எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 12, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!


நன்மணி மேகலை நங்கை மாரொடு நாள்தொறும்
பொன்மணி மேனி புழுதி யாடித் திரியாமே
கன்மணி நின்றதிர் கா னதரிடைக் கன்றின்பின்
என்மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே 3(பெரியாழ்வார் பாசுரம்)


பறவைகளின் இனிய கீதம் காட்டையே நிறைத்திருந்தது. பல்வேறுவிதமான குரல்களில் பக்ஷிகள் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. காட்டை நோக்கிச் செல்லும் பாதையில் ஹஸ்தின் வீரநடை போட்டுக் கொண்டிருந்தது. பாதையில் நேர் எதிரே சூரியன் தன் தங்கநிறக் கதிர்களால் ஒளியைப் பாரபக்ஷமின்றி வாரி வழங்கிக் கொண்டிருந்தான். கண்ணன், ஹஸ்தினிடம், “ ம், வேகம், பையா, வேகம்! எங்கே ஓடு பார்க்கலாம்!” என்று மிக மிக மென்மையாகக் கூறிக் கொண்டிருந்தான். ஹஸ்தினுக்குப் புரிந்தது போல் வேகமெடுத்தது. ராதை தன் இரு கரங்களாலும் கண்ணனை இறுக்கிக் கட்டிக் கொள்ள, கண்ணன் அவள் கைகளை ஆதரவுடன் பிடித்துக் கொண்டு, தன் கால்களால் ஹஸ்தினை வேகமாய் ஓடும்படி பணித்துச் சிறு உதை கொடுத்தான்.

237 வண்ணக் கருங்குழல் மாதர் வந்துஅலர் தூற்றிட
பண்ணிப் பலசெய்துஇப் பாடி யெங்கும் திரியாமே
கண்ணுக் கினியானைக் கா னதரிடைக் கன்றின்பின்
எண்ணற் கரியானைப் போக்கினேன் எல்லே பாவமே 4

உத்தரவு கிடைத்தது தான் தாமதம், ஹஸ்தின் ஓட ஆரம்பித்தது. வேகமாய் ஓட, ஓட, ராதை இனம் புரியாத உணர்ச்சிக்கு ஆளானாள். மயிர்க்கூச்செறியச் செய்யும் இத்தகைய அனுபவத்தை அவள் இன்றுவரை அனுபவித்ததில்லை. வேகமாய் ஓடின ஹஸ்தினுக்கு மூச்சு இரைக்க ஆரம்பித்தது. ஆனாலும் அதற்கும் இந்த அனுபவம் புதுமையாகவும், இனிமையாகவும் இருந்திருக்கவேண்டும். குன்று ஒன்றின் அருகே இருந்த சமவெளிக்கு வந்ததும், அது தன் ஓட்டத்தை நிறுத்தியது. ராதையும், கண்ணனும் மெதுவாய்க் கீழே இறங்கினார்கள். அவர்கள் இருவரையும் பார்த்த ஹஸ்தின் தனக்கு நேரிட்ட இத்தகையதொரு அனுபவத்துக்கு நன்றி கூறுவது போல் தலையை ஆட்டிவிட்டுப் பக்கத்தில் இருந்த புல்வெளிக்கு மேயச் சென்றது. ராதையும் கண்ணனும் அருகருகே அமர்ந்தனர். இருவருக்கும் ஒரே நேரத்தில் ஒரு விஷயம் சந்தேகம் ஏதுமின்றிப் புரிந்தது. இருவரும் ஒருவர், இனி யார் என்ன முயன்றாலும் இருவரையும் பிரிக்க முடியாது என்பது. வாய்விட்டுப் பேசிக் கொள்ளாமலேயே இருவரும் இந்த உணர்வை உணர்ந்ததோடு அல்லாமல், அது தங்களில் மற்றவருக்கும் தெரிந்திருக்கின்றது என்பதையும் புரிந்து கொண்டார்கள்.

