எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 08, 2015

அரிசி சாகுபடி செய்வோமா? 3

 சர்க்கரை நோய் பற்றிய குறிப்புகள் பழைய மருத்துவச் சுவடிகளில் காணப்பட்டாலும் நம் நாட்டில் சர்க்கரை நோய் இந்த அளவு அதிகரித்தது நாம் சாப்பிடும் அரிசியின் வகை மாற்றியதால் தான். ஆம்! பல்லாண்டுகளாகக் கைக்குதல் அரிசியையே சாப்பிட்டு வந்த நாம் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தான் தீட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை அரிசியைச் சாப்பிட ஆரம்பித்தோம். ஆங்கிலேயர்களுக்குப் பழுப்பு நிற அரிசி பிடிக்கவில்லை. ஆகவே அரிசியைத் தீட்டினார்கள். இந்த வழக்கமே அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது தான். நம் அன்றாடப் பழக்கங்கள் மட்டுமல்லாமல், படிப்பு மட்டுமல்லாமல், நம் தொழில் மட்டுமல்லாமல், விவசாய முறை மட்டுமில்லாமல்  நாம் சாப்பிடும் உணவும் அவர்களாலேயே மாற்றப் பட்டது. ஆனால் ஆரம்ப காலத்தில் அவர்கள் 2 சதவீதமே தீட்டியதாகச் சொல்லப்படுகிறது. பின்னர் ஐந்து சதவீதம் தீட்டப்பட்ட அரிசி இப்போது 12 சதவீதத்துக்கும் மேல் தீட்டப்படுகிறது. இந்த அரிசியில் என்ன சத்து கிடைக்கும்?

இதைச் சாப்பிட்டால் பெரிபெரி என்னும் நோய் தாக்கும் என்பதை நாம் சிறு வயதிலேயே படித்திருக்கிறோம் இல்லையா? ஆனால் நம்மை வெள்ளை அரிசி சாப்பிடச் சொன்ன ஆங்கிலேயர்கள் கோதுமை, பழங்கள், காய்கறிகள், மீன், இறைச்சி, வெண்ணெய், பால், பால் பொருட்கள் என நிறைய எடுத்துக் கொள்வதால் அவர்களுக்குக் கைக்குத்தல் அரிசியில் கிடைக்கும் சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கலாம். ஆனால் நாம் எல்லோரும் இப்படிச் சாப்பிடுவதில்லை. பலருக்குப் பழக்கமில்லை எனில் பலருக்கு வசதி கிடையாது. உணவு தான் பெரிபெரி நோய்க்குக் காரணம் எனக் கண்டறிந்ததோடு இல்லாமல் அரிசித் தவிட்டால் இந்த நோய் குணமாகும் என்பதையும் கண்டுபிடித்தவர்களுக்கு 1929 ஆம் வருஷத்து நோபல் பரிசும் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்தப் பரிசினை எல்லாம் பெறாமலேயே நம் முன்னோர்கள் கைக்குத்தல் அரிசி தான் சிறந்தது என்று கூறிவந்ததோடு உளுந்தையும் தோலோடு பயன்படுத்தச் சொல்லிச் செய்தும் காட்டி இருக்கிறார்கள்.நாம் தான் வெள்ளைக்காரன் சொன்னால் தானே எதையும் செய்வோம், அல்லது ஒத்துக் கொள்வோம். இப்போதைய மருத்துவர்கள் நம்மைக் கைக்குத்தல் அரிசி, சிறுதானியங்கள் எனச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்துகின்றனர்.

அதோடு இல்லாமல் நடைப்பயிற்சியையும் இப்போது வற்புறுத்துகின்றனர். இந்த நடைப்பயிற்சியைத் தான் நன் அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பதற்காகக் கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் பெரிய பெரிய கோயில்களைக் கட்டி வைத்து இறை சக்தியை அங்கே ஆவிர்ப்பவித்து நம்மைக் கோயிலுக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் நாமோ எனில் நம் அன்றாட உணவை மாற்றியதோடு அல்லாமல் அறவே கோயில்களையும் கவனிக்காமல் இருக்கிறோம். பெரிய கோயில்களில் பிராகாரங்கள் சுற்றினாலே போதுமே! அன்றாடம் வேண்டிய நடைப்பயிற்சி கிடைத்துவிடுமே! அதை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறோம் என்றால் யாரும் இல்லை. இன்றைய அவசர உலகில் கோயில் கோபுரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு போனாலே பெரிய விஷயமாக இருந்து வருகிறதே!

பழுப்பு அரிசி எனப்படும் கைக்குத்தல் அரிசியில் தான் சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. இந்தப் பழுப்பு அரிசியும் கைக்குத்தல் அரிசியும் ஒன்றே தானா என்பதில் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் உள்ளது. ஏனெனில் சின்ன வயசில் என் பெரியப்பா ஒருத்தர் கைக்குத்தல் அரிசியைத் தான் விடாப்பிடியாகச் சமைத்துச் சாப்பிடுவார். தவிடு நன்றாகத் தெரியும். ஆனால் இப்போது கைக்குத்தல் அரிசி என்னும் பெயரில் வருவதும் சரி, ப்ரவுன் அரிசி எனப்படும் பழுப்பு அரிசியிலும் சரி தவிடே தெரியவில்லை. ஆனால் வெள்ளை அரிசிக்கும் இதற்கும் சுவை மாறுபாடு மட்டும் தெரிகிறது. அதோடு பழுப்பு அரிசியைத் தான் இப்போது இரண்டு தரமாக இட்லி தயாரிக்கப் பயன்படுத்துகிறேன். நன்றாக ருசியாக வருகிறது இட்லி, மெத் மெத்தென்று! ஏற்கெனவே நான் துணி போட்டுப் பழங்கால முறையில் இட்லி வேக வைப்பதால் இட்லியே மெத்தென்று தான் இருக்கும் என்றாலும் இப்போது சுவையும் கூடுதல்! தோசை மாவைக் கல்லில் ஊற்றும்போதே வரும் மணம் நாவில் நீர் சுரக்க வைக்கிறது.

  ஒருவேளை அரிசிப்புராணம் தொடரலாம்! பழுப்பு அரிசியில் இட்லி படம் முடிந்தால் நாளை பகிர்கிறேன். 

3 comments:

  1. பழுப்பு அரிசி விலை அதிகமோ? வாங்கி சமைத்து பார்க்க வேண்டும்!

    ReplyDelete
  2. ஆங்கிலேயர்கள் அவர்கள் வசதிக்காக வைத்ததுதான் யூகலிப்டஸ் மரங்கள், கருவேலம் ஆகியவை கூட! நடைப்பயிற்சி... அதுதான் கைகூட மாட்டேன் என்கிறது! சோம்பேறியாய் இருக்கிறேன்!

    ReplyDelete
  3. முன்னோர்கள் சொல்லி வைத்தது ஒவ்வொன்றுக்கும் பல காரணங்கள் இருந்தன. மனிதன் கேட்பானோ மாட்டானோ என்று அந்த நல்ல பழக்கங்களை அவனின் மத நம்பிக்கைகளோடு இணைத்தார்கள். கோவிலைச் சுற்றுவது கூட நடைப்பயிற்சிதானே.. களிமண் பிள்ளையாரைக் கரைப்பது தண்ணீர் வீணாகாமல் ஆறுகளில் களிமண் சேர.. ம்ம்ம்...

    ReplyDelete