எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 30, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2ம் பாகம்

கண்ணன், புநர்தத்தன் இருவருக்கும் ஆபத்து!


கிருஷ்ணன் சிரித்தான். “நீ நான் இல்லை என்ற உடன் இறந்து போவாய், ஆனால் என்னுடன் நான் இருக்குமிடைத்துக்கு என்னுடைய நாட்டுக்கு மட்டும் வரமாட்டாய், அல்லவா?” என்றான்.

“இல்லை, கண்ணா, இல்லை, எந்த நாககன்னிகையும் அவளின் இருப்பிடமான இந்த நாகலோகத்தை விட்டு வெளியே செல்லமாட்டார்கள். அவை தேவிமாதாவின் கட்டளைகள். எவரும் இன்று வரை மீறியதில்லை. நான் மட்டும் எப்படி மீறுவேன்?” என்றாள் ஆஷிகா. அடக்கமாட்டாமல் கண்ணன் சிரித்தான். “ஆகக்கூடி நான் இருந்தால் நீ இருப்பாய், நான் இறந்தால் நீயும் இறப்பாய், ஆனால் நான் எங்கே போனாலும் என்னோடு வந்து வாழ மட்டும் தயாராக இல்லை, அல்லவா?” பேச்சு வராமல் திகைப்புடன் கண்ணனையே பார்த்தாள் ஆஷிகா. இப்படியும் ஒரு வழி உண்டா?? “ என்னை உன்னுடன் அழைத்துச் செல்வாயா?” கண்ணனைக் கெஞ்சினாள் அவள். கண்ணன் அவள் கண்களூடே பார்த்தான். அவள் உண்மையாகவே வர விரும்புகிறாள் என்பதைப் புரிந்து கொண்டான். தெய்வீகத் தந்தை கூறியது உண்மையே. ஆஷிகா மற்ற நாகப் பெண்களிடமிருந்து வித்தியாசமானவளே.

“அழைத்துச் செல்வேன் கட்டாயமாய், ஆனால் அதற்கு நான் உயிர் பிழைத்திருக்கவேண்டுமே!” என்றான் கண்ணன். மறுபடி அழ ஆரம்பித்தாள் ஆஷிகா. “நீ இல்லாமல் நான் இருக்கமாட்டேன், கண்ணா!” என்றாள் ஆஷிகா. “ஆஹா, நான் உயிரோடு இருக்கவேண்டுமென்றால் இளவரசனோடு சண்டை போட்டு அவனைக் கொல்லவேண்டும், அல்லது என்னையும் இளவரசனையும் தெய்வீகத் தந்தை கொன்றுவிடுவார். அப்போது நீயும் இறந்துவிடுவாய்!” பரிகாசத் தொனியில் கண்ணன் பேசினான்:’ என்ன செய்யலாம் இப்போது? நீ தான் இந்த இடத்தை விட்டும் வரமாட்டாய்!”

“இல்லை, இல்லை, நான் உன்னுடனே வருகிறேன். எனக்கு இந்த இடமோ, இந்த மக்களோ எவரையும் பிடிக்கவில்லை. என் அன்னைக்கோ என் அக்காவான லாரிகாவிடமே பற்றும், பாசமும் அதிகம். நான் அவளுக்கு ஒரு பொருட்டல்ல. உன்னுடனேயே வருவேன்.” கண்ணன் கண்ணீரினூடே சிரிக்கும் அவள் முகத்தைப் பார்த்தான். அடுத்த நாள் நாகலோகத்து மனிதர்கள் அனைவருமே நன்றாக அலங்கரித்துக்கொண்டு நடக்கப் போகும் போட்டியைக் காணத் தயாரானார்கள். துறைமுகத்துக்கு அருகில் கப்பலுக்குச் செல்லும் வழியை அடைத்து போடப் பட்டிருந்தது மேடை. ஒரு பக்கம் நதியானது கடலில் சேரும் இடமாகவும், மறுபக்கம் கடலில் இருக்கும் கப்பலுக்குச் செல்லும் இடமும் இருந்த இடத்தினருகே வெட்ட வெளியில் அமைக்கப் பட்டிருந்த மேடைக்குப் பின்புறம் தெரிந்த நீண்ட படிகளின் மூலம் கடலுக்குச் செல்லும் வழியெல்லாம் ஆயுதம் தாங்கிய பெண்காவலர்கள் நிறுத்தப் பட்டிருந்தனர். புண்யாஜனா கப்பலில் இருந்து வந்த பிக்ருவும், அவனுடைய ஆட்களும் அந்தப் படிகள் கடலில் முடியும் இடத்திற்கருகே நின்று கொண்டு இங்கே பார்த்துக்கொண்டிருந்தனர். படிகள் ஆரம்பிக்கும் இடத்துக்குச் சற்றுத் தள்ளி உத்தவன் ஹூக்குவுடனும், ஹூல்லுவுடனும் நின்று கொண்டிருந்தான்.