238 அவ்வவ் விடம்புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கன
சிந்துரப் பொடிக்கொண்டு சென்னி யப்பித்
திருநாம மிட்டங்கோ ரிலையந் தன்னால்
அந்தர மின்றித் தன்னெறி பங்கியை
அழகிய நேத்திரத் தால ணிந்து
இந்திரன் போல்வரு மாயப் பிள்ளை
எதிர்நின்றங் கினவளை இழவே லென்ன
சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்துகி
லொடுசரி வளைகழல் கின்றதே 8

ராதை தன் சேலைத் தலைப்பால் கண்ணன் முகத்தில் முத்து முத்தாய்ப் பூத்திருந்த வியர்வைத் துளிகளை ஒற்றி எடுக்க, கலைந்திருந்த அவள் கூந்தலை கண்ணன் சரி செய்து கொடுத்தான். இவர்கள் இருவரின் உறவையும் பற்றி விருந்தாவனத்தில் என்ன பேசிக் கொள்ளுகின்றார்கள் என்பது பற்றி இருவரும் கவலை கொள்ளவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் ராதை ஐயனையே மறந்துவிட்டாள். தான் அவனுக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் என்பதே அவள் நினைவில் இல்லை. ஆனால் அவள் தகப்பனோ ஐயன் எப்போது வருவான் எனக் காத்திருந்தான். சில நாட்களில் வந்து சேர்வதாயும், கம்சனின் அந்தரங்கப் பணியாளர்களில் ஒருவனாய் பணி உயர்வு கிடைத்திருப்பதாயும் செய்தி வந்திருந்தது. ஆனால் அதற்குள்??? ராதையும், கண்ணனும் ஒருவருக்காக ஒருவர் என்பதை உறுதி செய்யும் வண்ணம் ஒரு நிகழ்வு சில நாட்களில் அங்கே நடந்தது. அது............

ஸ்ரீதாமாவுடனும், உத்தவனுடனும் மற்றும் பணியாளர்களுடனும் அங்கே வந்த பலராமன் கண்ணனின் இத்தகைய வீரச் செயலால் நெகிழ்ந்து போயிருந்தாலும் தந்தைக்கு இது பிடிக்காது என்பது மட்டும் உறுதியாகப் புரிந்து கொண்டான். கண்ணனோ அவனிடம் தான் அடுத்துச் செய்யப் போவது என்ன என்பதைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். விருந்தாவனத்துக்கு அருகே கோவர்த்தனம் என்ற பெயரில் குன்று இருந்தது. அதை ஒட்டிய காட்டிற்கே மாடுகள் மேயச் செல்லும். அந்தக் காட்டில் விளையும் புற்கள் மென்மையாகவும், மாடுகளுக்குச் சத்து நிறைந்தும் காணப் பட்டதால் அங்கேயே அனைத்துச் சிறுவர்களும் மாடுகளை அழைத்துச் செல்லுவார்கள். கண்ணனுக்கு அந்தக் காட்டின் ஒவ்வொரு செடியும், கொடியும், மரங்களும், இலைகளும், பூக்களும், காய், பழங்களும் பரிச்சயம். முதலில் அவனைக் கவர்ந்தது விருந்தை என அழைக்கப் பட்ட துளசிச் செடியே ஆகும். அதன் மணமும் நிறமும் அதன் சுவையும், நீரில் போட்டுப் பருகினால் நீரின் சுவையும் அவன் மனதைக் கவர்ந்தது. அதன் பின்னர் கடம்ப மரங்களின் மீதும், அவற்றின் சிவந்த நிறமுள்ள மலர்கள் மீதும் அவன் கவனம் சென்றது. கோவர்த்தன கிரியின் ஒவ்வொரு பாகமும் கண்ணனுக்கு அத்துப்படியானது.

