எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 13, 2015

நோ சுண்டல் தினம் இன்று! ஆனால் திங்கலாம் வாங்க!

மக்கள் அந்த அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ற பதிவுகளையே விரும்பிப் படிக்கிறார்கள். பொதுவாக போணி ஆகும் பதிவுகளில் சாப்பாடு குறித்த பதிவு மட்டுமே. அதுவும் இங்கே "எண்ணங்கள்" வலைப்பக்கத்தில் மட்டுமே! நேத்திக்கு நவராத்திரிப் பதிவு நல்லா போணி ஆகி இருந்தாலும் கருத்துச் சொன்னவர்கள் குறைவே! :) வழக்கம் போல் இது ஓர் ஆச்சரியம் தான். அடுத்து இன்னிக்கு ஒன்பது மணி நேர மின்வெட்டு என்பதால் அவசரம் அவசரமாகவே எழுதுகிறேன். (இது காலையில் எழுதினது) பழுப்பு அரிசி தோசை, இட்லி படம் போடறேன்னு சொல்லி இருந்தேன்! இட்லி படம் எடுக்க மறந்துட்டேன். தோசைப் படம் மட்டும் போடறேன். அப்புறமா நவராத்திரிப் பதிவு வழக்கம் போல்! கொஞ்சம் ஜனரஞ்சகமா இருக்கட்டுமேனு தான் கலந்து கட்டி எழுதி இருக்கேன். :)



தோசை சாப்பிடத் தயாராக!



தோசைக்கல்லில் வேகும் தோசை! :)


 

இன்றைக்கு நோ சுண்டல் டே! நவராத்திரி முதல்நாள் அன்று பொதுவாக நான் இனிப்புப் பதார்த்தம் ஏதேனும் செய்வது வழக்கம். இப்போ இனிப்புக்குத் தடா என்பதால், யோசனையில் இருக்கேன். இன்றைய நிவேதனம் படம் மாலை மின்சாரம் வருவதைப் பொறுத்துப் போடுவேன். இனி நாளைய தினத்துக்கான வழிமுறைகள்.

நவராத்திரி இரண்டாம் நாள்

இன்று அம்பிகையை "ப்ரம்மசாரிணி"யாக வழிபடுவார்கள். இன்றைய தினம் அம்பிகையை "ராஜராஜேஸ்வரி"யாக அலங்கரிக்கலாம்.  மூன்று வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையை "திரிபுரா" அல்லது "திரிதேவி"யாக விளங்கும் திரிமூர்த்தியாகப் பாவித்து வழிபட வேண்டும்.

இன்றைய தினம் கோதுமை மாவில் கோலம் போடுவது சிறப்பு. இன்றைக்கும் மஞ்சள் நிறமுள்ள மலர்கள் அல்லது சிவந்த நிறமுள்ள மலர்கள் வழிபாட்டுக்கு ஏற்றவை. சிவப்பு வஸ்திரங்கள், வளையல்கள், சிவந்த நிறமுள்ள குங்குமம் ஆகியன கொடுத்துக் குழந்தைக்கு அதிகம் காரமில்லாமல் புளியோதரை செய்து நிவேதனம் செய்து சாப்பிட வைக்கலாம். மாலை முழு மொச்சையை ஊற வைத்துச் சுண்டல் செய்து நிவேதனம் செய்து விநியோகிக்கலாம்.

புளிக்காய்ச்சல் முன் கூட்டியே செய்து வைக்க முடியவில்லை எனில் கவலை வேண்டாம். ஒரு எலுமிச்சை அளவுப் புளியை சுத்தம் செய்துவிட்டு ஒரு கரண்டி நீரில் ஊற வைக்கவும். ஊறியதும் 5 அல்லது 6 சிவப்பு மிளகாய், கொஞ்சம் வெந்தயம் வறுத்தது, கடுகு பச்சையாக, தேங்காய்த் துருவல், தனியா வெறும் வாணலியில் வறுத்தது, ஒரு சின்னக் கட்டி வெல்லம் ஆகியவற்றோடு மஞ்சள் பொடி சேர்த்து புளியை ஊற வைத்த நீரோடு விட்டு விழுதாக அரைக்கவும்.

ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டு அரைத்த விழுதை எண்ணெய் பிரியும் வரை கிளறவும். பின்னர் சாதம் உதிர் உதிராக வடித்துக் கொண்டு அதில் கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை, மி.வத்தல் , கருகப்பிலை தாளித்துச் சேர்த்து அரைத்துக் கிளறிய விழுதில் கொஞ்சம் போல் போட்டுக் கலக்கவும். பின்னர் நெய்யில் பொரித்த மிளகைப் பொடிசெய்து அரை டீஸ்பூன் தூவவும். கமகமவென்ற மணத்தோடு கோயில் புளியோதரை தயார். அரைத்த விழுது மிச்சமிருந்தால் பத்து நாட்களுக்குள் பயன்படுத்தலாம். 


நம்ம வீட்டுக் குட்டிக் கொலு! அதிகம் அலங்காரம் செய்யும் அளவுக்கு உடல்நலம் இல்லை! ஆகவே சும்ம்ம்ம்ம்ம்மா பொம்மைகளை வைத்ததோடு சரி! :(


இன்றைய நிவேதனம், சக்கரைப் பேடா, உப்புப் பேடா!

மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்ததில் இதுக்குத் தான் ஓட்டு விழுந்தது. மத்தத் தித்திப்புப் பதார்த்தங்கள் சாப்பிட முடியாதே! ஆகவே கொஞ்சமாச் சர்க்கரை போட்டு இதைச் செய்தேன்.