சரியான நேரம் வந்ததும் தேவிமாதா ஆவிர்ப்பவித்திருந்த உடலோடு கூடிய அன்னை ராணி, மரகதக் கற்கள் பதிக்கப் பட்ட வாயிலைத் திறந்து கொண்டு வெளிப்பட்டாள். அவளுடன் தெய்வீகத் தந்தையும், பட்டத்து இளவரசியும், மற்ற உயர் அதிகாரிப் பெண்களும் காணப்பட்டனர். பெருந்திரளாகக் கூடி இருந்த மக்கள் கூட்டம் உற்சாகக் கூச்சலுடன் ராணி மாதாவை வரவேற்றனர். நாகலோகத்தின் மிக உயர்ந்த, உந்நதமான திருவிழா என அவர்களால் கொண்டாடப் பட்ட இது, அவர்களை மிகவும் உற்சாகப் படுத்தியது. என்னதான் இந்தப்போட்டியின் முடிவில் எவராவது ஒருவரின் உயிர் எடுக்கப் பட்டாலும் இதன் மூலம் அடுத்த பட்டத்து இளவரசன் யார் எனத் தெரிய வருவதோடு அடுத்த அன்னை ராணியின் எதிர்காலமும் முடிவு செய்யப் படுகிறது.

வாத்தியங்கள் முழங்கத் தொடங்கின. சங்குகள், எக்காளங்கள் ஊதப்பட்டன. பின்னர் நீண்ட நிசப்தம். அதன் பின்னர் அன்னை ராணி கையசைக்க, புநர்தத்தன் ஒரு பக்கமும், கண்ணன் இன்னொரு பக்கமிருந்தும் வந்து அன்னை ராணியை முதலில் வணங்கினர். பின்னர் தெய்வீகத் தந்தையையும் வணங்கினார்கள். கூட்டம் ஆரவாரிக்க இருவரும் போட்டி நடக்கப் போகும் மேடையை நோக்கிச் சென்றனர். செல்லும்போதே மெல்லிய கிசுகிசுப்பான குரலில் புநர்தத்தன் கண்ணனிடம், “வாசுதேவா, ஒருவேளை… ஒருவேளை, நான் உன்னைக் கொன்றுவிட்டேனானால்??? என்னை மன்னிப்பாயா?” இரங்கிய குரலில் கேட்டான் புநர்தத்தன்.

“இதோ பார் சகோதரா, நீயும் என்னைக் கொல்லப் போவதில்லை. நானும் உன்னைக் கொல்லப் போவதில்லை. உன் திறமை முழுதும் காட்டிச் சண்டை போடு. நான் உன்னுடைய குரு மூலமான சகோதரன் என்பதை மறந்துவிடு.” என்றான் கண்ணன்.

“ம்ம்ம் அவந்தியில் தந்தை இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பாரோ? என்னை நினைந்து ஏங்கிக்கொண்டிருப்பார்.” என்று துக்கம் தொண்டையை அடைக்கச் சொன்னான் புநர்தத்தன். “அதை எல்லாம் நினைத்துக் கலங்காதே. உன் தந்தையும் என் குருவும் ஆன சாந்தீபனிக்கு எப்படியேனும் உன்னைக் கொண்டு வந்து சேர்த்துவிடுவதாய் வாக்களித்திருக்கிறேன். அதை நான் எவ்வாறேனும் நிறைவேற்றியாகவேண்டும். அது என் தர்மம், என் அறம், என் கடமை!” என்றான் கண்ணன். போட்டி நடைபெறும் மேடையை இருவரும் நெருங்கினார்கள். புநர்தத்தனுக்கோ கண்ணன் மேல் கைவைக்கவே மனம் வரவில்லை. ஆனாலும் அன்னை ராணியின் கட்டளையை மீற முடியாமல் அவள் கையசைக்கவும் அங்கிருந்த வாள்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு வீச ஆரம்பித்தான். கண்ணனும் வாள் ஒன்றை எடுத்து வீச ஆரம்பித்தான். அவன் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சியிலே மட்டுமே ஈடுபட்டதைக் கவனித்த புநர்தத்தன் தன் போர்முறையை மாற்றிக்கொண்டான்.

அதைக் கவனித்த கண்ணன் அவனிடம், “முட்டாள் தனமாய் நடக்காதே! போரிடு!” என்று சொல்லிவிட்டுத் தன் உக்கிரமான வாள் வீச்சைக் காட்ட ஆரம்பித்தான். புநர்தத்தன் கண்ணன் வாள் வீச்சில் அபாரத் தேர்ச்சி பெற்றிருப்பதைக் கவனித்தான். அவனுடைய ஒவ்வொரு வீச்சுக்கும் தக்க பதில் கண்ணனிடமிருந்து கிடைத்ததையும் பார்த்துக்கொண்டான். முதலில் சற்று ஆர்வமின்றிச் சண்டைபோட்டுக்கொண்டிருந்த புநர்தத்தன் பின்னர் கண்ணனின் வாள் வீச்சில் கவரப்பட்டு, முழுமையாக ஆகர்ஷிக்கப் பட்டுத் தானும் வாளை வீசிப் போரிட ஆரம்பித்தான். வாள் போர் உக்கிரமானது. சுற்றி இருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது. இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை எனப் புரிந்து கொண்ட கூட்டம் யார் ஜெயிப்பார்களோ என்ற ஆவலுடன் காத்திருந்தது. எத்தனை உக்கிரமாய்ச் சண்டை போட்டாலும் இருவரும் மற்றவரை வீழ்த்துவதில் ஆர்வம் காட்டவில்லை. இது சுற்றிக்குழுமி இருந்த மக்களுக்கு மட்டுமின்றி, அன்னை ராணிக்கும், அவள் பட்டத்து இளவரசிக்கும் கொஞ்சம் ஆச்சரியமும், விநோதமுமாய் இருந்தது. ஆஷிகாவோ அடுத்து என்ன நடக்குமோ என்று ஆவல் மீதூரக் கவனித்துக்கொண்டிருந்தாள்.

