எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 07, 2014

குக்கரா, வெண்கலப்பானையா? சாதம் வடிக்கச்சிறந்தது எது? ஒரு பட்டி மன்றம்!

எல்லோரும் குக்கர் சமையல் எப்போ ஆரம்பிச்சீங்கப்பா?  தெரியலை.  ஆனால் நான் கல்யாணம் ஆனதுமே ஒரு சில மாதங்களில் 3,4 மாசங்களுக்குள்ளாக ஆரம்பிச்சுட்டேன்.   இத்தனைக்கும் அப்போ காஸ் வாங்கவில்லை.  ஸ்டவ் அடுப்புகளும், குமுட்டியும் தான்.  அப்போ மண்ணெணெய் தெருவிலேயே கூவிக் கொண்டு விற்றுக் கொண்டு போவாங்க.  மதுரையிலே எல்லாம் மண்ணெண்ணெய் அல்லது சீமை எண்ணெய் னு சொல்லி விப்பாங்க. பார்த்திருக்கேன். ஆனால் நம்ம அருமைச் சென்னை மாநகரிலே முதல் முதல் மண்ணெண்ணையைக் "கிருஷ்ணாயில்" என்று விற்றதைக் கேட்டதும் இது ஏதோ புதுசு, கோவிலுக்குனு அதுவும் பெருமாள் கோவிலுக்குனு விப்பாங்க போலனு நான் நினைச்சது எனக்குப் பத்துப் பனிரண்டு வயசிலே முதல் சென்னை விஜயத்தின் போது.  அதுக்கப்புறமா வங்கிப்பரிட்சை எழுத சென்னை வந்த போதெல்லாம் சில, பல மாதங்கள் தங்கினதில் கிருஷ்ணாயில் என்பது கெரசின் ஆயில் என்பதன் திரிபு என்பதைப் புரிந்து கொண்டு தலையில் அடித்துக் கொண்டேன்.  சென்னையைப் பிடிக்காமல் போனதுக்கு இன்னொரு காரணமும் கிடைச்சது. :)

விதி யாரை விட்டது? கல்யாணம் ஆகி நேரே புனே சென்றிருக்க வேண்டிய என்னை அங்கே பயமுறுத்தின வாடகை வீட்டுப் பகடித் தொகையால் அரண்டு போன நம்ம ரங்க்ஸ் (பின்னே பகடி கொடுத்து வீடு பிடிச்சால் அப்புறமாத் தம்பி, தங்கைகளைக் கரையேத்துவது எப்படி? குடும்பம் நடத்துவது எப்படி?) சென்னைக்கு மாற்றல் கேட்டு ஏற்கெனவே விண்ணப்பம் போட்டிருக்கார்.  எட்டு ஆண்டுகளாகப் புனே வாசத்தில் இருந்தவருக்கு அவரோட மேலதிகாரி கல்யாணம் பண்ணிக்கோ, மாற்றல் வாங்கித் தரேன்னு விளையாட்டாச் சொல்ல, அதை நம்ப முடியாமல், என்னைப் புகுந்த வீட்டிலேயே அம்போனு விட்டுட்டு, தான் மட்டும் புனேக்கு ரயிலேறினார்.   புனேயின் புறநகர்ப்பகுதியான கடக்வாசலாவுக்கு மாற்றல் கேட்டு வாங்கிக் கொண்டு அங்கே ராணுவக் குடியிருப்பில் வீடு கிடைக்கும் என்பதால் என்னை அதன் பின்னர் அழைத்துச் செல்ல முடிவு.

ஆனால் ரங்க்ஸ் ஒன்று நினைக்க நம்ம வெங்க்ஸ் அதாங்க திருப்பதி வெங்கடாசலபதி!  அவருக்குத் தான் எங்க அப்பா, அம்மா வேண்டிட்டு இருந்தாங்க, பொண்ணு சீக்கிரம் குடித்தனம் வைக்கணும்னு!  அந்த வெங்க்ஸ் இவர் புனே ரயிலில் ஏறும்போதே நண்பர் ஒருவர் மூலமாச் சென்னைக்கு மாற்றல் கிடைத்திருக்கும் விஷயத்தைச் சொல்ல சந்தோஷமாய்ப் புனே சென்ற ரங்க்ஸ் அங்கே இருந்து விடுதலை பெற்றுக்கொண்டு சாமான்களையும் எடுத்துக் கொண்டு, போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட என்ற கதையாய்க் கிராமத்துக்கு ஒரே வாரத்தில் வந்துவிட்டார். வரும்போதே சென்னையில் வில்லிவாக்கத்தில் வீட்டையும் பார்த்து அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துட்டார்.  வில்லிவாக்கம் வந்து குடித்தனமும் போட்டாச்சு.  ஒரே மாசத்தில் வில்லிவாக்கம் பிடிக்காமல் அம்பத்தூருக்கு மாறவும் மாறியாச்சு.  நானும் வேலைக்குப் போக ஆரம்பிச்சாச்சு.  அதுக்கெல்லாம் பார்க்கவும் பழைய பதிவுகளை!

அப்போல்லாம் மண்ணெண்ணெய் நிறையக் கிடைச்சதால் ஸ்டவ் சமையல் தான்.  குமுட்டியும் வைச்சிருந்தேன்.  இரண்டு ஸ்டவ், ஒருகுமுட்டி.  ஸ்டவ்வில் சாதம் வைத்துக் குழம்பு, ரசம் பண்ணி, காய்கள் பண்ணினால் குமுட்டியில் பருப்பை வேகப் போட்டு வைப்பேன்.  நடு நடுவில் இரண்டாம், மூன்றாம் காஃபி கலக்கும் வேலையும் குமுட்டியிலே!  வேலைக்கும் போய்க் கொண்டு வெண்கலப்பானையில் சாதம் வைத்துக் கொண்டு மனைவி கஷ்டப்படுவதைக் கண்டு சகிக்காத நம்ம ரங்க்ஸ் திடீரென ஒரு நாள் குக்கர் வாங்கி வந்துவிட்டார்.  எனக்கே அதெல்லாம் தெரியாது.  வாங்கப் போறார்னு எல்லாம் நினைக்கவே இல்லை. நான் தண்டையார்ப்பேட்டையிலிருந்து ஆஃபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வர ஆறு மணி ஆகிடும்.  அவர் நாலு மணிக்கே வருவார்.  வந்து பார்த்தால் சமையலறையில் குக்கர்.


கரெக்டா டிகாக்‌ஷன் மட்டும் ரங்க்ஸ் போட்டு வைப்பார். நான் வந்ததும் தான் காஃபி கலக்கலே.  காஃபிக்கடை முடிஞ்சதும், ரங்க்ஸ் சொல்லிக் கொடுக்க நான் குக்கரை அடுப்பில் ஏற்றினேன்.  ப்ரெஸ்டிஜ் குக்கர் தான்.  காஸ்கெட்டைப் போட்டுட்டு அழுத்தி மூடக் கூட முடியாமல் அழுகையே வந்தது.  பேசாம வெண்கலப்பானையில் களைந்து போட்டோமா, அரிசி வெந்ததானு பார்த்தோமானு இருக்காமல் இப்படிப் படுத்தறாரேனு ஒரே கோபம். ஆவி வந்ததும் தான், (சேச்சே கோவை ஆவி எல்லாம் இல்லைங்க, குக்கர் ஆவி) வெயிட் போடணும்னு சொல்லி இருந்தாரா?  ஆவி வந்ததும் வெயிட்டை எப்படிப் பார்க்கிறது? மெஷின் இல்லையேனு ரங்க்ஸைக் கேட்க, தலையிலே அடிச்சுக் கொண்டு குக்கர் வெயிட்டை எடுத்து நீட்டினார். அப்போல்லாம் இப்போ மாதிரி மூணு சத்தம், நாலு சத்தமெல்லாம் போடாது குக்கர். ஒரே விசில் தான்.  நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாகக் கொடுக்கும்.  சாதம் வாசனை வந்தால் குக்கரை இறக்கிடலாம்.   உடனே திறக்க முடியாது.  காத்திருக்கணும்.  அதுக்குள்ளே இங்கே குழம்போ, ரசமோ கொதித்துப் பருப்புக்குக் காத்திருக்கும்.  அடுப்பை அணைச்சு வைக்கணும்.  சில சமயம் வாசனை வந்து இறக்கினதும்  உள்ளே திறந்து பார்த்தால் குக்கருக்குள்ளே சாதமாக இருக்கும். (இப்போவும் தான்)  குக்கர் கறுப்பாகாமல் இருக்க உள்ளே புளி வேறே போடுவதால் அந்தச் சாதத்தைச் சாப்பிடவும் முடியாது. தூக்கிக் கொட்டணும்.

