எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 02, 2023

மெரினாவுக்கு ஈடு ஆகுமா இதெல்லாம்?

 என்ன இருந்தாலும் நம் மெரினா கடற்கரை போல் வராது தான். ஆனால் நம்மால் அதைப் பராமரிக்க முடியவில்லை. ஆங்காங்கே குப்பைகள், தின்பண்டங்களின் கழிவுகள், ப்ளாஸ்டிக் கவர்கள் எனப் போட்டு மெரினாவின் அழகையே கெடுத்துவிடுகிறோம். ஆனால் அம்பேரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் ஒரு சின்னக் குட்டிக் கடற்கரையையே எத்தனை அழகுடனும் ஆர்வத்துடனும் பராமரிக்கின்றனர். 2011 ஆம் ஆண்டு அம்பேரிக்கா போனப்போத் தான் பையர் இங்கே கூட்டிச் சென்றார். மக்களுக்குத் தேவையான பொழுது போக்கு அம்சங்களோடு ஓர் அருமையான கடற்கரை. ஏற்கெனவே இந்தப் பதிவை என் இன்னொரு வலைப்பக்கம் போட்டிருக்கேன். அங்கே யாரும் வரலை. மாதேவியையும் அப்போதைய சிநேகிதி ப்ரியாவையும் தவிர்த்து. இங்கே மீள் பதிவு செய்கிறேன். 


கடற்கரையில் லைட் ஹவுஸ்

 



பசுமையோடு காட்சி அளிக்கும் கடற்கரையின் ஒரு தோற்றம்.



 

ஹூஸ்டன் நகரில் இருந்து இருபது மைல் தூரத்தில் இருக்கும் இந்தச் சின்னஞ்சிறு கடற்கரைப் பிரதேசம் ஒரு சுற்றுலாத்தலமாக அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் பல கடற்கரை விளையாட்டுகள், காட்சிகள், பல்வேறு விதமான பொருட்களை விற்கும் கடைகள், கடல் நீரைப் பார்த்த வண்ணம் அமர்ந்து உணவு உண்ணும்படியான தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் என உள்ளன. குழந்தைகள் விளையாடப் பலவிதமான விளையாட்டுகளும் காணப்படுகின்றன. குட்டி ரயிலில் அந்தக் கடற்கரைப் பிரதேசத்தைச் சுற்றி வரலாம். ரோலர் கோஸ்டரில் ஏறிச் செல்லலாம். இன்வெர்டர் என அழைக்கப்படும் லிஃப்ட் போன்ற தூக்கும் வசதி கொண்ட ஒரு பெட்டியில் அமர்ந்து பெல்டினால் நம்மை இறுகக் கட்டிக்கொண்டால் அது நம்மை மேலும் கீழும் தூக்கி விளையாட்டுக் காட்டிவிட்டுப் பின்னர் தலைகீழாகவும் நம்மைத் தூக்கும். அதன் பின்னர் கிட்டத்தட்ட 150 அடி உயரத்தில் காணப்படும் கம்பத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்று அங்கே சற்று நேரம் வைத்திருந்துவிட்டுப் பின்னர் அதிவேகமாய்க் கீழே இறங்கும்.

சிலருக்கு இதைப் பார்க்கவே பயமாக இருக்கும். ஆகவே மன உறுதி உள்ளவர்கள் மட்டுமே விளையாடலாம். இதை போர்ட் வாக் டவர் ட்ராப் ஜோன் எனக் கூறுகின்றனர்.

 



இதைத் தவிரவும் குழந்தைகள் ஆடுகுதிரையில் விளையாடலாம். இந்தக் குதிரை விளையாட்டு இரு தளங்களாக அமைக்கப்படுகிறது. மேல் தளத்தின் குதிரைகள் அருகிலும், கீழ்த்தளத்தின் குதிரைகள் அருகேயும் ஒவ்வொரு காப்பாளர் அருகே நின்று கொண்டே குதிரைகள் இயக்கப்படுகின்றன. இந்த விளையாட்டு வைப் அவுட் என அழைக்கப்படுகிறது. இதைத் தவிரக் குடைராட்டினமும் உள்ளது. உயரம் மிக அதிகமாகவும் உள்ளது. 65 அடி உயரத்தில் சுற்றுவதாய்க்கூறுகின்றனர். இதை விடவும் உயரத்தில் ஏவியேட்டர் என்னும் சக்கரச் சுற்றும், பலூன் வீல் எனப்படும் கூண்டு அமைக்கப்பட்ட குடைராட்டினமும் குழந்தைகள் கண்ணையும், கருத்தையும் கவரும்.

