எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 05, 2014

குலை குலையாம் முந்திரிக்கா!

ரஞ்சனியோட கொழு கொழு கன்னைப் படிச்சதும் கொசுவத்தி மிக மிக வேகமாயும், புகை மண்டியும் சுத்தத் தொடங்கிடுச்சு.  அப்போதெல்லாம் விளையாடிய ஒரு சில விளையாட்டுக்கள் நினைவில் வந்தன.  முதல்லே ]

குலைகுலையாம் முந்திரிக்கா


திரி திரி பந்தம்
திருமால் தந்தம்
திரும்பிப் பார்த்தால் ஒருமொட்டு

வட்டமாய் எல்லோரும் உட்கார்ந்துக்கச் சுத்தி வருபவர் பாடுவார்.  பாடுவார் என்ன கிட்டத்தட்ட மந்திரம் மாதிரி முணுமுணுப்பார்.  உடனே வட்டத்தில் உள்ள ஒருத்தர் முதுகில் தன் கையில் உள்ள துண்டை அல்லது ஏதேனும் பொருளை ஒளித்து வைப்பார். ஒளித்து வைக்கிறது தெரியாமல் வைக்கணும்.  இதுக்காக நாலைந்து பேர் முதுகில் தட்டு என்ற பெயரில் செல்ல அடிவிழும்.  கடைசியில் யார் முதுகில் ஒளிச்சு வைச்சிருக்காங்கனு கண்டு பிடிக்கணும்.  சில சமயம் அவசரப் பட்டு யார் முதுகில் ஒளிச்சு வைச்சிருக்கோமோ அவங்க தன்னோட முதுகிலே இருக்குனு தெரிஞ்சு என் பேர் பூஷணிக்காய்னோ, கத்திரிக்காய்னோ சொல்லிடறது உண்டு.

குலையா குலையா முந்திரிக்காய் (சுற்றுபவர் பாடும் பாடல்)
நரியே நரியே சுற்றி வா (அமர்ந்திருப்பவர் அனைவரும் சேர்ந்திசை)
கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான் (சுற்றுபவர் பாடும் பாடல்)
கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி (அமர்ந்திருப்பவர் அனைவரும் சேர்ந்திசை)

சுத்தி வருபவர் யார் முதுகில் இருக்கோ அவங்களை எழுப்பி விட்டுட்டு அந்த இடத்தில் உட்காரணும். எழுப்பப்பட்டவர் சுத்தி வரணும்.  இதிலே ஏதேனும் தப்பு இருந்தாலோ, மாற்றம் இருந்தாலோ சொல்லுங்கப்பா.

அப்புறமாக் கண்ணாமூச்சி விளையாட்டு


கண்ணாமூச்சி ரேரேரே
காட்டுமூச்சி ரேரேரே
ஒரு பழம் தின்னுட்டு???? மறந்து போச்சு

அப்புறமா என்ன???

அடுத்து

கிச்சு கிச்சுத் தாம்பாளம்,கியாங், கியாங் தாம்பாளம்னு வரும். மறந்திருக்கு!

அப்புறமா

கல்லா, மண்ணா,

அதுக்கப்புறம்

புளியங்கொட்டை இருந்தால் கூடப் போதும் ஒத்தையா, ரெட்டையாக்கு!

ஒத்தையா இரட்டையா

கொஞ்சம் மறந்து போன

சீதாப்பாண்டி

இப்போவும் விளையாடிப் பார்க்கும்

தாயம்

கனவுகளாகிப் போனப்

பல்லாங்குழி


பார்க்கவே முடியாத

பூப்பறிக்க வருகிறோம்

Sunday, May 04, 2014

கல்யாணமாம், கல்யாணம், மீனாக்ஷிக்குக் கல்யாணம், மலர்ந்த நினைவுகள்!

அக்ஷய த்ரிதியைப் பதிவில் ஶ்ரீராம் சொன்னது:

மதுரையில் தண்ணீர்ப் பந்தல் பார்த்ததில்லை. தயிர்சாத தானமும் நான் இருந்த காலத்தில் இல்லை! (80 களில்). சித்திரைத் திருவிழா கோலாகலம்தான் அசந்து போய்ப் பார்த்திருக்கிறேன்!


என்னோட பதில்:

இந்த தானங்கள் எல்லாம் ஶ்ரீராமநவமிக்கே ஆரம்பிக்கும். அன்னிலேருந்து ஆரம்பிச்சு வீட்டுக்கு வீடு விசிறி, குடை, செருப்பு என தானம் கொடுப்பார்கள்.  மல்லிகைப் பூக்காலம் வேறே ஆரம்பிச்சுடுமா, ஒவ்வொரு வீடுகளிலும் லக்ஷம் மல்லிகை தானம் கொடுப்பாங்க. லக்ஷம் மஞ்சள் தானம் கொடுப்பாங்க.  சும்மா தெருவில் போகும் இளம்பெண்களையும், சுமங்கலிகளையும் வீட்டுக்கு அழைத்துக் கொடுப்பதையும் பார்த்திருக்கேன்.  தெரிந்தவர், தெரியாதவர்னு வித்தியாசமே இல்லாமல் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுப்பாங்க.

முன்னால் எல்லாம் மேல கோபுர வாசல்லே ஆரம்பிச்சு டவுன் ஹால் ரோடு முழுசும் பந்தல் போட்டிருப்பாங்க.  அதே போல் மேலமாசி வீதி சின்னக்கடைப் பக்கமும் தெரு முழுசும் பந்தல் இருக்கும்.  முனிசிபல் லாரி தினம் தினம் சாயந்திரம் தெருக்களில் தண்ணீர் தெளிச்சுட்டுப் போகும். பந்தல்களில் கடைக்காரர்கள் ஒரு பெஞ்சில் பானைகள் வைத்து நீர் மோர், பானகம், சுண்டல்னு கொடுப்பாங்க.  நாலு மாசி வீதிகளிலும் கூட இப்படி விநியோகம் நடக்கும்.  மேலாவணி மூலவீதியில் இருந்து மேல கோபுர வாசலிலே சென்ட்ரல் தியேட்டர் செல்லும் வழியில் திரும்பும் இடத்தில் வலப்பக்கம் முன்னாடி இசையகம்னு ஒரு கடை இருந்தது.  அதுக்கு எதிரே ஃபன்ட் ஆஃபீஸ் இருந்தது.  ஃபன்ட் ஆஃபீஸ் வாசலிலே பானைகள் வைச்சு நீர் மோர், பானகம் நிரப்பி இருப்பாங்க. தானப்ப முதலி அக்ரஹாரத்தில் ஆடு, மாடு, குதிரைகள், நாய்கள் போன்றவற்றுக்காக ஒரு தண்ணீர்த் தொட்டி ரங்காச்சாரி துணிக்கடைக்குக் கொஞ்சம் முன்னால் கருகப்பிலைக்காரச் சந்து முனையில் இருந்தது.  இப்படி எல்லாம் வாயில்லா ஜீவன்களுக்காகக் கூடத் தண்ணீர் நிரப்பி வைத்துப் பார்த்த காலம் ஒன்று உண்டு.    

