எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 05, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம்பாகம்

புநர்தத்தன் வர மறுக்கிறான்!

அரண்மனை மிகப் பெரியதாகக் கோட்டைக்கு நடுவில் அமைந்திருந்தது. அரண்மனனயின் ஒரு பாகம் கிருஷ்ணனுக்கும், கூட வந்தவர்களுக்கும் எனச் சித்தம் செய்து தயாராக வைக்கப் பட்டிருந்தது. கண்ணனையும், உத்தவனையும் அங்கே அழைத்துச் சென்றனர். கப்பலில் கூட வந்த மற்ற தொழிலாளிகளில் சிலர் இங்கே கண்ணனின் பணிவிடைக்கெனத் தயாராகக் காத்திருந்தனர். அழகிய இளைய இளவரசி கண்ணனை விட்டுப் பிரிய மனமின்றி விடைபெற்றுச் சென்றாள். அவள் செல்லும்போது மீண்டும் கண்ணனை வந்து பார்ப்பதாகச் சொல்லிச் சென்றதை, அவள் மொழி தெரிந்த ஒருவனால் மொழிபெயர்த்துக் கண்ணனுக்குச் சொல்லப் பட்டது. அனைவரும் சென்று தனிமை கிடைத்ததும், உத்தவனைப் பார்த்துக் கண்ணன், “உத்தவா, கடைசியில் ஒருவழியாகப் புநர்தத்தனைக் கண்டு பிடித்துவிட்டோம். ஆனால் இந்த நாககன்னிகைகளின் பிடியிலிருந்து அவனை விடுவித்து எவ்வாறு அழைத்துச் செல்வது என யோசிக்கவேண்டும்.” என்றான்.

“நாம் அபாயத்தில் இருக்கிறோம். இப்படி ஒரு விசித்திரமான உலகுக்கு வருவோம் என்பதை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஆனால்……ம்ம்ம்ம் எனக்கு ஒரு யோசனை, பார்க்கலாம், ஒருவேளை நாம் தப்பிச் செல்லக் கூட முடியும்.” என்றான் உத்தவன்.

சிறிது நேரம் கழித்து, கண்ணனைக் கப்பலில் சந்திக்க வந்த பெண் அதிகாரி, பட்டத்து இளவரசியின் மணாளனும், அடுத்த அரசனாகப் போகிறவனுமான இளவரசன் புநர்தத்தனை அழைத்துக் கொண்டு கண்ணனின் இருப்பிடம் வந்து சேர்ந்தாள். கண்ணனை அவன் வணங்கினான். ஒரு மாதிரியான தர்மசங்கடமான நிலை நிலவியது. யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை. என்ன பேசுவது? யார் ஆரம்பிப்பது என நினைத்தவர்கள் போல் மெளனமாகச் சிறிது நேரம் அனைவரும் இருந்தனர். பின்னர் கண்ணனே பேச ஆரம்பித்தான், “புநர்தத்தா, உன்னை ஒருவழியாகக் கண்டு பிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. “ புநர்தத்தன் என்ற பெயரால் அழைக்கப் பட்டதுமே அவன் முகம் வெளிறிப் பயம் சூழ்ந்துகொண்டது அவனை. சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான். கண்ணன் கண்களுக்கு அது தப்பவில்லை. எனினும் கவனிக்காதவன் போல் மீண்டும் தொடர்ந்தான். “குருதேவர் தன் ஆசிகளை உனக்குத் தெரிவிக்கச் சொன்னார். உன்னை அவரால் ஒரு க்ஷணம் கூட மறக்கமுடியவில்லை. அவர் மறக்கவும் இல்லை.” என்றான் கண்ணன்.

“நீ இங்கே வந்தது ஒரு துர்பாக்கியமே! வந்திருக்கவேண்டாம் நீ!” என்ற புநர்தத்தன் தன் அருகே நின்றிருந்த பெண் அதிகாரியைக் குறிப்பாய்ப் பார்த்துவிட்டு, “கண்ணா, இவளுக்கு நம் மொழி தெரியாது என்றும் எதுவும் புரிந்துகொள்ள மாட்டாள் என்றும் நினைக்காதே! நம் செய்கைகளில் இருந்து அனைத்தையும் புரிந்துகொள்ளும் சாமர்த்தியம் படைத்தவள் இவள்.” என்று வேகமாய்ச் சொன்னான்.

