எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 11, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா?--4

அழுது அழுது ஓய்ந்தாயிற்று.  மற்ற மூன்று குழந்தைகளுக்கும் இதன் ஆழமான துயரம் புரியவில்லை. அவ்வளவு வயசாகவில்லையே!  அதோடு வீட்டில் ஒரு புதுக்குழந்தை வேறு இருக்கிறதே!  ஆனால் ரவிக்கோ அந்தக் குழந்தையின் பக்கம் தன் மற்றக் குழந்தைகளை நெருங்க விட இஷ்டம் இல்லை.  சாந்தியிடம் எவ்வளவோ வாதாடினான்.   தன் குழந்தை இறந்ததற்கு இந்தப் புதுக்குழந்தை தான் காரணம் என ஆணித்தரமாக அவள் மனதில் பதியும்படி எடுத்துச் சொன்னான். 'சாந்தி, இனிமேலும் இந்தக் குழந்தையை நாம் வளர்த்தால், நம் மற்றக் குழந்தைகளை இழக்க நேரிடும். விட்டுவிடு சாந்தி! " என்று ரவி கெஞ்சினான்.

சாந்தி பிடிவாதமாக மறுத்தாள். "உங்கள் மனதில் வேற்றுமை புகுந்துவிட்டது.  நாம் இருவருமே தொழிலில் கூடக் குழந்தைகளுக்கு நன்மை விளைவிக்கக் கூடியவாறே செய்ய வேண்டும் என எண்ணிப் பேசியும் தீர்மானித்தோம்.  அப்படியே நீங்க இப்போது குழந்தைகளுக்கான கார்ட்டூன்கள் எடுத்து வருகிறீர்கள்.  நான் வீட்டில் இருந்தவாறே அனிமேஷன்களில் உதவி வருகிறேன்.  இது அனைத்தும் எல்லாக் குழந்தைகளுக்காகவும் தானே!  இப்படி நீங்க ஒரு சின்னக் குழந்தையை, அதுவும் பிறந்து நான்கைந்து நாட்களே ஆன குழந்தையை, தாய் விட்டுவிட்டுப் போன குழந்தையை வெறுக்கலாமா?  உங்கள் தொழிலுக்கே இதன் மூலம் ஒரு கெட்ட பெயர் வருமே!" என்றாள்.

"அது யார் பெற்ற குழந்தையோ சாந்தி!  ஊர், பேர் தெரியாத அநாதைக் குழந்தை! நல்ல முறையில் குழந்தை பெற்றிருந்தால் அவள் ஏன் குழந்தையை விட்டுவிட்டுப் போகிறாள்? கொஞ்சம் யோசிச்சுப் பார்!  இந்தக் குழந்தை நமக்கு வேண்டாம்.  நமக்கு இருக்கிற மற்றக் குழந்தைகளையாவது காப்பாற்றி ஆகவேண்டுமே என எனக்குக் கவலையாக இருக்கிறது." என்றான் ரவி.  சாந்தி அவனையே முறைத்துப் பார்த்துவிட்டுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு படுக்கை அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.  ரவிக்குத் தலை சுற்றியது.  என்ன செய்யலாம் என யோசித்து யோசித்து மூளை குழம்பியது.  இது வரை அவன் மணவாழ்க்கையில் எந்தவிதமான பிரச்னைகளும் இல்லை.  அவனும், சாந்தியும் சேர்ந்து பேசிக் கொண்டே எதையும் தீர்மானிப்பார்கள்.  தனியாக எதையும் தீர்மானித்து நிறைவேற்றியது இல்லை.

ஆனால் இப்போது சாந்தி இப்படி முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறாளே!  என்ன செய்யலாம்?  யோசித்த ரவி வெளியே சென்றுவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்தான்.  அவன் முகத்தில் கொஞ்சம் தெளிவு தெரிந்தது.  எல்லாவற்றுக்கும் நாளை ஒரு முடிவு கட்டிவிடலாம். என்று தெம்பு பிறந்தது.அன்று இரவு அவன் சாந்தியுடன் படுக்கை அறைக்குச் சென்று வாதம் செய்ய விரும்பவில்லை. ஏற்கெனவே தனியாகத் தானே படுத்து வந்தான்.  ஆகவே அன்றும் அவன் எப்போதும் போல் தன் படுக்கையைத் தனியாக அமைத்துக் கொண்டு போய்ப் படுத்துவிட்டான். யோசனையில் ஆழ்ந்தான்.

