எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 25, 2009

அப்பாடா! :D

முந்தாநாள் கூகிளாரா? இல்லை, ப்ளாகரா?? ஒரு ஆட்டு ஆட்டி வச்சுட்டாங்க சிலரை. ஒரு சிலருக்கு எண்ணங்கள் பதிவுக்கு மட்டும் சுட்டி கிடைக்கலை, இன்னும் சிலருக்கு வலைப்பக்கமே திறக்கமுடியலை. சிலருக்கு என்னுடைய எந்தப் பதிவுகளுமே கிடைக்கவில்லை. நானும் கண்ணன் வருவான் பதிவுகளில் வந்த பின்னூட்டங்களை மெயில் மூலம் வெளியிட்டுவிட்டு, பதில் கொடுக்க முயன்றால் திறக்கவே இல்லை. இது அடிக்கடி நடக்கும் ஒன்று என நினைத்து அசட்டையாக குழும மடல்களைப் பார்க்கப்போய்விட்டேன். பின்னர் பதிவுகளை அப்லோட் செய்ய நினைத்து முயன்றால் மீண்டும் வரவில்லை. சைட் விக்கினு ஒண்ணு இருக்கு, புதுசா, அங்கே போய்க் கூட வெளியிடலாம்னு ஒரு செய்தி! திரும்பத் திரும்ப முயன்றதில் இன்னொரு செய்தி, இந்த வலைப்பக்கங்களே இப்போக் கிடையாது, நீ வேண்டுமானால் புதுசா உன்னோட பேரிலே திறந்துக்கோ. sivamgss.blogspot.com பேரிலே இப்போ எதுவுமே இல்லைனு அடிச்சுச் சொல்லுது.

கிட்டத் தட்ட ஒருமணி நேரம் முயன்றும் எதுவும் வரலை. வலைப்பக்க உதவிக்குப் போய்ப் பார்னு எரர் மெசேஜ் சொல்லுது. ஆனால் அங்கேயும் போகமுடியலை. சரினு உதவி கேட்டு ஒரு பதிவு எழுதி குழும மடல்களுக்கும், எண்ணங்கள் பதிவுக்கு ஜிமெயில் மூலமும் அனுப்பினேன். எண்ணங்கள் பதிவிலே வெளியீடு ஆனதா என்னனு பார்க்கமுடியலை. குழுமத்திலும் நிறைய பேருக்கு இதே பிரச்னை இருந்திருக்கிறது அப்புறமாத் தெரிஞ்சது. ஆகையால் உடனே பதிலும் வரலை. மறுபடியும் மெயிலைப் பார்த்தால் கோபி கேட்டிருந்தார் என்ன ஆச்சுனு?? இன்னும் சிலருக்கும் எதுவுமே வரலைனும் தெரிஞ்சது. கணினியை மூடிவிட்டு நிம்மதியா உட்கார்ந்தேன். என்றாலும் கிட்டத் தட்ட எண்ணூறு பதிவுகளுக்கு மேல் எழுதினது. சில பதிவுகள் மொக்கைகள்தானேனு இருந்தாலும், மற்றப் பதிவுகளை அர்த்தமுள்ள பதிவுகள்னு சொல்லிக்கமுடியாது என்றாலும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே? அதுவும் ராமாயணத்துக்கும், இப்போ எழுதற கண்ணன் பதிவுகளுக்கும் பல புத்தகங்கள், கூகிளார் தயவில் பல இடங்களுக்கும் போய்த் தேடிக் குறிப்புகள் எடுத்துனு. அதெல்லாம் போயிடுச்சோனு கொஞ்சம் வருத்தம் தான்.

என்றாலும் பரவாயில்லை, புதுசாவே ஆரம்பிப்போம்னு மனசைத் தேத்திட்டு, மறுபடியும் ஒருமணி நேரம் கழிச்சுக் கணினியைத் திறந்து உடனே வலைப்பக்கம் வராமல், குழும மடல்களைப் பார்த்துட்டு, அங்கே இருந்தே வலைப்பக்கம் முயன்றால் ஆன்மீகப் பயணம் மட்டும் திறந்தது. அங்கே இருந்து உடனே ப்ரொஃபைலுக்கும் போக முடிந்தது. ப்ரொஃபைலே வராமல் இருந்தது. ப்ரொஃபைல் வரவும் அங்கேயே எண்ணங்கள் சுட்டியும் இருந்தது. கோபி பார்த்தப்போ ப்ரொஃபைலிலே எண்ணங்கள் சுட்டியே இல்லைனு வருத்தப்பட்டிருந்தார். அதுவேறே யோசனை. சுட்டி இருந்ததும் க்ளிக்கினால் உடனேயே வந்தது. என்னுடைய உதவி தேவை பதிவு மெயில் மூலம் அனுப்பினதும் வெளியாகி அதுக்கு ரா.ல. பித்தனின் வாக்கு இருவரின் பின்னூட்டங்களும் வந்திருந்தது. மறுநாள் தான் தெரியும் இது மாதிரி பிரச்னை இரண்டு மணி நேரத்துக்கும் மேலே பலருக்கும் இருந்திருக்குனு. செர்வர் பிரச்னை என்று சொன்னார்கள். எப்படியோ எல்லாம் சரியாச்சு இறைவன் அருளாலே. கண்ணன் காத்துட்டு இருக்கான் வரதுக்கு. சீக்கிரமாய் வந்துடுவான். பதில் கொடுத்த அனைவருக்கும், தனி மடலில் விசாரித்தவர்களுக்கும், உதவி கேட்டதுக்கு பதில் சொன்னவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னோட பதிவுகளுக்கும் ரசிகர்கள் இருக்காங்கனும் தெரிய வந்ததில் சந்தோஷமே.

Friday, October 23, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - கண்ணனின் விஸ்வரூபம்!


ஏதோ ஓர் உணர்வு எனக்குள்ளே, என்னைத் தூண்டி விடுவது போல் இருக்கும், எப்போதும். நீ பிறந்ததன் காரணமே வேறே என எதுவோ என் காதுகளில் கூறுவது போல் கேட்கும். எனக்குள்ளே என்னை அறியாமல் சில மாற்றங்களும் ஏற்படத் தொடங்கின. ஒரு சாதாரண மனிதனால் செய்ய முடியாத சில விஷயங்களை நான் அநாயாசமாய்ச் செய்ய முடிந்தது. இது எப்படி என எனக்குப் புரியவில்லை. ஆனால் நான் உண்மையில் வசுதேவனுக்கும், தேவகிக்கும் பிறந்த பிள்ளை என்பதும், கம்சன் என் வாழ்க்கையில், நம் வாழ்க்கையில் விளைவித்து வரும் விளைவுகளையும் கேட்டதுக்கு மறுநாள், நான் வழக்கம்போல் கோவர்த்தன மலை மீது ஏறி அதன் உச்சியில் நின்று கொண்டு யோசித்துக் கொண்டிருந்தேன். சூரியன் தன் பொற்கதிர்களை பூமிக்கு அனுப்ப முயன்று கொண்டிருந்த அந்த வேளையில் என் கண் முன்னே விரிந்ததொரு காக்ஷி. அந்தக் காக்ஷியில் நான் ஒரு பாத்திரமாக இருந்து கொண்டே, அந்தக் காக்ஷியை வேறொரு நபராகவும் பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

“இந்தப் பூவுலகில் இப்போது மறைந்து கொண்டிருக்கும் தர்மம், சநாதன தர்மம் கொஞ்சம் கொஞ்சமாக நிலை பெறுவதையும், தீமைகள் அழியத் தொடங்குவதையும் கண்ணாரக் கண்டேன். அதே சமயம் மக்கள் யாவரும் தர்மத்தின் பாதையில் செல்லாதவர்களையும் தர்மத்தின் பாதையில் செலுத்த ஆரம்பிப்பதையும் என் கண்களால் கண்டேன். ஆனால், ஆனால், …” தயங்கினான் கண்ணன். “ கண்ணா, மேற்கொண்டு என்ன சொல், உன் வாயால் அவற்றைக் கேட்கவே நான் காத்திருக்கிறேன்.” என்றார் அக்ரூரர். “அந்த தர்மம் விண்ணையும், மண்ணையும் மட்டுமில்லாமல் இந்தப் பிரபஞ்சம் பூராவையும் தன் கரங்களால் அரவணைப்பதைக் கண்டேன் அக்ரூரரே! விண்ணுக்கும், மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நிற்கக் கண்டேன். இதுக்கெல்லாம் காரணகர்த்தா….. “ மீண்டும் தயங்கினான் கிருஷ்ணன். “அப்புறம்?” என்றார் அக்ரூரர். “அப்புறம் என்ன அந்தக் காக்ஷி சிறிது நேரத்திலேயே மறைந்து போனது.” என்றான் கண்ணன். “அவ்வளவு தானா??”

