வீடு ஒரே அமைதியா இருக்கு. ஐந்தாறு நாட்களாக. சத்தமே இல்லை. வைச்ச சாமான்கள் வைச்ச இடத்தில் இருக்கின்றன. கம்ப்யூட்டர் அறை வெறிச்சோடிக் கிடக்கு. வாஷ் பேசினில் கை கழுவும் சோப் குறையவே இல்லை. விட்டு வைச்ச மாதிரி அப்படியே இருக்கு. வீட்டில் குப்பையும் இல்லை. ஹால் சோஃபாவில் படுத்திருக்கும் கு.கு.வின் பாப்பாக்கள் எல்லாம் கணினி அறையை விட்டே வெளிவரலை. கு.கு அதில் ஒன்றை எப்போவும் எடுத்துப் போகும். கூடவே வைச்சுக்கும். ஆனால் தோஹாவிலோ என்னமோ அதைப் பத்தி செக்யூரிடி கேட்டாங்களோ இல்லை வேறே காரணமோ தெரியலை. இப்போல்லாம் எடுத்துப் போவதில்லை. ஒருவேளை தான் பிக் கேர்ல் ஆகிக் கொண்டு வருவதாக அது சொல்லுகிறதே அதனாலோ என்னமோ. டைனிங் டேபிளில் பால் தம்பளரை வைச்சிருந்தால் உடனே வந்தெல்லாம் குடிக்காது. குடிச்சுட்டுப் பின்னர் ஓட்டமா ஓடிப் போய் சிங்கில் போட்டுவிட்டு ஓடும்.
கலர் கலராக வார்னிஷ் பேப்பர் அல்லது கலர் பேப்பர்களைக் கத்திரித்து அதுக்குத் தோன்றிய டிசைனில் வெட்டி ஒட்டிக் கொண்டு வீட்டில் காகிதக் குப்பைகளைப் போடும். கத்திரிக்கோல்கள் எல்லாம் அதன் அதன் இடத்தில் இருக்கு இப்போ. வண்ணக்கலவை குழைக்கும் கிண்ணங்கள் காய்ந்து கிடக்கின்றன. அதன் பாட புத்தகம் மட்டும் கையில் எடுத்துப் போயிருக்கு போல. மற்றபடி அதன் நினைவுகள் இந்த வண்ணக்கலவைகளிலும், வெட்டிப் போடும் காகிதக் குப்பைகளிலும் ஆங்காங்கே கிடக்கும் அதன் பேபி பொம்மைகளும் அது இல்லை ஊருக்குப் போயிருக்கு என்னும் உண்மையைச் சத்தமாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறாது. இப்போத் தான் நாலைந்து நாட்கள் ஆகின்றன. அது அடுத்த மாதம் 10 அல்லது 15 தேதிக்குத் தான் வரும். தினம் ராத்திரி அதுக்காக உணவு வரவழைத்துக் கொண்டிருந்தேன். இப்போ நான் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொள்கிறேன். அமாவாசைக்கு அரைச்ச மாவு கொஞ்சம் மீதம். அதைப் பயன்படுத்துகிறேன்.
காகிதங்களைக் கத்திரித்து வெட்டி ஒட்டி ஒரிகாமி போலப் பற்பல டிசைன்களில் ஏதாவது பண்ணிக் கொண்டே இருக்கும். இல்லைனா படங்களை வண்ணம் குழைத்து வரைந்து வெட்டி அட்டையில் ஒட்டி வைச்சுக் கொடுக்கும். சில சமயம் வந்து காட்டிட்டுத் திரும்ப வாங்கிக் கொண்டு போயிடும். இப்போ! வெறிச். ஆச்சு, இன்னும் கொஞ்ச நாட்கள் தான். என்றாலும் ஒரு குழந்தை வீட்டில் மனிதர்களிடையே இத்தனை மாற்றங்களை உண்டு பண்ணும் என்பதை நினைத்தாலே சந்தோஷமா இருக்கு. முன்னெல்லாம் ஓல்ட் மேன், ஓல்ட் லேடினு எங்களைக் கூப்பிடும். இப்போத் தாத்தா இல்லை என்னும் நிதர்சனத்தை ஒப்புக் கொண்டிருக்கு. ஆகவே என்னிடம் அதிகம் வந்து முன்னைப் போல் எதுவும் கேட்பதில்லை. என்றாலும் பாசமும் இருக்கு. அது இரண்டு வருஷங்களுக்கும் முன்னால் ரங்க்ஸ் எனக்கு வெண்டைக்காய் நறுக்கித் தரும்போது செய்த சில்லறை விஷமம். கீழே.
தாத்தா வெண்டைக்காய் நறுக்கும்போது அதன் காம்புகளைப் பொறுக்கித் தாத்தாவுக்கு ஆபரணங்களாக அணிவித்த படம் இது இரண்டும்.



