எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 11, 2010

மனசே சரியில்லை! :(

சமீபத்தின் மனதைப் பதற வைக்கும் சம்பவங்கள் சில: வெள்ளைப் பூனைக்குட்டியை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்துக் குதறிப் போட்டுவிட்டன. அதுக்கு முன்னாடியே கால் முளைச்சுப் பூனைக்குட்டி வெளியே போயிட்டு இருந்ததைத் தடுத்துப் பார்த்தோம். முடியலை, எப்படியோ தப்பிச்சுண்டு வந்துட்டு இருந்தது, சரி, அதுக்கும் உலகம் தெரியணுமேனு இருந்துட்டோம். ஒரு நாள் பாத்ரூமின் மேற்கூரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஒரே அலறல். என்னனு பார்த்தால் அடுத்த வீட்டுக் காம்பவுண்டின் உள்ளே நாய் நின்று கொண்டு உறுமிட்டு இருந்தது. பூனைக்குட்டியை முறம் வைத்து, பெரிய தாம்பாளம் வைத்துக் கீழே இறக்கிப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பச் செய்த முயற்சிகள் பலிக்கலை. அதுக்கு ஒரே பயம். கீழேயே இறங்க மறுத்துவிட்டது.

அப்புறமா ஒருநாள் எப்படியோ தெருவுக்கு ஓடித் தெரு நாய் கிட்டே மாட்டிண்டு பயந்து ஓடி வந்து கத்திண்டு இருந்தது. அம்மாக்காரியும் எங்கே இருந்தோ வந்துட்டா. குட்டியைத் தூக்கிண்டு போய் வேப்பமரத்துக் கிளையில் வச்சுட்டுக் கீழே இறங்கி மற்றக் குட்டிகளையும் காப்பாற்ற வரதுக்குள்ளே ஒரு குட்டி எங்கேயோ போய் ஒளிஞ்சுட்டு இருந்திருக்கு. மற்றொன்றைக் காணவேஇல்லை. அதான் வெள்ளைக் குட்டி. இருந்த ஒரு குட்டிக்குக் காவலாய் அம்மா வேப்பமரத்தை விட்டுக் கீழே இறங்கவே இல்லை. இரவு ஏழு மணி இருக்கும். மரத்தில் இருந்த பறவைகள் வேறே கன்னாபின்னாவென்று கூச்சல் போடுதுங்க. நாய் வர முடியாதபடிக்கு வாசல் காம்பவுண்டு கேட்டைப் பூட்டினோம். ஆனால் என்ன துரதிர்ஷ்டம். ரோடு போடறதுக்குனு கொட்டி வச்சிருக்கிற கிராவல் மேலே ஏறிக் கேட்டின் மேலேயும் ஏறி நாய் உள்ளே வந்தாச்சு. அதை எப்படியாவது வெளியே அனுப்பணும்னு சுத்திச் சுத்திப் போய் நம்ம ரங்க்ஸ் அதை ஒரு வழியா வெளியே அனுப்பினார். வெளியேத்தற முயற்சியிலே நம்மையே பைரவர் கடிச்சிட்டா என்ன பண்ணறது? அது வேறே பிரச்னை!

பூனை தன் குட்டிகளோட மரத்தின் மேலே பாதுகாப்பா இருக்குனு இருந்தோம். மறுநாள் பார்த்தாப் பக்கத்துவீட்டு மாமி வெள்ளைக் குட்டியைக் கடிச்சுக் குதறிடுச்சுங்கனு சொன்னாங்க. முதல்லேயே அதைக் குதறிப் போட்டுட்டுத் தான் மத்த குட்டிங்களுக்கும் வந்ததுங்கறாங்க. மனசே சரியா யில்லை. ரொம்ப அழகா விளையாடும் வெள்ளைக் குட்டி. அதுதான் கொழுக், கொழுக் னும் இருந்தது. பழகிட்டதாலே என்னைக் கண்டால் பயமும் போயிருந்தது. பேசினால் மியாவ் பாஷையில் பேசும். மறு நாள் எந்தப்பூனைகளுமே இல்லை. இன்னைக்கு ஒரே ஒரு குட்டி மட்டும் வந்திருக்கு. ரொம்ப அழுகை. அம்மாவும் இல்லாமல் கூடப் பிறந்தவங்களும் இல்லாமல் தனிமை பிடிக்கலை போலிருக்கு அதுக்கு. பார்க்கப் போனால் வெளியே வராமல் ஒளிஞ்சுக்கறது. என்ன ஆகுமோ தெரியலை. பூனை எலியைப் பிடிச்சுட்டு வந்தப்போ எலிமேல் உண்டாகாத கருணை, இப்போ நாய்,குட்டியைக் குதறினப்போ மட்டும் ஏன் வரணும்?? மூணுநாளாய் இந்தக் கேள்வி தான் துளைக்குது!

