எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 10, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பகுதி 5

ஒரு நிமிடம் முன்னால் வரையில் உலகத்தின் உச்சியில் இருந்த தேவகி, இப்போது தான் அதலபாதாளத்துக்கு வந்துவிட்டதை உணர்ந்தாள். உக்ரசேன மகாராஜாவுக்குத் தன் மகனுக்கு ஏதோ கோபம் என்பது புரிந்தது, ஆனால் கோபத்தின் காரணம் அறிந்தாலும் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்பதாலும் செய்வதறியாது விழித்தார். வசுதேவருக்கு மட்டுமே உணர்வு இருந்தது அப்போது. சட்டெனத் தேரில் இருந்து குதித்துக் கம்சனின் வாள் ஓங்கிய கையைப் பிடித்துக் கொண்டார் அசைக்க முடியாமல். கம்சனைப் பார்த்து,” மரியாதைக்குரிய இளவரசே, என்ன காரியம் செய்யப் போகின்றாய்? அவள் உன் தங்கை, இப்போது தான் திருமண பந்தத்தினுள் நுழைந்திருக்கின்றாள்” என்று சொல்கின்றார். “ம், தள்ளு, அந்தப் பக்கம், “ என்கின்றான் கம்சன் வசுதேவரைப் பாரத்து. உணர்வு வந்தவராய் உக்ரசேனரும் கம்சனைப் பார்த்து, “மகனே, என்ன காரியம் செய்கின்றாய்? அவளை விட்டுவிடு, இந்தச் சின்னஞ்சிறு பெண்ணால் உனக்கு என்ன ஊறு நேர்ந்தது? அவள் உன் தங்கை! அவளை ஒன்றும் செய்யாதே” என்று சொல்லுகின்றார்.


கம்சனோ நான் அவளை விட முடியாது, கொன்றே தீருவேன் என்கின்றான். வசுதேவர் மிகுந்த புத்திசாலியாக இருந்தார். மேலும் கம்சனின் அடாவடியான நடவடிக்கைகள் பற்றியும் நன்கு அறிந்திருந்தார். ஆகவே கம்சன் எதற்காக அவளைக் கொல்லப் போகின்றான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன், என்ன காரணத்தால் தேவகியைக் கொல்லப் போகின்றாய் எனக் கேட்கின்றார். கம்சனும் தனக்கு வந்த எச்சரிக்கையைச் சொல்லுகின்றான். நாரதரின் ஆரூடத்தையும், கடவுளரிடமிருந்து வந்த எச்சரிக்கை அது என்பதையும் தெரிவித்துவிட்டு, எட்டுக் குழந்தை பிறக்கும் வரை இவளை விட்டு வைத்தால் தானே? இவளைக் கொன்றுவிட்டால்???? என்று கொக்கரிக்கின்றான் கம்சன். வசுதேவரோ, “ மைத்துனரே, எங்களுக்குப் பிறக்கப் போகும் எட்டாவது குழந்தையால் தானே உமக்குத் தீங்கு நேரிடும்? அது வரையிலும் சற்றுக் கருணை காட்டுங்கள். எங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை நானே நேரில் கொண்டு வந்து உம்மிடமே ஒப்படைக்கின்றேன். அவற்றை நீர் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். நாங்கள் அனைவரும் உம்முடைய குடிமக்கள் அன்றோ? உம்மைக் காப்பது எமக்கும் கடமை அன்றோ?” என்று மிகுந்த விநயத்தோடு சொல்லுகின்றார்.

யோசனையில் ஆழ்ந்த கம்சன் தான் தேவகியைக் கொல்லுவது தன் தகப்பனுக்கு மட்டுமில்லாமல் மற்ற யாதவத் தலைவர்களுக்கும் பிடிக்காது என்பதையும் அவர்களின் வீண் பகையும், வெறுப்பும் தன்னை வந்து சேரும் என்பதையும் உணர்ந்தவனாய், தான் ஒரு நிபந்தனையோடு தேவகியை உயிரோடு விடுவதாய்ச் சொல்லுகின்றான். அந்த நிபந்தனையாவது: “திருமண ஊர்வலம் அப்படியே நேரே மதுராவில் உள்ள கஜராஜ மாளிகைக்குச் செல்லவேண்டும். அங்கே வசுதேவரும், தேவகியும் ஒரு அறையில் சிறை வைக்கப் படுவார்கள். கம்சனின் படை வீரர்கள் ஒவ்வொரு நிமிடமும் அவர்களைக் கண்காணிப்பார்கள். கம்சனின் கண்காணிப்பில் இருந்து அவர்கள் தப்ப முடியாது. இருவருக்கும் பிறக்கப் போகும் ஒவ்வொரு குழந்தையும் கம்சனிடம் ஒப்படைக்க வேண்டும். வசுதேவர் தன் வாக்குறுதியில் இருந்து தவறக் கூடாது. தேவகிக்குப் பிறக்கும் எந்தக் குழந்தையும் தன் பிடியில் இருந்து தப்பக் கூடாது.” இவையே கம்சனின் நிபந்தனைகள். அதன் படி ஊர்வலம் நேரே அங்கே சென்றது. மணமக்கள் அந்த அரண்மனையின் ஒரு அறையில் சிறை வைக்கப் பட்டனர். நாட்கள் கடந்தன.

3 comments:

 1. உள்ளேன் தலைவி...;))

  ReplyDelete
 2. ம்... அப்புறம்?

  ReplyDelete
 3. வாங்க கோபி,

  வாங்க கவிநயா.

  ReplyDelete