பருப்பும் சேர்ந்து விழுந்திருந்தால் கேட்கவே வேண்டாம். தினம் தினம் காலை குக்கரோடு மல்யுத்தம் நடக்கும்.  எல்லாத்தையும் செட் பண்ணி  வைச்சுட்டு மூடுனு ரங்க்ஸ் சொல்லிக் கொடுக்க, செட் பண்ணி வைச்சுட்டு மூடும்போது என்னால் அழுத்தி மூட முடியாமல் எல்லாமும் உள்ளே கொட்டிக் கலந்து ஒண்ணாய் மண்ணாய் ஆக, ஒரே ரகளை தான்.    இப்போ வர காஸ்கெட்டெல்லாம் அவ்வளவு வலுவாக இல்லை தான்!  இந்தக் கூத்தைப் பார்த்தால் சாதமாய் வடிக்கிறதா, மஞ்சப் பொங்கலாய்ப் பொங்கிடலாமானு கோபமாய் வரும்.  குக்கரைத் தூக்கிக் கடாசிட்டு வெண்கலப் பானையிலேயே சமைச்சுட்டுப்போயிருக்கேன். வசதி பண்ணிக் கொடுத்தாலும் அனுபவிக்கத் தெரியலையேனூ ரங்க்ஸ் சொல்ல, எனக்கு அதிர்ஷ்டமில்லைனு நான் சொல்ல ஆஃபீஸுக்கு முகம் மூணுபடி வெண்கலப் பானையாக ஆக்கிக் கொண்டு போவேன்.

Thursday, June 05, 2014

நான் முதல் முதலாகக் குழம்பு வைத்த போது என்ன நினைத்தேன்!

பள்ளிக்குப் போகும் நாட்களிலே திடீர்னு அம்மா தன்னோட பிறந்த வீட்டுக்குத் தங்கை பிரசவத்துக்கு உதவிக்குப் போக நமக்குச் சமையல் வேலை பிடித்துக் கொண்டது. முதல்நாள் சமைக்கிறச்சே அப்பா வெண்கலப்பானைக்குப் போட வேண்டிய அரிசித் திட்டத்தைச் சொல்லிட்டு, வத்தல் குழம்பு வைத்துக் குட்(கொட்டு) ரசம் வைக்கச் சொன்னார்.  எங்க அப்பா வீட்டில் கொட்டு ரசத்தை குட் ரசம் என்றே சொல்லிப்பழக்கம் ஆயிடுச்சு.  மாத்திக்க முடியலை, விட்டுடுங்க!

அந்த வருஷத்திலே இருந்து தான் ஸ்கூல் பஸ்ஸில் ஸ்கூலுக்குப் போகப் பணமும் கட்டி இருந்தது. ஏழரைக்கு, பாம், பாம், பாம் னு பஸ் வந்து குரல் கொடுக்கும்.  அதுக்குள்ளே சமைச்சுட்டுக் கிளம்பணும்.  என்ன?  வயசா? வயசெல்லாம் கேட்காதீங்க!  சின்ன வயசு என்பதால் திருஷ்டிப் பட்டுடும். ஆனால் நான் சமைக்க ஆரம்பிச்சு கோல்டன் ஜூபிளி கொண்டாடிட்டு இருக்கேன் இப்போ.  ஸ்கூலுக்கு லேட்டாவும் போக முடியாது. கிரவுண்டைச் சுத்தி ஓடணும்.  கிரவுண்ட் சும்மா ஒரு 2,3 மைலுக்குள் தான் இருக்கும்.

ஆகவே காலம்பர சீக்கிரமே எழுந்து, {ம்ஹூம், அதெல்லாம் எழுப்பி விடற வேலையெல்லாம் கிடையாது, நாமே தான் எழுந்துக்கணும், இப்போ அதே பழக்கத்தில் தானே முழிச்சுக்க வந்தாச்சு என்றாலும் ஒரு ஆறு மாசமாக் காலம்பர எழுந்துக்க முடியலை.  ஐந்தரை ஆயிடுது பல நாட்கள்! :(} அதை விடுங்க.  சீக்கிரமா எழுந்து பள்ளிப் பாடங்களை முடிச்சுக் கொண்டு குளிச்சுத் துவைச்சு,உலர்த்திட்டு வந்து சமைக்கணும்.  குளியலறை ஒன்றே ஒன்று.  நாலு குடித்தனங்கள்.  ஒரு வீட்டில் குறைந்தது நான்கு நபர்கள்.  எல்லோருக்கும் காலை அவசரம். அதிலே தான் குளிச்சுத் துவைச்சாகணும்.

எல்லாம் முடிச்சுச் சமைக்க வந்தாச்சு.  சாதம் வடிச்சாச்சு ஒரு குமுட்டியிலே. இன்னொரு குமுட்டியிலே ரசமும் வைச்சேன்.  புளி போடுவாங்களானு சந்தேகம்! எங்க பகுதி சமையலறையிலிருந்து குரல் கொடுத்தால் அடுத்த பகுதி சமையலறையிலே இருக்கும் மாமி பதில் கொடுப்பாங்க.  அவங்களோட வழிகாட்டுதலின் பேரில் ரசத்துக்கும் புளி உண்டுனு தெரிஞ்சது.  குழம்புக்கும் புளி கரைக்கணுமாமே!  அதையும் கரைச்சு வைச்சாச்சு! ரசம்  சின்னக் குமுட்டியில் ஆகி விட்டது.  அதிலேயே கல்சட்டியைப் போட்டுக் குழம்பு வைக்கணும்.  பெரிய குமுட்டியில் காய் பண்ணியாகணும்.  அதுக்குள்ளே ஸ்கூல் பஸ் பாம் பாமெனக் கத்த, இப்போ வரலை, அடுத்த ட்ரிப்புக்கு வாங்கனு டிரைவர் கிட்டே கூடத்தில் குடி இருந்த மாமியை விட்டுச் சொல்லச் சொல்லிட்டுக் காயைப் பெரிய குமுட்டியில் போட்டுவிட்டு, சின்னக் குமுட்டியில் போட்டிருந்த கல்சட்டியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு தாளிக்க ஆரம்பித்தேன்.

என்னென்ன தாளிப்பாங்க?  சரியாத் தெரியலை.  எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் தாளிப்போம்னுட்டுப் பக்கத்துப் போர்ஷன் மாமியைக் கேட்காமலேயே கடுகு, உபருப்பு, கபருப்புனு எல்லாத்தையும் போட்டு சுண்டைக்காய் வத்தலையும் போட்டு நிறைய மிளகாய் வத்தலையும் போட்டுத் தாளிச்சுட்டேன்.  புளிக்கரைசலையும் ஊத்தியாச்சு.  உப்பும் போட்டாச்சு.  ஆனாலும் குழம்பில் நிறம் வரலை.  ஹிஹிஹி, பொடி போடணும்னு தெரியலை.  எங்க வீட்டிலே ரசப்பொடினு தான் பண்ணுவாங்களா.  அது ரசத்துக்கு மட்டும்னு நினைச்சுட்டேன். நிறத்துக்காக மஞ்சள் பொடியைப் போட்டுட்டேன்.  குழம்பும்கொதிச்சது.  கீழே இறக்கிட்டு அவசரம் அவசரமாச் சாப்பிட்டுட்டுப் பள்ளிப் பேருந்தைப் பிடிக்க நேரு பிள்ளையார் சந்திப்பை நோக்கி நடந்தேன்.

பள்ளியிலே குழம்பே நினைவில் இருந்தது.  எப்படி இருந்ததோ என்னமோனு!  சாயந்திரமா வந்தால் ஒரே பாராட்டு மழை.  புளிக்காய்ச்சல் மாதிரி இருந்ததுனு. அப்ப்பாடா!   பெருமூச்சு விட்டுட்டுத் தப்பிச்சுண்டேன். மெதுவாப் பக்கத்துப் போர்ஷன் மாமியிடம் மாமி அம்மா வைக்கிறாப்போல் குழம்பு இல்லையே என்ன காரணம்னு கேட்டால் அவங்க எப்படி வைச்சேனு கேட்டுட்டு அப்புறமாச் சொல்றாங்க பொடி போடணும்னு.  மி,வத்தல் ஒண்ணோ, ரெண்டோ தாளிச்சால் போதுமாம்!  ஹிஹிஹி, அதுக்கப்புறமா என்னதான்குழம்பு வைச்சாலும் அந்த முதல் குழம்பு மாதிரி இல்லைனே அப்பா சொல்லுவார்.  நல்லவேளையாக் கண்டு பிடிக்கலை. அல்லது போனால் போகட்டும்னு விட்டாரோ தெரியலை!  :)))))))

இந்தப் புராணம் இப்போ எதுக்குனு கேட்கிறீங்களா?  நேத்துச் சுண்டைக்காய் வத்தல் குழம்பு வைச்சிருந்தேன்.  நிறைய மிவத்தல் போட்டதால் அந்தப் பழைய ருசியில் வந்திருந்தது.  பொடியும் போட்டேன்.  கொஞ்சமாக. 

