உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!
தாமரைப் பூக்கோலம் போடலாம். சங்கு, சக்கரம் இரண்டும் வரும்படியான கோலமும் போடலாம்.
தோழிப் பெண்ணை எழுப்பும் ஆண்டாள் அவள் முன்னர் சொன்ன வாக்கை நினைவூட்டுகிறாள். தானே சீக்கிரம் எழுந்து எல்லோரையும் அழைத்துச் செல்ல வருவதாய்க் கூறியவள் இப்போது அது குறித்த வெட்கமில்லாமல் தூங்குகிறாளே எனக் கூறும் ஆண்டாள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவர்கள் அனைவரையும் இங்கே மறைமுகமாய்க் கடிகிறாள்.
இறைவன் எண்ணத்தில் அவன் நாமத்தையே எந்நேரமும் பேசுவேன், கூறுவேன் என்றெல்லாம் சொல்லி விட்டு இப்போது அந்த அறிகுறியே இல்லாமல் உலக வாழ்க்கையின் மாயா இன்பங்களில் மூழ்கி இருப்பவர்களை நினைத்து ஆண்டாள் வருந்துகிறாள்.
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்= ஆண்டாள் இப்போது இன்னொரு பெண்ணின் வீட்டுக்கு வந்திருக்கிறாள். இவள் இன்னும் எழுந்திருக்கவில்லை. இத்தனைக்கும், இவள் நாளைக்கு நானே வந்து உங்களை எல்லாம் முதல்லே எழுப்புவேனாக்கும்னு சொல்லி இருந்தாள். இப்போ அசையக் கூட இல்லை!
அடி, பெண்ணே, உங்க வீட்டுக் கொல்லைப்புறத்திலே, அந்த நாட்களில், இப்போவும் சில ஊர்ப்பக்கம் கொல்லையைப் புழக்கடைனு சொல்வதுண்டு. முன்பெல்லாம் கிணறு மட்டுமில்லாமல் வீட்டுப் பெண்கள் குளிக்கவென்று சின்னஞ்சிறு குளம் கூட இருக்குமென்று என் அப்பா சொல்லி இருக்கிறார். அந்தக் குளத்தில் தாமரை, அல்லிபோன்ற மலர்கள் காணப்படுமாம். இப்போவும் தஞ்சை மாவட்டத்தில் சில கிராமங்களில் பகலில் மலரும் தாமரைப்பூக்கள் நிரம்பிய குளங்களையும் இரவில் மலரும் அல்லிப்பூக்கள் நிரம்பிய அல்லிக்குளங்களையும் காண முடிகிறது. அத்தகையதொரு குளம் இந்தப் பெண்ணின் வீட்டுக் கொல்லையில் இருக்கிறது. ஆண்டாள் மெதுவா எட்டிப் பார்க்கிறாள். தாமரைப்பூக்கள் மலர்ந்திருக்கும் அந்தக் குளத்தின் அல்லிப்பூக்களோ வாடிவிட்டன. மீண்டும் இரவில் நிலவைக்கண்டாலேயே மலரும். ஆகையால் அந்தப் பெண்ணை எழுப்ப இதுதான் சரியான நேரம், எழுந்திரு பெண்ணே, உன் வீட்டுக்கொல்லைப்புறத்தில் இருக்கும் வாவியில் தாமரைப்பூக்கள் மலர்ந்து அல்லிப்பூக்கள் கூம்பிவிட்டனவே.
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்= அது மட்டுமா, செங்கல்பொடியைப் போலச் சிவந்த காவிநிறமுடைய உடையை அணிந்த தவக்கோலம் பூண்ட சந்நியாசிகள், இங்கே அவர்களை வெண்பல் தவத்தவர் என்கிறாள் ஆண்டாள். வெற்றிலை போட்டால் பற்கள் வெண்மையாய் இராது. இவர்களோ சந்நியாசிகள். சந்நியாசிகள் வெற்றிலை போடக்கூடாது. அதனால் அவர்கள் பற்களும் வெண்மையாகவே இருக்கின்றன. அந்த சந்நியாசிகள் தங்கள் ஈசனின் கோயிலுக்குச் சென்று வழிபடச் செல்கிறார்கள். அந்தக் கோயில்களிலிருந்தெல்லாம் வழிபாட்டுக்கான சங்கநாதம் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்= அடியே, எங்களை முன்னாடி வந்து எழுப்புவேன்னெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாயே, ஏ நங்கையே , உனக்கு வெட்கமாய் இல்லையா? நீ சொன்னதெல்லாம் வெறும் பேச்சுத்தானா?? அதற்கு அர்த்தம் இல்லையா??
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!= சூரிய, சந்திரர்களைப் போல் விளங்கும், சங்கையும் சக்கரத்தையும் தன்னிரு திருக்கைகளில் தாங்கிக்கொண்டிருக்கும் தாமரை போன்ற விழிகளை உடைய அந்தக் கண்ணனை வந்து பாடு வா, பெண்ணே. தன் அழகான தாமரைக்கண்களால் நம்மைப் பார்த்து அருள் செய்வதோடு நம்மையும் அவனுக்கு அடிமையாக்கிக்கொள்கிறான் அந்தப் பரம்பொருள். அப்படி அவனுக்கு அடிமையாவோம் வா, அவன் புகழைப்பாடி ஏத்துவோம் என்கிறாள் ஆண்டாள்.
இப்படிப் பரம்பொருளுக்கே அடிமையாய் இருப்பதைப் பற்றிய பக்தி யோகத்துக்கு பட்டத்திரி கூறுவது:
த்வத் பாவோ யாவதேஷு ஸ்புரதி ந விசதம் தாவதேவம் ஹ்யுபாஸ்திம்
குர்வந்நைகாத்ம்ய போதே ஜடிதி விகஸதி த்வந்மயோஹம் சரேயம்
த்வத்தர்மஸ்யாஸ்ய தாவத் கிமபி ந பகவந் ப்ரஸதுதஸ்ய ப்ரணாஸ:
டஸ்மாத் ஸர்வாத்மநைவ ப்ரதிஸ மம விபோ பக்திமார்க்கம் மநோஜ்ஞம்
இவ்வுலகிலுள்ள புழு, பூச்சிகளில் இருந்து மிக உயர்ந்த நிலையிலுள்ள மனிதர் வரை அனைவருமே , உயிரற்ற மரம், மலை போன்ற ஜடப் பொருட்களும் கூட பரமாத்மாவின் அம்சம் என்ற நினைப்பே வரவேண்டும். அவ்வாறு நினைக்க எத்தனை நாட்கள் ஆனாலும் அதுவரை நான் தங்களை ஆராதித்துக்கொண்டே இருப்பேன். எந்த ஆத்மாவும் ஒன்றே என்ற உறுதியான அசைக்கமுடியாத மெய்யறிவு எனக்குக் கைகூடவேண்டும். அந்த நிலையில், "நீங்களே நான், நானே நீங்கள்" என்னும் வேறுபாடற்ற இரண்டும் ஒன்றே என்ற பாவம் பெற்று நான் உலவ வேண்டும். ஆஹா, இவ்விதம் என்னுடைய பக்தியானது மாறுமானால் அதற்கு அழிவேது! ஹே ப்ரபு, அத்தகையதொரு பக்தி மார்க்கத்தை நீ எனக்குத் தந்தருளுவாய்!
************************************************
மார்கழி பதினான்காம் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteதாமரைப்பூவை மட்டுமே கோலமாகப் போட்டுப் பார்த்திருக்கிறேன். ஏன், நானே போட்டுமிருக்கிறேன்! இங்கு காட்டி இருக்கும் இரண்டு தாமரைப்பூ கோலங்கள் வித்தியாசமாய், நன்றாய் இருக்கிறது. ஒன்றும், மூன்றும்.
ReplyDeleteஒன்றாம் கோலம் எட்டு புள்ளி 3 வரிசை. குறைச்சுட்டே வரணும். மூன்றாவது கோலம் பதினைந்து புள்ளி. அடிக்கடி வாசலில் போட்டிருக்கேன். பெரிய கோலங்கள் போடுவதெல்லாம் அம்பத்தூரோடு போயாச்சு. அங்கே தனி வீடு. பத்தடிக்கும் மேல் வாசல். ஆகவே முதல்நாள் இரவே பெரிய கோலமாக உள் வாசலில் போட்டுடுவேன். வெளி வாசலில் காலையில் தண்ணீர் தெளித்துக் கொஞ்சம் சின்னக் கோலமாகப் போடுவேன். இங்கே ஸ்ரீரங்கத்திலேயெல்லாம் கோலம் போடுவதே பெரிய விஷயம்.
Deleteஒன்றைச் சொல்வது போல சொல்லும்போது மற்றவர்களையும் அந்த விஷயத்தில் குறை சொல்லுவது போல மறைமுகமாகப் பேசுவது பெண்களுக்கு கைவந்த கலை என்று சொன்னால் கோபிப்பீர்களா?!!
ReplyDeleteyessu!
Delete:-))
Deleteதிருவாரூர் மாவட்டம் பெரும்பண்ணையூர் என் அப்பா பிறந்த ஊர். அங்கு பாட்டி வீட்டில் இந்த புழக்கடை, தோட்டம், குளம், எல்லாம் இருந்தன. நான்கு எருமைகளும் வைத்திருந்தார் பாட்டி.
ReplyDeleteமாமனார் வீட்டில் நான் கல்யாணம் ஆகி வந்தப்போ உழவு மாடுகள், வண்டி மாடுகளைச் சேர்த்துச் சுமார் எட்டு மாடுகள் இருந்தன. இரண்டு பசுக்கள், இரண்டு எருமைகள். முதல் முதல் எருமைப் பால் காஃபி அங்கே தான் குடிச்சேன். எருமைப்பாலிலேயே காஃபி போட்டதோடு இல்லாமல் நான் போர்ன்விடா குடிக்கவும் அதே எருமைப்பால் தான் கொடுத்தாங்க. கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்தது.
Deleteதிருநெல்வேலி மாவட்டத்தில் கனடியன் வாய்க்கால் போகும் ஊர்களில் எல்லாம் அந்த வாய்க்கால் ஒவ்வொரு வீட்டின் கொல்லைப்பக்கும் ஓடும். தண்ணீர் சுத்தமாகவே இருந்தது. இப்போ எப்படினு தெரியலை. அங்கே பெண்கள் எல்லாம் நன்றாக நீச்சல் தெரிந்தும் வைச்சிருப்பாங்க. மிக தைரியமான பெண்கள்னு சொல்லலாம். கல்லிடைக்குறிச்சியில் தொந்தி விளாகம் தெருவில் இருந்த அம்பி(ஆரம்பகால நண்பர். தக்குடுவின் அண்ணா) வீட்டிலும் பின்னால் கனடியன் வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது.
Deleteநாராயண பட்டத்திரி சொல்லும் பக்தியோகம் நினைத்துக் கூட பார்க்க முடியாத உயரம்.
ReplyDelete_/\_
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. மார்கழி 14 ஆம் திருப்பாசுரமும், விளக்கமும் நன்றாக உள்ளது. கோலங்கள் அனைத்தும் அருமை. தாமரையோடு இணைந்த சங்கு கோலங்கள் முன்பு நான் வீட்டு வாசலில் போட்டுள்ளேன். இப்போது பெரிய கோலங்கள் போட வாசல் இல்லை. கல்லிடையில் எங்கள் மச்சினன் வீட்டின் பின்புறமும் வாய்க்கால் ஓடும். இப்போது அந்த வீட்டை விற்று விட்டார்கள்.
/நீங்களே நான், நானே நீங்கள்" என்னும் வேறுபாடற்ற இரண்டும் ஒன்றே என்ற பாவம் பெற்று நான் உலவ வேண்டும். ஆஹா, இவ்விதம் என்னுடைய பக்தியானது மாறுமானால் அதற்கு அழிவேது! ஹே ப்ரபு, அத்தகையதொரு பக்தி மார்க்கத்தை நீ எனக்குத் தந்தருளுவாய்!. /
நாராயண பட்டத்திரியின் பக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த பக்தி நமக்கு எந்தப் பிறவியிலோ. .? அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.