எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 14, 2026

PTK அல்லது ப்ரதம த்ருஷ்ட்ய குட்டக்கார்/Guilty at First Sight!


ப்ரதம த்ருஷ்டிய குட்டக்கார் படம் பார்த்தேன் இன்னிக்கு. இதைப் பற்றி முகநூலில் சிலர் படம் வந்த அன்னிக்கே பார்த்துட்டு விமரிசனம் எழுதி இருந்தாங்க. நெட்ஃப்ளிக்ஸ் தான் இதுவும். விமரிசனம் படிச்சவரை கதை நன்றாக இருந்ததால் இன்னிக்குத் திடீர்னு தோணிப் படத்தைப் பார்த்தேன். படம் ரொம்ப விறுவிறுப்புனு சொல்ல முடியாட்டியும் விறுவிறுப்புத் தான். பார்வதி தான் ஹீரோயின். இவர் ஜெயராம் மனைவி பார்வதியோ? தெரியலை. ஏனெனில் நீண்ட நாட்களாக நடிப்பதாகவும் இந்தப் படத்தின் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார் எனப் படிச்சேன். நன்றாகவே செய்திருக்கார். பொதுவாகவே மலையாளப்படங்களில் தமிழ், தெலுங்குப் படங்கள் போல மேக்கப் அதிகம் இருக்காது. இந்தப் படத்தில் எல்லாமே போலீஸ்காரர்கள் பற்றி என்பதோடு கதைக்களமும் போலீஸ் ஸ்டேஷன்.

அலீனா என்னும் பெண்மணிக்குக் காவல் துறையில் வேலை செய்த கணவன் ஏதோ ஒரு கும்பலைச் சமாளிக்கச் சென்றபோது கொல்லப்பட்டதால் கருணை அடிப்படையில் வேலை கிடைக்கிறது. உயர் அதிகாரி அவளுக்கு அலுவலக வேலை வழங்குகிறார். ஆனாள் அவளோ அதை மறுத்த்துத் தனக்கு சீருடை போட்டுக்கொள்ளும் போலீஸ் வேலையே தரும்படிக் கேட்டுக் கொள்ளக் கடுமையாகப் பயிற்சி செய்ய வேண்டும் என்பதும் அதில் தேர்வு பெற வேண்டும் எனவும் அவளுக்குச் சொல்லப்பட்டது. எல்லாவற்றுக்கும் சம்மதித்துப் பயிற்சியில் முழுத் தேர்வு பெற்றுப் பணியில் சேர்கிறாள். அங்கே நாட்டகம் என்னும் ஊரில் குற்றப்பிரிவின் ஓர் இளநிலை அதிகாரியாக வருகிறாள். அவளுக்கு முன்னால் அங்கே திவ்யா என்னும் பெண்ணும் அதே பதவியில் இருந்து வருகிறாள். ஸ்ரீநாத் என்னும் இளைஞன், தாசன் என்னும் கொஞ்சம் மூத்த அதிகாரி ஏ.எஸ்.ஐயாக இருக்கிறர். இவர்களுடன் அலினாவுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது. நால்வரும் சேர்ந்தே இருக்கின்றனர். 

கணவனை இழந்த அலினாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சின்ன வயசிலேயே அதீத வெள்ளத்தில் பெற்றோர் இறந்து அநாதையான அலினாவுக்கு மாமனார் மாமியாரும், உடல் நிலை சரியில்லாத ஒரு சகோதரனும். அனைவரையும் விட்டு விட்டுக் காவல் துறைக் குடியிருப்புக் கிடைச்சதும் அவர்களைக் கூப்பிட்டுக் கொள்வதாகச் சொல்லிவிட்டு அலினா இங்கே வந்து வேலையில் சேர்கிறாள். திவ்யாவுக்குக் குழந்தை இல்லை. ரொம்ப வருஷமாகக் குழந்தைக்காகக் காத்திருக்கிறாள். ஸ்ரீநாத் ஒரு பெண்ணைக் காதலிக்கிரான். ஆனால் அவன் குடும்பம் பெண்ணின் குடும்பத்தை விட அந்தஸ்துக் குறைவு என்பதால் திருமணத்துக்குப் போராட்டமாக இருக்கிறது. தாசனோ 30 வயதுக்கு மேல் ஆகியும் கல்யாணத்துக்காக ஏங்குகிறார். இவர்கள் நால்வரின் கூட்டணியில் அந்தக் காவல் நிலையத்தில் எதிர்பாரா விதமாக நடக்கும்  ஒரு மரணம் நால்வரையும் அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஏற்கெனவே ஸ்டேஷன் அதிகாரியான சேவியருக்கு இவர்கள் நால்வரையும் பிடிக்கவில்லை என்பதோடு தாசனை எப்படியாவது ஏதானும் பிரச்னையில் மாட்டிவிடணும் நினைப்பும் இருக்கு. அந்த ஸ்டேஷனைப் பார்த்துக்கொள்ளும் இன்னொரு உயர் அதிகாரியான பிரதாப் மோகன் அனைவரையும் அனுசரித்துச் செல்வதால் எல்லோருக்கும் கொஞ்சம் நிம்மதி கிடைக்கிறது. 

