
மின் தமிழில் பேராசிரியர் நாகராஜன் அவர்கள் அந்தக் காலத்துத் தலை அலங்காரத்தைக் குறித்த படங்களைத் தேடி எடுத்துப் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்ததும் எனக்கு என்னோட தலை அலங்காரங்கள் எல்லாம் நினைவில் வந்து கன்னாபின்னாவென மோதிக் கொண்டு இப்போ இருக்கும் அலங்காரத்தைக் கலைக்கப் பார்த்தன. ஆஹா இப்பூடி விடக் கூடாதேனு அதைக் குறித்து எழுதிடலாம்னு நினைச்சேனா. உடனே செயல்படுத்தியாச்சே! 18 ஆம் எண்ணின் சிறிய படத்து முதல் அலங்காரம் ஆன இரட்டைச் சாட்டை அளவுக்கு நீளம் இல்லாட்டியும் இரட்டைப் பின்னல் பின்னிக் கொண்டு மடிச்சுக் கட்டறது 50களின் கடைசியிலும் 60 களின் ஆரம்பத்திலும் பிரபலமான ஃபாஷன். "கல்யாணப்பரிசு" சரோஜா தேவி ஸ்டைல்னு சொல்வாங்க. நாங்களும் அப்படிப் போயிருக்கோமுல்ல!
அதே பதினெட்டின் வைரஜடை முன்புறம், பின்புறம் (19 ஆம் எண்) படங்களில் இருக்கிறாப்போல் அலங்காரக் கொடிப்பின்னல் வாங்கி வைச்சிருக்கோமாக்கும்.
16, 17 ஆம் எண்ணிலுள்ள இரட்டைச் சடை அரைப்பின்னல் நமக்கு ரொம்பவே இஷ்டமாயிட்டு. வீட்டிலே இருந்து போறச்சே மடிச்சுக் கட்டிண்டு போயிட்டு ஸ்கூல் போனதும் தோழிகள் அவிழ்த்து அரைச்சடையாகப் பின்னித் தொங்க விடுவாங்க. மறுபடி வீட்டுக்குப் போறச்சே சேம் விளையாட்டு விளையாடிட்டுப் போகணும். :)))) அதென்னமோ அரைப்பின்னல் பின்னித் தொங்கவிட்டால் கோபம் வரும் எல்லாருக்குமே! ஏன்??? இரட்டையாகப் பின்னலைப் பின்னிட்டுப் பின் அதை ஒற்றையாகச் சேர்ப்பாங்க. எனக்கு என்னமோ அந்தப் பின்னல் பிடிக்காது. :)

எட்டாம் படத்தின் இரட்டைப் பிச்சோடாவும் சரி ஒன்பதாம் படத்தின் சுருள் பின்னலும் சரி, நவராத்திரி ஸ்பெஷலாகப் பின்னிட்டிருக்கோம். இதுக்காக ஸ்கூலுக்கு லீவெல்லாம் போட்டுட்டு வீட்டுக்கு வந்த அனுபவம் எல்லாம் உண்டு. அதே போல் பிரிமணை வத்தும் கொண்டை போட்டுக் கொண்டதுண்டு. எங்க அப்பா, அம்மாவின் சிநேகிதி ஒருவர் செல்லம்மா அக்கா என்பவர் மணிபர்ஸ் பின்னல் என்றொரு பின்னல் பின்னுவார். அது இந்த ஏழாம் படத்தின் பாப் தலை போலத் தான் இருக்கும். இதைத் தவிர எண்ணெய் தேய்த்துக் குளித்தால் ஆற்றுப் பின்னல்னு பின்னிப்போம். எனக்குக் கல்யாணம் ஆகி முதல் குழந்தை பிறந்து மூணு வருஷத்துக்கு அப்புறமா என் கணவரோட அத்தை எனக்குத் தாழம்பூ வைச்சுப் பின்னி விட்டாங்க. அவங்க ஊரான கீழத்தஞ்சாவூரில் இருந்து எங்க புக்ககம் ஆன கருவிலி-பரவாக்கரைக்கு அந்தத் தாழம்பூப் பின்னலோடு வந்திருக்கேன். ஹிஹிஹி, சின்னப் பொண்ணு தானே! அதனால் அப்போல்லாம் ஒண்ணும் புரியலை!

இந்த மலையாளக் கொண்டை போட்டுக் கொண்டது இல்லைன்னாலும் கிருஷ்ணன் கொண்டை போட்டுக் கொண்டு ஸ்கூலுக்கே போயிருக்கேன். இதுவும் நவராத்திரி ஸ்பெஷல் தான். வலைக் கொண்டைனு நெட் வைச்சுக் கொண்டை போட்டிருக்கேன். அந்த வலையிலே வித விதமான மணிகள், சம்க்கிகள் வைத்துத் தைக்கப்பட்டிருக்கும். இந்த அள்ளிச் சொருகிய கொண்டைக்குத் தான் இன்னி வரைக்கும் என் தலை மயிர் சொன்னதைக் கேட்டது இல்லை. :))) எப்படிச் சொருகிக் கொண்டாலும் அவிழ்ந்து விடும். இதோடு இல்லாமல் மல்லிகைப் பூக்காலத்தில் குறைந்தது இருமுறையாவது பூத்தைத்துப் பின்னல் போட்டுக் கொண்டிருக்கிறேன்.
குஞ்சலங்கள் வித விதமாக வைத்துக் கொண்டிருக்கேன். சிவப்புக் குஞ்சலம், கறுப்புக் குஞ்சலம், குஞ்சலத்திலேயே ஜரிகை சுற்றியது, மணிகள் வைத்ததுனு விதவிதமான வெல்வெட்டுக் குஞ்சலங்கள் வைத்திருந்தேன். சில குஞ்சலங்களில் சவுரி மாதிரி நீளமாகக் கயிறுகள் தலைப் பின்னலிலேயே வைத்துப் பின்னும்படியும், நுனியில் பிசிர் பிசிராகவும் இருக்கும்படியாக உண்டு. அந்தக் குஞ்சலங்கள் எனக்குப் பிடித்ததில்லை. அநேகமாக உருண்டைக் குஞ்சலங்கள் தான். ஆண்டாள் கொண்டை போட்டுக் கொண்டு அதிலே நடுவிலே ராக்கொடி அல்லது சூர்யப்ரபை, சந்திரப்ரபை, ஜடைபில்லை ஏதானும் ஒன்றை வைத்துத் தைத்துக் கொண்டு ஜிமிக்கியை அதில் கட்டித் தொங்க விடுவாங்க. நாம் பேசும்பொதெல்லாம் தலைக்கொண்டையில் அது அழகாக ஆடும். இந்த அலங்காரங்கள் எல்லாம் செய்து விடுவது எங்க வீட்டில் வீட்டு வேலைக்கு உதவிக்கு இருந்த சுப்பம்மா என்னும் அம்மா தான். வளையல்கார நாயக்கர்களான அவங்களோட கைவண்ணம் இன்று முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். மீனாக்ஷி கோயிலுக்கு மாலை கட்டிக் கொடுக்கும் கட்டளையும், வளையல் திருநாளில் வளையல்கள் அளிக்கும் கட்டளையும் அவங்க குடும்பத்தைச் சேர்ந்தது. எங்க வீட்டு வளைகாப்புக்கெல்லாம் அவங்க வீட்டிலே இருந்து வந்து தான் வளை அடுக்குவாங்க. எல்லாரும் பார்த்து ரசிங்க. ஒரு வழியாப் பல நாட்கள் கழிச்சு ஒரு கொசுவத்தி சுத்தியாச்சு! :)))))