எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, June 28, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்! ராதையின் நெஞ்சமே!

ராதையுடன் உடன் வந்த லலிதாவும், விஷாகாவும் அவளை ஆஸ்வாசப் படுத்தினார்கள். அவள் மயக்கத்தைத் தெளிவித்தனர். கண் திறந்து பார்த்தாள் ராதை. கண்ணன் அந்தப் பாம்பை அடக்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும் "கானா, என் கானா! ஏன் இப்படி உன் உயிரை நீயே போக்கிக் கொள்கின்றாய்? உன் உயிர் எனதன்றோ? அதை நீ அறிய மாட்டாயா?" எனக் கேட்டுவிட்டு மீண்டும் மூர்ச்சையானாள் ராதை. யசோதைக்கும், நந்தனுக்கும் ராதையின் இந்தக் கோலம் சற்றும் சகிக்க முடியாத ஒன்றாய் இருந்தது. ஒரு இளம்பெண் அதுவும் வேறு ஒருவனுக்கென நிச்சயிக்கப் பட்டவள் தங்கள் பையனோடு சிநேகமாய் இருப்பதோடு, இவ்வாறு பொது இடத்தில் தன்னை மறந்து நடக்கின்றாளே? அதிலும் இவள் திருமணம் நிச்சயிக்கப் பட்டும் இன்னும் அவனுடன் திருமணம் நடக்காமல் இருப்பதையும் அவர்களால் சகிக்க முடியவில்லை. அனைவரிலும் ராதையின் சிற்றன்னையான கபிலாவிற்கு இன்னமும் ராதையின் மேல் கோபம் இருந்து வந்தது. இப்போது ராதையின் இந்த வெளிப்படையான நடத்தையால் அவள் பக்கம் இன்னும் நியாயம் கூடிவிட்டதாய் உணர்ந்தாள். ஏற்கெனவே இந்தப் பெண் ராதை பெற்றெடுத்த தாய் இல்லை எனத் தந்தையாலும், தாய்வழிப்பாட்டியாலும் மிகவும் செல்லம் கொடுத்துக் கெடுக்கப் பட்டிருக்கிறாள். இவளோட இந்த நடத்தை நம் குடும்பத்திற்கே அவமானம். இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்த்துடணும். இதுதான் கபிலாவின் எண்ணம்.ஏற்கெனவேயே இந்தப் பெண் நந்தனின் மகன் கண்ணனோடு சேர்ந்து "ராஸ்"விளையாடுவதாய்க் கூறிக் கொண்டு கண்ட நேரத்திலும் ஆடுவதும், பாடுவதுமாய் இருப்பதோடு அல்லாமல், இந்த நந்தனின் பிள்ளையை என்னமோ கண்காணாத தெய்வம் போலப் பூஜிக்கின்றாளே? இது அடுக்குமா?? இப்போ நல்ல சமயம் வாய்ச்சிருக்கு. கம்சன் திரும்பிவிட்டதாயும், அவனோடு ஐயனும் வேலையில் ஒருபடி முன்னேறிக் கம்சனின் மெய்க்காப்பாளனாக ஆகி வந்திருப்பதாகவும் மதுராவில் இருந்து செய்தி வந்திருக்கிறது. இந்தப் பெண்ணை ஐயனிடம் எவ்வாறேனும் ஒப்படைத்துவிடவேண்டும். ராதையின் சகோதரர்கள் அரை மயக்க நிலையில் இன்னும் கண் திறந்து பார்க்காத ராதையைத் தூக்கிச் சென்றார்கள். அவர்கலும் உள்ளூரக் கோபத்துடனேயே இருந்ததாய் அவர்கள் முகத்தில் இருந்து தெரிந்தது. ராதையின் சிற்றன்னையோ, ராதையை வீட்டில் கொண்டு சேர்த்ததுமே, அவள் உடல்நிலையைக் கூடக் கவனிக்காமல், அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். எழுந்திருக்கக் கூடச் சக்தியற்ற நிலையில் இருந்த ராதை, கண்களில் கண்ணீரோடு அரைக்கண் திறந்து சிற்றன்னையைப் பார்த்துவிட்டு ஏதும் செய்யமுடியாத நிலையில் மீண்டும் மயக்கம் அடைந்தாள்.இன்று இத்தனை நாள் இல்லாமல் ராதையின் தந்தை விருஷபானுவிற்கும் கோபம் தலைக்கு மேல் ஏறி இருந்தது. அனைவர் கண் முன்னாலும் இப்படி அவமானப் பட வைத்துவிட்டாளே இந்த ராதை? இனி இந்தக் கோபர்கள் முன்பாகத் தலை நிமிர்ந்து நடக்கக் கூட முடியாதே? ஐயன் வந்துவிட்டான். ஆனால் இப்போது உடனே திருமணம் நடத்தமுடியாது. அதற்கான நேரம் இப்போது இல்லை. இப்போ கடவுளரின் இரவு முடியும் மாதங்களில் இருக்கின்றோமே?? கல்யாணங்கள் செய்யமுடியாதே? இருக்கட்டும், ம்ம்ம்ம்ம்?? இன்னும் எத்தனை நாட்கள் உத்தராயணத்திற்கு??? உத்தராயணம் வந்ததும், முதல் முஹூர்த்த நாளிலேயே ஐயனிடம் இவளை ஒப்படைக்கவேண்டும். ஐயன் இன்னும் சில நாட்களில் விருந்தாவனம் வருவதாய்ச் சொல்லி இருக்கின்றான். அதுவரையிலும் இந்தப் பெண்ணைப் பாதுகாக்கவேண்டும். யாரங்கே, இனி இந்தப் பெண் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. அதோ, அந்த அறையில் இவளை உள்ளே விட்டுப் பூட்டுங்கள். வெளியே, யாராவது ஒருவர் மாற்றி ஒருவர் காவல் இருங்கள். என்ன?? கையை எல்லாம் கட்டவேண்டாம். பூட்டினாலே போதும், இவளால் என்னை மீறி வெளியே வரமுடியாது. கானாவாம், கானா! இந்தப் பெண்ணிற்கு இருபது வயது ஆரம்பிக்கப் போகின்றது. இன்னமும் சிறுபெண் போல தன்னைவிடச் சிறுமிகளோடும், சிறுவர்களோடும் விளையாடுகின்றாள். ஆடுகிறாள். பாடுகிறாள்.