இன்னமும் பாட்டில்களைக்குறி தவறாமல் அடித்துப் பரிசாக பொம்மைகள் மற்றும் பல பொருட்களைத் தரும் கடைகள், ஐஸ்க்ரீம் ஸ்டால்கள், காஃபிக் கடைகள், துணிக்கடைகள், பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகள், செயற்கை மணிமாலைகள், முத்துமாலைகள் விற்கும் கடைகள் என நூற்றுக்கணக்கான கடைகளும் காணப்படுகின்றன. என்றாலும் சுற்றுவட்டாரம் சுத்தமாய்ப் பராமரிக்கப்படுகிறது. கடைகளின் பக்கவாட்டுத் தோற்றம்.




வேகமாய்ச் செல்லும் படகுகளிலும் அரைமணிநேரப் பிரயாணம் செய்யலாம். நாற்பது மைல் வேகத்தில் செல்லும் படகுகளின் பயணம் உற்சாகம் கொடுக்கும்.



gஎல்லாவற்றுக்கும் மேல் கடற்கரை சுத்தமாய்ப் பராமரிக்கப் படுகிறது. அத்தனை மக்கள், குழந்தைகளோடு வந்து விளையாட்டுகள் விளையாடி, உணவு உண்டு, என அத்தனையும் செய்த போதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளிலேயே குழந்தைகளைக் கூடக் குப்பைகளைப் போடும்படி பழக்கி இருக்கின்றனர். உணவுப் பொருட்களின் மிச்சமோ, துணிகளோ, ப்ளாஸ்டிக் கவர்களோ, பேப்பர் குப்பைகளோ காண முடியாது. அதோடு எங்கே சென்றாலும் வசதியான கழிப்பறைகளும், அவைகளின் சுத்தமான பராமரிப்பும், மக்கள் அவற்றைச் சுத்தமும், சுகாதாரமும் நீடித்து இருக்குமாறு பயன்படுத்துவதும், சிறு குழந்தைகளுக்குப் பொதுக்குழாயில் கைகளைக் கழுவ வேண்டி சின்னதாய் வடிவமைத்து ஆங்காங்கே காணப்படும் ஸ்டூல்களும், சின்னஞ்சிறு பிறந்த குழந்தைகள் முதல் அனைத்துக்குழந்தைகளுக்கும், டயப்பர் மாற்றத் தனி இடமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளோடு இருப்பவர்களுக்கு முன்னுரிமை.


21 comments:

  1. வெளிநாடுகளில் சாதாரண இடங்களும் மிகப் பிரமாதமாகப் பராமரிக்கப்பட்டு சுற்றுலாத் தலமாக ஆக்கப்பட்டிருப்பதும், கடற்கரைகள், பொது இடங்கள் மிகச் சிறப்பாக வைத்திருக்கப்பட்டு குடிமக்கள் எல்லோரும் உபயோகப்படுத்தும்படியும், சுற்றுலாப் பயணிகள் வரும்படியாகவும் வைக்கப்பட்டிருப்பது இயல்பு.

    நமக்கு நம் மக்களுக்கு அலட்சியம், சுத்தமின்மை என்ற தீராத வியாதி உண்டு.

    வாரணாசி கங்கையிலும், தொண்டனூர் மற்றும் பல நீர்நிலைகளிலும் பழைய துணிகளைப் போட்டு, நீர்நிலையை மாசுபடுத்துவதும் ஆபத்தானதாக ஆக்குவதும் இயல்பானதொன்றாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை! இங்கே அம்மாமண்டபம் படித்துறையைப் பார்த்தது இல்லையோ? ரொம்பவே மோசமாக இருக்கும். குளிப்பதெல்லாம் ரொம்பக் கஷ்டம். எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் நம்ம மக்கள் திருந்த மாட்டாங்க!

