக்குத் தெரியப் போவதில்லை என்றாலும் ஏனோ மனம் கனத்துவிட்டது. தொடர்பு கொள்ள முடியாமல் போயிருந்திருக்கும் அலுவலகத்தினருக்கு இல்லையா...
எப்படியோ உங்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்களே...
ஆழ்ந்த இரங்கல்கள் கீதாக்கா மாமாவிடமும் சொல்லிவிடுங்கள். அவர் மனமும் மிகவும் வேதனையுடன் இருக்கும். மைத்துனர் வயது ஒன்றும் ஆகவில்லை. உங்கள் எல்லோருக்கும் மிக மிக வருத்தமாக இருக்கும் என்று தெரிகிறது.
ஆன்மா சாந்தியடையட்டும்!
கீதா
ஆமாம், தி/கீதா. மனதில் பாரம் கூடிப் போனது உடல் மார்ச்சுவரியில் இருப்பது தெரிந்ததும். முதலில் அலுவலக ஊழியர்களும் உடனடியாக இறந்து விட்டார்னு எங்களிடம் சொல்லல்லை. கொஞ்சம் தாமதித்தே சொன்னார்கள். நாங்க ஐசியூவில் இருக்கார் என்றே நினைத்தோம். திரும்பி விடுவார் என்றும் பேசிக் கொண்டோம்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்கள் மைத்துனரின் இறப்புச்செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
அவர் ஆன்மா இறைவன் நிழலில் சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.
அவரை இழந்து வாடும் உங்கள் குடும்பத்திற்கு அதை தாங்கும் மனதைரியத்தை தரவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, என்ன செய்ய முடியும்? இவர் உடல்நிலை பாதிப்பினால் அடிக்கடி மருத்துவமனைக்குப் போகும்போது கொஞ்சம் கவலைப்பட்டாலும் தெம்புடன் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
Deleteநான் கணேஷை மிக வயதானவர் என்று நினைத்து இருந்தேன் .. அவருக்கு 55 வயதுதானா? டூ யேர்லி...... என்ன சொல்லுவது எல்லாம் அவன் செயல்.....எனது இரங்கல்கள்
ReplyDeleteவாங்க மதுரைத் தமிழரே! மிகவும் இளையவர் தான்! ஆனால் காலன் விட்டு வைக்கலை! அழைத்துச் சென்று விட்டான்.
Deleteஅன்பு கீதாமா,
Deleteநாத்தனார் அங்கே தானே இருக்கிறார்.
அங்கே எடுத்துப் போயிருக்கலாமே.
என்னவோ இந்த இழப்பு வருத்துகிறது.
சிலர் வாழ்க்கை இப்படி ஆகிறதே.
மிக மிக வருத்தம். மாமாவிடமும் சொல்லுங்கள்.
பகவான் கருணை வைக்கட்டும்.
நாத்தனார் (கடைசி) கணவர் இறந்ததில் இருந்து என் மைத்துனனுடன் தான் இருந்து வருகிறார். மாமியாரும் அதனாலேயே அங்கே இருந்தார். இல்லை எனில் மாமியார் எங்களுடன் வசித்து வந்தவர் தான்! மைத்துனரின் மனைவி இறந்ததும் மாமியார் அங்கே போய்விட்டார். அதன் பின்னர் நாத்தனாரும் சேர்ந்து கொண்டார். இப்போது போன வாரம் வரை அக்காவும், தம்பியுமாகத் தான் இருந்து வந்தனர். அலுவலகத்தில் அவரை ரத்த சொந்தம் என ஒப்புக்கொள்ளவில்லை. கூடப் பிறந்த அண்ணன் அல்லது தம்பி, அல்லது மனைவி, குழந்தைகள் என வந்தால் தான் உடலைக் கொடுப்போம் என்று சொல்லிவிட்டார்கள். ஆகவே என் இரண்டாவது மைத்துனன் போய்த் தான் கையெழுத்துப் போட்டு உடலை எடுத்து வந்தார். அங்கும், இங்கும் அலையணும் என்பதால் என் கணவர் போகலை.
Deleteதிரும்ப திரும்ப கீழே விழுவது என்றால் விருப்ப ஓய்வு பெற்று இருக்கலாம்.
ReplyDeleteஇப்படி அலுவலகம் சென்று இருக்க வேண்டாம். அவர் வேலையை நேசிப்பார் போலும் அங்கேயே அவர் மறைவு.
தாய் இருக்கும் போது மகன் இழப்பு கொடுமை தான், நீங்கள் சொல்வது போல் கடவுள் காப்பாற்றி விட்டார்.
இறைவன் இருப்பிடத்தில் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
உங்களுக்கும், சாருக்கும் எங்கள் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம். மன ஆறுதல் அடையுங்கள்.
