எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 17, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், பகுதி 22 -உந்தை யாவன்!


//தாய்முலைப் பாலி லமுதிருக்கத் தவழ்ந்து தளர்நடை யிட்டுச்சென்று
பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு பித்தனென் றேபிற ரேசநின்றாய்
ஆய்மிகு காதலோடு யானிருப்ப யான்விட வந்தவென் தூதியோடே
நீமிகு போகத்தை நன்குகந்தாய் அதுவுமுன் கோரம்புக் கேற்குமன்றே 6.4 //

(பெருமாள் திருமொழி-குலசேகராழ்வார்)

தங்கள் குமாரனுக்கு நடந்தவை எல்லாம் தேவகிக்குத் தெரிய வருகின்றது. நடந்தவைகளை அறிந்த தேவகி இறைவனுக்கு ஒரு பக்கம் நன்றி கூறினாலும் இன்னொரு பக்கம் செய்வதறியாது திகைத்தாள். இப்போது குழந்தை என்ன, என்ன செய்து கொண்டிருப்பான்? என்று அவள் ஒவ்வொரு நாளும் யோசிப்பாள். ஆயிற்று, ஒரு மாதமாகி விட்டதே! தாய் முகம் பார்க்கத் தொடங்கி இருப்பானே? ஆஹா, யசோதையைக் கண்டு சிரிப்பான் அல்லவா என் கனையா? என்று யோசிப்பாள். என்ன அதிர்ஷ்டக்காரி அந்த யசோதை? பெற்றவள் ஒருத்தி இருக்க, பிள்ளை அவளிடம் வளர்கின்றதே? அதுவும் எப்படிப் பட்ட பிள்ளை?

கொண்டையொண் கண்மட வாளொருத்தி கீழை யகத்துத் தயிர்கடையக்
கண்டுஒல்லை நானும் கடைவனென்று கள்ள விழிவிழித் துப்புக்கு
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ வாண்முகம் வேர்ப்பச்செவ் வாய்த்துடிப்ப
தண்டயிர் நீகடைந் திட்டவண்ணம் தாமோத ராமெய் யறிவன்நானே 6.2

யசோதை தயிர் கடைவாள்: அப்போது என் கனையாவும் தவழ்ந்து வந்து தன் விழி ஓரத்தால் அவளைப் பார்த்துக் கொண்டே நானும் கடைவேன் எனச் சொல்லுவானோ? என்று யோசித்தாள் தேவகி! ஆகா! அப்போது என் கனையாவின் முகலாவண்யம் எப்படி இருக்கும்? அவன் செவ்வாய் துடிக்குமோ? தன் சின்னஞ்சிறு கைகளை நீட்டிக் கேட்பானோ? கடைக்கண்களால் பார்த்துச் சிரிப்பானோ? கள்ளச் சிரிப்புச் சிரிப்பானோ? ஆஹா, அந்தக் கண்கள்! அவற்றின் ஒளி? கண்களே சிரிக்குமே என் கனையாவுக்கு!

வடிக்கொ ளஞ்சன மெழுதுசெம் மலர்க்கண் மருவி மேலினி தொன்றினை நோக்கி
முடக்கிச் சேவடி மலர்ச்சிறு கருந்தாள் பொலியு நீர்முகில் குழவியே போல
அடக்கி யாரச்செஞ் சிறுவிர லனைத்தும் அங்கை யோடணைந் தானையிற் கிடந்த
கிடக்கை கண்டிடப் பெற்றில னந்தோ கேச வாகெடு வேன்கெடு வேனே 7.2

விஷமம் ததும்பும் தன் கண்களை மூடிக் கொண்டு, கருநீல நிறக் கார்மேகம் ஒன்றே குழந்தையாக மடியில் கிடப்பது போல் யசோதை மடியில் தன் சின்னஞ்சிறு விரல்களை உள்ளங்கையில் மூடியவண்ணம் கிடந்து தூங்குவானோ? எனக்கு அதெல்லாம் கொடுத்து வைக்கவில்லையே? என்று ஏங்கினாள் தேவகி! இப்போது எழுந்து உட்கார ஆரம்பித்திருப்பானோ? இப்போது தவழ்ந்து செல்ல ஆரம்பித்திருப்பானோ? என்றெல்லாம் யோசித்தாள் தேவகி!

710:
முந்தை நன்முறை யுன்புடை மகளிர் முறைமு றைந்தம் குறங்கிடை யிருத்தி
எந்தை யேஎன்றன் குலப்பெருஞ் சுடரே எழுமு கில்கணத் தெழில்கவ ரேறே
உந்தை யாவன்என் றுரைப்பநின் செங்கேழ் விரலி னும்கடைக் கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா நங்கள் கோன்வசு தேவன்பெற் றிலனே 7.3