சென்னையிலே அந்தக் கால கட்டங்களிலேயே வெற்றிலை, பாக்குக் கடைகளிலேயோ, டீக்கடைகளிலேயோ தண்ணீர் குடிக்கத் தரமாட்டாங்க.  முதல் முதல் 64 ஆம் வருடம் சென்னை வந்தப்போ மெரினா பீச் பார்த்துட்டு வரும் வழியில் ஒரு கடையில் குடிக்கத் தண்ணீர் கேட்டதுக்குக் கன்னாபின்னாவெனச் சென்னை மொழியில் திட்டினாங்க. அப்புறமாக் காசு கொடுத்து எலுமிச்சை ஜூஸ் வாங்கிக் குடிச்சோம். அப்போவே எனக்குச் சென்னை பிடிக்காமல் போய் விட்டது! :)))))))) ஆனால் மதுரையிலே அப்படி இருந்ததில்லை.  இப்போத் தெரியலை. :(




மீனாக்ஷி கல்யாணத்தன்னிக்கு ஆடி வீதியில் சிலர் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் தொன்னையில் கொடுப்பாங்க. எதிர்சேவையில் ஒவ்வொரு மண்டகப்படியிலும் ஓலைப் பெட்டிகளில் சாப்பாடை நிறைத்துக் கொடுப்பாங்க.  அல்லது அங்கேயே சாப்பிட்டுட்டு வரலாம்.  இப்போல்லாம் எப்படினு தெரியலை. மீனாக்ஷி கல்யாணமும், அன்னிக்கு ராத்திரி மீனாக்ஷி வீதி வலம் வரும் பூப்பல்லக்கும்,  மறுநாள் தேரும் சில சமயங்களில் அன்று மாலையே தல்லாகுளத்தில் எதிர்சேவையும் அசராமல் ஒவ்வொரு வருடமும் பார்த்திருக்கோம்.

மீனாக்ஷி கல்யாணத்தனிக்குக் காலம்பர நாங்க இருந்த மேலாவணி மூல வீதி வழியாத் தான் மீனாக்ஷிக்குச் சீர் வரிசை போகும்.  முதலில் ஆறு மணி, ஏழு மணி சுமாருக்கு ஒவ்வொரு நாற்சந்தியிலும் வேட்டுக் குழாயில் மருந்தை அடைத்து வேட்டுப் போடுவார்கள்.  வேட்டுச் சத்தம் கேட்டதுமே சீர் வரிசை ஊர்வலம் வருதுனு புரிஞ்சுக்கலாம். சீர் வரிசை வரும்போது யாருக்கெல்லாம் முடியுதோ அவங்க எல்லாம் மீனாக்ஷிக்கு முடிந்த பொருட்களைச் சீராகக் கொடுப்பாங்க.  ஒவ்வொரு வீட்டிலும் கற்பூர ஆரத்தி, தேங்காய் உடைத்தல், மஞ்சள் நீர் ஆரத்தி என எடுப்பாங்க.  இந்த ஆரத்தி முடிஞ்சு சீர்  ஊர்வலம் வடக்காவணி மூல வீதி திரும்பியதுமே எல்லாருமே கல்யாணம் பார்க்கக் கிளம்புவாங்க. 


 கல்யாண மண்டபத்தில் தான் முன்னாடி எல்லாம் திருக்கல்யாணம் நடைபெற்றது. இவ்வளவு கூட்டமும் இருந்ததில்லை.  என்றாலும் கூட்டம் இருக்கும்.  அன்று நாள் முழுதும், மாலை மூன்று மணி வரையிலும் கல்யாணம் செய்து கொண்ட அலுப்புக் கூடத் தீராமல் மீனாக்ஷி பக்தர்களுக்கு அருள் பாலிப்பாள். அதன் பின்னரே மாலை ஊர்வலத்துக்கு அலங்காரம் செய்துக்கக் கிளம்புவாள்.  எல்லாரும் தங்கள் வீட்டுக் கல்யாணம் மாதிரி புதுசு கட்டிக் கொண்டு பாயசம், வடையோடு விருந்துச் சாப்பாடு எல்லாருக்குமே போடுவாங்க. மேலாவணி மூலவீதியில் எதிரும் புதிருமான இரு வரிசைகளிலும் வீட்டுச் சொந்தக்காரங்களும், அவங்க வைத்த குடித்தனக்காரர்களுமாகக் குடும்பங்களாக இருந்த காலம் அது.