இங்கே சாந்திக்கும் இருப்புக் கொள்ளவில்லை.  ரவி இவ்வளவு தூரம் கவலைப்படுவது அவளுக்கு வேடிக்கையாக இருந்தாலும் அவன் கவலை உண்மையானது என்பதைப் புரிந்து கொண்டிருந்தாள்.  ஆனால் இந்தக் குழந்தை!  இதை எப்படிக் கொடுப்பது? தூங்கும் குழந்தையைப் பார்த்தாள் சாந்தி.  குழந்தை எதற்கோ சிரித்தது!  அவள் மனதில் இயல்பான தாய்ப்பாசம் ஊறியது.  ரவிக்கு ஏதோ தேவையற்ற கற்பனைகள்.  நாளாவட்டத்தில் சரியாகும்.  இந்தக் குழந்தையை அவனே எடுத்துக் கொஞ்சுவான். என எண்ணிக் கொண்டாள்.  அவளும் தூங்கிப் போனாள். ரவி சரியாகத் தூங்கவில்லை.  சிறிது நேரத்துக்கு ஒரு முறை மற்றக் குழந்தைகள் தூங்கும் அறைக்குச் சென்று கண்காணித்துக் கொண்டிருந்தான்.  மறுநாள் விடிந்தது.  அன்றைய தினசரியும் வந்தது.  தினசரியில் முதல் பக்கத்திலேயே ஒரு விளம்பரம்.

"எண். 30, காந்தி நகர்,

திருவான்மியூர், சென்னை-38. தொலைபேசி எண்.

மேற்கண்ட விலாசத்தில் நாலு நாட்கள் முன்னால் ஒரு  பெண் குழந்தை தாயினால் அநாதையாக விடப்பட்டு உள்ளது.  குழந்தை பிறந்து நான்கு நாட்களே ஆகின்றன.  குழந்தை இல்லாத பெற்றோர்களோ, அநாதை ஆசிரமங்களோ அந்தக் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள விரும்பினால் அணுகவும்."

இந்த விளம்பரத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ரவி.  காஃபி எடுத்து வந்த சாந்தி அவன் கையில் பேப்பரைப் பார்த்து ரசிப்பதைக் கண்டு எட்டிப் பார்த்தாள். விளம்பரத்தைப் பார்த்ததுமே அவளுக்குக் கோபம் தலைக்கேறியது.

"என்னைக் கேட்காமல் எப்படி நீங்கள் விளம்பரம் கொடுக்கலாம்?" என ரவியைப் பார்த்து ஆத்திரமாய்க் கேட்டாள்.

"இதோ பார்! சாந்தி,  அந்தக் குழந்தை இங்கே இருப்பது நம் குடும்பத்துக்கு நல்லது இல்லை. "

"அதற்காக?  தூக்கிக் கொடுக்கச் சொல்றீங்களா?  தானாக வந்த செல்வம் அவள். என் கண்ணின் கருமணி.  அதோட இப்போ பாலு வேறே இல்லை; எனக்கும் பால் கட்டிக் கொண்டு விடும்.  அதனால் இவள் இருப்பது என் உடம்புக்கும் நல்லது தானே!  இதெல்லாம் ஏன் யோசிக்க மாட்டேங்கறீங்க? நான் எங்காவது இந்தக் குழந்தை எனக்கு பாரம்னு சொன்னேனா?"

பேசிக் கொண்டே தொலைபேசியை எடுத்து அந்த தினசரி அலுவலகத்துக்குப் பேசினாள். குழந்தையைக் கொடுக்கப் போவதில்லை; என்றும் விளம்பரம் கொடுத்தது தப்பு என்றும் தெரிவித்துவிட்டு, உடனடியாக மறுப்பை அன்று மாலைக்குள் போடுமாறும் குழந்தை விஷயமாக யார் கேட்டாலும் எங்களுக்குத் தொலைபேசி இணைப்புக் கொடுக்க வேண்டாம் என்றும் குழந்தை அவர்கள் குழந்தை என்றும் கூறிவிட்டுத் தொலைபேசியை வைத்தாள்.

