எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, May 25, 2006

48. அனுபவம் புதுமை.-2

My thoughtsஒரு வழியாகத் தலைதீபாவளி முடிந்து நாங்கள் இரண்டு பேரும் சென்னைக்குப் போனோமா, அதன் பிறகு ஒரு வருடத்திற்குப் பின்னால் என் பெண் பிறந்தாள். நான் அதற்காக மதுரை வந்து விட்டேன். அப்போது எல்லாம் பிரசவ விடுமுறை என்பது வெறும் 2 மாதம் தான். இப்போ போல 6 மாதம் எல்லாம் கிடையாது. ஆகவே நான் 2மாதம் முடிந்ததும் உடனே சென்னை திரும்பி வேலையில் சேரவேண்டும். 61-வது நாள் வேலையில் இருக்க வேண்டும். ஆகவே என் கணவர் என்னை வரச்சொல்லவும் ஆரம்பித்தது பிரச்னை. என் மாமனார் ஒரு நாள் பார்க்க, என் அப்பா ஒரு நாள் பார்க்கக் கடைசியில் என் கணவர் வேறு ஒரு நாள் முன்னதாகப் பார்த்து நேரே சென்னைக்கு வரும்படியும், கிராமத்தில் அபோது என் மாமியார் இல்லாத காரணத்தாலும், தற்சமயம் அவசரம் என்பதாலும் சென்னைக்கு நேரே வரச் சொன்னார். நாங்களும் சரி என்று அதே கொல்லம் எக்ஸ்பிரஸில் சென்னை செல்ல டிக்கெட் எடுத்தோம். பகல் நேரம் என்பதால் இரவு 7 மணிக்குள் சென்னை போய் விடலாம் என்று நினைப்பு. அப்போது ரெயில் காலை 6 மணிக்குக் கிளம்ப வேண்டும். ஆனால் கிளம்பவே இல்லை. அது மனதுக்குள் ஹா, ஹா, ஹா, என்று சிரித்திருக்கிறது. என் பெண்ணும் அப்போது சிரிக்க ஆரம்பித்திருந்தாள். ஆகவே நாங்கள் எல்லாரும் மெய்ம் மறந்திருந்தோம். வீட்டிற்கே முதல் பெண் குழந்தை. எனக்குப் பிறகு எங்கள் அப்பா வழியில் பெண்களே கிடையாது. என் பெரியப்பா(சித்தப்பாவே இல்லை அப்பா வழியில்) பெண்கள் இருவருக்கும் பையன்கள் தான். ஆகவே அவள் அழுதால் கூட எல்லாரும் சேர்ந்து அழுவோம். அந்த அமர்க்களத்தில் வண்டி கிளம்பவில்லை என்றே கவனிக்கவில்லை. வழி அனுப்ப என் தம்பி வந்திருந்தான். அவன் விளையாட்டாக இஞ்சின் போடவில்லை, சித்தரஞ்சன் போயிருக்கிறார்கள் என்றான். அப்போது திடீரென்று வண்டி கிளம்பிப் பின்னாலே போனது. சரி, பின்னாலே போய்ப் போகலாம் என்றாலும் மதுரை ஸ்டேஷனில் வழியே இல்லையே. குழம்பினோம். கடைசியில் சில அதிகப்படியான பெட்டிகள் இணைக்கப்பட்டு ஒரு வழியாக ஒரு மணி நேரம் தாமதமாக வண்டி கிளம்பியது. அப்போதே என் பெண் நினைத்து விட்டாள். நாம் எழும்பூரில் எல்லாம் போய் இறங்கக் கூடாது. நம் அப்பா இந்திய அரசின் பாதுகாப்புக் கணக்குத்துறை அதிகாரி. நாம் இறங்கினால் செண்ட்ரல் மாதிரி பெரிய ஸ்டேஷன்தான் போக வேண்டும் என்று. அது தெரியாமல் நாங்கள் பாட்டுக்கு ஜாலியாகப் பேசிக்கொண்டு வந்தோம். ஒரு மணி நேரம் தாமதத்தையும் ஈடு செய்து வண்டி சரியான சமயம் விழுப்புரம் வந்தது.