செய்முறை மைதாமாவு ஒரு கரண்டி, கோதுமை மாவு இரண்டு கரண்டி இரண்டு டேபிள் ஸ்பூன்  வெண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி அரை டீஸ்பூன், அரைக்கிண்ணம் பால், ஒரு சிட்டிகை உப்பு.

வெண்ணெய், உப்போடு சர்க்கரையை ஏலக்காய் சேர்த்துப் பொடிசெய்து சேர்த்து நன்கு கலக்கவும. சுமார் ஐந்திலிருந்து பத்து நிமிடங்களாவது கலக்க வேண்டும். பின்னர் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கலக்கவும். இதுவும் ஒரு ஐந்து நிமிஷத்துக்குக் குறையாமல் கலக்க வேண்டும். அதன் பின்னர் அரைக்கிண்ணம் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேவைப்படும் வரை ஊற்றி மாவைச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். சர்க்கரை சேர்ப்பதால் அதிலும் நீர்ச் சத்து உண்டென்பதால் பாலை விடும்போது கொஞ்சம் கொஞ்சமாகவே சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்னர் பெரிய பெரிய அப்பளங்களாக இட்டு ஓரத்தில் நெளிநெளியாக வரும்படி கிடைக்கும் கர்ச்சிக்காய் ஸ்பூனால் வெட்டி எடுக்கவும்.

அடுப்பில் எண்ணெயைக் காய வைத்துக் குறைந்த தீயில் வைத்துப் பொரித்தெடுக்கவும். சுவையான பிஸ்கட் சுவைக்குத் தயார்.

உப்புப் பேடா!

மைதா மாவு, கோதுமை மாவு அதே அளவு, கால் டீஸ்பூன் பெருங்காயம், உப்பு அரை டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் மிளகாய்ப் பொடி, ஓமம் ஒரு டீஸ்பூன்,  வெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், பிசைய நீர்.

வெண்ணெயை உப்புச் சேர்த்து நன்கு கலந்து கொண்டு மாவையும் மிளகாய்ப் பொடியையும், பெருங்காயப் பொடியையும், ஓமத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்க்கவும் . மீண்டும் நன்கு கலக்கவும். கலக்கும்போது ஒரே பக்கமாகக் கலந்தால் காற்று நன்கு உட்புகுந்து பொரிக்கையில் கரகரப்புக் கூடும் என்பதோடு உப்பிக் கொண்டும் வரும். காரப் பொடி பிடிக்கவில்லை எனில் மிளகு பொடியும் சேர்க்கலாம். பின்னர் தேவையான நீர் விட்டுப் பிசைந்து முன் சொன்னது போல் ஒரு மணி நேரம் ஊற வைத்துப் பின்னர் பெரிய அப்பளங்களாக இட்டுக் கொண்டு கரண்டியால் கத்திரித்துப் பொரித்து எடுக்கவும்.


Monday, October 12, 2015

நவராத்திரி வந்தாச்சு! இங்கேயும்!

நவராத்திரி வருஷத்திற்கு நாலு முறை கொண்டாடப்படுகிறது. இதில் புரட்டாசி மாதம் வருவதையே விமரிசையாகப் பலரும் கொண்டாடுகிறோம். இதை சாரதா நவராத்திரி அல்லது சரத் நவராத்திரி என்று சொல்கிறோம். தமிழ் மாதமான புரட்டாசி  ஐப்பசி மாதங்களில் வரும் இதை ஆஸ்வின நவராத்திரி எனவும் சொல்கின்றனர். இந்தியா முழுவதுமே இந்த நவராத்திரி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அடுத்து வசந்த நவராத்திரி என்பது பங்குனி மாதம் ஶ்ரீராமநவமியை ஒட்டிக் கொண்டாடப்படுகிறது. அடுத்து ஆஷாட நவராத்திரி என்பது ஆடி மாதம் கொண்டாடப்படுகிறது. இன்னொரு நவராத்திரி மாசி மாதம் கொண்டாடப்படும் மாக நவராத்திரி ஆகும்.


மேலே சொன்ன இரு  நவராத்திரிகளையும் பெரும்பாலும் சக்தி உபாசகர்களே கொண்டாடுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. இது அவ்வளவாகப் பழக்கத்தில் இல்லை. ஆகையால் இவை இரண்டும் "குப்த நவராத்திரி" அதாவது மறைவான நவராத்திரிகள் எனப்படுகின்றன.  இவற்றில் வசந்த நவராத்திரி பெரும்பாலும் கோவில்களிலும், ஒரு சில பொது அமைப்புகளாலும் கொண்டாடப்பட்டாலும் சாரதா நவராத்திரியைப் போல் அவ்வளவுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது இல்லை.  மழை முடிந்து குளிர் தொடங்கப் போகும் காலத்தில் இவை கொண்டாடப்பட்டதாகத் தெரிகிறது. ஏனெனில் அழைக்காலமும், கோடை காலமும் தொடங்கும்போது கிருமிகள் பரவி நோய் நொடிகள் அதிகரிக்கும். அதன் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அம்பிகையின் சக்தியை வேண்டிப் பிரார்த்திக்கிறோம். சக்தி இருந்தாலே நம் உடல் இயங்கும். இந்த சக்தி நம் உடலில் மட்டும் இருந்து இயங்கவில்லை. அகில உலகத்தையும் இயக்குகிறது. பல்வேறு அமசங்களில் இயக்குகிறது.  நம்முடைய ஆன்மசக்தியை பெருக்கி அதன் மூலம் சிவஸ்திதியை அடைவதே நவராத்திரி வழிபாட்டின் முக்கிய நோக்கம். நம் உடலின் நவ துவாரங்கள் வழியாக சக்தி பரவி நாம் உன்னத நிலையை அடைய உதவுகிறது.