அது வரையிலும் போயிட்டுப் போயிட்டு வந்து பார்த்திருக்கோம். சின்னக்கடையில் வியாபாரிகள் சங்கம் பந்தல் அமைத்து நாலு பக்கமிருந்தும் பூக்கொட்ட பொம்மைகள் வைத்திருப்பார்கள்.  சீக்கிரமாச் சாப்பிட்டுட்டு ஏழு மணிக்கே அங்கே போய்த் தெரிஞ்சவங்க கடை வாசல்லே இடம் பிடிப்போம். பூக்கொட்டுதல் பார்த்ததும் மீனாக்ஷியோடயே வடக்கு மாசி வீதி வந்து நேரு பிள்ளையார் கோயில் வாசலில் ஒரு தரம் பார்த்துட்டுப் பின்னர் வீட்டுக்கு அரைமனசாப் போவோம். தேரன்னிக்கும் அதே போல் மேல மாசி வீதியில் பழங்கள் கொட்டும் கடைகள் அருகே இருந்து பார்க்க ஆரம்பிச்சாத் தேரோடயே வந்து வடக்கு மாசி வீதி வரை வந்ததும் வீடு திரும்புவோம்.  எதிர்சேவை பார்த்தது எல்லாம் தனிக்கதை! :))))

மீனாக்ஷி கல்யாணம் குறித்துப் பலரும் எழுதிட்டு இருக்காங்க.  என் அண்ணா, தம்பி குடும்பம் இதுக்காகச் சென்னையிலிருந்து மதுரை போறாங்க.  உடனே நமக்கு மலரும் நினைவுகள் மோத ஆரம்பிச்சுடுச்சு. அதன் விளைவு தான் இது.  என் அனுபவங்களை எல்லாருக்கும் அனுபவிக்கப் பகிர்ந்து கொடுத்திருக்கிறேன்.

Saturday, May 03, 2014

அக்னி நட்சத்திரம்னா என்ன?


Friday, April 24, 2009

நல்ல கடுங்கோடைக் காலம் ஆரம்பிச்சாச்சு. எல்லாருமே வெயிலில் வெந்து கொண்டிருக்கோம். இன்னும் வெயில் அதிகமாய்த் தெரியும் அக்னி நக்ஷத்திரம் என்னும் நாட்கள் வேறே வரப் போகின்றது. சூரியன் பூமிக்கு மிக அருகே வரும் நாட்கள் தான் அவை என அறிவியல் கூறுகின்றது. ஆனால் நம் முன்னோர்கள் எதையும் மெய்ஞானத்தோடு சேர்த்தே பார்க்கிறவர்கள் ஆகையால் அவங்க சொல்லும் காரணத்தை இங்கே பார்ப்போமா? இந்தக் கதை தெரிஞ்சவங்க நான் திரும்பச் சொல்றதுக்கு மன்னிச்சுக்குங்க.


 

அக்னி பகவானுக்கு ஒரே பசி. எத்தனையோ ஆஹுதிகள், எத்தனையோ உணவுகள், விதவிதமான உணவுகள் கிடைக்கிறது. ஆனாலும் பசி அடங்கலை. தவியாய்த் தவிச்சான். என்ன கிடைச்சாலும் உடனே சாப்பிட்டுப் பார்த்தாலும் பசி அடங்கவே இல்லை அவனுக்கு. இந்தப் பசி அவனுக்கு எப்படி ஏற்பட்டதுன்னா அதிகம் சாப்பிட்டதாலே தான். என்ன? ஆச்சரியமா இருக்கா? சுவேதகி என்ற மன்னன் ஒருவன் தொடர்ந்து பனிரண்டு வருஷங்கள் யாகம் செய்தான். யாகத் தீ தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. யாகத்தில் விடப் பட்ட நெய்யை அக்னி தொடர்ந்து ஏற்றுக் கொண்டான். அதைத் தொடர்ந்து சாப்பிட்டதிலே அவனுக்கு வயிற்றில் நோய் ஏற்பட அதன் காரணமாய் எதைச் சாப்பிட்டாலும் பசி போகலை என்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. பிரம்மாவைச் சரணடைந்தான். அவனோட கோரப் பசிக்கு உணவு காண்டவ வனம் தான் என்று பிரம்மா சொல்கின்றார்.

காண்டவ வனம் எங்கே இருக்கு? அக்னி தேடுகின்றான். ஆஹா, அதோ காண்டவ வனம், யமுனைக்கரையிலே! ஆவலுடன் சென்றான் அக்னி, அந்த வனத்தைக் கபளீகரம் செய்ய ஆரம்பித்தான். ஆனால் என்ன இது? இந்திரனுக்குப் பொறாமையா? அல்லது தெரியாமல் செய்கின்றானா? அக்னி வனத்தை விழுங்க முயல, இந்திரன் மழையாக வர்ஷிக்க, அக்னி முடிவில் தோற்றே போனான். காட்டை அக்னி நெருங்கினாலே மழை கொட்டியது. என்ன செய்வது எனப் புரியாமல் தவித்தான் அக்னி. அப்போது, ஆற்றங்கரைக்கு அர்ஜுனனோடு பேசிக் கொண்டே வந்த ஸ்ரீகிருஷ்ணனைக் கண்டான் அக்னி. ஸ்ரீகிருஷ்ணர் தான் நம்மைக் காக்க வல்லவர் என்ற எண்ணம் அவன் மனதில் உண்டாகியது. உடனே ஒரு வயோதிகர் உருவெடுத்துக் கொண்டு, தள்ளாடித் தள்ளாடி நடந்து அவர்கள் இருவர் முன்னும் சென்று நின்றான் அக்னி.

ஸ்ரீகிருஷ்ணர் வந்திருப்பது அக்னியே என்பதைப் புரிந்து கொள்கின்றார். எனினும் என்ன வேண்டும் எனக் கேட்க, மிகுந்த பசியோடு இருப்பதாயும் உணவு வேண்டும் எனவும் அக்னி சொல்ல, “அக்னியே, உன்னைப் புரிந்து கொண்டேன், உன் பசி அடங்க உணவு கிடைக்கும்” என உறுதி அளிக்கின்றார் ஸ்ரீகிருஷ்ணர். இந்திரன் வந்து தான் காண்டவ வனத்தை நெருங்க விடாமல் செய்வதை அக்னி சொல்கின்றான். ஸ்ரீகிருஷ்ணர் அக்னியிடம், “உனக்கு 21 நாட்கள் கெடு கொடுக்கின்றேன். அதற்குள்ளாக நீ வனத்தை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும். இந்திரன் பெரு மழையாகக்கொட்டினாலும் உன்னை நெருங்க மாட்டான். நீ அதற்குள்ளாக உன் வேலையை முடித்துக் கொள்ள வேண்டும்.” என்று சொல்லிவிட்டுப் பார்த்தனைப் பார்க்கின்றார். காண்டவ வனத்தை அழித்தே அங்கே இந்திரப் பிரஸ்தம் கட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தனர் பாண்டவர்கள். ஆனால் காண்டவ வனத்தை அழிப்பது எவ்வாறு? இதோ தக்க சமயத்தில் அக்னி உதவிக்கு வந்துவிட்டானே.

