எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 21, 2010

கண்ணன் வருவான் கதை சொல்லுவான், 2 -ம பாகம்

கண்ணன் தன்னை தயார் செய்து கொள்கிறான்


மலையில் கிடைத்த ஒருவித செந்நிறக்கற்களை அந்த யாகக் குண்டத்தில் கண்ணன் இட்டான். அவை அந்த நெருப்பில் சிவந்த ரத்தினங்களைப் போல் ஒளிர்ந்தன. அவை தீயின் வெம்மையில் உருக ஆரம்பித்தன. கற்கள் உருகுகின்றனவா?? ஆச்சரியமாய்ப் பார்த்தான் கண்ணன். ஆம் அவை உருகுகின்றன. உருக்கிய அந்தக் குழம்பு நன்றாக ஆறியதும் கண்ணன் அதை எடுத்தான். தூக்கமுடியாமல் கனமாக இருந்த அந்தக் குழம்பு வட்ட வடிவில் இருந்த்து. அதைக் கொண்டு போய்த் தன் வாளினால் அதை வெட்ட நினைத்தான். வாள் இரண்டு துண்டாயிற்று. அம்பின் நுனிகளால் குத்தி ஓட்டை போட நினைத்தான் அம்பின் நுனிகள் துண்டு துண்டாய் ஆகிவிட்டன. ஆஹா, எத்தனை வலிமையானதொரு ஆயுதம்?? இந்திரனின் வஜ்ராயுதமோ? அவ்வளவு பலத்துடன் இருக்கிறதே? என் வேண்டுகோளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் இந்திரன் செவி சாய்த்துத் தன் வஜ்ராயுதத்தையே கொடுத்துவிட்டான் போலும். இது நிச்சயமாய்க் கடவுளர் தனக்கு அளித்த பரிசு தான். மேலும்மேலும் செந்நிறக் கற்களைக் கொண்டு வந்த அந்த யாகத் தீயில் போட்டு இதே மாதிரியான ஆயுதங்களை உருவாக்கினார்கள் கண்ணனும், கருடன் விநதேயனும். ஆனால் அங்கே பலராமனோ?

மதியத்துக்கு மேலே எழுந்திருக்கும் பலராமன், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தைக் கண்டு பிடித்துச் சுற்றி அலைந்து விட்டு வருவான். அன்றும் அப்படியே செல்லும்போது ஒரு மலைச்சரிவில் மயக்க வைக்கும் நறுமணம் அவனைக் கவர்ந்தது. மணம் எங்கிருந்து வருகிறது என்று தேடிப் பார்த்தான். சுற்றும் முற்றும் பார்த்தபோது எங்கும் காணமுடியவில்லை. அந்த மாதிரியானதொரு மணத்தை அவன் வாழ்நாளில் அவன் நுகர்ந்ததில்லை. மேலும் சற்றுத் தூரம் சென்றான். அங்கே ஒரு பெரிய மரம், அதன் வேருக்குச் சற்றே மேலே இருந்து பால் போன்றதொரு திரவம் வடிந்து கொண்டிருந்தது. நறுமணம் அங்கிருந்துதான். பலராமன் அந்த மரத்தை நோக்கிச் சென்றான். இரு உள்ளங்கைகளையும் குவித்துக்கொண்டு அந்தப் பாலைக் கையில் ஏந்தினான். வாயில் வைத்துச் சுவைத்தான். ஆஹா, என்ன சுவை, என்ன சுவை! இப்படி ஒரு சுவையை இதுவரையிலும் அறிந்தானில்லை. அது முழுதும் குடித்துவிட்டு மேலும் பாலை ஏந்திக் குடித்தான். ஆஹா, என்ன இது? அவன் உடலே லேசாகி மிதக்கிறதே! அண்ணாந்து பார்த்தான். நீல நிற வானம் அவன் கண்களுக்கு ஒளிமயமாய்த் தெரிந்த்து. சுற்றிலும் உள்ள மரம், செடி, கொடிகளெல்லாம் ஆநந்தம் தாங்காமல் தலையை ஆட்டித் தன்னைக் கண்டு நகைப்பது போல் இருந்தது. அவனுக்கு சந்தோஷமாய்ப் பாடவேண்டும், ஆடவேண்டும் என்றெல்லாம் தோன்றியது.

