எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 17, 2009

கண்ணன் வருவான்! கதை சொல்லுவான்! காளிங்க நர்த்தனம்!

நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த
அஞ்சனவண்ணனைப்பாடிப்பற
அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற. 5.

கோவர்த்தனகிரியின் ஒரு பக்கம் ஒரு பெரிய மடு இருந்தது. அதில் நிறையத் தண்ணீர் இருக்கும். தண்ணீர் இருப்பதால் ஆய்ச் சிறுவர்கள் தாங்கள் மேய்த்த மாடுகளை அங்கே அழைத்துச் சென்று நீர் அருந்த வைப்பதுண்டு. ஆனால் அதில் நீர் அருந்தின மாடுகள் உடனே இறந்துவிடும். காரணம் புரியாமல் திகைத்த ஆய்ச்சிறுவர்களுக்குப் பின்னர் தெரிய வந்தது அதில் கொடிய விஷ நாகம் ஒன்று இருக்கின்றது எனவும், அது தான் தன் விஷத்தைக் கக்குகின்றது என்றும் புரிந்தது.. சுற்று வட்டாரத்து மக்கள் அந்த நாகத்தைக் காலியன் என்றே அழைத்து வந்தனர். அந்தக் காலியன் அவ்வப்போது கக்கும் கொடிய விஷத்தால் அந்த நீரை அருந்தும் மாடு, கன்றுகள் இறந்து கொண்டிருந்தன. காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு அவன்
நீள்முடியைந்திலும்நின்று நடம்செய்து
மீளஅவனுக்கு அருள்செய்தவித்தகன்
தோள்வலிவீரமேபாடிப்பற
தூமணிவண்ணனைப்பாடிப்பற. 7


கண்ணன் இதைத் தெரிந்து கொண்டான். கண்ணனுக்கு இந்தப் பாம்புகளிடம் எப்போதுமே பயம் இருந்ததில்லை. ஒருமுறை ஒரு பெரிய மலைப்பாம்பு மாடு, கன்றுகளைத் தின்ன வர, கூட வந்த சிறுவர்கள் அனைவரும் பயந்து ஓட, கண்ணன் சற்றும் கலங்காமல் அந்தப் பாம்பை நெருங்கினான். அவன் கிட்டே வருவதைக் கண்ட மலைப்பாம்பு தன் வாயைத் திறக்கக் கையில் மறைத்து வைத்திருந்த கற்களை அதன் வாயில் கண்ணன் போட்டுவிட, ஏதோ உணவு என நினைத்த பாம்பு அதை விழுங்கப் பின்னர் இறந்தது. ஆகவே இப்போதும் இந்தக் காலியனிடமிருந்து ஆய்ப்பாடிச் சிறுவர்களையும் மாடு, கன்றுகளையும் காப்பது தன் பொறுப்பு எனக் கண்ணன் நினைத்தான்.

கண்ணனுக்கு ஏற்ற வகையில் பலராமனும் நன்கு வளர்ந்து அதீத பலத்துடன் இருந்தான். பலராமனின் கை முட்டி ஒரு சுத்தியல் போல வலுவுடன் மற்றவர் நெற்றியையோ, மண்டையையோ தாக்கும் வல்லமை பெற்றிருந்தது. இருவரும் சேர்ந்து தங்களைக்கொல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு கம்சன் அனுப்பும் நபர்களைத் தங்களை அறியாமலேயே எதிர்த்து வெற்றி கொண்டு வந்தனர். நந்தனின் மகன் கண்ணனின் இந்த அணுகுமுறை பற்றியும், பலராமன் வீரம் பற்றியும் பிருந்தாவனத்திலிருந்து பல செவிவழிச் செய்திகள் மதுரா நகரைப் போய் அடைந்தன. இப்போது காலியன் குடியிருக்கும் விஷப் பொய்கையில் கண்ணன் காலியனை வீழ்த்த நினைக்கின்றான்.

என்றும்போல் அன்றும் மாடுகளை மேய்த்துவிட்டு அந்தப் பொய்கையில் நீர் அருந்த மாடுகளை அழைத்துச் செல்லாமல் வேறு நல்ல நீர் இருக்குமிடம் செல்ல மற்றப் பையன்கள் யோசித்த வேளையில் கண்ணன் விஷப் பொய்கைக்குச் சென்றான். மற்றப் பையன்கள் பயந்து நடுங்க, கண்ணன் சற்றும் தயக்கம் இல்லாமல் பொய்கையைக் கூர்ந்து கவனித்தான். ப்ளாப்! ப்ளாப்! சத்தம் தொடர்ந்தது. பொய்கையின் நடுவில் ஆழமான பகுதியில் இருந்து முதலில் ஒரு வால் போன்ற பகுதி தென்பட்டது. மெல்ல மெல்ல தலையைத் தூக்கினான் காலியன் என்ற அந்த விஷ நாகம். தன் தலையைத் தூக்கிக் கரையில் இருக்கும் அனைவரையும் தனக்கு விருந்து என்ற மகிழ்வோடு பார்த்தானோ காலியன்?? கண்ணன் காலியனையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான். சுற்றிலும் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என ஊகித்துச் செயல்படுவதற்குள் கண்ணன் மடுவிலே பாய்ந்தான்.