”ஆம், ஆனால் உண்மையில் அவை காக்ஷிகளாக எனக்குத் தெரியவில்லை. உண்மையான என் வாழ்க்கையை நான் வாழ்வதைப் போலவே இருந்தது. மேலும் அந்தச் சமயம் நான் வெறும் வசுதேவக் கிருஷ்ணனாகவோ, அல்லது கோகுலத்து கோவிந்தனாகவோ, விருந்தாவனத்துக் கண்ணனாகவோ இல்லை.”

“பின்??”

“என்னை நானே அந்தப் பர வாசுதேவனாக உணர்ந்தேன் அக்ரூரரே! இவை அனைத்துமே என்னிலிருந்தே தோன்றியதாகவும், என்னிலே அடங்குவதாகவும் உணர்ந்தேன். தர்மத்தின் பிறப்பிடமும், இருப்பிடமும், அடங்குமிடமும் நானே என உணர்ந்தேன்.” அக்ரூரர் இப்போது தன்னையும் அறியாமல் மரியாதை கலந்த பக்தியோடு, கண்ணனிடம் மிகவும் மெதுவாய்க் கிசுகிசுப்பான குரலில், “ பின்னர்?” என மீண்டும் கேட்டார். ‘நான் திரும்ப விருந்தாவனம் வந்தேன். எல்லாமே மாறுபட்டுத் தெரிந்தது எனக்கு. என் கோகுலத்து உறவுகள் அனைத்துமே என்னுள் அடங்கினவர்களாகவும், அவர்களின் செயலுக்கும், சொல்லுக்கும் நானே காரணகர்த்தா எனவும் தெரிந்து கொண்டேன். அவர்களை சாதாரண உறவு முறையுள்ளவர்களாக என்னால் பார்க்கமுடியவில்லை. அவர்களை விட நான் எவ்வளவோ பெரிய மனிதன் என்ற உணர்வு என்னை அறியாமல் ஏற்பட்டது. நீ இந்த விருந்தாவனத்து மக்களோடு வாழமட்டும் பிறக்கவில்லை என என் காதுகளில் எதுவோ வந்து சொல்லிக் கொண்டே இருந்தது. கர்காசாரியாரும் அதை உறுதி செய்தார். கம்சனின் அழிவு என் மூலம் தான் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் இவை அனைத்துமே என்னுடைய பிரமையோ என்ற எண்ணமும் என்னை விட்டுப் போகவில்லை. ஆகவே நான் காத்திருந்தேன்.”

“எதற்காக, மகனே, எதற்குக் காத்திருந்தாய்?” அக்ரூரர் கேட்டார். “நான் எதுவும் செய்யக் கூடியவன் என்பது எனக்கு உறுதி பட்டு விட்டது எனினும் அதற்கு ஒரு அடையாளம், அல்லது குறிப்பிட்ட சைகை எதுவானும் எனக்குத் தெரியவேண்டும். நான் என்னைப் பற்றி நினைப்பது சரிதான் என்பதை உறுதி செய்யும் ஒரு குறியீடு, அது தெரியவேண்டும் எனக்கு. அப்போது தான் நான் என் வேலைகளில் முன்னேற முடியும்.என் நோக்கமும், நான் பிறந்ததின் அர்த்தமும் சரிவர நிறைவேற்றப் படும். அதை உறுதி செய்யும் விதமாகவே நான் இந்திரவிழாவைப் பயன் படுத்திக் கொண்டேன். அந்த விழாவை இந்திரனுக்காக எடுக்க விடாமல் என் மக்களைச் சமாதானம் செய்து, இந்திரனைக் கண்டு பயந்த அவர்களை கோவர்தன மலைக்கு விழா எடுக்க வைத்தேன். அப்போது எனக்குக் கிடைத்தது அந்த நல்ல சகுனக்குறியீடு. என் வேண்டுதலுக்குக் கட்டுப் பட்டு கோவர்தன மலையானது இரண்டு முழங்களுக்கு மேல் உயர்ந்தது. “

பக்தியோடு பயமும் கலந்தவண்ணம் கண்ணனைப் பார்த்தார் அக்ரூரர். அவருக்கு அப்போது கண்ணனைச் சுற்றி இந்த அகில உலகமும் சுழல்வது கண்களில் காண முடிந்தது. சூரிய, சந்திரர், நக்ஷத்திரங்கள், பூமி, ஆகாயம் எல்லாமே அவனோடு சேர்ந்து சுழல்வது போலவும், கண்ணனின் குரலோ, எல்லையில்லாத, முடிவற்ற அந்தப் பரம்பொருளின் குரல் போலவும் ஆழ்ந்து எங்கோ தூரத்தில் இருந்து கேட்பது போலும் கேட்டது. அக்ரூரர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சங்கு, சக்ரங்களோடு, விண்ணுக்கும், மண்ணுக்குமாய் அந்தக் கிருஷ்ணன் விஸ்வரூபம் எடுத்து நிற்பது போல் உணர்ந்தார். அவரை அறியாமல் அவர் கைகள் கூப்பின. “வாசுதேவா, பர வாசுதேவா, எல்லையற்ற பரம்பொருளே!” என்றன அவர் வாய். குனிந்த கண்ணனின் பாதங்களில் விழுந்த நமஸ்கரிக்க எண்ணிக் குனிந்த அவருக்குத் திடீரெனத் தாம் குருடாகிவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றியது. ஒரு கணம் எதுவுமே தெரியவில்லை, புரியவும் இல்லை. என்ன நடந்தது என நிதானிப்பதற்குள்ளாக, அவர் கண்ணன் தம்மை வணங்க வருவதையும், தம் கைகள் கிருஷ்ணனின்கைகளைத் தடுத்துக் கொண்டிருப்பதையும் கண்டார். அக்ரூரர் காதுகளி, “ வாசுதேவா, பர வாசுதேவா, எல்லையற்ற பரம்பொருளே!” என்னும் வார்த்தைகள் எங்கோ ஆழ் கடலுக்குள்ளிருந்து கேட்பது போலவும், “வாசுதேவன் நானே!” என்னும் பதில் குரலும், எங்கோ தூரத்திலிருந்து கேட்பது போலவும் கேட்டது. திரும்பத் திரும்ப எதிரொலிப்பது போல் கேட்டுச் சற்று நேரத்தில் தேய்ந்து போனது அந்தக் குரல்கள். அக்ரூரருக்கு இப்போது ரதத்தில் தம் எதிரே அமர்ந்திருந்த அந்த இளம் வாலிபனின் சுந்தர முகமும், அந்த முகமும், கண்களும் தம்மைப் பார்த்துச் சிரிப்பதையும், இந்த இளைஞனை எவராலும் வெறுக்கவே முடியாது அப்படிப்பட்ட முகராசி உள்ளவன் இவன் என்பதும், அனைவராலும் இவன் நேசிக்கப் படுவான் என்பதும் புரிந்தது. தம் கண்களைத் தேய்த்துக் கொண்டார். நடந்தவை அனைத்தும் கனவா? இல்லை நனவா? நான் தூங்குகிறேனா? விழித்திருக்கிறேனா??

“வாசுதேவா, அவ்வளவு தான்!’இந்தக் குரலை நான் தூக்கத்தில் கேட்டேனா? விழித்துக் கொண்டே கேட்டேனா??” அக்ரூரருக்கு ஒண்ணுமே புரியலை. “மாமா, அதோ பாருங்கள் ஒரு பெரிய மரமும், அதன் நிழலும். எவ்வளவு பெரிய மரம்?? அதன் நிழல் எப்படிப் படர்ந்திருக்கிறது??யமுனைக்கரையில் இந்த மரமும், அதன் நிழலும் எத்தனை சுகம்?? நாம் இங்கே சற்றே தங்கி இளைப்பாறிச் செல்லலாமா? யமுனையில் குளிக்கவேண்டும்போல் எனக்கு ஆசையாய் உள்ளது.” சிறு குழந்தை போல் குதூகலித்துச் சொன்னான் கிருஷ்ணன். “நீ விரும்பிய வண்ணமே செய்யலாம், குழந்தாய்!” என்றார் அக்ரூரர். பலராமன் தான் ரதத்திலேயே தூங்கப் போவதாகவும், குளிக்க வரவில்லை என்றும் சொல்லிவிட்டு, கம்சனை எதிர்கொள்ளும் அளவுக்கு பலத்தைச் சேகரித்துக் கொள்ளப் போவதாயும் சொன்னான். கண்ணனும் அதை ஆமோதித்தான். அக்ரூரர் யமுனையில் இறங்கிக் குளிக்க ஆரம்பித்தார். என்ன இது?? அவரோடு குளிப்பது அந்த வாசுதேவனோ அல்லவோ?? கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தார் அக்ரூரர். மீண்டும் மீண்டும் அவருக்குத் தன்னுடன் குளிப்பது அந்தப் பரவாசுதேவனாகவே தெரிந்தது. அவனோடு சேர்ந்த அனைத்து மனிதர்களும், அவர்களில் கிருஷ்ணனும் தெரிகின்றானே?? கடவுளே என்ன இது? நான் பைத்தியம் ஆகிவிட்டேனா? மீண்டும் தலையை உலுக்கிக் கொண்டு பார்த்தார் அக்ரூரர். கிருஷ்ணன் நீராடிக் கொண்டிருந்தான். அவரைப் பார்த்துச் சிரித்தான். கடவுளே இந்தச் சிரிப்பு??? உன்னுடைய விதியே என் கையில் என்று என்னைப் பார்த்துச் சொல்லுகிறதே!

