எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 21, 2006

45. கோபாலகிருஷ்ணன் -2

கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. மலைப் பாதை. சில இடங்களில் உயரம் 6,000 அடி இருக்குமென்று நினைக்கிறேன். கூடவே வேண்டுமானாலும் இருக்குமே தவிரக் குறையாது. காபிச் செடிகள் தவிர மிளகுக் கொடிகள், முந்திரிச் செடிகள், பலா மரங்கள், பாக்கு மரங்கள் எனப் பலவகைப்பட்ட மரங்களும் செடிகளும் நிறைந்து காட்டுக்கே உரித்தான ஒரு தனி மணத்தோடு திகழ்ந்தது. மிளகுக்கொடிகள் பாக்கு மரங்களில் ஏற்றி விடப்பட்டிருந்தது. ஆங்காங்கே சில கிராமங்களில் சிறுவர்கள் வண்டி வரும் சப்தத்தை வைத்து முந்திரிப்பழம், பலாச்சுளை என்று எடுத்துக் கொண்டு ஓடிவந்தனர். ஒரு பையனிடம் பலாச்சுளைகள் வாங்கிக் கொண்டோம். நம் மூதாதையர் நடமாட்டமும் இருந்தது. இனம் தெரியாத பறவைகளின் கூச்சல் சப்தம். பறவைகள் நகரத்தில் வாழும் பறவைகள் என்றால் அவைகள் கூச்சலில் நான் இன்னதென்று கண்டு பிடிப்பேன். காட்டுப் பறவைகளின் வித்தியாசமான கத்தலில் கூர்ந்து கவனித்து இது இந்தப் பறவை என்று கண்டுகொள்ளவேண்டும். அதுவும் ஒரு புது முயற்சிதான்.

சில இடங்களில் பெரிய புலியின் படத்தைப் போட்டுக் காட்டுக்குள் நுழையத் தடை விதித்திருந்தார்கள். ஊட்டியிலும் சரி, இங்கும் சரி அப்படிப் பயப் படுத்தும்படிப் புலி, யானை நடமாட்டம் எதுவும் பார்க்கவில்லை. சாதாரணமாகக் கல்லாறு பகுதியிலும், பஃறுளியாறு பகுதியிலும் யானைகள் வந்து ரெயிலையோ அல்லது பேருந்து மற்றும் மேலே செல்லும் வண்டிகளையோ வழி மறிப்பதாகச் சொல்வார்கள். என் அதிர்ஷ்டம் நான் போன போது எல்லாம் அவை முதல் நாளே வந்து விட்டுப் போயிருக்கும்.கோத்தகிரியில் இருந்துக் கோடநாடு செல்லும்போது ஒருமுறைக் குட்டி யானை ஒன்றைப் பழக்குவதற்குப்பிடித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். குட்டி யானையைச் சங்கிலியால் கட்டிச் சுற்றிலும் 4 பெரிய பழகிய யானைகள் வழி நடத்தின. கூட மூன்று அல்லது நான்கு பாகர்கள் அல்லது காட்டிலாகா ஆட்கள். குட்டி யானை உடம்பெல்லாம் செம்மண்ணால் அப்பியிருந்தது. குழியில் இருந்து வெளியில் வரப் போராடி இருக்க வேண்டும். அது துதிக்கையைத் தூக்கித் தன் தாயை நினத்தோ என்னவோ ஓலமிட்டதும் கூடவே வந்த யானைகள் தங்கள் துதிக்கையால் அதை தொட்டு சமாதானம் செய்யும் முறையில் தொட்டதும் பார்த்த போது பாவமாக இருந்தது. நமக்கு மிருகங்களைப் பார்த்தால் வேடிக்கை. ஆனால் அவற்றுக்கு எப்படி? புரியவில்லை.

மலைப்பாதை முடிந்ததும் சற்று ஏற்ற இறக்கமான வெளியில் சற்று தூரத்தில் சிருங்கேரி வரும் என்று அறிவிப்புப் பலகை கண்ணில் பட்டது. பகல் 2 மணி இருக்கும் சிருங்கேரி வந்த போது. ஊர் சின்னதுதான். மடத்தின் காரியாலய வாயிலில் எங்களை இறக்கிவிட்டு விட்டு டிரைவர் மங்களூர் திரும்பினார். மடத்தின் காரியாலயத்தில் அறை ஏற்பாடு செய்து கொண்டோம். தங்கும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அறை தருகிறார்கள். நாங்கள் இரண்டு பேர்தான் என்பதால் ஒரு பெரிய அறையில் 2 கட்டில் போட்டுக் கூட யாராவது இருந்தால் படுக்கப் பாய், தலையணை என்று வசதிகளோடு இருந்தது. கழிப்பறை வசதியும் சேர்ந்தே இருந்தது. குளிக்க வெந்நீர் கேட்பவர்களுக்கு மடத்தில் இலவசமாகத் தருகிறார்கள். காபி, டீ, காலை ஆகாரம் போன்றவை அறையிலேயே நாம் கேட்டால் கொண்டு தரும்படிப் பணியாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு நாமாக ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்கின்றனர். வற்புறுத்திக் கேட்பது இல்லை. அறை வாடகை ஒரு நாளைக்கு 60 ரூபாய் தான். 2 அல்லது 3 நாளைக்கு மேல் யாரையும் தங்க அனுமதிப்பது இல்லை. அனேகமாக எல்லாருக்கும் அறை கிடைத்து விடுகிறது. தனியார் விடுதிகள் இருந்தாலும் பெரும்பாலும் எல்லாரும் மடத்தின் அறைகளையே விரும்புகிறார்கள். சுத்தமாகவும் உள்ளது. எங்கள் அறை நல்ல வேளையாக கீழ்த் தளத்திலேயே இருந்தது. அதற்குள் மணி 2-30 ஆகி விட்டது. மடத்தில் 2-15-க்குள் சாப்பாடு முடிந்து விடும். ஆகையால் வெளியே போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டோம். ஸ்ரீமஹாஸ்வாமிகள் தரிசனம் மாலை 5 மணியில் இருந்து ஆரம்பிப்பதாகச் சொன்னார்கள்.ஆகவே அதற்குத் தயார் ஆனோம்.

5 comments:

 1. எனக்கும் ரொம்ப நாளா சிருங்கேரி போனும் ஆசை. இந்த தடவை இந்தியா வரும்போது கட்டாயம் போகனும்.

  //இங்கும் சரி அப்படிப் பயப் படுத்தும்படிப் புலி, யானை நடமாட்டம் எதுவும் பார்க்கவில்லை. //

  நீங்கள் அங்கு வருவதால் எதற்கு ரிஸ்க் எடுக்கனும் என்று வராமல் இருந்து இருக்கலாம்

  ReplyDelete
 2. உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அது எப்படி அவ்வளவு சரியாச் சொல்றீங்க?

  ReplyDelete
 3. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீதா!!!.

  ReplyDelete
 5. ரொம்ப நன்றி, நன்மனம். சீக்கிரம் பதிவு ஆரம்பிக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

  ரொம்ப நன்றி, இளா, முதல் முறை வந்ததற்கும், பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கும்.

  ReplyDelete