அப்பாடா, இன்னும் சற்று நேரம் தான், சென்னை வந்து விடும். நாளை ஞாயிறு, வீட்டில் இருந்து விட்டுத் திங்கள் அன்று வேலையில் சேரலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். மறுபடி வண்டி கிளம்பவில்லை. இம்முறை என்ன ஆயிற்று? பெட்டி ஏதானும் பெரம்பூரில் இருந்து வர வேண்டுமா என்று கேலி பேசிக் கொண்டு அங்கே நடைமேடையில் நின்றிருந்தவரைப் பார்த்துக் கேட்டோம். ஏன் வண்டி கிளம்பவில்லை என்று? அவர் சொன்னார் "வண்டி இப்போது கிளம்பாது" என்று. ஏன் என்றோம். அதற்குள் ஸ்டேஷன் மாஸ்டர், வண்டியின் டிரைவர், கார்டு மூன்று பேரும் பேசிக் கொண்டு வருவது கண்ணில் பட்டது. உடனே அம்மா கத்தக்கத்த கீழே குதித்தேன். அவர்களிடம் போய் விவரம் கேட்டேன். அது டிசம்பர் மாதம். தமிழில் கார்த்திகை. நல்ல மழை நாள்.
டிரைவர் சொன்னார் "வெட்டாறு உடைத்துக் கொண்டது" அதனால் தண்டவாளம் எல்லாம் தண்ணீர். மெயின் லைனில் போன வண்டி எல்லாம் திரும்பித் திருச்சி போகிறது. ஆகவே இந்த வண்டி போக வழியும் இல்லை, வெள்ளமும் அதிகரிக்கிறது" என்றார். உடனே அப்பாவிடம் சொல்ல ஒரு நிமிஷம் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. மறுபடி நானே போய் மாற்று ஏற்பாடு ஏதாவது உண்டா என்று கேட்க அவர்கள் எங்கள் வண்டி திருச்சிக்குத் திரும்பப் போவதாகவும், அங்கே போய்த் தான் கேட்க வேண்டும் என்றும் சொன்னார். இதற்குள் மற்றொரு உடைப்பின் மூலம் விழுப்புரம்-திருச்சி கார்டு லைனிலும் தண்ணீர் என்று தகவல் வந்து விட்டது. அறிவிப்புப் பலகையில் கொட்டை எழுத்தில் இஷ்டம் உள்ளவர்கள் திருச்சி போகலாம் என்றும், அங்கே போய் மாற்று ஏற்பாடுகள் செய்யத் தகவல் கொடுப்பதாகவும் அறிவிப்புச் செய்தார்கள். மைக் மூலமும் அறிவிப்பு வந்தது. எங்கள் வண்டி திரும்பத் தயாராக இருந்தது. வழியில் எல்லாம் தண்ணீர் என்பதால் முன்னால் பைலட் வண்டி,, பின்னால் முதலுதவி வண்டி எனப் பின் தொடர எங்கள் ஊர்வலம் ஆரம்பித்தது. (அப்போதே பாருங்கள், எனக்கு எவ்வளவு ராஜ மரியாதை, பின்னாளில் நான் வ.வா.சங்க நிரந்தரத் தலைவலி ஆகப் போகிறேன் என்று தெரிந்து கொண்டார்கள்.)வழியெல்லாம் மக்கள் கூட்டம், நிஜமாகவே. சிலர், நாளை தினத்தந்தியில் 3,000/- பேர் சாவு என்று வரப் போகிறது பார் என்றும் கத்தினார்கள். அஞ்சா நெஞ்சங்களான அந்த வண்டியில் இருந்த நாங்கள் யாரும் கவலையே படவில்லை. என் பெண்ணிற்கோ அப்போத்தான் விளையாட நல்ல மனசும் வந்தது. தொந்திரவு கொடுக்காமல் விளையாடிக் கொண்டிருந்தாள். சாயந்திரம் 5 மணிக்கு விழுப்புரத்தில் லிருந்து கிளம்பிய வண்டி இரவு 12 மணிக்குத் திருச்சி போய்ச் சேர்ந்தது. திருச்சியில் கால் வைக்க இடம் இல்லாமல் கூட்டம். மதுரையில் இருந்தும், மற்ற இடங்களில் இருந்தும் திரும்பிய எல்லா வண்டிக் கூட்டமும் இருந்தது. அந்தக்கூட்டத்தில் எங்களை நாங்கள் தொலைக்காமல் இருந்ததே பெரிய விஷயம். மாற்று வண்டி பற்றி விசாரித்தோம். இரண்டு வண்டிகள் பிராட்கேஜில் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாகவும் முதலில் பதிவு செய்யப்பட்டவர்கள் எழுதி வாங்கலாம் எனவும் சொல்லவே, நானும் அப்பாவும் போய் எழுதி வாங்கி வந்தோம். அப்பா என்னுடன் ஒரு போர்ட்டர் வைத்து, அம்மா குழந்தையுடன் போய் ஏறும்படியும் தான் ஏதாவது சாப்பிட வாங்கி வருவதாகவும் சொன்னார். சரி என்று