மேலும் மேலும் அந்தப்பாலை ஏந்திக் குடிக்கக் குடிக்க இப்போது பூமியே அவன் காலின் கீழ் நர்த்தனமாடுவது போலவும், அனைத்து மக்களையும் அணைத்துக்கொண்டு ஆநந்தமாய் ஆடிப் பாடவேண்டும் போலவும் தோன்றியது பலராமனுக்கு. இவ்வுலகில் உள்ள எவரும் தனக்கு விரோதிகள் இல்லை எனவும், அனைவரும் நண்பர்களே என்றும் தோன்றியது. தங்கள் குடிசையை நோக்கிச் சென்றான். அங்கே கண்ணன் தனக்கென ஒரு கதாயுதம் செய்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது. பாவம், வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபட முடியாமல் இப்படி எப்போது ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கிறானே? இந்த இளவயதில் வாழ்க்கையை அநுபவிக்க வேண்டாமோ? ம்ம்ம்ம்?? அந்த அமிர்தம் போன்ற சுவையான பாலை நாளைக்குக்கண்ணனுக்கும் கொண்டுவந்து கொடுக்கவேண்டும். தட்டுத் தடுமாறிக்கொண்டு வந்த பலராமன், “கண்ணா, என்னடா எப்போப் பார்த்தாலும் வேலை செய்து கொண்டிருக்கிறாயே? வாழ்க்கையையும் கொஞ்சம் அநுபவி அப்பா! “ என்றான். கண்ணன் நிமிர்ந்து பார்த்தான். பலராமனின் நிலையைக் கண்டதும் ஆச்சரியத்துடன், “அண்ணா! உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படித் தள்ளாடுகிறாய்? “ என்று கேட்டான்.
“அமிர்தம் தம்பி அமிர்தம்! அமிர்தம் குடித்து வந்தேன். இந்த கோமந்தக மலையின் மரங்கள் அமிர்தத்தை வர்ஷிக்கின்றன. இன்று தான் அதைக் கண்டறிந்தேன். வா, வா நீயும் வா! அமிர்தத்தை அருந்தலாம், வா.” என தம்பியையும் அழைத்தான். பலராமனின் நிலையைப் புரிந்து கொண்டான் கண்ணன். அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல், “என் கதாயுதத்தைச் சரி செய்துவிட்டேன். பயன்படுத்தும் நிலையில் உள்ளது. உன்னுடையதை எப்போது சரி செய்யப் போகிறாய்?” என்று கேட்டான்.

“கதை! கதை! எனக்கு எதுக்குக் கண்ணா கதாயுதம் எல்லாம்? அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்?”

“பின்னர் எப்படிச் சண்டை போடுவது ஜராசந்தனோடு?”

“ஹூ???” கண்ணன் ஏதோ சொல்லக் கூடாத விஷயத்தை வெளிப்படையாய்ச் சொல்லிவிட்ட மாதிரி பலராமன் பார்த்தான். “எனக்குக் கதாயுதம் தேவையில்லை!” என்றான். சுற்றும்முற்றும் பார்த்தான். அங்கே சில கருடர்கள் தங்கள் நிலத்தை உழுதுகொண்டிருந்தது அவன் கண்களில் பட்டது. அவர்களை நோக்கிச் சென்றான். அவன் நடை தள்ளாடியது எனினும் அவர்களில் ஏரை வைத்து உழுதுகொண்டிருந்த கருடன் ஒருவனிடம் சென்று அவன் உழுவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருந்த கலப்பையைப்பிடுங்கினான். சாதாரணமாக நாலுபேர் சேர்ந்து தூக்கவேண்டிய அந்தக் கலப்பையை அவன் ஒருவனே அசாதாரணமாய்த் தூக்கிக்கொண்டு தோளில் சார்த்திக் கொண்டான். “கண்ணா! எனக்குக் கதாயுதம் எல்லாம் வேண்டாம். ஜராசந்தனோடு போரிட என் ஆயுதத்தை நான் தேர்ந்தெடுத்துவிட்டேன். வரச் சொல் அவனை! ஒரு கை பார்த்துவிடலாம்!” என்றான். கலப்பையைத் தூக்கி எறிந்துவிட்டுக் கீழே படுத்து உறங்கத் தொடங்கினான்.