பசங்க வீட்டில் இல்லையென்றாலும் வீடு வெறிச்சோடிப் போகும்.
ReplyDeleteஎன் பசங்க இருந்தபோது தெரியலை. எல்லாம் கிளம்பின பிறகு, எங்களுக்கு எந்தச் சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்கு. அதற்குப் பழகுவதற்கே கொஞ்சம் நேரமாச்சு
உண்மை. என்னதான் கணவன், மனைவி ஒற்றுமை இருந்தாலும் குழந்தைகளுக்குத் தான் நாம் முக்கியத்துவம் கொடுப்போம். ஆகவே அது தான் நம் வாழ்வதன் அர்த்தமே.
Deleteசின்னக் குழந்தைகளின் விளையாட்டுத்தனம்... நம்மை அதனுடன் ஒன்றிப்போயிடச் செய்யும்.
ReplyDeleteசில நாட்கள் ஊருக்குப் போயிருக்கிறது என்பதே உங்களுக்கு வெறிச்சோடிப்போன மாதிரி இருக்கு
yesso yessu.
Deleteசாம்பசிவம் சார் படம்.... அருமை....
ReplyDeleteமுன்னாடியும் போட்ட நினைவு.
Deleteபேத்தி துர்காவின் செயல்களை சொல்லிய விதம் அருமை. அருமை.
ReplyDeleteபாட்டிக்கு எழுதி கொடுத்த மடல் அருமை. தாத்தாவின் நெற்றியில் வெண்டைக்காய் ஒட்டி அழகு பார்த்த குறும்புதனம் அருமை.
குழந்தை ஓடி விளையாடி ஊருக்கு போய் விட்டால் வீடு வெறிச் என்று இருக்கும் .
அந்த தாத்தா பாட்டியை மகிழ்வித்து கொண்டு இருப்பாள் குழந்தை.
நீங்கள் திருச்சி வந்து இருப்பது அறிந்து கொண்டேன்.
சாரின் நினைவுகள் நிறைய வந்து போகும். மறக்க முடியாத நீங்கள் நினைவுகள்.
கு.கு. சத்தமில்லாமல் இப்படியான குறும்புகள் நிறையச் செய்யும். சில சமயம் வண்ணக்கலவையைத் தாத்தாவின் முகத்திலேயே தடவி வரையும். :)))
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. நலமா? தங்களது பேத்தி தற்சமயம் ஊருக்குப் போயிருப்பதையும், அதனால் வீடு வெறிச்சென்று இருப்பதையும் அழகாக கூறியுள்ளீர்கள். அவள் அவளின் மற்றொரு தாத்தா வீட்டுக்குப் போயிருக்கிறார்களா? நீங்களும் தனிமையை தவிர்க்க அங்கு கொஞ்ச நாளேனும் அவளுடனே சென்றிருக்கலாம்.! . குழந்தைகள் உடனிருந்து விட்டு சற்று பிரிந்தால் மனது என்னவோ போல்தான் இருக்கும்.மற்றபடி அவர்களுடனே நீங்களும் மீண்டும் தோஹா பயணம் மேற்கொள்ளுங்கள். அதுதான் நல்லது. இங்கு உங்களுக்கு தனியாக இருக்க மனது கஸ்டமாக இருக்குமென நான் நினைக்கிறேன்.
உங்கள் கணவர் வெட்டிக் கொண்டிருக்கும் வெண்டைக்காய் படமும், பேத்தி அதன் காம்பு, முனைகளை அவருக்கு அணிகலன்களாக அணிவித்த படமும் ஏற்கனவே நீங்கள் பகிர்ந்துள்ளீர்கள். இப்போதும் பார்த்து ரசித்தேன்.
இந்தப்பதிவு எனது டேஸ்போர்டில் வரவில்லை. நீங்கள் எபியில் கொடுத்த சுட்டியைப் பார்த்து விட்டுத்தான் வருகிறேன். இப்போதெல்லாம் இது ஒரு தொல்லையாக உள்ளது. ஏனென்று தெரியவில்லை. எபியின் பதிவு கூட இப்போதும் நேற்றயதைதான் காட்டுகிறது.. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆகஸ்டில் பத்து, பனிரண்டு தேதிக்குக் குழந்தை அவள் அம்மாவுடன் வந்து விடுவாள். நான் இங்கேயே இருக்கணும்னு நினைச்சாலும் விட மாட்டாங்க. ஏனெனில் குடும்பத்தில் அனைவருமே 65 வயதைக் கடந்தவர்கள். யாராலும் இப்போப் பொறுப்பு எடுத்துக்க முடியாது. எங்க பெண், மாப்பிள்ளை, பையர், மாட்டுப் பெண் ஆகியோரும் கிட்டத்தட்ட ஐம்பது நெருங்குபவர்கள், ஐம்பது + இல் இருப்பவர்கள்.