வீல்,என்ற சப்தம். ஐயோ, என்ன?? என்ன ஆச்சு?? கண்ணன் எங்கே?? கண்ணா? கண்ணா?? ஒரே கூக்குரல். இதற்கு நடுவில் சில பையன்கள் மயங்கி விழ, ஸ்ரீதாமாவும், உத்தவனும் விருந்தாவனம் நோக்கி ஓட ஆரம்பித்தனர். உடனே சென்று நந்தனிடமும், யசோதா அம்மாவிடமும் சொல்லவேண்டும். ஆனால் அதுக்குள்ளே கண்ணன், கண்ணன்/// ஐயோ அவனுக்கு ஏதேனும் ஆகிவிட்டால்??? இருவரும் தலைகால் புரியாமல் ஓடினார்கள். இங்கே மடுவில்....... மடுவில் குதித்த கண்ணனுக்குக் காலியன் இருக்குமிடம் நோக்கி நீந்துவது ஒரு கஷ்டமான வேலையாகவே இருந்தது. நீர் ரொம்பவும் அசுத்தமாய் இருந்ததோடு அல்லாமல் பல்வேறுவிதமான நீர்ச் செடிகளும் கன்னா பின்னாவென முளைத்துக் கையிலும், காலிலும் மாட்டிக் கொண்டு, உடலில் சுற்றிக் கொண்டு கண்ணனை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. காலியன் தன்னிடத்திற்கு வந்திருக்கும் புதிய வரவை வரவேற்க முடியாமல் சீற ஆரம்பித்தான். வரட்டும், வரட்டும், வச்சுக்கறேன் உன்னை என்பது போல், சீறிவிட்டு வாலால் நீரை ஓங்கி ஓங்கி அடித்தான். நீர் கலங்கித் தெளிந்தது. கண்ணனை நோக்கிக் காலியன் முன்னேற ஆரம்பிக்க இறங்கும்போதேக் கையில் ஒரு பெரிய கயிற்றுடன் சென்றிருந்த கண்ணன் அந்தக் கயிற்றில் ஒரு சுருக்குப் போட்டு வீச, காலியனின் தலை படத்தோடு சேர்ந்து அந்தச் சுருக்கில் மாட்டிக் கொண்டது. காலியன் திணற ஆரம்பித்தான்.

விருந்தாவனம் சென்ற ஸ்ரீதாமாவும் உத்தவனும் அங்கே போய்ச் சொல்லுவதற்குள், மற்றச் சில பையன்கள் மூலம் விஷயம் தெரிந்து கொண்ட ராதையோ கண்ணனின் இந்தத் தற்கொலை முயற்சியால் அதிர்ச்சி அடைந்தாள். அவள் இதயமே வெடித்துச் சிதறிவிட்டதோ என்றே தோன்றியது அவளுக்கு. என்ன செய்கின்றோம், எங்கே இருக்கின்றோம் என்பதே புரியவில்லை. ஒரே ஓட்டம் தான். கோவர்த்தன மலையில் காலியனின் விஷப் பொய்கை இருக்குமிடம் நோக்கி ஓடினாள் ராதை. வேடுவனால் துரத்தப்படும் மான் உயிருக்குப் பயந்து ஓடும் ஓட்டத்தில் கூட வேகம் கம்மியாய் இருந்திருக்குமோ??? ராதை மடுவை அடைந்து மடுவின் உள்ளே பார்த்தால் மடுவில் நட்ட நடுவே ஒரு கையில் பாம்பின் வாலும் மற்றக் கையினால் அதன் வாயோடு கூடிய படத்தைக் கட்டிய கயிற்றால் பாம்பை அடக்கிக் கொண்டும் திணறிக் கொண்டிருப்பது போல் காட்சி அளித்த கண்ணனைக் கண்டாள். "கானாஆஆஆஆஆஆஆஆ!" அடுத்த கணம் ராதை மயங்கிக் கீழே விழுந்தாள். சுற்றி நின்றிருந்த மற்றவர் திகைத்தனர். விஷயம் தெரிந்து ஓடோடியும் வந்த நந்தனும், யசோதையும் ராதையின் நிலையைக் கண்டு செய்வதறியாது திகைத்தனர்.

1 comment:

  1. இப்படி தொடரும் போடும் பகுதிகளை இவ்வளவு தாமதமா எழுத கூடாது அம்மா! :)

    ReplyDelete