அர்ஜுனனை ஸ்ரீகிருஷ்ணர் பார்த்ததுக்கு வேறே அர்த்தமும் உண்டு. அர்ஜுனன் அம்பு மழை பெய்து கூடாரங்கள் போட்டு இந்திரனால் பொழியப் படும் பெரும் மழையைத் தடுத்துவிடுவான் அல்லவா? அதே போல அர்ஜுனன் அஸ்திரங்களை எய்து வானத்தை நோக்கிச் செலுத்தினான். ஆயிரமாயிரம் அம்புகள் அர்ஜுனனால் ஏவப் பட்டன. அனைத்தும் ஆகாயத்தில் இணைந்து ஒரு சரக் கூடமாக நின்று காண்டவ வனத்தை மழையில் இருந்து காத்தது. அக்னியும் உள்ளே நுழைந்தான். அங்கே உள்ள அனைத்தையும் அள்ளி விழுங்க ஆரம்பித்தான். இந்திரனோ அதைத் தடுக்க ரொம்ப ரொம்ப பலமா மழையைப் பொழிய வைக்க முயல, ஒரு துளி கூட அங்கே விழாதபடிக்கு சரக்கூடம் தடுத்து நின்றது.

முதல் எழு நாட்கள் அக்னி மெல்ல மெல்ல உணவை விழுங்க ஆரம்பித்தான். அப்போது வெப்பம் மெல்ல மெல்லப் பரவ ஆரம்பித்தது. அடுத்த ஏழு நாட்கள் கொஞ்சம் அதிகமாயும், வேகமாயும் காட்டை விழுங்க ஆரம்பிக்க வெப்பம் கடுமையானது. கடைசி எழு நாட்கள், படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது காடும், அக்னியின் வேகமும். வெப்பம் மெல்ல மெல்லக் குறைந்தது.
இந்த இருபத்தி ஒரு நாட்களையே அக்னி நட்சத்திரம் என்ற பெயரில் சொல்லுகின்றோம். சென்னை மக்களால் கத்திரி வெயில் என்றழைக்கப் படும் இவற்றின் முதல் ஏழு நாட்கள் வெப்பம் படிப்படியாக அதிகரித்து நடு ஏழு நாட்கள் வெப்பம் உச்ச கட்டத்தை அடைந்து கடைசி ஏழு நாட்களில் வெப்பம் படிப்படியாகக் குறைவதையும் உணரலாம்.

நாளையிலிருந்து அக்னி நக்ஷத்திரம் ஆரம்பிக்கப் போவதால் இன்று அதைக் குறித்துப் பார்க்க வேண்டி 2009--ஆம் ஆண்டு போட்ட பதிவின் மீள் பதிவு.

Friday, May 02, 2014

உப்பு வாங்கலையோ உப்பு! ஒரு மீள் பதிவு!





அக்ஷய த்ரிதியை அன்னிக்கு வாங்க வேண்டிய முக்கியமான பொருள் உப்புத் தான். தங்கமோ, வெள்ளியோ, வைரமோ, பிளாட்டினமோ, பட்டுப் புடவைகளோ அல்ல. ஆனால் நம்ம மக்களுக்கு இதை எல்லாம் யாரு புரிய வைக்கிறது? போறாததுக்கு எல்லாப் பத்திரிகைகள், தினசரிகள், தொலைக்காட்சிகளில் எல்லாம் அக்ஷய த்ரிதியை விற்பனைச் சலுகைகள் வேறே அறிவிச்சிருக்காங்க. இதுக்காக உண்மை விலையில் எவ்வளவு கூட்டி இருப்பாங்கனு தெரியலை. ஆனாலும் ஜனங்க போய்க் குவிஞ்சு கும்பலில் மாட்டிக்கொண்டு எதையோ வாங்கிட்டு வரதிலே ஒரு சந்தோஷம். நமக்கு நல்ல நாளிலேயே கூட்டம் அலர்ஜி. இப்போ இந்தக் கடுமையான கோடையிலே ம்ஹும், துளிக்கூட ஒத்துவராது. ஆனால் என்ன என்ன பண்ணணும்னு மட்டும் பார்ப்போமா?



அக்ஷய த்ரிதியை என்பது உண்மையில் பூமித்தாய்க்கு நாம் செய்யும் வழிபாடு என்றே கொள்ளலாம். பிரளயம் முடிந்து உலகம் பிறந்த நாள் என்றும் சொல்வார்கள். முன்பெல்லாம் பல கிராமங்களிலும் பொன்னேர் பூட்டுதல் என்ற ஒன்று சிறப்பாக நடக்கும். அந்தப் பொன்னேர் பூட்டுவதை அக்ஷய த்ரிதியை அன்று செய்பவர்களும் உண்டு. இந்தக் கோடை முடிந்து மழை ஆரம்பிக்கும். அதற்கு முன்னர் நிலத்தை உழுது போடவேண்டும். உழுது போட ஏரை எடுக்கும் முன்னர் இப்படி ஒரு வழிபாடு ஏருக்கும், நுகத்தடிக்கும் நடத்துவார்கள். இன்னிக்குப் பொன்னேர் பூட்டுவதுனால் என்னனு கிராமத்துக்காரங்களுக்கே தெரியுமா சந்தேகமே!

மேலும் முக்கியமாய்ச் செய்யவேண்டியது பல்வகைப்பட்ட தானங்கள். கோடைக்குப் பயனாகும் விசிறி தானம், குடை தானம், செருப்பு தானம், நீர்மோர் பானகம், தண்ணீர்ப்பந்தல் வைத்தல், அன்னதானம் போன்றவை மிகுந்த சிறப்புடன் செய்யப் பட்டு வந்தன. மதுரையிலே தெருவுக்குத் தெரு தண்ணீர்ப் பந்தல் இருக்கும் முன்பெல்லாம். அங்கே கொடுக்கப் படும் தயிர்சாதத்தை அதன் சுவைக்காகவே திரும்பத் திரும்பப் போய் வாங்கிச் சாப்பிட்டது ஒரு காலம். ஆனால் அப்போ அக்ஷயத்ரிதியை என்றோ, அதுக்காகச் செய்யறாங்கன்னோ தெரியாது. புரிஞ்சுக்கவும் முயற்சி செய்யலை. மிகச் சில வீடுகளிலேயே அன்னதானம் சிறப்பாகச் செய்து வந்தார்கள். தயிர்சாதம் கொடுப்பது மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. அன்னப் பஞ்சம் வராமல் தடுக்கவே ஏற்பட்ட நாள் என்று சொன்னாலும் மிகையில்லை.

