எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 25, 2007

217. அலை பாயுதே கண்ணா!

இந்த மாதம் 8-ம் தேதி கும்பகோணம் போனதும் ஹோட்டலில் இருந்து கிளம்பி திருக்கருகாவூர் போக ஆட்டோ பிடித்தோம். போகிற வழியில் தான்
ஊத்துக்காடு என்பதாலும், அங்கே உறவினர் இருப்பதாலும் அங்கே போகிற
எண்ணமும் இருந்தது. ஊத்துக்காட்டில் உறவினர் இருந்தாலும் இவ்வளவு நாள் நான் போனதில்லை. கும்பகோணத்திலேயே இப்போத் தான் சில வருடங்களாய்த் தங்கிக் கொண்டு கோவில்கள் பார்க்கப் போகிறோம். முன்னால் எல்லாம் மாமியார், மாமனார் ஊரில் இருந்த சமயம் ஊருக்குப் போகும்போது ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து அப்படியே டவுன் பஸ் பிடித்து ஊருக்குப் போனால் திரும்ப நாங்கள் இருக்கும் ஊர் திரும்பும் சமயம் தான் மறுபடி கும்பகோணம் ரெயில்வே ஸ்டேஷனைப் பார்க்க முடியும். அதுக்குப்பிந்தைய நாட்களில் இரவுப் பேருந்தில் கிளம்பிக் காலை கும்பகோணம் போய் அங்கிருந்து ஆட்டோ வைத்துக் கொண்டு ஊருக்குப் போய்க் குலதெய்வ வழிபாட்டை முடித்துக் கொண்டு திரும்ப ஒரு மணிக்குக் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் சென்னை
பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்புறம் பையனோ, பெண்ணோ வந்தால் அவங்களுக்காக வாடகைக் கார் ஏற்பாடு செய்து போய் விட்டு வருவோம். இப்போச் சில வருடங்களாய் ஒரு 2 நாளாவாது தங்கி எல்லா இடமும் பார்க்கலாம் என்று பார்த்து வருகிறோம்.

ஊத்துக்காடு அந்த ஊர்க்கோவிலுக்கு மட்டுமில்லாமல் "வேங்கடகவி"யின்
பாடல்களுக்கும் பிரசித்தி பெற்றது. அவருடைய பாடல்கள் எல்லாம் சுத்தத்
தமிழில் ஆனவை. அலை பாயுதே கண்ணா, பால் வடியும் முகம் நினைந்து,
தாமரை பூத்த தடாகமடி, ஆடாது அசங்காது வா," போன்ற பாடல்களின்
வரிகள் எல்லாருடைய உள்ளத்தையும் தொடும். அப்படி உருகி, உருகிக்
கண்ணனின் அழகில் கரைந்தவர் அவர். தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் போன்ற மும்மூர்த்திகளின் காலத்துக்குச் சற்று முன்னால் இருந்தவர் என்றார்கள். என்றாலும் இவரின் பாடல் இவருக்குப் பின் ஆறு தலைமுறை வரை பிரபலம் அடையவில்லை. திருமணமே
செய்து கொள்ளாமல் கண்ணனின் வழிபாடே தனக்கு எல்லாம் என்ற
நினைப்பில் வாழ்ந்து வந்த இவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஆறாவது
தலைமுறையில் பிறந்த "திரு நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர்"
என்பவரால்தான் இவரது பாடல்கள் பிரசித்தி அடைய ஆரம்பித்தன.
இன்றைக்குப் பரத நாட்டிய அபிநயத்தில் இவரது பாடல்களுக்குப் பிடிக்கும்
அபிநயங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும். இவர் பாடல்களின் தொகுப்பை பம்பாய் சகோதரிகள் சி.சரோஜா, சி. லலிதா இருவரும் கொடுத்திருக்கிறார்கள்.
கண்ணன் அழகு பெரிதா?, தமிழின் அழகு பெரிதா? அல்லது பாடியவரின் உள்ளம் அழகா என்று ஒரு பட்டி மன்றமே நடத்தலாம். இவருக்குப் பின் வந்த தியாகராஜரின் சமகாலத்தவரான கோபால கிருஷ்ண பாரதியாரின் பாடல்களும் இப்படித்தான் அதிகம் பிரபலம் அடையவில்லை. ஏன் என்றும்
புரியவில்லை. சங்கீத வித்வான்கள் செய்ய வேண்டிய பணி இது. ஊத்துக்காட்டுக்குக் கிருஷ்ணர் எப்படி வந்தார் என்பதைப் பார்ப்போம்:

