எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 13, 2015

நோ சுண்டல் தினம் இன்று! ஆனால் திங்கலாம் வாங்க!

மக்கள் அந்த அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ற பதிவுகளையே விரும்பிப் படிக்கிறார்கள். பொதுவாக போணி ஆகும் பதிவுகளில் சாப்பாடு குறித்த பதிவு மட்டுமே. அதுவும் இங்கே "எண்ணங்கள்" வலைப்பக்கத்தில் மட்டுமே! நேத்திக்கு நவராத்திரிப் பதிவு நல்லா போணி ஆகி இருந்தாலும் கருத்துச் சொன்னவர்கள் குறைவே! :) வழக்கம் போல் இது ஓர் ஆச்சரியம் தான். அடுத்து இன்னிக்கு ஒன்பது மணி நேர மின்வெட்டு என்பதால் அவசரம் அவசரமாகவே எழுதுகிறேன். (இது காலையில் எழுதினது) பழுப்பு அரிசி தோசை, இட்லி படம் போடறேன்னு சொல்லி இருந்தேன்! இட்லி படம் எடுக்க மறந்துட்டேன். தோசைப் படம் மட்டும் போடறேன். அப்புறமா நவராத்திரிப் பதிவு வழக்கம் போல்! கொஞ்சம் ஜனரஞ்சகமா இருக்கட்டுமேனு தான் கலந்து கட்டி எழுதி இருக்கேன். :)தோசை சாப்பிடத் தயாராக!தோசைக்கல்லில் வேகும் தோசை! :)


 

இன்றைக்கு நோ சுண்டல் டே! நவராத்திரி முதல்நாள் அன்று பொதுவாக நான் இனிப்புப் பதார்த்தம் ஏதேனும் செய்வது வழக்கம். இப்போ இனிப்புக்குத் தடா என்பதால், யோசனையில் இருக்கேன். இன்றைய நிவேதனம் படம் மாலை மின்சாரம் வருவதைப் பொறுத்துப் போடுவேன். இனி நாளைய தினத்துக்கான வழிமுறைகள்.

நவராத்திரி இரண்டாம் நாள்

இன்று அம்பிகையை "ப்ரம்மசாரிணி"யாக வழிபடுவார்கள். இன்றைய தினம் அம்பிகையை "ராஜராஜேஸ்வரி"யாக அலங்கரிக்கலாம்.  மூன்று வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையை "திரிபுரா" அல்லது "திரிதேவி"யாக விளங்கும் திரிமூர்த்தியாகப் பாவித்து வழிபட வேண்டும்.

இன்றைய தினம் கோதுமை மாவில் கோலம் போடுவது சிறப்பு. இன்றைக்கும் மஞ்சள் நிறமுள்ள மலர்கள் அல்லது சிவந்த நிறமுள்ள மலர்கள் வழிபாட்டுக்கு ஏற்றவை. சிவப்பு வஸ்திரங்கள், வளையல்கள், சிவந்த நிறமுள்ள குங்குமம் ஆகியன கொடுத்துக் குழந்தைக்கு அதிகம் காரமில்லாமல் புளியோதரை செய்து நிவேதனம் செய்து சாப்பிட வைக்கலாம். மாலை முழு மொச்சையை ஊற வைத்துச் சுண்டல் செய்து நிவேதனம் செய்து விநியோகிக்கலாம்.

புளிக்காய்ச்சல் முன் கூட்டியே செய்து வைக்க முடியவில்லை எனில் கவலை வேண்டாம். ஒரு எலுமிச்சை அளவுப் புளியை சுத்தம் செய்துவிட்டு ஒரு கரண்டி நீரில் ஊற வைக்கவும். ஊறியதும் 5 அல்லது 6 சிவப்பு மிளகாய், கொஞ்சம் வெந்தயம் வறுத்தது, கடுகு பச்சையாக, தேங்காய்த் துருவல், தனியா வெறும் வாணலியில் வறுத்தது, ஒரு சின்னக் கட்டி வெல்லம் ஆகியவற்றோடு மஞ்சள் பொடி சேர்த்து புளியை ஊற வைத்த நீரோடு விட்டு விழுதாக அரைக்கவும்.

ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டு அரைத்த விழுதை எண்ணெய் பிரியும் வரை கிளறவும். பின்னர் சாதம் உதிர் உதிராக வடித்துக் கொண்டு அதில் கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை, மி.வத்தல் , கருகப்பிலை தாளித்துச் சேர்த்து அரைத்துக் கிளறிய விழுதில் கொஞ்சம் போல் போட்டுக் கலக்கவும். பின்னர் நெய்யில் பொரித்த மிளகைப் பொடிசெய்து அரை டீஸ்பூன் தூவவும். கமகமவென்ற மணத்தோடு கோயில் புளியோதரை தயார். அரைத்த விழுது மிச்சமிருந்தால் பத்து நாட்களுக்குள் பயன்படுத்தலாம். 