ஆனால் அதைக் கெடுக்க வைப்பது போல் இரவு நேர ரோந்துப்பணிக்குச் செல்லும் அலினா, ஸ்ரீநாத், தாசன் மூவருக்கும் அங்கே ஏற்பட்ட ஒரு சந்திப்பும் அதனால் ஒருவனைப் பிடித்து வைத்து ஸ்டேஷனில் விசாரிக்க அழைத்து வந்தப்போ எதிர்பாராமல் குண்டு வெடித்து அவன் இறக்க நேரிடும் பிரச்னைகளே கதை. இறந்தவன்  ஒரு பெரிய துணிக்கடையின் மானேஜர். ஜெயபிரகாஷ் என்னும் ஜேபி. ஆனால் இந்தப்போர்வையில் இருந்து கொண்டு அவன் செய்வதோ கூட வேலை பார்க்கும் பெண்ணைச் சேர்த்துக் கொண்டு பணக்காரர்கள் வீட்டில் கொள்ளை அடிப்பது. அப்படிக் கொள்ளை அடிக்க முன்னாள் ராணுவ வீரர் வாசுதேவன் வீட்டுக்குப் போக அங்கே நடக்கும் சண்டையில் ஜேபி தன்னுடன் துணை இருக்கும் பெண்ணையும் கொன்றுவிட்டு வாசுதேவனையும் கொன்றுவிட்டுத் தப்பி வரும் வழியில் தான் இந்தக் காவலர்களிடம் மாட்டிக் கொள்கிறான். பின்னர் காவல் நிலையத்தில் எதிர்பாராவிதமாகச் சுட்டுக் கொல்லப்படுகிறன். அதை விசாரிக்க வரும் அதிகாரி ஹாரிஸ் மீரானின் துப்பறியும் திறமையும் உண்மையைக் கண்டு பிடித்தும் யாரையும் எதுவும் செய்ய முடியாமல் போவதும் தான் கதை. எல்லாத்தையும் சொல்லிட்டேனோ? ஆனால் எல்லா விமரிசனங்களிலும் இந்தக்கதையைச் சொல்லி இருக்காங்க என்பதால் நானும் சொல்லிட்டேன். மற்றவற்றுக்கு உங்க வீட்டு நெட் ஃப்ளிக்ஸைப் பார்க்கவும்.

நடிகர்கள் அனைவருமே இயல்பாக வந்து போகிறார்கள். ஹாரிஸ் மீரானாக நடிக்கும் விஜயராகவனின் கம்பீரம், நிதானம், எந்த விஷயத்திலும் தீவிர கவனம் செலுத்துதல் எல்லாவற்றையும் ஒரு போலீஸ் உயர் அதிகாரியாக நன்கு வெளிப்படுத்துகிறார். கடைசிக்காட்சியில் அலீனாவும் அவரும் பேசிக் கொள்ளும்போது அலினாவின் சாமர்த்தியத்தையும் அவள் கொலையை மறைத்து எந்தவிதமான சாட்சியமும் இல்லாமல் பண்ணியதும் தெரிந்து கொண்டே ஹாரிஸ் மீரான் சும்மா இருக்க நேரிடுகிறது. கதை முழுவதும் ஹாரிஸ் மீரான் எழுதிப்பிரபலமான புத்தகமும் அதில் வரும் மேற்கோள்களும் அலினாவால் சொல்லப்படுகிறது. அவள் கணவன் ஆப்ரஹாமுக்கு ஹாரிஸ் மீரான் தான் காட்ஃபாதர் மாதிரி எனச் சொல்கிறாள் அலினா. அந்தப் பாத்திரத்தில் நடிப்பவரும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக வருபவரும் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோல். ராணுவ அதிகாரியாகப் பார்த்திபன் வருகிறார். ஆஸிஃப் அலி என்பவர் அலீனாவின் கணவனாக வருகிறார். காட்சிகள் அனைத்துமே வீட்டில் யாரை வேண்டுமானாலும் வைச்சுண்டு பார்க்கலாம். ஒரு பாடல் கூட இல்லை. எந்த விதமான ஆபாசக் காட்சிகளும் இல்லை. ஒளிப்பதிவு அருமை. பின்னணி இசை உறுத்தவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் கிடைச்சாலும் நான் மலையாளத்திலேயே பார்த்தேன். ஆங்கில சப் டைட்டில்கள்/ என்றாலும் வசனம் புரிகிறது. கஷ்டமாய் இல்லை. நல்லவேளையா இதைத் தமிழிலேயே எடுக்கலையோ பிழைச்சோம். எடுத்தால் கொலை செய்திருப்பாங்க. கதை எழுதியவங்க பார்த்தால் தமிழர்கள் போலத் தான் இருக்கு.