உதவி தேவை!

We're sorry, but we were unable to complete your request.

When reporting this error to Blogger Support or on the Blogger Help Group, please:

    * Describe what you were doing when you got this error.
    * Provide the following error code and additional information.

bX-59cppw
Additional information
host: sivamgss.blogspot.com
uri: /2009/10/blog-post_21.html

This information will help us to track down your specific problem and fix it! We apologize for the inconvenience.
Find help

See if anyone else is having the same problem: Search the Blogger Help Group for bX-59cppw
If you don't get any results for that search, you can start a new topic. Please make sure to mention bX-59cppw in your message.

ஹிஹிஹி, காலம்பர வலைப்பக்கம் போக முடிஞ்சது. இப்போ எந்த வலைப்பக்கமும் திறக்கலை. இந்த போஸ்ட் வருதானும் பார்க்க முடியாது. மெயில் மூலம் அனுப்பறேன். என்ன செய்யறதுனு தெரிஞ்சவங்க மெயில் அனுப்புங்க. கமெண்டினாலும் மெயிலுக்கு வரும். இது பொதுப் பிரச்னை மாதிரித் தான் தெரியுது என்றாலும் ஒரு மணி நேரத்துக்குள் எப்போவும் சரியாகிடும். இன்னிக்குத் தொடர்வதால் கொஞ்சம் யோசனை. தனிப்பட்ட பிரச்னை இல்லைனு நினைக்கிறேன். எதுக்கும் அனுப்பி வைக்கிறேன்.

Wednesday, October 21, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், - கண்ணனுக்குப் புரிந்துவிட்டது!

பலராமன் அக்ரூரரிடம், “கம்சன் உங்களுக்கு வலைவிரிக்கும்வரையில் நீங்கள் ஏன் அசட்டையாக இருந்தீர்கள்? “ என்று கேட்டான். “

“நாங்கள் முட்டாள்கள், அதுவும் ஒரு வருடம் இருவருடம் அல்ல, பல வருடங்கள் முட்டாள்களாய்க் கம்சனுக்குக் கீழ்ப்படிந்து இருந்துவிட்டோம். கம்சன் ஒரு வஞ்சகன். பெரும்பாலான அந்தகர்கள் ப்ரலம்பனுக்குக் கீழே ஒன்று சேர்ந்து இருந்துவிட்டனர். அவனுடைய பிரதானத் தளபதியான ப்ரத்யோதாவோ மிகவும் பலமுள்ளவனாகவும், கம்சனிடம் அதீத விஸ்வாசமுள்ளவனாகவும் இருந்துவிட்டான். எங்கள் பக்கம் ஆட்களே இல்லாமல் போயிற்று.” என்றார் அக்ரூரர்.

கண்ணன் அப்போது குறுக்கிட்டு, “இவனைப் போன்ற ஒரு கொடியவனை இவ்வளவு வருடங்கள் வளரவிட்டதே மாபெரும் தவறு. அது போகட்டும், இன்று என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான். “ம்ம்ம்ம்ம்ம்., இன்றோ, நாளையோ, தநுர்யாகத்தின் கடைசி நாளோ, தெரியலை, அவன் ஒரு கடைசி முடிவு எடுப்பான். அந்த முடிவு நமக்கெல்லாம் ஒரு பேரழிவாக இருக்கக் கூடும். நம் அனைவரையும் ஒருசேரக் கொல்லத் தயங்க மாட்டான் கம்சன்.” என்றார் அக்ரூரர்.

“எனில் எங்களை ஏன் இங்கே வரவழைத்தான் கம்சன்? எங்களையும் சாகடிக்கவா?” பலராமன் கேட்டான்.

அக்ரூரரால் பேசமுடியவில்லை. பின்னர் தன் வார்த்தைகளைத் தானே எண்ணிப் பார்த்துக் கொள்ளுவது போல், நிதானமாய்ப் பேச ஆரம்பித்தார். “அவனுக்குக் கிருஷ்ணனைக் கொல்லவேண்டும். கிருஷ்ணன் உயிருடன் இருந்தால் நாரதர் சொன்ன தீர்க்க தரிசனம் பலித்துவிடும், ஆகையால் முதலில் கிருஷ்ணனைக் கொல்லவேண்டும், அதுவே அவன் எண்ணம்.” தனக்குள்ளேயே வார்த்தைகளை அளந்து பேசுவது போல் பேசினார் அக்ரூரர். கிருஷ்ணன் பெரிதாகச் சிரித்தான். சிரிப்பைக் கேட்ட அக்ரூரருக்குச் சில்லிட்டது. இந்தச் சிரிப்பு! சாதாரண மானுடனின் சிரிப்பா? இல்லை, இல்லை, உலகத்து மக்கள் அனைவரின் விதியையும் அறிந்த ஒருவனின் சிரிப்பாக அல்லவோ காணப்படுகிறது. அனைவரின் விதியும் என் கையிலே என்ற அர்த்தம் நன்கு புலப்படுகின்றதே. அக்ரூரர் முதல்முறையாகக் கண்ணனைப் புரிந்து கொண்டார். இவன் சாமானியனே அல்ல. இவனின் தன்னம்பிக்கையும் சாதாரணமானதே அல்ல. இவன் சிரிப்பிலேயே இவ்வளவு அர்த்தம் பொதிந்து கிடக்கிறதே! நம்பிக்கையின் ஊற்றுக் கண்ணனிடமிருந்து அக்ரூரருக்கும் பாய்ந்தது.

“அவனால் என்னைக் கொல்ல முடியாது. நான் தான் அவனைக் கொல்வேன்.” உறுதியான குரலில் கண்ணன் சொன்னான்.

“எப்படி அறிவாய் நீ?” அக்ரூரர் கேட்டார்.

“குரு கர்கரும், குரு சாந்தீபனியும் சொன்னார்கள்.”

“கண்ணா, அவர்கள் எங்களின் பல வருடத் துயரைப் பற்றிச் சொன்னார்களா? நாங்கள் அனுபவித்து வரும் துயரை நீ புரிந்து கொண்டாயா?”

“கம்சனின் அனைத்து துர் நடத்தைகளையும் எனக்குச் சொன்னார்கள்.”

“குழந்தாய், கண்ணா, உனக்குப் புரிந்திராது, நாங்கள் எத்தகையதொரு துக்கத்தையும், கஷ்டங்களையும் அனுபவித்தோம் என்று. இத்தனை கஷ்டங்களுக்கிடையிலேயும், இத்தனை நாள் வாழ்ந்திருக்கிறோம் என்பதே எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஆனால் அத்தனையும் எதனால் தெரியுமா? நீ வருவாய், எங்களைக் காப்பாய் என்ற ஒரே நம்பிக்கையில் தான். உன் தாத்தாவும், யாதவகுலத் தலைவரும் ஆன உக்ரசேனரைச் சிறையில் வைத்திருக்கிறான் கம்சன். உன் தாயும், தந்தையுமோ எனில் ஒவ்வொரு நாளும் நரகத்தில் வாழ்வது போல் வாழ்கின்றனர். உன் கூடப் பிறந்த சகோதரர்கள் ஆறு பேர் என் கண்ணெதிரே கம்சனால் பிறந்த உடனேயே கொல்லப் பட்டனர். பலராமனை எப்படிக் கஷ்டப்பட்டு மாற்றினோம் தெரியுமா? அவனாவது பிறக்கும் முன்னரே எடுத்து மாற்றப் பட்டான். ஆனால் நீ? பிறந்துவிட்டாய்! பிறந்த குழந்தையான உன்னை கோகுலத்துக்குக் கொண்டு நந்தனிடம் கொடுத்து, வளர்க்கச் சொல்லி! எல்லாம் எதுக்காக? என்றாவது ஒருநாள் நீ வருவாய்! நாரதர் சொன்னாப்போலவே கம்சனை உன் கைகளால் கொல்வாய். எங்கள் துன்பத்தைப் போக்குவாய்! என்ற நம்பிக்கையில் தான். வேத வியாசரும் இதையே தான் உறுதி செய்தார்.” பேசும்போதே அக்ரூரரின் கண்களில் கண்ணீர் ததும்பியது.

