எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 10, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

சுரிகையும்தெறிவில்லும்செண்டுகோலும்
மேலாடையும்தோழன்மார்கொண்டோ ட
ஒருகையால்ஒருவன்தன்தோளையூன்றி
ஆநிரையினம்மீளக்குறித்தசங்கம்
வருகையில்வாடியபிள்ளைகண்ணன்
மஞ்சளும்மேனியும்வடிவும்கண்டாள்
அருகேநின்றாள்என்பென்-ஓக்கிக்கண்டாள்
அதுகண்டுஇவ்வூர்ஒன்றுபுணர்க்கின்றதே. 3(பெரியாழ்வார்)


“ஆனால் ராதை, நீ என்னுடன் காளையின் மேல் சவாரி செய்வது இயலாத ஒன்று!” கண்ணனும் திட்டவட்டமாய்த் தெரிவித்தான். ராதை கோபத்தில் கைகள் நடுங்க, கண்களின் ஒளி தீ போலப் பிரகாசிக்கப் பார்க்கவே பயம் மேலிடும்படிக் காட்சி அளித்தாள். கண்ணன் சற்று நேரம் ஒன்றும் பேசவில்லை. தன் கண்களின் கருணையும், பாசமும், அன்பும், காதலும் நன்கு தெரியும்படியான ஒரு பார்வையை ராதையின் மேல் பிரயோகம் செய்தான். கண்ணன் மனதில் தோன்றியது, நான் இவளைவிடச் சிறியவன் ஆனாலும், இவள் என்னைவிடச் சிறியவளாய்த் தோன்றுகின்றாளே எனக்கு? ம்ம்ம்ம்ம்ம்ம்..,., புன்னகை புரிந்த கண்ணன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். “சரி, ராதை, நீ என்னுடம் ஹஸ்தின் மேல் சவாரி செய்யத் தயாராகிவிடு. அண்ணா, நீ ஸ்ரீதாமாவையும் உத்தவனையும் அழைத்துச் சென்று அங்கே இரு. “ பலராமன் தயக்கத்துடனேயே செல்ல, கண்ணன் ராதையைப் பார்த்து, “இங்கே சற்று நேரம் காத்திரு. நான் தயார் செய்து கொண்டதும் காளையின் மேல் சவாரி செய்ய உன்னையும் அழைத்துப் போகிறேன்.”

அவ்வளவில் கண்ணன் ராதையிடமிருந்து விலகி, பருத்திக் கொட்டையும், கடலைப் புண்ணாக்கும் கொண்ட கூடையை எடுத்து வந்து ஹஸ்தினிடம் சென்றான். காளை ஏற்கெனவேயே ஏதோ நடக்கின்றது, அல்லது நடக்கப் போகின்றது என்று பொறுமை இழந்திருந்தது. ராதையைக் கொஞ்சம் சந்தேகத்துடனேயே பார்த்துக் கொண்டிருந்தது. ராதையோ அடுத்து என்னவோ என்ற கலக்கத்துடன் காத்திருந்தாள். கூடையைக் காளைக்கு எதிரே சற்றுத் தொலைவில் வைத்த கண்ணன் தன் புல்லாங்குழலை எடுத்து இனிய கீதம் இசைத்தான்.

"சிறு விரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச்
செய்யவாய் கொப்பளிப்பக் கோவிந்தன் குழல் கொடூதினபோது
பறவையின் கணங்கள் வந்து கிடந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கவிழ்ந்திறங்கிச் செவியாட்ட கில்லாவே."(பெரியாழ்வார்)கொஞ்ச நேரம் வரையில் பொறுமையற்றிருந்தது ஹஸ்தின். மெல்ல மெல்ல இனிமையான புல்லாங்குழலின் நாதம் அந்தச் சுற்றுப் புறத்தையே நிறைக்க ஹஸ்தினும் அந்த நாதத்துக்கு வசப் பட்டது. அதன் புலன்கள் சாந்தம் அடைய ஆரம்பித்தன. இப்போது கண்ணன் காளையின் அருகேயே அந்த உணவுக்கூடையை வைக்க இன்னும் ஆனந்தம் கொண்ட காளை ஒரு இன்பச் செறுமல் செறுமியது கண்ணனைப் பார்த்து.

