எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 04, 2015

எங்களுக்கு தினம் "திங்க"ற கிழமை தான்!:)


கரண்டியில் ஊற்றிய மாவு


தக்காளித் தொக்கு

சிறு தானியங்கள் சாப்பிட ஆரம்பித்துச் சில நாட்கள் ஆகின்றன. கைக்குத்தல் அரிசியை ஒரு மாதிரியாய்ச் செலவு செய்து முடித்து விட்டேன். ப்ரவுன் அரிசி இன்னமும் மிச்சம் இருக்கிறது. குதிரைவாலி அரிசியின் ருசி பிடித்திருப்பதால் அதைத் தொடரலாம் என்று ஓர் எண்ணம். நடுவில் செவ்வாய்க் கிழமையும், வெள்ளிக்கிழமையும் மட்டும் வெள்ளை அரிசி சமைத்தேன். இனி சர்க்கரை அளவை ஒரு நாள் சோதிக்க வேண்டும். பரவுன் அரிசியில் சாதம் வைத்ததோடு அல்லாமல் இட்லி, தோசையும் செய்தேன். தோசை அருமையாக இருந்தது. இட்லியும் நன்றாகவே இருந்தது என்றாலும் இட்லி புழுங்கல் அரிசி போட்டால் உப்பிக் கொள்வதைப் போல் உப்பவில்லை. ஆனால் மிருதுவாகவே இருந்தது.

வரகில் சாதம், பொங்கல், சோளத்தில் நேற்று மறுபடியும் கிச்சடி, சாமையில் பொங்கல், குதிரைவாலியில் பொங்கல், சாதம், கம்பில் அடை, வரகுப் புழுங்கல் அரிசியில் இட்லி, தோசை என்றெல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. தினை ஒண்ணு தான் பாக்கி இருந்தது. ஆகவே நேற்று இரவு தினை+குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து நனைத்து இன்று காலை குழி ஆப்பம் செய்தேன். அதான் மேலே படம். குழி ஆப்பம் நன்றாக வந்தது. எடுத்தது படம் எடுக்கிறதுக்குள்ளே தொலைபேசி அழைப்பு  வரவே பேசிட்டு வந்து மறந்து போச்சு! தொட்டுக்கத் தக்காளித் தொக்கு. என்ன சிவப்பா இருக்கேனு பார்க்காதீங்க. நல்லாப் பழுத்த சிவந்த நிறமுள்ள நாட்டுத் தக்காளிகள் எல்லாம். அதான்! இப்போத் தினையில் குழி அப்பம் பண்ணத் தேவையான பொருட்கள்.


தினை அரிசி அரைக்கிண்ணம் ஆனால் எனக்கு ஒரு வேளைக்குப் போதும் என்பதால் ஒரு குழிக்கரண்டி தான் போட்டேன்.

அதே போல் குதிரைவாலி அரிசியும் அரைக்கிண்ணம் என்பதற்கு ஒரு குழிக்கரண்டி தான் போட்டேன்.

உளுத்தம்பருப்பு அரைக்கிண்ணம் நான் கால் கிண்ணம் போட்டேன்.

ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு கைப்பிடி பச்சரிசி, இல்லைனா செய்யும் போது அரைக்கரண்டி பச்சரிசி மாவைக் கலந்துக்கலாம். நான் சேர்த்தே நனைத்து விட்டேன்.

நேற்றிரவே எல்லாவற்றையும் களைந்து ஊறப்போட்டுவிட்டேன். காலையில் இவற்றோடு 

மிவத்தல் நாலு அல்லது ஐந்து (அவரவர் காரத்துக்கு ஏற்றாற்போல்) நான் நாலு தான் போட்டேன்

உப்பு தேவைக்கு ஏற்ப, பெருங்காயம்
இவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டேன். இரும்புக்கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு உபருப்பு, கபருப்பு சேர்த்துக் கருகப்பிலை கிள்ளிப் போட்டு ஒரு சின்னப் பச்சைமிளகாய நீள வாக்கில் வகிர்ந்து உள்ளே உள்ள விதைகளை நினைவாய் எடுத்துட்டு அதை நறுக்கிச் சேர்த்தேன். இஞ்சி ஒரு துண்டு. எல்லாவற்றையும் எண்ணெயில் போட்டு வதக்கி மாவில் சேர்த்தேன். தேங்காய் இருந்தால் பல்லுப்பல்லாகக் கீறிச் சேர்க்கலாம். வெங்காயம் சேர்க்கும் நாட்களில் வெங்காயத்தையும் வதக்கிச் சேர்க்கலாம். இப்போ வெங்காயம் சேர்க்க முடியாது என்பதால் சேர்க்கவில்லை. தேங்காயும் போடவில்லை. 