இனி இவள் கானாவைப் பார்க்கவே கூடாது. ஆயிற்று, அவனுக்கும் பதினைந்து முடிந்துவிட்டதே? அதோடு அல்லாமல் அவன் நம் தலைவன் நந்தனின் ஒரே மகன். அவர்களைப் போல் பணக்காரர்களின் ஒரே மகன் நம் பெண்ணைப் போல் சாதாரண நிலையில் உள்ள பெண்ணை மறுமகளாய் ஏற்பார்களா?? இவளை உள்ளேயே பூட்டி வையுங்கள். வெளியே விடவே கூடாது. ராதை அறையில் அடைக்கப் பட்டாள். கண் திறந்து தன் நிலையைக் கவனித்த ராதைக்குக் கண்ணீர் பொங்கிப் பிரவாஹமாய் ஓடியது. தன் முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டு பெருங்குரலெடுத்து அழுதாள். விருஷபானுவும், கபிலாவும் அவளைப் பார்த்து, "குடும்ப கெளரவத்திற்கே உலை வைத்த உன்னை வெளியே விடமுடியாது. உனக்குச் சாப்பாடும் கொடுக்கப் போவதில்லை. இந்த அறையிலேயே அடைந்து கிட?" என்று சொல்லிவிட்டுக் கோபமாய் வெளியே சென்று அறையை நன்கு அழுந்தப் பூட்டினார்கள். வெளியே காவலும் போடப் பட்டது.