அன்னதானம் செய்யும் சத்திரங்கள், மடங்கள் போன்றவற்றில் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்வார்கள். இந்த அன்னக்கொடியில் அன்னபூரணி சித்திரமாக வரையப் பட்டிருப்பாள் என்று எனக்கு நினைவு. வேறு மாதிரி இருந்தால் பெரியவங்க யாரேனும் சொல்லி அருளணும். எனக்கு நினைவு தெரிந்து இளையாத்தங்குடி வித்வத் சதஸ் நடந்தப்போ பரமாசாரியாள் அவர்கள் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ததாகவும் நினைவு. அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ய ஆரம்பிச்சா நேரம், காலம் இல்லாமல் பசி என்று வருபவர்களுக்கு உணவு அளிக்கப் படும். ஜாதியோ, மதமோ பார்த்ததாகவும் தெரியவில்லை. அப்படி ஒரு தானம் இந்தக் காலங்களில் அளிக்கப் படுகிறதானும் தெரியலை. ஆனால் பழங்காலத்தில் சோழர் காலம் தொட்டே இந்தப் பழக்கம் இருந்ததாகத் தெரிய வருகிறது. பார்க்க!அன்னக்கொடி விழா என்ற தலைப்பிலே காணலாம். மேலும் நம்ம தமிழ்த் தாத்தாவும் அவர் பங்குக்கு இந்த அன்னக்கொடி விழா பத்தி எழுதி இருக்கார் தமது என் சரித்திரத்திலே. அதிலிருந்து சில பகுதிகள் தாத்தாவின் நடையிலேயே கீழே! அவர் தமிழ் படித்த மடத்தின் குருபூஜையின் நிகழ்வுகளின் போது நடைபெற்ற அன்னதானம் பற்றி எழுதி உள்ளார். ஆகவே அக்ஷய த்ரிதியை என்றால் அதை தானம் செய்யும் ஒரு நாளாகவே கொண்டாடுங்கள்.

அன்ன தானம்
எங்கே பார்த்தாலும் பெருங்கூட்டம். தமிழ் நாட்டிலுள்ள ஜனங்களில்
ஒவ்வொரு வகையாரையும் அங்கே கண்டேன். நால்வகை வருணத்தினரும்,
பாண்டி நாட்டார், சோழ தேசத்தினர் முதலிய வெவ்வேறு நாட்டினரும்
வந்திருந்தனர்.

குரு பூஜா காலங்களில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
யார்வரினும் அன்னம் அளிக்கப்படுமென்பதற்கு அறிகுறியாக மடத்தில்
உத்ஸவத்தின் முதல் நாள் அன்னக்கொடி ஏற்றுவார்கள். பல வகையான
பரதேசிகளும் ஏழை ஜனங்களும் அங்கே வந்து நெடு நாட்களாகக் காய்ந்து
கொண்டிருந்த தங்கள் வயிறார உண்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து
வாழ்த்துவார்கள். பிராமண போஜனமும் குறைவற நடைபெறும்.

பல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர். மடத்து முக்கிய
சிஷ்யர்களாகிய தக்க கனவான்கள் பலர் காணிக்கைகளுடன் வந்திருந்தனர்.
மற்றச் சந்தர்ப்பங்களில் தங்கள் ஞானாசிரியரைத் தரிசிக்க இயலாவிட்டாலும்
வருஷத்துக்கு ஒரு முறை குருபூஜா தினத்தன்று தரிசித்துப் பிரசாதம் பெற்றுச்
செல்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய
தேசிகருடைய அன்பு நிரம்பிய சொற்கள் அவர்கள் உள்ளத்தைப் பிணித்து
இழுத்தன. தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்தவர்களும் இக்குருபூஜையில்
வந்து தரிசிப்பதை ஒரு விரதமாக எண்ணினர். அவரவர்கள் வந்த வண்டிகள்
அங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன. குடும்ப சகிதமாகவே பலர் வந்திருந்தார்கள்.

எல்லா தானங்களும் செய்த கர்ணன் அன்னதானமே செய்யாததால் சுவர்க்கம் சென்றும் கூடப் பசியால் துடித்த கதையும், கட்டை விரலைச் சூப்பச் சொல்லி பகவான் சொன்னதன் பேரில் அவன் பசி அடங்கியதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே? ஆகவே இயன்ற அளவு ஒரு ஏழைக்கானும் அன்னமிடுங்கள். அன்னதானம் செய்ய முடியவில்லையா? ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கல்விக்கு உதவுங்கள். நீத்தோர் கடன்களை முக்கியமாய்ச் செய்யுங்கள். ஏழைகளுக்கு உங்களால் இயன்ற ஆடை தானம் செய்யுங்கள். இன்றைய நாள் கொடுப்பதற்கு உரிய நாளே தவிர, கடைகளுக்குக் கூட்டத்தில் இடிபட்டுச் சென்று பொருட்களை வாங்கிக்குவிக்கும் நாளல்ல. எதுவுமே முடியலையா, இறைவனை மனமாரப் பிரார்த்தியுங்கள். அருகில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல முடிந்தால் செல்லுங்கள். முடியலையா வீட்டில் இருந்த வண்ணமே வழிபடுங்கள் போதும்.