நம்ம வீட்டுக் குட்டிக் கொலு! அதிகம் அலங்காரம் செய்யும் அளவுக்கு உடல்நலம் இல்லை! ஆகவே சும்ம்ம்ம்ம்ம்மா பொம்மைகளை வைத்ததோடு சரி! :(


இன்றைய நிவேதனம், சக்கரைப் பேடா, உப்புப் பேடா!

மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்ததில் இதுக்குத் தான் ஓட்டு விழுந்தது. மத்தத் தித்திப்புப் பதார்த்தங்கள் சாப்பிட முடியாதே! ஆகவே கொஞ்சமாச் சர்க்கரை போட்டு இதைச் செய்தேன்.

செய்முறை மைதாமாவு ஒரு கரண்டி, கோதுமை மாவு இரண்டு கரண்டி இரண்டு டேபிள் ஸ்பூன்  வெண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி அரை டீஸ்பூன், அரைக்கிண்ணம் பால், ஒரு சிட்டிகை உப்பு.

வெண்ணெய், உப்போடு சர்க்கரையை ஏலக்காய் சேர்த்துப் பொடிசெய்து சேர்த்து நன்கு கலக்கவும. சுமார் ஐந்திலிருந்து பத்து நிமிடங்களாவது கலக்க வேண்டும். பின்னர் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கலக்கவும். இதுவும் ஒரு ஐந்து நிமிஷத்துக்குக் குறையாமல் கலக்க வேண்டும். அதன் பின்னர் அரைக்கிண்ணம் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேவைப்படும் வரை ஊற்றி மாவைச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். சர்க்கரை சேர்ப்பதால் அதிலும் நீர்ச் சத்து உண்டென்பதால் பாலை விடும்போது கொஞ்சம் கொஞ்சமாகவே சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்னர் பெரிய பெரிய அப்பளங்களாக இட்டு ஓரத்தில் நெளிநெளியாக வரும்படி கிடைக்கும் கர்ச்சிக்காய் ஸ்பூனால் வெட்டி எடுக்கவும்.

அடுப்பில் எண்ணெயைக் காய வைத்துக் குறைந்த தீயில் வைத்துப் பொரித்தெடுக்கவும். சுவையான பிஸ்கட் சுவைக்குத் தயார்.

உப்புப் பேடா!

மைதா மாவு, கோதுமை மாவு அதே அளவு, கால் டீஸ்பூன் பெருங்காயம், உப்பு அரை டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் மிளகாய்ப் பொடி, ஓமம் ஒரு டீஸ்பூன்,  வெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், பிசைய நீர்.

வெண்ணெயை உப்புச் சேர்த்து நன்கு கலந்து கொண்டு மாவையும் மிளகாய்ப் பொடியையும், பெருங்காயப் பொடியையும், ஓமத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்க்கவும் . மீண்டும் நன்கு கலக்கவும். கலக்கும்போது ஒரே பக்கமாகக் கலந்தால் காற்று நன்கு உட்புகுந்து பொரிக்கையில் கரகரப்புக் கூடும் என்பதோடு உப்பிக் கொண்டும் வரும். காரப் பொடி பிடிக்கவில்லை எனில் மிளகு பொடியும் சேர்க்கலாம். பின்னர் தேவையான நீர் விட்டுப் பிசைந்து முன் சொன்னது போல் ஒரு மணி நேரம் ஊற வைத்துப் பின்னர் பெரிய அப்பளங்களாக இட்டுக் கொண்டு கரண்டியால் கத்திரித்துப் பொரித்து எடுக்கவும்.


15 comments:

 1. அருமை - கூடவே ஒவ்வொரு நாளும் சவுந்தரிய லகரி யில் எந்த எண் ஸ்லோகம்
  சொல்ல வேண்டும் என்றும்

  ReplyDelete
  Replies
  1. எல்லா நாட்களும் சௌந்தர்ய லஹரி,எல்லா ஸ்லோகங்களும் படிப்பது தான் சரி.

   இருந்தாலும், 1, 5, 9,11, 100 தினம் படித்தால் போதும் என்றும் சொல்வது உண்டு.

   நவராத்திரி ஒவ்வொரு நாளும் பத்து படிக்கலாம்.

   1, 5, 9, 11 - 19, 100
   1, 5, 9, 20 - 29 100
   1, 5, 9, 30 - 30 100

   அப்படியும் தினம் படிக்கலாம்.

   யா தேவி சர்வ பூதேஷு ஸ்லோகம் சொல்லலாம்.

   ஸ்ரீ ஸ்துதி சொல்லலாம்.

   சுப்பு தாத்தா.