“மாமா, அழாதீர்கள், அழவேண்டாம், நான் தான் வந்துவிட்டேனே!” கண்ணனின் குரலை அழும்பிள்ளையைச் சமாதானம் செய்யும் தகப்பனின் தொனி. “ நான் அறிந்து கொண்டேன் மாமா. கம்சன் எவ்வாறு யாதவ குலத்தை நாசம் செய்து வந்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டேன். அவர்கள் நிலம், பலம், சுகம், போகம், செல்வம் என அனைத்தையும் அபகரித்திருக்கிறான். பலம் பொருந்திய சிலரை மதுராவை விட்டு வெளியேயும் தள்ளிவிட்டான். ம்ம்ம்ம்ம்ம் நான் பிறக்கும் முன்பும், பிறந்த பின்பும் யாதவகுலப் பெண்மணிகளில் சின்னஞ்சிறு குழந்தைகள் அவனால் கொல்லப் பட்டன என்பதையும் நான் அறிந்தேன். “ கண்ணன் மெதுவான குரலில் பேசினாலும் அதில் தெரிந்த தீர்மானமும், உறுதியும், குரலின் தொனியும் கேட்பவர் எலும்பைச் சில்லிட வைத்தது.

“ஆம், கண்ணா, தான் யாருக்கும் பதில் சொல்லவேண்டியதில்லை என நினைத்துவிட்டான்.” என்றார் அக்ரூரர்.

“தர்மத்தை விட்டு விலகி விட்டான் வெகுதூரம் !” கண்ணனின் குரலின் அசாதாரணத் தொனியைக் கண்ட அக்ரூரர் உடல் சிலிர்க்க அவர் மனம் இன்னமும் உறுதிபடக் கண்ணனின் மேல் நம்பிக்கை வளர ஆரம்பித்தது. “கண்ணா, உன்னுடைய முக்கியமான வேலை, நீ பிறந்ததின் காரணம் அறிந்தாய் அல்லவா?” அக்ரூரர் கேட்டார், “ஆம்” என்றான் கண்ணன்.

“எப்படி, கண்ணா, எப்படி? எப்போது நீ இவற்றைப் புரிந்து கொண்டாய்?”

“பலநாட்களாகவே என்னுள் ஏதோ மாற்றங்கள். என்னனு புரியாமல் இருந்தது. ஆனால் ஆனால்” கண்ணன் யோசனையுடன் தொலை தூரத்தைப் பார்த்த வண்ணம் பேசினான்.” குரு கர்கரோடு, குரு சாந்தீபனியும் வந்து நான் உண்மையில் யார் என்பதைத் தெரிவித்தார்கள். அன்று எனக்குள் குழப்பம். மறுநாள் நான் கோவர்தன மலையின் உச்சிக்குப் போய் அங்கே இருந்து சுற்றிலும் பார்த்தேன். உதயம் ஆகிக் கொண்டிருந்த சூரியனைப் பார்த்தேன். வேகமாய் ஓடிக் கொண்டிருந்த யமுனையைப் பார்த்தேன். சூரியன் உதயம் ஆகிக் கிரணங்கள் பூமியில் பட்டன. அப்போது!........ கண்ணன் நிறுத்தினான். “ மாமா, நான் சொல்லலாமா உங்களிடம்? நீங்கள் என்னைச் சரியாகப் புரிந்து கொள்வீர்களா? அல்லது நான் கேலிக்கு உள்ளாவேனா?”

"இல்லை, கண்ணா, சொல், நீ என்ன உணர்ந்தாய் என்பதைச் சொல், நான் சரியாகவே புரிந்து கொள்வேன்," என்றார் அக்ரூரர். கண்ணன் தொடர்ந்தான்.

Sunday, October 18, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்! மதுராவை நோக்கி!

அன்று விடிகாலையிலேயே நந்தன் தன் ஆட்களுடனும், கம்சனுக்கான கப்பப் பொருட்களுடனும், தன் வண்டிகளைத் தயார் செய்து மதுராவை நோக்கிய பிரயாணத்தை ஆரம்பித்துவிட்டான். அக்ரூரரும் தான் வந்த ரதத்தின் குதிரைகளைத் தயார் செய்து, அவற்றை ரதத்தில் பூட்டிக் கிளம்பத் தயாராக விருந்தாவனத்தின் வெளிநகரில் கண்ணன் வரவுக்காகக் காத்திருந்தார். விருந்தாவனத்திலோ, கிருஷ்ணனுக்கும், பலராமனுக்கும் விடைபெற்றுக் கொள்ளப்பல நண்பர்கள், பெரியோர்கள், சிறியோர்கள், ஒத்த வயதுடைய இளைஞர்கள், இளம்பெண்கள். ஒருவர் பாக்கி இல்லாமல் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டிருந்தனர் என்றாலும் விருந்தாவனத்து மக்களுக்கு அவர்களின் கண்ணின் கருமணியான கண்ணன் அங்கிருந்து செல்வதில் அவ்வளவு இஷ்டம் இல்லைதான். என்றாலும் கம்சனின் வார்த்தையை மீற முடியாதே! கண்ணனைப் பார்க்க அனைவரும் கூடிவிட்டனர். அவர்களோடு கூட விருந்தாவனத்து ஆவினங்களும் கூடிவிட்டன, கண்ணன் பிரிவைத் தாங்க முடியாமல். சற்றுத் தொலைவில் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அக்ரூரருக்கோ ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். கிராம மக்கள் புடை சூழ வந்து கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில் தன் தலையில் சூடி இருந்த மயிலிறகால் கண்ணன் தனித்துத் தெரிந்தான். பலராமனோ எனில் அவனுடைய கட்டுமஸ்தான தேகத்தால் தனித்துக் காணப்பட்டான். இருவரும் அக்ரூரர் நின்று கொண்டிருந்த இடத்தின் அருகே வந்ததும், அக்ரூரரை நமஸ்கரித்துவிட்டுப் பின்னர் அந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் விம்மி விம்மி அழுது கொண்டிருந்த யசோதையை நோக்கினார்கள்.

இத்தனை வருஷங்களாய்த் தான் வளர்த்த தன் அருமை மகன் தன்னுடையவன் அல்ல என்னும் உண்மையையே யசோதையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதோடு அவனைக் கம்சன் அழைத்திருப்பதையும், அங்கே அவனுக்குக் காத்திருக்கும் நிகழ்வுகளையும் எண்ணும்போது யசோதையின் இதயம் வெடித்துச் சுக்குநூறாகிவிடும்போல் இருந்தது. கண்ணன் தன் தாயின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தான். இந்த நிமிஷம் வரையிலும் தான் வசுதேவருக்கும், தேவகிக்கும் பிறந்த பிள்ளை என்ற நினைப்பே இல்லாமல் தன்னை ஒரு இடைப்பிள்ளை என்றே எண்ணி இருந்த கண்ணன் அந்த நினைப்பு மாறாமலேயே தன் தாயைத் தேற்றினான். யசோதையோ தன் உயிரே தன்னை விட்டுப் பிரிகிறதே என்ற துக்கத்துடன் கண்ணனை இரு கரங்களாலும் தூக்கி அவனைக் கட்டி அணைத்துவிட்டு பலராமனையும் ஆசீர்வதித்தாள். அதோ! அது யார்? மணப்பெண்ணின் உடையில் இத்தனை அழகோடும் யெளவனத்தோடும்? ஆனால் முகம் மகிழ்வாய்த் தெரியவே இல்லையே. உலகத்து சோகமெல்லாம் அந்த முகத்தில் குடி கொண்டிருக்கிறதே! ஆஹா, இவள் நம் ராதை தான். திருமண உடையில் காட்சி கொடுக்கிறாளே. ஆம், கண்ணன் வாக்களித்திருந்தபடி அவளைத் திருமணம் செய்து கொண்டிருந்தான். உடனேயே மதுரா செல்லவும் தயாராகிவிட்டான். அங்கே பெரியோர் பலரும் இருப்பதால் புது மணப்பெண்ணுக்கே உரிய இயல்பான நாணமும், மரியாதையும் வெளிப்படையாகத் துலங்கத் தன் முகத்தை முந்தானையின் ஒரு பகுதியால் மூடிக் கொண்டிருந்தாள் ராதை. மேகங்கள் சூழ்ந்த வான மண்டலத்தில் அவ்வப்போது வெளிக்கிளம்பும் சூரியனைப் போலவும், அவனின் ஒளிவீசும் கிரணங்களைப் போலவும், துக்க மேகம் சூழ்ந்த அவள் முகத்தின் இரு கண்களில் இருந்து “பளிச், பளிச்” என ஒரு ஒளி,அதிலிருந்து ஒரு தீவிரச் செய்தி கண்ணனுக்குப் போய்க் கொண்டே இருந்தது. வைத்த கண் வாங்காமல் சில சமயம் கண்ணனையே பார்த்தவண்ணமும் இருந்தாள் ராதை. கண்ணன் புரிந்து கொண்டானா? ஆம், புரிந்து கொண்டவனாகவே காணப்பட்டான் கண்ணனும். அவ்வப்போது அவனும் ராதை இருக்குமிடம் நோக்கி ஒரு சிறு புன்னகையாலும், ஒரு சிறு கண் சிமிட்டலாலும், தலை அசைப்பாலும் தன் பதிலை அவளுக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தான். இந்த உலகிலேயே நீ தான் எனக்கு முக்கியம் வேறு யாருமில்லை எனத் தெளிவாய்ச் சொல்லிற்று ராதையின் கண்களும், முகமும். கண்ணனும் அதைப் புரிந்து கொண்டாற்போலவே பதிலும் கொடுத்தான். அனைவரும் கூடி இருக்கும் இந்த மக்கள் கூட்டத்தில் தாங்கள் இருவர் மட்டும் தனித்து உரையாடுவதோ, அல்லது ராதையிடம் கண்ணன் தனித்துப் பேசி விடைபெறுதலோ சாத்தியமில்லை என்பதையும் இருவரும் உணர்ந்திருந்தனர்.