2010 ஆம் ஆண்டு அக்ஷய த்ரிதியைக்குப் போட்ட பதிவின் மீள் பதிவு. இன்றைய தினம் அக்ஷய த்ரிதியை.  நகை வாங்கவும் துணிகள் வாங்கவும் கடைகளில் கூட்டம் அலை மோதுவதால் இந்த வருஷம் முன் பதிவெல்லாம் நடக்கிறது. இதெல்லாம் தேவையா!  இதிலே பலரும் கடன் வாங்கி அக்ஷய த்ரிதியைக்குத் துணியோ, நகையோ வாங்குவதாக வேறே சொல்றாங்க.  இதெல்லாம் தேவையா!  எந்தக் கடவுளும் இப்படி எல்லாம் செய்யச் சொல்லவே இல்லை.  எனக்குத் தெரிந்து இது கடந்த பதினைந்து வருடங்களிலேயே ஆரம்பித்து இன்று விஷ விருக்ஷமாக வளர்ந்திருக்கிறது.  அக்ஷய த்ரிதியை என்றாலே முன்னெல்லாம் யாருக்கும் தெரியாது.  இப்போப் போறாக்குறைக்குத் தொலைக்காட்சி சானல்கள், பத்திரிகைகள் போன்றவை இவற்றை ஊக்குவிக்கின்றன.  கடைகளின் இடைவிடா விளம்பரம் வேறெ ஒரு மாசத்துக்கு முன்னால் இருந்து ஆரம்பம். 

Thursday, May 01, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா --- 12

நாலைந்து நாட்கள் ஓடிவிட்டன.  மெளனத்திலேயே ஒவ்வொரு நாளும் கழிந்தது.  சாந்தியோ, ரவியோ ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை.  அக்கம்பக்கமோ அடுத்தடுத்துக் குழந்தைகள் இறப்பதைப் பார்த்து அந்த வீடு பேய் வீடு என அழைப்பதாக வேலைக்காரி வந்து சொன்னாள். அவரவர்கள் குழந்தையை இந்தப் பக்கம் போக வேண்டாம் எனத் தடுத்திருப்பதாகவும் சொன்னாள்.   ரவிக்கோ அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறதாய்த் தோன்றியது.  இந்தப் பேய்க் குழந்தை இங்கே இருப்பதால் தானே எல்லாரும் சொல்கிறார்கள் என நினைத்தான்.  ஆயிற்று.  இதற்கு ஒரு வயதும் ஆகப் போகிறது.  நடக்கவும் ஆரம்பித்து விட்டது.  இன்னும் என்னவெல்லாம் பண்ணுமோ!

ஆனால் சாந்தியின் மனநிலையோ!  துளியும் மாறவில்லை.   அக்கம்பக்கம் சொல்கிறார்கள் என்றால் தன் கணவனுமா சொல்வது! இந்தக் குழந்தையைப் போய்த் தன் கணவன் வெறுக்கிறானே என எண்ணி எண்ணி மனம் நொந்தாள் சாந்தி.  அங்கே ரவியோ தனிமையில் அமர்ந்து  "ஏன் இப்படி!" "ஏன் இப்படி!" எனத் தனக்குள்ளே குமுறிக் கொண்டிருந்தான்.  சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன், பிறகு விருட்டென எழுந்து தன் ஸ்டுடியோவுக்குள் போய்க் கதவைச் சாத்திக் கொண்டான்.  ரவிக்கு வீட்டிலேயே ஒரு ஸ்டுடியோ உண்டு. அங்கே போனால் மணிக்கணக்கில் படங்களை வரைந்து கொண்டு தன்னை மறந்துவிடுவான் ரவி.   இது வரை சந்தோஷமான நாட்களிலேயே அங்கே போய் அமர்ந்து படங்கள் வரைந்திருக்கிறான்.  இன்றோ முற்றிலும் மாறுபட்ட நிலை.  மனதை மிகவும் வேதனை செய்தது.

குழந்தைகள் என்றால் அவனுக்கு மிகவும் பிரியம்.  ஆகவே சிறு குழந்தைகளுக்கு என ஏதாவது செய்ய வேண்டும் என்றே இந்த அனிமேஷன் துறையைத் தேர்ந்தெடுத்தான்.  அவன் விருப்பத்திற்கேற்ப மனைவி வாய்த்ததும் சந்தோஷத்தின் உச்சிக்கே போய் விட்டான். இதெல்லாம் தான் செய்த புண்ணியம் என மகிழ்ந்தான்.  இப்போதோ!  என்ன பாவம் செய்துவிட்டு இப்படி எல்லாம் நடக்கிறது!  அந்தக் குழந்தைக்குத் தான் நான் என்ன செய்தேன்!  அது தான் இங்கே இருக்க வேண்டுமென்றால் இருக்கட்டுமே! அதற்காக என் அருமைக் குழந்தைகளை ஏன் கொல்ல வேண்டும்!  இந்த சாந்திக்கு இன்னமும் இது புரியவே இல்லையே!  என்னையே கொலையாளி ஆக்கப் பார்க்கிறாளே! ரவியின் கைகள் எதையோ வரைந்து கொண்டிருக்க மனமோ அலை பாய்ந்து கொண்டிருந்தது.


"படக்" எனக் கதவு திறக்கும் சப்தம்.  சப்தம் கேட்டுத் தூக்கி வாரிப்போட்டது ரவிக்கு.  திரும்பிப் பார்த்தான்.  சாந்தி வந்து கொண்டிருந்தாள்.  நல்லவேளையாக அந்தப் பிசாசு அவள் கைகளில் இல்லை.  அது தான் ரவிக்கு ஆறுதலையும் அளித்தது.  சாந்தியின் கைகளில் உணவுத் தட்டும், குடிக்க நீரும்.  ரவியைப் பார்த்தாள் சாந்தி.  எப்படி உற்சாகமாக இருப்பான்!  தன்னைப் பார்க்கும்போதே அவன் கண்களில் தெரியும் அந்த உல்லாச ஒளி இப்போது இல்லை என்பதையும் கவனித்துக் கொண்டாள்.  அவன் உடலோ இளைத்துத் துரும்பாகக் கிடந்தது. அடுத்தடுத்துக் குழந்தைகள் பிறந்து விளையாடிக் கொண்டிருக்கையில் கூட ரவியை நன்கு கவனிக்க முடிந்தது சாந்தியால். ஆனால் இந்த ஒருவருடமாக சுத்தமாய் ரவியைக் கவனிக்கவே முடியவில்லை.  இன்று தான் பல மாதங்களுக்குப் பின்னர் அவனை நன்கு கவனிக்கிறாள்.  வெட்டாத தலைமுடியோடும், பல நாட்களாய் வளர்ந்திருக்கும் தாடியோடும், கன்னமெல்லாம் கண்ணீர்க்கறை படிந்திருக்க, உடலே கருத்து, இளைத்து உருமாறிப் போய்விட்டான் ரவி.