வாங்க கோமதி, என் கணவர் சுமார் ஐந்து, ஆறு வருடங்களாக விருப்ப ஓய்வு பெறச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார். கேட்கவில்லை. வீட்டில் சும்மா எப்படி இருப்பது என்று போய்க் கொண்டு இருந்தார்.
Deleteபிரார்த்தனைகளும் ஆழ்ந்த இரங்கல்களும்....
ReplyDeleteநன்றி மிகிமா
Deleteமிகவும் வருத்தமான செய்தி. கஷ்டங்களையே அனுபவித்து வந்தவர் மறைவு அவருக்கு நிம்மதி. அவரைச் சார்ந்தவர்களுக்கு பெரும் துக்கம். அருகில் யாருமே இல்லாமல் அவர் மறைவைச் சந்தித்திருப்பது வருத்தத்தை தருகிறது. அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்தனைகள்.
ReplyDeleteஆமாம், ஶ்ரீராம், கஷ்டங்கள் என்றால் அத்தனை இல்லை. உடலாலும், மனதாலும் கஷ்டங்களைத் தவிர்த்து வேறே எதுவும் பார்க்கவே இல்லை! இறக்கும்போதும் உறவினர்கள் யாரும் பக்கத்தில் இல்லை. அதுக்காகவே நாங்க திருச்சி விமான நிலையத்துக்கு மாற்றிக்கொண்டு வரும்படி வற்புறுத்தி இருக்கோம். :(
Deleteமனதுக்கு வருத்தம் தரும் செய்திதான்.
ReplyDeleteஎனக்கு மாமாவுடன் நேரடியாகப் பேச முடியாத நிலை.
உங்கள் எல்லோரின் வருத்தத்தில் பங்கேற்கிறோம்.
இறைவன் எல்லாவற்றையும் யாருக்கும் கொடுப்பதில்லை என்ற உண்மை உறுத்துகிறது. வெகு சிலருக்கே வாழ்க்கை முழுவதும் ஓரளவு சந்தோஷமாக அமைகிறது.
பரவாயில்லை நெல்லைத் தமிழரே! எல்லோருக்கும் வருத்தம் இருக்கும் என்பதையும் நான் உணர்ந்தே இருக்கேன். நீங்க சொல்வது போல் அதிகமாகப் பணத்தைக் கொடுத்த இறைவன் என் மைத்துனருக்கு மன அமைதியைக் கொடுக்கவே இல்லை. இனிமேலாவது அமைதி பெறட்டும்.
Deleteஅவரது ஆத்ம சாந்திக்காக பிரார்திக்கிறேன்.
ReplyDeleteநன்றி மாதேவி.
Deleteஇந்த மாதிரியான நிகழ்வுகளால் மனம் சோர்ந்து விடுகின்றது...
ReplyDeleteஎன்ன செய்வது.. ஆறுதல் கொள்ளுங்கள்...
இறை நிழலில் இன்புற்று இருக்கட்டும்...
ஒரு விதத்தில் நீங்க சொல்வது சரிதான். ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டார்.
Deleteநெருங்கிய உறவினர் இறப்பது ஒரு ஷாக் தான். எல்லாம் அவன் செயல். இரங்கல்கள்.மைத்துனர் என்றால் மாமாவுக்கு தம்பியா?
ReplyDeleteஆமாம், மாமாவின் கடைசித் தம்பி. தஞ்சை ஜில்லாவில் மைத்துனர் என்றே சொல்கின்றனர். எங்க பக்கம் மதுரை, திருநெல்வேலிக்காரங்க கணவரின் அண்ணாவை மைத்துனர் என்றும் கணவரின் தம்பிகளைக் கொழுந்தன் என்றும் பிரித்துச் சொல்வார்கள். அப்படிப் பார்த்தால் இவர் என் கொழுந்தன். எங்க உறவுகளிடையே கொழுந்தன் என்றே பேசிக் கொள்வோம்.
Deleteமனவருத்தமாக இருக்கிறது, இருப்பினும் மருத்துவமனை, வோர்ட் என இருந்து கஸ்டப்படாமல் நலமே போய்விட்டார்.. இதுவும் ஒரு கொடுப்பினைதான் என மனதை தேற்றிக் கொள்ளுங்கள்.
ReplyDeleteஆமாம், அதிரா, இதுவும் அவருக்கு ஒருவிதத்தில் நன்மை தான்.
Deleteமீண்டும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteசிலருக்கு வாழ்வின் சோகங்களிலிருந்து விடிவே வருவதில்லை. இறுதிக்கணங்கள் நெருங்கும்போதும் அருகில் வேண்டியவர்கள் இல்லை.
ஆமாம் ஏகாந்தன் அது தான் மன உறுத்தலை அதிகம் தருகிறது.
Deleteஇன்றுதான் கவனித்தேன். உங்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
ReplyDeleteநன்றி எல்கே.
Delete