எதுவும் ஒரு முடிவுக்கு வந்துதானே ஆகவேண்டும். நேரம் ஆகிவிட்டது. அக்ரூரர் அவசரப் படுத்தினார். அனைவர் கண்களும் குளமென நிரம்பி வழிய, கண்ணன் அரை மனதோடு வேகமாய்த் திரும்பி ரதத்தில் ஏறிக் கொண்டிருந்த பலராமனைப் பின் தொடர்ந்து தானும் ஏறிக் கொண்டான். அக்ரூரர் தன் சாட்டையைச் சொடுக்கினார். ராதைக்குத் தன் உயிரை யாரோ சொடுக்குவது போல் பட்டது. குதிரைகள் ஓட ஆரம்பித்தன. தன் உயிரும், உடலும், பார்வையும், நினைவும், உறக்கமும், விழிப்பும், கனவும், நனவும், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் அனைத்தும் தன்னிடமிருந்து விலகி வேறாக நின்று தன்னைப் பார்த்து எள்ளி நகையாடுவது தெரிந்தது ராதைக்கு. ஓடிக் கொண்டிருந்த ரதத்தையே பார்த்துக் கொண்டிருந்த ராதைக்கு நிற்க முடியாமல் தன் அருகில் இருந்த யசோதா அம்மாவின் கரங்களைப் பிடித்துக் கொண்டாள். நடப்பது என்னவென யசோதை நிதானிப்பதற்குள்ளாக, ராதை வாயிலிருந்து, “க்றீச்” என இயலாமையுடன் கூடிய ஒரு நெஞ்சைப் பிளக்கும் சப்தம் வந்தது. அடுத்த கணம் ராதை மயக்கம் அடைந்து கீழே விழுந்தாள்.

அனைத்தையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த அக்ரூரருக்குக் கண்ணனின் இந்தக் காதலால் கண்ணன் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை ஆட்டம் கண்டது என்றே சொல்லலாம். இந்தப் பையன் விளையாட்டுப் பிள்ளை, தலையில் மயில் பீலியைச் சூடிக் கொண்டு தலை மயிர் முகமெங்கும் வழிய, இத்தனை அழகோடும், வனப்பான தேகத்தோடும், அனைவரையும் கவரும் வண்ணமான இயல்போடும் கூடிய இந்த இளைஞனுக்காகவா இத்தனை நாட்கள் காத்திருந்தோம்? கிருஷ்ணன் செய்த ஒவ்வொரு அற்புதச் செயல்களையும் பற்றிக் கேள்விப்பட்டபோதெல்லாம் நினைத்த அவருடைய ரக்ஷகன் கிருஷ்ணன் இவன் தானா? அனைவராலும் சொல்லப் பட்ட பெரிதும் பாராட்டப் பட்ட அந்த வீரச் செயல்களை எல்லாம் செய்தது இவனா? அல்லது இதோ பலவானாக நிற்கின்றானே இவன் அண்ணன இவன் செய்ததோ ? இல்லாட்டி விருந்தாவனத்து மக்களின் அதீதக் கற்பனையோ? ம்ம்ம்ம்ம்???இந்தப் பையன் கிருஷ்ணன், இந்த விருந்தாவனத்துப் பெண்களின் கண்மணி என்றும் சொல்கின்றனர். அனைத்துப் பெண்களின் மனதிலும் இடம்பிடித்துள்ளான் இவன் இந்த ச்சிறு வயதிலேயே. ம்ம்ம்ம்ம்??? மேலும் இவன் இந்தப் பெண்களோடு கூடி யமுனைக்கரையில் “ராஸ்” எனப்படும் நாட்டியத்தை ஆடிப் பாடுவானாம். புல்லாங்குழல் இசைப்பானாமே! ஆனால் நேற்று இரவு திடீரென இந்தக் கிராமத்து இடைப்பெண் ஒருத்தியை உடனேயே திருமணம் செய்து கொள்ளவேண்டும் எனப் பிடிவாதம் பிடித்துத் திருமணமும் செய்து கொண்டுவிட்டானே? பெண்களிடம் அதிக மோகம் கொண்டவனோ? இவன் எப்படிக் கம்சனை எதிர்கொள்ளப் போகிறான்? கர்காசாரியார் அவ்வளவு உயர்வாய்ச் சொன்னாரே, இவனைப் பற்றி. அவர் ஒருவேளை தன் மாணாக்கன் என்பதால் மிகைப்படுத்திச் சொல்லி இருப்பாரோ? இவனைப் பார்த்தால் நாரதர் சொன்ன தீர்க்க தரிசனத்தில் உள்ள நம் ரக்ஷகன் அடையாளங்கள் எதுவும் காணப்படவே இல்லை. இவனைப் பார்த்தால் ஒரு அருளாளன் போலவும் தென்படவே இல்லை. ம்ம்ம்ம் என்றாலும் இளைஞன். வசீகரமானவன். அதுதான் சொல்லிக் கொள்ளும்படியான ஒன்று.

கண்ணன் அக்ரூரரைப் பார்த்துச் சிரித்தான். அக்ரூரருக்குத் தூக்கிப் போட்டது. என்ன இவன்? சிரிப்பு இப்படி இருக்கிறது? அவன் உதடுகளால் மட்டும் சிரிக்கவில்லை. கண்களும் சிரிக்கின்றன. இது என்ன ஆச்சரியம் அவன் கன்னங்களும் சிரிப்பால் குழைந்து ஒளிவிடுகின்றன. ஆஹா, அவன் உடலே சிரிப்பால் ஒரு தீபத்தை ஏற்றியது போல் காட்சி அளிக்கிறதே. அக்ரூரரால் திரும்பிச் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. அவரும் சிரித்தார். கண்ணன் கேட்டான், “ மாமா, என் தகப்பன் நந்தன் எப்போது மதுரா வந்தடைவார்? நமக்கு முன்னேயே போய்விடுவாரா?”