அதன் செடி, கொடிகளை மட்டுமின்றி, அந்த மலையையே அவன் மிகவும் நேசித்தான். மலையின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு புதுமையுடன் ஒவ்வொரு நாளும் காக்ஷி அளித்து வந்தது கண்ணனுக்கு. மலையில் தினமும் ஒரு முறையாவது ஏறி இறங்காமல் போனால் அந்த நாள் நாளாகவே தோன்றாது கண்ணனுக்கு. பக்ஷிகளின் விதவிதமான கூக்குரல்களும், விநோதப் பழக்க வழக்கங்களும், காட்டு மிருகங்களின் நடத்தைகளும், உணவுப் பழக்கங்களும் என அனைத்துமே கண்ணனுக்குப் புரிய வந்திருந்தது. இந்த மலையில் அவ்வப்போது கண்ணன் தன் நண்பர் குழாமோடும், சில சமயம் தன்னந்தனியாகவும் உலாவுவான். அவ்வாறு தனியாக உலாவி வரும் வேளையில் கண்ணனுக்குத் தன்னிடம் ஏதோ ஒன்று உட்புகுந்து கொண்டிருப்பதாயும், அது தன்னை ஓர் அதிசய சக்தி கொண்டவனாய் மாற்றுவதாயும் தோன்றும். தன்னுடைய இந்த உணர்வுகளைப் பற்றி அவன் இன்னமும் தன் அண்ணன் பலராமனுடனோ, சிநேகிதனும், சகோதரனும் ஆன உத்தவனுடனோ, ஸ்ரீதாமாவுடனோ, ஏன் அன்புக்குரிய காதலியான ராதையுடனோ பகிரவில்லை. இது பற்றிச் சில நிச்சயங்கள் செய்து கொள்ள வேண்டி இருந்தது கண்ணனுக்கு. ஆனால் தன் உணர்வுகள் பொய்யல்ல என்று புரிந்து கொண்டிருந்தான்.

மலையில் ஏறி உச்சியில் நிற்கும்போதெல்லாம் கண்ணனுக்குத் தான் இந்த உலகிலிருந்து தனித்து இருப்பது போலவும், தனக்குக் கட்டுப் பட்டே இந்த மலை மட்டுமில்லாமல் உலகின் அனைத்து மலைகள், நதிகள், நீர்த்தேக்கங்கள், சமுத்திரங்கள், காடுகள், ரிஷி, முனிவர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் என உயிர் வாழும் அனைத்து ஜீவராசியிலும் தன்னையே தான் காணுவதாய் அவனுக்குத் தோன்றும். ஒரு கணநேரம் தன்னை மறக்கும் அவனுக்கு அடுத்த கணம் தான் இருக்குமிடம் நினைவில் வந்து விடும். ஆனால் கண்ட காக்ஷி மறக்காது. ஏதோ ஓர் குரல் அவன் உள்ளிருந்து, “ நீ இவ்வுலகத்தைக் காக்கவென்றே பிறந்தவன். தர்மம் உன்னால் தான் காப்பாற்றப் படவேண்டும். அதற்குப் பாடுபடு!” என்று ஆணை இட்டுக் கொண்டே இருந்தது போல் தோன்றும். சில சமயம் அந்தக் குரலின் கூப்பாடு அதிகம் ஆகும். அப்போது அது தாங்க முடியாமல் கண்ணன் மலை மீது வேகமாய்த் தன்னந்தனியே ஏற ஆரம்பிப்பான். சில சமயம் தன் உணர்வுகளில் தான் கட்டுப்பாடுடன் நடந்து கொண்டால் தவிர முடியாது என்பது நன்கு புரியவர, தான் ஏதோ சாதிக்கப் பிறந்தவன், அதற்காகவும், உரிய தருணத்திறக்காகவும் தான் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது புரியும். காத்திருத்தல் எத்தனை நாள் என யோசிப்பான் கண்ணன்.

2 comments:

  1. \\\உரிய தருணத்திறக்காகவும் தான் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது புரியும். காத்திருத்தல் எத்தனை நாள் என யோசிப்பான் கண்ணன்.
    \\\

    ஒஒ...அப்போ அவருக்கே அவர் கடவுள் என்று தெரியாதா!! ?

    ReplyDelete
  2. ம்... இப்பதான் "கோவர்த்தன கிரிதார" நடனம் போய்க்கிட்டிருக்கு இங்கே :)

    ReplyDelete