ராதையின் நெஞ்சமோ கண்ணனிடம் சென்றுவிட்டது. அவனை முதன்முதல் பார்த்தது, உரலோடு சேர்த்துக் கட்டப் பட்டிருந்தது, இரு மரங்களை அவன் வீழ்த்தியது, தன்னிடம் விருந்தாவனம் வந்து சேருவேன் எனச் சத்தியம் செய்தது. அதே போல் விருந்தாவனம் வந்தது. விருந்தாவனத்தில் அவனோடு சுற்றியது. காட்டில் கானாவோடு அலைந்தது, கானா தன்னிடம் பேசிய பேச்சுக்கள், விளையாடிய விளையாட்டுக்கள், ஹஸ்தின் முதுகில் தன்னையும் ஏற்றிக் கொண்டு கானாவும், தானும் மட்டும் காட்டை நோக்கிச் சென்றது. ஆஹா, ஹஸ்தினுக்கு மட்டும் இரு இறக்கைகள் இருந்திருந்தால்?? எவ்வளவு ஆனந்தமாய் இருக்கும்? தானும், கானாவும் ஹஸ்தின் முதுகின் மேலேயே பறந்து கொண்டே அலைந்து திரிந்து இந்தப் பூவுலகின் அனைத்து இடங்களையும் பார்த்து யாரும் வர முடியாத ஓர் இடத்தைக் கண்டு பிடித்து அங்கு கானாவும், தானும் மட்டும் சந்தோஷமாய் இருந்திருக்கலாமே?? யார் இந்த ஐயன்?? யார் வரச் சொன்னது இவனை? ஏன் நிச்சயம் செய்தனர் இவனோடு நம் திருமணத்தை? இந்த ஐயனை இன்னும் பார்த்தது கூட இல்லையே?

மனம் என்னமோ அவன் மனைவி தான் என்பதை ஒத்துக் கொள்ள மறுக்கின்றதே. இல்லை, இல்லை, நான் ஐயனுக்காகப் பிறக்கவில்லை. என் உயிர் கானா, என் ஜீவன், கானா, என் பார்வை கானா, என் மூச்சு கானா. அவன் கோபர்களின் தலைவனின் ஒரே மகனாய் இருந்தால் எனக்கு என்ன? என்னுள்ளே உறைந்து என் ஜீவசக்தியாய் இருக்கும், என் உடலில் ஓடும் ஒவ்வொரு நரம்பிலும் அவனுடைய சக்தியே பொங்கிப் பிரவாஹமாய் ஓடுவதை யார் அறிவார்கள். இல்லை, இல்லை, கானா அறிவான், அவனுக்குத் தெரியும், அவனே நான், நானே அவன், நானில்லாமல் அவனில்லை. அவனில்லாமல் நானில்லை. கானா பெரும் பணக்காரர்களான ஷூரர்களுக்குத் தலைவனாகிவிட்டால்?? யசோதா அம்மா என்னைத் தன் மறுமகளாய் ஏற்பாளா?? மாட்டாள், மாட்டாள், நான் கானாவை மணக்கவே முடியாது. ஆனால் கானா இல்லாமல் வேறொருவனை என் கணவனாய் நினைக்கக் கூட முடியவில்லையே? கானா, கானா, ராதைக்கு அன்றிரவு பூராத் தூக்கமே வரவில்லை. அன்று உணவும் கொடுக்கப் படவில்லை அவளுக்கு.