“அவங்க மதியத்துக்குள் போவார்கள். நாம் சில நாழிகைகளில் சென்றுவிடலாம். அருமையான குதிரைகள் நம்முடையவை. வேகமாய்ச் செல்லும் திறன் கொண்டவை.” என்றார் அக்ரூரர். மிகவும் கஷ்டத்துடன் தன்னுடைய பெரிய உடலை உள்ளே நுழைத்துக் கொண்டு, கால்களை ரதத்தின் வெளியே தொங்கப் போட்டிருந்த பலராமன் குதிரைகள் ஓடும் டிக் டாக் டிக் டாக் சப்தத்தைத் தான் மிகவும் ரசிப்பதாய்ச் சொன்னான். அக்ரூரரை இன்னும் வேகமாய் ரதத்தைச் செலுத்தச் சொன்னான். அக்ரூரர் அண்ணனுக்கும், தம்பிக்கும் உள்ள வித்தியாசங்களை எண்ணி வியந்தார். அண்ணனோ வயதுக்கு மீறி வளர்ந்திருந்தாலும் ஒரு சிறு குழந்தை போல் குதிரைகள் ரதம் ஓட்டுவதையும், அவற்றின் வேகத்தையும் ரசித்துச் சிரிக்கிறான். ஆனால் அவனை விடச் சின்னவனான தம்பியோ தன்னை உணர்ந்தவனாய், தனக்குள் கட்டுப்பாடு விதித்துக் கொண்டவனாய், இந்த அனுபவம் தனக்கு ஒன்றும் புதியதல்ல, என்னும் பாணியில் அமர்ந்திருக்கிறான். “மாமா, தந்தை அங்கே போய்ச் சேரும் முன்னர் நாம் செல்வது சரியாய் இருக்குமா?” கண்ணன் கேட்டான் அக்ரூரரை. “ம்ம்ம்ம்ம்ம் நீங்கள் மிகவும் வேண்டிக் கொண்டதால் உங்களோடு வந்தேன். இல்லை எனில் தந்தையோடு மாட்டு வண்டிகளிலோ அல்லது நடந்தோ செல்வதையே நான் விரும்புவேன்.” என்றான் கண்ணன் மேலும். அக்ரூரருக்கு ஒரே வியப்பு. தன் தகப்பன் நந்தன் இல்லை எனத் தெரிந்தும் இன்னும் நந்தனையே தந்தை எனச் சொந்தம் கொண்டாடும், கண்ணனை நினைத்து வியந்தார். அதுவும் பரிபூரண மனதோடு சொல்லும் வார்த்தைகள் என்பதையும் அக்ரூரரால் உணரமுடிந்தது. கண்ணனைப் பார்த்து, “மதுராபுரி முழுதும் உனக்காகவே காத்திருக்கிறது. உன் வரவை எண்ணியே அனைத்து மக்களும் தவம் கிடக்கிறார்கள். அவர்களுக்குப் பொறுமை போய்விட்டது. வசுதேவரும், தேவகியும் உன்னை எப்போது காண்போம் என ஆவலோடு இருக்கின்றனர்.” என்றார்.
”பதினாறு வருடங்கள் காத்திருந்த என்னைப் பெற்ற என் தாய், தந்தையருக்கு, இந்த சில நாழிகைகள் காத்திருக்க முடியாதா? ஆனால் மாமா, என் தந்தையான நந்தன் மாட்டு வண்டியிலோ அல்லது நடந்தோ மதுராவை நோக்கி வரும் வேளையில் நான் மட்டும் ரதத்தில் மதுராவினுள் நுழைய நான் சிறிதும் விரும்பவில்லை.” தீர்மானமாக இருந்தது கண்ணன் குரல். “குழந்தாய், விருந்தாவனத்தை நினையாதே. மற” என்றார் அக்ரூரர். “ நீ இப்போது ஒரு இளவரசன். வசுதேவனின் மகன் என்பதை மட்டும் நினை.” வெட்கம் மீதூறச் சிரித்த கண்ணன், “இல்லை, மாமா, நான் விருந்தாவனத்து இடைக்குலத் தலைவன் ஆன நந்தனின் மகன் என்பதை ஒருபோதும் மறக்கவே மாட்டேன்.”

அக்ரூரரின் மனதில் மீண்டும் கவலை சூழ்ந்தது. இப்படிப்பட்ட ஒரு பையனுக்காகவா நாம் அனைவரும் காத்திருந்தோம்? யாதவ குலத்து அனைத்து அபிலாஷைகளையும் இவனால் பூர்த்தி செய்யமுடியுமா? அனைவருக்கும் இவன் காவலனாக இருப்பானா? யதுவின் உயர்ந்த வம்சாவளியில் பிறந்தவன் என்பதை இவன் உணர்வானா?

இதை அறியாதவன் போலவே கண்ணன், “நாம் செல்லும் வழியில் அப்பா வருவதற்காகச் சற்றுத் தாமதிப்போம். அவரும் அவருடைய ஆட்களும் வந்ததும், அனைவரும் சேர்ந்தே மதுராவுக்குள் செல்லலாம்.” என்றான். பலராமன் உடனேயே, “ நீ எப்போதுமே இப்படித் தான் கண்ணா! அசட்டுப் பிடிவாதம் பிடிப்பாய்! நாம் உடனே மதுரா செல்வதும், அங்கே உள்ள மக்கள், கடைகள், மாளிகைகள் என அனைத்தையும் தந்தை வருவதற்குள் பார்க்கலாமே!” அனைவருக்கும் முன்னால் மதுரா செல்லவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், பலராமன் கண்ணன் சொல்வதிலும் ஏதோ நியாயம் இருப்பது போலவும் உணர்ந்தான். அக்ரூரரோ, “ நான் இப்போது சொல்வதைக் கவனியுங்கள். மதுராவுக்கு வேடிக்கை பார்க்க நீங்கள் இருவரும் வரவில்லை. கம்சனால் அழைக்கப் பட்டு வருகிறீர்கள். இங்கே உங்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை நான் அறியேன். கம்சன் ஒரு வலையை உங்களுக்காக விரித்துள்ளான், நான் தெரிந்தோ, தெரியாமலோ அதை நோக்கி உங்களைச் செலுத்துகிறேன்.” என்றார் மனம் நிறைய வருத்தத்துடன்.

Wednesday, October 14, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ராதையின் துயரம் - 3

பூ மலருவதைக் கண்டிருக்கிறீர்களா? அதுவும் வாசமுள்ள மலர்கள்?? மல்லிகையோ, ரோஜாவோ, முல்லையோ, ஜாதியோ எதுவானாலும் முதலில் காம்பின் அருகே உள்ள ஒரு இதழ் மட்டுமே வெளிவரும். நறுமணத்தை உள்ளே சுமந்து கொண்டு பூக்கள் தவிக்கும் போல் தோன்றும். அந்த நறுமணமும் எப்போ வெளியே வருவோம்னு காத்திருக்குமோ? அதுக்கப்புறம் சிறிது நேரத்தில் எப்போ நடந்ததுனு நம்மால் கண்டு பிடிக்கவே முடியாத ஒரு தருணத்தில் அந்தப் பூவின் நறுமணத்தைத் தன்னுள்ளே தாங்கி இருந்தது முடியாமல் போக அதை வெளிப்படுத்தும் தருணம் வந்துவிட்டதோ என்னும்படியாக வாசத்தை எங்கும் பரப்பிக் கொண்டு அனைத்து இதழ்களும் மலர்ந்து சிரித்துக் கொண்டிருக்கும். எங்கும் நறுமணமும் பரவி இருக்கும்.

அது போல் கண்ணனின் காதலை வேண்டி தன் இதயக் கதவைச் சற்றே திறந்து வைத்திருந்த ராதை கண்ணன் உள்ளே நுழைந்துவிட்டான் என்பது தெரிந்ததும், அந்த அன்பின் ஆழத்தையும், அதன் வேகத்தையும் தாங்க முடியாமல் திணறினாள். ஆனால் இப்போதோ பிரிவின் சமயம் வந்துவிட்டதால் அந்த அன்புக்கு அணை போடவும் விரும்பினாள். முடிந்ததா அவளால்? பொங்கிப் பிரவாகம் எடுத்து ஓடும் அவளோட அன்புக்கு அணை ஏது? அதன் வேகத்தைத் தாங்க முடியாமல் கண்ணன் அல்லவோ திணறினான்? அவள் இதயத்தின் உள்ளே சென்றவன் அங்கேயே நிரந்தரமாக ஆசனம் அமைத்தும் தங்கிவிட்டான் அன்றோ? இப்போது ராதையின் வார்த்தைகள் அனைத்தும் அந்த அன்பு வெள்ளத்தின் வேகமாய் வெளிவந்தன. இதுவரையில் கண்ணன் அறியாத இந்த ராதை, தன் வார்த்தைகளின் பிரயோகத்தால் இப்போது அவனைத் தன் அன்பு வெள்ளத்தில் மூழ்க வைத்துத் திக்குமுக்காட வைத்தாள். ராதையின் அன்பு எங்கும் பரவியது. இந்தச் சமயத்தை விட்டால் இனி ஒரு சமயம் வாய்க்காது என எண்ணினாளோ ராதை???

நிலத்தையே குனிந்து பார்த்துக் கொண்டு ஏதோ தேடுவது போல் இருந்த ராதை, கொஞ்சம் யோசனையுடனேயே கண்ணன் சொல்லுவதை மறுத்தாள். “ இல்லை கானா, நான் ஒரு இடைப்பெண். மிகவும் ஏழை! நான் உனக்குச் சமமாக ஒரு இளவரசியாக இருக்கச் சற்றும் தகுதியில்லாதவள். நீ மதுரா சென்றதும், உன்னை இந்த நாட்டின் பேரழகிகளான இளவரசிகளும், அரசகுமாரிகளும் மணக்கவும், உன்னை என்றும் வணங்கி உன்னுடன் இருக்கவும் போட்டி போடுவார்கள். மணிமகுடங்களை அளிப்பார்கள். அவர்களுக்கு நடுவில் இந்த ஏழையும் அசிங்கம் பிடிச்சவளும் ஆன கிராமத்து இடைப்பெண் எங்கனம் பொருந்தி வருவாள்?”

“ராதை, என் அருமை ராதை! நீ அந்த மணிமகுடத்தின் ரத்தினம் போல் ஜொலிப்பாய்!”