அடுத்துக் காக்கை,குயில் சண்டை. குயில்குஞ்சு வளர்ந்துடுத்து போல. குரலும் வந்திருக்கு. அன்னிக்குப் பார்த்தால் எலுமிச்சை மரத்தில் அடர்ந்த பாகத்தின் உள்ளே உட்கார்ந்து கத்திட்டிருந்தது. சரி, நைசாப் படம் பிடிச்சுடலாம்னு உள்ளே இருந்து காமிரா எடுத்துட்டுப் போறதுக்குள்ளே, எங்கே இருந்தோ வந்த ஒரு காக்காய், (அதோட கூட்டிலே வளர்ந்திருக்கும் போல இந்தக் குயில் குஞ்சு) அதைக் கொத்த ஆரம்பிச்சது. குயில் குஞ்சு கத்திண்டே ஓடிப் போனது. இன்னும் சரியாப் பறக்கத் தெரியலை. எல்லாத்துக்கும் அம்மா இருந்து எல்லாம் கத்துக் கொடுக்கிறது. இந்தக் குயிலுக்கு மட்டும் ஏன் இப்படினு புரியலை. பறக்க முடியாமல் காம்பவுண்ட் சுவரின் வேலியிலே உட்கார்ந்தது. நாலைந்து காக்காய்களாக வந்து கொத்த ஆரம்பிச்சுடுத்து. எல்லாம் ஒரு குடும்பம் போல. காக்காயை மட்டும் விரட்டலாம்னு பார்த்தால் முடியலை. எல்லாம் ஓடிப் போயிடுச்சுங்க. மற்றப் பறவைகள் எல்லாம் பார்த்துட்டு இருக்கும் போல. எதுவுமே குயில் குஞ்சின் உதவிக்கு வரலை. அது தனியாவே போராடுது. ஜெயிக்கும் தான் இல்லைங்கலை. ஆனால் பிறக்கும்போதே இன்னொரு பறவையின் கூட்டில் பிறந்து, வளர்ந்து, அப்புறம் தன் குஞ்சு இல்லைனு தெரிஞ்சு அது விரட்டிக் கொத்திப் போராடி, ஜெயிச்சு, அப்புறமாய் வளர்ந்து பெரிசாகிக் குயில் ஆணானால் "கூ,கூ" னு கத்திப் பெண் குயிலை அழைச்சு, மறுபடியும் தொடர்ச்சியாக முன் சொன்ன நிகழ்வுகளே நடக்கும் :( குயிலுக்கு மட்டும் ஏன் தனியாய்க் கூடு கட்டிக்கும் வசதி இல்லை? இன்னொரு பறவைக்கூட்டை ஏன் அதுக்கும் தெரியாமல் பயன்படுத்திக்கிறது?, ஏன் இப்படி??

17 comments:

 1. தலைப்பு இப்படியா வைக்கறது. என்னமோ ஏதோனு நினச்சிட்டேன் நான்

  ReplyDelete
 2. முதல் நிகழ்வு என் மனதையும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியது.

  பூனை எலியை பிடித்தது , நாய் பூனையை பிடித்தது .

  இந்த மாதிரி உணர்வு ரீதியான பாதிப்புகள் நமக்கு வரக் கூடாது என்பதால் தானோ அந்த காலத்தில் மனிதர்கள் பூனை, நாய்கள் போன்ற விலங்குகளை வீடுகளை விட்டு விலக்கியே வைத்து இருந்தனரோ.

  ReplyDelete
 3. அடடா :( பூனாச்சி குட்டிக்கு இப்படி ஆயிடுத்தா:(( பாவம். spcaல குடித்திருக்கலாமோ?. ஆனா பாவம் அதுவும் அந்த அம்மா பூனாச்சிக்கு எத்தனை கஷ்டமா இருக்கும். தெரு நாய் ரொம்பவே பயம் தான். இங்க வீட்டுல வளக்கற பிட்புல் டெரியர், ஹஸ்கி, டாபர்மன் எல்லாம் மனுஷாளையே கடிச்சு கொதரி எடுத்திடும். போஸ்டி, சின்ன குழந்தைகள், வயசானவ்ங்க, ஏன் நாய் ஓனரையே ஹாஸ்பிடலுக்கு ஐ ஸி யு க்கு அனுப்பிடும்:(((

  ReplyDelete
 4. மன்னிச்சுக்குங்க எல்கே, தோணலை! :(

  ReplyDelete
 5. வாங்க ராம்ஜி, என்ன இருந்தாலும் பூனை எலியைப் பிடிக்கிறச்சே கஷ்டமாத் தோணலை எனக்கு. :( அதுவும் ஒரு உயிர்தானே??