“எனில் நீ இங்கே ஒரு சிறைக்கைதியா? ம்ம்ம்ம்ம்?? பட்டத்து இளவரசி அடுத்த அன்னை ராணியாகும்போது நீ அடுத்த ராஜாவாகப் போகிறாய் என்றல்லவோ எண்ணினேன்?”

“ஆம், அது உண்மைதான். பட்டத்து இளவரசிக்கெனத் தேர்ந்தெடுக்கப் பட்டவனே நான். ஆனால் உன்னிடம் உண்மையை உள்ளபடி சொல்கிறேன் கேட்டுக்கொள், கண்ணா. நீ இப்போது இங்கே வந்தது எனக்குத் துளிக்கூடப் பிடிக்கவில்லை. உன் வரவால் அனைவருக்கும் ஏதோ ஆபத்து ஏற்படப் போகிறது என்று தோன்றுகிறது.”

“ஏன்?? உன்னை மீண்டும் குருதேவரிடம் அழைத்துச் சென்று ஒப்படைக்கவே நான் விரும்பி வந்துள்ளேன். நீ இல்லாமல் அவருக்கு மன மகிழ்ச்சியே இல்லை.” என்றான் கிருஷ்ணன்.

“ஹா, ஹா, ஹா, என் தந்தை! அவர் என்னை இறந்தவனாக ஏன் நினைத்துக்கொள்ளக் கூடாது? அவர் அப்படி நினைப்பதே எனக்கும் சந்தோஷமாக இருந்திருக்குமே. என்னால் அவரிடம் திரும்பிச் செல்லமுடியாது.” என்று திட்டவட்டமாக மறுத்தான் புநர்தத்தன். பின்னர் மெதுவாய்த் தனக்குத் தானே பேசிக்கொள்வது போல், “ நான் போகவேண்டுமென நினைத்தாலும், அதுநடவாத ஒன்று.” என்று சொன்னான். “என்ன ஆயிற்று புநர்தத்தா? நம்முடைய புனிதமான நாட்டையும், அதன் சநாதன தர்மத்தையும் முற்றிலும் மறந்து போனாயா?” என்றான் கண்ணன். புநர்தத்தன் ஒரு பெருமூச்சு விட்டான்.

“வாசுதேவக் கிருஷ்ணா, கேள், கடந்த ஒருவருஷ நாகலோக வாழ்க்கையில் அமிழ்ந்து போன எனக்குத் திரும்பவும் என் தந்தை நடத்தும் அந்தக் கஷ்டமும், ஊருக்கு ஊர் செல்லும் நாடோடி வாழ்வும் பிடிக்குமெனத் தோன்றவில்லை. ஆம், உண்மைதான், இங்கே வந்த சில நாட்கள், அல்லது ஒரு மாதம்?? எனக்கு இங்கே எதுவுமே பிடிக்கவில்லைதான். திரும்பி நம் நாட்டிற்குச் செல்லவும் நினைத்தேன் தான். ஆனால் நாளாக, நாளாக இந்த சுகங்கள் என்னைத் தங்கள் அடிமையாக்கிவிட்டன. இங்கே உள்ள ஆடம்பர வசதிகளில் வாழ்ந்து பழக்கப் பட்டுவிட்டேன். ஓரளவு எனக்கெனத் தனியான அதிகாரங்களும் அளிக்கப் பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேல், லாரிகா, பட்டத்துக்குரிய இளவரசி, என்னை மகிழ்விப்பதிலேயே தன் கருத்தைச் செலுத்தி,எல்லா விதங்களிலும் என்னை மகிழ்வித்து வருகிறாள். அவளிடமிருந்து பிரிந்து செல்வதென்றால், ம்ஹும், அது என்னால் ஆகாத ஒன்று. ம்ம்ம் உனக்குப் புரியாது கண்ணா, புரியவே புரியாது. நீ நம் நாட்டுப் பெண்களின் மத்தியில் வாழ்ந்தவன். அவர்களுக்கு எனச் சிலக் கட்டுப்பாடுகளும், நாகரீகங்களும், சில விதிகளும் உண்டு. அவற்றைக் கடைப்பிடித்துக் கட்டுப்பாடான வாழ்க்கை வாழும் பெண்கள் நம் நாட்டுப் பெண்கள். இந்த நாக கன்னிகைகளோடு ஒரு நாள் வாழ்ந்தவனால், அந்தப் பெண்களோடு வாழ்வதை நினைத்தும் பார்க்கமுடியாது.” இதைச் சொல்லும்போது புநர்தத்தனின் குரல் மிக மிக மெதுவாகத் தயக்கத்துடனே ஒலித்தது.