மாவு ரெடி. என்னோட அப்பக்காரை எங்கேயோ பெட்டியில் மாட்டிக் கொண்டு பல மாதங்களாகின்றது. அதை எடுக்கவே இல்லை. ஆகவே ஒரு இரும்புக்கரண்டியில் குத்தலாம்னு நினைச்சேன். ஆனால் மாவு ஊற்றியதும் மேலே உப்பிக் கொண்டு வரும் என்பதால் இரும்புக்கரண்டி போல இருக்கும் நான் ஸ்டிக் கரண்டி ஒன்றில் எண்ணெயைக் காய வைத்து ஊற்றினேன் நினைத்தாற்போலவே நன்கு உப்பிக் கொண்டு வந்தது. அதைத் திருப்பிப் போட உபயோகிக்கும் இரும்புக் குச்சியும் அம்பத்தூரிலிருந்து வரும்போது எங்கே தவறி விட்டது. ஆகையால் ஒரு ஸ்பூன் முனையால் திருப்பிப் போட்டேன். திருப்பிப் போட்டு உள்ளே ஸ்பூன் முனையாலேயே குத்தி விட வேண்டும். அப்போது தான் உள்ளே நன்றாக வேகும்.  இது மேலே நன்றாகச் சிவந்து பொன்னிறமாக முறுமுறுவென்றும் உள்ளே கடற்பஞ்சு (sponge) போலவும் இருந்தது.  தட்டில் போட்டதைப் படம் எடுக்கிறதுக்குள்ளே வேறே கவனம்! :(

காலை ஆகாரத்துக்குப் பண்ணியதால் எல்லோருக்கும் இப்போவே சுடச்சுடக் கொடுத்தாச்சு! சாப்பிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்கப்பா! மதியம் குதிரைவாலி அரிசிச் சாதம், முருங்கைக்காய்க் குழம்பு, மிளகு ரசம், மோர். மாங்காய் ஊறுகாய்.

மறந்துட்டேனே! தக்காளித் தொக்கு திடீர்னு நினைச்சுட்டுச் செய்ததால் பாரம்பரிய முறைப்படி செய்யாமல் தக்காளிகளைக் காம்புப்பக்கம் கீறி எடுத்துப் பின்னர் மிக்சி ஜாரில் மி,வத்தலோடு போட்டு அரைத்துக் கொண்டு, வாணலியில் கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்த விழுதைக் கொட்டி உப்புச் சேர்த்துக் கிளறிவிட்டேன்

பத்து நாட்டுத் தக்காளிகள் நடுத்தர அளவுக்கு 5 மிளகாய் வற்றல், தேவையான உப்பு, தாளிக்க நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, பெருங்காயம்.

19 comments:

 1. தின்னு பார்க்க ஆசையா இருக்கு. இங்கே ஒரு வாலியும் கிடைக்கலையே :-(

  ReplyDelete
  Replies
  1. எப்படியும் கம்பும், சோளமும் கிடைக்குமே துளசி! ஆனால் சோளம் வேக நேரம் ரொம்ப எடுக்கிறது.

   Delete
 2. சுடச் சுட ஆக்கிய காலை உணவு
  உண்மையில் சுவையாக இருக்கிறதே - அதை
  நாங்களும் ஆக்கிட நல்ல வழிகாட்டல்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி காசிராஜலிங்கம்

   Delete
 3. மிக அழகான வண்ணத்தில் வந்திருக்கிறது. உங்கள் செய்முறைகள் அனைத்தும் நன்றாகப் புரியும்படி இருப்பதால் செய்வதும் சுலபம்.
  நன்றி கீதா மா.