   Delete
  2. @ராம்ஜி யாஹூ! வரவுக்கு நன்றி. முன் கூட்டித் திட்டமிடப்பட்ட பதிவுகள் அல்ல. ஆகையால் சௌந்தரிய லஹரியில் இப்போது என்னால் பார்க்க இயலாது! மன்னிக்கவும். திரு சுப்புத்தாத்தா சொல்லி இருக்கிறாற்போல் தினமும் படிக்கலாம். அல்லது நவராத்திரி ஒவ்வொரு நாளும் பத்து படிக்கலாம். நான் சுந்தரகாண்டம் நவாஹ பாராயணம் வேறே எடுத்துக் கொண்டிருக்கிறபடியால் ரொம்பவே நெருக்கடி! தவறாய் நினைக்க வேண்டாம்.

   Delete
  3. நன்றி சுப்புத் தாத்தா!

   Delete
 2. //கடுகு பச்சையாக, //

  பச்சை நிறக் கடுகு எங்கு கிடைக்கும்? ஹிஹிஹிஹி....!

  குறுக்குவழி புளியோதரை ஐடியா டாப். உப்புப் பேடா இழுக்கிறது!

  சுண்டல் கிடையாது இன்று என்பது அதிர்ச்சி தரும் செய்தி.

  ReplyDelete
  Replies
  1. செடியிலிருந்து பறித்ததும் காய வைக்கும் முன்னர் இளம்பச்சையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் கிடைக்கும். அதான் மஸ்டர்ட் கலர்! இந்த தீபாவளிக்கு உங்க பாஸுக்கு இந்தக் கலரில் புடைவை வாங்குங்க! கடுகு பச்சையாக் கிடைக்கும்! :) ஹாஹா! எப்படி சமாளிப்ஸ்? நாங்க யாரு? விடுவோமா!

   Delete
  2. சுண்டல் பண்ணி இருக்கணும். தித்திப்புப் போட்ட சுண்டலாப் பண்ணணும். எனக்குப் பிடிக்காது, சாப்பிட மாட்டேன். அவருக்குப் பிடிக்கும், சாப்பிட முடியாது! ஆகவே நோ சுண்டல் டே! இன்னிக்குச் சுண்டல் உண்டு! :) இந்த வருஷம் கொஞ்சம் வித்தியாசமாய்க் கொடுக்கலாம்னு ஒரு எண்ணம். கொலுவில் தான் கருத்துக்கள் இருக்கும்படி பொம்மைகள் வைக்க முடியறதில்லை. திங்கக் கொடுப்பதிலாவது கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு! :)

   Delete
 3. நோ சுண்டல்.... இருந்தாலும் இன்றைக்கு கிடைத்ததை எடுத்துக் கொண்டேன்!

  ReplyDelete
  Replies
  1. இதுவும் கொடுக்கிறது உண்டு. எங்க மாமியார் முறுக்கு, தட்டை, சீடைகள்னு கூடப் பண்ணிக் கொடுக்கச் சொல்வாங்க! அதுவும் ஐடியா இருக்கு! பார்ப்போம்! உடல்நிலையைப் பொறுத்து! :)

   Delete
 4. மூணு வயசா? நோ ஒர்ரீஸ்.... நம்ம ஜன்னு இருக்காள் :-)

  ReplyDelete
  Replies
  1. கொடுத்துடுங்க, கொடுத்துடுங்க! அப்புறம் என்ன! :)

   Delete
 5. இந்த வருடம் நோ கொலு. ஆனால் பல இடங்களுக்கும் மஞ்சள் குங்குமம் வாங்கப் போவாள் என் மனைவி. நவராத்திரி சமயம் காலையில் 108 தாமரைக் காசுகள் கொண்டு அர்ச்சனை தினம் நடக்கும்

  ReplyDelete
  Replies
  1. விதவிதமாச் சுண்டல் கிடைக்கும். :) நானும் அந்த மஞ்சள் நிற 20 காசு தாமரைப்பூப் போட்டது சேர்த்து வைத்தேன். எண்பத்தி எட்டோ என்னமோ தான் கிடைச்சது! இத்தனைக்கும் என் பிறந்த வீட்டில் அனைவரும் வங்கி ஊழியர்கள்! :) இப்போல்லாம் கீழே உட்கார முடியலை என்பதால் விளக்கு பூஜையை நிறுத்திட்டேன். :(

   Delete
 6. சுண்டல் இல்லாத நவராத்திரியா? இருந்தாலும் இனிப்பு பேடா, உப்பு பேடாவுக்கு நன்றி! எனக்கு பிடித்த உணவுதான்! நவராத்திரி விளக்கங்கள் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. இது மாதிரியும் கொடுக்கலாம் சுரேஷ்! இதுவும் கொடுப்பது உண்டு! :)

   Delete