கண்ணனுக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம். நம் குருதேவரின் மகனா இப்படிப் பேசுவது? “என்ன ஆயிற்று புநர்தத்தா உனக்கு? நீ ஒரு அருமையான தவ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாய். உனக்கு அது நினைவிலாவது உள்ளதா? ஆஹா, நம் நாட்டின் ரிஷி, முனிவர்கள், ரிஷி பத்தினிகள்! அவர்களின் தவ வாழ்க்கையும் ஒழுக்க சீலமும், உன் நினைவிலாவது உள்ளனவா? அல்லது இந்த நாகலோகத்து உணவு, உடைகள், ஆடம்பர வாழ்க்கை, நாக கன்னிகையின் அழகு ஆகியவற்றில் மூழ்கிப் போய் உன்னுடைய கடமைகளை மறந்துவிட்டாயா? ஒரு ஆர்யனான உனக்கு உன் கடமைகளையும், கடைப்பிடிக்கவேண்டிய தர்மத்தையும் பற்றி நான் சொல்லவேண்டாம். அவைகளை விடுத்து நீ இந்த சிற்றின்ப வெள்ளத்திலேயே மூழ்கி இருக்கப் போகிறாயா?? எந்த ஆரியனும் இது வரை இதைத் தன் வாழ்க்கையின் லக்ஷியமாய்க் கொண்டதில்லை என்பதையும் அறிவாயல்லவா?”

கண்ணன் சற்றே நிறுத்திவிட்டுப் புநர்தத்தனைக் கனிவுடனும், இரக்கத்துடனும் பார்த்தான். பின்னர் மிகவும் மென்மையாக, அதே சமயம் உறுதியும், கருணையும் நிரம்பிய குரலில், “புநர்தத்தா, உண்மையில் எனக்கு மிகவும் சந்தோஷம், எதற்குத் தெரியுமா? அனைத்துக் கடவுளரும் சரியான சமயத்தில் என்னை இங்கே அநுப்பி வைத்து உன்னை இந்த நரகத்திலிருந்து மீட்கும் வாய்ப்பைக் கொடுத்ததுக்கு. நான் நினைப்பது சரி என்றால், நீ இங்கே இருக்கும் ஒவ்வொரு நிமிஷத்தையும், உன்னுடைய அதிகாரமோ, அல்லது இந்த ஆடம்பர வாழ்க்கையையோ மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் கடந்து கொண்டிருக்கிறாய். எப்போது வேண்டுமானாலும் உன்னுடைய அதிகாரம் பறிபோகலாம், உன் உயிருக்கே ஆபத்து நேரிடலாம். இந்த ஆடம்பரமும், அதிகாரமும் நிலைத்து நிற்கப் போவதில்லை என்பதை அறிந்திருக்கிறாய் என்றே எண்ணுகிறேன். இந்தச் சூழ்நிலையிலும் நீ உன்னுடைய தந்தையும் என்னுடைய குருவுமானவரிடம் திரும்ப மறுக்கிறாயா? நீ ஒரேயடியாக அதல பாதாளத்தில் விழுந்துவிடவில்லையே புநர்தத்தா??” புநர்தத்தன் முகத்தை இனம் தெரியாத ஓர் உணர்வு கவ்வியது.

“கண்ணா, உண்மையில் என்னுடைய உயிருக்குப் பயந்தே நான் வர விரும்பவில்லை. வைவஸ்வதபுரியை விட்டுத் தப்பிக்க நான் நினைத்த அடுத்த நிமிஷம் என் உயிர் என்னுடையதில்லை. அதோடு உண்மையாகவே இந்த ஆடம்பரங்களும் என்னைக் கவர்ந்துவிட்டன. இவற்றை விட்டு விலகிக் கஷ்டமானதொரு வாழ்க்கையை வாழவேண்டும் என நினைக்கக்கூட என்னால் முடியவில்லை. சாந்தீபனியின் மகனாக இங்கே வந்த நான் முதலில் இந்த வாழ்க்கையை வெறுத்தேன் தான். ஆனால் இப்போதே இது தான் வாழ்க்கை என்ற உணர்வு என்னிடம். வாழ்ந்தால் இப்படி வாழவேண்டும் என்றே நினைக்கிறேன். நீ சொல்லும் அந்த ஆதர்ச வாழ்க்கையை வாழவேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இப்போது இல்லை.”