Wednesday, May 28, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா?-- 16

ஆயிற்று. எல்லாம் முடிந்து விட்டது. ரவி எவ்வளவோ கவனமாக இருந்தும் நடக்கக் கூடாதது நடந்து விட்டது.  நேற்று தோட்டத்தில் அமர்ந்திருந்தான் ரவி  குழந்தைகள் விளையாடும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. தன் அருமை மகளை அழைத்து வந்துவிடுவோமா என நினைத்தான்.  ஆனால் சாந்தியின் மேற்பார்வையில் விளையாடினார்கள் எனில்?  பின்னர் சாந்தி அவனைத் தவறாய்ப் புரிந்து கொள்வாள். ஆனால் குரல்கள் தேய்ந்தும், பின்னர் திடீரென வெளிப்பட்டும் மாறி மாறிக் கேட்டன.  ரவியால் புரிந்து கொள்ள முடியவில்லை.  எங்கே போய் விளையாடுகிறார்கள்? ஒரு கணம் கூர்ந்து கவனித்தான்.  ஓ, கண்ணாமூச்சியா?  இதுவும் அவன் அருமை மகளுக்குப் பிடித்த விளையாட்டு தான். அந்தப் பிசாசு தான் ஒளிந்து கொண்டிருக்கிறது போல.  அவன் மகள் அவளைத் தேடிச் செல்கின்றாள்.  அது வரையிலும் நல்லது தான்.  ஆனால் எங்கே ஒளிந்திருக்கிறது? குரல் வந்த திசையை மீண்டும் கவனித்துக் கேட்டபோது அவன் வேலை செய்யும் ஸ்டுடியோவில் பழைய சாமான்கள் போட்டு வைக்கும் பரண் ஒன்று உண்டு.  அங்கிருந்து தான் வருகிறது குரல்கள்.

ஆனால் எப்படி ஏறினார்கள்?  சற்று நேரத்திலேயே புரிந்தது அவனுக்கு. குழந்தைகள் படுக்கும் அறை ஃப்ரெஞ்ச் வின்டோ எனப்படும் மாதிரியில் படிகள் வைத்துக் கட்டப்பட்டது. அந்த்ப் படிகளில் இறங்கிக் குழந்தைகள் இங்கே வந்து ஏறி இருக்கின்றனர். அது அந்தப் பிசாசு முதலில் ஏறிப் போய் இருக்கு போல.  இப்போ அவன் மகள் ஏறிப் போகிறாள்.  ஐயோ இது என்ன?  ஜன்னல் கதவை யார் சாத்துவது?  அப்புறமாக் குழந்தைக்கு மூச்சு விடக் கூட முடியாதே!  திணறலில் பயந்து போய்க் கீழே விழுந்து விடப் போகிறாளே!  பயத்தில் மூச்சே நின்றுவிடும் போல் ஆகிவிட்டது ரவிக்கு.  வேகமாய் வீட்டுக்குள்ளே ஓடினான்.  போகிற அவசரத்திலும் அந்தப் பிசாசின் உண்மையான சொரூபத்தைக் காட்டியாக வேண்டும் எனத் தன் காமிராவை அவசரமாக எடுத்துக் கோண்டான்.

மேலே நிமிர்ந்து பார்த்தான்.  பரணின் நுனியில் அந்தக் குட்டிப் பிசாசின் முகம் தெரிந்தது.  அவனைப் பார்த்ததோ இல்லையோ சட்டென முகம் மறைந்தது.  பின்னர் ஒரே கணம் அவன் மகள் அருமை மகள் சுஜாவின் முகம் பீதியில் உறைந்த முகம் தென்பட்டது.  சுஜா! என்று கத்தினான் ரவி. ஆஹா, இப்போப் பார்த்து சாந்தி என்ன செய்கிறாள்.  அவள் வந்தால்தான் இந்தப் பிசாசைக் கூப்பிட முடியும். வேகமாய் ஜன்னலில் ஏறிப் பரணின் நுனியில் இருந்த பிடிமானத்தைப் பிடித்துக் கொண்டு மேலே தாவி ஏறப் பார்த்தான் ரவி.  அதற்குள்ளாக அங்கே ஜன்னல் கதவு திறக்கப்பட்டிருந்தது. அந்தக்  குட்டிப் பிசாசு  மிகப்பலமாகவும் வேகமாயும் சுஜாவை ஜன்னல் பக்கம் வெளியே தள்ளியது.  விடு, என்னை விட்டு விடு என்று அலறிய சுஜாவின் குரல் மெல்ல மெல்லத் தேய்ந்து மறைந்தே போனது. பரணில் ஏறிய ரவி அந்தப் பிசாசின் மேல் பாய்ந்தான். அதுவோ ஒரு வெற்றிப் புன்னகையுடன் அவனைப் பார்த்துவிட்டு அந்தப் படிகளில் இறங்கித் தங்கள் அறைக்குள் ஓட்டமாய் ஓடி விட்டது.

ரவி கீழே பார்த்தான் தள்ளப்பட்ட சுஜா கட்டிடத்தின் கீழே ரத்தம் பெருகி ஓடக் கிடந்தாள்.  மீண்டும் வெளியே ஓடி வந்தான் ரவி.  அப்போது தான் சாந்தியும் குளித்து முடித்துவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தாள்.  ரவி ஓடுவதைப் பார்த்துவிட்டு அவளும் என்னவோ ஏதோ என ஓடி வந்தாள்.

முடிந்துவிட்டது.  ரவிக்கு அவன் வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் ஆகிவிட்டது. அவன் வாழ்க்கையின் ஒரே பற்றுக்கோடாய் இருந்த சுஜாவும் போய்விட்டாள்.  இனி அந்தச் சாத்தானின் சாம்ராஜ்யம் தான்.  அதில் அவனுக்கு இடம் உண்டா?  சாந்தி துணைக்கு வருவாளா?  விரைவில் அதற்கு முடிவும் தெரிந்து விட்டது அவனுக்கு.  எல்லாம் முடிந்த மறுநாள் காலையில் சாந்தி அவனிடம் ஒரு பேப்பரைத் தூக்கிப் போட்டாள். அது என்னவெனப் பார்த்தவனுக்கு  அதிர்ச்சியில் மேலும் தூக்கி வாரிப் போட்டது.  விவாகரத்து நோட்டீஸ்.  அவன் கையெழுத்துக்காகக் கொடுத்திருந்தாள்.  மனப்பூர்வமாக இருவரும் மனம் ஒப்பிப் பிரிவதாக அதில் எழுதி இருந்தது.  சாந்தியை நிமிர்ந்து பார்த்தான்.

"ரவி, என் மனமும் வேதனையில் தான் ஆழ்ந்திருக்கிறது.  மிகவும் கஷ்டப்பட்டு வேதனைப் பட்டே இம்முடிவை எடுத்திருக்கிறேன்.  இப்போது இருக்கும் இந்த ஒன்றாவது எனக்கு மிஞ்சட்டும். நீங்கள் வேறு கல்யாணம் செய்து கொள்வதைக் குறித்து எனக்கு எவ்வித ஆக்ஷேபணையும் இல்லை.  ஆனால் அவளுக்குக் குழந்தைகள் இருந்தால் அவற்றையாவது ஒன்றும் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களோடு வாழ்ந்த இந்தப் பத்து வருஷங்களின் இனிமையான நினைவுகளிலேயே நான் என் வாழ்நாளைக் கழித்துவிடுவேன்.  எனக்கு இவளை வளர்த்து ஆளாக்குவதே இப்போது முக்கியம். மறு விவாகம் செய்து கொள்ளப் போவதில்லை. உங்கள் வசதிக்காகவே விவாகரத்துக் கோரியுள்ளேன்."  சொல்லிவிட்டு சாந்தி உடனே அங்கிருந்து அகன்றாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் தனக்கும் குழந்தைக்கும் வேண்டியவற்றை இரு சிறிய பைகளில் அடைத்துக்கொண்டு, தன்னுடைய கல்வித் தகுதிகள் மற்றும் தன் தனிக்கணக்கில் இருந்த பணம் மட்டும் எடுத்துக் கொண்டு தான் கிளம்புவதாகவும், தன்னை எங்கிருக்கிறாள் எனத் தேட வேண்டாம் எனவும், தான் ஒரு வேலை பார்த்துக் கொள்ளப் போவதாகவும் சொல்லிவிட்டு அங்கிருந்து தன் பயணத்தைத் தொடங்கினாள் சாந்தி.

அடிப் பாவி பிரியும்படியாகவா வாழ்ந்தோம்!  உன்னோடு வாழ்ந்த ஒவ்வொரு நிமிஷத்தையும், ஒவ்வொரு விநாடியையும்  பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேனே!  என்னை மறக்க உன்னால் முடியுமா?  உன்னை மறக்க என்னால் தான் முடியுமா?


உன்னை முதல் முதல் பார்த்தபோது என்ன உடை அணிந்திருந்தாய் என்பதை இப்போது கேட்டால் கூடச் சொல்லுவேனே! எப்படியடி என்னை நீ பிரிந்து வாழ்வாய்! அரற்றினான் ரவி.  இப்போதாவது இந்தப் பிசாசைத் தூக்கிப் போட்டுவிட்டு வா,  நாம் இருவரும் ஒருவருக்கொருவர் குழந்தைகளாக இருப்போம் ஊர்க்குழந்தைகளுக்கெல்லாம் நம்மால் ஆனதைச் செய்வோம், என்று வாதாடினான். ஆனால் சாந்தியின் காதுகள் அடைத்துவிட்டன போலும். ஆனாலும் வண்டி ஏறும் முன்னர் அவனருகே வந்து அவர்கள் தனிமையில் இருக்கையில் அவனை அழைக்கும் செல்லப்பெயரான "ப்ரின்ஸ் சார்மிங்" என அழைத்தாள்.  ரவி உடைந்தே போனான்.  அப்படியே அவளைக் கட்டி அணைக்கப் போனவனைத் தடுத்தாள் அவள்.  அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டாள். "அன்பு! மாசற்ற அன்பு!  நான் அதைத் தான் உனக்குக் கொடுத்தேன், என் அருமை ப்ரின்ஸ் சார்மிங். பதிலுக்கு  நீ எனக்குக் கொடுத்ததோ?  நான்கு அருமையான உயிர்கள்!  உயிரை உறிஞ்சும் வேதாளமாக ஆகிவிட்டாய் நீ!  என் வழி வேறு.  உன் வழி வேறு.  இந்த வீட்டில் நீயே இனி வசித்துக் கொள்.  நான் போகிறேன்."