காமதேனுவின் பெண்ணான நந்தினி பூலோகத்தில் கண்ணனைக் கும்பிட்டு
வந்தபோது அவனின் காளிங்க நர்த்தனத்தைப் பற்றிக் கேள்விப் பட்டுத்
தனக்கும் அந்தத் தரிசனம் கிடைக்குமா என்று ஏங்குகிறாள். அவள் செய்த
தவத்தாலும், பூஜைகளாலும் கவரப்பட்ட கண்ணன் அந்த ஊரில் இருந்த ஒரு
மடுவில் தானாகச் சுயம்புவாகத் தோன்றுகிறான், அதுவும் எப்படி?
நந்தினியின் ஆசைப்படியே காளிங்க நர்த்தனமாடிய நிலையிலேயே. அப்போது கண்ணனைக் கண்ணாரக் கண்டவர்களில் நாரதரும் ஒருத்தர் என்று ஸ்தலபுராணத்தில் இருப்பதாய்ச் சொல்கிறார்கள். ஸ்தலபுராணம் புத்தகம் கிடைக்கவில்லை. கண்ணன் அங்கே காட்சி அளித்து விட்டுச்
சில நாட்களில் அப்படியே அந்த மடுவில் அழுந்தி விடுகிறான். பின்னாட்களில் அங்கே கண்ணன் இருப்பதைத் தற்செயலாகக் அறிந்த
வேங்கடகவி அங்கே கண்ணனுக்கு ஒரு கோயில் இருந்ததை அறிந்து கோவிலில் அவனைப் பிரதிஷ்டை செய்கிறார். பூஜா முறைகளையும் ஏற்படுத்துகிறார்.

மூலஸ்தானத்தில் கண்ணன் காளிங்க நர்த்தன வடிவில் காட்சி அளிக்கிறான்.
தானாகத் தோன்றியவன் ஆதலால் எந்தச் சிற்பி வடிவமைத்தான் என்பது
புலனாகவில்லை. பல காலங்களுக்கும் முந்தையது என்று மட்டும் சொல்ல
முடிகிறது. குழந்தைக் கண்ணன் தன் இடது காலைக் காளிங்கனின் தலையில் வைத்து
வலது காலைத் தூக்கிக் கொண்டு இடது கையால் காளிங்கனின் வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். மிக மிக அற்புதமான வடிவம். இடது காலுக்கும், காளிங்கனின் தலைக்கும் நடுவில் ஒரு சின்னப் பேப்பர் போகலாம் போல் இடைவெளி, பட்டாச்சாரியார் காட்டினார். பின் இடது கையால் வாலைப் பிடிக்கும் போது இடது கைக் கட்டை விரல் மட்டும் தான் வாலின் முன்னால் உள்ள பகுதியைப் பிடித்துக் கொண்டு இருக்கிறது. பாக்கி நான்கு விரல்கள் பின்னால் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. வலது காலில் ஒரே கறுப்புக்
கறுப்பாகத் தழும்புகள். பெருமாளின் வேஷ்டியை விலக்கிக் காட்டினார்
பட்டாச்சாரியார். வலது கால் ஆடுதசையில் உள்ள அந்தத் தழும்புகள்
காளிங்கன் தன் வாலினால் கண்ணனை அடித்ததால் உண்டானதாம். உங்களுக்கும், எனக்கும் எப்படித் தழும்பு உண்டாகுமோ அப்படியே உண்டாகி இருந்தது, இந்தச் சிற்ப அதிசயத்தில். சன்னதி நாங்கள் போன பின் தான் திறந்தார்கள். . பராமரிப்பு நன்றாக உள்ளது. மிகச் சுத்தமாய் வைத்திருக்கிறார்கள். பட்டாச்சாரியாரும் பிரதிபலன் எதிர்பாராமல் கண்ணனுக்குச் சேவை செய்கிறார்.