இருவரில் எவர் ஜெயிப்பாரோ என்பதில் மக்களுக்கு அலுப்பும், சலிப்பும் ஏற்படத் தொடங்கிய வேளையில் கண்ணன் தன் கைவாளால் புநர்தத்தன் வாளைத் தட்டிவிட்டுவிட்டுத் தன் வாளையும் தூக்கி எறிந்தான். மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு வாள் சண்டையைக் கண்டதில்லை. இருவருமே ஒருவருக்கொருவர் சமானமானவர்களாக இருந்ததோடு ஒரு சொட்டு ரத்தம் கூடச் சிந்தவும் இல்லையே? அடுத்து என்ன? கண்ணனும், புநர்தத்தனும் ஒருவரை ஒருவர் தங்கள் கைப்பிடிகளால் இணைத்து மல்யுத்தம் புரிய ஆரம்பித்தனர். புநர்தத்தன் அவ்வளவு தேர்ந்தவன் அல்ல எனினும், கிருஷ்ணனின் எண்ணம் தன்னைக் கொல்லுவது அல்ல என்றோ, ஜெயிப்பதும் அல்ல என்றோ புரிந்து கொண்டுவிட்டான். எனினும் அடுத்து என்ன என்பதை அவனால் நிச்சயிக்க முடியவில்லை. அதுவரையிலும் தானும் கண்ணனோடு மல்யுத்தம் செய்வதைப்போன்று நடிக்கவேண்டும் என்றவரையில் புரிந்து கொண்டான். கண்ணனின் விருப்பமும் அதுவே எனத் தெரிந்து கொண்டுவிட்டான். இருவரும் மல்யுத்தம் செய்தனர். கைகளால் வளைத்து ஒருவரை ஒருவர் அமுக்க முயன்றனர். கீழே விழுந்து புரண்டனர். ஒருவரை மற்றொருவர் தூக்கி வீசி எறிந்தனர். ஆனால் உடனேயே எழுப்பியும் விட்டுக்கொண்டனர். இது முடிவதாய்த் தெரியவில்லை. உண்மையில் சண்டை போடுகிறார்களா? அல்லது விளையாடுகின்றனரா?

அன்னை மாதாவின் முகம் கோபத்தில் சிவந்தது. மேற்கே அஸ்தமனச் சூரியன் மறையப் போகிறான். இந்த விளையாட்டு ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. மக்கள் கூட்டமும் ஏதோ சதிவேலை நடந்து கொண்டிருக்கிறது என்பதைப்புரிந்து கொண்டாற்போல் இருவரில் ஒருவரின் உயிரைக் கேட்டுக் கத்தினார்கள். அன்னை ராணி கண்ணசைக்க, தெய்வீகத் தந்தை வேறுவழியில்லாமல் தன் கடமையை நிறைவேற்ற எழுந்து நின்றான்.

“இருவரில் ஒருவரும் இறக்கவில்லை என்பதால் தேவிமாதாவின் கட்டளையை நான் நிறைவேற்றியாகவேண்டும். “ என்றான். அவன் முகமும் கடுமையாக இருந்தது. அடுத்த நிமிடம் அவன் வாளை வீசி இருவரையும் கொல்லப் போவதை எதிர்பார்த்துக்கொண்டு மக்கள் காத்திருந்தனர். அன்னை ராணியின் முகம் சவம் போல் வெளுத்துக்காணப்பட்டது. எந்தவிதமான உணர்வுகளையும் அது காட்டவில்லை. கடைசியில் ஒருவருக்குப் பதிலாக இருவர் ரத்தமும் சிந்தப் போகிறது. கூட்டம் அதை நினைத்து ஆரவாரத்தோடு கோஷம் போட்டுக்கொண்டு அதைக் காணப் பரபரத்தனர். தன் இருப்பிடத்திலிருந்து இறங்கிய மன்னன் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த மேடைக்கு வந்தான்.

2 comments:

  1. பாட்டி மறுபடியும் முக்கியமான எடத்துல நிறுத்தி ஆச்சு

    ReplyDelete
  2. \\LK said...
    பாட்டி மறுபடியும் முக்கியமான எடத்துல நிறுத்தி ஆச்சு
    \\

    ரைட்டு..ரைட்டு..;)

    ReplyDelete