      Delete
  2. பலப் பல வருடங்களுக்கு முன்பு என்னுடைய boss, கனடாவில் அவர் குழந்தைகளைப் படிக்க அனுப்பினபோது, அவரது நண்பரின் குழந்தை ஏதோ ஆக்சிடண்டினால் கால் பாதிக்கப்பட்டபோது அந்தக் குழந்தைக்காக, சுலபமாக ஏற, பள்ளிப் பேருந்து திருத்தப்பட்டதைச் சொன்னார். பிறகு அந்த மாதிரி பேருந்துகளே இயல்பானதாக மாறிவிட்டன

    ReplyDelete
    Replies
    1. பொதுவாகவே இந்த ராம்ப் எனப்படும் சாய்வுப் பாதை அம்பேரிக்காவில் உண்டு. அதோடு வண்டிகளை நிறுத்தக் கூட மாற்றுத் திறனாளிகளுக்கு எனத் தனியான இடம் ஒதுக்கி இருப்பாங்க. இப்போ எனக்கு வீல் சேரில் போனாலும் நம்ம ஊர் ரயில்களில் ஏறுவது கஷ்டம். அதுக்காகவே ரயில் பயணங்களைத் தவிர்த்து விடுகிறோம்.

      Delete
  3. சுகாதாரம் என்பது மக்கள் மனதில் வரணும்.

    இதே நம் மக்கள் வெளிநாடு சென்றால் முறையாக கடைப்பிடிக்கின்றனர்.

    ஆனால் நாடு திரும்பினால் மறந்து விடுகின்றார்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை கில்லர்ஜி. விழிப்புணர்வு என்பதே மக்கள் மனதில் ஏற்படவே இல்லை. இன்னமும் அலட்சியம் தான்.

      Delete
  4. மீள் பதிவா? படிக்கவில்லை அப்போது.
    நன்றாக இருக்கிறது. சுத்தமாக பராமரிப்பு செய்வது எங்கும் காணம்படும் ..
    சுற்றுலா வரும் மக்களுக்கு வசதிகள் எல்லாம் செய்து தருவது மகிழ்ச்சி தரும். ரோடு போடும், மக்களுக்கு, வீடு கட்டும் மக்களுக்கு கழிவறை வசதி வ்ண்டிகளில் உடன் வரும். வீட்டு வேலை நடக்கும் போதும் அவர்கள் நம் பாத்ரூமை உபயோகபடுத்த மாட்டார்கள் வண்டிகளில் கழிவரை பெட்டிகளை நம் வீட்டு வாச முன் இறக்கி விட்டுதான் மற்ற வேலைகள் தொடரும்.
    வெளி இடங்கள் சுத்தமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி! 2011 ஆம் ஆண்டு நீங்க இணையத்தில் இருந்தீங்களா இல்லையானு தெரியலை. அதோடு இது "எண்ணங்கள்" வலைப்பக்கம் போடலை. மற்றபடி நீங்க சொல்லி இருப்பது அனைத்தும் உண்மை தான். எனக்கும் அங்கே காரில் பயணம் செய்வதும் எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று.

      Delete
  5. தகவல்கள் அனைத்தும் சிறப்பு...... நம் ஊரிலும் இப்படியான வசதிகள் செய்தாலும் அதன் பராமரிப்பு மிகவும் கடினமான விஷயம். அதனை பாதுகாக்க பயனர்களுக்கு தெரிவதே இல்லை என்பது வேதனையான உண்மை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட், இது சுமார்12 வருடங்கள் முந்தைய பதிவு! :D இப்போ எழுதணும்னு நினைச்சதை எல்லாம் எழுதினால் சரியா வருமானு யோசிச்சுட்டு இதைத் தேடி எடுத்துப் போட்டிருக்கேன். :)

      Delete
  6. இப்போது நம்மூர் மெரினாவில் முடிந்த வரை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.  சுழலும் பல்சக்கர இயந்திரம் வைத்து குப்பைகளை எடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நானும் கேள்விப் பட்டேன் ஸ்ரீராம். என்ன இருந்தாலும் மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும் அல்லவா?