ஒரு நாள் கண்ணன் இளவரசன் விநதேயனுடன் கோமந்தக மலையைக் கடல் சுற்றி இருக்கும் பகுதிக்குச் சென்றபோது அது ஒரு தனித் தீவு போல் தென்பட்டதைக் கண்டான். எப்போதோ அந்தப் பகுதியைக்கடல் அரித்து அந்த மலைப் பகுதி மட்டும் தனியாக இருந்ததையும் முக்கிய நிலத்திற்கு அது ஒரு பாலம் போல் செயல்பட்டதையும் கண்டான். அந்த இடம் சற்று மறைவாக இருந்ததையும் கண்ட கண்ணன் ஒரு சமயம் ஆபத்து என ஏற்பட்டால் இந்த இடம் பாதுகாப்பாக இருக்கும் என்றும், ஒரு பக்கம் மலைக்காடுகளும், மற்றப் பக்கம் கடல் நீரும் இருப்பதால் அதைத் தாண்டி எவரும் வர முடியாது என்றும் கண்டறிந்து கொண்டான். திரும்பிக்குடிசைக்கு வந்த கண்ணனுக்கு பலராமன் அங்கே கருடர்களோடு சந்தோஷமாகச் சல்லாபம் செய்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது. பலராமன் கண்ணனையும் அழைத்தான். “கண்ணா, இதோ பார், இந்த இளைஞர்களோடும், இளம்பெண்களோடும் விளையாடிக் களிக்கலாம். நேரத்தை எப்போது வேலைகளிலேயே செலவிடுகிறாயே?” என்று அழைத்தான். மேலும் “எப்போது ஜராசந்தனையே நினைத்துக்கொண்டிராதே.” என்றும் சொன்னான். கண்ணன் சிரித்தான். “ஜராசந்தன் சீக்கிரம் இங்கே வந்துவிடுவான் என நினைக்கிறேன். நீ இப்படியே உன் வாழ்க்கையைத் தொடர்ந்தாயானால் ஜராசந்தனோடு சண்டை போட உன்னிடம் பலம் இல்லாமல் போய்விடும். உன் வீரம் குறைந்துவிடும்.” என்றான்.

“வரச் சொல் ஜராசந்தனை! காத்திருக்கிறேன் நான்!” என்று உரத்த குரலில் கர்ஜனை செய்தான் பலராமன். கருடன் விநதேயனுக்கு இப்போது கண்ணனும், பலராமனும் பேசும் மொழியும், கண்ணனுக்கும் இப்போது கருடர்களின் மொழியும் பழகி விட்டிருந்தது. அடிக்கடி கரவீரபுரத்திற்குச் சென்று வரும் விநதேயன், ஒருநாள் அப்படிச் சென்றுவிட்டுச் சற்றுப் பரபரப்போடு வந்தான். கண்ணனைப்பார்த்து, “என் தெய்வமே! கரவீரபுரத்துக்கு யாரோ முக்கிய விருந்தாளி,மிகப்பெரிய மனிதராமே ? பெரிய சக்கரவர்த்தியாமே? வரப் போகிறாராம், ஸ்ரீகாலவன் அவரை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் செய்துகொண்டிருக்கிறான்.” என்று கூறினான்.

“யார் அது? பெயர் என்ன? “ என்று கேட்டான் கண்ணன்.

“ம்ம்ம்ம்???? மறந்துவிட்டேனே!”கருடனுக்கு வருத்தம்.

“ஜராசந்தன் என்று சொன்னார்களா?”

“ஆஹா, ஆம் பிரபு, அது தான், அதுவே தான். ஜராசந்தன் என்னும் சக்கரவர்த்தியே தான்! அவனோடு அவன் நண்பர்களான மற்ற அரசர்களும் வருகின்றனராம். அனைவரையும் ஸ்ரீகாலவன் தான் அழைத்திருக்கிறானாம்.”

No comments:

Post a Comment