ஆஹா, புநர்தத்தா, சேற்றில் புரளும் பன்றியைப் போல இப்படி ஒரு வாழ்க்கையை நீ உண்மையாகவே விரும்புகிறாயா? ஒரு வளர்ப்பு நாயைப் போல உன்னைத் தங்கள் இஷ்டத்திற்கு வளைத்து ஆதாயம் தேடிக்கொள்ளும் பெண்களின் கூட்டுறவில் உண்மையாகவே சுகம் காண்கின்றாயா? ஒவ்வொரு நிமிஷமும் உன் உயிருக்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. இந்திரிய சுகத்துக்கு நீ அடிமையாகிவிட்டாயா? இப்படிப் பட்ட ஒரு போலியான வாழ்க்கையும் ஒரு வாழ்க்கை என்றா சொல்லுகிறாய்?”

“ஹா, என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள் கண்ணா. ஆம், நான் சேற்றில் புரளும் ஒரு பன்றிதான். வளர்ப்பு நாய்தான். இதை என்னால் எப்படி விடமுடியும்? நான் இதற்குப் பழகிவிட்டேன். இப்போது இந்த வாழ்க்கையை வாழ்வது என்னுடைய அத்தியாவசியத் தேவை என்றே வைத்துக்கொள்.” என்றான் புநர்தத்தன்.

“அது சரி! ஒரு நாக கன்னிகை உனக்குக் கொடுக்கும் சில நிமிட இன்பங்களே பெரியதல்லவா? அதை விட உன் தந்தையாரோ, உன் முன்னோர்களோ, எப்படிப் பட்ட முன்னோர்கள்? அறிவாயன்றோ? உன் தந்தை ஒவ்வொரு நிமிஷமும் அநுபவிக்கும் துயரமும், ஒன்றுமே இல்லைதான். அதெல்லாம் இந்த நாக கன்னிகை உனக்குக் கொடுக்கும் இன்பங்களை விடப் பெரியது அல்லவே அல்ல. இல்லையா?” கண்ணன் குரலில் சற்றே இகழ்ச்சி தெரிந்தது. “உன்னுடைய முன்னோர்களுக்கு நீ செலுத்த வேண்டிய மரியாதை எதுவுமே இல்லை. ஒரு மனிதன் எப்போது தன் தந்தையை அவமதிக்க ஆரம்பிக்கிறானோ, அவன் மனிதனே அல்ல.” மென்மையாகப் பேசினாலும் கடுமை தெரியப் பேசினான் கண்ணன்.

8 comments:

 1. சிற்றின்பத்தின் பிடியில் சிக்கினால் மற்றவை மறந்து போகும்

  ReplyDelete
 2. வாங்க தாத்தா, கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 3. எப்படி புநர்தத்தன்னுக்கு தெளிவு படுத்தி கூட்டிக்கிட்டு போவரோ கண்ணன்!!

  ReplyDelete
 4. புனர்தத்தனோட PLIGHT அ பார்த்தா Reality ல பெரும்பான்மயானவர்களோட வாழ்க்கையும் அப்படி ஆகிடறதோ இந்தக் காலத்து "intellectual, convenience spirituality மாதிரினு தோனறது Mrs Shivam.

  ReplyDelete
 5. கோபி, பொறுத்திருந்து பாருங்க.

  ReplyDelete
 6. ஜெயஸ்ரீ, நீங்க சொல்லறது தான் எழுதும்போது நானும் நினைச்சது. நன்றி.

  ReplyDelete
 7. குருவின் மகன் கிருஷ்னனைக் காப்பாற்றி திருப்பி அனுப்ப வேண்டும் என்று நடிக்கின்றான். அல்லது நாக கண்ணிகை கிருஷ்னனின் எண்ணங்களைத் தெரிந்து கொண்டு அவனை திருப்பி அனுப்ப செய்த மாயம் ஆக இருக்க வேண்டும். சரி பொறுத்துப் படிக்கின்றேம்.

  மாமியார் இப்ப நலமா?, தாங்களும் நலமா? நன்றி.

  ReplyDelete
 8. வாங்க பித்தனின் வாக்கு, இருவரும் நலமாகவே இருக்கோம். :))))) ம்ம்ம் பொறுத்திருந்து படிங்க. :D

  ReplyDelete