"சாந்தி" என அதட்டினான் ரவி.  அவனை அலக்ஷியமாகப் பார்த்த சாந்தி வேகமாக உள்ளே சென்றுவிட்டாள்.  ஒரு வாரம் போல் சென்றது.  எவ்வித நிகழ்வுகளும் இல்லை.  ரவிக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தாலும் உள்ளூர உறுத்தல் குறையவில்லை.  இது ஏதோ பெரிய விஷயத்துக்கு அறிகுறி என நினைத்தான்.  நடு நடுவில் அந்தக் குழந்தையைப் பார்த்தான்.  இப்போது அதன் கண்களில் கட்டளை இடும் தொனி தெரிந்தது.  சிறிது நேரம் தொடர்ந்து அந்தக் குழந்தையைப் பார்த்தால் அந்தக் கண்கள் சொல்லும் வேலையைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.  அன்று ரவி சிறிது நேரம் தொடர்ந்து அந்தக் குழந்தையையே உற்றுப் பார்த்தான்.  அது அவனைப் பார்த்துத் தன் வாயைக் குவித்த வண்ணம் இருந்தது.  ரவியின் மனதில் அது இப்போது தன்னைத் தூக்கச் சொல்கிறது என்னும் எண்ணம் தோன்றியது.  அவனையும் அறியாமல் அந்தக் குழந்தையைத் தூக்கினான்.  தூக்கிய அடுத்த நொடி அது பார்த்த பார்வையில்  அவன் நடுங்கிப் போனான்.  குழந்தையைக் கீழே விட எத்தனித்தான்.  ஆனால் அதுவோ அவன் தோளில் சாய்ந்தவண்ணம் இருந்தது.  அவன் குழந்தையை  எடுக்க முயற்சித்தான்.  ஆனால் எடுக்க  எடுக்க கனம் அதிகம் ஆனது.  ரவிக்கு  விட்டால் போதும் என்று ஆகிவிட்டது.  கிட்டத்தட்டக் குழந்தையைத் தன் தோளில் இருந்து பிடுங்கித் தொட்டிலில் போட்டான்.  அதன் முகத்தில் தெரிந்த சிரிப்பு அப்போது அவனுக்கு, "என்னை யாரென நினைத்தாய்!  என்னிடமா உன் வேலை! " என்று கேட்பதைப் போல் இருந்தது.  அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்தான்.

மறுநாள் காலை பெரிய பையனுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் போனது.  ரவிதான் மருத்துவரிடம் அழைத்துச் சென்றான்.  சாதாரண ஜலதோஷக் காய்ச்சல் தான் என்றும் பயம் இல்லை என்றும் சொல்லிவிட்டு மருந்துகள் கொடுத்தார்.  காலை வேளை கொடுக்க வேண்டிய மருந்தை ரவியே கொடுத்துவிட்டு, சாந்தியிடம் பையனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அலுவலகம் சென்றான்.

15 comments:

 1. முதல் பையனுக்கு உடம்பு சரியில்லையா... அடுத்த டிக்கெட்டா... என்ன இது இலை உதிர்வது போல...

  ReplyDelete
 2. அய்யய்யோ... குழந்தை தானா அது...?

  ReplyDelete
 3. திக் திக் திக்

  ReplyDelete
 4. என்ன நடக்கப் போகிறது..... அதிர்ச்சியோடு தொடர்கிறேன்.

  ReplyDelete
 5. ஹா!..ஊகிக்க முடியாத திடீர் திருப்பங்கள்!.. என்ன நடக்கப் போகுதோ?!!!!

  ReplyDelete
 6. ரொம்பவே பயமுறுத்துகிறது அந்த குழந்தை!

  ReplyDelete
 7. வாங்க ஶ்ரீராம், ஆமாம், இலை உதிர்வது போலத் தான். :(

  ReplyDelete
 8. டிடி, எனக்கும் அதான் சந்தேகம். ஆனால் கதையில் கடைசி வரை இந்த முடிச்சு அவிழவே இல்லை. :(

  ReplyDelete
 9. அப்பாதுரை! :)))))

  ReplyDelete
 10. வெங்கட், தொடருங்கள்.

  ReplyDelete
 11. பார்வதி, ஒரு வழியா வந்து சேர்ந்தீங்களா? வழி கிடைச்சதா! :))))

  ReplyDelete
 12. சுரேஷ், நன்றிங்க.

  ReplyDelete

 13. பிறந்தவுடன் குழந்தைக்கு அமானுஷ்ய சக்தியா. இல்லை வெறுமே ரவியின் பிரமையா. கதை திக் திக் பாதையில் ........! நல்ல கற்பனை.

  ReplyDelete
 14. வாங்க ஜிஎம்பி சார், பிரமை எல்லாம் இல்லை. :))) கதைப்படி உண்மை.

  ReplyDelete
 15. கதை நாயகனுக்கும், அந்த ஜிப்சி பெண்ணுக்கும் ஏதாவது ஒரு பழைய கதை இருக்கோ!
  பலி வாங்கும் படலமோ!

  ReplyDelete