மறுநாள், பெளர்ணமி. ஒவ்வொரு பெளர்ணமிக்கும் யமுனை நதிக்கரையில் "ராஸ்" நடக்கும். அனைத்துக் கோபஸ்த்ரீகளும், கோபர்களும், சிறுவர், சிறுமிகளோடு கட்டுச்சாதம் கட்டிக் கொண்டு வந்து ராஸில் கலந்து கொள்ளுவார்கள். கண்ணன் இனிய புல்லாங்குழல் இசைப்பான். அந்த அமுதகீதம் என் காதிலும் விழுமா?? பூட்டிய இந்தக் கதவைத் தாண்டி வந்து விழுமா?? இந்த வீட்டு மனிதர்களின் பூட்டிய இதயம் திறக்குமா??? அன்று ராதைக்கு மிகக் கொஞ்சமாய் உணவு அளிக்கப் பட்டது. ஏதோ நினைவு பளிச்சிட ராதை அந்த உணவை மறுக்காமல் உண்டாள். இரவும் வந்தது. யமுனை நதிக்கரை வெண்ணிலவின் ஒளியில் ஜாஜ்வல்யமாய்ப் பிரகாசித்தது. இயற்கையாகவெண்மணல் பரப்பிய கரையில் வித, விதமாக உடை அணிந்த பெண்களும், ஆண்களும் அன்றிரவு கொண்டாட்டத்திற்குத் தங்களைத் தயார் செய்து கொண்டிருந்தனர். ராதை தவித்துக் கொண்டிருந்தாள்.
"கண்ணனிடம் எடுத்துச் சொல்லடி, சகியே,
கன்னி நான் அவன் மேல் கொண்ட காதலை" என்று மனம் தவிக்க ராதை எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அப்போது கண்ணனின் புல்லாங்குழலின் இனிய கீதம் ஆரம்பித்தது. மெல்ல, மெல்ல யமுனைக் கரையைத் தாண்டி, விருந்தாவனத் தெருக்களுக்குள் நுழைந்து, ராதையின் வீட்டிற்கும் வந்து, அனைவரையும் தாண்டி, காவல் இருப்பவர்களை எல்லாம் தூங்க வைத்து ராதை பூட்டி இருக்கும் அறைக்குள்ளாக நுழைந்தது. ராதையின் இதயமோ திக், திக் என அடித்துக் கொண்டது. ஏதோ நடக்கப் போகிறது. இது என்ன கண்ணனின் புல்லாங்குழல் இசை இவ்வளவு அருகில்?? இசை அந்தப் பிராந்தியத்தையே நிரப்பியது. அனைவரும் மயங்கினர். ராதைக்கு எதிரே அந்த அறை, அவள் படுத்திருந்த கட்டில், மற்றும் அந்த வீடு எல்லாம் சுழல்வது போல் இருந்தது. அந்த இசையைக் கேட்ட அவள் மனம் பித்துப் பிடித்தது போல் அலைந்தது. சுவற்றில் தலையை முட்டிக் கொண்டு அழலாம் போலத் தவித்தாள் ராதை. "கானா, என் கானா, உன்னை நான் மீண்டும் காண்பேனா?? உன் அருகில் இருக்கும் பேறு பெறுவேனா? உன் இனிய கானத்தைக் கேட்பேனா?" என வாய்விட்டுப் புலம்பினாள்.

உடனேயே புல்லாங்குழல் இசை நின்றது. ஒரே மெளனம் சூழ்ந்தது. ராதைக்கு அந்தப் பிராந்தியமே இருட்டாகிவிட்டாற்போன்ற உணர்வு.

4 comments:

 1. கலக்கல் பகுதி தலைவி...அட்டகாசம்;)

  \\இப்போ கடவுளரின் இரவு முடியும் மாதங்களில் இருக்கின்றோமே?\\

  கடவுளரின் இரவு அப்படி என்றால் என்ன?

  ReplyDelete
 2. @கோபி, ஃபீலிங்ஸ் ஆகிறதுக்குள்ளே சொல்லிடறேன். உத்தராயனம் ஆறு மாதம், தக்ஷிணாயனம் ஆறுமாதம். உத்தராயணம் தை மாதம் முதல் தேதியில் இருந்து ஆனி மாதம் 31 சில சமயம் 32 தேதி வரும் அது வரை. ஆடி முதல் தேதியில் இருந்து மார்கழி 29 அல்லது 30 தேதி வரை தக்ஷிணாயனம். சூரியனின் போக்கை வைத்து இதைச் சொல்லுவார்கள். இந்த உத்தராயனம் தேவர்களின் பகல் எனவும், தக்ஷிணாயனம் தேவர்களின் இரவு எனவும் சொல்லப் படும். அதிலும் மார்கழி மாதம் பிரம்ம முஹூர்த்தம் என அழைக்கப் படும் அதிகாலையாகக் கருதப் படுகிறது. அதனாலேயே அந்த மாசம் பூராவும் இறைவனை எழுப்பும் திருப்பள்ளி எழுச்சி, பல்லாண்டு போன்றவைகளால் துதிக்கின்றோம்.

  ReplyDelete
 3. அடேங்கப்பா! ராதாவின் உணர்வுகளை பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்கம்மா! சூப்பர்!

  (காதல்னா இதுதான் காதல்! அதுவும் எப்பேற்பட்ட காதல்!!)

  ReplyDelete
 4. நன்றி கவிநயா, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். :(

  ReplyDelete