Deleteஎங்கள் ப்ளாகில் கூட என்னுடைய இந்தப் பதிவைக் காட்டவே இல்லை. சில சமயங்களில் இப்படி ஆகிறது. என்ன செய்ய முடியும். தொழில் நுட்பக் கோளாறுனு சமாதானம் பண்ணிக்க வேண்டியது தான்.
Deleteகலகலவென்று இருந்து விட்டு குழந்தை ஊர் சென்றதும் இருக்கும் வெறுமை புரிகிறது. எப்படி போகிறது தினசரி ரொடீன்?
ReplyDeleteஏதோ போகிறது. யாரானும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பார்க்கவென்று வருவதால் பொழுது நகர்கிறது. இங்கே அபார்ட்மென்டைச் சேர்ந்தவர்களே சிலர் அவ்வப்போது வந்து விசாரிப்பார்கள். ஞாயிறன்று துளசி, கோபால் வந்தனர். நேற்று நெல்லை/அவர் ஹஸ்பன்டோடு வந்திருந்தார். இன்னும் சில சொந்தங்கள் வருவதாகச் சொல்லி இருக்காங்க.
Deleteஎனெனில் இம்முறை தோஹா போனால் மறுபடி இந்தியா வருவேனா அல்லது அங்கிருந்தே பையருக்கு எங்கே மாத்தறாங்களோ அங்கேயோ அல்லது அம்பேரிக்காவில் பெண்ணிடமோ போவதற்கான வாய்ப்புகளே இருப்பதால் எல்லோருமே கொஞ்சம் வருத்தமும், கவலையும் அடைந்திருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை அதிர்ச்சி தந்த விஷயம் நான் இப்போது இந்தியாவை விட்டு வெளிநாட்டில் 180 நாட்களுக்கு மேல் வசித்திருப்பதால் இனி நான் ஒரு NRO என்கிறார் பையர். என் மனதை மிகவும் வேதனைப்படுத்திய ஒரு விஷயம் இது. :(
கு கு வின் விளையாட்டு தாத்தா மேல் இருக்கும் உரிமை... மனதில் படிகிறது. அவரும் அதை ரசித்துக் கொண்டே காய் நறுக்குகிறார்.
ReplyDeleteஆமாம், எல்லோரிடமும் என்றெல்லாம் சொல்லும். சின்னச் சின்ன விளையாட்டுக்கள் விளையாடும். தோஹா போன புதுசில் என்னோடு ஸ்நேக் அன்ட் லாடர், லூடோ, சீட்டுக்கட்டு என்றெல்லாம் விளையாடியது. ஏனோ பின்னர் அதைத் தொடரலை.
Deleteஅக்கம் பக்கம் இருப்பவர்கள் வந்து பேசுகிறார்களா? துளசி கோபால் தம்பதியர் வந்தார்களா? யார் கூட இருக்கிறார்கள்? மருமகளா?
ReplyDeleteஇஃகி,இஃகி,இஃகி,இஃகி, ஸ்ரீராம், மருமகள் கூட இருந்தால் கு.கு. தனியாவா சென்னைக்குப் போயிருக்கும்? இஃகி,இஃகி,இஃகி, துளசி/கோபால் வந்துட்டுப் போயிட்டாங்க.
Deleteநீங்கள் சமைக்கிறீர்களா? வெளியிலிருந்தா? உங்கள் ட்ரீட்மெண்ட் ப்ராசஸ் முடிந்து விட்டதா?
ReplyDeleteகண்ணுக்கான மருத்துவம் எனில் இன்னும் முடியலை. மற்றவற்றிற்கும் அவ்வப்போது போய் வருகிறேன். சாப்பாடு வெளியில் தான். வழக்கமாய் வாங்கும் மாமா. ராத்திரிக்குக் கொடுக்க முடியாதுனு சொல்லிட்டார். :(
Deleteகுழந்தையை நீங்கள் எவ்வளவு மிஸ் பண்ணுகிறீர்கள் என்பது தெரிகிறது. குழந்தையின் விஷமத்தை மாமா கோபிக்காமல் ரசித்திருக்கிறார்.
ReplyDeleteமாமா பொதுவாகவே கொவிக்க மாட்டார். அது யாராக இருந்தாலும்/என்னைத் தவிர்த்து. அவரின் கோபம், தாபம், மற்ற உணர்வுகள் எல்லாமும் என்னிடம் மட்டுமே காட்டுவார். நான் கூட அவரைப் பெரிய "காந்தி"னு நினைப்பு உங்களுக்கு எனச் சொல்லுவேன். காந்தி எப்படி இந்தியாவின் இந்து மக்களிடம் மற்றும் கஸ்தூரி பாயிடமும் மட்டும் தன் உணர்வுகளைக் காட்டினாரோ அது போல.
Delete