நவராத்திரி ஆரம்பிப்பது புரட்டாசி மாத அமாவாசையான மஹாளய அமாவாசை அன்று. அன்றுதான் படிகள் கட்டிக் கொலு வைக்க வேண்டும் அன்று கொலு வைத்தாலும் மறு நாளான பிரதமையிலிருந்தே பண்டிகை ஆரம்பம் எனக் கொள்வார்கள். ஒன்பது துவாரங்களையும் குறிப்பிடும் விதத்தில் ஒன்பது படிகள் கட்டிக் கொலு வைப்பார்கள். இப்போதெல்லாம் அவ்வளவு வைப்பது இல்லை. என்றாலும் கொலு வைப்பதன் தாத்பரியம் ஆன்மா படிப்படியாகப் பரிணாமம் அடைகிறது என்பதைக் காட்டுவது தான். அதற்காகவே கீழே முதல் படியில் ஒன்றுமில்லாத அஃறிணைப் பொருளில் தொடங்குகிறோம். அதன் பின்னர் ஓரறிவு பெற்ற பொருட்கள் முதல் தொடங்கி ஐந்தாம் படி வரை பறவைகள் விலங்குகள் என ஐந்தறிவு பெற்றவைகளின் பொம்மைகளை வைத்துப் பின்னர் ஆறாவது படியில் ஆறறிவு பெற்ற மனிதர்களின்  உருவபொம்மைகள். இதில் ஞானிகள், ஆன்மிகப் பெரியோர்கள் இடம் பெறுவர். இப்போதெல்லாம் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பொம்மை உருவிலே கிடைக்கின்றனர். அவற்றை வாங்கியும் வைக்கலாம். பின்னர் ஏழாவது படியில் ரிஷிகள், ஆசாரியர்கள் போன்றோரின் உருவங்களும், எட்டாவது படியில் மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்கள், மற்றக் கடவுளரின் பொம்மைகள் ஆகியன வைக்கலாம். ஒன்பதாம் படியில் கலசம் வைத்து அம்பிகையை ஆவாஹனம் செய்து மும்மூர்த்திகளையும் தேவியரோடு வைக்கலாம். பஞ்ச க்ருத்ய பராயணாவான தேவி தான் பிரபஞ்சத்தோற்றத்திற்கே காரணம் என்பதை இது நினைவூட்டுகிறது.

நவராத்திரி முதல் மூன்று நாட்கள் துர்கையையும், நடுவில் வரும் மூன்று நாட்கள் மஹாலக்ஷ்மியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுவது மரபு. இங்கே வரும் மஹாலக்ஷ்மி என்பவள் ஆதிலக்ஷ்மி ஆவாள். இவளையும் மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மியையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். :)




படத்துக்கு நன்றி விக்கி பீடியா

நவராத்திரி முதல் நாளன்று கொலுவீற்றிருக்கும் அம்பிகையை துர்கையாக அலங்கரிக்கலாம். அன்று இரண்டு வயதுப் பெண் குழந்தையைக் "குமாரி"யாகப் பாவித்து வழிபட்டுக் குழந்தைக்குப் பிரியமானவற்றைப் பரிசுகளாகக் கொடுக்க வேண்டும். ஒரு சிலர் "சைலபுத்ரீ" என்றும் சொல்வார்கள். பொட்டுக் கோலம் போட்டு, எலுமிச்சை சாதம் செய்து பிரசாதமக நிவேதனம் செய்து குழந்தையைச் சாப்பிடச் செய்து மஞ்சள் வஸ்திரம் கொடுக்கலாம்.  மஞ்சள் பொடி சேர்த்த வெண்பொங்கலும் சாப்பிடச் செய்யலாம். மாலை பாசிப்பயறைச் சுண்டல் செய்து நிவேதனம் செய்யலாம்.

இது  நாளைய தினத்துக்கான வழிபாட்டு முறை! இதைத் தவிர ஒவ்வொரு கிழமைக்கும் ஏற்றவகையிலும் அம்பிகையை  ஆவாஹனம் செய்தும் வழிபடுவது  உண்டு. இது குறித்தும் ஏற்கெனவே எழுதி இருக்கிறேன். 

Saturday, October 10, 2015

பதிவர் விழாவுக்கு வாழ்த்துகள்!

நாளை நடக்கப் போகும் பதிவர் விழாவில் கலந்து கொள்ள முடியாது. உடல்நலமும் சரியில்லை. அதோடு வேறு வேலைகளும் இருக்கின்றன. இந்தப் பதிவர் விழாவில் கலந்து கொள்ளுவதற்காகத் திரு ஜி.எம்.பி. என அனைவராலும் அழைக்கப்படும் ஜி.எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று காலை பெண்களூரில் இருந்து திருச்சி வந்து சேர்ந்திருக்கிறார். சமயபுரம் மாரியம்மன் கோயில் போய்விட்டுப் பின்னர் ரங்கநாதரையும் தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து எனக்குத் தொலைபேசினார் அவரது இரண்டாவது மகன். நானும் உடனே அவர்களை வரச் சொல்லிவிட்டு எதிர்பார்த்துக் காத்திருந்தேன். காலை ஆகாரத்துக்கே வரச் சொல்லி இருந்தேன். ஆனால் அது முடியாது என உடனே பதில் அனுப்பி விட்டார். ஆகவே கடையில் வாங்கி மணையில் வைத்தோம்.