“இல்லை, கானா இல்லை! “ ராதை கொஞ்சம் யோசனையுடனும், கொஞ்சம் ஆவலுடனும், ஏதோ ஒரு காட்சியைப் பார்ப்பது போலவும் நதி ஓடுவதைப் பார்த்துக் கொண்டே பேசினாள்.” நீ அங்கே சென்றதும் கிரீடம் அணிந்து கொண்டு அரச உடை தரித்துக் கொண்டு காட்சி அளிப்பாய். போர்ப் பயிற்சி அளிக்கப் பட்டு ஆயுதங்களும் தரித்துக் கொண்டு யுத்தத்துக்கும் செல்லுவாய் அன்றோ? பெரிய ராஜாக்களோடும், சக்கரவர்த்திகளோடும், நல்லவர்களாய் இருக்கும் அரசர்களோடும், வீராதி வீரர்களோடும் பழகக் கூடியதொரு சந்தர்ப்பம் உனக்குக் காத்திருக்கிறது. யுத்தகளத்தில், அனைவரோடும் கூடி, சண்டை செய்யும் சமயம்………. இல்லை, கானா, இல்லை, நான் உனக்குப் பெரும் சுமையாக ஆகிவிடுவேன். நான் உன் இதயத்துடிப்பின் இனிமையான சங்கீதமாக இல்லாமல் அது வேகமாய்த் துடித்துத் தன் நிராசையை வெளிக்காட்டக் காரணமாக அமைந்துவிடுவேனோ? உன்னுடன் சரிபாதியாக இருக்க மாட்டேன், மாறாக நான் மட்டும் தனித்துத் தெரிவேனோ? உன்னுடன் இங்கே ராஸ் ஆடும் தோழியாக இருக்காமல், நீ போர்க்களம் செல்லும்போது செய்வதறியாமல் திகைப்பேனோ?”

கண்ணன் வாய்மூடி மெளனமாய் இருந்தான். “மன்னித்துக்கொள் கானா, நான் உனக்கு மேன்மேலும் துன்பத்தையும், வலியையுமே தருகிறேனோ?” திடீரென ராதையின் குரலில் ஓர் உறுதியும், அமைதியும், நிச்சயத் தன்மையும் தென்பட்டது. “நான் உன்னுடன் மதுரா வரமுடியாது கானா. நான் அதை நன்கு அறிந்து கொண்டுவிட்டேன். என் கானா, என் கானா, “ ராதையின் குரல் தழுதழுத்தது. “என் கானா, அவன் வாழ்வது என் கண்களில், நான் பார்ப்பது அவன் கண்களாலே, நான் மூச்சு விடுவது அவன் மூச்சே, நான் உண்பது, உடுத்துவது, உறங்குவது அனைத்தும் அவனுக்காகவே. அவன் எப்படி இருப்பான் தெரியுமா? அவன் தலையில் மயில் பீலியைச் சூடிக் கொண்டு, இடுப்பில் ஒரு வஸ்திரத்தை உடுத்திக் கொண்டு, மாடுகளை மேய்க்கும் குச்சியைக் கையில் வைத்த வண்ணம் இடுப்பில் புல்லாங்குழலைச் சொருகிக் கொண்டு, நிரந்தரமான ஒரு புன்னகை முகத்தில் ஒளிவிட, புல்லாங்குழலை எடுத்து இசைத்துக் கொண்டு, என்னை, “ராதே, அடி ராதே!” என அழைத்தவண்ணம் மாடுகளைக் காட்டுக்கு மேய்ச்சலுக்கு அழைத்துப் போவான். எனக்கு அந்தக் கானாவைத் தான் தெரியும் கண்ணா! தலையில் கிரீடம் சூட்டிக் கொண்டு அரச உடை தரித்த கண்ணன் யாரோ? என்னால் அவனை அந்தக் கோலத்தில் பார்க்கவே முடியாதெனத் தோன்றுகிறது. முடியாது கானா, முடியாது, என் கானாவை விட்டு என்னால் பிரிய முடியாது. நீ சொல்லும் மற்றொரு கானாவிடம், அவன் கானாவா? அல்ல! கண்ணனிடம் சொல்லிவிடு! என்னால் மதுராவுக்கு வரமுடியாது.” கண்ணனை அணைத்துக் கொண்ட ராதை சத்தம் போட்டுப் பெருங்குரலில் துடிதுடித்து அழ ஆரம்பித்தாள்.

“கானா, எனக்குத் தெரியும், நீ மீண்டும் விருந்தாவனம் வரவே முடியாது . அப்படியே வந்தாலும், அது என் கானா இல்லை. நான் பார்த்து ஆனந்தித்துக் காதலித்து, இதோ இப்போது சொல்கிறாயே, காந்தர்வ விவாஹம் என. அப்படி என்னை மணந்து கொண்ட கானாவை நான் இனி பார்க்கவே முடியாது. ஒருகாலும் முடியாது. எந்தக் கானாவுக்காக நான் வாழ்ந்தேனோ அவன் இனிமேல் வரமாட்டான். என்னை இங்கேயே இப்படியே இருக்கவிடு கண்ணா!” தூக்கத்தில் பேசுபவள் போலப் பேசினாள் ராதை. வாழ்நாளின் பேச்சுக்களை எல்லாம் அன்று ஒருநாளிலேயே பேசித் தீர்த்துவிட நிச்சயித்துவிட்டாளோ? "கண்ணா!" என அழைத்ததன் மூலம் அவனைத் தூரத்தில் நிறுத்துகிறாளோ?


இன்று முடியாவிட்டால் அப்புறம் சந்தர்ப்பமே வாய்க்காது என்பதைப் புரிந்துகொண்டவள் போல் ராதை மேலும் தொடர்ந்து பேசினாள். “நான் இங்கேயே இருந்து உன் தாய்க்கும், தந்தைக்கும் பணிவிடைகள் செய்வேன்.” அவள் பார்வை எங்கோ தொலைதூரத்தைப் பார்ப்பது போல் காணப்பட்டது. "ஒவ்வொரு நாளும், நான் காட்டில் சுற்றுவேன், உன்னுடன் சுற்றிய இடங்களுக்கு எல்லாம் செல்வேன். யமுனைக்கரையில் பெளர்ணமி நிலவில், இரவு நேரத்தில் உன்னை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். உன்னுடைய புல்லாங்குழலின் இனிய கீதத்தைக் கேட்கும் ஆவலுடன் அமர்ந்திருப்பேன். இதோ, இந்தப்புதர்களின் அடர்ந்த மறைவில் நீ என்னிடம் அன்பு செலுத்தியதையும், நான் என் சகலத்தையும் உனக்கு அர்ப்பணித்ததையும் நினைத்து நினைத்து மகிழ்ந்திருப்பேன். கண்ணா, நீ பேச என்னருகில் இல்லை எனினும், உனக்காக இந்தச் செடி, கொடிகளும், இந்தப்புதரும், இந்த யமுனை நதியும், இந்தக் காடும், நீ மேய்த்த ஆவினங்களும் என்னிடம் பேசும். உன்னைக் காணோமே என என்னிடம் கேட்கும். நான் துயர் அடைந்ததைக் கண்டு அவையும் துயர் அடையும். எனக்கு ஆறுதல் சொல்லும். குயிலானது உன் கீதத்தோடு போட்டி போட்டுத் தோல்வி அடையுமே. அது வேண்டுமானால் ஒருவேளை கண்ணன் இல்லை, போட்டிக்குக் கீதம் இசைக்க என நினைக்குமோ?? இல்லை, இல்லை, என் கானா! என் கானா, உன் இனிய கீதம் போட்டிக்கு இல்லாமல் குயிலும் தன் பாடலை மறந்துவிடுமோ?” கண்களில் இருந்து கண்ணீர் வழிய ராதை தொடர்ந்து பேசினாள். கண்ணனால் அவளை நிறுத்த முடியவில்லை.

“கண்ணா, ஒருவேளை எப்போவாவது நான் மதுரா வந்தேனானால் அங்கே யாரைப் பார்ப்பேன் என்று நீ நினைக்கிறாய்? என் கானாவையா? ம்ஹும் இல்லை கானா இல்லை. என் கானா அங்கே இருக்கமாட்டான். கிருஷ்ணன், கண்ணன் என்னும் பெயரில் ஒரு யாதவ இளவரசன் இருப்பான். அவனில் நான் உன்னைக் காணமுடியாதே! அவன் யாரோ ஒருவன் அன்றோ? அவனிடம் நான் எவ்வாறு என்னை ஒப்புக் கொடுக்க முடியும்? ஆனால் கானா, இங்கேயே விருந்தாவனத்திலேயே இருந்தேனானால், அது உன்னோடு இருக்கும் சுகத்தை, அமைதியை, நிம்மதியை எனக்குக் கொடுக்கும். இதோ, இந்த மரம் உன் இருப்பை எனக்குச் சொல்லும், ஆவினங்கள் சொல்லும் என் கானா என்னோடு இருப்பதை! குயிலானது நீ தான் வந்துவிட்டாயோ எனக் கூவிக் காட்டும். காற்றானது புழுதியை வாரி இறைத்துக் கொண்டு வீசும்போது, என் கானாவிடமிருந்து எனக்குச் செய்தியைக் கொண்டு வரும். என் கானா இங்கே தான் இருக்கிறான். இந்த மண் அவன் காலடி பட்ட மண் என, இந்தக் காற்று அவன் உடலில் பட்ட காற்று என வாயு தேவன் கூறுவான், இந்த நீர் அவன் அருந்திய நீர் என யமுனை கூறுவாள். ஒருவேளை கானா, அவை நீ இருந்தப்போ எப்படிப் பாடுகின்றனவோ அவ்வாறே எனக்காகவும் பாட ஆரம்பிக்குமோ?? ஆம், ஆம், பாடும், பாடும் எனக்காக. இந்த ராதைக்காக. “ ராதை கொஞ்சம் மூச்சுவிட நிறுத்தினாள்.

கண்ணன் தூரத்தில் எங்கோ சூன்யத்தைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். பின்னர் விண்ணில் தன் எதிர்காலம் தெரிவதைப் போல் சற்று நேரம் விண்ணையே பார்த்த வண்ணம் இருந்தான். அங்கே அவனுக்கு என்ன தெரிந்ததோ, மீண்டும் பேசும்போது அவன் குரல் தெளிவாய்க் காணப்பட்டது. “ஆம், ராதை நீ சொல்லுவது உண்மைதான். நீ எனக்கு வேண்டும் என்பதும், எப்போதும் என் அருகே இருக்கவேண்டும் என நான் விரும்புவதும் உண்மைதான். ஆனால், ஆனால், என் எதிர்காலம், நீ சொல்வதைப் போல் தான் மாறிவிடுமோ? நான் இப்போது இருப்பதைப் போன்ற ஒரு சுதந்திர இடைச் சிறுவனாக இருக்கமாட்டேனே. நான் நினைப்பதை நினைத்த வண்ணம் செய்ய முடியாதே! நீ என் சந்தோஷம், என் ஜீவன், என் கண்ணின் கருமணி, என் பார்வை, நானே நீ. நீயே நான். ஆனால் அங்கே வந்தால் இந்த அழகிய பூப்போன்ற நீ, உன் சுகந்தம் அனைத்தும் மறைந்து, மறந்துவிடுமோ? இங்கே இருப்பது போன்ற சுதந்திரமோ, அல்லது வேறு எதுவுமோ அங்கே உனக்குக் கிட்டாதுதான். ஆம், ராதை, ஆம், நீ இந்தச் சூரியனின் கதிர்களாலும், நிலவொளியாலும் குளிப்பாட்டப் பட்டு, இந்த யமுனையின் கரைகளில் ஆடிப் பாடி சந்தோஷமாய் உன் வாழ்க்கையைக் கழிக்கவேண்டியவள். “

“மேலும் ராதை, நீ என்னுடன் வந்துவிட்டாலும், இந்த விருந்தாவனம் தன் அழகை இழந்துவிடும். இதன் செளந்தரியமே போய்விடும். நீ இங்கே இருப்பதால் இது ஒரு தெய்வீகக் கோயில் போல் உள்ளது. என் மேலுள்ள உன் காதல் இதைச் சிறப்பாக ஆக்கி உள்ளது. நீ இந்த விருந்தாவனத்தின் செளந்தரிய தேவதை ஆவாய். இந்த விருந்தாவனத்தின் காதல் தேவதை ஆவாய். நீ இங்கேயே இருக்கப் போவதாய்ச் செய்த முடிவினால் இந்த விருந்தாவனத்து மக்களுக்கு மட்டுமல்லாமல், எனக்கும் ஒரு புதிய உலகைக் காட்டிவிட்டாய். இந்த உலகம் உள்ளளவும் மக்கள் உன்னையும், உன் காதலையும், அதற்காக நீ செய்த இந்த மகத்தான தியாகத்தையும் மறக்கவே மாட்டார்கள்.” கண்ணன் ராதையைத் தன் இரு கரங்களாலும் எடுத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். தன்னைக் கட்டுப்படுத்த முடியாத ராதை விம்மி, விம்மி அழுதாள். கண்ணன் கண்களிலும் நீர். என்றாலும் அவனால் அழமுடியவில்லை. இப்போதே பொன்னாலாகிய தளை தன்னைக் கட்டிவிட்டதோ என்ற உணர்வு அவனுக்குள்ளே. “கானா, என் கானா, நான் என் அனைத்தையும் உனக்குக் கொடுத்துவிட்டேன். ஆனால் நான் உன்னிடம் எதையும் கேட்கவில்லை. என்றாலும் கானா, ஒரு உதவி எனக்குச் செய்வாயா? சிறு உதவி. நீ மதுரா செல்லும்போது உன்னுடைய அந்தப் புல்லாங்குழலை என்னிடம் கொடுத்துவிட்டுச் செல்வாயா? நீ ஒரு இளவரசன். யாதவ குலத் தலைவர்களில் ஒருவன். நான் ஒரு இடைச்சிறுமி. ஏழை. என்னைப் பார்த்து அனைவரும் எள்ளி நகையாடுவார்களே. அவர்களுக்கு உன்னுடைய இந்தப் புல்லாங்குழலைக் காட்டி, என் கானா என்னுடன் தான் இருக்கிறான் எனச் சொல்லிக் கொள்வேனே!” என்றாள். கண்ணனால் இப்போது தன்னைக் கட்டுப் படுத்த முடியவில்லை. பொங்கும் கண்ணீரோடு ராதையை இறுக அணைத்துக் கொண்டு, “புரிகிறது, ராதை, நாம் இப்போதே குரு சாந்தீபனியிடம் செல்வோம். அவர் முன்னே உன்னை நான் அக்னி சாட்சியாகத் திருமணம் செய்து கொள்கிறேன். இந்தப் புல்லாங்குழலை உன்னிடம் கொடுக்கிறேன். நீயும், இந்தப் புல்லாங்குழலுடன் வாழ்க்கை நடத்தலாம், நான் எப்போதும் உன்னிடமே இருக்கிற மாதிரி இது உன்னோடேயே இருக்கும். இனி இந்தப் புல்லாங்குழல் ராதைக்காக மட்டுமே இசைக்கும். கண்ணன் இனி புல்லாங்குழலை இசைக்கமாட்டான். அதுவே நீ, நீயே அது. நீங்கள் இருவருமே ஒன்றாகிவிட்டீர்கள்.”

கண்ணனின் புல்லாங்குழல் அதற்குப் பின்னர் இனிய கீதம் இசைத்ததா? இல்லை! :(

Tuesday, October 13, 2009

சந்தை(தி) சிரிக்கும் சண்டை!

காலையில் கணினியைத் திறந்ததுமே கூகிளார் வந்து என்னோட டூல்பாரைப் பயன்படுத்தறதுக்கு நன்றினு சொல்லிட்டு, வேறே என்ன உதவி வேண்டுமோ கேளுனும் சொல்லிட்டுப் போனார். சரி, இது ஏதோ இன்னிக்கு வழக்கம் போலனு இருந்தால் கொஞ்ச நேரம் கழிச்சு யாஹூவார் வந்தார். கூகிளார் என்னோட சில தளங்களை ப்ளாக் பண்ணிட்டார். அதனால் நானும் உனக்கு செர்ச் எஞ்சின் சேவையை நிறுத்திட்டேன். உனக்கு அது வேண்டும்னா இங்கே வானு ஒரு இடத்தைச் சுட்டிக் கூப்பிட்டார். காலையிலே வீட்டு வேலையைக் கவனிக்கிறதா? இல்லை இவங்க சண்டையிலே மத்தியஸ்தம் பண்ணறதா? ஒண்ணும் புரியலை.

அதுக்குள்ளே கூகிளார் வேறே ஒரு இடத்தைக் காட்டி அங்கே வாங்கறார். என்ன செய்யறது? ஒண்ணுமே புரியலை உலகத்திலே. என்னை மாதிரி க.கை.நா.க்களுக்கு உதவும் தொழில் நுட்ப நல் உள்ளங்களே, என்ன செய்யணும்னு வரிசையா வந்து சொல்லுங்கப்பா பார்ப்போம்! ம்ம்ம்ம் ரெடி ஷ்டார்ட், ஒன், டூ, த்ரீ, வாங்கப்பா தொழில் நுட்ப ஆலோசர்கர்கள் எல்லாம். இந்தச் சண்டைக்கு ஒரு முடிவே இல்லையானும் தோணுது! :D