  ReplyDelete
 6. வாங்க ஜெயஸ்ரீ, ம்ஹும் SPCA இங்கெல்லாம் வரதில்லை. வந்தாலும் அம்மாவை விட்டுட்டுக் குட்டிகளைக் கொண்டு போறதில்லை. சில வருஷங்கள் முன்னே ஒரு நாய் பிரசவத்துக்குக் கஷ்டப்பட்டப்போ தெருக்காரங்க எல்லாரும் சேர்ந்து கூப்பிட்டோம், பிரசவம் பார்த்துட்டுக் குட்டிகளோட இங்கேயே திருப்பிக் கொண்டு விட்டுட்டாங்க!

  ReplyDelete
 7. இப்பதான் அந்தக் குட்டிகளைப் பற்றிப் படித்து முடித்தேன். அதற்குள் இப்படிப் பதிவு வருகிறது.:(
  வாயில்லாத ஜன்மங்கள் எல்லாமே. இயற்கைவிதிகளை யாரால் மாற்றமுடியும். சாரிமா கீதா.

  ReplyDelete
 8. எல்லாத்துக்கும் அம்மா இருந்து எல்லாம் கத்துக் கொடுக்கிறது. இந்தக் குயிலுக்கு மட்டும் ஏன் இப்படினு புரியலை"//

  ஆமாம் இல்லே....பாவம். கடவுளின் படைப்பின் இந்த வினோதம் காலசுழற்சியிலும் மாறாதது ஆச்சர்யம்தான்.

  ReplyDelete
 9. கிர்ர்ர்ர்ர்ர்...தலைப்புக்கு...மத்தபடி ;(

  ReplyDelete
 10. படிக்கறதுக்கே கஷ்டமாக இருக்கிறது. :(

  ReplyDelete
 11. வாங்க வல்லி, ரொம்ப நாட்கள் கழிச்சு வந்திருக்கீங்க, உங்களை மனம் சங்கடப் பட வைச்சுட்டேனோ? மன்னிச்சுக்குங்க! :(

  ReplyDelete
 12. ஆமாம் ஸ்ரீராம், ஒவ்வொரு வருஷமும் இந்தக் குயிலோட சீசனிலே அது கத்தறதைப் பார்க்கவும் கேட்கவும் முடியறதில்லை. அலறிண்டு ஓடிப் போய் மரத்தின் அடர்ந்த கிளைகளுக்குள் மறைஞ்சுக்கப் பார்க்கும். அப்படியும் சில சமயம் காக்கை விடாது. :( இறைவன் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு செக் வைச்சிருக்கான். அவனை விடவும் பெரிய சதுரங்க நிபுணன் உண்டா??

  ReplyDelete
 13. கோபி, சாரிப்பா.

  ReplyDelete
 14. வாங்க மெளலி, உங்களைக் கூட இந்தக் குட்டிங்க கூட்டிட்டு வந்துடுச்சுங்களே?? என்ன செய்யறது? இருக்கிறது இப்போ ஒரே ஒரு குட்டி தான் போல, அதுவும் கத்திண்டு இருந்தது, இப்போக் காணோம், எங்கே போனதோ? :((((((((

  ReplyDelete
 15. என்ன, வழக்கமா அம்மா பூனை ஒண்ணை திண்ணும், இப்ப நாய் தின்னுடுத்து. இதெல்லாம் ரொம்பவே சகஜம்.

  // என்ன இருந்தாலும் பூனை எலியைப் பிடிக்கிறச்சே கஷ்டமாத் தோணலை எனக்கு. :( அதுவும் ஒரு உயிர்தானே?? //
  அதானே? டாம் மேலே இருக்கற கரிசனம் ஏன் ஜெர்ரி மேலே இல்லை?

  // இறைவன் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு செக் வைச்சிருக்கான்.//
  எவ்வளோ ரூபாய்க்கு? எங்கே போய் வாங்கிக்கலாம்? :-))))))) sorry, could not resist!

  ReplyDelete
 16. இதெல்லாம் ரொம்பவே சகஜம்.//

  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  எவ்வளோ ரூபாய்க்கு? எங்கே போய் வாங்கிக்கலாம்? :-))))))) sorry, could not resist!//

  :P:P:P:P :P

  ReplyDelete