இயல்பான பாசம் பொங்க அவனருகே வந்து அமர்ந்தாள் சாந்தி.  அவன் கைகளைப் பிடித்தாள்.  ரவி அவள் பக்கம் திரும்பவே இல்லை.  "கோபம் போலிருக்கு!" எனப் புன்முறுவல் ஒன்றைக் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்டாள் சாந்தி.  இப்போது தேவையானது ரவியின் உடல் நிலையே. அதுவும் அந்தப் பொன்னுக்கு வீங்கி வந்ததில் இருந்தே உடல்நிலை சரியில்லை என்பதோடு தன்னாலும் அவனைச் சரியாகக் கவனிக்க முடிந்ததில்லை என்பதை சாந்தி புரிந்து வைத்திருந்தாள்.  ஆகவே இப்போது இந்த நிமிஷம் ரவி தான் என் உலகம் என்பது போல் நடந்து கொண்டாள்.

அவனை அணைத்துக் கொண்டு தன்னருகே மடியில் சாய்த்த வண்ணம் ஒரு குழந்தைக்கு உணவு ஊட்டுவதைப் போன்ற பரிவுடன் உணவை அவனுக்கு ஊட்டினாள்.  முதலில் முரண்டு பிடித்த ரவியும் பின்னர் சாந்தியின் அன்பால் வசப்பட்டான்.  அவன் சாப்பிட்டதும் அவளும் அதிலேயே பங்கெடுத்துக் கொண்டு சாப்பிட்டாள்.  அப்படியே தரையில் இருவரும் படுத்தனர்.  தன்னை மீறிக் கண்களில் பொங்கிய கண்ணீரை மறைக்க முயன்றான் ரவி.  ஆனால் சாந்தியோ அவன் கண்ணீரைத் துடைத்துவிட்டு அவனை இறுக அணைத்துக் கொண்டு அவன் கண்களில் தன் இதழ்களால் மென்மையாக ஒற்றினாள்.  அணை உடைத்துக் கொண்டது.  இருவரும் தங்களையும் அறியாமல் இணைந்தனர்.  அங்கே கோபம், தாபம், வருத்தம், துக்கம் அனைத்தும் மறைந்து அன்பின் சங்கமம் ஏற்பட்டது.

Tuesday, April 29, 2014

ஈயம், பித்தாளைக்குப் பேரீச்சம்பழம் வேண்டாங்க! இங்கே கொடுங்க!

 

இந்தப் படம் ஏற்கெனவே போட்டுட்டேன்.  திரு இன்னம்புரார் வீட்டுச் சந்திப்பில் கலந்து கொண்டபோது அரிசி உப்புமா பண்ணி எடுத்துச் சென்றேன்.  அப்போ இந்தப் பெரிய உருளியில் செய்தேன்.  இதில் செய்தால் எத்தனை மணி நேரம் வைத்திருந்தாலும் களிம்பு ஏறிக் கைத்துப் போகாது.  கைக்காத வெண்கலம் என்றே சொல்வோம் இதை.  இவை அதிகமாய்க் கிடைக்குமிடம் முன்னெல்லாம் நாகர்கோயில்.  நாகர்கோயில் வெண்கலம் என்றும் சொல்வார்கள்.  என்னுடைய வெண்கலப் பானை, வெண்கல உருளி எல்லாமும் நாகர் கோவில் வெண்கலம் தான்.



படத்தில் முன்னால் தெரிவது பித்தளைத் தாம்பாளம். ஒரு லிட்டர் தண்ணீர் கொள்ளுமளவுக்கு ஆழமானது.  இதில் சாப்பாடுகள் வைக்க முடியாது.  பூஜை, தர்ப்பணம் இன்ன பிறவற்றிற்குப் பயன்படுத்துகிறோம்.  பின்னால் தெரியும் வெண்கலப்பானை கால்படி வெண்கலப்பானை என்று பெயர்.  ஆனால் நல்ல அரிசி என்றால் கால்படி போட முடியாது.  கால்படி என்பது மெட்ராஸ் வழக்கில் இரண்டு ஆழாக்கு ( 400) கொள்ளளவு.   தென்மாவட்ட வழக்கில் இரண்டு அரைக்கால்படி உழக்கால் போட்டால் கால்படி. அதே (400) கொள்ளளவு.  சொல்வது தான் மாறுபடும். பக்கத்தில் உள்ளது சின்ன உருளி. இதுவும் வெண்கலம் தான்.  இதிலும் உப்புமா, பொங்கல் போன்றவை செய்யலாம்.  குழம்பு வைக்கலாம். மேலுள்ளதிலும் குழம்பு வைக்கலாம்.  இனிப்புகள் செய்ய சர்க்கரைப் பாகு வைத்துக் கிளறலாம்.  அடிப்பிடிக்கும் பயம் இல்லாமல் கிளற முடியும்.  மேலுள்ள உருளியில் தான் முதல் முதல் கோதுமை அல்வாவும், மைசூர்ப்பாகும் செய்யக் கற்றுக் கொண்டேன்.