காளயின் அருகே சென்ற கண்ணன் அதன் திமிலைத் தடவிக் கொடுத்து, அதைத் தட்டிக் கொடுத்து உடலை நீவி விட்டு உற்சாகப் படுத்தினான். காளை மேலும் உற்சாகம் அடைந்து உணவை உண்ண ஆரம்பித்தது. கண்ணன் காளையின் மேலே ரொம்பவும் சாவதானமாகச் சாய்ந்து கொண்டே புல்லாங்குழலை இசைத்த வண்ணம் இருந்தான். காளை உண்ணும்போதே ராதையிடம் கண்ணன், காளையை நீர் அருந்தத் தான் அழைத்துச் செல்லப் போவதாயும், அப்போதும் புல்லாங்குழலை இசைத்துக் கொண்டே இருக்கப் போவதாயும், அப்போது ராதை வந்து கண்ணனை இறுகக் கட்டிக் கொண்டு விடவேண்டும் என்றும் சொல்லுகின்றான். ராதை கேள்விக் குறியுடன் கண்ணனை நோக்கக் கண்ணன்,” நீ என்னைக் கட்டிக் கொண்டதும் தான் நான் காளையின் மேல் ஏறவே முடியும். இவ்வாறு நீ நின்று கொண்டிருந்தாயானால் காளை உன்னை முட்டிக் கொம்பால் குத்தித் தள்ளிவிடும். ஆகவே எவ்வளவு முடியுமே அவ்வளவு என்னை இறுகக் கட்டிக் கொண்டு அமர்ந்து விடு. விட்டுவிடாதே. என்ன தைரியம் இருக்கா உனக்கு?”

இந்தக் கேள்வி ராதையை உசுப்பிவிட, அவள் ஆறாத சினத்தோடேயே கண்ணனிடம், “ நீயும் அருகில் இருக்கையில் எனக்கு தைரியம் இல்லாமல் போகுமா என்ன?” என்று கேட்கின்றாள். காளை நீர் அருந்தச் சென்றது. கண்ணனின் புல்லாங்குழலின் கீதம் ஓயவில்லை. ராதை மெல்லத் தவழ்ந்து ஹஸ்தினுக்குத் தெரியாமல் மறைந்து மறைந்து கண்ணனுக்குப் பின்னே வந்து நின்றாள். கண்ணன் காளையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே அதன் மேல் சாய்ந்தாற்போல் நின்று கொண்டான். ராதை அவன் முதுகில் ஏறப் போவது காளை அறியாவண்ணம் மறைத்துக் கொண்டான். காளை நீர் அருந்தி முடித்தது. கண்ணன் ஒரு குதி குதித்துக் காளையின் முதுகில் ஏறினான். ராதையும் கண்ணனை இறுகப் பிடித்த வண்ணம் அவன் முதுகில் தொங்கினாள். ராதை சரியாக அமர உதவிய வண்ணம் கண்ணன் காளையைக் கட்டியிருந்த மூக்கணாங்கயிற்றை மெல்லத் தன் கைகளில் எடுத்துக் கொண்டான். ராதை நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

ஹஸ்தின் நிமிர்ந்து பார்த்தது. அது இப்போது உணவும் அருந்தி நீரும் குடித்ததால் மிகவும் மகிழ்வான மன நிலையில் இருந்தது. மீண்டும் ஓர் வாய் நீர் குடித்துக் கொண்டது. கண்ணன் அதனிடம், "ஹஸ்தின், என் நண்பா, நாம இப்போக் காட்டுக்குப் போறோமே? எங்கே ஓடு பார்க்கலாம்," என்று கனிவும் பாசமும் மிகுந்த குரலில் கூறினான். காளையும் கண்ணன் சொன்னது புரிந்தாற்போல் நிமிர்ந்து பார்த்துச் செறுமி விட்டுச் சற்று வேகமான நடையாகக் காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தது.

பி.கு. கோபி நல்லவேகம்னு சொல்லி இருக்கிறது பதிவுகளையா? இல்லை கண்ணனையானு புரியலை. :P எதாய் இருந்தாலும் ஜூலை வரைக்கும் இப்படித் தான், கண்ணன் வருவான். கொஞ்ச நாட்கள் எல்லாரும் நம்ம அறுவை இல்லாம நல்லா இருக்கலாமேனு ஓரு அநுதாபம் தான். அப்புறம் இருக்கவே இருக்கு!

2 comments:

  1. \:P எதாய் இருந்தாலும் ஜூலை வரைக்கும் இப்படித் தான், கண்ணன் வருவான். \\

    ஒஒ...ரைட்டு ;)

    ReplyDelete
  2. ரொம்ப அழகா கதை சொல்றீங்க. நேர்ல பார்க்கிற மாதிரி!:)

    ReplyDelete