சிறிது நேரமே இருந்தனர். திரும்பவும் லாட்ஜுக்குச் சென்று சாப்பிட்டு மாலை நண்பர்கள் திரு ரிஷபன், திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, திரு வைகோ ஆகியோருடன் சந்திப்பு இருப்பதால் அதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். நாளை புதுக்கோட்டைப் பதிவர் சந்திப்புக்குச் சென்று பின்னர் அங்கிருந்தே நேரே பெண்களூர் செல்கின்றனர். தந்தையை கவனமாகப் பார்த்துக் கொண்டு அக்கறையுடன் மகன்கள் இருவரும் செல்லவேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது பார்க்க ரொம்பவே சந்தோஷமாகவும், மனதுக்கு நிறைவாகவும் இருந்தது.  தான் வரைந்த படங்களை திரு ஜிஎம்பி அவர்கள் கைபேசியில் படமாக எடுக்கப்பட்டிருப்பதைக் காட்டினார்.  முன் போல் உடல்நிலை இல்லை என்பதையும், படங்கள் வரைய முடியவில்லை என்றும் வருத்தப்பட்டார். இந்த வயசுக்கு அவர் சொல்வது பொருத்தமாக இருக்கிறது. ஆனால் என்னால் எல்லாம் இது கூட முடியலையே என நினைத்தால் இன்னமும் வருத்தமாக இருக்கிறது. இதெல்லாம் செய்தால் தூசி, தும்பு வரும் என்பதாலும் அலர்ஜி அதிகமாகும் என்பதாலும் என்னைக் கற்றுக்கொள்ளக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.

காஃபி டிகாக்‌ஷன் எல்லாம் போட்டு வைத்திருந்தேன். ஆனால் காஃபி வேண்டாம்னு சொல்லிட்டாங்க. லஸ்ஸி கொடுக்கலாமான்னதுக்கும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சரி, அவங்களும் வயசானவங்க தானே! அப்படி எல்லாம் சாப்பிட முடியாது! என மனசைத் தேத்திக் கொண்டேன். கடைசியிலே நம்ம ரங்க்ஸ் விருப்பப்படி (வரும் எல்லோரையும் போய்ப் பார்க்கச் சொல்லுவார்) மொட்டை மாடியைப் பார்த்துட்டுக் கிளம்பிட்டாங்க. அவங்க கிளம்பின கொஞ்ச நேரத்திலே ருக்மிணி சேஷசாயி அம்மா கூப்பிட்டுப் புதுக்கோட்டை போகலாம் வரியான்னாங்க! ரஞ்சனி வராங்களாம். நான் எங்கேயும் போகலை! ரஞ்சனி வந்தால் அழைச்சுட்டு வாங்கனு சொல்லிட்டேன். அவங்க பாவம் துணைக்கு ஆள் இல்லாமல் தவிக்கிறாங்க. இதைப் படிக்கும் திருச்சி வாழ் பதிவர்கள் யாரும் புதுக்கோட்டைக்குப் போனால் ருக்மிணி அம்மாவையும் அழைத்துச் செல்லுங்கள்.

பதிவர் விழாவில் நாளை பரிசு பெறப்போகும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.  ஆரம்ப காலத்தில் ஒரு சின்ன சந்திப்பாக சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. பின்னர் மெல்ல மெல்லச் சென்னையிலேயே மண்டபம் எடுத்துப் பதிவர் விழாவாக நடத்தினார்கள். அதன் பின்னர் இப்போது தான் முறையாகத் திட்டம் போட்டு ஒவ்வொரு வருஷம் ஒவ்வொரு ஊரில் என முடிவு செய்து போன வருஷம் மதுரையிலும், இந்த வருஷம் புதுக்கோட்டையிலும் நடத்தினார்கள்; நடத்துகிறார்கள் அடுத்த வருஷம் திருச்சியில் நடந்தால் பார்க்கலாம்.

இந்தப் பதிவர் விழாவுக்காக உழைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும். அதிவேக சுறுசுறுப்பையும், திறமையையும் காட்டி உழைக்கின்றனர்.
வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா

வாழ்த்துகள், பாராட்டுகள்!

Thursday, October 08, 2015

அரிசி சாகுபடி செய்வோமா? 3

 சர்க்கரை நோய் பற்றிய குறிப்புகள் பழைய மருத்துவச் சுவடிகளில் காணப்பட்டாலும் நம் நாட்டில் சர்க்கரை நோய் இந்த அளவு அதிகரித்தது நாம் சாப்பிடும் அரிசியின் வகை மாற்றியதால் தான். ஆம்! பல்லாண்டுகளாகக் கைக்குதல் அரிசியையே சாப்பிட்டு வந்த நாம் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தான் தீட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை அரிசியைச் சாப்பிட ஆரம்பித்தோம். ஆங்கிலேயர்களுக்குப் பழுப்பு நிற அரிசி பிடிக்கவில்லை. ஆகவே அரிசியைத் தீட்டினார்கள். இந்த வழக்கமே அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது தான். நம் அன்றாடப் பழக்கங்கள் மட்டுமல்லாமல், படிப்பு மட்டுமல்லாமல், நம் தொழில் மட்டுமல்லாமல், விவசாய முறை மட்டுமில்லாமல்  நாம் சாப்பிடும் உணவும் அவர்களாலேயே மாற்றப் பட்டது. ஆனால் ஆரம்ப காலத்தில் அவர்கள் 2 சதவீதமே தீட்டியதாகச் சொல்லப்படுகிறது. பின்னர் ஐந்து சதவீதம் தீட்டப்பட்ட அரிசி இப்போது 12 சதவீதத்துக்கும் மேல் தீட்டப்படுகிறது. இந்த அரிசியில் என்ன சத்து கிடைக்கும்?