      Delete
  7. கடற்கரைக்கு இதுவரை மூன்று நான்கு முறை போயிருப்பேன்.  அவ்வளவுதான்!  போய்வரவே நேரம் சரியாக இருக்கும் என்பதால் அங்குள்ள விளையாட்டுகள் எல்லாம் விளையாடுவதில்லை.  அமேரிக்கா போல இங்கு விளையாட்டுகளும் இருக்காது என்பதையும் சொல்ல வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். நான் பத்து வயதாக இருக்கும்போதே அண்ணா பூணூலுக்குத் திருப்பதி போயிட்டுச் சென்னை வழியா மதுரை திரும்பினப்போச் சென்னையில் ஒரு வாரம் தங்கி எல்லா இடங்களும் சுற்றிப் பார்த்திருக்கோம். அப்போக் கடற்கரைக்கும் போனோம். ஆனால் மனதில் ஒரு வகை ஏமாற்றமே மிஞ்சியது. இத்தனைக்கும் அப்போல்லாம் இம்மாதிரி மிளகாய் பஜ்ஜிக் கடைகள் எல்லாம் இருந்ததில்லை. சுத்தமாகவே இருந்தது. அதன் பின்னரும் போயிருக்கேன். எங்க கல்யாண நாள் முதல் வருஷம் கொண்டாடும்போது இரண்டு பேருமே அலுவலகத்துக்கு லீவ் போட்டுவிட்டு தேவி தியேட்டரில் ஹிந்தி சினிமா, கடற்கரையில் உலாத்தல், பிக்னிக் ஓட்டலில் டின்னர் எனக் கொண்டாடினோம். அதன் பின்னர் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றிருக்கோம். பெரிய பேத்திகளையும் அழைத்துப் போயிருக்கோம்.

      Delete
    2. என் மாமனார், மாமியாரெல்லாம், சென்னையில் எங்களைக் குடித்தனம் வைச்சப்போக் கடற்கரைக்கெல்லாம் அழைத்துப் போகலைனு ரொம்பக் குறை. தினம் தினம் போகலாம்னு நினைச்சுட்டு இருந்தாங்க. கருவிலி வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் நடந்து வந்தால் அரிசிலாற்றுக் கரை. அது போல் இதுவும்னு அவங்க நினைப்பு. அதிலும் நாங்க வேறே என்னோட வேலை மாற்றல் விஷயமா மவுன்ட்ரோடில் ஈபி அலுவலகம் போனப்போச் சேர்மனைப் பார்க்க மதியம் 3 மணி ஆகிவிட்டது. இங்கே வில்லிவாக்கத்தில் என்னோட அம்மாவும்/மாமியாரும் இருந்தார்கள். மாமியார் ஒரே புலம்பலாம். எங்கேயோ ஊர் சுத்த உங்க பொண்ணு கூட்டிண்டு போயிட்டானு நினைச்சிருக்காங்க.எங்களுக்குச் சிரிப்பாக வந்தது. அப்படி எல்லாம் நினைச்ச வாக்கில் போக முடியாது என்பதைப் பின்னாட்களில் எண்பதுகளில் அவங்க அம்பத்தூருக்கேக் குடித்தனம் வந்தப்புறமாத் தான் புரிஞ்சுண்டாங்க. ஆனாலும் இத்தனை தூரம் இருந்தாலும் கடற்கரையில் கூட்டமெல்லாம் ஒண்ணும் குறையலை.

      Delete
  8. கீதாக்கா, அழகான இடம், உங்கள் விவரணமும் செம. நல்லா விளக்கமா சொல்லியிருக்கீங்க

    அங்கு கடற்கரைகள், ஏரிகள் எல்லாம் பார்த்துவிட்டு இங்கு பார்க்கும் போது கண்ணில் நீர் வருகிறாது இதோ இங்கு பங்களூரில் எத்தனை ஏரிகள்!!! பறவைகள் வந்து அழகா கூடு கட்டி குஞ்சு பொரித்து....ஆனால் பாருங்க அழுக்கு தண்ணினா அழுக்குத் தண்ணி....கழிவு, குப்பைக் கூளங்கள் நம்ம சனங்களைத்தான் தெரியுமே! அவங்க வீட்டு படுக்கை அறையில் பயன்படுத்துபவை கூட பொதுவெளியில்!!!! ஹையோ ஹையோ...என்னத்த சொல்ல?!!!

    ஆனா இந்த அழுக்குத் தண்ணியிலும் அந்தப் பறவைகள் தங்கள் இனத்தைப் பெருக்கி நீந்திக் களிக்கின்றன பாவம் எல்லாம்...ரொம்ப வருத்தமாக இருக்கு பார்க்கவே