நாங்களும் போனோம். என்னுடைய சூட்கேஸ், மற்ற சாமான்களைப் போர்ட்டர் எடுத்துக் கொள்ள நான் குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டேன். போர்ட்டரின் பின்னால் வேகமாகப் போனேன். எங்கள் வண்டி இருக்கும் நடைமேடைக்கு அருகில் வந்து பார்த்தால் திடீரென்று போர்ட்டரைக் காணவில்லை. அம்மா அபோது தான் மெதுவாக வந்தார். அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னதும் பதறி விட்டார். ஏனென்றால், என்னுடைய நகை, வெ.பா, மற்றும் குழந்தை நகை, பட்டுப்புடவைகள் எல்லாம் ஒரே சூட்கேஸில் இருந்தன. நல்ல காலம் சூட்கேஸில் என் கணவர் பெயர் இருக்கும். அப்பா வருவதற்குள் இடத்தைக் கண்டு பிடித்து மிகுதி சாமான்களுடன் அம்மாவை உட்கார வைத்து விட்டு அங்கே என்கொயரியில் இருந்தவரிடம் விஷயத்தைச் சொன்னதும் முதல் நடை மேடைக்குத் தகவல் சொல்லி ரெயில்வே போலீஸை வரவழைத்தார். அவரிடம் போர்ட்டரின் அடையாள எண், மற்றும் அவரின் அடையாளம் எல்லாம் சொன்னேன். உடனே அப்போது வழக்கத்தில் இருந்த வாக்கி-டாக்கியில் விஷயம் போய் வெளியில் ஒரு வண்டியில் சாமானைப் போர்ட்டர் ஏற்றும்போது கண்டுபிடித்துவிட்டார்கள். அவன் வெளியில்தான் வரச் சொன்னார்கள் என்று சாதிக்க அவனை அழைத்துக் கொண்டு நாங்கள் இருந்த இடத்திற்கு வந்தார்கள். இதற்குள் அப்பாவும் விஷயம் தெரிந்து வரவே எங்கள் இருவரையும் பார்த்த போர்ட்டர் பதில் சொல்ல முடியாமல் நின்றான். பிறகு பெட்டியை உள்ளே ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகம் கொண்டு போய்ப் பெட்டியில் உள்ள சாமான் லிஸ்ட் கேட்டார்கள். நான் சொல்லவே பெட்டிச் சாவியைக் கொண்டு என்னையே திறக்கச் செய்து சரி பார்த்து அனுப்பினார்கள். ஒரு வழியாகத் திருச்சியை விட்டுக் காலை மூன்று மணிக்குக் கிளம்பின வண்டி சாயந்திரம் 6 மணிக்கு சென்னை செண்ட்ரல் வந்தது. அதற்குள் என் கணவரும், என் அண்ணாவும் யார் மதுரை போய்ப் பார்ப்பது என்று குழப்பத்தில் இருந்தார்கள். அப்போது எல்லாம் தொலைபேசி வசதி நடுத்தரக்குடும்பங்களில் அபூர்வம். அதற்குள் 10-வது முறையாக எழும்பூரைத் தொடர்பு கொண்ட என் தாய் மாமா இந்த மாதிரி ஒரு வண்டி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில் பார்த்து விட்டு வரவில்லை என்றால் இரவு என் அண்ணா மதுரை போய்ப் பார்க்கட்டும் என்று சொல்லி இருக்கிறார். பெரியவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் இருவரும் எதற்கும் பார்க்கலாம் என்று செண்ட்ரல் வந்திருந்தனர். வண்டியில் இருந்து இறங்கியதும் என் கணவரின் அசாதாரண உயரத்தில் இருந்தே அவர் வந்திருப்பதை நான் தெரிந்து கொண்டேன். அப்போது எழுந்த எங்கள் உணர்ச்சிகளுக்கு என்ன சொல்வது? பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்பது தான் பொருந்தும். இன்னும் இருக்கிறது. எங்கள் டிரான்ஸ்பரில் நாங்கள் ஊர், ஊராகப் போனது எல்லாம். கொஞ்சம் கொஞ்சமாகத் தருகிறேன். அப்போது தான் பதிவு எண்ணும் கூடும். என்ன சொல்றீங்க? இல்லாவிட்டால் பதிவு தமிழில் எழுத ஆரம்பித்து 2 மாதம் கூட இல்லை. 48 பதிவு போட்டு விட்டேனே? இப்படியாகத்தானே என் பெண் தான் முதலில் வரும்போதே பெரிய ஸ்டேஷனில் தான் இறங்கி வருவேன் என்று பிடிவாதம் பிடித்து ரெயிலிடம் சொல்லி ஏற்பாடு செய்திருக்கிறாள்.

No comments:

Post a Comment