ஆஹா, அந்த ஆய்ப்பாடியின் அனைத்து கோபியர்களுமே பாக்கியம் செய்திருக்கின்றனரே! பிறந்து சில மாதங்களே ஆகி இருக்கும் என் கனையாவைக் கொஞ்சும் நற்பேறு பெற்றிருக்கின்றனரே! இதோ ஒரு கோபி ஒருத்தி! என் கண்ணனைத் தூக்கி முத்தமிடுகின்றாள். இதோ மற்றொருத்தி என் கண்ணனுக்கு "அப்பூச்சி" காட்டுகின்றாள். வேறொருத்தி என் கண்ணனுக்கு மயில் பீலியால் அலங்காரம் செய்கின்றாள். தேவகியின் கைகள் தன்னை அறியாமல் ஒரு மயிலிறகை எடுத்து அவள் அன்றாடம் தன் குழந்தையாக எண்ணிக் கொஞ்சிக் கொண்டிருந்த கறுப்புப் பளிங்குச் சிலையில் வைத்தது. வசுதேவர் பார்த்துக் கொண்டே இருக்கின்றார். கண்களில் பெருகும் கண்ணீரை மறைத்த வண்ணம் வந்து தேவகியை ஆறுதல் செய்ய முனைகின்றார். தேவகி இப்போது வாய்விட்டே புலம்ப ஆரம்பிக்கின்றாள். "அரசே! என் குழந்தை, என் கனையா, அவனை இதோ இப்போது எல்லாரும் தூக்கி வைத்துக் கொண்டு, என் குல விளக்கே, என் கண்மணியே, என் செல்வமே! என் ராஜாவே! என் முத்தே! என் மணியே! என் மாணிக்கமே!" என்றெல்லாம் கொஞ்சுகின்றார்கள், பார்த்தீர்களா? உங்களுக்குத் தெரிகின்றதா?" என்று கேட்டாள் தேவகி, வசுதேவரிடம்.

வசுதேவர் "தெரிகின்றது தேவகி! நீ சற்று அமைதி காப்பாய்!" என்று அவளைத் தன் கைகளால் அணைத்துக் கொண்டு ஆறுதல் சொல்ல விழைகின்றார். அப்போது திடீரென தேவகிக்கு ஒரு சந்தேகம் வருகின்றது. "அரசே, இப்போது அந்தக் கோபியர் அனைவரும் என் கனையாவைப் பார்த்து, கண்ணே, உன் தந்தை யார்? என்று கேட்டால் என்ன சொல்லுவான்? அவனுக்குச் சொல்லத் தெரியாதே!" என்று கேட்கின்றாள். "ஆம், தேவகி, அவன் இன்னும் சிறு குழந்தைதானே, இப்போது என்ன தெரியும்?" என்று சொல்கின்றார் வசுதேவர். "இல்லை ஐயா, என் கண்ணனுக்குப் பேசத் தானே தெரியாது! அவன் தந்தை யார் என்றால் காட்டத் தெரியுமே? அவன் யாரைக் காட்டுவான்? அந்த கோபியர் அனைவரும், எங்கள் செல்வமே? உந்தை யாவன்?" என்று கேட்டால் யாரைக் காட்டுவான்?""அந்தத் தெய்வீகக் குழந்தையின் கடைக்கண்கள் அப்போது நந்தனை அன்றோ பார்க்கும்? மனம் கவரும் சிரிப்பாலும், கடைக்கண்களின் பார்வையாலும், போதாதென்று அவனுடைய செக்கச்சிவந்த பிஞ்சு விரல்கள் நந்தனை அன்றோ சுட்டும்? ஆஹா, நந்தன் பெற்ற அந்த பாக்கியத்தை நீங்கள் பெறவில்லையே ஐயா? என்று தேவகி கதற ஆரம்பிக்கின்றாள். வசுதேவர் கண்களிலும் கண்ணீர்.

4 comments:

  1. திரு முன்ஷியின் புத்தகத்தைப் படிச்சவங்க மன்னிக்கணும். இது அதிலே இல்லை. பெருமாள் திருமொழியை வேறே ஒரு தேடலுக்காகப் படிச்சப்போ இந்தப் பாடல்களின் அழகில் ஈர்க்கப் பட்டு பாடல்களைக் குறிப்பிடவென்றே இதை எழுதி இருக்கேன். என்றாலும் குலசேகராழ்வாரின் கற்பனை போல் நடந்திருக்கவும் முடியும் அல்லவா???

    ReplyDelete
  2. //எனக்கு அதெல்லாம் கொடுத்து வைக்கவில்லையே? என்று ஏங்கினாள் யசோதை! இப்போது எழுந்து உட்கார ஆரம்பித்திருப்பானோ? இப்போது தவழ்ந்து செல்ல ஆரம்பித்திருப்பானோ? என்றெல்லாம் யோசித்தாள் யசோதை!//

    அம்மா, இதெல்லாம் தேவகியென்று இருக்கணுமில்ல?

    என்ன அழகான பாடல்கள். அவற்றை நீங்க வெகு அழகாகவும் எழுதியிருக்கீங்க. படிக்கும்போதே கண்கலங்குகிறதே... பகிர்தலுக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  3. ஹிஹிஹி, அ.வ.சி. திருத்திட்டேன் கவிநயா, திருப்பி ஒரு தரம் பார்த்துடுங்க எதுக்கும், நல்லவேளை யார் கண்ணிலும் படல்லை! :)))))))))

    ReplyDelete
  4. பாடல்கள் எல்லாம் குலசேகர ஆழ்வாரோடது கவிநயா! :)))))))))

    ReplyDelete