ஒரு கையில் பையையும் இன்னொரு கையில் அந்தக் குழந்தையையும் எடுத்துக் கொண்டு சாந்தி நடந்தாள்.  "அம்மா" வென்று அழைத்துக் கொண்டு அந்தக் குழந்தை அவள் தோளில் முகம் புதைத்தவண்ணம் அவனைப் பார்த்துச் சிரித்தது.  வெற்றிச் சிரிப்பாகவே தெரிந்தது அவனுக்கு.

என்றேனும் ஓர் நாள் சாந்திக்கு உண்மை புரியும்.  அவள் வருவாள்; அவளால் என்னை மறக்க இயலாது.  காத்திருப்பேன். இப்படிச் சொன்ன ரவி விவாகரத்துப் பேப்பரை சுக்குச்சுக்காகக் கிழித்துப் போட்டான்.

சாந்திக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.

***************************************************************************************

பல வருஷங்களுக்கும் முன்பு படித்த கதை இது. நாவல் என்றே சொல்லலாம். கதைக் கருவை மாற்றவில்லை. சம்பவங்கள் முன்பின்னாக இருந்திருக்கலாம். கதையின் பெயரோ, எழுதிய ஆசிரியரோ நினைவில் இல்லை. நான்காவது குழந்தை தொட்டிலில் இருந்து விழுந்து இறப்பதும், அவனுடைய ஒரே பெண் லூசி(?)யை அந்தப் பிசாசுக் குழந்தை அவன் கண்ணெதிரே கொல்லுவதையும் படித்த நினைவு இருக்கிறது. மற்றவை முன்பின்னாக இருக்கலாம். ஒரிஜினல் படிச்சவங்களும் சரி, இனி தேடிப் பிடிச்சுப் படிக்கப் போறவங்களும் சரி, என்னை மன்னிக்கணும். என்னை மிகவும் பாதித்த மூன்று கதைகளில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு தமிழில் நீல.பத்மநாபனின் தலைமுறைகளும், ஆங்கிலத்தில் A Stone for Danny Fisher நாவலும். இந்தக் கதை ரொம்பவே ஆழமாய் மனசில் பதிந்துள்ளது. 


பிகாபூ

இந்தச் சுட்டியில் இந்தக் கதையை ஓரளவுக்குச் சுருக்கமாக பத்து அல்லது பனிரண்டு பதிவுகளில் 2009 ஆம் ஆண்டே கொடுத்திருந்தேன்.  அதைப் படித்தவர்களும் இருக்கலாம். நினைவூட்டலுக்காகக் கொடுத்துள்ளேன். அப்போதும் சரி இப்போதும் சரி கதையை நினைவில் இருந்தே கொடுக்க முயன்றிருக்கிறேன்.  ஆரம்பமும் சரி, முடிவும் சரி இது தான் என்பது நன்றாக நினைவில் இருக்கிறது.  நடுவில் வரும் சம்பவங்களிலும் பேச்சுகளிலும் முன்பின்னாக மாற்றம் இருக்கலாம். பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஏற்பட்ட தவறாக இதை எடுத்துக் கொண்டு பொறுத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். :)))))

Tuesday, May 27, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா? 15

இங்கே

எல்லாமே இயந்திரத்தனமாய் நடந்து வந்தது.  சாந்திக்கும் அதிர்ச்சி தான்.  கணவன் இப்படி எல்லாம் பேசுவதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  எதுக்கெடுத்தாலும் இந்தக் குழந்தையைக் குற்றம் சாட்டுகிறானே என மனம் வேதனைப்பட்டாள். அவனுக்கு ஸ்டெரிலைசேஷன் யாரானும் பண்ணி இருப்பார்களோ என்றும் சந்தேகப்பட்டாள்.  தன்னை பயமுறுத்த வேண்டி ஏன் அவன் இப்படிச் செய்திருக்கக் கூடாது?  கொஞ்சம் கொஞ்சமாகப் பேச்சைக் குறைத்தாள் சாந்தி.  ரவிக்கோ என்ன செய்வது என்றே புரியவில்லை.  சாந்தியிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். குயில் குஞ்சுகள் இப்படித் தான் மற்றப் பறவைக்குஞ்சுகளைத் தள்ளிவிட்டுக் கொல்லும் என்பதைப் படமாக எடுத்து வைத்திருந்ததைத் தன் ஒரே பெணுக்குப் போட்டுக் காட்டுவதுபோல் சாந்தி இருக்கும் நேரம் பார்த்துப் போட்டுக் காட்டினான். வர வர சாந்தி அவனுக்கு உணவு பரிமாறக் கூட வருவதில்லை.

சாந்திக்கோ இனி தங்கள் இருவருக்கும் குழந்தை பிறக்காது என்பதால் இருக்கும் இந்த இரு குழந்தைகளையாவது நன்கு கவனிக்க வேண்டும் என்று இருந்தாள்.  எக்காரணத்தாலோ அவனுக்கு இந்தக் குழந்தையைப் பிடிக்கவில்லை. இது என்ன செய்தது? தன் கணவனுக்கு ஏதேனும் மனநோய் வந்துவிட்டதோ என்று கூட சந்தேகித்தாள். மிஞ்சி இருக்கும் ஒரே பெண் குழந்தையைப் பாதுகாப்பது தங்கள் கடமை என்பதையும் உணர்ந்திருந்தாள். காலம் எதற்கும் காத்திருக்காமல் ஓட்டமாய் ஓடியது.  அன்று இனம் தெரியாத மன வேதனையில் ஆழ்ந்திருந்த ரவி தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தான்.  வெளியே தோட்டத்தில் கட்டி இருந்த ஊஞ்சலில் குழந்தைகள் இருவரும் விளையாடும் சந்தோஷக் கூச்சல் கேட்டது. சற்று நேரம் வரை அது மனதில் பதியாமல் ஏதேதோ யோசித்த ரவி, சட்டென்று நினவு வந்தவனாய் அறை ஜன்னலில் இருந்து தோட்டத்திற்குள் பார்த்தான்.

அவன் அருமைப் பெண் சுஜா! ஒரு தேவதையைப் போல வெண்ணிற கவுன் ஒன்றை அணிந்து கொண்டு ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள்.  வேகமான ஆட்டத்தில் வந்த காற்றில் தலைமயிர் பறந்து கொண்டிருந்தது.  மாறிமாறி இருகைகளையும் ஊஞ்சல் சங்கிலியில் பதித்துப் பிடித்த வண்ணம் ஆடினாள் சுஜா. ரவிக்குப் பார்க்கையில் சாந்தி கூடக் குழந்தையாய் இருக்கையில் இப்படித் தான் இருந்திருப்பாள் எனத் தோன்றியது.  தன்னையும் அறியாமல் இதைசாந்தியிடம் சொல்ல வேண்டும் என எண்ணிப் புன்னகைத்துக்கொண்ட ரவி ஊஞ்சல் இன்னும் வேகமாய் ஆட்டப்படுவதைக் கண்டான். யாரோ ஆட்டுகின்றனரே.  சாந்தியோ? இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லை! கடவுளே!  அந்தக் குட்டிப் பிசாசு ஆட்டுகின்றதே!  வேகமாக வெளியே பாய்ந்தான் ரவி.

இப்போது சுஜாவுக்கே பயம் வந்து அலற ஆரம்பித்திருந்தாள்.  ரவி இன்னும் வேகமாய் ஓடினான்.  ஆனால்...... அதற்குள்....அதற்குள்,,,,,, அந்தக் குட்டிப் பிசாசு ஊஞ்சல் பலகையை அப்படியே மேலே தூக்கி வீச, சுஜா வேகமாய்த் தூக்கி வீசப்பட்டு தூரத்தில் போய் விழுந்தாள்.  நல்லவேளையாக ரவி அவளை அப்படியே ஓடிப் போய்த் தன் கைகளில் பிடித்துவிட்டான்.  அடிபடவில்லை என்றாலும் சுஜாவின் பயம் குறையவில்லை.  பயத்தில் ஜுரமே வந்துவிட்டது அவளுக்கு. அந்தப் பிசாசுக் குழந்தை அங்கேயே நின்ற வண்ணம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. அதன் பார்வையில் இருந்த வெறுப்பும் கோபமும் அவனை உறைய வைத்தது. சுஜாவைத் தோளில் போட்டுக் கொண்டு சமாதானம் செய்து கொண்டே தன்னறைக்குச் சென்றான் அவன்.  சுஜாவை எவ்வாறேனும் காப்பாற்றியே ஆகவேண்டும்.  எப்படி? தன்னுடனேயே வைத்துக்கொள்ளலாம் அவளை.