மாக்கல் சட்டி இது.  கல்சட்டி சமையல் என்றாலே தனி ருசி தான்.  இன்று கூட முருங்கைக்காய்க் குழம்பு இதில் தான் செய்தேன்.  கீரை மசிப்பதெனில் கல்சட்டி தான்.  ஊறுகாய்கள், உப்பு, புளி, மாவடு போட்டு வைக்கலாம்.  இதைவிடப் பெரிய கல்சட்டி எல்லாம் எங்க வீட்டில் இருந்தன.  என்னைக் கேட்காமலேயே எல்லாத்தையும் கொடுத்துட்டாங்க.  இது நான் ரொம்ப ஆசைப்பட்டுக் கும்பகோணத்தில் வாங்கினது.  வாங்கினதும் எண்ணெயில் மஞ்சள் பொடியைக் குழைத்துக் கல்சட்டியில் தடவி ஊற வைக்க வேண்டும்.  பின்னர் இரண்டு, மூன்று நாட்களுக்கு அரிசி கழுவிய கழுநீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும்.  அதன் பின் சமைக்கத் தொடங்கலாம்.  அடுப்பில் போட்டு அடியில் தாளிதம் செய்து குழம்பு வைக்கலாம்.  புளிக்காய்ச்சல், மிளகு குழம்பு, மாங்கொட்டைக் குழம்பு போன்றவை செய்யலாம்.  ருசியில் நிச்சயம் மாறுபாடு இருக்கும்.  அதுவும் குமுட்டி அடுப்பில் கல்சட்டி போட்டுச் செய்தால் அந்த ருசி தனி.


இடப்பக்கம் தெரியும் சின்ன ஜாடி உப்பு ஜாடி.  கல்யாணம் ஆகிக் குடித்தனம் வந்தப்போ ரங்கநாதன் தெரு பழைய ரத்னா ஸ்டோரிலே வாங்கியவை இவை.  இதிலே ஒன்று உடைந்து விட்டது.  மூடி இருந்தது.  அதை எங்க பையர் விளையாடி உடைத்தார்.  நடுவில்  நீலக்கலரில் இருப்பது அமெரிக்காவில் எங்க பெண் என் ஜாடிப் பைத்தியத்தைப் பார்த்துட்டு வாங்கிக் கொடுத்தாள்.  சின்னதில் இருந்து பெரிசு வரைக்கும் கிட்டத்தட்ட ஏழோ என்னமோ.  ஶ்ரீரங்கம் வருகையில் அங்கே உறவினருக்கு இரண்டைக் கொடுத்துவிட்டேன்.   இப்போ இதில் புளி போட்டு வைக்கிறேன்.  அன்றாடத் தேவைக்கான புளி இதில் இருக்கும்.   அடுத்து இருக்கும் உயரமான ஜாடி ராஜஸ்தானில் ஊறுகாய்க்கு என வாங்கினது.  அதுவும் பல வருடங்கள், பல ஊர்கள் கண்டுவிட்டது.  இப்போ மொத்தப் புளியையும் அதில் அடைத்து வைக்கிறேன்.



மாவடு போட்டு வைக்கவென சென்னை ஈவ்னிங் பஜார் கண்ணாடிக்கடையில் வாங்கிய பாட்டில் இது.  இன்னொன்றும் உண்டு.  அதில் போன வருஷத்து மாவடு இருக்கிறது.  இதில் இந்த வருஷத்து மாவடு.  ஊறுகாய்களைக்குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் வழக்கம் இல்லை.  மாசக்கணக்கா இருந்தாலும் வெளியேயே வைக்கிறேன்.  சரியான உப்பு, காரம், எண்ணெய், கடுகுப்பொடி போன்றவை போட்டுவிட்டால் பல வருஷங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது.  போன வருஷத்து ஆவக்காய் மிஞ்சி விட்டால் இந்த வருஷம் அதில் வெல்லத்தைப் பாகு வைத்துக் காய்ச்சி ஆற வைத்துச் சேர்த்து ஜீரகப் பொடியைப் போட்டு வைப்பேன்.  சப்பாத்திக்கு, பரோட்டாவுக்குத் தொட்டுக்க சைட் டிஷோடு இதுவும் துணையாக இருக்கும். நாளாக ஆக வெல்லத்தில் ஊறி இனிப்பு, புளிப்பு, காரம் சேர்ந்த கலவையாக சுவை தூக்கி அடிக்கும்.  இப்போ ரங்க்ஸுக்கு இனிப்புச் சேர்க்கக் கூடாது என்பதால் அந்தத் திப்பிச வேலை எல்லாம் பண்ணமுடியலை.  குமுட்டி அடுப்பு இன்னொரு நாள் போடுகிறேன்.


இன்னும் ஈயச் செம்பு இருக்கிறது.  அதில் தான் தினம் ரசம் வைக்கிறேன்.  வரும் விருந்தினருக்குத் தக்கவாறு ரசம் வைக்க வித்தியாசமான அளவுகளில் ஈயச் செம்பு, ஈய அடுக்கு இருக்கின்றன.  அவற்றைப் பின்னர் பகிர்கிறேன்.  வெளியே சின்ன ஈய அடுக்குத் தான் நாலு பேருக்கு ரசம் வைக்கும் அடுக்குத் தான் இருக்கு.  அதைப் படம் எடுக்க மறந்துட்டேன். 


ராஜலக்ஷ்மி உப்பை ஜாடியில் போட்டு வைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஒரு பதிவு எழுதி இருந்தார்.  அதன் பின்னூட்டங்களில் பாரம்பரியப் பாத்திரங்கள் குறித்த பேச்சு வர  அதைத் தொடர்ந்து நான் தினமும் புழங்கும் சில பாரம்பரியப் பாத்திரங்கள் இங்கே படங்களில்.  இப்போதைய நான் ஸ்டிக் உலகில் இவற்றின் பெயர் தெரிந்தவர் மிகக் கொஞ்சமாகவே இருப்பார்கள்.  இன்னும் பெரிய திருச்சூர் உருளியும் இருக்கிறது.  அதை எல்லாம் தினமும் புழங்க முடியாதென்பதால் பெட்டியில் இருக்கு.  வெளியே எடுத்தால் படம் எடுத்துப் போடறேன்.

தாத்தாவுக்கு மிக தாமதமான அஞ்சலி! :(

தமிழ்த்தாத்தாவின் மறைவுநாளுக்கான அஞ்சலிப் பதிவை ஷெட்யூல் பண்ணி வைச்சிருந்தேன்.  ஆனால் என்ன காரணமோ அது வெளியாகவே இல்லை.  நானும் கவனிக்காமல் இருந்துட்டு இன்னிக்குத் தான் பார்க்கிறேன்.  ரொம்பவே வெட்கமாக இருக்கு!:(  மன்னிக்கவும். :(


தாத்தா, தாமதமாக அஞ்சலி செலுத்தும் என்னை மன்னீப்பீர்களாக!