  ReplyDelete
 4. அந்த ஊத்தப்பம் மாதிரி தோசைக்கல் லே நடுவிலே அந்த மஞ்ச சிவப்பு ஆரஞ்சு ஊதா மாதிரி ரவுண்டா பார்த்து இன்னாச்சு, கீதா மாமிக்கு, இன்னிக்கு, திங்க கிழமை அப்படின்னு ஆம்லேட் பண்றாங்க போல இருக்கே அப்படின்னு மனசுலே ஒரு வியாகூலத்தோட, பஞ்சாங்கத்தைப் பாத்தா இன்னிக்கு ஷஷ்டி ன்னு வேற போட்டு இருக்கு. ஒரு வேளை அந்த வள்ளி மணாளன் காட்டுக்குப் போனப்போ ஒண்ணுமே கிடைக்காம, முட்டைய... .தப்பு..தப்பு... அது நாட்டுத் தக்காளி அப்படின்னு அப்பரம் தான் புரிஞ்சது.நானும் நாளைக்கு பார்க்கணும். அது சரி,தக்காளி எப்படி புல்லா வேகுமா? சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. சுப்பு தாத்தா! அது குழி அப்பம், ஊத்தப்பம் இல்லை. தக்காளியை வேக வைக்கலை. செய்முறையை மறுபடி படிங்க. தக்காளியையும் மிவத்தலையும் மிக்சி ஜாரிலே போட்டு அடிச்சுட்டு அதுக்கப்புறமாக் கிளறணும்.

   Delete
 5. சாப்பிடும் பொழுது மணியை எழுதி வைத்து , சரியாக சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து சர்க்கரை டெஸ்ட்(blood glucose) பார்க்கவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நல்வரவு, திரு கிருஷ்ணமூர்த்தி! எங்கள் மருத்துவர் ஒன்றரை மணி நேரம் தான் சொல்லி இருக்கிறார். அதுவும் ரான்டமாக எடுக்கக் கூடாது என்றும் சொல்லுவார்.

   Delete
 6. குழி ஆப்பத்தை குத்தனதாலதான் பக்கத்துல இவ்ளோ ரத்தமா? அவ்வ்...! அது தக்காளி தொக்கா! ஹ்ஹாஹா!

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, ஆமா இல்ல! :)

   Delete
 7. எப்படி இருக்கும்? செய்யறா மாதிரி செஞ்சா எல்லாம் நல்லாத்தான் இருக்கும். ஆனால் நா(ங்க)ன் எங்கே இதெல்லாம் செய்து பார்க்கப் போறோம்/றேன்?

  தக்காளி தொக்கில் என் தங்கை சீரகம் சேர்ப்பாள். நாங்கள் ஊஹும்! வெந்தயப்பொடி சேர்ப்பதுண்டு.

  சிறுநீரகக் கல் வந்த நாளாக மருத்துவரின் ஆலோசனைப்படி நாட்டுத் தக்காளி சேர்ப்பதில்லை. பெங்களூர் தக்காளிதான்!

  ReplyDelete
  Replies
  1. தக்காளித் தொக்கில் சீரகமா? ஹிஹிஹி, சீரகம் குறிப்பான சில உணவு வகைகளிலேயே சேர்ப்பேன். சாம்பார், ஊறுகாய், தொக்கு, வத்தக்குழம்பு போன்றவற்றில் போடுவதில்லை வெந்தயப் பொடியும் தக்காளித் தொக்கைச் சாதம் கிளறுகையில் சாதம் கலந்ததும் மேலே ஒரு டீஸ்பூன் போட்டு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை அதன் மேல் ஊற்றிக் கிளறி வைப்பேன். வாசனையாகப் புளியஞ்சாதம் போல் இருக்கும். :)

   Delete
 8. நாங்களும் தினம் திம்போமே,,,,,,

  ReplyDelete
  Replies
  1. ஆஹா, நீங்களும் தீ.தி.குழுவா? நல்வரவு

   Delete
 9. அட நம்ம கைப்பக்குவம்!! இதே இதே....எல்லா தானியமும் போட்டு இப்படிச் செய்வதுண்டு....நல்லாருக்கும்....இட்லி கூட செய்யலாம் அதுவும் நன்றாக வரும்...இதிலேயே பெர்ம்யூட்டேஷன் காம்பினேஷன்ல பல செய்யலாம்....இல்லையா சகோ....பார்க்கவே அழகா இருக்கு...ஜீபும்பா மாதிரி கையை விட்டா அப்படியே எடுத்துச் சாப்பிடலாம் போல...தொக்கும் இப்படிச் செய்வதுண்டு...

  கீதா

  ReplyDelete
 10. இப்படி எல்லாம் சமைத்தால் மட்டும் பத்தாது, எங்களுக்கும் கொடுத்தால்தான் பூரண பலன் கிட்டும்.

  ReplyDelete
 11. Appadiyae parcel anupunga inga :)

  ReplyDelete