ஆனால் தாயிடம் போகாதேனு சொல்ல முடியாதே!  மேலும் சாந்தி தான் அவனைப் புரிந்து கொள்ளவில்லையே தவிர அவனுக்கு சாந்தியைப் புரிந்திருந்தது.  ஆகவே சாந்தியிடம் சுஜா செல்வதைத் தடுக்கவில்லை அவன். சாந்திக்கு எதிரே அது சுஜாவை எதுவும் செய்ய முடியாது என்பதையும் புரிந்து வைத்திருந்தான்.  எனினும் அது தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதையும் உணர்ந்திருந்தான்.  சாந்தி அவனோடு பேசாமல் அவனிடம் வராமல் அவனுக்கு உணவு பரிமாறாமல் யாரோ மூன்றாம் நபர் போல் நடப்பதையே அவனால் தாங்க முடியவில்லை.  இந்தப் பத்துவருஷ வாழ்க்கையில் அப்படியா வாழ்ந்தனர்? ஓரிரவில் அனைத்தும் மாறி விட்டதே!  குழந்தை வந்தால் சந்தோஷம் வருவதற்கு பதிலாக இங்கே பிரிவினை அல்லவோ வந்திருக்கிறது!

அடுத்த பதிவில் முடியும்.

Sunday, May 25, 2014

பித்ரு வாக்ய பரிபாலனம் செய்ய வேண்டாம்! பித்ரு கடன் செய்யுங்கள்!

இன்றைய நாட்களில் சிராத்தம், திதி போன்றவற்றை நினைவில் கொள்வது கூடச் சரியில்லை; அதனால் என்ன பலன்? என்பது பெரும்பாலோர் கருத்தாக இருந்து வருகிறது.  ஆனால் பகுத்தறிவு வாதிகளில் இருந்து யாராக இருந்தாலும் சரி அவரவர் தலைவர்கள் நினைவு தினத்தை அனுசரிக்க மறப்பதில்லை.  குறைந்த பக்ஷமாகப் பூக்களையானும் தூவி படங்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.  இதை நாத்திகம் பேசும் அனைவருமே செய்கின்றனர்.  இப்போ மட்டும் அவங்களுக்குத் தெரியவா போகிறது?  ஏன் செய்ய வேண்டும்?

உண்மையில் நீத்தார் கடன் என்பது நாம் இருக்கையில் நமக்கு வேண்டுமானால் தொந்திரவு கொடுத்திருக்காது.  ஆனால் அது நமக்குப் பின்னர் தொடரும் சந்ததிகளுக்குக் கட்டாயமாய்ப் பிரச்னைகளை உண்டு பண்ணும்.  ஏனெனில் இது நம்முடைய கடன்.  கடனை அடைக்காமல் நாம் இருந்தால் அது வட்டியோடு சேர்ந்து நம் சந்ததிகளிடம் தானே வசூலிக்க முடியும்? எப்படி என்பதைப் பின்வரும் பத்திகளில் இருந்து படிக்கவும்.  இது திருமதி ஜெயஶ்ரீ சாரநாதன் தமிழ் ஹிந்துவில் எழுதியது.  கீழே சுட்டியும் கொடுத்திருக்கேன் முழுப்பதிவையும் படிக்க.  இங்கே தேவையானதை மட்டும் காப்பி, பேஸ்ட் செய்திருக்கிறேன்.

ஜெயஶ்ரீ சாரநாதனுக்கு நன்றி.

பித்ரு கடன்

உதாரண விளக்கத்தின் மூலம் தெரியும் மற்றொரு முக்கிய விஷயம் பித்ரு காரியம் ஏன் செய்ய வேண்டும் என்பது. ‘பெற்றோர் இறந்தவுடன் அவர்களுக்கு பித்ரு காரியம் செய்கிறேன் என்றால் அவர்களுக்குத் தெரியவா போகிறது? அது அவர்களை அடையப் போகிறதா என்ன? அதற்குப் பதிலாக அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை நன்றாகக் கவனித்துக் கொண்டால் போதும். இறந்த பிறகு ஸ்ராத்தம் என்று சடங்குகள் செய்யத் தேவையில்லை. அப்படிச் செய்யவில்லை என்றால் அதனால் நம் பிள்ளைகளையும், பேரன்களையும் பாதிக்கும் என்பதெல்லாம் சும்மா புருடா.’– இதுவே இன்றைக்குப் பரவலான கருத்து.

பெற்றவர்கள் உயிருடன் இருக்கும் வரை அவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. இங்கே கொடுக்கல்-வாங்கல் (give and take) என்னும் இயற்கையின் நியதி வருகிறது. அக்னி ஹோத்திரம் ஹோமத்திலும் இந்தக் கொடுக்கல்-வாங்கல் இருப்பதைக் காணலாம். நல்ல காற்றை நாம் எடுத்துக் கொள்கிறோம். அதற்குப் பதிலாக அசுத்தக் காற்றைத் திருப்பித் தருகிறோம். இங்கே இயற்கையின் சமன்பாடு (equilibrium) பாதிப்படைகிறது. திருப்பிக் கொடுத்த காற்றை சுத்தப்படுத்தவில்லை என்றால், நமக்கு மட்டுமல்ல நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் கிடைப்பது அசுத்தக் காற்றுதான். அதைத் தவிர்க்க அக்னி ஹோத்திரம் செய்யப்படுகிறது.

அதைப் போல பெற்றோர் நமக்குச் செய்வதால் நாம் பட்ட கடனை, நாம் திருப்பிக் கொடுக்க வேண்டும். பெற்றோர் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் அவரிடமிருந்து ஒன்றைப் பெற்றால் அதைத் திருப்பித் தர வேண்டும். இல்லை என்றால் நாம் கடன் பட்டவர்களாகி விடுவோம். கடன்பட்ட ஒருவனால், மற்றோருவனுக்குக் கடன் அளிக்க முடியாது. உயிருடன் உலவும் காலத்தில் யாரிடம் கடன் பட்டாலும், அந்தக் கடனைத் திருப்பித் தரவில்லை என்றால், வேறொரு பிறவியிலாவது அந்தக் கடனை அடைத்து விட முடியும்.

இவையெல்லாம் பிறந்தபிறகு – அதாவது வாழும் காலத்தில் நடப்பது.

ஆனால் பிறக்கும் முன் பட்ட கடனுக்கு நாம் எப்பொழுது, எப்படித் திருப்பி அடைக்கிறோம்?

pithru-karmaதாய், தந்தையரது செல்களின் ஒடுக்கத்தில் நுழைந்து பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்கிறோமே, அப்பொழுது கடன் படவில்லையா? அவர்களது மரபணு மூலமாக, ஐம்பூதங்களிளிருந்தும், சத்தினை இழுத்து நம் உடலை வளர்க்கிறோமே, அந்த ஐம்பூதங்களுக்கும் கடன் படவில்லையா? இழுக்கும் மூச்சுக் காற்றுக்கே, திருப்பித் தந்தால்தான் நம் வாழ்கை நோயற்று இருக்கும். பலப் பலவிதமான உடல் பகுதிகளுக்காக ஐம்பூதங்களிலிருந்து ஓயாது பத்து மாதங்கள் தேவையானவற்றை தாயின் கொப்பூழ் கொடி மூலமாகப் பெற்றிருக்கிறோமே, அது கடன் இல்லையா? அதை எப்படி, எப்பொழுது திருப்பித் தருகிறோம்?

அங்குதான் வேத மதத்தின் மிக உயர்த்த இயற்கை சமன்பாடு சிந்தனை தெரிகிறது. பிண்டமாக, உதகத்தில் (நீரில்) நிலைபெற்று கர்ப்பத்தில் நாம் பெற்றதை, உதகத்தில் பிண்டத்தை இணைத்து, பிண்டோதகக் கிரியையாக, யார் மூலமாகப் பெற்றோமோ, அவர் மூலமாக, அவர் நாம் பிறக்கும் முன் இருந்த நிலையை ஒத்த நிலையை இறப்பில் அடைந்தவுடன், திருப்பித் தருகிறோம்.

இங்கே கடனைத் திருப்பிச் செலுத்த உதவும் Medium பெற்றோர். கடன் பட்டது இயற்கைக்கு.

உதகத்தில், பிண்டம் வளரக் கடன் வாங்கினோம். பிண்டத்தை உதகத்தில் கரைத்து அதைத் திருப்பிச் செலுத்துகிறோம்.

நம் பெற்றோர், பாட்டன்கள், அவர்தம் பெற்றோர் என்று குறைந்தது மூன்று தலைமுறை வரை மரபணுவை கருவில் கடன் வாங்குகிறோம். அதன் அடிப்படையில் இயற்கையிலிருந்து நமக்குத் தேவையானதை எடுத்துக்கொள்கிறோம். அதைத் திருப்பித் தரவில்லை என்றால், நம்மிடம் உள்ள இருப்பு குறைந்து விடும். குறைந்த இருப்பிலிருந்து நம் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் எந்த அளவு எடுத்துக் கொள்ள முடியும்? சொத்து இருந்தால்தானே அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க முடியும்? கடன் வைத்திருந்தால் கடன் கொடுத்தவன் (இயற்கை) நம் பிள்ளைகளை விடுவானா? அல்லது அவர்கள் கடன் கேட்டால் கொடுப்பானா? இல்லையே! இயற்கை நமக்குத் தருவது நோயற்ற வாழ்வு. நாம் இயற்கைக்குக் கடன் பட்டால், நம் பிள்ளைகளுக்குக் தேவையான கடன் (நோயற்ற வாழ்வு) இயற்கையிலிருந்து கிடைக்காமல் போகும்.

மேலே கூறப்பட்ட சிசேரியன் குழந்தை உதாரணத்தைப் பாருங்கள். வயிற்றைத் திறந்தும், அது ஜீவிதத்தில் இருக்கிறது. அந்த ஜீவிதம் வளர இடம் தந்தது தாய் வயிறு. ஜீவிதம் பெற்றது அவள் கொப்பூழ் கொடி மூலமாக; அது அவள் இயற்கையிலிருந்து பெற்ற உணவு. இன்றைக்குப் பரிசோதனைக் குழாயில் கருவை உண்டாக்கினாலும், கரு வளர வேண்டியது தாயின் கர்ப்பத்தில். அதற்கு மாற்று என்றுமே வர இயலாது.

பெற்றோர் மூலமாக நாம் பஞ்ச பூதங்களுக்கும் பட்ட கடனை, தீவிர சிந்தனையுடன் (ஸ்ரத்தையுடன்) பிண்டம் வைத்து நீர் மூலமாகத் திருப்பித் தருகிறோம்.

பிரபஞ்சங்களை கர்ப்பத்தில் வைத்துள்ள இறைவனை இதே எண்ணத்தில் பாருங்கள். அவனுக்கும் நாம் கடன் படவில்லையா? நம்மை உருவாக்கி, பிறப்பித்து, கர்ம வினையை முடிக்க உதவி, இந்தக் கர்மச் சக்கரத்திலிருந்து விடுபட உதவுகிறானே, அவனுக்கு என்ன திருப்பிச் செய்கிறோம்?

அவன் எதிர்பார்க்க மாட்டான்; எதிர்பார்க்கக் கூடாது என்றெல்லாம் சொல்லலாம். பெற்ற தாயும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. எதிர்பார்ப்பதும் இல்லை. ஆனால் பிள்ளைகளான நமக்குக் கடமை உண்டல்லவா? அவளுக்கு ஏதேனும் செய்து அவளை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்ய வேண்டும்; நாம் செய்வதில் அவள் பெருமை அடைய வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் அல்லவா? அதைத்தான் கடவுளுக்கும் நாம் செய்ய வேண்டும். அவனை உயர்த்திப் பேசுவதில், புதிதாக அவனுக்குப் பெருமை வந்து விடுவதில்லை. அப்படிப் பேசுவது நமக்குத் தான் பெருமை- எப்படிப்பட்ட தாயை நான் அடைந்துள்ளேன் என்று பிள்ளைகள் பெருமிதத்துடன் சொல்வதைப் போல…


இது குறித்துப் பரமாசாரியார்கள் சொல்லி இருப்பது கீழே:  தெய்வத்தின் குரல் 3 ஆம் பாகம்.


ஒருத்தர் செத்துப் போனவுடனேயே பித்ரு லோகம்போய் விடுவதில்லை;இன்னொரு ஜன்மா எடுத்து விடுவதில்லை;இறந்து போனவனின் ஜீவன் ஒரு வருஷம் பிரயாணம் பண்ணித்தான் பித்ரு ஸ்தானத்தை அடைகிறது. இதை நம் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிற மாதிரியே க்ரீக் மைதாலஜி முதலான மதாந்தரங்களிலும் சொல்லியிருக்கிறது. ஜீவன் வைதரணி நதியைக் கடந்து யம பட்டணம் போகவேண்டும் என்று நாம் சொல்கிற மாதிரியே அவர்களும் ஒரு நதியை (Styx) சொல்லி அதைத் தாண்டி மறுலோகத்துக்கு (Hades) போக வேண்டும் என்கிறார்கள். நாம் சொல்கிற மாதிரியே யம பட்டணத்தில் இருக்கிற காவல் நாய்போல அவர்களும் ஒன்றை (Cerberus) சொல்கிறார்கள். ஒரு ஜீவன் பரலோகம் செல்வதற்குப் பிடிக்கிற இந்த ஒரு வருஷத்தில்தான் அதன் த்ருப்திக்காக மாஸா மாஸம் சில சடங்குகளைச் செய்வது. இம்மாதிரி பரலோக யாத்திரையில் வழிக்குணவு தருவதைக்கூட இதர மதங்களிலும் சொல்லியிருப்பதாகக் கேட்டிருக்கிறேன். என்று Viaticum கிறிஸ்துவர்கள் சொல்வது இதுதான் போலிருக்கிறது. பிள்ளை குட்டி இல்லாதவர்களுக்கும் நாம் கயை, பதரி போன்ற இடங்களில் பிண்டம் போடுவது போலவே, கிறிஸ்துவர்கள் All-Souls' Day என்று ஒரு நாளில் எல்லா ஆத்மாக்களின் த்ருப்திக்காகவும் வழிபாடு நடத்துகிறார்கள். லோகம் பூராவும் இப்படி ஒரு நம்பிக்கை, அபிப்ராயம் இருக்கிறது என்றால் அது ஸத்யமாகத்தான் இருக்க வேண்டும்.


நன்றி: காமகோடி தளம்

அநாதை ஆசிரமங்களுக்குக் கொடுப்பதோ, அல்லது ஏழைகளின் படிப்பு, கல்யாணங்களுக்கு உதவுவதோ உங்கள் தனிப்பட்ட விருப்பம்.  அதை இங்கே யாரும் தடுக்கவில்லை.   அதையும் செய்யுங்கள்; இதையும் செய்யுங்கள்.  அநாதை ஆசிரமத்திற்குக் கொடுப்பது உங்கள் சொந்தப் புண்ணியம் எனில் பித்ரு காரியம் செய்வது சந்ததிகளுக்குச் சேர்த்து வைக்கும் சொத்து. பித்ரு காரியம் செய்வது வேறு, இது வேறு.  பித்ரு காரியங்களைச் செய்யாமல் இம்மாதிரி செய்வதில் இப்போதைக்கு நாம் கெட்டிக்காரத்தனமாகச் செய்ததாக நினைக்கலாம். எங்கேயோ இருக்கும் போஸ்ட் ஆஃபீஸில் நாம் வேறொருவர் பெயரில் அனுப்பும் அனுப்பும் பணம் குறிப்பிட்ட நபருக்குப் போய்ச் சேருவது போல் நாம் இங்கே நம் பெற்றோருக்குச் செய்யும் திதி, தர்ப்பணங்கள், பிண்டங்கள் அவர்கள் எந்த ரூபத்தில் இருந்தாலும் அவர்களுக்குக் கட்டாயமாய்ப் போய்ச் சேர்ந்துவிடும்.  நமக்குத் தெரியலை என்பதால் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என நினைக்க வேண்டாம். வெளிநாட்டினரில் இருந்து எல்லோருமே நீத்தார் கடனைக் கைக்கொள்வதை வழக்கமாய் வைத்திருக்கின்றனர்.  யூதர்கள் வருடா வருடம் நீத்தோர் தினத்தில் அவர்கள் கல்லறையில் கல் வைப்பதை வழக்கமாய்க் கொண்டிருப்பதாய் எப்போவோ படிச்சிருக்கேன்.  

இன்றைய அவசர உலகில் பலருக்கும் இதை நினைக்க நேரம் இல்லை னு சொல்வாங்க.  ஆனால் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.  இதிலே சிலருக்கு இருக்கும்போது தாய், தந்தையரைச் சரியாப் பார்த்துக்காதவங்க பித்ரு காரியம் மட்டும் செய்தால் சரியாப் போயிடுமானு கேட்கின்றனர்.  இருக்கும்போது அவர்களை மனக் கஷ்டம் வரவழைத்ததற்கு நமக்கு நாம் இருக்கையிலேயே அதற்கான தண்டனை கிடைத்துவிடும்.  ஆனால் பித்ரு காரியம் என்பது நாம் விட்டுச் செல்லும் கடன்.  தாய், தந்தையரை உயிருடன் இருக்கையில் எப்படி வைச்சிருந்தாலும் அவர்கள் இறந்ததும் முறைப்படி கர்மாக்களைச் செய்வது தான் நம் சந்ததிகளுக்கு நன்மை பயக்கும்.  அதற்கும், இதற்கும் சம்பந்தமே இல்லை.  உயிருடன் இருக்கும்போதும் செய்யாமல், செத்தப்புறமும் விரோதம் பாராட்டுவது அழகில்லை. 

நண்பர் ஒருவருடன் ஆன மடலாடலில் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலாகவே இதை அளித்திருக்கிறேன். அதோடு ஜிஎம்பி சாரின் பதிவிலும் அவரும் இன்னும் சிலரும் பித்ரு காரியம் என்பது தேவையற்றது என்ற கருத்தைக் கூறி இருந்தார்கள்.  அதன் பேரிலும் இதை எழுதலாம் எனத் தோன்றியதால் எழுதி உள்ளேன்.  வெளிநாட்டு வாழ் மக்கள் இப்படி எதுவும் செய்யறதில்லையேனும் சிலர் கேள்வி. உண்மை அவங்களுக்கு இப்படிக் கிடையாது.  இந்த நாடு தான் கர்ம பூமி. ஞான பூமி.  நாமே வெளிநாடு வாழ் இந்தியராக இருந்தால் அங்கே எந்த கர்மாவும் செய்யக் கூடாது.  செய்தாலும் அதனால் பலன் இல்லை. இந்தியா வந்து தான் செய்யணும்.   இங்கே மட்டும் தான் அதற்கான பலன்கள் கிட்டும்.  இது தான் கர்மம் செய்து அதன் மூலம் ஞானம் விளையும் பூமி.   இந்தியாவில் மட்டுமே இப்படி எல்லாம் செய்ய வேண்டும்; செய்ய முடியும்.

Friday, May 23, 2014

முக்கியமான செய்தி ஒண்ணு சொல்றேன்! :)

birthday song

https://www.youtube.com/watch?v=EKZvq0dUk50&feature=youtube_gdata_player

லிங்க் நல்லாவே வேலை செய்யுது.  இருந்தாலும் கீழே சுட்டியும் கொடுத்திருக்கேன்.  இன்னிக்கு என்னோட பிறந்த நாளை இணைய உலகே கொண்டாடுதா, கூகிள் காலங்கார்த்தாலே கணினியைத் திறந்ததுமே கேக்கோடும், மற்றப் பரிசுகளோடும் வந்துடுச்சு.  அதுக்கப்புறமா முகநூல் வந்து வாழ்த்துச் சொல்லிட்டுப் போச்சு.  அதுக்கப்புறமா முகநூலில் எல்லா நண்பர்களும் வாழ்த்துச் சொல்லி இருக்காங்க.  அதுக்கு பதில் சொல்லிட்டு வரேன்.  குழுமத்திலும் நண்பர்கள் வாழ்த்து.

அதிலே பாருங்க நம்ம பார்வதி ராமச்சந்திரன் அமர்க்களமாக் கொண்டாடிட்டாங்க.  மேலே உள்ள யூ ட்யூப் சுட்டி அவங்க கொடுத்தது தான்.  அதிலே வருது பாருங்க பிறந்த நாள் பாட்டு.  இன்னிக்கு வரை கேட்டதில்லை.  உங்க வீட்டுக் குழந்தைகளுக்கும் அனுப்பலாம் என்பதால் அந்தச் சுட்டியை இங்கே பகிர்ந்திருக்கேன்.  போய்ப் பாருங்க.  ரொம்ப நல்லா இருக்கு.  நான் ரசிச்சேன்.

இதைத் தவிர சுகி சிவத்தோட கீதைச் சொற்பொழிவும், "அன்பே, சங்கீதா" என்ற பாடல் காட்சியும் அனுப்பி இருந்தாங்க.  அன்பே சங்கீதானு பாட்டு இருக்குன்னே இன்னிக்குத் தான் தெரியும். :))))  நானும் சினிமா அறிவை வளர்த்துக்கணும்னு தான் பார்க்கிறேன்.  அது என்னமோ வளரவே மாட்டேங்குது. இனிமே எங்கே! வரேன், இன்னிக்கு இதிலேயும் மின் வெட்டிலேயும் பொழுது போயிடுச்சு. 

Tuesday, May 20, 2014

தி. ஜானகிராமனின் "உயிர்த்தேன்!"

சமீபத்தில் நிறையவே புத்தகங்கள் இணையத்தின் தயவில் படிக்க முடிந்தது. ஆனால் அதை விட அதிசயமாக தி.ஜானகிராமனின் "உயிர்த்தேன்" கதையை இப்போது படிக்க நேர்ந்தது தான் அதிசயத்திலும் அதிசயம். ஆனந்த விகடன் பைன்டிங்கில், அந்தக் காலத்து கோபுலுவின் படங்களோடு படித்தேன். ஜானகிராமன் அவர்களின்  "அன்பே, ஆரமுதே," தான் முதல் அறிமுகம். அப்புறமாச் சித்தப்பா  ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்போது  தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் கதையை முதல் முதல் படிக்கையில் அதிர்ச்சி வந்தது.  அதுக்கும் முன்னால் அவரோட "அன்பே, ஆரமுதே!" கதை கல்கியில் தொடராக வந்தப்போ அம்மா படிச்சுச் சொல்லுவாங்க.  பின்னர் நானும் படிச்சேன். என் மனசுக்கு ரொம்பப் பிடிச்சதா இருந்த கதை அது.  அதன் பின்னர் தான் விகடனில் இந்தக் கதையும், "செம்பருத்தி"யும் வந்தது. செம்பருத்தி அரைகுறையா நினைவில் இருக்கு. கிடைச்சாப் படிக்கணும். இப்போ உயிர்த்தேன் கதையைப் பார்க்கலாமா?

கதை முழுக்க முழுக்க ஆறு கட்டி கிராமத்தைச் சுற்றியே வருகிறது.  சென்னையில் தொழில் செய்து நிறைய பணம், காசு பார்த்துவிட்ட பூவராகன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து அங்கேயே நிரந்தரமாய்த் தங்க ஏற்பாடு செய்கிறார்.  சொந்த ஊரிலேயே நிலம், நீச்சு, வீடு, வாசல் எல்லாமும் வாங்குகிறார். அவருக்கான வீட்டுக்கு ஏற்பாடுகள் செய்து நிறைவடைவதில் கதை ஆரம்பிக்கிறது.  பூவராகனின் மாமா மகன் சிங்கு என்னும் நரசிம்மன் தான் இந்த உதவியை எல்லாம் கார்வார் கணேச பிள்ளையையும், அவர் மனைவி செங்கம்மாவையும் வைத்துக் கொண்டு செய்து முடிக்கிறார். இந்த செங்கம்மா தான் கதாநாயகி.  முதன் முதல் தன் வீட்டுக்குக் கிரஹப்ரவேசம் செய்யும் பூவராகன் உதவிக்காக வரும் செங்கம்மாவைப் பார்த்து அதிசயிக்கிறான்.  ஏனெனில் செங்கம்மா அழகென்றால் அப்படி ஓர் அழகு! ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியைப் போன்ற அழகல்ல.  வற்றாமல் பெருகிக் கொண்டே இருக்கும் ஊற்றுக் கண்ணைப் போன்ற அமைதியான அழகு.  நுங்கும், நுரையுமாக ஆரவாரத்தோடு செக்கச் சிவந்த முகத்தோடு காதலனைக் காணவேண்டி ஓடோடி வரும் புது வெள்ளத்துக்கு அப்புறம் கொஞ்சம் நிதானம் வந்து புக்ககம் வந்துவிட்டோம், இனி ஆட்டம் பாட்டம் எல்லாம் இல்லை என நினைத்துக் கடலரசனைக் காண வேண்டி அமைதியாகவும், நாணத்தோடும், அடக்க ஒடுக்கத்தோடும் செல்லும் நதியின் அழகு.  இப்படிப் பட்ட அழகு இந்த ஊரிலா என மலைத்துப்போகிறார் பூவராகன்.  ஆனால் அவளிடம் அவருக்குத் தப்பான எண்ணமே தோன்றவில்லை. இது ஏதோ தெய்வாம்சம் எனத் தோன்றுகிறது.  செங்கம்மாவைப் பார்த்தாலே விழுந்து வணங்கத் தோன்றுகிறது.

சிவகங்கைச் சீமையில் வயிற்றுக்கு இல்லாமல் வாடிக் கொண்டிருந்த செங்கம்மாவை அவள் தந்தை மூலம் தூரத்துச் சொந்தமான கார்வார் கணேச பிள்ளை இரண்டாம் தாரமாக மணமுடித்துக் கொண்டு வருகிறார்.  இந்தச் செங்கம்மாவுக்கு ஊரின் இரண்டு பட்ட நிலையைக் கண்டு மனதுக்குள் வருத்தம்.  அதோடு இயல்பாகவே அவள் உடலில் ரத்தம் ஓடுவதற்குப் பதிலாக அன்பு தான் ஓடுகிறது.  அனைவரையும் தன் அன்பால் ஆண், பெண் பாகுபாடே இல்லாமல் அரவணைத்துக் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறாள்.  ஆனால் சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.   அவள் இயல்பு இது தான் என அவளுக்கே பூவராகன் வரும் வரை புரியவும் இல்லை அவளுக்கு. ஆறுகட்டி ஊரில் உள்ள பெருமாள் கோயில் கேட்பாரற்றுக் கிடக்கிறது.  சிவன் கோயில் புல், பூண்டு முளைத்துப் பாழடைந்து போய் விட்டது.  இது எல்லாமும் சரி பண்ணணும்.  அதோடு ஊரில் நிலத்தில் பாசனம் செய்யாமல் சோம்பிக் கொண்டு வம்பு பேசிக் கொண்டு கிடக்கும் ஊராரை மாற்ற வேண்டும்.  

ஆனால் இதை எல்லாம் எடுத்துப் பண்ணுவது யார்?  வெளியூரிலிருந்து எக்கச்சக்கமாய்க் காசு, பணத்தோடு வந்திருக்கும் பூவராகன் முதலில்  பெருமாள் கோயில் திருப்பணியை மேற்கொள்ளுகிறான். இத்தனை நாள் சும்மா இருந்த கோயிலில் திருப்பணி ஆரம்பித்தாலும் ஊர்க்காரர்கள் உதவி என்னமோ கிடைக்கவில்லை.  ஒதுங்கியே நிற்கின்றனர். கிடைக்க விடாமல் தடுப்பதும் அந்த ஊர்க்காரனே.  வேலு என்பவன்.  பூவராகன் இப்போது விலைக்கு வாங்கிக் குடி இருக்கும் வீட்டை முழுக்க முழுக்க அனுபவித்துக்  கொண்டிருந்தவன்.  வீட்டுச் சொந்தக்காரர் வீட்டை பூவராகனுக்கு விற்றதில் இருந்து அவனுக்கு மனம் கொதிக்கிறது.  அது மட்டுமில்லாமல் செங்கம்மா வேறு பூவராகன் வீட்டுக்கு உதவியாக வருவதும், போவதுமாக இருப்பதும் அவனுக்குப் பிடிக்கவில்லை.  ஏனெனில் அவன் செங்கம்மாவைக் காதலிக்கிறான்.  பூவராகன் கிரஹப்பிரவேசம் செய்த போது சண்டைக்கு வந்துவிட்டுப் பின்னர் பூவராகனின் அமைதியான போக்கினால் ஏதும் பேச முடியாமல் சென்று விடுகிறான்.  ஆனால் அவன் மனம் இதைத் தனக்குக் கிடைத்த தோல்வியாகவே நினைக்கிறது. இந்த வேலு தான் செங்கம்மாவைக் காதலிக்கிறான். ஆனால் அவனுக்கு மனைவி இருக்கிறாள்.

 இருவருக்குமே திருமணம் ஆகி விட்டது.  வேலுவுக்கு மனைவி இருக்கிறாள். அது போல் செங்கம்மாவுக்கும் கணேச பிள்ளை கணவர்.  அவர் அவளை அருமையாக நடத்தி வருகிறார். அவளும் அவரை முழு மனதோடு நேசிக்கிறாள்.  அன்பு செலுத்துகிறாள்.  கணவன் தனக்கு அளித்திருக்கும் சுதந்திரத்தைச் சரியான முறையில் பயன்படுத்துகிறாள்.  ஆகவே திருப்தியுடன் அவர் சம்மதத்தோடு பூவராகவன் வீட்டில் வேலை செய்யும் செங்கம்மா பூவராகவனுக்கு உடல்நிலை சரியாக இல்லாமல் இருந்தபோது கூட அவனுக்குத் தைலம் எல்லாம் தேய்த்துவிடுகிறாள்.  கணேசபிள்ளைக்குத் தன் மனைவி மேல் இருக்கும் நம்பிக்கை காரணமாக இதைக் கண்டு கோபப்படவில்லை.  எனில் பூவராகவன் மனைவி அதற்கும் மேல்.  செங்கம்மாவைக் குல தெய்வமாகவே கொண்டாடுகிறாள். அவளுக்கும் இதெல்லாம் தவறாகப் படவே இல்லை. இப்போது தான் செங்கம்மாவிடம் இருக்கும் திறமைகளைக் கண்டு கொள்ளும் பூவராகன் அவள் தான் இந்த ஊரின் தலைமையை ஏற்கத் தகுந்தவள் என அவளிடம் பொறுப்பை ஒப்படைக்கிறான்.

இதற்கு நடுவில் ஊரின் விவசாயம் முழுமைக்கும் பூவராகனே பொறுப்பேற்றுக் கொண்டு நடத்திக் காட்டுகிறான்.  அமோக விளைச்சலால் ஊரே மகிழ்ந்திருக்க, வேலு மட்டும் பூவராகனோடு சேராததால் மனம் கொதித்திருக்கிறான்.  ஊர் மக்கள் அனைவருமே இப்போது பூவராகன் பக்கம் வந்துவிட.  கோயில் திருப்பணியும் பூர்த்தி அடைந்து கும்பாபிஷேஹம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை இப்போது நடத்தி முடிக்க ஆவன செய்கின்றனர்.  வேலுவோ தன்னிடம் இருக்கும் ஊர்ப்பணத்தை செங்கம்மாவிடம் ஒப்படைக்க மறுக்கிறான்.  செங்கம்மாவுக்குப் பெண்களுக்கே உரிய நுட்பமான அறிவால் வேலுவின் எண்ணம் புரிகிறது. ஆகவே அவனிடம் நேரில் போய்ப் பேசி அந்தப் பணத்தை அவனிடம் இருந்து வாங்கச் சென்ற செங்கம்மாவை அவன் கட்டி அணைத்து முத்தமிட்டுத் தன் காதலைத் தெரிவிக்கிறான்.  அதன் பின்னர் ஊர்ப்பணத்தை அவளிடம் கொடுக்கிறான்.  ஆனால் கோவில் கும்பாபிஷேஹத்தில் கலந்து கொள்ளாமல் ஊரை விட்டுச் சென்றுவிடுகிறான்.  திரும்ப வருகிறானா?

கதையில் முக்கிய பாத்திரங்கள் செங்கம்மா, கார்வார் கணேச பிள்ளை, பூவராகன், அவன் மனைவி, பெண்கள், வரதன், ஆமருவி, பூவராகனின் சிநேகிதி அனு, வேலு போன்றோர் தான்.

இதில் அனுவைப் பற்றி முதலில் படிக்கையில் மனம் ஒரு மாதிரித் தான் ஆகிறது.  ஆனால் அவள் வாழ்க்கை அவளுடையது, அவள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையை வாழ அவளுக்கு உரிமை உண்டு என்பதைப் பார்த்தால் அனுவின் பக்கத்து நியாயமும் புரிகிறது.  முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை முறைகளைக் கொண்ட அனுவும், செங்கம்மாவும் அன்பினால் இணைகிறார்கள்.  அனுவை செங்கம்மா புரிந்து கொள்கிறாள்.  செங்கம்மாவையும், கணேசபிள்ளையையும் அனுவும் புரிந்து கொள்கிறாள் வெளியூர் சென்ற வேலு கார்வார் கணேச பிள்ளைக்குக் கடிதம் எழுதி அனுப்புகிறான்.  அதை செங்கம்மாவும், கணேசபிள்ளையும் சேர்ந்து படிக்கின்றனர்.  வேலு என்ன ஆனான் என்பது அதிலிருந்து தெரிகிறது.

மற்றபடி சென்னையில் வளர்ந்திருந்தாலும் பூவராகனின் பெண்கள் குடும்பக் கலாசாரத்தை ஒட்டி வளர்ந்திருப்பது குறித்துப்பல இடங்களில் வருகிறது. அதோடு பூவராகனும் செங்கம்மாவைப் பற்றி அவன் மாமன் மகனோடு பேசும் இடம் அருமை.  துளிக்கூட விரச பாவமே இல்லாமல் தன் மனதை வெளிப்படுத்தும் பூவராகன். அதைப் புரிந்து கொள்ளும் நரசிம்மன்.  இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்னும் எண்ணமே தோன்றுகிறது!

படித்தால் பற்பல சிந்தனைகளை ஏற்படுத்தும் புத்தகம். அன்பினாலேயே அனைவரையும் கட்டலாம் என்பதை தி.ஜானகிராமன் அழகாகச் சொல்லி இருக்கிறார்.  நடைமுறை சாத்தியங்கள் இப்போதும் அப்படித் தான் இருந்தும் வருகிறது. செங்கம்மாவே அழகாய்ப் பிறக்காமல் வேறு மாதிரி பிறந்திருந்து இப்படி எல்லாம் நடந்திருந்தால்?  அந்த ஒரு எண்ணம் அவளையும் தாக்கவே அவள் தனக்குக் கிடைத்த கெளரவத்தை  எல்லாம் பெரிசு பண்ணவே இல்லை.  இயல்பாகவே இருக்கிறாள்.  ஆனால் கடைசியில் அவளுடைய அன்பெனும் வேள்விக்குக் கொடுக்கப்பட்ட ஆஹுதி தான் கதையின் முக்கியமான அம்சம். உயிராகிய தேனை மாந்தி மாந்திக் குடித்த ஓர் உயிர், செங்கம்மாவை அடைய முடியாமல் தவித்த ஓர் உயிர். கதை படியுங்கள் புரியும்.

புத்தகமாக வெளி வந்திருக்கலாம்.  அது பற்றித் தெரியவில்லை.  என்றாலும் ஜானகிராமனின் கதைகள் அனைத்துமே புத்தகமாக வெளி வந்திருக்கின்றன. ஆகவே இதுவும் வந்திருக்கலாம்.