பின் எங்கள் உறவினர் வீட்டுக்கு அருகில் உள்ள வேங்கடகவியின் இல்லம் இருந்த இடத்தைப் பார்த்தோம். தற்சமயம் யாரோ ஓரிருவர் அவர்கள் பரம்பரையில் இருப்பதாயும், இந்த இடத்தைத் தாம் வைத்திருப்பதாயும் எங்கள் உறவினர் சொன்னார். இப்போது காய்கறித் தோட்டமாக இருக்கும் அந்த 20க்கு 60 உள்ள இடம் அகலம் அதிகம் இல்லாமல் நீள வாட்டத்தில் உள்ளது. ஒரு காலத்தில் கோவிலுக்கு மிக அருகாமையில் இருந்த வேங்கடகவி இந்த வீட்டிலே தான் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு கவிகள் இயற்றி இருப்பார் என நினைக்கும்போது அவருக்கு வாரிசு யாரும் இல்லையே என்ற நினைப்பும் தோன்றியது. பின் நாங்கள் அங்கிருந்து திருக்கருகாவூர் சென்றோம்.

20 comments:

 1. புதுப் புது விஷயங்கள்.. புதுப் புது மனிதர்கள்.. இறையருளாளர்கள் பற்றி நிறைய தெரியாத விஷயங்கள் சொல்கின்றீர்கள் மேடம்..

  குமுதம், ஆனந்த விகடனில் வந்து ஆன்மீகத் தொடருக்கு இணையாக இருக்கிறது..

  ReplyDelete
 2. ஊத்துக்காடு- வேங்கடகவி..
  எங்கோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று படித்தேன்.
  இவ்வளவு பக்கத்தில் இருந்தும் போய் பார்க்கமுடியவில்லை.
  தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 3. ம்ஹ்ம்...டெல்லியில் உக்காந்துக்கிட்டு நம்ம ஊர் பேரல்லாம் பாக்குறப்போ ஆசயாத்தான் இருக்கு....
  பாப்போம்...இனிமே ஊருக்கு போனா பயண கட்டுர டைரியோடதான் போகணும் போல..

  சென்ஷி

  ReplyDelete
 4. உங்க விளக்கம் கண்ணனை கண் முன் நிறுத்தி விட்டது, எனக்கு உடனே அங்கு போக வேண்டும் போல் இருக்கிறது:)

  ReplyDelete
 5. கண்ணனை காண்பதெப்போ, கார்மேக வண்ணனுக்கென் மேல் என்ன வேருப்போ!!!!

  என்று அவன் தரிசனம் கிடைக்குமோ தெரியவில்லை. பார்க்கலாம்.

  வீக்கெண்ட் பிளான், திருவஹீந்திபுரம், பாடலீஸ்வரர், விருதாசலம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை தரிசனம் கிடைத்தது...திருவஹீந்திபுரத்தில் தங்களை நினைத்தேன்.....

  ReplyDelete
 6. நாம் அறியாத பல விஷயங்கள் இந்தப் பூமியில் உள்ளன கார்த்திக், இதில் நான் தெரிந்து கொண்டது என்னமோ ரொம்பக் கொஞ்சம் தான்.

  ReplyDelete
 7. திருக்கருகாவூர் உங்க ஊருக்குக் கிட்டேன்னு என் கணவர் சொன்னார். அங்கே இருந்து ஒரு பத்து நிமிட தூரத்தில் உள்ளது ஊத்துக்காடு. ஆகவே கட்டாயம் போய்க் கண்ணனைச் சேவித்து வாருங்கள்.

  ReplyDelete
 8. சென்ஷி, அதனால் என்ன? நாங்களும் ராஜஸ்தான், குஜராத்துன்னு இருக்கும்போது கும்பகோணம் வரும்போதெல்லாம் எங்கேயும் போக முடிந்ததில்லை. இப்போத் தான் போனோம். நீங்களும் கட்டாயமாய்ப் போகலாம்.

  ReplyDelete
 9. கட்டாயம் தரிசிக்க வேண்டிய தலம் வேதா!

  ReplyDelete
 10. ரொம்பச் சரி, மதுரையம்பதி, பாடலீஸ்வரரைத் தரிசிக்க முடியவில்லை. மற்ற ஊர்களுக்கோ போகவே முடியலை. அதனால் தான் திருவஹிந்திபுரத்தில் மட்டும் என்னோட நினைப்பு வந்திருக்கு. ம்ம்ம்ம், நான் இன்னும் திருவஹிந்திபுரம் பத்தி எழுதலை. சீக்கிரம் எழுதறேன், சரியான்னு பார்த்துக்குங்க!

  ReplyDelete
 11. எங்க ஊருக்கு அருகில் இருக்கும் எங்களுக்கு தெரியாத பல விசயங்களை எங்களூக்கு தெரிவித்து உள்ளீர்கள். ஊர் பெயர் கேள்விப்பட்டு இருக்கேன். அவ்வளவு தான்.