இதைச் சாப்பிட்டால் பெரிபெரி என்னும் நோய் தாக்கும் என்பதை நாம் சிறு வயதிலேயே படித்திருக்கிறோம் இல்லையா? ஆனால் நம்மை வெள்ளை அரிசி சாப்பிடச் சொன்ன ஆங்கிலேயர்கள் கோதுமை, பழங்கள், காய்கறிகள், மீன், இறைச்சி, வெண்ணெய், பால், பால் பொருட்கள் என நிறைய எடுத்துக் கொள்வதால் அவர்களுக்குக் கைக்குத்தல் அரிசியில் கிடைக்கும் சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கலாம். ஆனால் நாம் எல்லோரும் இப்படிச் சாப்பிடுவதில்லை. பலருக்குப் பழக்கமில்லை எனில் பலருக்கு வசதி கிடையாது. உணவு தான் பெரிபெரி நோய்க்குக் காரணம் எனக் கண்டறிந்ததோடு இல்லாமல் அரிசித் தவிட்டால் இந்த நோய் குணமாகும் என்பதையும் கண்டுபிடித்தவர்களுக்கு 1929 ஆம் வருஷத்து நோபல் பரிசும் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்தப் பரிசினை எல்லாம் பெறாமலேயே நம் முன்னோர்கள் கைக்குத்தல் அரிசி தான் சிறந்தது என்று கூறிவந்ததோடு உளுந்தையும் தோலோடு பயன்படுத்தச் சொல்லிச் செய்தும் காட்டி இருக்கிறார்கள்.நாம் தான் வெள்ளைக்காரன் சொன்னால் தானே எதையும் செய்வோம், அல்லது ஒத்துக் கொள்வோம். இப்போதைய மருத்துவர்கள் நம்மைக் கைக்குத்தல் அரிசி, சிறுதானியங்கள் எனச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்துகின்றனர்.

அதோடு இல்லாமல் நடைப்பயிற்சியையும் இப்போது வற்புறுத்துகின்றனர். இந்த நடைப்பயிற்சியைத் தான் நன் அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பதற்காகக் கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் பெரிய பெரிய கோயில்களைக் கட்டி வைத்து இறை சக்தியை அங்கே ஆவிர்ப்பவித்து நம்மைக் கோயிலுக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் நாமோ எனில் நம் அன்றாட உணவை மாற்றியதோடு அல்லாமல் அறவே கோயில்களையும் கவனிக்காமல் இருக்கிறோம். பெரிய கோயில்களில் பிராகாரங்கள் சுற்றினாலே போதுமே! அன்றாடம் வேண்டிய நடைப்பயிற்சி கிடைத்துவிடுமே! அதை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறோம் என்றால் யாரும் இல்லை. இன்றைய அவசர உலகில் கோயில் கோபுரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு போனாலே பெரிய விஷயமாக இருந்து வருகிறதே!

பழுப்பு அரிசி எனப்படும் கைக்குத்தல் அரிசியில் தான் சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. இந்தப் பழுப்பு அரிசியும் கைக்குத்தல் அரிசியும் ஒன்றே தானா என்பதில் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் உள்ளது. ஏனெனில் சின்ன வயசில் என் பெரியப்பா ஒருத்தர் கைக்குத்தல் அரிசியைத் தான் விடாப்பிடியாகச் சமைத்துச் சாப்பிடுவார். தவிடு நன்றாகத் தெரியும். ஆனால் இப்போது கைக்குத்தல் அரிசி என்னும் பெயரில் வருவதும் சரி, ப்ரவுன் அரிசி எனப்படும் பழுப்பு அரிசியிலும் சரி தவிடே தெரியவில்லை. ஆனால் வெள்ளை அரிசிக்கும் இதற்கும் சுவை மாறுபாடு மட்டும் தெரிகிறது. அதோடு பழுப்பு அரிசியைத் தான் இப்போது இரண்டு தரமாக இட்லி தயாரிக்கப் பயன்படுத்துகிறேன். நன்றாக ருசியாக வருகிறது இட்லி, மெத் மெத்தென்று! ஏற்கெனவே நான் துணி போட்டுப் பழங்கால முறையில் இட்லி வேக வைப்பதால் இட்லியே மெத்தென்று தான் இருக்கும் என்றாலும் இப்போது சுவையும் கூடுதல்! தோசை மாவைக் கல்லில் ஊற்றும்போதே வரும் மணம் நாவில் நீர் சுரக்க வைக்கிறது.

  ஒருவேளை அரிசிப்புராணம் தொடரலாம்! பழுப்பு அரிசியில் இட்லி படம் முடிந்தால் நாளை பகிர்கிறேன். 

Monday, October 05, 2015

அரிசி சாகுபடி செய்வோமா? 2

இங்கே


அரிசி க்கான பட முடிவு


இப்போது நாம் மறுபடி அரிசிக்கு வருவோமா? கி.மு. 4500 க்கு முன்னால் இருந்தே  ஆசியாவில் பல நாடுகளும் அரிசி சாகுபடி செய்து வந்ததாகத் தெரிகிறது.  இத்தனை பழமையான அரிசியை உணவாகக் கொண்டே நம் தமிழ்நாட்டு வீரர்கள் போர்க்களத்தில் பலவிதமான சாகசங்களையும் காட்டி வெற்றி கண்டிருக்கின்றனர். சர்க்கரை நோய் பற்றிய குறிப்புக்கள் பரம்பரை வைத்திய முறையில் இருந்தாலும் அதனால் பாதிப்பு அதிகம் இருந்ததாக எங்கும் சொல்லப்படவில்லை  இந்தப் பேச்சு ஆரம்பித்ததே நாம் பாரம்பரியமான அரிசிச் சாகுபடியை விட்டு விட்டு ரசாயன உரங்களையும், பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியை உண்பதையும் ஆரம்பித்ததும் தான். பாரம்பரியமான அரிசி ரகங்கள் இன்னமும் தென் மாவட்டங்களில் இருந்து தான் வருகிறது என்பது இங்கே ஶ்ரீரங்கம் வந்ததும் தான் தெரிய வந்தது. அதிலும் இந்தியாவில் மட்டும் 2,00,000 நெல் வகைகள் இருந்துள்ளன என விக்கி பீடியா சொல்கிறது. அவற்றில் தமிழகத்தில் மட்டும்

வாடன் சம்பா, முடுவு முழுங்கி, களர் சம்பா, குள்ளக்கார், நவரை, குழி வெடிச்சான், கார், அன்னமழகி, இலுப்பப்பூ சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, கருங்குறுவை, கல்லுண்ட, கருடன் சம்பா, பனங்காட்டுக் குடவாழை, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, விஷ்ணுபோகம், கைவரை சம்பா, அறுபதாம் குறுவை, பூங்கார், காட்டு யானம், தேங்காய்ப் பூ சம்பா, கிச்சடி சம்பா, நெய் கிச்சி போன்ற வகைகள் பாரம்பரிய வகைகளாக விக்கி பீடியா சொல்கிறது. மணப்பாறை முறுக்கின் ருசிக்கு அங்கே பயனப்டுத்தும் பாரம்பரிய ரகமான அரிசி தான் காரணம் என்கின்றனர்.

தற்சமயம் பொன்னி அரிசி, சோனா மசூரி போன்றவயும் பிரபலமாகி வருகிறது. இதைத் தவிர பலகாரங்கள் செய்யவென்று ஐ.ஆர். 20 என்னும் வகை அரிசியும் இருக்கிறது. வெள்ளைக் கார் அரிசி, சிவப்புக்கார் அரிசி போன்றவையும் உண்டு. பாரம்பரிய நெல் வகைகளில் ஒரு சில இன்னமும் காப்பாற்றப்பட்டு வருகின்றன. நெல்லைக் காப்போம் என்னும் அமைப்பைத் தவிர உளுந்தூர்ப் பேட்டையின் ஶ்ரீசாரதா ஆசிரமமும் 150 பாரம்பரிய நெல் வகைகளைக் காப்பாற்றிப் பெண் விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கிப் பாரம்பரியத்தைக் காத்து வருகிறது. இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது.  அதிகம் உண்ணப்படும் தானியம் அரிசி தான். இதில் சீனா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன.

அரிசிக்கு மாற்று உணவு அரிசி மட்டும் தான். என்றாலும் நடுநடுவில் உடல் பலத்தைக் கூட்டுவதற்கும் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கும் சிறுதானியங்களையும் அளவாகப் பயன்படுத்த வேண்டும். அரிசிச் சோறு தான் வேண்டும் என்பவர்கள் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம். கைக்குத்தல் அரிசியை முன் கூட்டியே ஊற வைக்க வேண்டும். குறைந்தது மூன்று மணி நேரமாவது ஊறினால் தான் சாப்பிட முடிகிறது. ப்ரவுன் அரிசி எனப்படும் பழுப்பு அரிசியிலும் இட்லி, தோசை வகைகள் செய்யலாம். இரண்டு நாட்கள் முன்னர் செய்தேன். நன்றாகவே வந்தது. அதிலும் தோசை மணம் என் சிறுவயதில் சாப்பிட்ட தோசையை நினைவூட்டியது. இப்போது கிடைக்கும் இட்லி அரிசியில் செய்து சாப்பிடுவதை விடச் சுவையும், மணமும் அதிகம். பட்டை தீட்டிய அரிசியைச் சாப்பிடாமல், ரசாயன உரம் போட்டு விளைவிக்கும் அரிசியைச் சாப்பிடாமல் இயற்கை உரங்கள் போட்டு விளைவிக்கும் அரிசியைச் சாப்பிட்டு வந்தாலே போதும். அரிசியைத் தீட்டி வெண்ணிறமாக்குவதினால் சத்துக்கள் வீணாகின்றன சர்க்கரைச் சத்தை மட்டுமே அதிகம் தருகிறது. ஆகவே அந்த அரிசியைத் தவிர்க்கலாம்.

கைக்குத்தல் அரிசியோ, பழுப்பு அரிசியோ சாப்பிடப் பிடிக்காதவர்கள் புழுங்கல் அரிசிக்கு மாறலாம். புழுங்கல் அரிசி தயாரிக்க அறுவடையான நெல்லை நீரில் வேக வைப்பதால் ஆசாரமானவர்கள் உண்ணுவதற்குத் தயங்குவார்கள். விசேஷ நாட்களிலும், விரத நாட்களிலும் மட்டும் வெள்ளை அரிசியைக் குறைவாகவோ அல்லது கைக்குத்தல் அரிசியையோ பயன்படுத்திக் கொண்டு மற்ற நாட்களில் புழுங்கல் அரிசியை உண்ணலாம்.

அரிசிப் புராணம் தொடரலாம்.

Sunday, October 04, 2015

எங்களுக்கு தினம் "திங்க"ற கிழமை தான்!:)


கரண்டியில் ஊற்றிய மாவு


தக்காளித் தொக்கு

சிறு தானியங்கள் சாப்பிட ஆரம்பித்துச் சில நாட்கள் ஆகின்றன. கைக்குத்தல் அரிசியை ஒரு மாதிரியாய்ச் செலவு செய்து முடித்து விட்டேன். ப்ரவுன் அரிசி இன்னமும் மிச்சம் இருக்கிறது. குதிரைவாலி அரிசியின் ருசி பிடித்திருப்பதால் அதைத் தொடரலாம் என்று ஓர் எண்ணம். நடுவில் செவ்வாய்க் கிழமையும், வெள்ளிக்கிழமையும் மட்டும் வெள்ளை அரிசி சமைத்தேன். இனி சர்க்கரை அளவை ஒரு நாள் சோதிக்க வேண்டும். பரவுன் அரிசியில் சாதம் வைத்ததோடு அல்லாமல் இட்லி, தோசையும் செய்தேன். தோசை அருமையாக இருந்தது. இட்லியும் நன்றாகவே இருந்தது என்றாலும் இட்லி புழுங்கல் அரிசி போட்டால் உப்பிக் கொள்வதைப் போல் உப்பவில்லை. ஆனால் மிருதுவாகவே இருந்தது.

வரகில் சாதம், பொங்கல், சோளத்தில் நேற்று மறுபடியும் கிச்சடி, சாமையில் பொங்கல், குதிரைவாலியில் பொங்கல், சாதம், கம்பில் அடை, வரகுப் புழுங்கல் அரிசியில் இட்லி, தோசை என்றெல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. தினை ஒண்ணு தான் பாக்கி இருந்தது. ஆகவே நேற்று இரவு தினை+குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து நனைத்து இன்று காலை குழி ஆப்பம் செய்தேன். அதான் மேலே படம். குழி ஆப்பம் நன்றாக வந்தது. எடுத்தது படம் எடுக்கிறதுக்குள்ளே தொலைபேசி அழைப்பு  வரவே பேசிட்டு வந்து மறந்து போச்சு! தொட்டுக்கத் தக்காளித் தொக்கு. என்ன சிவப்பா இருக்கேனு பார்க்காதீங்க. நல்லாப் பழுத்த சிவந்த நிறமுள்ள நாட்டுத் தக்காளிகள் எல்லாம். அதான்! இப்போத் தினையில் குழி அப்பம் பண்ணத் தேவையான பொருட்கள்.


தினை அரிசி அரைக்கிண்ணம் ஆனால் எனக்கு ஒரு வேளைக்குப் போதும் என்பதால் ஒரு குழிக்கரண்டி தான் போட்டேன்.

அதே போல் குதிரைவாலி அரிசியும் அரைக்கிண்ணம் என்பதற்கு ஒரு குழிக்கரண்டி தான் போட்டேன்.

உளுத்தம்பருப்பு அரைக்கிண்ணம் நான் கால் கிண்ணம் போட்டேன்.

ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு கைப்பிடி பச்சரிசி, இல்லைனா செய்யும் போது அரைக்கரண்டி பச்சரிசி மாவைக் கலந்துக்கலாம். நான் சேர்த்தே நனைத்து விட்டேன்.

நேற்றிரவே எல்லாவற்றையும் களைந்து ஊறப்போட்டுவிட்டேன். காலையில் இவற்றோடு 

மிவத்தல் நாலு அல்லது ஐந்து (அவரவர் காரத்துக்கு ஏற்றாற்போல்) நான் நாலு தான் போட்டேன்

உப்பு தேவைக்கு ஏற்ப, பெருங்காயம்
இவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டேன். இரும்புக்கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு உபருப்பு, கபருப்பு சேர்த்துக் கருகப்பிலை கிள்ளிப் போட்டு ஒரு சின்னப் பச்சைமிளகாய நீள வாக்கில் வகிர்ந்து உள்ளே உள்ள விதைகளை நினைவாய் எடுத்துட்டு அதை நறுக்கிச் சேர்த்தேன். இஞ்சி ஒரு துண்டு. எல்லாவற்றையும் எண்ணெயில் போட்டு வதக்கி மாவில் சேர்த்தேன். தேங்காய் இருந்தால் பல்லுப்பல்லாகக் கீறிச் சேர்க்கலாம். வெங்காயம் சேர்க்கும் நாட்களில் வெங்காயத்தையும் வதக்கிச் சேர்க்கலாம். இப்போ வெங்காயம் சேர்க்க முடியாது என்பதால் சேர்க்கவில்லை. தேங்காயும் போடவில்லை. 

மாவு ரெடி. என்னோட அப்பக்காரை எங்கேயோ பெட்டியில் மாட்டிக் கொண்டு பல மாதங்களாகின்றது. அதை எடுக்கவே இல்லை. ஆகவே ஒரு இரும்புக்கரண்டியில் குத்தலாம்னு நினைச்சேன். ஆனால் மாவு ஊற்றியதும் மேலே உப்பிக் கொண்டு வரும் என்பதால் இரும்புக்கரண்டி போல இருக்கும் நான் ஸ்டிக் கரண்டி ஒன்றில் எண்ணெயைக் காய வைத்து ஊற்றினேன் நினைத்தாற்போலவே நன்கு உப்பிக் கொண்டு வந்தது. அதைத் திருப்பிப் போட உபயோகிக்கும் இரும்புக் குச்சியும் அம்பத்தூரிலிருந்து வரும்போது எங்கே தவறி விட்டது. ஆகையால் ஒரு ஸ்பூன் முனையால் திருப்பிப் போட்டேன். திருப்பிப் போட்டு உள்ளே ஸ்பூன் முனையாலேயே குத்தி விட வேண்டும். அப்போது தான் உள்ளே நன்றாக வேகும்.  இது மேலே நன்றாகச் சிவந்து பொன்னிறமாக முறுமுறுவென்றும் உள்ளே கடற்பஞ்சு (sponge) போலவும் இருந்தது.  தட்டில் போட்டதைப் படம் எடுக்கிறதுக்குள்ளே வேறே கவனம்! :(

காலை ஆகாரத்துக்குப் பண்ணியதால் எல்லோருக்கும் இப்போவே சுடச்சுடக் கொடுத்தாச்சு! சாப்பிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்கப்பா! மதியம் குதிரைவாலி அரிசிச் சாதம், முருங்கைக்காய்க் குழம்பு, மிளகு ரசம், மோர். மாங்காய் ஊறுகாய்.

மறந்துட்டேனே! தக்காளித் தொக்கு திடீர்னு நினைச்சுட்டுச் செய்ததால் பாரம்பரிய முறைப்படி செய்யாமல் தக்காளிகளைக் காம்புப்பக்கம் கீறி எடுத்துப் பின்னர் மிக்சி ஜாரில் மி,வத்தலோடு போட்டு அரைத்துக் கொண்டு, வாணலியில் கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்த விழுதைக் கொட்டி உப்புச் சேர்த்துக் கிளறிவிட்டேன்

பத்து நாட்டுத் தக்காளிகள் நடுத்தர அளவுக்கு 5 மிளகாய் வற்றல், தேவையான உப்பு, தாளிக்க நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, பெருங்காயம்.

Thursday, October 01, 2015

நீலத் திரைக்கடல் ஓரத்திலே !





பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து சிறிது தூரத்தில் தான் தொட்டிப் பாலம் இருந்திருக்கிறது. ஆனால் அதை அந்த  ஓட்டுநர் எங்களுக்குத் தெரிவிக்கவே இல்லை. திருவட்டாறிலிருந்தும் 3 கிலோ மீட்டருக்குள் தான் இருந்திருக்கிறது. ஆனால் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து வெளியே வரும்போதே இரண்டு மணிக்கு மேல் ஆனதால் நேரே கன்யாகுமரிக்குக் கூட்டிச் சென்று விட்டார். போகும் வழியிலேயே ஒரு ஓட்டலில் ரங்க்ஸும், ஓட்டுநரும் சாப்பாடு சாப்பிட்டார்கள் . நான் சப்பாத்தியும் லஸ்ஸியும் வாங்கிக் கொண்டேன். பின்னர் கன்யாகுமரிக்கு மூன்றரை மணிக்கே போய்விட்டதால் அங்கே ரயில் நிலையத்தில் போய் எங்கள் வெள்ளிக்கிழமைக்கான பயணச்சீட்டை ரத்து செய்து விட்டு அங்கேயே நாலு மணிக்குக் கோயில் திறக்கும் வரை உட்கார்ந்திருந்தோம். பின்னர் கோயில் திறக்கும் நேரத்துக்கு மெல்ல மெல்ல கடற்கரை அருகே கொண்டு விட்டார் ஒட்டுநர். 

அந்த நீண்ட கடற்கரையில் நடந்து கொண்டே இன்னொரு முனைக்குச் செல்ல முயன்றோம். நடுவில் நிறையக் கடைகள். பலவற்றில் ஏலம், முந்திரி, கிராம்பு, மிளகு போன்ற வாசனைப் பொருட்கள் விற்றுக் கொண்டிருந்தனர். ஓட்டுநரைத் துணைக்கு வைத்துக் கொண்டு அவர்களிடம் பெசி வீட்டுக்குக் கொஞ்சம் வாங்கிக் கொண்டோம். பின்னர் கடற்கரை நீளம் அதிகமாக இருந்தபடியால் ஓட்டுநர் எங்களைக் கோயில் வாசலில் இறக்கிவிடுவதாகச் சொல்லி மீண்டும் அழைத்துச் சென்றார்.  மேலும் அங்கே தான் முக்கடலும் சங்கமிக்கும் முனை உள்ளது. இது கடற்கரையில் நடக்கையில் இருவிதமான கோணங்களில் இருந்து எடுத்த படங்கள்.


நாங்கள் செல்லுவதற்கு முதல்நாள் வரை நிறுத்தி வைத்திருந்த படகு சவாரியை அன்று தான் ஆரம்பித்திருந்தார்கள். நாங்கள் போவதற்கு இரு நாட்கள் முன் வரை மழை பெய்து வெள்ளம் வந்திருந்தபடியால் படகுப் பயணம் ரத்தாகி இருந்தது. ஒரே கூட்டம். அந்தக் கூட்டத்தில் படகுப்பயணம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை. ஆகவே நேரே கோயிலுக்கே செல்வோம் எனக் கோயிலுக்கே சென்றோம். கூட்டம் ஓரளவுக்கு இருந்தாலும் எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் கோயிலுக்குள்ளே போனோம்.