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா! நான் முதல் முதலாக "பெண்"களூர் பார்த்தப்போ அங்கேயே வந்துடணும்னு தான் தோணித்து. நம்ம ரங்க்ஸிடம் கூட இங்கே மாற்றல் வாங்கிக்கோங்கனு கேட்டிருக்கேன். எங்க குடியிருப்பு வளாகம் விஜய் நகரில் இருந்தது. அங்கே தான் ஒரு அலுவலக நண்பர் வீட்டில் தங்கி ஊரைச் சுற்றிப் பார்த்தோம். பின்னர் நாளாக ஆக பெண்களூரைப் பல முறை பார்த்தாச்சு. அந்த அழகும், மௌனமும் இப்போ இல்லை. ஒரே சந்தடி, போக்குவரத்து கன்னாபின்னாவென. என்ன ஒரு ஆறுதல்னா சென்னை போல ஆட்டோக்காரங்க பிடுங்குவதில்லை. குறைந்தது ஐந்து அல்லது ஆறு மொழிகள் பேசுவார்கள். ஓட்டல்கள் எல்லாம் சின்னதாக இருந்தாலும் சுத்தமாகவும் விலை குறைவாகவும் இருக்கும். டிஃபன் எல்லாம் நெல்லை சொல்றாப்போல் இருக்காது. நன்றாகவே இருக்கும். அதிலும் காஃபி! அங்கே காஃபி ஹவுசில் குடிச்சால்! ஆஹா! ஓகோ! தான். பாட் காஃபி! டிகாக்ஷன் தனியே, பால், சர்க்கரை தனியே வரும். ஒரு பாட்டில் சுமார் 4 காஃபிக்குக் குறையாமல் கொடுப்பாங்க.

      Delete
  9. அங்கு குழந்தைகளுக்கு என்றும் பெரியவர்களுக்கும் தோதாக நிறைய வசதிகள் இருக்கும். குழந்தைகளையும் குப்பைத் தொட்டியில் குப்பையைப் போடப் பழக்கிடுவாங்க. இப்படியான நிறைய வசதிகள்.

    நம்ம ஊர் ரொம்ப அழகு சொல்லப் போனா....ஆனா மக்களுக்கு அடிப்படை சுகாதார விழிப்புணர்வு இல்லைன்றது பெரிய குறை. அரசு இப்படி வசதிகள் அமைத்தாலும் எல்லா இடங்களிலும் குச்சி வைச்சு மிரட்டும் ஆட்கள் வேண்டியிருக்கிற்தே!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஊரில் குறிப்பாய்த் தமிழ்நாட்டில் மக்களை மாக்களாகத் தானே நினைக்கிறாங்க. அரசாங்கமும் பேருக்குக் கொஞ்சம் சௌகரியம் செய்து கொடுக்கிறது. ஒரு கால்வாயை வெட்டிச் சுத்தம் செய்யும் போது உள்ளே இருக்கும் நீரை எல்லாம் சுத்தமாக எடுத்துவிட்டுப் பின்னர் அதைச் சரி பண்ணுவதில்லை. உள்ளே குறைந்தது ஒரு அடியாவது தண்ணீர் இருக்கும்போதே வேலை செய்து கணக்குக் காட்டி முடிக்கிறாங்க. இது தொலைக்காட்சிகளில் கூடக் காட்டியாச்சு. ஆனால் ஒப்பந்ததாரர்களுக்கு இதில் எல்லாம் அலட்சியம் தான். பெண்களூரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டணும்னா மழைநீர் வடிகால், கார் பார்க்கிங், டிரெயினேஜ், தண்ணிர், மின்சாரம் ஆகியவற்றை முதலில் முடித்துக் கொண்ட பின்னரே அவங்களுக்குக் குடி இருப்பை எழுப்ப அனுமதி கிடைக்கும். இங்கே சென்னை மற்ற நகரங்களில்? அதெல்லாம் இல்லை. அதோடு அரை கிரவுண்டில் கூட இங்கெல்லாம் குறைந்தது 4 ஃப்ளாட்டுகள் வந்துடும். அங்கே ஒரு கிரவுண்டில் கூடக் கட்ட முடியாது.

      Delete
  10. ///ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளிலேயே குழந்தைகளைக் கூடக் குப்பைகளைப் போடும்படி ...///

    இங்கே பல லட்சம் கணக்கு காட்டியபடி குப்பைத் தொட்டி யை வைக்கின்றார்கள்..

    அப்புறம் ஒருநாள் குப்பைத் தொட்டியே குப்பைக்குப் போய் விடுகின்றது..

    ReplyDelete
    Replies
    1. குப்பைத்தொட்டிகளைத் தூக்கிக் கொண்டு விற்றுக் காசு பார்க்கும் ரகமாச்சே நம்ம மக்கள். இதை எல்லாம் நினைச்சு வேதனைப் படத்தான் முடியும் தம்பி!

      Delete