  ReplyDelete
 12. கீதா!
  ஊத்துக்காட்டார்;கோபாலகிருஸ்ண பாரதி போன்றோர் தியாகையருக்கு முற்பட்டவராகவும்;சமகாலத்தவராகவும் இருந்து தமிழில் பாடல்கள் புனைந்தும்
  தமிழகத்தில் ஏன்?பிரபலமாகவில்லை எனும் கேள்வி என்னுள் எழும்;
  பெரியோர் வாழ்ந்த மண்ணை மிதிக்கவும் கொடுப்பனவு வேண்டும்.
  நல்ல பதிவு!

  ReplyDelete
 13. சிவா, நானும் உங்க ஊர்ப்பக்கம்தான் கல்யாணம் ஆனதுக்கு அப்புறத்திலே இருந்து :D, அப்புறம் உங்களோட ரொம்ப நாள் கழிச்சு வந்த வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 14. யோகன் - பாரிஸ், ஊத்துக்காடு வேங்கடகவிக்காவது ஒரு நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் கிடைத்தார். இந்த கோபால கிருஷ்ண பாரதிக்கு அப்படி யாருமே கிடைக்கலை. :(

  ReplyDelete
 15. புதியாய் அறிந்து கொண்டேன். நன்றி..

  //நானும் உங்க ஊர்ப்பக்கம்தான் கல்யாணம் ஆனதுக்கு அப்புறத்திலே இருந்து//

  ஆனாலும் மதுர மதுரைதான்னு சொல்லனும்னு தோனுச்சு.

  ReplyDelete
 16. hihihi,மணிப்ரகாஷ், பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே!

  ReplyDelete
 17. அப்புறம், உடம்பு எப்போவும் போல் நடந்தாக் கூடவே வருது, அதான் பிரச்னை! :D

  @மணிப்ரகாஷ், கொஞ்சம் காலில் வலி, வீக்கம், ஏற்கெனவே உள்ளது தான் புதிதாய் ஒன்றும் இல்லை. மருந்துகள் சாப்பிட்டு வருகிறேன். ரொம்பவே நன்றி, உங்கள் அன்பான விசாரணைக்கு.

  ReplyDelete
 18. எங்களுக்கும் குலதெய்வம் அந்த ஊர்ப்பக்கம்தான். சேங்காலிபுரம் அருகே!

  வேங்கடகவி பாடல்களில் எல்லோரும் இந்தப் பாடல்களை மட்டுமே சொல்கிறீர்கள்! எனக்குப் பிடித்த 'நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும்' மற்றும் புகழ் பெற்ற தாயே யசோதா, குழலூதி மனமெல்லாம்' எல்லாம் குறிப்பிட வேண்டாமோ!

  //அவனின் காளிங்க நர்த்தனத்தைப் பற்றிக் கேள்விப் பட்டுத்
  தனக்கும் அந்தத் தரிசனம் கிடைக்குமா என்று ஏங்குகிறாள்//

  நாரதர் காலிங்க நர்த்தனக் கதை சொல்லக் கேட்டு, 'ஐயோ, பாலகன் உடலெல்லாம் காயமாகியிருக்குமே' என்று மயங்கி விழுகிறாள். எனவே நாரதரின் வேண்டுதலின் பேரில் கண்ணன் அந்தக் காட்சியை மீண்டும் நிகழ்த்திக் காட்டுகிறான்' என்று படித்தேன்.

  //நடுவில் ஒரு சின்னப் பேப்பர் போகலாம்//

  கேள்விப்பட்டிருக்கிறேன்! :))

  ReplyDelete
 19. வாங்க ஶ்ரீராம், இப்படி அடிக்கடி ரிவிஷன் பாடம் கொடுப்பேனாக்கும்!:)))) சமத்தாப் படிச்சுட்டு பதில் சொல்லணும். செரியா? :))))

  அப்புறம் அந்த நாரதர் கதை, இரண்டு விதமாவும் கேள்விப் பட்டிருக்கேன். அங்கே ஊரில் சொன்னது இங்கே எழுதி இருப்பது தான். அதான் அதை மட்டும் குறிப்பிட்டேன். :))))

  ReplyDelete
 20. உங்களது வலைத்தளம் மிக அருமையாக உள்ளது கீதாம்மா.
  குறிப்பாக திருக்கோயில்கள் பற்றி தாங்கள் தரும் விரிவான தகவல்கள்
  ரொம்ப அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete